நகரத்தின் கொடுங்கனவுகள்-சிறுகதை மொழிபெயர்ப்பு-Hisham Bustani-மிஸ்பாஹுல்-ஹக்

பார்க்கும், கேட்கும், பேசும் கட்டிடம்

மோசமானதாகவும், பயங்கரமானதாகவும் அந்தக் கட்டிடம் இருண்டிருந்தது. அதன் வீடுகளிலும், அறைகளிலும் அலைந்து திரிந்து, அதன் படிக்கட்டுகளில் மேலும் கீழுமாக தள்ளாடி திரியும் பேய் மனிதர்களால் வேட்டையாடப் பட்டிருந்தது. அந்த கட்டிடம் பார்க்கும், கேட்கும், பேசும் அதன் வெடித்த சுவர்களாலும், அதன் ஜன்னல்கள் வழியேயும்  அதன் கண்கள் முறைத்துக் கொண்டிருக்கும். கழிவு நீர் குழாய்கள் வழியேயும், காற்றோட்டத்துக்கென இருக்கும் குளியலறை ஜன்னல்கள் வழியேயும் அது கேட்டுக் கொண்டிருக்கும். இன்னும் அதன் பேச்சிற்கு, ஆஹ். அதன் வார்த்தைகள்!

இரண்டாம் மாடியில், என்னுடைய மாமாவும் அவர் மனைவியும் பழைய ரெக்கோர்டர் அதன் கீறல்களில் இறுகியதைப் போல  அவர்களின் முடிவுறாத முரண்களுக்காக கத்திக்கொண்டே இருப்பதை என்னால் கேட்க முடிந்தது; “வேசி” “அழுக்கு நாயே” கண்ணாடிகள் நொறுங்கும் சப்தங்கள், கதவு அறைந்து சாத்தும் சப்தங்கள் கேட்டன. அந்த கட்டிடம் உரைவிப்பனில் இருப்பதைப்போல நடுங்கிக் கொண்டிருந்தது.

நான் எப்போதும் தனிமையில் இருந்தேன், ஒவ்வொருநாளும் காத்திருப்பதைப் போல முன் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தேன். தொலைதூரத்திற்கு அழைத்துப்போகும் ஒரு பேரூந்துக்காக காத்திருந்தேன், எப்போதுமே வாராத அந்த பேரூந்து. அது வானத்தில் இருந்து விழும் என ஒரு முறை கற்பனை செய்தேன், ஆனாலும் என் பரிமளத்தின் வாசனையை உரசிய படி ஒற்றை ஓடுதான் தரையில் விழுந்து நொறுங்கியது. நான் எழுந்து மேலே பார்த்தேன். கூரையில் யாருமே இருக்கவில்லை, கூரையும் ஓடுகளால் வேயப்பட்டு இருக்கவுமில்லை. விரைவில் ஓடு மழை பொழியும் என நினைத்துக் கொண்ட அந்த தருணம் இன்னும் நினைவிருக்கிறது.

என்னுடைய மாமாவும் அவருடைய மனைவியும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள். அவருக்கு நிறைய கடன்கள் இருந்தன, எல்லோர் முன்னிலையிலும் சட்டகமிடப்பட்ட அவளது புகைப்படத்தின் கண்ணாடியை துடைக்க வேண்டியிருந்தது. ஆனாலும் சுவர்களில் வெடிப்பு விழுந்தன, ஆணி நழுவி புகைப்படம் விழுந்து அதன் சட்டகம் உடைந்தது, கண்ணாடி எல்லாமே உடைந்தன. என்னுடைய மாமா வீட்டிலிருந்தும், அவரது கடன்காரர்களில் இருந்தும் எல்லாவற்றிலிருந்தும் ஓடினார். தூங்கியிருந்த அவரது மனைவியின் கண்களில் இருந்து பதுங்கி வெளியேறி கெய்ரோவுக்கு போனார், சாகும் வரை பதுங்கியே இருந்தார்.  அந்த காலையில், அவருடைய மனைவி பிள்ளைகளை அடிக்கும் சப்தம் கேட்டது. அவளுடைய கைப்பையோடு என்னை கடந்து போகும்போது நான் இன்னும் அந்த வாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து பேரூந்துக்காக காத்திருந்தேன். அவள் என்மீது துப்பினாள், இடுபாடுகளின் மத்தியிலிருந்து இறங்குவதைப் போல குழந்தைகளின் அழுகுரல்கள் ஒலித்தன.

2.எப்போதும் வராத பேரூந்து.

பசுமையான புல்வெளியைப்போல அது பச்சையானது, அதன் கதவுகள் மூடியிருக்கவில்லை, அதன் ஜன்னல்களில் கண்ணாடிகள் இருக்கவில்லை, அதன் இருக்கைகள் ராஜாக்களாக இருந்தன. அதன் பயணிகள் அனைவரும் என் நண்பர்கள்; தந்தே, ஸ்தென்தால், யான் தியர்சென், முரீத் அல்-பர்ஹோத்தி, சுஹைர் அபூ-ஷாஹேத்.. ஆஹ், அது நிறைய பூனைகளும் பறவைகளும் இருந்தன. ஓட்டுனரும், நடத்துனரும் இல்லாமலே இசையால் உருவான சக்கரங்களில் அது ஓடியது.

ஒவ்வொரு முறையும் அது நிறுத்தத்தில் நிறுத்தப்படும் பொழுதும், எல்லோருமே இறங்கிக் கொண்டார்கள். அவர்கள் பாய்களை விரித்து வைன் கோப்பைகளையும், பாலாடை கட்டிகளையும், பூண்டிட்ட தயிரும், விதைகள் தூவிய கருப்பு ரொட்டித்துண்டுகளையும் வளைத்து வைத்தார்கள். இன்னொரு பக்கமாக, குப்பை பை ஒன்றுக் கிடந்தது; வீரர்கள் அவர்களுடை பூட்ஸ்களையும் துப்பாக்கிகளையும் அதில் எறிந்தார்கள், உளவாளிகள் தங்கள் கண்களையும் காதுகளையும் அதில் எறிந்தார்கள், அலங்காரி தன்னுடைய குதியுயர்ந்த காலனியை அதில் எறிந்தாள், மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை அதில் எறிந்தார்கள், சந்தர்ப்பாவதிகள் தங்கள் பதிவிகளை அதில் எறிந்தார்கள், தாசி தன்னுடைய சமூகத்தை அதில் எறிந்தாள், போற்றப்பட்ட தலைவன் தன்னையே அதில் எறிந்தான்.

பின்பு எல்லோருமாக அன்புக்காகவும், சுதந்திரத்திற்காகவும் குடித்தார்கள். அவர்கள் ஆடைகளை களைந்து ஒவ்வொருவரும் தங்கள் தவறுகளையும், குறைகளையும்,மனபிறழ்வுகளையும் விளக்கிக் கொண்டிருந்தார்கள். களியாட்டத்தில் ஒற்றை உடலாக குவிந்து, பின்பு அவர்கள் பிரிந்து அவர்கள் இயல்பில் ஆனார்கள். அவர்கள் மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டார்கள், கைகள் கோர்த்து அடுத்த நிறுத்தத்தை நோக்கி போனார்கள். ஆனாலும், பேரூந்து எப்போதும் வரவே இல்லை..

3.பேய்களின் அறை.

ஆஹ், இந்த கட்டிடத்தின் வார்த்தை..

என்னுடைய விதவை பாட்டியின் வீடு கீழ் மாடியில் இருந்தது. நான் பிறப்பதற்கு முன்னதாகவே அவர் விதவையாகி இருந்தார், அந்த கட்டிடத்தில் வசித்துவந்த மற்றவர்கள் வெளியேறிய பின்பும் அவர் அங்கேயே தங்கியிருந்தார். மின்விளக்கு சுவிட்சுகளுக்கு அருகாமையில் சுவர்களில் அவர்களின் விரல்கள் விட்டுச் சென்ற தடயங்களுடனும், அவர்களுடைய சோபாக்களின் அடியில் சேறும் புழுதியுடனும் நான் நட்பு கொண்டேன், நான் இங்கிருந்து வெளியேறினால், அவர்களில் எதுவுமே என்னிடம் எஞ்சியிருக்காது. இங்கே குறைந்தது அவர்களின் பேய்களாவது இருக்கின்றன.”

“இங்கே, என் முதல் மக்கள் வீழ்த்தப்படு இரத்தம் சிந்தினார்கள். அங்கே இருக்கும் அலமாரியில் உன்னுடைய தந்தை அவருடைய தந்தையிடம் இருந்து ஒளிந்துக்கொண்டார். அதன் கதவுகளை அவர் தந்தை உடைத்ததன் பின்னர், கோபம் மிகைத்த கரங்களில் இருந்த கருப்புபட்டி அவரை தேடியே வெளியே எடுத்ததை கண்டார்.”

அவள் மூலைகளை கடந்து நடக்கிறாள், தளபாடங்களின் பாகங்கள் கதைகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இரண்டாம் மாடி மட்டுமே அவளில் கண்ணீரை கொண்டுவந்தது. அவர் கெய்ரோவுக்கு பதுங்கி ஓடி அங்கேயே இறந்தபோது அவள் சொன்னாள் “இனி என்னால் எப்போதும் அவரை காணவே முடியாது,” அவளது நீண்ட வராண்டாவின் முடிவில் இருந்த அவள் எப்போதுமே அதைப்பற்றி பேசாத அந்த  தாளிடப்பட்ட அறையின் அருகில் என்னை அனுமதிக்கவே இல்லை.

சில நாட்களில் அவள் பார்க்காதவரை காத்துக் கொண்டிருப்பேன், அவள் காணாதபோது என் காதுகளை சாவி துளை அருகில் ஒட்டி வைத்து கேட்பேன். கனத்த சப்தம் அந்த துளைவழியே என் காதுகளில் கசியும், அது வார்த்தைகளற்ற வலிகளின் கனத்த சப்தம்.

ஒரு நாள் பேரூந்துக்காக நான் காத்திருந்து அலுப்படைந்த சமயம், என்னுடைய  வயிறும் உறும ஆரம்பித்தது, நான் அவளிடம் சென்றேன். தரை தளத்தில் யாருமே இருக்கவில்லை. “பாட்டி…” எங்கே இந்த கிழவி, நடப்பதற்கு கூட சிரமப்படும் முதியவள் எங்கே போயிருக்கக் கூடும் என ஆச்சர்யத்தோடு நான் அழைத்தேன், காலையில் இருந்து இந்த கட்டிடத்தின் வாசலில் ஒட்டியது போல இருக்க இவள் எப்படி எங்கே கடந்து போயிருப்பாள்?

வீடு மிக சுத்தமாக இருந்தது; சுவர்களும் தரையும் மிக பிரகாசமாக ஒளிர்ந்தன. மின்விளக்கு ஆளிகளை சுற்றி எந்த விரல் அடயாளங்களும் இருக்கவில்லை, சோபாவின் கீழே புழுதியே இருக்கவில்லை. அப்போதுதான் உறைகள் அகற்றப்பட்டது போல் எல்லாமே புதிதாக இருந்தன. தணிக்கை செய்யப்பட்டிருந்த அந்த அறையின் கதவு திறந்தே கிடந்தது.

அரவம் இல்லாமல் மெல்ல அருகில் சென்று அந்த அறையை எட்டிப்பார்த பொழுது, கடுமையான இருளினாலும் வார்த்தைகளற்ற வலியின் கனத்த சப்தத்தினாலும் நான் அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய கண்கள் அந்த இருளுக்கு மெல்ல பரீட்சயமான போது, என்னுடைய பாட்டனார் ஒரு கட்டிலின் அருகில் அமர்ந்திருப்பதை கண்டேன். அவருடைய முதுகு பழைய பாலத்தைப் போல வளைந்துக் கிடந்தது. அவர் தன் தலையை சாய்த்து தன் துயரங்களையும் கண்ணீரையும் வெளிக்காட்ட விரும்பாதவரைப் போல தன் கரங்களில் கண்களை அழுத்திவைத்திருந்தார். அந்த கட்டிலின் மீது கருத்த சிறு பிராணி அசையாமல் படுத்துக் கிடந்தது. அது நான். கரிந்து கடினமாகி கிடந்தேன்.

பேய்கள் வாழும் அறைகளினதும், எலிகளால் நிரம்பிய அறைகளிலும், படிக்கட்டுகளின் கீழே பதுங்கிய அறைகளினதும் கோரமான நினைவுகள் என் நினைவை அடைக்க நான் அந்த அறையை விட்டு தெறித்து ஓடினேன்.  அந்த வீட்டை விட்டு ஓடினேன், வீதியை நோக்கி அந்த கட்டிடத்தை விட்டே ஓடினேன்.

என் பின்னால், கனத்த வலியின் ஓலம் இன்னும் தெளிவாக இருந்தது, அவை வார்த்தைகள் அற்றே இருந்தன.

4.A Fly – by Visit What Had Been

நான் அறையில் இருந்து வெளியே ஓடினேன், வீட்டில் இருந்து ஓடினேன், வீதியை நோக்கி அந்த கட்டிடத்தை விட்டே ஓடினேன். என்னுடைய மூச்சு வேகமானது, போர் பறை அடிப்பதைப் போல என்னுடைய நாடித்துடிப்பு சப்தமெழுப்பி துடித்தது. அது என் நரம்புகளை துளைப்பதைப் போல, காதுகளை துளைப்பதைப் போல, கன்னப் பொறியை துளைப்பதைப்போல உணர்ந்தேன். நான் கிட்டத்தட்ட வெடித்திருந்தேன் (exploded). ஒரு நொடியில் என்னுடைய எல்லா பலத்தையும் ஒன்றுசேர்த்து நான் திரும்பிப் பார்த்தேன். நான் கருமையான ஆடையில் கட்டிடத்தின் வாசலில்  நின்றுக்கொண்டிருந்தேன். என்னுடைய கண்கள் என்னுடைய கண்களையே சந்தித்தன. என் பின்னால் நான் ஓடி ஏறத்தாள தடுக்கி விழுந்துவிட்டேன். திடீரென ஒரு இருண்ட யாமம் விழுந்து உயரமான சுவற்றில் மோதியது. “”இது பாதையின் முடிவிடம்” ஒரு கனத்த குரல் கத்தியது”.

நான் சடுதியாக திரும்பினேன். எனக்கு முன்னால் முகத்திற்கு முகம் என்னை கண்டுக் கொண்டேன். என்னுடைய அட்ரினலின் அதிகரித்து. என் கண்ணின் மணிகள் பெருமமாக விரிந்தன. நான் நடுங்க ஆரம்பித்தேன்- இந்த இடைவெளியில் நான் புல்வெளியின் விளிம்புகளைப் போல முழுதும் மௌனமாகவும் அமைதியாகவும் இருந்தேன், என்னுடைய முக பாவங்கள் அழிப்பானால் துடைத்து எடுத்து எலுமிச்சை சாற்றினால் சாயமிட்டது போல இருந்தது.

என் கண்களை திறக்க சிரமப்பட்டேன். எனக்கு விழித்துக்கொள்ள வேண்டி இருந்தது. அருவமான கரங்கள் என் கண்களை அழுத்தி மூடி இருந்தது. என்னுடைய உடம்பில் எஞ்சியிருந்த எல்லா பலத்தையும் குவித்து அதை உளியாகவும் கோடாரியாகவும் மாற்றி என் இமைகளை பலவந்தமாக உடைத்து திறக்க முனைந்தேன். ஹா… அந்த அறையில் பரவி இருந்த மொத்த காற்றையும் உள்ளிழுத்து கண்ணீரில் வெடித்தேன்.

கிட்டத்தட்ட தூக்க மயக்கத்தில் செத்துக்கிடந்தேன், ஆனாலும் அந்த அறைக்கு, அந்த வீதிக்கு, வீதியை மறைத்து நிற்கும் சுவற்றுக்கு, என்னுடைய மற்றைய நானிடம், அந்த கண்களை திறக்க முடியாத உணர்வுக்கு மீண்டும்  நான் போகவிரும்பவில்லை. நான் நடுங்கிக் கொண்டிருந்தேன்.

00000000000000000000000

குழந்தைகளின் குரல்களை தூரத்தில் அவள் கேட்டாள். தன் கண்ணீர் வற்ற ஜன்னலின் வழியே பார்த்தாள்…

அவர்கள் நான்கு பேர்கள், அல்-காழா மலையை பராமுகமாக லெவிப்தேஹ் மலையின் நீர்த்தேக்கத்தின் அருகில் தங்கள் பாடசாலையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். வேவேகமான இல்லத்தரசி தைத்துக் கொடுத்து பின்பு தங்கள் சகோதரர்களால் கைமாறப்பட்ட காற்சட்டைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். அவள் அதிலிருந்த சின்னத்தை வாசித்துப் பார்த்தாள்; “இஸ்லாமிய அறிவியல் பள்ளி- தைஸீர் சைபானால் நிறுவப்பட்டது”. வருடம் 1946.

அந்த சிறுவர்கள், பழத்தோட்டத்தை சுற்றி அடுக்கப்பட்டிருந்த கற்குவியலை அடையும் வரை அழுக்கான அந்த பாதை வழியே நடந்தார்கள். அதன் மேலால் குதித்து தங்கள் வெறுமையான சிறு வயிறுகளை பச்சை பாதாம்களாலும், அத்திப்பழத்தினாலும் நிரப்பிக் கொண்டார்கள். நீண்ட இந்த நாளுக்காக  இன்னும் அவர்களுடைய சட்டைப்பைகளிலும் நிரப்பிக் கொண்டார்கள். அந்த பழத்தோட்டத்தின் மறுபுறம் இருந்த கற்களால் அடுக்கிய குவியல்களின் மேலால் அவர்கள் மீண்டும் பாய்ந்தார்கள். பின்னால் இருந்த உயர்ந்து நிற்கும் அம்மான் மலையோடு இருந்த வாதி ஷக்ராவை முன்னோக்கிய வண்ணம் ஒரு வெளி விரவி கிடந்தது.

அந்த வெளியில், கற்களை அடுக்கி விளையாடுவதற்காக இரண்டு அணிகளாக பிரிந்தார்கள். அவர்கள் சொல்வது அவளுக்கு கேட்டது; ஷாரா சுற்றிக் கட்டு. அவளுக்கு அந்த விளையாட்டு தெரிந்திருக்கவில்லை.

அவர்கள் விளையாடி முடித்த பின்பு, ஒரு குன்றில் அமர்ந்தவண்ணம் தூரத்தில், வஸத்-அல்-பலத்தில் இருந்து வாதி-அல்-ஸீர் நோக்கிய வளைவின் ஊடாக அழுக்கான பாதையில் மெல்ல இழுத்து வரும் வண்டில் மாடுகள் பழத்தோட்டத்தை வந்து அடைவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். பெரிய கற்களையும் பாறைகளையும் மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கின் வயிற்றிற்குள் திட்டமிட்டு தள்ளினார்கள். பின்பு அதன் அடியில் இருந்து என்ன மெல்ல வெளியே வருகிறது என்று கூர்ந்து கவனித்தார்கள்;  ஒரு சர்பம், ஒரு தேள், ஒரு பல்லி. எல்லா ஊர்வனங்களையும் விட பல்லிகள் அவர்களுக்கு மிகப் பெறுமதியானது, அதன் குருதியை உள்ளங்கைகளில் பூசிக்கொண்டால் ஆசிரியர்களின் பிரம்புகளில் இருந்து கிடைக்கும் அடியின் வலியை தடுத்துவிடலாம் என தெரிந்திருந்தார்கள்.

கீழிறங்கும் சூரியன் அஸ்தமனத்தை நெருங்கும் போது, சிறுவர்கள் அவர்களுடைய காட்டு சிற்றுண்டியை தேடினார்கள். சூரியன் மலைக்கு பின்னால் மூழ்கிவிடுவதற்கு முன்பு அவைகளை அனுபவித்து சுவைத்தார்கள், தங்கள் இராபோசனத்திற்கென பூமியில் இருந்து அந்த தாவரங்களை ஏற்கனவே சேகரித்திருக்க வேண்டும்; சீமை காட்டுமுள்ளங்கி, நங்கிலி இலை, பரட்டை கீரை இப்படி. அவைகளை எப்போதும் தவிர்க்ககூடாது என்பது அவர்களின் தாயின் வேண்டுகோள். வீடுகளுக்கு சிதறிச் செல்வதற்கு முன்பு, தண்ணீர் தொட்டியில் இருந்த வண்ணம், அந்த நான்கு சிறுவர்களும் அவளை பார்த்தார்கள். கருமை விழுந்து அவர்கள் மறைந்து போவதைபோன்று  அவர்களுடைய சிறு கைகளை அசைத்து பிரியாவடை சொன்னார்கள். சந்தேகமே இல்லை; அவள் தன் ஜன்னல்களை மூடிக் கொண்டு, ஆழ்ந்த உறக்கத்தில்  மறைந்துப் போனாள்.

5.ஓடுகளால் மழைபொழிந்த நாள்.

கட்டிடத்தின் வாசலில் முழு நிர்வாணமாக இன்னும் நான் அமர்ந்திருந்தேன். நான் பேரூந்துக்காக காத்திருந்த போது வானம் கரு மேகங்களைக் கொண்டு இருண்டது, இதற்கு முன்பு நான் இப்படி கண்டதே இல்லை: சாம்பல்-வெள்ளை மேகங்கள், அதன் நுண்ணிய துகள்களை வெற்றுக் கண்ணால் காண முடிகிற அளவுக்கு நிலத்திற்கு அண்மையில் உங்களை தும்மல் வரவைத்திருந்தது. நிலையான உலோகம் கீச்சிடும் சப்ததைப்போல அதன் இடிமுழக்கம் இருந்தது.

நாழிகை கடந்தபோது முதல் துளி விழுந்தது: ஒரு ஓடு என் பக்கத்தில் சுக்குநூறாக நிலத்தில் வீழ்ந்து உடைந்தது. “ஆனாலும் கூரை ஓடுகளால் வேயப்பட்டிருக்கவில்லை,” இரண்டாம் ஓடு விழும்போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். தொடர்ந்து மூன்றாவது, நான்காவது, பின்பு ஓடுகள், கற்கள், ஜன்னல்கள். தளபாட துண்டுகள் என பலத்த மழை பொழிந்தது,

கிழே பொழியும் ஓடுகளில் இருந்து தடுத்துக்கொள்ள நான் ஓடினேன். பாதையை கடந்து பக்கத்து வீட்டு தாழ்வாரத்தின் மீது குதித்தேன். எதிர்முனையில் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இருண்ட சாம்பல் நிறத்தில் மூடுபனி நிலத்திலிருந்து எழுந்துவந்து எல்லாவற்றையும் சூழ்ந்துக்கொண்டது. சாம்பல் மேகம் கலைந்தபோது, வளைவான கருத்த ரப்பர் பாதத்துடனும், இரும்பு பற்களுடனும் மஞ்சள் அசுரன் கட்டிடத்தின் மீது இருப்பதை கண்டேன். அல்லது கட்டிடமாக இருப்பதை கண்டேன்.

அவனுடைய சிறிய தலைக்கு மத்தியில் இருந்த கண்ணாடி கண்களால் என் மீது இமைத்து புகை கக்கும் குரலில் என்மீது உறுமினான். சிறிது நேரத்திற்கு முன்னாள் நான் வாழ்வில் முதன் முதலாக கண்ட விதத்தில் வானம் மீண்டும் மேகத்தால் இருண்டது. இரும்பிலான இடி முழங்கியது.

அப்தாலிக்கு நல்வரவு நிலத்தில் இருக்கும் பாரிய துளைகளுக்கு நல்வரவு., காங்க்ரீட் தட்டுகளும், செங்கல், இரும்பு குவியல்களும் சுமந்திருக்கும் அச்சுக்களின் வழியே மெல்லிய உலோக ஒட்டக சிவிங்கிகள் சுழல்கின்றன அம்மானுடைய “புதிய நகரம்”மாக மாறியிருக்கும் இடத்திற்கு நல்வரவு, இது நடந்தாலும், அம்மானுக்கு எப்போதும் பழைய நகரம் இருந்ததில்லை; அம்மானுக்கு வாஸ்தி-அல்-பலத் ஒன்று இருந்தது. ஆனாலும் பதப்படுத்தப்பட்ட பொருட்களினதும் உயிரினங்களினதும் காலத்தில், அம்மான் ஒரு நகரத்தை கொண்டிருக்கும், சிலவேளைகளில் பெய்ரூத்தின் மையாமகவும் இருக்கலாம். ஆனாலும் பெய்ரூத்தின் தொப்புள்கொடி இரண்டு பக்கத்தாலும் கட்டப்பட்டிருக்கிறது. பெய்ரூத்தின் வீரர்களும் அம்மானினதை போன்றவர்கள் தான். அழிக்கவும் ஆக்கவும் செய்யும் பட்டு கையுறைகள் ஒன்றுபோலத்தான். மில்லியன்களிலான இலாபம் பொழிவது ஒரே சட்டை பைக்குத்தான், தரகு கணக்கு மட்டும் மக்கள் செய்வது போல பல்வேறு பாக்கெட்டுகளுக்கு போகும்.

அப்தாலிக்கு நல்வரவு

வரலாற்று சிறப்புமிக்க லெவிப்தே மலையின் விளிம்புகளில் புல்டோசர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்தன. மக்களிடம் இருந்து சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு முன்பே இந்த செயல்திட்டம் விரிவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. முன்னரே எல்லாம் தீர்மானிக்கப்பட்டிருந்தன. எதிர்க்கமுடியாத அதிகாரத்திற்கு மக்களின் விதி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த சகாப்தத்தில்,  அடியில் இருக்கும் பாம்புகளையும், தேள்களையும், பள்ளிகளையும் தேடுவதற்காக  அம்மானின் குறும்பு-பண்ணும் இளவல்கள் பாறாங்கற்களையும் கற்களையும் லெவிப்தே மலையின் மேலால் வாதி ஷக்ராவின் ஆழத்திற்கு தள்ளி விட்டார்கள். கற்களின் அடியிலிருந்து அவர்களது புதிய நண்பர்களை கண்டு பிடித்துவிட்டாலோ, அவைகளை அவர்களுடைய சிறு கால்களால் துரத்தும் போதும் அவர்களது குதுகலாமான அலறல் எல்லை கடந்திருக்கும்.

இன்று, மக்கள் கற்களையும், கான்க்ரீட் கட்டுக்களையுமே லெவிப்தே மலையின் மேலால் உருட்டி விடுகிறார்கள், அவர்களுடைய நினைவுகளையும், வரலாறுகளையும், புகைப்படங்களையும் அனுப்பி அதன் அடியில் மோதவிடுகிறார்கள். பழைய கட்டிடங்கள் தலைகீழாக மாற்றப்பட்ட பிறகு, அடியில் இருப்பதெல்லாம் நொறுங்கிய எச்சங்கள், பெரிய பாதம் விட்டு சென்ற பல மீட்டர் ஆழமான அடையாளங்கள்.

அம்மானின் புதிய நகருக்கு நல்வரவு.

அந்த பகுதியையே எதிர்காலத்தின் மாயைகளால் அலங்கரித்திருக்கும் பாரிய  வர்ண விளம்பர பலகைகளுக்கு பின்னால், புழுதியையும், பாரந்தூக்கிகளையும், துளைகளையும், தூரதேசங்களில் இருந்து விமானம் ஏற்றப்பட்ட தொழிலாளர்களையும் தவிர வேறு எதுவுமே இல்லை. அவர்களுடைய வியர்வை எந்த விளைவும் இல்லாமல் வெறுமனே அவர்களை விட்டு வெளியேறியது.

அதன் மரங்களும், மனிதர்களும், நினைவுகளும் களையப்பட்ட வேற்று நிலத்தில் அறைந்து கிடக்கும் சுட்டெரிக்கும் வெயிலின் கீழே, அழாகான பெண்ணொருத்தி, மஞ்சள் கதிர்கள் சுட்டெரிக்க யாரோ அவளை துரத்துவதை போன்று திசையற்று அங்கும் இங்கும் அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் திடீர் என்று நின்று சொன்னாள்; ‘’இங்கே தான் கட்டிடம் இருந்தது’’ பின் திரும்பவும் ஓடினாள், மீண்டும் நிறுத்தி; “இல்லை, இங்கே தான் கட்டிடம் இருந்தது” அவள் ஓடினாள், இன்னும் ஓடினாள். இங்கேதான் கட்டிடம் இருந்தது. இல்லை அது இங்கே இருந்தது, இல்லை இங்கே. சில நாழிகைகள் கழித்து உண்மையாகவே சில மனிதர்கள் அவளை துரத்தினார்கள்: உயர்ந்த முதலீட்டை பாதுகாக்க நியமித்திருந்த பாதுகாவல் குழுவினர். அவர்கள் அவளை பிடித்து எதை தேடுகிறாய், அவளுக்கு என்ன வேண்டும் என விசாரித்தபோது, மூச்சு திணறிய படி அவள் பதில் அளித்தாள், “எப்போதுமே வராத பேரூந்தின் நிறுத்தத்தை”.

0000000000000000000000

Author’s note:

Hisham Bustani was born in 1975 in Amman, Jordan. He writes fiction and has three published collections of short fiction: Of Love and Death (Beirut: Dar al-Farabi, 2008), The Monotonous Chaos of Existence (Beirut: Dar al-Farabi, 2010) and The Perception of Meaning (Beirut: Dar al-Adab, 2012). Bustani is acclaimed for his contemporary themes, style, and language. He experiments on the boundaries of narration and poetry, using the internal music of language as a driving force. He often utilizes philosophy, physics, biology, cosmology and visual art in his fiction. The German review Inamo has chosen Bustani as one of the Arab world’s emerging and influential new writers, translating one of his stories into German for its special issue on “New Arab Literature” (No. 60, December 2009). He was also featured in the March/April 2012 issue of Poets & Writers in the report “Middle Eastern Rhythms: A Report from Literary Jordan.” His translated fiction has appeared in The Saint Anne’s Review and World Literature Today. Read the story on WLT: “History Will Not Be Made on This Couch.”

தமிழில் : மிஸ்பாஹுல்-ஹக்-சவுதிஅரேபியா

மிஸ்பாஹுல்-ஹக்

(Visited 185 times, 1 visits today)