பத்துக்கு பத்து-சிறுகதை-தொ.பத்திநாதன்

தொ.பத்திநாதன்மாட்டுத்தாவணி பேரூந்து நிலையத்தின் மாநகராட்சி கட்டணக்கழிப்பறைக்குள் சென்ற தூரனுக்காக நான் அங்கே  வெளியே காத்திருந்தேன். எனது காத்திருப்பு நீண்டநேரம் ஆகியிருக்கவில்லை. கர்ச்சிப்பால் கையை துடைத்துக்கொண்டே தூரன் வெளியே வந்தான்.

“புலிகள் ஏன் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் பற்றி எதுவும் பேசவில்லை ?”  என்று அவனிடம் கேட்டேன்.

அவன் என் முகத்தை நேருக்கு நேராகப்  பார்த்தவாறே ,

“உள்ள போய் கைய நல்லா கழுவிட்டு வாங்க”. என்றான்.

“நான் உள்ளே போகவேயில்லை பின்ன ஏன் என் கையை கழுவ்வேண்டும் ?”  என்றேன்.

“கக்கூசடியில் நிண்டுகொண்டு என்ன கதை கதைக்கிறியள் ?” என்றவன் என்பதிலை எதிர்பார்க்காமல் பேரூந்தை நேக்கி நடந்தான்.

நான் கக்கூசை திரும்பிப்பார்த்தேன். அங்கு ஆண் பெண் கட்டணக்கழிப்பறை என்பதைத்தவிர வேறு எதுவும் பேசக்கூடாதென்று எழுதியிருக்கவில்லை. மெத்தப்படிச்சவன் ஏதாவது சொல்லுவான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. வேறு வளியில்லாமல் நானும் அவன் பின்னாடியே போனேன். அவன்

பேரூந்தின் முன்வாசல் வளியாக ஏறி ஓட்டுனருக்குப்  பின்பாக்க நாலு இருக்கைகள் தள்ளி உக்காந்தான்.

“முன்னாடி உக்காந்திருக்கும்பொழுது லேடிஸ் வந்தால் நம்மள பின்னாடி விரட்டிருவாங்க. அதனால நாம முன்னாடியே பின்னாடி போய் உக்காருவது நல்லது”.

“சும்மா இருங்க. பின்னாடி போனா பேரூந்து தூக்கி தூக்கி குத்தும்” என்றான்.

“அகதின்னாலே எல்லாரும் தூக்கிக் குத்தத்தான் செய்வாங்க. பேருந்தும் அது பங்குக்கு குத்திட்டு போகட்டுமே. குத்துவாங்கிறது நமக்கு புதுசில்லைத்தானே” என்றேன்.

அவன் பதில் பேசாமல் என்னை ஒரு முரட்டு முறை முறைத்தான். நான் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வேறு பக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டேன். நாங்கள் இருவரும் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. அவன் பார்வை ஜன்னலுக்கு வெளியே இருந்தது. என்னால் பேசாமல் இருக்கவும்  முடியவில்லை.

 “ஏப்பா நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமலே வந்திட்டியே. புலிகள் ஏன் அகதிகள் பற்றி பேசவில்லை?” என்று கேக்க முற்படவும், அவனே இம்முறை கேள்வியை ஆரம்பித்தான்.

 “பொண்ணுங்க எதுக்கு துப்பட்டா போடுறாங்க ?”

நான் கேட்ட கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியாமல் இருக்கலாம். அல்லது அந்த உரையாடலே அவனுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதனால் பேச்சை மாற்றுகிறான் என்று நினைத்துக்கொண்டேன். ஜன்னல் வளியாக எட்டிப்பார்த்தேன். இரண்டு பொண்ணுங்க நாங்க உக்காந்திருக்கும் பேரூந்தை நேக்கி வந்துகொண்டிருந்தார்கள்.

“பெண்கள் எதுக்கு மார்புச்சேலையை இழுத்து இழுத்து விடுகிறார்கள் ?”

அவன் பதில் சொல்லவிலை. அந்த துப்பட்டா அணிந்த இரண்டு பெண்களும் ஓட்டுனருக்கு அடுத்து உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். நான் அவனைப்பார்த்தேன். அவன் ஜன்னல் வளியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.

பின்பு அவனே கூறினான், “எனக்கு இந்த இரண்டுபேரையுமே பிடிக்கல.”

 “முன்னாடி உக்காந்திருக்கிறாங்களே அவங்கள சொல்லுறியா ?”

 “இல்ல துப்பட்டா போடுறவங்களையும் மார்புச்சேலைய இழுத்து விடுறவங்களையும் சொல்றேன்.”

 “ஆமா எனக்கும்தான் பிடிக்கல.”

 “இவங்க தன்னம்பிக்கை இல்லாதவங்க. அதனால எனக்கும் பிடிக்கல.” என்று கூறி என்னை யோக்கியனாக காட்ட முயன்றேன்.

 அவன் என் முகத்தைபார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான். அதன் அர்த்தம் எனக்கு புரியல.

“ஏழு கழுத வயசாசுது. துப்பட்டாவையும் மார்புச்சேலையையும் பார்க்கத்தெரியுது. அனால்  உருப்படியா ஒரு கதை எழுதத்தெரியுதா?”

என்று முகத்தில் அடித்தமாதிரி கேட்டான். என்னிடம் பதில் இருக்கவில்லை. நான் சற்று அமைதியாகவே இருந்தேன். பேரூந்து அதன் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

“சரிப்பா எங்கிட்ட ஒரு கதை இருக்கு. அதை சொல்லுறன். நல்லா இருக்கா இல்லையான்னு சொல்லு. அதுக்கப்புறம் எழுதுறன்.”

இப்படித்தான் இந்த கதையை பேரூந்து பயணத்தில் தூரனிடம் ஆரம்பித்தேன்.

0000000000000000000000

அந்த நெல் குடோனுக்கு நான்கு பக்கமும் ஆறடிக்குமேல் மதில் கட்டப்பட்டிருந்தது. பின்பக்கமும் முன்பக்கமும் தெரு இருந்தாலும் முன்பக்கமாக பெரும் வாகனம் போவதற்கான பெரிய கேற்றும் ஆட்கள் போவதற்காக சிறிய கேற்றும் இருந்தது. பெரிய கேற்றின் பயன்பாடு இல்லாத்தால் எப்பவும் பூட்டியே இருந்தது. சிறிய கேற் வளியாக உள்ளே சென்றால் பெரிய புளியமரம் அதையடுத்துப்  பெரிய நெல் குடோன் இருக்கிறது. இரண்டு குடோன்களுக்கும் இடையில் கொஞ்சம் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் தேக்கு மரம் நட்டு அதுவும் ஒராள் உயரத்துக்கு வளர்ந்திருந்தது. நெல் குடோன் கட்டும்போது கட்டிய அய்ந்து கழிவறைகள் வளாகத்தின் மேற்குப்  பக்கமாக  மூலையில் இருந்தது . அந்தக்  கழிவறைகளுக்கு  சற்று தள்ளி தற்காலிகமாக தகரத்தால் அடைக்கப்பட்ட மறைப்பு, அதுதான் ஆண்கள் மூத்திரம் பெய்வதற்கான சிறிய மறைப்பு.

இந்த இரு நெல் குடோன்களிலும் எண்பது குடும்பங்கள் பல ஆண்டுகளாக அகதியாக வாழ்ந்தார்கள். குடோனுக்குள் குறுக்கும்மறுக்குமாக கயிறுகட்டி பெட்சீட்டாலும் உரப்பையாலும் மறைப்பு ஏற்படுத்தி அதற்குள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்தார்கள். சமயலுக்கு விறகாக இருந்தாலும் அரசு கொடுக்கும் ரேசன் மண்ணெண்ணை அடுப்பாக இருந்தாலும் எல்லாமே அந்த உரப்பை தடுப்புக்குள்தான். அவ்வப்போது அற்ப காரணங்களுக்காக வாய்த்தகராறுகளும் நடக்கும். மனிதர்கள் வாழ்வதற்காக கட்டப்படாத அந்த நெல் குடோன், நாலுபக்கமும் கூரைமுட்ட சுவர் எழுப்பபட்டிருப்பதால் வெயில்காலத்தில் மதியவேளையில் விறகடுப்பில் சமயல் செய்யும்போது  கரும்புகையும் சூடும் தந்தூரி அடுப்புமாதிரி தகதகன்னு இருக்கும். இந்த குடோனுக்குள்தான் நிர்மலா பத்துவயதில் ஒருமகனும் அய்ந்து வயதில் ஒரு மகளும் பெற்ரிருந்தாள்.

ஆரம்பத்தில் ஆஸ்பத்திரிக்கும் மார்க்கட்டுக்கும் போய்க்கொண்டிருந்தவர்கள், மெதுவாக வெளியே வேலைக்கும் போக ஆரம்பித்தார்கள். வேலைக்கு போகாத ஒரு கூட்டம் எப்பவும் அங்கிருந்த மூலையில் அடைக்கப்பட்ட தடுப்புக்குள் இரவு பகலாக சீட்டு விளையாடுவார்கள். வெளிநாட்டில் அண்ணனோ தம்பியோ உள்ளவர்களின் சத்தம் சற்று அதிகமாகவே இருக்கும்.

அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான நவம் அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அடிபைப்பில் எப்பவும் நான்கைந்துபேர் நிற்பார்கள். நிர்மலாவும் பிளாஸ்ரிக் வாழியுடன் நின்றுகொண்டிருந்தாள். வெறுங்குடத்துடன் வந்த ரூபி நிர்மலாவிடம் கூறினாள்,

“நமகெல்லாம் வீடுகட்டப்போறாங்காளாம். தெரியுமா உனக்கு?”

“இத்தனை வருசமா வீடு கட்டிதராத அரசாங்கம் இனிம்மேல்தான் வீடு கட்டித்தரப்போறாங்க.”

“உண்மையாகத்தான் நிர்மலா.”

 “சரி எங்க வீடு கட்டப்போறாங்களாம் ?”

“இங்கதான்.”

“இதுக்குள்ள எங்க இடமிருக்கு ? எண்பது குடும்பத்துக்கும் இங்க வீடு கட்ட முடியுமா ரூபி?”

“உங்களுக்கு என்ன மாடமாளிகையா கட்டித்தரப்போறாங்க ? பத்துக்கு பத்துல நெருக்கமா வரிசை வரிசையாக கட்டப்போறாங்களாம். அரசாங்கம் காசு ஒதுக்கியிருப்பதாக அதிகாரிகள் பேசியதாக அப்பா சொன்னார். பத்துக்கு பத்து வீட்டுக்குள்ள எப்பிடி குழந்தைகளை எல்லாம் வச்சிக்கிட்டு  வாழ்றது?

இந்த குடோன் வேக்காட்டில வாழ்றதுக்கு பத்துக்கு பத்து அறை என்றாலும் பறவாயில்லைத்தானே?

எங்கட ஊர் பிரச்சினை தீரும்வரை எங்களப்புடிச்ச தரித்திரம் மாறப்போறதில்லை.”

அடிபைபில் நிர்மலா தண்ணி அடிப்பதற்கான நேரம் வந்ததும் வாளியில் தண்ணியடித்துக்கொண்டுபோய் பக்கத்தில் கிடந்த கல்லடியில் சோப்புபோட்ட உடுப்புகளை எல்லாம் கழுவ ஆரம்பித்தாள். நிர்மலாவின் மூத்தமகன் துஸ்யந்தன் மூக்கால அழுதுகொண்டு வந்தான்.

“அம்மா பசிக்குது.”

“தங்கச்சி எங்கப்பா ?”

“அப்பாகிட்ட இருக்கிறா.”

“நாளைக்கு பள்ளிகூடம் போகணும் இல்லையா ? ஊத்த யூனிபோம் போட்டா உன் ரீச்சர் அடிப்பாங்கதானே? அதான் அம்மா தோய்க்கிறன்.”

 பரபரவென்று  கழுவினது பாதி கழுவாதது பாதியுமாக  எல்லாவற்றையும் வாளியில் அள்ளிப்போட்டுக்கொண்டு மகனையும் கூட்டிகொண்டு வந்தாள். குடோனுக்குள் உரப்பை மறைப்புக்கு கட்டப்பட்ட கயிற்றின் மேல்  தோச்ச உடுப்புகளை எல்லாம் காயப்போட்டாள். உடுப்பிலிருந்து தண்ணி சொட்டுச் சொட்டாக  வடிந்துகொண்டிருந்தது.

 “அம்மா வெளியில கயித்தில காயப்போட்டு தண்ணி வடியவிட்டு உள்ள கொண்டுவந்து போடலாந்தானே ?” என்றான் மகன்.

“அதிகபிரசங்கி உள்ள இருக்கிற சூட்டில அது கொஞ்சநேரத்தில காஞ்சிரும்.” என்றாள் நிர்மலா. உரப்பை தடுப்புக்கு அந்தப்பக்கமிருந்து கேட்டுகொண்டிருந்த பக்கத்து வீட்டுகாரி  ராஜேஸ்வரி,

 ”உன் ஜட்டியிலயும் பாவாடையிலயும் வடியிறது எதுக்கு என் வீட்டுக்குள்ள வடியனும்” ? என்று ஆரம்பித்தாள்.

“எல்லாரும் இப்பிடித்தானே காயப்போடுகிறார்கள் ? உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை?

“பாவாடையிலயும் ஜட்டியிலயும் வடியிறத உன் வீட்டுக்க வச்சுக்க.”

 நிர்மலா அதுக்குமேல் பேச விரும்பவில்லை. பேசினால் பிரச்சனை பெரிதாகும் என்பதால் நிர்மலா அமைதியானாள்.

நிர்மலாவின் மகன் துஸ்யந்தன் ஓடிப்போய் சீட்டு விளையாடிகொண்டிருந்த நவத்திடம் சொல்ல, நவம் வந்து ராஜேஸ்வரியை சத்தம்போட, ராஜேஸ்வரி நவத்தை தூசணதால பேச, நவம் ராஜேஸ்வரிய அடிக்கபோக, ராஜேஸ்வரி புருசன் மீன்வெட்டும் கத்திய தூக்க அந்த நெல்குடோன் ஒரே கலவரமாகவும் சத்தமாகவும்  இருந்தது.

 அந்த இடம் நெல்குடோன் என்பதால் தரையிலிருந்து நான்கடி உயரத்தில் தரைத்தளம் போடப்பட்டிருந்தது. பக்கவாட்டில் இடைவெளி விட்டு பத்தடிக்குப் பத்தடி நுளைவு வாயில் மட்டுமே இருந்த்து. நாலடி உயரத்திற்கு ஏறிப்போக படிக்கட்டு உடைந்திருந்ததால் அதில் மண் மூட்டைபோடப்பட்டிருந்தது. சண்டை நடந்துகொண்டிருந்தநேரம் நிர்மலாவின் அய்ந்து வயது மகள் நாலடி உயரதிலிருந்து பின்பக்கமாக தலை அடிபட தரையில் விழுந்துவிட்டள். தலையில் அடிபட்டு லேசாக இரத்தம் வர அரம்பித்துவிட்டது.

00000000000000000000000000000000

அந்த இடத்தைச் சுற்றிலும் கம்பும் சோளமும் ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது. நடுவில் பெரிய கிணற்றிலிருந்து பம்பு மூலமாக நீர் இறைத்துக்கொண்டிருந்தது. நீரோடும் வாய்க்காலும் வரப்போரத்து புற்களும் பச்சையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தன. அந்த இடத்தில் எப்பவும் மோட்டார் மூலமாக நீர் இறைக்கப்படுவதால் ஆட்கள் குளிப்பதற்கு தோதான இடமாக இரண்டுமாதங்களாக ஆகியிருந்தது.

21 வயது நிரம்பிய இளம் குமரியான நிர்மலா மோட்டரடிக்கு வந்தாள். மதியநேரம் என்பதால் யாருமில்லை. குளித்துவிட்டு மாத்துவதற்காக கொண்டுவந்த உடுப்பை வரப்புமேல் வைத்துவிட்டுக்  கொண்டுவந்திருந்த சாரத்தை கால்வளியாகப்  போர்த்திக் கழுத்துவரை எடுத்து இறுக்கமாக வாயில் கடித்துக்கொண்டு, அணிந்திருந்த ஆடைகளையும் உள்ளாடைகளையும் கால்வளியாகக்  களட்டிவிட்டாள். மார்புக்கு மேலாக சாரத்தை இறுக்கமாக குறுக்காகக் கட்டிக்கொண்டாள். களட்டிய உள்ளாடைகளையும் ஆடைகளையும் அருகில் கிடந்த தோய்க்கும் கல்லில் வைத்து சோப்புபோட ஆரம்பித்தாள்.

அவளுடன் வந்த நவம் வரப்புக்கட்டில் உக்காந்து அவளயே அனில் ஏறவிட்ட நாய் மாதிரி பார்த்துக்கொண்டிருந்தான். பகலின் வெளிச்சத்தில் இளம் குமரியான அவளின் பரந்து விரிந்த சிவந்த முதுகு வெயிலுக்கு மினுங்கியபொழுது, அதுவே அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுதுவதாக இருந்தது.

சற்று உயரத்திலிருந்து பைப்வளியாகக்  கொட்டும் தண்ணீரில் சோப்புபோட்ட உடைகளை அவள் அலசிக்கொண்டிருந்த நேரம் மேலிருந்து விழும் தண்ணீர் தெறித்து குறுக்குகட்டின் முன்பகுதி ஈரமாகி மார்புடன் ஒட்டிக்கொண்ட்து.

உருண்டு திரண்டிருந்த அவள் மார்பகங்கள் தென்னங்குரும்பை போல் வெளியே தெரிந்தது. நேர்குத்தி நிற்கும் அவள் மார்பகத்தையே பார்த்துகொண்டிருந்த நவத்துக்கு உடம்பு சூடேறியது. இதுவரை எந்தபெண்ணையுமே அவ்வாறு பார்த்திராதவனுக்கு உடல் தாகம் தீயாகமூண்டது. பம்புசெட் அறைக்குள்ளோ, கம்புகாட்டுக்குள்ளோ அவளை தூக்கிச்செல்ல மனம் உந்தித்தள்ளியது. ஆனால் நிச்சயமாக அவள் சம்மதிக்க மாட்டாள் என்பதை அவன் அறிந்திருந்தான். கணவன்தானே என்ற தைரியத்தில் உடுப்பை அலம்பிப்போட்டு இயல்பாகக்  குளிக்க ஆரம்பித்தாள். ஆத்துதண்ணியா அடிச்சிட்டு போக கிணத்துத்தண்ணிதானே எப்பவும் அள்ளிக்குடிக்கலாம் என்று அவன் மனசை தேத்திகொண்டான்.

ஊர்காரப்பொண்ணு உறவுக்காரப்பொண்ணு என்பதால் நவத்திற்கும் நிர்மலாவுக்கும் இருந்தகாதல் அவர்கள் பெற்ரோருக்கும் தெரிந்திருந்தது. அகதியாக சனங்கள் புறப்பட்டநேரம் இவர்களும் அகதியாக வந்தார்கள். ஊரில் இருந்து புறப்பட்டு தலைமன்னார் தென்னந்தோப்புக்குள் ஒருவாரம் போய்விட்டது. அதன்பின்பு மண்டபம் அகதிகள் முகாமில் கூட்டம் நிரம்பிவளிந்ததால் மூண்றுநாட்கள் மணல்மேட்டில் பொழுதுபோய்விட்டது. அகதிகள் அதிகமாக வருவதால் அகதிகளை தமிழகம் முழுவதும் அதிகாரிகள் பிரித்து அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்பியதில் கோழி வளர்க்காமல் கிடந்த கோழிப்பண்ணையில் நவம் குடும்பம் வந்து மாட்டிக்கொண்டது.

இங்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகப்போகிறது வீடு கட்டுக்கொண்டிருப்பதாகவே அதிகாரிகள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட எண்பது குடும்பங்கள் சிறிய கோழிப்பணை. காலுக்கும் கைக்குமாக ஆட்கள் படுப்பதாக இருக்கிறது. கோழிப்பண்ணக்குள் இடமில்லாமல் வெளியேயும் இரவில் படுக்கிறார்கள். மழைவந்தால் அன்று எல்லோருக்கும் தூக்கம்போச்சு. இந்தநிலையில் யாரு புதிதாகக்  கல்யாணம் செய்தவர்கள் என்று யோசிக்க முடியும்?

அப்படி இருந்தும் நவம் கோழிப்பண்ணையின் மூலையில் கொசுவலைபோடுவதுபோல் நிர்மலாவின் சேலையால் மறைப்பு ஏற்படுத்தியிருந்தான். கொஞ்சம் பெரியமூச்சு விட்டாலும் பக்கத்தில் படுத்திருபவர்களுக்கு கேக்கும். கூச்ச சுபாவமுள்ள நிர்மலா சுத்தமாக ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டாள். எத்தனை நாளைக்குத்தான் இலவு காத்த கிளி மாதிரிக்  காத்திருப்பது?

 “என்ன சேர் எங்கள வேற இடத்துக்கு மாத்துவீங்களா இல்லையா ? “ என்று அதிகாரிகளிடம் சண்டைபோடுமளவுக்கு மன உளச்சலுக்கு ஆளானான் நவம். 1990 களில் நிறைய அகதிகள் வந்ததால் அதிகாரிகள் திணறிதான் போனார்கள்.

“ஏப்பா உங்கள எல்லாம் இப்புடி கோழிப்பண்ணையில் தங்க வைக்க எங்களுக்கு ஆசையா ?  நிறைய அகதிகள் வந்திட்டே இருக்காங்கப்பா. உங்களுக்கு கட்டின வீட்டில எல்லாம் அவங்கள கொண்டுவந்து தங்க வச்சிடாங்க “ என்பது அதிகாரி பதிலாக இருந்த்து.

தண்ணிப் பம்பிலும் சரி அதை சுற்றி உள்ள தண்ணி பம்புகளில் எல்லாம் மக்கள் குளிக்கவும் தோய்க்கவுமாக இருக்க, அவர்கள் குளித்த சோப்பு தண்ணி பயிர்களுக்குபோனபொழுது முழித்தெழுந்த கோழிபண்ணை முதலாளி அதிகரிகளை நெருக்கியதால்  அதிகாரிகள் வேறு வளியின்றி நாகர்கோவிலுக்கு அகதிகளை மாத்தினார்கள். அதுவும் தனித்தனி வீடுகள் கிடையாது ஆனால் கோழிப்பண்ணையை விட பறவாயிலை என்றாகியது அகதிகளுக்கு.

இந்த நெல்குடோனில்தான் நவத்துக்கு துஸ்யந்தன் பிறந்தான். பலவருடங்களுக்கு பின் நெருக்குதலான அந்த வளாகத்திற்குள்  பத்துக்குப்  பத்து என்ற அளவில்  அஸ்பெஸ்டஸ் சீட்டுக்களாலான வீடுகள் கட்டப்பட்டு குடும்பத்துக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. குடோன்ல சீட்டு விழையாட இடம் இருந்ததுபோல் இப்போதும் சிறிய  வீடு இருக்கிறது . ஞாயிற்றுக்கிழமையானல் அன்னம் தண்ணியில்லாமல் விழையாடுவார்கள். சிறிக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும். அவருக்குக்  குடும்பமெல்லாம் இல்லை. அவரது குடும்பம்  பற்றி ஒவ்வருத்தரிடமும் ஒவ்வொரு கதை சொல்லியிருந்தார். அவருடைய உண்மையான கதை அவரைத்தவிர வேறு எவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் காசு இருந்தால் தாராளமாக செலவு செய்வார். இல்லையானல் யாரிடமும் கேட்கமாட்டார். இடையிடைய ஏதாவது கூலிவேலைக்கு போவார். அமைதியான நல்ல மனிதராகத்தான் முகாமில் அவருக்கு பேரிருந்தது.

இந்த அகதிவாழ்க்கை நிறைய மாற்றத்தையும் அனுபவத்தையும் நவத்திற்கு கொடுத்திருந்தது. நவத்தோட பையனுக்கும் 15 வயதை எட்டியிருந்தது. வளர்ந்துகொண்டிருக்கும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு பத்துக்கு பத்து அறையில் எப்படித்தான் கணவன் மனைவி சந்தோசமாக இருக்க முடியும்? அவ்வாறு சங்கடப்படும்படியான சம்பவம் நவத்துக்கும் ஏற்பட்டிருந்தது. எவ்வளவு கவனமாக இருந்தாலும் இவ்வாறு நடந்து விடுகிறது.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை நவம் சிறி வீட்டில் சீட்டு விழையாடிக்கொண்டிருந்தான் துஸ்யந்தன் வந்து, “அம்மா கூப்பிடுறாங்க” என்றான். சீட்டுவிழையாடும் மனநிலையில் நவம் அதை சட்டைசெய்யவில்லை. துஸ்யந்தனும் சீட்டு விழையாட்டை ஆர்வமாகப்பார்த்து கொண்டிருந்தவன் அப்படியே தூங்கிப்போனான். நவம் சீட்டு விழையாடி முடித்து வீட்டுக்கு வரும்போது மகனை எழுப்பாமல் அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டான். இது அவ்வப்போது நடந்துகொண்டிருந்தது. நவத்துக்கு இது வசதியாக இருந்த்து.

அவ்வப்போது பள்ளிக்கூடம் போவதாகச் சொல்லிட்டு வீட்டிலிருந்து செல்லும் துஸ்யந்தன் கூட்டமில்லாத திரையரங்கில் சிறியுடன் படம் பார்க்கிறான் என்பது அவன் வீட்டுக்கு இன்னும் தெரியவில்லை .

திருநெல்வேலி பேரூந்துநிலையத்தில் பேரூந்து நின்றது. தூரனுக்கு தொலைபேசி  அழைப்பு வரவும் பேரூந்திலிருந்து இறங்கி வேறு பேரூந்தில் ஏறிக்கொண்டான். எனது பேரூந்து அதன் பயணத்தை அடுத்து சில நிமிடங்களில் ஆரம்பிக்கும்.

தொ.பத்திநாதன்-இந்தியா

தொ.பத்திநாதன்

 577 total views,  1 views today

(Visited 194 times, 1 visits today)
 

தலைப்பு இல்லை-சிறுகதை-தொ.பத்திநாதன்

அன்று சனிக்கிழமை. வெள்ளி, சனி, ஞாயிறு எப்படா கடந்துபோகும் என்ற மனநிலை பொதுவாகத் தங்கு   விடுதிப் பணியாளருக்கு இருக்கும். தங்குவிடுதியில் உள்ள எல்லா டிப்பாட்மெண்டும் பரபரப்பாகவே இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் […]

 

One thought on “பத்துக்கு பத்து-சிறுகதை-தொ.பத்திநாதன்”

Comments are closed.