தலைப்பு இல்லை-சிறுகதை-தொ.பத்திநாதன்

அன்று சனிக்கிழமை. வெள்ளி, சனி, ஞாயிறு எப்படா கடந்துபோகும் என்ற மனநிலை பொதுவாகத் தங்கு   விடுதிப் பணியாளருக்கு இருக்கும். தங்குவிடுதியில் உள்ள எல்லா டிப்பாட்மெண்டும் பரபரப்பாகவே இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் இரவு உணவுடன் வீடு திரும்பி மறுநாள் திங்கள் வேலைக்கு போகவேண்டுமல்லவா. வெள்ளி, சனி என்றால் மறுநாள் விடுமுறை என்பதால் அவர்களுக்கு கொண்டாட்டமும் எங்களுக்கு திண்டாட்டமும்தான். நாலாவது மாடியில் உள்ள ஹாலில் 50 பேருக்கான கெட்டூகெதர் டின்னர் இருந்தது. நீச்சல்தடாகத்தடியில் முப்பது பேருக்கு கொக்டைல் டின்னர் நடக்கவிருக்கிறது. பிரதான மண்டபத்தில்  500 பேருக்கு ஆங்கிலோ இந்தியன் திருமண நிகழ்வு நடக்கவிருக்கிறது. இது ஒன்றும் கடினமானதில்லை எப்பவும் நடக்கும் நிகழ்வுகள்தான். முதல்நாளே மறுநாள் நிகழ்வுக்கான முன்தயாரிப்புகள் சில நடந்திருந்தது. ஸ்டோர் ரூமில் உள்ள போடில் இன்று நடக்கும் நிகழ்வுக்கான டூட்டி அலக்கேசனை சீனியர் கேப்டன் ஒட்டியிருந்தார். பணியாளர்கள் வேலக்கு வந்ததும் முதலில் டூட்டி அலகேசனைப்பார்ப்பார்கள். பின்னர் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். எல்லாமே சிஸ்டமெட்டிக்கா இருப்பதால் யாருக்கும் பெரிய சிரமம் இருக்காது. பிரதான மண்டபத்தில் எனக்கும் கிச்சாவுக்கும் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. கூடவே புது ஸ்டாப் மூவர் மற்றும் போதுமான அளவுக்கு ட்ரெயினிங் போய்ஸ் இருந்தார்கள்.

வட இந்தியர்களைப்போல் ஆங்கிலோ இந்தியன்ஸ் பணியாளர்களை அவ்வளவாகத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அதேவேளையில் கச்சடாவாகவும் நடந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் விதிவிலக்குகள் எல்லா இடத்திலயும் இருக்கும்தானே. வட இந்தியர்களாக இருந்தாலும் ஆங்கிலோ இந்தியர்களாக இருந்தாலும் நிகழ்ச்சியை சீக்கிரம் முடிக்க மாட்டார்கள். நடுநிசியை தாண்டினாலும் நிகழ்ச்சி றப்பர்மாதிரி இழுபடும். நாங்களும் அவர்கள் எப்ப போய்த் தொலைவார்கள் என்று காத்துக்கிடப்போம். அவர்கள் சென்றபின் மறுநாள் நிகழ்ச்சிக்கு அரேஞ்பண்ணிவிட்டு வீட்டுக்கு போய் தூங்கி எந்திருச்சு மறுநாள் காலையில் மறுபடியும் இங்கு வரவேண்டும். எல்லாநாட்களும் அப்படி இருப்பதில்லை அனால் சிலநேரங்களில் அவ்வாறு நடக்கும்.

மதியம் ஒருமணிக்கு தங்குவிடுதிக்குள் வந்து  சைக்கிள்ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு, ரைம் ஒபிஸில் உள்ள  பஞ்சிங் கார்டை எடுத்துப் பஞ் பண்ணிவிட்டு நேராக கண்டீனில் போய் உக்காந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எதிரில் உக்காந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ராஜா:

“என்னப்பா……… இன்னைக்கு நிறைய நிகழ்வுகள் இருக்குபோல… ?” என்றான். அவன் கேட்டது என்காதில் விளவில்லை. எனது கவனமெல்லாம் டிவி நியூசில் இருந்தது. அனால் நான் நிமிர்ந்து நியூசைப்பார்க்கவில்லை. அவ்வாறு நான் ஆர்வமாகப் பர்ப்பதை எவராவது என்னை கவனித்துவிட்டால்…….? ‘விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்து சென்றார்’ என்ற செய்தி நீண்டநேரமாக எனக்குள் ஓடிகொண்டிருந்தது. ஐநூறு பேருக்கான ஆங்கிலோ இந்தியன் திருமணநிகழ்வு  இடையிடையே வந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தது. சாப்பாடு முடிந்ததும் நேராக பணியாளர்களுக்கான சீருடைகள் சலவை செய்யும் அறைக்குச் சென்று எனது சீருடையை வாங்கிக்கொண்டு ட்ரெஸ்ரூமில் உள்ள ஹங்கரில் மாட்டிவிட்டு பெஞ்சில் அமர்ந்து பொறுக்கமுடியாது  ஒரு தம்மடித்தேன். கருணாஅம்மானும் இங்கு நிகழ இருக்கும் நிகழ்வும்  கலந்துபோனதில் கையிலிருந்த சிகரட்டு கரைந்துபோனது தெரியவில்லை. கறுப்பு பேண்டும் சப்பாத்தும்  அறையில் இருந்தே அணிந்து வந்ததால் இந்திய ஜனாதிபதி அணிவதைப்போன்ற ஒரு வெள்ளைகோட்டை மட்டும் அணிந்துகொண்டு பட்டனுக்கு பிராசோ போட்டு அதனைப் பளபளப்பாக்கத் தேய்த்துகொண்டிருந்தேன். அப்போது சகபணியாளர் கிச்சா (கிருஸ்ணமூர்த்தி சுருக்கமாக கிச்சா ) யூனிபாமை கையில் பிடித்தபடி உள்ளே வந்தான்.

”என்னப்பா நீ…………, உம்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை அதுவுமா லீவு எடுத்துட்டா ? நங்க ஆள் இல்லாம எவ்வளவு கஸ்ரப்பட்டோம்?”

நேற்றைய பணிச்சுமை அவனைப்பார்த்ததும் அவ்வாறு கேட்கவைத்தது.

“குழந்தைக்கு உடம்பு முடியலப்பா…… ஆஸ்பத்திரிக்கு போனதால வரமுடியல.”

“ஆமா…….. ஆமா…. தாத்தா பாட்டியெல்லாம் பலதடவை கொன்னு புதச்சு காரியமெல்லாம் பண்ணியாச்சு இப்ப புதுசா ஆரம்பிச்சிருக்கே இல்ல……?”

“சும்மா போப்பா……. அப்பிடியெல்லாம் சொல்லி நம்ம மேனேஜர்கிட்ட லீவு வாங்கிரமுடியுமா என்ன?”

“நான் சும்மாதான் சொன்னேன். சீக்கிரம் யூனிபாம மாட்டுங்க. இன்னைக்கும் பிஸிதான். இன்னைக்கு இந்த தங்குவிடுதிக்குள் நான் நடக்கிறத நேரா ரோட்டால்  நடந்தால் மதுரைக்கு போயிரலாம்.”

யூனிபோர்முக்கு மாறின கிச்சா நேராக லோண்றிக்கு போய் டேபிள் கிளோத், பிரில் கிளோத், மற்றும் கிளோத் நாப்கின் எல்லாத்தையும் வாங்கிகொண்டு டிப்பாட்மெண்டுக்கு போனான். நான் நேராகக் கிச்சன் ஸ்வடிங் ஒபிஸ் போனேன். மெயின் கிச்சன், கவுஸ்கீப்பிங், மெயிண்டனனஸ், மெயின் ஸ்டோர், அக்கவுண்ட், இண்டனல் ஆடிட்டிங் , எல்லா டிப்பாட்மெண்டுக்கும் நிகழ்ச்சி குறித்த விபரம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் அந்தந்த டிப்பாட்மெண்டுகள் நிகழ்வுகளுக்குரிய வேலையை செய்வார்கள். கிச்சன் ஸ்வடிங்கில் 500 வைன் கிண்ணங்களைத் தயாரக எடுத்து வைத்திருந்தார்கள். கையெழுத்துப் போட்டு வாங்கி ஒரு ட்ராலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்து பேக் ஏரியாவில் விட்டுட்டு மண்டபத்திற்குள்  சென்றேன். அங்கே சீனியர் கேப்டன் நின்றுகொண்டிருந்தார். ரெயினிங் போய்ஸ்-உம்  நின்றார்கள். கிச்சா கையில் நிகழ்ச்சி குறித்த விபரம் இருந்தது.

“நான் பூஃபே கவுண்டர பாத்துக்கிறேன். நீ பார்கவுண்டர பாத்துக்க.” என்ற கிச்சா மற்ற யூனியர் ஸ்டாஃபைக்   கூப்பிட்டு மற்ற மண்டபத்தில் உள்ள சேர்கள் எல்லாத்தையும் றெயினிங் போய்ஸ்-ஐ  வச்சு கொண்டுவரச்சொனான். நான் நாலு ரெயினிங் போய்ஸ்-ஜக் கூட்டிக்கொண்டுபோய் பேக் ஏரியாவில ட்ராலியில இருந்த கிளாஸ் எல்லாதையும் சுடுதண்ணியில போட்டு துடைக்க சொன்னேன். மற்றும் பாருக்கு தேவையான பிராண்டி பலூன், விஸ்கி கிளாஸ், பியர் மக் எல்லாத்தையும் எடுத்து கொடுத்து அதையும் சுடுதண்ணியில போட்டு துடைக்க சொன்னேன். ஒரு ரெயினிங் போய்ஸ்ஸ அழைத்துக்கொண்டு ட்ராலியையும் எடுத்துக்கொண்டு மெயின் ஸ்டோர் போய் பியர், சொஃப்டிரிங்ஸ், சோடா, மினரல் வோட்டர் பிக்கப்பண்ணி வந்து ஒரு பிளாஸ்டிக் டப்பில அடுக்கி வைத்துவிட்டு, மெயின் கூல்றூம் போய் பெரிய ஐஸ் பிளொக் எடுத்து வந்து உடைத்து போட்டுக் கொண்டு போய் பார்க்கவுண்டரில் வைத்தேன்.

ஏற்கனவே நிகழ்வுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் களஞ்சிய அறையில் இருந்து வாங்கி வைத்திருந்தோம். 500 பிளேட்டுகளும் துடைத்து வைத்திருந்தோம். வைன் சேர்வீஸ் பண்ணுவதால் அதிகமான பேப்பர் நப்கின் தேவைப்படும் என்பதால் நான் பார்க்கவுண்டருக்குள் நின்று நப்கின் மடித்துகொண்டிருந்தேன். எல்லோரும் அவர்வர் வேலையை செய்துகொண்டிருதார்கள்.

மெயின் டோரைத்திறந்துகொண்டு டாலியா உள்ளே வந்தாள். பூஃபே கவுண்டரில் நின்ற கிச்சாவை நோக்கி போனவள், மூலையில் இருந்த பார் கவுண்டரில் என்னைக்கண்டதும் திரும்பி என்னிடம் வந்தாள். அவள், கையில் நிகழ்ச்சி குறித்த விபரங்களின் நோட்டைப் பார்த்ததும்,

“வேலை இன்னும் முடியல…… எல்லாரும் பிசியா இருக்கிறாங்க. நீயே போய் குடுத்திரு டாலியா.“  என்று முகத்தை கொஞ்சம் கடுமையாக வைத்திருப்பதைப்போல நடித்தேன். மண்டபத்திற்குள் கேப்டன், மேனேஜர் யாராவது இருக்கிறாங்களா என்று சுற்றும் பார்த்துவிட்டு மடித்து அடுக்கி வைத்திருந்த பேப்பர் நப்கின்னை தூக்கி முகத்தில வீசிவிட்டு, “மூஞ்சயப்பாரு பட்டி.” என்றாள்.

நான் பார்கவுண்டரை விட்டு வெளியே வந்தேன். அவள் பிரதான கதவுப் பக்கமாக ஓடினாள். அவ்ளோ பெரிய மண்டபத்தில் அவள் ஓடும்போது உடுத்தியிருக்கும் பட்டுசேலையும், அது சரசர என்று உரசும் சத்தமும், அவள் ஓடும் அழகும் அள்ளியது. நான் பார்க்கவுண்டருக்குள் அவள் வீசிய நப்கின்களைப்  பொறுக்கிக்கொண்டிருந்தேன். அவள் திரும்பி வந்து பார்கவுண்டர்மேல் நோட்டை வைத்துவிட்டு நின்றாள்.

“ஆபிஸ்ல மேனேஜர் இல்லையா ?” என்று மென்மயான குரலில் கேட்டேன்.

“சொட்டத்தலைய காணேம்.” என்று கூறிக்கொண்டே கிளம்பினாள்.

“இங்க பாரு டாலியா…….. நான் குடுக்கமாட்டேன். கிச்சாகிட்ட குடுத்துட்டுபோ.”

போனவள் திரும்பிவந்து,

“ஞான் லவ் புரப்போஸ் பண்ணுரப்போ உன்னைத்தான் புரப்போஸ் பண்ணுவேன். பட் நொட் நௌவ் என்று.” நளினம் காட்டிட்டு போனாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இயல்பா பழகக்கூடிய நல்ல அழகான மலையாள பொண்ணு. அதன் பின்பு அவளுக்கு ‘You can Win’ புத்தகம் பரிசளித்தேன்.

“6 மணிக்கு கெஸ்ட் வந்துருவாங்க. 5.30 க்கு பிரீபிங் இருக்கு.” என்று கேப்டன் வந்து சொன்னார். எனக்கு சரக்கென்று உச்சியில் ஆணி அடித்தமாதிரி இருந்துது. மாடுமாதிரி நேரம்காலம் இல்லாமல் வேலை செய்யச் சொன்னால் செய்வோம் படிக்கிறதென்றால் நமக்கு ஆகாதே. நேரா கிச்சாவிடமிருந்த நிகழ்ச்சி குறித்த விபரங்களை வாங்கி இன்னைக்கு என்ன நிகழ்ச்சி?, நிகழ்ச்சியோட கோஸ்ட் யாரு?, காரண்டி எத்தனை பேர்?, எக்ஸ்பெக்டெட் எத்தனை பேர்?, மெனு என்ன? சூப்பு, நான் வெஜ், வெஜ், இண்டியன் பிறட், டெசேட் என்ன? என்று நான் எல்லாத்தையுமே  பாடமாக்கினேன். ‘இது ஒரு பெரிய விசயமா ?’ என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் மேனேஜர் சாதாரணமானவரில்லை. தலைமுடி வெட்டி எண்ணை வைத்து தலைசீவியதில் இருந்து, சப்பாத்துப் பொலிஷ் போட்டிருக்கா என்பதுவரை நுணுக்கமாகப் பார்ப்பார். வேற என்ன நிகழ்வு  எல்லாம் தங்குவிடுதியில் நடக்கிறது என்றும் கேட்பார். புரொண்ட் ஒபிஸில் உள்ள தகவல் எல்லாம் கேட்பார். ஏதாவது ஒரு சூப்போட பெயரைச்சொல்லி அதன் ரெஸிப்பி கேட்பார். ‘கெஸ்டு கேட்டா நீ என்னபதில் சொல்வாய் ?’ என்பார். தங்குவிடுதியின் ‘ஸ்டாண்டட்’ கீழ்நிலைப்பணியாளரிடமும் இருக்க வேண்டும். என்று சொல்வார். அவர் தொழில் ரீதியாக கண்டிப்பும் கறாருமான மனேஜர்தான். அதுதான் எனக்கு பிரச்சனையே. நீங்களே சொல்லுங்கள் உடல் உழைப்பாளிக்கு என்னைக்கு மூளை வேலை செய்யும்?

முன்பு இருந்த பேங்குவட் மேனேஜர் பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ள மாட்டார். எங்களிடமும் பெரிதாகப்  பேசக்கூடமாட்டார். கேப்டன் என்ன சொல்கிறாரோ அதுதான் வேலை. பார்க்கவுண்டரில் இன்னும் ஐஸ் கியூப் வரவில்லை. ட்ரேயில மேட் இல்லை. ஸ்டெரர்ஸ்டிக் கம்மியா இருக்கு. இப்படிச் சின்ன சின்ன வேலைகள் இருந்தது.

பூஃபே கவுண்டரில் செப்பன் டிஸ்சுக்கு கீழே வைத்து சூடாக்கிற பியூல் இல்லை. செப்பன் டிஸ்குக்கு முன்னாடி வைக்கிற நேம்போடுல புது மெனு மாத்தாமல் இருந்தது. பிரதான வேலைகள் எல்லாம் ஒரளவுமுடிந்திருந்தது. சரியாக 5.30 க்கு மேனேஜரும் சீனியர் கேப்டனும் ஹாலுக்குள் வந்தார்கள். நான் பார்க்கவுண்டருக்குள் நின்று மெனுவை படித்துக்கொண்டிருந்தேன். ஐந்துமணிக்கே ஏசி போட்டிருந்தார்கள். மண்டபத்தின் சூடு தணிந்து குளிர் ஏறிக்கொண்டிருந்தது. எனக்கு ஏறும் குளிரையும் தாண்டி உடம்பில் சூடு ஏறிக்கொண்டிருந்தது. நாங்கள் அங்கு எல்லோரும் மனேஜர் முன்பாகக் கால்வட்டவடிவில் நின்றுகொண்டிருந்தோம். மேனேஜர் எல்லோரையும்  மேலோட்டமாக ஒருபார்வை பார்த்தார். கேப்டனிடம் நிகழ்ச்சி குறித்த விபரங்கள் இருந்தது. மனேஜர் கேப்டனிடம் ஆங்கிலத்தில் ஏதோ பேசினார். என்னிடம் எதுவும் கேட்டுவிடக்கூடாது என்று எல்லாக் கடவுள்கிட்டயும் வேண்டிகொண்டிருந்தேன். நானும் கிச்சாவும் தான் அனுபவத்தில் வேலைக்கு வந்தவர்கள். மற்ற பணியாளர் எல்லாம் முறையா கேட்டரிங் படித்துவிட்டு வேலைக்கு வந்தவர்கள். கிச்சா சொல்லுவான்,

“என்னிடம் ரெயினிங் எடுத்தவர்கள் எனக்கே மேனேசர் ஆகியிருக்கிறார்கள்.” என்று.

தொளிலாளர் சங்கத்தில் உறுப்பினரான சீனியர் ஸ்டாப் கிச்சாவிடம் மனேஜர் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார். கிச்சா தமிழில் பதில் சொன்னான். அடுத்து அவர் நீட்டமாக ஆங்கிலத்தில் என்னிடம் ஏதோ கேட்டார். என் உடம்பில் சூடு ஏறி அந்த ஏசி குளிரிலும் வேர்க்க ஆரம்பித்துவிட்டது. அவர் என்ன கேட்கிறார் என்பது சுத்தமாக எனக்குப் புரியவில்லை. அதை நான் எப்படி எதிர்கொள்வது என்பதும் தெரியாமல் திருதிருவென்று முழித்தேன். அவரோ என்பதிலுக்காகக்  காத்திருந்தார். எல்லா ரெயினிங் போய்ஸ் மற்றும் பணியாளர் எல்லாரும் என்னையே கவனிக்கிறார்கள். எனக்கு தொண்டை வறண்டு வார்த்தை அடைத்துக்கொண்டது.

அவர் மறுபடியும் ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார். நான், “எனக்குத்  தெரியவில்லை.” என்றேன். அவர் கேட்ட கேள்விக்கான பதில் அது இல்லை. கேப்டனைப்பார்த்து ஆங்கிலத்தில் ஏதோ கத்தினார். எனக்கு ஆங்கிலம் தெரியாததுக்கு அவர் என்ன செய்வார். மீண்டும் என்னிடம் தமிழில், “தமிழ் தெரியுமா?” என்றார். நான்,  ‘தெரியும்’ என்று தலையை மட்டும் ஆட்டினேன்.

“நீ ஆங்கிலம் கத்துக்கவில்லையானால் உன்னை டிஸ்வாஸ்க்கு மாத்திருவேன்.” என்றார்.

‘இந்த மனுசனுக்கு என் மேல் அக்கறையா ? அல்லது வேறு ஏதும் காரணமா? எதுக்கு இந்தகுத்து குத்துறாரு?’ என்று நினைத்துக்கொண்டேன். மிரட்டி உருட்டி வேலை வாங்கின ரெயினிங் போய்ஸ்  எல்லாம் என்னை பூச்சிமாதிரி பாக்க ஆரம்பித்தது ஒருபக்கம் இருக்கட்டும். நான் ஆங்கிலம் கத்துக்க முயன்றது ஒருபக்கம் இருக்கட்டும். அதன் பின்பு அதே மேனேஜர் vip நிகழ்ச்சி என்றால் சுதாகரனை கூப்பிடு என்று சொன்னது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் சொல்ல வந்த கதை இதுவல்ல………

நான் விறு விறுவென்று ரெஸ்ஸிங்றூமில் போய்  உக்காந்து ஒரு தம்மைப் பத்தவச்சு கப கபன்னு இழுத்துத்  தள்ளிக்கொண்டிருக்க, ரெயினிங் பையன் வந்து சொன்னான் “அண்ணே கேப்டன் கூப்பிட்றாரு.”

மண்டபத்திற்குள் கேப்டன் நின்றார். நான் அவரிடம் சென்றேன். அவர் லேசாகக்  கண்ணடித்து சிரித்தவாறே,  “போய் வேலையப்பாரு……..” என்றார். அப்பாடா என்னய காப்பாத்தவும் இங்க ஆள் இருக்கு என்ற சிறிய நம்பிக்கை வந்தது.

கெஸ்ட் வர ஆரம்பித்திருந்தார்கள். ‘கொபிஷொப் கோல்ட் ரூமுக்குள்’ போய்ப்பாத்த கிச்சா,

“அடே…….  இன்னும் ‘வெல்கம்ட்ரிங்ஸ்’ இறக்கலியா? கெஸ்டு வர்றாண்டா….. முதல்ல வெல்கம்ட்ரிங்ஸை  இறக்கு.” என்றான்.

“கேப்டன் ‘வெல்கம்ட்ரிங்ஸ்’ சர்வீஸ் பண்ண சொல்லிட்டாரா ? இல்லையே… அப்புறம் எதுக்கு கத்துற?”

ஒரு ரெயினிக் போய்ஸ  கூட்டிக்கொண்டு பேக்ஏரியாவில நின்ற றொலிய தள்ளிக்கொண்டு முதல் மாடியில் இருந்த மெயின் கிச்சன் போனேன். கூல் றூமில் றெடியாக இருந்த ‘வெல்கம்ட்ரிங்ஸ்’ மற்றும் சாலடு, ஊறுகாய் என்று எதை எல்லாம் ஏத்த முடியுமோ அதை எல்லாம் ஏத்தி றொலிய ஒரு துணியால மூடித்  தள்ளிகொண்டு வந்து ‘கொபிஷொப் கோல்ட் றூமுக்குள்ள’ வைத்தேன். அதன் பின்பு சாப்பாடுகள் எல்லாத்தையும் மெயின் கிச்சனில இருந்து ஏத்தி வந்து பேக் ஏரியாவில வைத்தேன். கிச்சா வெல்கம் ட்ரிங்ஸ்-ஐ யூஸ் கிளாசில ஊத்திக்  கொடுத்து சர்வீஸ் பண்ண மண்டபத்திற்குள் அனுப்பினான் ரெயினிங் போய்ஸ் சாப்பிட்ட கிளாசை எல்லாம் கிளியர் பண்ண ஆரம்பித்தார்கள்.

ஹோம்மேட் வைனும் பிளம்ஸ்கேக்கும் கெஸ்டு கொண்டு வந்து பார்க்கவுண்டரில் கொடுத்திருந்தார்கள். வெல்கம்ட்ரிங்ஸ் முடிந்ததும் அவர்கள் பிறேயர் நேரத்தில் எல்லோர் கையிலும் வைனும் கேக்கும் இருக்கும்படி சர்வீஸ் பண்ண வேண்டும். முன்பு வேலை பார்த்த தங்குவிடுதியில்  ஜக்கு ஜக்காக வைனைத்  திருடிக் கொண்டுபோய் எங்கட ஸ்டோர் ரூமில வச்சிட்டு நிகழ்ச்சி முடிஞ்சதும் மூக்கு முட்ட நாங்களும் குடிச்சிட்டு மீதிய செக்யூரிட்டிக்கு கொடுத்துட்டு நடுச்சாமம்தாண்டி தங்குவிடுதியை  விட்டு வெளியே வருவோம். இங்கு அப்படியெல்லாம் ஒழுங்கீனமாக செய்ய முடியாது. அதன் பின்பு மேடையில் ஒருவர் கையில் கிட்டாருடன் ஆங்கிலப்பாட்டுபாடுவார். ஆணும் பெண்ணுமாக லாவகமாகக்  கையை கோர்த்துக்கொண்டு, டைடானிக் படத்தில நடனம் ஆடுவதுபோல் ஆண்களும் பெண்ணுகளும் சேர்ந்து டான்ஸ் ஆடுவார்கள். வட்டமாகக்  கைகோர்த்தும் ஆடுவார்கள். எங்களுக்கு அது ஒரு கிழுகிழுப்பாகப் பார்க்க ஆர்வமாக இருக்கும். பெண்கள் அவர்கள் பாரம்பரிய உடையில் நடனம் ஆடும்போது அவர்களின் புடைத்து நிற்கும் மார்பகங்கள் மட்டுமே எங்கள் கண்ணில்படும். ஒன்பதுமணிய நெருங்கத்தான் அவர்களுக்குச் சாப்பிடும் நினைப்பே வரும். கேப்டன் எத்தனை மணிக்கு சாப்பிட ஆரம்பிப்பார்கள் என்பதை கோஸ்டிடம் கேட்டு அதற்கேற்ப பூஃபே கவுண்டருக்கு உணவு வரும்.

இரவு மணி பதினொன்றைக் கடந்திருந்த நேரம் இந்த களோபரம் பாதிக்குமேல் முடிந்திருந்தது. மண்டபத்திற்குள் கிடந்த சாப்பிட்ட பிளேட்டுகளை எல்லாம் ரெயினிங் போய்ஸ் மூலமாகக்  கிளியர் பண்ணிட்டு மண்டபத்திற்குள் ஒரு ஓரமாக நின்று கொண்டு ஒவ்வொன்றாக அளந்து கொண்டு நின்றேன். பாதிக்குமேல் சாப்பிட்டு முடித்திருந்தார்கள். ஆனால்  நமக்குப் புரியாத அந்தப் பாட்டு மட்டும்  நின்றபாடில்லை, ஏன் நடனமும் நின்றபாடில்லை. எல்லாரும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் நடனமாடினால் மறுநாளுக்கான எங்கள் வேலையை கொஞ்சம் பார்க்கலாம். காசு கொடுப்பவன் சொல்லும் வரை பூஃபே கவுண்டரும் இருக்கும். கிச்சா பூஃபே கவுண்டரே கதி என்று நின்றிருந்தான். கேப்டன் கோஸ்டிடம் (மாப்பிள்ளையோட அப்பா ) பேசிவிட்டு பூஃபே கவுண்டரை பார்த்துக்கொண்டே என்னை கூபிட்டார்.

“சுதாகர்…… மாப்பிள்ளை பொண்ணு சாப்பிட வரப்போறாங்க. சீக்கிரமாக போய் நாண் ரொட்டி பிக்கப்பணிட்டு வா.” என்றார்.

ஓட்டமும் நடையுமாக பேக் ஏரியா வந்து பிறட் பாஸ்கட்டை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மெயின் கிச்சனை நோக்கி ஓடினேன். இவாறான நேரங்களில் சுத்தி சர்வீஸ் ஏரியா பக்கமாக போகாமல் றெஸ்ரரொண்ட்டுக்கு உள்ளால் பூந்து மெயின் கிச்சனுக்குள் போய்விடுவதுண்டு. அனால் றெஸ்ரரொண்ட்  வழியாக போகக்கூடாது. இப்படித்தான் ஒருநாள் அவசரமாக றெஸ்ரரொண்டுக்கு உள்ளால்   போகும்போது, கெஸ்டிடம் பேசிக்கொண்டிர்ந்த ரெஸ்ரரொண்ட்  மேனேஜர் என்னை கவனித்துவிட்டார். நான் அதை கவனிக்கவில்லை கிச்சனில் உணவு பிக்கப்பண்ணிக்கொண்டு மீண்டும் ரெஸ்ரரொண்டுக்குள் பூரவும், கிச்சனுக்கும் ரெஸ்ரரொண்டுக்கும் இடையில் கஷியர் இருக்குமிடத்தில் அவரிடத்தில் மாட்டிக்கொண்டேன். ஏற்கனவே அவர் என்னை எச்சரித்திருந்தார். ‘கையாமுய்யா’ என்று ஆங்கிலத்தில் கத்திய அவர் கடைசியாக இவ்வாறு கூறினார்,

“இனிமேல் இந்தப் பக்கமாக வந்தால் ஐ வில் பஃக் யூ…” என்றார். அவர் ஒரு ஆங்கிலோ இந்தியன். அவர்களுக்கு ‘பஃக்’ என்ற வார்த்தை சாதாரணமாக உரையாடலில் வரும் அதை அவர்கள் தீவிரமாக நினைப்பதில்லை.

எனக்கு ஆங்கிலம், ஹிந்தி, மலயாளம், தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் தெரியும் . என்னுடைய வாயும் சிலவேளைகளில் நீண்டுவிடும்.

இனிய உழவாக இன்னாது கூறல்

கனியிருப்ப காய் கவர்ந்தற்று “

என்று ரெஸ்ரரொண்டு மேனேஜரிடம் கூறினேன். இதை கேட்ட ரெஸ்ரரொண்டு கஷியர் தங்குவிடுதி  முழுவதும் சொல்லிவிட்டார். அதனால் இப்போதெல்லாம் ரெஸ்ரரொண்டுக்கு உள்ளால் நான் போவதில்லை. சேர்வீஸ் ஏரியாவில் லிஃப்டுக்காகக்  காத்திருந்தேன். லிஃப்டு எட்டாவது மாடியில் நின்று கூவிக்கொண்டு நின்றது. றூம் சேர்வீஸ் போய்ஸ் லிஃப்டை திறந்து வைத்துக்கொண்டு கிளியரன்ஸ் எடுக்கிறார்கள் என்று புரிந்தது. அது இப்போதைக்கு வரப்போவதில்லை. ஸ்டாஃப் என்றி வழியாகப்போய் தந்தூரியில் நின்றேன். சனிக்கிழமை என்பதால் அவர்களும் வேலையாகவே நின்றார்கள். ஓடிப்போன வேகத்தில், “பாஞ் ரொட்டி, பாஞ் நாண் ஜல்தி தேதோ பாய்………” என்றேன். மாவை உருட்டிக்கொண்டிருந்த ஹிந்தி பேசும் பையன் எதுவும் பேசவில்லை. எனது அவசரமும் பரபரப்புமே அவர்களை எரிச்சல் ஏற்படுத்தி இருக்கும். தந்தூரி அடுப்பிற்குள் ரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தவன் என்னை ஒரு நிமிடம் திரும்பி பார்த்தான்.

“என்னங்க முறைக்கிறீங்க ? சீக்கிரமா குடுங்க.”

“இது என்ன மிசினா ? பட்டன தட்டினதும் வருவதற்கு. வெயிற் பண்ணு.” என்றான்

“நா எவ்ளோ வேண்ணா வெயிற் பண்ணுவேன். கெஸ்டு வெயிற் பண்ணமாட்டான். ஜல்தி ஜல்தி.” என்றேன். சூட்டில் நிறவனுக்கு கொதிப்பேறியது. பேசாமல் கடுமையாக என்னை முறைத்தான்.

“என்னங்க ரொட்டி கேட்டா முறைக்கிரீங்க…….? இந்த முறைப்பெல்லாம் எங்கிட்ட வேணா.”

“போடா தரமுடியாது……..”

“மரியாதையா பேசுங்க. செஃப் கிட்ட கொம்பிளைன் பண்ணிருவேன். ஏஸி கண்ணாடி கேபினுக்குள் இருந்து செஃப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்த உரையாடல் அவருக்கு கேட்காது. தந்தூரி அடுப்புக்குள் வெந்து இருந்த ரொட்டியை கம்பியால் குத்தி குத்தி எடுத்துக்கொண்டிருந்தவன் அப்படியே அதை விட்டுவிட்டு கையில் கம்பியுடன் நேராக என்னை நோக்கி வந்தான். அவனோ அங்கிருக்கும் தொழிலாளர் சங்கத்தில் உறுபினரான சீனியர் கண்போர்ம் ஸ்டாப். நான் ரெயினிங் ஸ்டாப். அவன் கோபத்தையும் வரும் வேகத்தையும் பார்க்க உள்ளுக்குள் உதறல் ஆரம்பித்துவிட்டாலும் ஏதோ ஒரு குருட்டுத்  தைரியமும் தன்மானமும் என்னை இறங்கிப்போக இடம்கொடுக்கவில்லை. மற்ற கிச்சன் பணியாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசினாலும் அவனுக்காகவே பேசுவார்கள். ஒருவேளை நானும் கொஞ்சம் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டேனா?

கையில் தந்தூரி கம்பியுடன் கோபமாக அருகில் வந்தவன் உயரத்துக்கும் உடம்புக்கும் முன்னாடி நான் கொக்குரோச் (கரப்பான் பூச்சி ) மாதிரி நின்றுகொண்டிருந்தேன். அவன் கையிலிருக்கும் கம்பிய என் வயித்தில செருகிட்டா…..? நான் சிலைமாதி நின்றேன். அவன் அருகில் வந்து,

“எந்த ஊர்ரா” என்றான்.

குரலை ஏத்தவுமில்லாமல் இறக்கவுமில்லாமல்,

“மதுரை.”

மதுரை என்றதும் அவன் முகமும் குரலும் அப்படியே மாறிப்போனது.”ஓ…. நீ நம்மாளா…. அதுதான் இவ்வளவு தாட்டியமா பேசுறியா?” என்று எனது தோளில் கையைப்போட்டான்.

“இவ்வளவு பெரிய ஐந்து நட்சத்திர தங்குவிடுதி நிர்வாகத்துக்கே நான் ஒரு இலங்கைஅகதி என்பது தெரியாமல் இருக்கும்போது உனக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.”

தொ.பத்திநாதன்-இலங்கை

(Visited 218 times, 1 visits today)
 
தொ.பத்திநாதன்

பத்துக்கு பத்து-சிறுகதை-தொ.பத்திநாதன்

மாட்டுத்தாவணி பேரூந்து நிலையத்தின் மாநகராட்சி கட்டணக்கழிப்பறைக்குள் சென்ற தூரனுக்காக நான் அங்கே  வெளியே காத்திருந்தேன். எனது காத்திருப்பு நீண்டநேரம் ஆகியிருக்கவில்லை. கர்ச்சிப்பால் கையை துடைத்துக்கொண்டே தூரன் வெளியே வந்தான். “புலிகள் […]

 577 total views,  1 views today