சப்ரியினுடைய சொந்த அறை-மொழிபெயர்புச் சிறுகதை-சமர் நூர்-தமிழில்: மிஸ்பாஹுல்-ஹக் 

மிஸ்பாஹுல்-ஹக் எனது அறையின் உட்கூரையில் இருந்து ஒரு தடிமனான கயிறு தொங்கிக்கொண்டிருக்கும், நான் செல்லும் ஒவ்வொரு புதிய வீட்டிற்குள்ளும், இன்னும் நான் நுழையும் ஒவ்வொரு அறைகளிற்குள்ளும் ஒரு முறுக்கிப் பிணைந்த  பாம்பு நீண்டு வரமுடிவதைப்போல அது எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடரும்.

அந்தக் கயிற்றை நான் முதன் முறையாக பார்த்த அந்த இரவில், எனது அம்மாவின் குறட்டை சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நேற்று இரவு, எனது கணவரின் குறட்டை சப்தம் கேட்பதை போலவும், சப்ரியின் சுருக்கிடப்பட்ட கயிறு எனக்கு முன்னால் ஆடுவதுபோல  கற்பனை செய்து கொண்டிருந்தேன். சில மணித்தியாலங்களாக அதை கண்டிருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அதை பார்த்தது போன்று இருக்கிறது..

கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட அந்த நொடிகளில், அவனது காலடியில் இருந்த நாற்கலியினை உதைத்துத் தள்ளிய அந்தக்  கணத்தில் சப்ரியின் மனதில் என்னவெல்லாம் தோன்றியிருக்கும்? புரிந்து கொள்ள மிகக் கடினமான, விவரிக்க இயலத அந்த கணங்கள் இப்போது என் மனததை பீடித்துக் கொண்டிருக்கிறது.

“ஆழ்மனம் .. மிஸ் ஆழ்மனம் .. ஆம் அது ஆழ்மனம்”.

கடினமாகப் புன்னகைத்தேன். இருபது வருடங்களிற்கு முன்னர் ஆயிஷா முதன் முறையாக அது பற்றிச் சொன்ன போது எரிச்சல் அடைந்த ஆயிஷாவின் ஆச்சர்யத்தை விட நான் சத்தமாக சிரித்தேன். உளவியலினை உணராமலே அவள் அதை பயின்றதைப் போல அவளுடைய நம்பிக்கையான தொனிக்கு நான் பழகிவிட்டிருந்தேன்.

ஆயிஷா மட்டுமே இப்போது எனக்கான துணையாக இருந்தாள். ஒவ்வொரு காலையும் அவள் வருகைக்கென காத்திருந்தேன். அவள் வீட்டு வேலைகளைப் கவனித்துக் கொள்வாள். எனது கணவர் வேலைக்குச் சென்றதன் பிற்பாடு எனக்கு துணையாகவும் இருந்தாள். எனது மகள் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தாள், அத்தோடு எனக்கென எந்த பெரிய பொறுப்புகளும் இருக்கவில்லை. நான் வீட்டில் அடைபட்டுக்கிடந்தேன். வெளியே செல்வதோ, மற்றவர்களோடு உரையாடுவதோ எப்போதாவது நிகழும். தன்னுடைய நேரத்தை செய்தியறையில் கழித்துக்கொண்டு, சிறுத்தை தன் அடுத்த இரைக்காக காத்திருப்பதைப் போல, தவிர்க்க முடியாத இரை வியப்பாக என்னை சேரும்வரை தன்னுடைய அடுத்த வேலைக்கான வாய்ப்புக்காக காத்திருந்த அந்த இருபது வயதுகளின் இளம்பெண்ணாக இல்லாமலே இருந்த்திருக்கவேண்டும். என் கழுத்து சப்ரியின் சுருக்கில் சிக்கிக்கொண்டது, ஆயிஷா!

அந்தப் பொழுதில், வாராந்தப் பத்திரிகையின் செய்தியறையினுள் அமர்ந்திருந்தேன். எமது பத்திரிகையின் நிருவாக ஆசிரியர் அவரது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். கதவில்  சாய்ந்து, அந்த அறையினுள் அமர்ந்திருந்த எங்களை பார்த்தவண்ணம், அவரது கன்னத்தை தேய்த்தவாறே ஏதோ ஆழமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இலக்கியப் பிரிவில் பயிற்சி பெறும் ஆசிரியராக நான் இருந்த போதிலும், அவர் என்னை குறித்து அழைத்து ஒரு தினசரிப் பத்திரிகையின் குற்றப் பிரிவு பக்கத்தில் இருந்து வெட்டிய ஒரு பகுதியை தந்தார். நான் இருந்த அந்த இலக்கியப் பத்திரிகையோ நகுயிப் மஹ்பவுஸின் வருடாந்த பிறந்ததின நினைவு நாட்களிலும் அதுபோன்ற  விஷேட சந்தர்ப்பங்களில் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்தன.

எங்களுடைய நிர்வாக இயக்குனர் பழைய கறுப்பு வெள்ளைப் திரைப்படங்களில் வரும்  குண்டர்களைப் போல தோற்றம் கொண்டவர். நம் சகாக்கள்  பேசிக் கொண்டிருந்தபோது நண்பர்கள் அவரைப் பற்றி நகைச்சுவையாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அவர் தனது கல்வியை முடித்து பட்டம் பெறும்வரை ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் ஒற்றனாக-வேவுப்புறாவாக  வேலை செய்ததாகவும், பட்டம் பெற்ற பின் வேவுபார்க்கும் ஊடகவியாளனாக  ஆனதாகவும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் சொல்லும் நகைச்சுவை எப்போதும் சிரிப்பு மூட்டினாலும், அது உண்மையெனவே தோன்றியது.

“நான் எனது தொழிலை குற்றப் பிரிவிலிருந்தே ஆரம்பித்தேன். அங்கிருந்து ஆரம்பிக்கும் எந்த  பத்திரிகையாளனும் உப்பு மதிப்பானவன்.” தனது பேனையினால் ஒரு தலைப்பினை வட்டமிட்டபடியே நிர்வாக ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.

“அல்-மார்க் ஹவுஸ் நிறம்பூசுபவரின் மரணத்தின் மர்மம் தீர்க்கப்பட்டது: பிள்ளைகளிற்கான வாழ்வாதாரம் வழங்க முடியாமையால் தற்கொலை செய்து கொண்டார்.”

எனது ஆசிரியரின்படி  நான் இந்த சம்பவத்தை புதிய “சுவையான தகவல்களாக” மாற்ற வேண்டும், நிச்சயமாக நான் அதை கண்டுபிடிக்க வேண்டும் என விரும்பினார். எனது வேலைகளை தொழில்முறை முறையில் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டேன். இந்த மரணம் நிகழ்ந்த இடத்திற்கு தனிப்பட்ட முறையில் சென்று விசாரணை நடத்திப் புதிய விவரங்களை சேகரிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டேன். எனக்கு நமட்டுச்சிரிப்பு சிரித்துவிட்டு, தனது தொப்பை வயிற்றைத் தடவியபடியே அவசரமாக அவரது  அலுவலக அறைக்கு நடையை கட்டினார் அவர்.

நான் தொலைபேசி ஆப்பரேட்டரை உதவிக்கெனப் பெற்றுக் கொண்டேன். அமலின் சரியான வயதைப் அனுமானிக்க கடினமாக இருந்தது. அவளது தோல் முழுவதுமாக அசாதாரண அளவு ஒப்பனையால் மூடியிருக்கும். அவளுடைய முழு நேரத்தையும் பல்வேறு பத்திரிகையாளர்களை அவளில் வீழ்த்தும் முயற்சியிலே செலவிட்டாள். பத்திரிகையாளர்கள் அனைவரும் அவளை பயன்படுத்திக் கொண்டனர். எனவே அவர்கள் நினைத்த நேரங்களில் தொலைபேசியை உபயோகிக்க முடிந்தது. பத்திரிகையின் கொள்கைப்படி தொலைபேசி அழைப்புக்கள் சில நிமிடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப் பட்டிருந்தது அதன் பின்னர் அதனை அவள் துண்டித்துவிட வேண்டும். ஒரு இளம் பத்திரிகையாளர் அவளது அலங்காரங்களை பாராட்டலாம், பின்னர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திதருமாறு கேட்கலாம், அவளது முக்காட்டிலிருந்து கீழே விழுந்த சாயம் ஏற்றப்பட்ட கூந்தல் முடியை விரல்களால் பிடித்து விளையாடிய படியே குலைந்து வெட்கப்பட்டு சிரிப்பாள். நான் புன்னகைத்து விட்டு, அந்தச் சம்பவம் நிகழ்ந்த இடம் பற்றி அவளிடம் வினவினேன். அந்த நிகழ்வு அல்மார்க்கைச் சுற்றியுள்ள குடிசைப்பகுதியின் அயலில் நடந்தது. அதற்கு அருகிலுள்ள ஏழ்மைப் பகுதியிலேயே அவள் வாசித்துக் கொண்டிருந்தாள். பெருந்தன்மையுடன் அவளது உதவியினை வழங்க முன்வந்தாள். அமலினுடைய வீட்டிற்கு அருகிலேயே அந்த இடம் உள்ளதாகவும், அவள் என்னை அங்கு அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தாள். எங்கள் பயணம் அல்மார்க்கினை நோக்கிச்செல்லும் சுரங்கப்பாதை வழியாக ஆரம்பித்து. மினி பஸ்ஸில் ஆரம்பித்து, கைதிகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும்  வாகனம் போன்ற திறந்த வாகனம் ஒன்றில் தொடர்ந்தது. ஒன்றுக்கு ஒன்று நேரெதிராக அமைந்த இரண்டு மாடி வீடுகள் நிறைந்த குறுகிய பாதைவழியாக நுழைந்தோம். அந்த வீடுகள் சிறு அறைகள் கொண்டவைகளாகவும், சிலவை ஜன்னல்கள் அற்றவையாகவும் சீரற்று சிதறிக் கிடந்தன. அங்கே வாழும் மனிதர்களை ஒருவனால் இலகுவாக வேவு பார்த்துவிட முடியும். குறைந்தது எழு மனிதர்களாவது வாழாத எந்த அறையும் அங்கே இருக்கவில்லை.

தற்கொலை செய்துக் கொண்ட அந்த மனிதனுக்கு சொந்தமான அறை அந்த வீதியின் மத்தியில் அமைந்திருந்தது. கீழ் மாடியில் அமைந்திருந்த அந்த அறையில் ஜன்னல்கள் இருக்கவில்லை. ஆனாலும் மிக அண்மையில் வெள்ளை நிறப்பூச்சு பூசப்பட்டது போன்று இருந்தது. சுற்றியிருந்த வீடுகளில் இருந்து அதுவே அந்த வீட்டை வித்தியாசப்படுத்திக் காட்டியது. அந்தத் தூக்குக் கயிறு இன்னும் அதே இடத்திலேயே இருந்தது. தடித்த கயிறு தொங்கிக்கொண்டு இருந்த வெடிப்பு விழுந்த உற்கூரை உடைந்து விழுவதற்கு தயாராக இருந்தது. முடிச்சை போட்ட மனிதன் எந்த பிழைத்தலுக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது என்கிற முடிவோடு முடிச்சை போட்டது போன்று இறுக்கமான முடிச்சுடன் அந்த கயிற்றின் முடிவிடம் இருந்தது. பெருஞ்சுமையான சந்நிதனமாக இருந்தாலும் அந்த அறையின் மையப்புள்ளியாக அந்த இடம் இருக்கவில்லை. உண்மையான மையப்புள்ளியாக அந்த அறையின் சுவர்களே இருந்தன. பல வர்ணங்களும் மூலப்பொருட்களும் பயன்படுத்தி அந்த சுவரெங்கும் சித்திரங்கள் பொறிக்கப்படிருந்தன.

அந்த அறையின் சிதைந்த சுவர்களிலெல்லாம் சித்திரங்கள் நிறைந்திருந்தன. அவை வர்ணங்களால் நிறம் பூசப்பட்டிருந்தன, ஏனையவை நிலக்கரியினால் வரையப்பட்டிருந்தன. இயற்கைத் தாவரங்கள், பறவைகள், மற்றும் மரங்கள், கிராமப் புற சூழல், மற்றும் நீண்ட கருங்கூந்தலையும், அடர்த்தியான கண்மை வரையப்பட்ட கண்களையும் உடைய ஒரு இளம் பெண்ணின் முகம் இப்படி வரையப்பட்டிருந்தன. அவளுடைய முகம் சுவர்கள் முழுவதிலும் எதிரொலித்தப்படி இருந்தது.. மற்ற இடங்களில் கவரக் கூடிய வகையிலான வெவ்வேறு வயதையுடைய பெண்களில் வரைபடங்கள் அழகாக கருப்பு நிறத்தில் வண்ணமிடப்பட்டிருந்தன. இந்த அழுக்கான அறைக்கும் அதன் மூலைகளில் எழும் விரும்பத்தகாத நாற்றங்களுக்கும் இந்த அழகிய வரைபடங்கள் பொருந்தவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.  அழுக்குகள் ஆட்சி செய்த அந்த சந்தின் மத்தியில் அந்த சித்திரங்கள் மிதமான அழகைத்  தருவதற்காவே வரையப்பட்டதைப்போல இருந்தன.

அல்-மர்க்கிலுள்ள அந்த அறையை உனக்கு நினைவிருக்கிறதா ஆயிஷா..?

ஆயிஷா குனிந்திருந்து தன் இடுப்பை நேராக்கும் போது தனது ஒரு கையினைத் தாங்கியே எழவேண்டியிருந்தது. தொடர்ச்சியாக வைத்தியசாலை, வைத்தியர்கள் என சென்றாலும் என்னவென்று அறிய முடியாத அதீத வலியின் காரணமாக சிரமப்பட்டாள். அவளது பின்புறம் பரந்ததாக இருந்தபோதிலும் எப்போதும் போலவே அவள் எளிதில் வளையக்கூடியவளாகவே இருந்தாள். அவள் முன்னரைப்போல இப்போது இளமையாகவும் ஒல்லியாகவும்  இருக்கவில்லை, ஆனாலும் தொடர்ச்சியாக மனிதர்களின் வீடுகளில் கடுமையாக உழைப்பதால் அவளது உடல் பருத்திருக்கவில்லை. எப்படி மறக்க முடியும்? என்பதைப்போலத்  தன் பார்வையை என்பக்கம் காட்டினாள். மறுபடியும் முதுகை குனிந்தபடி வளர்ந்துவிட்ட  தனது  மகள்கள் மற்றும் மகன்கள் பற்றியும் அவர்களோடே வளர்ந்த அவர்களது பணத்தேவை பற்றியும் பேசிக் கொண்டே போனாள். அரசியல் இன்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய விருந்தினரின் நம்பிக்கையான  பேச்சு என்பவற்றினூடாக அவளது பேச்சு நகர்ந்தது. அவள் தனது கடந்த காலத்தை கடந்துவிட்டவளைப்போல எனது பேச்சின் மீது அவ்வளவு ஆர்வம் காட்டுவதாக இல்லை. எனது கேள்விகளிற்கு பதில் சொல்வதாகவும்  இல்லை..  இருபது வருடங்களிற்கு முன் எங்களது வீட்டிற்கு வேலைக்காக வந்தவள் அவள். என்னுடைய  திருமணத்தின் பின் என்னோடு மீண்டும் இடம் பெயர்ந்தாள். அவளுடைய சொந்த மகளைப்  பற்றி அறிந்திருந்ததை விடவும்  எனது மகள் பற்றி அதிகம் அறிந்திருந்தாள். எனினும் இப்போது அவள் பற்றி எதுவும் கேட்பதில்லை. உனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆயிஷா!

“தற்கொலை செய்து கொண்டவரது பெயர் சப்ரி எனவும், அவர் வீடுகளிற்கு வர்ணம் பூசுபவராக தொழில் புரிந்ததாகவும், மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்துகொண்டார்” எனவும் செய்தி அறிக்கை தெரிவித்தது.

அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வந்த மளிகைக்கடை உரிமையாளர் அமலை அடையாளம் கண்டுகொண்டதன் பின் அந்த சம்பவம் பற்றிக் கருத்துத் தெரிவிக்க தானாக முன்வந்தார். வெளிநபர்கள் யாருக்கும் சுதந்திரமாக உலவ முடியாத இந்தத்  தனியார்பகுதியில் எனக்கான வழிக்காட்டியாக அமல் இருந்தாள். ஹஜ் சயீத்  மற்றும் மளிகை கடைக்காரர்.

“தற்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் இன்னும் எந்த முடிவையும் எட்டவில்லை” என்று உறுதிப்படுத்தினர் “அதனால் தான் குற்றம் நடந்த இடம் எவ்வாறு இருந்ததோ அப்படியே வைக்கப்படிருக்கிறது” அதிகாரபூர்வமான பொறுப்பாளர் போல அவர் தனது கூற்றை மிகுந்த நம்பிக்கையுடன் ஒப்புவித்தார்.

அறையினைப் பாதுகாப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எந்த சேதமும் செய்யாத வகையில் காப்பதற்கும் அவரே பொறுப்பதிகாரியாகத்  தன்னைக்  கருதிக் கொண்டிருந்தார். அவரிடம் இறந்தவர் பற்றிக் கேட்டேன். அவர் கூறியதாவது:

“அவர் ஒரு “சிறந்த குணாம்சம்” கொண்டவர். அண்மைப் பகுதியிலிருந்து இளைஞர்களை தொழுகைக்காக  அழைக்க வரும் நீண்ட தாடியுடையவர்களின் மீது எந்த கவனத்தையும் அவர் செலுத்தவில்லை.  மேலும் குடித்துப் புகைப்பிடிப்பவர்களின் கூட்டத்தோடு சேர்ந்து கும்மாளம் போடவும் இல்லை.” அவர் சரிந்து அமலை நோக்கிக் கூறினார்.

“இறைவன் நம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும். எதுவோ அவர்மீது ஆட்கொண்டதுபோல காணப்பட்டார்.”

அமல் தனது மார்பில் உள்ளங்கையால் அடித்துக் கொண்டு கேட்டாள் “நீங்கள் உள்துறை அமைச்சுக்கு வேலை செய்த இப்ராஹிம் மாமாவின் மகன் சப்ரியையா சொல்கிறீர்கள் ? “

இப்ராஹிம் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்தார் என்று எவரும் அறிந்திருக்கவில்லை. இப்ராஹிம் கூட அவர் செய்யும் தொழில் பற்றி அறியாதிருந்திருக்கலாம். இருந்தபோதிலும் உள்துறை அமைச்சிற்காக அவர் பணிபுரிந்ததாக அனைவரும் ஒப்புக் கொண்டனர். அமல் அச்சப்பட்டாலும் அருகாமையில்  இப்ராஹிம் வாழ்ந்திருந்த சந்துக்குள் நான் செல்ல முனைந்தேன். அவள் என் அருகாமையில் நடந்து  மேலும் அவ்வழியில் நகர்வதைத் தடுக்க முயன்று கொண்டிருந்தாள். தன் தாய் தன்னிடம் சொன்ன ஆவிகள் மரணித்தவர்களுக்காக   நடாத்தப்படும்  பேய் ஓட்டும் நிகழ்வுகள் பற்றியும், எப்படி  தூரத்தில் வசிக்கும் அயலவர்களுக்கு கூட ஜின்னின் (அரூபமான இன்னொரு படைப்பு என முஸ்லிம்களால் நம்பப்படும் அமானுஷ்யம்) அலறல்  கேட்கிறது என்பது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள். எப்படி அவனது தந்தை ஆயிஷாவிற்கு அவனை திருமணம் முடித்துக் கொடுத்தார்? அதன் மூலம் அவரது ஆன்மா இறைவனின் அருளை பெறும் எனக்  குருநாதரின் அறிவுரைபற்றியும் சொன்னாள். தன் பழைய பழக்கங்களில் இருந்து விடுபடும் முன்பே  உண்மையில் அந்த பையன் ஆயிஷாவுடனும் நான்கு குழந்தைகளுடனும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தான். நான் கேட்டேன் அது என்ன பழைய பழக்கங்கள்? ஆனாலும் எனக்குப்  பதில் கிடைக்கவில்லை. இறந்தவரின் வீட்டை அடையும் வரைக்கும் ஒரே வகையான  கதையை திரும்பத்திரும்பப்  பலவிதங்களில் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த இடத்தில், வீடுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன. வெளிப்புறச் சுவர்களில் நிறங்கள் உதிர்ந்து உள்ளிருக்கும்  சிவப்புச் செங்கற்களை வெளிப்படுத்தின. கற்களால் ஆன படிக்கட்டுகளின் மேற்பகுதி வானத்தைக்  காட்டிக்கொண்டு திறந்திருந்தன. காரணம், பழைய கட்டிடங்களாக இருந்த போதும் இன்னும் அவை முடிவுறாமலே இருந்தன. இப்றாஹீமினுடைய குடும்பம் வசித்து வந்த அறை இருக்கும் இரண்டாவது மாடியை அடையும் வரை எந்தத்தயக்கமும் இன்றி அமலைப்  பின்தொடர்ந்து ஏறினேன். அந்த ஒற்றை அறை  ஏறக்குறைய வெறுமையாக இருந்தது. கதவை எதிர்கொள்ளுமாறு பெரியதொரு மரக்கட்டில் காணப்பட்டது. கையில் சிகரட்டை ஊதியபடியே அந்த கட்டிலில் இப்ராஹீம் அமர்ந்திருந்தார். அழுக்கடைந்த வெள்ளை நிற ஜிப்பா அணிந்திருந்தார். இன்னொரு இளம் பையன் அவருக்கு அருகில் அமர்ந்து இருந்தான். அவர்களைச் சுற்றிலும் பிள்ளைகள் சூழ்ந்திருந்தனர். கருப்பு நிற ஆடைகள் அணிந்து பெண்கள் தரையில் அமர்ந்திருந்தனர். அங்கே குழந்தைகள் கூச்சலிட்டபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தக்  காட்சி சப்ரியின் அறையின் சுவர்களில் இருந்த சித்திரங்களிற்கு ஒத்ததாக இருந்து. எல்லாக் கதவுகளையும் திறந்துவிடும் சாவியாக அமல் இருந்தாள். அவள் பதற்றத்துடன் என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அவர் என் மீது கத்திக் கொண்டிருந்தார். கடவுளைப்பற்றி பயப்படாத பத்திரிகையாளர்களைச் சபித்தார்.

“எனது மகனுக்கெனச்  சிறந்த வாழ்க்கை இருந்தது. அவனுக்கென சொந்தமாக ஒரு அறை ஒன்றினை  அவனுக்காகவும் அவனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுக்காகவும்  பெற்றுக் கொடுத்திருந்தேன். கடவுளுக்கு எதிராக பாவமான தற்கொலையை அவன் செய்திருக்கமாட்டான். இது நிச்சயமாக அவனை  அந்த அடிமைகள்தான் கொண்றிருப்பார்கள். அந்தப் பத்திரிகையாளர்களிற்கு என்ன நடந்தது எனப்  பார்க்குமாறு நான் ஹிஷாம் பாஷாவிடம் சொல்லியிருக்கிறேன். என் மகனின் சட்டரீதியான  உரிமைகளை நான் விட்டுக் கொடுப்பதாயில்லை” என்றார்.

“இப்ராஹிம் உள்துறை அமைச்சிற்காகப் பணிபுரிந்தவர்” என்ற காரணத்தினால் நான் அவரிடம் “ஹிஷாம் பாஷா யார்” என்று கேட்கவில்லை. தனது மகன்  தன் அறையில் ஆடம்பரமாக வாழ்ந்தவன் என்று சொல்லிய அவருடைய ஆத்திரத்தை கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில், முன்பு பத்து கோதரர்களுடன் ஒருவனாய் சப்ரி இதே அறையில் வாழ்ந்தவன். நான் சப்ரியின் மரணம் தொடர்பாக உண்மையை வெளிக் கொண்டுவரவே வந்துள்ளேன் என்று கூறி அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். அவரது மகனைப்பற்றி எழுதிய அனைவரையும் என் இடத்தில் வைத்து தாக்க முனைவது போல அமைதியற்று அவரது உடல் துடித்தது, அவரது கோபம் அதிகரித்தது.

மீண்டும் குற்றம் நிகழ்ந்த இடத்தைநோக்கி வந்தோம். அங்கிருந்த இளம் பையன் ஒருவன் தானாக முன்வந்து சொன்னார்:

“இதைச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். அவர் பெண்மையான தன்மையுடையவர். எந்த ஒரு சின்ன விடயத்திற்கும் பெண்களைப் போல அழுபவர். அவரும் அவரது தந்தையும் சகோதரனும் அவரைப் பாதுகாத்தார்கள். அவர்கள் இல்லையெனில் நொறுங்கும் வரை தாக்கப்பட்டிருப்பார். எனினும் அவர் மென்மையானவராகவும்  தயவானவராகவும் இருந்தார். அவருக்கென்று ஒரு தனி உலகில் வாழ்ந்தவர் போலத் தோன்றினார். அவருடைய எல்லா விடயங்களிலும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.”

சப்ரியினைச் சிறுவயதிலிருந்து நன்கு தெரிந்த அயலவர்களிடமிருந்து நான் அவனது கதை பற்றித் தகவல் சேகரித்தேன். அவர்கள் சொன்னார்கள்:

“அவனுக்கு இருபது வயதாக இருக்கும் வரை அவன் இந்தச் சேரியில்தான் நிறம் பூசும் வேலை செய்து கொண்டிருந்தான். அவன் சிறுவனாக இருந்தபோது அவனுடைய தந்தை அவனுக்கான இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தார். அவன் அதில் திறமையானவனாக வந்தான். அதனால்  அனைவரிடத்திலும் அவனது மதிப்பு அதிகரித்தது. அவன் சிறுவனாக இருந்த போது இறந்த அவனுடைய தாயின் கிராமத்திற்கு அவனுடைய மாமாவைப் பார்க்கச் சென்று வந்தான். அதன் பின்னர் அவனுடைய அறைக்கும் அவனுடைய வேலைக்கும் வாழ்க்கைக்குள்ளும் திரும்பியிருந்தான். எல்லாவற்றிற்குமென மனம் வருந்தினான். அவன் அயலவர்கள் சேர்ந்திருக்கவில்லை. அவனுக்கு வெறும் பதினேழு வயதில் அவனது தந்தை திருமணம் முடித்துக் கொடுக்கும் வரை  சுவர்களில் வரைவதை தவிர வேறு எதுவுமே செய்யவும் இல்லை. திருமணத்தினால் அவன் “உறுதியான ஆண்மகனாக” மாறிவிடுவான் என இப்ராஹீம் சொல்லிக் கொண்டிருந்தார்.

முன்னர் உன்னிடம் சொல்லியிருக்கிறேனா ஆயிஷா? எனது திருமணத்திற்கு முன் எனக்கு நடந்தவைகளைப் பற்றி, இப்ராஹீம் உன்னையும் உனது குழந்தைகளையும் பராமரிக்காமல் விட்டபோது  நீ வீடுகளில் பணிப்பெண்ணாக வேலைசெய்யும் முன்னர்? எனக்கு வாழ்க்கையின்மீது வேறுவிதமான கனவுகள் இருந்தன. ஆயிஷா….! சப்ரியை போலவே. தாயும் தந்தையும் மூன்று உடன்பிறப்புக்கள் இருந்தபோதும் நான் பட்டப்படிப்பை முடித்த பின் எனது குடும்பத்தை விட்டும் தனித்து சுயாதீனமாக இருக்கவேண்டும் என அவசரப்பட்டேன். எனக்கு சொந்தமான இடத்தில் வாழவிரும்பினேன். எனக்கான கட்டுப்பாடுகளால் நிருவகித்து, யாருடைய கட்டுப்பாடுகளும் என்மீது இல்லாமல், எங்கே என்னால் ஒழுங்கில்லாமல் இருக்க முடியுமோ, இல்லை மகிழ்ச்சியை மட்டும் வேண்ட முடிகிறதோ, எவரின் அழுத்தமும் இல்லாமல் எங்கே என் வாழ்க்கைக்காக எனக்கு எதுதேவை எனத்  தெரிந்துகொள்ள முடிகிறதோ அங்கே வாழ விரும்பினேன். என் குடும்பத்தின் விருப்பத்தை எதிர்த்து வீட்டைவிட்டு போகவேண்டும் என நான் எடுத்த தீர்மானத்திற்கான முக்கிய காரணமும் சப்ரியின் நிகழ்வைப்பற்றிய நான் எழுதிய அறிக்கைதான். நான் பாசிமை சந்தித்துப்  பின்னர்  திருமணம் செய்வதற்கு முன்னர் சிறிதுகாலம் என் தோழியோடு தங்கியிருந்தேன். எங்களது ஒருமித்த கருத்துக்களையும், எண்ணங்களையும் நிறையவே நாங்கள் பரிமாறிக்கொண்டோம். எனினும் திருமணத்தின் பிற்பாடு நாங்கள் இருவருமே மாறி விட்டோம். ஒரு குடும்பத்தைக் கட்டி எழுப்புவதில் நாங்கள் வெற்றி அடைந்த போதிலும் நாங்கள் இருவருமே எங்கள் எண்ணங்களில் மகிழ்ச்சியாக உணரவில்லை. எந்த அறைகளின் எல்லைகளில் இருந்தும் மிக தொலைவாக பறந்துவிட நாங்கள் ஏக்கம் கொண்டிருந்தோம், இருந்தும் மாறாக சப்ரியின் அறையில் இருந்த தூக்குக்கயிற்றின் முடிச்சில் நாங்கள் தொங்கிக்கிடந்தோம். ஆயிஷா! நாங்கள் இருவருமே ஒருவரின் ஒருவர் துணையோடும் மகிழச்சியாக இருக்கவில்லை, இருவருமே தனித்தும் மகிழ்ச்சியாக உணரவில்லை. இந்த வாழ்க்கை இப்படித்தான் என்கிற யதார்த்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. பலனில்லாத யோசனை அபாயகரமானதாக தோன்றியது ஆயிஷா! ஆனாலும் அதுதான் நிதர்சனம் வாழ்ந்தாக வேண்டும். உனக்கு நான் சொல்வது புரிந்ததா?.

“உன்னால் சப்ரியை புரிந்துக் கொள்ள முடியாதபோது, எப்படி நீ புரிந்துக்கொள்ள முடியும்!?”

நான் முதலில் உன்னை சந்தித்த போது நீ ஒரு வெற்றிடத்தை முழுமைப்படுத்திய சுவர் சித்திரமாக இருந்தாய்; கருப்பு மேலாடையை  போர்த்திய படி, சுவற்றுக்கு பின்பக்கத்தால் சுவற்றில் குந்தியிருந்த மெல்லிய மாநிறப்  பெண்னாக இருந்தாய். அவளின் உடல் பூமியோடு பினைக்கப்படிருந்த்து. ஆனாலும் அவளின் மெல்லிய கழுத்து வானத்தின்பால் திரும்பி, அகன்று தெளிந்த கனவுகள் நிரம்பிய கண்கள் தூரத்தில் ஒரு புள்ளியை பார்த்திருந்தது. அந்நியர்களோடு பழக்கமில்லாதவர்களின் வியப்போடு அவள் என்னை நோக்கினாள். அமல் என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

ஆயிஷா சப்ரியுடைய மனைவி. “கடவுளின் சாந்தி அவள் மீது உண்டாவதாக”.

அந்த நாளில் ஆயிஷா ஒரு மணித்தியாலத்திற்கு மேலதிகமாக பேசினாள். சப்ரியின் பிரதிமையை உருவாக்க எல்லோருமே அவர்களுடைய பங்கை செய்தனர். தந்தையார், மளிகை கடை உரிமையாளர், அயலவர்கள், இன்னும் என்னுடைய தனிப்பட்ட எண்ணங்களும் புதிர்களும்கூட அந்த அறிக்கைய எழுத பங்காற்றின. சப்ரியின் அறை சுவர்களில் இருந்த சித்திரங்களில் இருந்து பார்க்கும் போது, இன்னும் அது ஆயிஷாவின் முகம்தான் உத்வேகம் தரும் உயர்ந்த மூலமாக இருந்தது. ஆயிஷாவும், அவர்களுடைய நான்கு சிறு குழந்தைகளும் அந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த போதே சப்ரி அதை அறையில் தற்கொலை செய்து கொண்டான். கடைசியாக சப்ரியை உயிருடன் பார்த்த ஒரே நபர் ஆயிஷாதான். கருப்பு நிற உடை அணிந்த இளம் பெண்னாக இருந்தாள். சம வயதுடைய மூன்று குழந்தைகள் தரையில் அமர்ந்திருந்தார்கள். நான்காவதாக கைக்குழந்தை அவளது மார்பில் உறங்கிக்கொண்டிருந்தது. சப்ரியின் அறையில் இருந்த நிலக்கரியாலான சித்திரங்களை மீளுருவாக்கம் செய்ததுபோலவே அவள் இருந்தாள். ஆனாலும் அவளுடைய கண்கள் சோர்வாக அயர்ச்சியுற்று இருந்தன. அந்த சித்திரங்களின் கண்களில் கரிய கண் மையினால் கோடுகள்  இடப்பட்டிருக்கவில்லை.

அவள் கூறினாள்:  “அவர் என்னோடு மிகவும் அன்பாக இருந்தார். ஒருபோதும் என்னைக் காயப்படுத்தியது இல்லை. அவர் எப்போதும் என்னை வரைந்து கொண்டே இருப்பார். எனினும் என்னோடு பேச மாட்டார். சத்தியமாக எனக்கு அவர் வரைபடங்களைப்  பிடிக்கும். ஆனால் அவைகள் என்னை இரவுகளில்  பயமுறுத்தும். இவைகளின் மூலமாக துரதிஷ்டத்தை இறைவன் இறக்கிவிடுவதாக என் தாய் கூறினார். துரதிஷ்டம் வந்துவிட்டது. அவர் இறுதியில்  பல வாரங்களாக  வேலை இல்லாமல் இருந்தார். மிஸ், உண்மையாக அவர் எதுவுமே செய்துக்கொண்டு இருக்கவில்லை. இறுதியில் எல்லா வேலையாட்களும் அவர்மீது வருத்தப்பாட்டார்கள். ஆனால் ஒரு நல்ல தொழிலாளி என்ற பெயரைத் தவிர வேறொன்றும் அவரிடம் இருக்கவில்லை. எல்லாவற்றிகும் மேலாகக்  குழந்தைகளுக்கு கற்களை உண்ண முடியாது மிஸ். மேலும் அவருடைய அந்த வரைபடங்கள் எங்களை வாழவைக்காது. இறுதியில் என் அம்மா பேய் ஓட்டுவதற்கு ஆலோசனை சொன்னார். ஆலோசனையை கேட்டவுடன் அவர் கத்தினார். மேலும் எல்லாவற்றையும் நொறுக்கினார். அவருடைய தந்தை அவரை அடிக்கும் வரை அவர் அமைதியாக இருக்கவில்லை. அந்த சித்திரங்கள் அனைத்தையும் ஒரு வண்ணப்பூச்சினால் மூடிவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதனால் மாத்திரமே அவன் அழைத்து வந்த அனைத்துப் பேய்களையும் போக்கிவிட முடியும் என்றார்”.

ஆயிஷாவின் முகம், அவள் அமர்ந்திருந்த விதம், அவள் குழந்தையை வைத்திருந்த விதம்,  ஏனைய அனைத்தையும் விவரணைகளையும்… .சப்ரி தனது வரையும் திறமையின் மூலம் அவர்களை மிகவும் அற்புதமாக வரைந்திருந்தார். அந்தப் படம் என் நினைவில் இருந்து இன்னமும் மறையவில்லை.

ஆயிஷாவின் முகம் நிறைய மாறிவிட்டது. அவளது கண்களைச் சுற்றி இளையோடியுள்ள சுருக்கங்கள் அவள் உண்மையான வயதை விட முதிர்ச்சியான தோற்றமளித்தது. அவள் ஒரு குழந்தையைப்போலவே இருந்தாள். ஆனாலும் பணிப்பெண்ணாக அவளுடைய வேலை அவளுடைய காலத்தை மிக வேகமாக நகர்த்திவிட்டது. அவை அவளின் மேனியின் வண்ணத்தில் தன் தழும்புகளை விட்டுச்சென்றிருக்கிறது. அவளது உடலின் சில பாகங்களில் மர்மமான  மூலங்களில் இருந்து வந்த வலிகள் அவளை இன்னும் சோர்வடையச் செய்தன. நான் அவளுக்காகத்  தேநீரையும் காலை உணவையும் தயார் செய்தேன். பணிப்பெண்ணாக வேலை செய்வதினை நிறுத்தும்படி எடுத்துச்சொல்ல எவ்வளோ முயற்சி செய்தேன். அவள் சொன்னாள்: “உங்களது உடைந்த முதுகெலும்பினால் வேலைகளைச் செய்ய முடியாது. மிஸ்!”

ஆயிஷாவினால் பணிப்பெண்ணாக பணியாற்றுவதை நிறுத்த முடியாது. நான் அவளுக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தாவிட்டாலும் மற்றவர்கள் நிறுத்திவிடுவார்கள்.

உனக்குத் தெரியுமா ஆயிஷா! நேற்று நானும்  சப்ரியின் தூக்குக் கயிற்றை போல சுருக்கிட்டுக் கொள்ள முனைந்தேன். எனக்கு தனிமையில் இருக்கவேண்டும் போல இருந்தது. எனினும், வழமை போல எனது கணவர் அவரது துணையாக எனை வைத்திருக்க விரும்பினார். என் அம்மாவைப் போலவே என்னை திணறடிக்க வைத்தார்.  உனக்கு தெரியுமா? எனக்கு ஒரு சொந்த அறை வேண்டும். அத்தோடு சப்ரியின் விதியை எண்ணி நான் அஞ்சுகிறேன். அந்த இரவில் என்ன நிகழ்ந்திருக்கும்? அவன் தன்னைக் கொல்லத் துணிந்த அந்த இரவில் என்ன நிகழ்ந்திருக்கும் ஆயிஷா?

ஆயிஷா வழக்கம்போல குந்தியிருந்தாள். தன் உள்ளங்கைகளிற்கிடையில் தன் தேனீர் கோப்பையை ஏந்தியபடி தனது மூங்கில் போன்ற கழுத்தைத் திருப்பி.  “உங்கள் கணவர் இறந்துவிட்டார் மிஸ். நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். நானும் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையிலான போராட்டத்தோடு வைத்தியசாலையில் இருக்கிறேன். இது ஒரு ஆள் மன உந்துதல் மிஸ்! ஆழ்மன உந்துதல்”.

ஆயிஷா பழிபோடுகிறாள். வலி இருக்கும்போது இப்படிச் செய்வது அவளது வழமை. அவள் மறந்து போகிறாள். அதனால் அவளது கோபத்தை என்மீது திருப்புவதன் மூலம் அவளது கேள்விகளைத் தவிர்க்க முயல்கிறாள். சப்ரியின் மரணத்திற்கு அவள் காரணம் இல்லாதது போல், நான் வேண்டிய  இந்தத் தனிமையை தாங்க இயலாததுபோல. இதே கேள்வியை எனது அறிக்கையில் அவளிடம் கேட்டபோது, எல்லோர் மீதுமான குற்றச்சாட்டாக அவளது பதில் இருந்ததை ஆயிஷாவிற்கு நினைவில் இல்லை.

“அவன் தற்கொலை செய்து கொண்ட அந்த இரவில் என்ன நடந்தது ஆயிஷா?

“அவனது மனதில் ஊடுருவியிருந்த பேய்கள் தான் அவனைக் கொன்றன, மிஸ்!”

அவனுடைய தந்தை அவனின் சுவர் சித்திரங்களை இருப்பிலிருந்து துடைத்தெறிய வலியுறுத்தினார். விடிவதற்கு முன்னர் அதை அவன் செய்தாக வேண்டி இருந்தது. இரவு முழுவதும் அவன் தன் சித்திரங்களை வரைந்து முடித்தான். வெறுமையாய் இருந்த இடங்களையும் சித்திரங்களால் நிரப்பினான். அவனுக்கு வேண்டிய விதத்தில் வர்ணங்கள் பூசி அழகுபடுத்தினான். இறுதியாக எல்லாவற்றையும் முடித்தபின்பு, அவனது சித்திரங்களை துடைத்தெறிய நிர்பந்திக்கப் படுவதற்கு முன்பாக தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டான். அவனை அவர்கள் கொலை செய்வதற்கு முன்பாக அவனே தற்கொலை செய்துக்கொண்டான். போலிஸ் இந்த வழக்கை “தற்கொலை” என்று முடித்துவிட்டனர்.

என்னுடைய அறிக்கை வெளியிடப்படவில்லை. “அல்-மார்க்கின் ‘பேய் வீட்டில்’ நிரம்பூசுனரின் மர்ம தற்கொலை” என்கிற தலைப்பில் அதற்கு பதிலாக வேறு ஒன்று அச்சேறியது

என்னுடைய வீட்டிலுள்ள அறை சப்ரியின் அறையினைப் போன்றதில்லை ஆயிஷா! எனினும், அந்தக் கயிறும் அதன் ஆழ்மனதும் ஒன்றுதான். நீ பிரியாவிடை இல்லாமே பிரிந்து சென்றாய். உன்னுடைய கணவரையும் என்னுடைய கணவரையும் போல, அவர் இன்னும் திரும்பவே இல்லை.என்னிடம் இப்போது எஞ்சி இருப்பது கூரையில் இருந்து தொங்கும் சப்ரியின் முடிச்சு மாத்திரமே.

0000000000000000000000

சமர் நூர் பற்றிய சிறுகுறிப்பு : 

மிஸ்பாஹுல்-ஹக்சமர் நூரின் சிறுகதைத் தொகுப்பான In the house of vampire  எனும் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது “A room of Subry’s own” எனும் சிறுகதை. இது 2017 சவிரிஸ் கலாச்சார விருதை பெற்றது( சிரேஷ்ட எழுத்தாளர்களின் பிரிவில்). கற்பனையின்-சேர்வை,  மிகை எதார்த்தவாதம், யதார்த்தவாதம் என்பவற்றின் சேர்வையாக இத் தொகுப்பை எழுதியுள்ளார். அவருடைய கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் (கதாநாயகர்கள்)  எப்போதும் ஒரு பொதுவான கருப்பொருள் ஒற்றுமையினைக் கொண்டிருப்பர். தனிமையில் லயித்திருத்தல், தனிமை மற்றும் தனிப்பட்ட இடைவெளிகளிற்கான தேவையின் அழுத்தம், பொதுவெளிகளில் உணரும் அதீத அழுத்தம், பாதுகாப்பு தொடர்பிலான இழப்பு, மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு நெருக்குதல் நிறைந்த உணர்வு, தற்கொலை,  பைத்தியம் போன்ற இயல்புகளில் ஒத்திருப்பர்.

எகிப்து, கெய்ரோவில் Enas El-Torky பிறந்தார். 1995 ஆம் ஆண்டில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத் துறையின் Ain Shams பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பை முடித்த பின்னர், அவர் MA (1999) மற்றும் Ph.D. (2003) ஆகியவற்றை ஆங்கில இலக்கியத்தில் பெற்றுக் கொண்டார். அவர் 1996-2008 முதல் ஒரு விரிவுரையாளராக பணிபுரிந்தார். அவர் இரண்டு சிறுகதைகள் சேகரிப்புகளை வெளியிட்டுள்ளார். Altalita Ah(Triple Woes) 2014, Min Hona Tamor AlAhlam (Dreams pass by her) 2016.அவருடைய மொழிபெயர்ப்பான “Penelope Lively’s Moon Tiger”- KuwaitKuwaiti Ibdaat Alamiya Series (International Creativity Series), இனால் 2018’இல் வெளியிடப்பட்டது.

சமர் நூர் ஒரு எகிப்திய பத்திரிகையாளர், நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். அவர் இரண்டு நாவல்களை வெளியிட்டுள்ளார்; Alsett (The Lady) 2017, and Mahallak Serr (Walking Still) 2013. இன்னும் அவர் பல சிறுகதைகள் சேகரிப்புகளையும் வெளியிட்டுள்ளார்; Fi Bait Massas Aldemaa (In the House of the Vampire) 2016, Bareeq la Yohtamal (Unbearable Shining) 2008, and Meerage (Rising Passage) 2004. பல விருதுகளை வென்றார், இதில் மிகச் சமீபத்தில் சாய்ராஸ் கலாச்சார விருதினை  மூத்த எழுத்தாளர்களின் பிரிவில் – In the house of vampire சிறுகதை தொகுப்பிற்காகப் பெறுக் கொண்டார், 2017. 2007 இல் Egyptian Syndicate of Journalists’இடமிருந்து சிறந்த கலாச்சார அறிக்கைக்கான விருதினையும் பெற்றார்.1997 ஆம் ஆண்டிய எகிப்திய கதைக் கழகத்தின் “The Sorrow of Farah” எனும் சிறுகதைக்காக Naguib Mahfouz பரிசினை வென்றுள்ளார்.

அவரது கதைகள் பல்வேறு எகிப்திய மற்றும் அரபு பத்திரிகைகளில்  வெளியிடப்பட்டுள்ளன. தற்போது Al-Akhbar  நாளிதழில்  கலாச்சார பிரிவின் தலைவராகவும், 3 Hawadeet (3 கதைகள்) குழந்தைகளின் இலக்கிய இதழின் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார்.

தமிழில்:

மிஸ்பாஹுல்-ஹக்

மிஸ்பாஹுல்-ஹக்

 

 

 608 total views,  1 views today

(Visited 255 times, 1 visits today)