திருப்பம்-சிறுகதை-அரிசங்கர்

அரிசங்கர்அப்பா,

எனக்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். இத்தனை நாட்கள் தங்கள் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்ததாக நீங்கள் நினைத்தால் மன்னித்துவிடுங்கள், நான் எனக்கான நேரத்திற்காகக் காத்திருந்தேன். இதோ அது வந்துவிட்டதாக நம்புகிறேன். அதனால் புறப்படுகிறேன். என்னை கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னைத் தேடி வராமல் இருப்பதே தங்கள் மரியாதைக்கு உகந்தது. இதை அன்பாகவும் எடுத்துகொள்ளலாம். நான் செய்வதில் தவறொன்றுமில்லை. இது என்னுடைய வாழ்க்கை. அதை என்விருப்பபடி அமைத்துக் கொள்ள எனக்கு முழுஉரிமை இருக்கிறது. இந்த முடிவை நான்தான் எடுக்கிறேன். அதன் விளைவுகளும் என்னையே சாரும். என் தனாவுடன் மகிழ்ச்சியாக வாழ்வேன் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,

மகேஸ்வரி

எழுதிய கடிதத்தை இரண்டு முறை படித்துவிட்டு தன் அப்பா பார்வையில் படும்படி வைத்திவிட்டு தன் அருகே இருந்த டிராவல் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் மகேஸ்வரி. வீட்டு வாசலில் ஜீன்ஸ் பேண்ட்டும், டீ-சர்ட்டும் அதன் மேலே ஒரு லெதர் ஜாக்கெட்டும் அணிந்துகொண்டு யமகா எஃப் இசட்டில் காத்திருந்த உருவத்தின் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டு, “ம்… சீக்கிரம்… கிளம்பு…” என்றாள்.

வண்டியின்  ஆக்ஸிலரேட்டர் வேகமாக முறுக்கப்பட வண்டி சில நொடிகளில் அறுபதை எட்டியது. ரெயின்போ நகரிலிருந்து சில நிமிடங்களிலேயே முத்தியால்பேட்டையை கடந்து ஈசிஆர் சாலையை அடைந்ததும் வண்டி கொஞ்சம் வேகம் குறைந்தது. மகேஸ்வரி எந்த விதமான பதட்டமோ பயமோ இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தாள். இனி வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்ற யோசனையெல்லாம் இல்லாமல் அந்த நிமிடத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள். இரவுக் காற்று வண்டியின் வேகத்திற்கு ஏற்ப உடலில் குளிர்ச்சியை ஏற்றிக்கொண்டிருந்தது. தலையை உயர்த்தி மேலே பார்த்தாள், தெரிந்த கொஞ்ச நட்சத்திரங்களும் அதிகப்படியாக மின்னுவது போல் தோன்றியது. எங்கே இது நடக்காமல் போய்விடுமோ என்ற பயம் ஒவ்வொரு நொடியும் தன்னைத் தின்றுகொண்டிருந்த தருணங்களை மகேஸ்வரி நினைத்துப் பார்த்தாள். மெல்லப் புன்னகைத்துக் கொண்டாள். ஆனால் அது புன்னகைக்கும் படியான விஷயமல்ல என்றாலும், அப்போது அவள் இதழில் புன்னகை பூத்தது. அது தனாவிடமிருந்து அழைப்பு வந்த அந்த தருணத்திற்கு மகேஸ்வரியை இட்டுச்சென்றது. ஒரு நாள் பகல்ப்பொழுதில் தனாவிடமிருந்து அழைப்பு வந்தது. தனக்குச் சென்னையில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும், ஆறு மாதத்தில் வேலை நிரந்தரமாகிவிடும் என்றும், ஆறு மாதம் கழித்து வந்து அழைத்துப் போவதாகவும் சொல்லி சென்று, இதோ ஆறு மாதத்தில் சொன்னபடியே தனா வந்து தன்னை அழைத்துப் போவதை மகேஸ்வரியால் நம்பவே முடியவில்லை. வண்டியை காலாப்பட்டில்  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் எதிரில் இருந்த ஒரு கடையில் நிறுத்தி இருவரும் ஆளுக்கொரு ஆப்பில் ஜூஸ் சொல்லிவிட்டு அங்கே இருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தனர்.

மகேஸ்வரி தனாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். இதழில் மெல்லியப் புன்னகை இருந்துகொண்டே இருந்தது. சுற்றிப் பார்த்துகொண்டிருந்த தனாவின் பார்வை மகேஸ்வரி பக்கம் திரும்ப,

“நீ வருவன்னு நான் நினைக்கவேயில்லை…”

தனாவிடமிருந்து ஒரு சிறு புன்னகை மட்டும் வெளிப்பட்டது.

“என்ன கூட்டிட்டு போறியே…. உனக்கு பயமாயில்லையா…?”

“என்ன நம்பி வரியே உனக்கு பயமாயில்லயா…?” என்று தனாவிடமிருந்து எதிர்க் கேள்வி வந்ததும், மகேஸ்வரி லேசாகச் சிரித்துக்கொண்டாள்.

ஜூஸ் வர இருவரும் குடித்துவிட்டு பைக்கில் ஏறிப் புறப்பட்டனர். இப்போது மகேஸ்வரி பைக்கில் இருபக்கமும் கால்களைப்போட்டு தனாவை அணைத்தவாறு அமர்ந்துகொண்டாள். பைக் ஈ.சி.ஆரில் சென்னையை நோக்கி நகரத்துவங்க, மகேஸ்வரி தன் வாட்சில் மணி பார்த்தாள். மணி இரவு 9:30யை காட்ட, இந்நேரம் அப்பா கண்டிப்பாக அந்த கடிதத்தைப் பார்த்திருப்பார் என நினைத்துக்கொண்டாள். கீழே ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்த செல் போனை எடுத்து அணைத்து வைத்தாள்.

0000000000000

மரக்காணம் தாண்டி சில கிலோ மீட்டரில் இருக்கும்  கிராமங்களில் திருவிழா நடந்துகொண்டிருந்து. அந்த கிராமத்தைக் கடந்து செல்லும் ஈ.சி.ஆர் சாலையில் இருநூறு மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெய்வ உருவங்கள் மின்னிக்கொண்டிருந்தன. ஆளுயர ஸ்பீக்கரில் சினிமா பாடல்கள் அந்த இடத்தை அதிரவைத்துக்கொண்டிருந்தது. வழக்கமாக அந்த இடத்தில் இந்த நேரத்தில் ஆள் நடமாட்டமே இருக்காது. திருவிழா நடப்பதால் சிறு சிறு குழுக்களாக இளைஞர்கள் முதல் கிழவர்கள் கதைப் பேசிக்கொண்டிருந்தனர். ஸ்பீக்கரின் அருகில் சிறுவர்கள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். கிழவிகளின் கூடைகளில் இருந்த கடைசி சில ஆழாக்குக் கடலைகள் குடிகாரர்களுக்காகக் காத்திருந்தன. பலர் போதையிலேயே இருந்தனர். பக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி சரக்கு ஊர் முழுக்க ஓடிக்கொண்டிருந்தது.

சீரியல் விளக்குள் முடியும் இடத்தில் தங்களிடமிருந்த கடைசி சொட்டு சரக்கையும் குடித்துவிட்டு அடுத்தது எங்கேயாவது சரக்கை ஏற்பாடு செய்ய முடியுமா அல்லது வீட்டுக்குத் திரும்பலாமா என ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் நின்றிருந்தது. அந்த கும்பலின் அருகே  இருசக்கர வாகனங்கள் நின்றிருந்தன. அவர்கள் அதைச் சுற்றியே அமர்ந்தும், நின்றும், வண்டியின் மீது கால் வைத்தும் இருந்தனர். இரண்டு பேர் வாயில் சிகரெட் எரிந்துகொண்டிருந்தது. அவர்களில் அதிக வயதானவனாக இருந்தவனுக்கே அதிகபட்சமாக இருபத்தி ஆறுதான் தான் இருக்கும். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆழ்ந்த அமைதியில் இருந்தனர். அவர்கள் உடல் லேசான ஆட்டத்திலிருந்தது. அப்படி ஆடுவதை அவர்கள் உணரவேயில்லை. குடியின் போது ஏதோ பெரிய விவாதம் நடந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே அனைவரின் முகங்களும் கோபத்தில் இருந்தன. குடியும் சேர்ந்து அவர்கள் அனைவரின் முகங்களும் விகாரமாகக் காட்சியளித்தது. அப்போது அவர்களின் எதிர்த் திசையில் மூன்று இளம் பெண்கள் பாவாடை தாவணியில் சிரித்துக்கொண்டே சென்றனர். மூவருமே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவர்களை ஓரக்கண்ணால் பார்த்தனர். அப்போது அவர்களில் ஒருவன் அப்பெண்களை நோக்கி நகரத் துவங்க, மற்றொருவன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.

“அவ தான் காரித் துப்பிட்டாள்ள… அப்பறம் இன்னா…? அவ அப்பன் யாருன்னு தெரியுல்ல… சாவனுமா…?”

செல்ல எத்தனித்தவன் அப்படியே பின் வாங்கினான். ஆனால் அந்த வார்த்தைகள் அவனை வெறிக்கொள்ளச் செய்தன. அப்போது அவர்களின் நண்பனாக இருந்த ஒருவன் தன் காதலித்துப் புதிதாக மணந்த மனைவியுடன் இவர்களைக் கடந்து ஊருக்குள் தன் இருசக்கர வாகனத்தில் சென்றான். போகும்போது இவர்களைப் பார்த்துக் கையசைத்தவாறே சென்றான். இவர்கள் பதிலுக்குக் கையசைத்து வைத்தனர். தூரத்தில் போய்க்கொண்டிருந்த மூன்று பெண்கள் அருகில் சென்றதும் அவன் வண்டியை நிறுத்த அவன் மனைவி வண்டியை விட்டு இறங்கி அந்த பெண்களுடன் பேசத் துவங்கினாள். நால்வரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவன் ஏதோ வெட்கப்பட அந்த பெண்கள் சத்தமாகச் சிரித்தது இங்கு நின்றுகொண்டிருந்த இவர்களுக்கு தெளிவாகக் கேட்டது.

“கிளம்பலாம்” என்றான் ஒருவன்.

“இரு போவோம்” என்று தடுத்தான் மற்றொருவன்.

 சில நிமிடங்கள் அப்படியே கழிந்தது. அப்போது ஒரு ஜோடி இருசக்கர வாகனத்தில் அவர்களைக் கடந்து சென்றது. அந்த வண்டி மிதமான வேகத்தில் சென்றதால் பின்னால் அமர்ந்துகொண்டிருந்த பெண்ணை ஐவருமே பார்த்தனர். இருபக்கமும் இருந்த சீரியல் பல்ப் வெளிச்சத்தில் அந்த பெண் அவ்வளவு அழகாகத் தெரிந்தாள். முன்னால் ஓட்டிக்கொண்டிருந்த உருவம்  ஒன்றும் அவ்வளவு வாட்ட சாட்டமாக இல்லாமல் இருந்தது. அவர்களில் ஒருவன் சட்டென தன் வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பினான். முன்னர் தடுத்தவன் இப்போது தடுக்காமல் அவன் பின்னால் ஏறிக்கொள்ள, மற்றவர்களும் உற்சாகமாகி அவர்களுடன் கிளம்பினார்கள். இதுபோல் இரவுகளில் தனியாக செல்லும் ஜோடிகளை சிறிது தூரம் துரத்தி வம்பிழுத்துவிட்டு வருவார்கள். வண்டியை வேகமாக இயக்க சில நிமிடங்களிலேயே முன்னால் சென்றுகொண்டிருந்த ஜோடியை அடைந்தனர். அவர்கள் அருகே சென்றதும் அனைவரும் கத்தத் தொடங்கினர். முன்னால் இருவர், பின்னால் மூவர் என அந்த ஜோடியை அணைக்கட்டினர். சாலை விளக்குகள் எதுவுமே இல்லாத பகுதிக்கு வந்திருந்தனர். இன்னும் சில கிலோமீட்டர்கள் கடந்தால் எதாவது ஊர் வந்துவிடும் என நினைத்து தனா ஆக்ஸிலேட்டரை அதிகமாகத் திருக, ஜோடி தப்பிக்கப் பார்க்கிறது என உணர்ந்தவர்கள் அவர்கள் அடுத்து வந்த திருப்பத்தில் ஓரங்கட்டினர். அதில் நிலை தடுமாறிய தனா வண்டியைச் சாலையோரத்தில் இருந்த சவுக்குத் தோப்பில் விட்டு ஒரு மரத்தில் மோதி இருவரும் விழுந்தனர். தனா லேசாகச் சுயநினைவை இழக்க, மகேஸ்வரி எழுந்து தனாவிடம் ஓடிவர முயலும்போது அவர்கள் வந்த வண்டியை நிறுத்திவிட்டு விளக்கை அணைத்தனர். நிலா வெளிச்சமும் இருந்ததால் முழுக்க இருட்டாக இல்லை. சில நொடிகளில் அனைவரின் கண்களும் இருட்டிற்குப் பழகிவிட்டது. அனைவரும் மகேஸ்வரியைச் சுற்றியவாறு நின்றனர். மகேஸ்வரி மிரண்டுபோய் நின்றிருந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கடந்து செல்லும் வாகனங்களும் மின்னல் வேகத்தில் செல்வதால் கத்தினாலும் எதுவும் கேட்காதோ என்று தோன்றியது. இருவர் மகேஸ்வரியை இரண்டுப் புறமும் பிடித்துக்கொள்ள ஒருவன் அவள் அருகே நெருங்கினான். மற்ற இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தனர். அவர்களுக்கும் பயம் ஏற்படத் துவங்கியிருந்தது. நடந்து சென்றவன் அவர்களைப் பார்த்து,

“இன்னாட கம்முன்னு நிக்கறீங்க…”

“டேய் இன்னடா பன்னப்போற…?” என்று இருவரில் ஒருவன் கேட்டதும் நடந்தவனுக்குக் குழப்பமாகியது. அளவிற்கு மீறி போகிறமோ என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றியது. அவர்கள் இதுவரை இதுபோலெல்லாம் செய்ததில்லை. கொஞ்சத்தூரம் துரத்திச் சென்று திரும்பி வந்துவிடுவார்கள். இதுதான் முதல்முறை என்பதால் மற்ற நால்வருமே ஒருவித பதட்டத்திலும், திரும்பி ஓடிவிடலாமா என்று எண்ணத்திலேயே இருந்தனர். இருந்தாலும் அப்போது கடந்த சென்றப் பெண்களும் சிரித்துக்கொண்டிருந்த நண்பனும் இவனுக்குள் ஒரு வெறியை ஏற்படுத்தியிருந்தனர். அவன் சாவகாசமாக “இவளப் போடப்போறன்” என்றான்.

இதைக் கேட்டதும் மகேஸ்வரி கத்தத் தொடங்கினாள். அவள் கத்தியதும் ஆத்திரம் அடைந்த அவன் வேகமாக அவள் அருகே சென்று அவள் கண்ணத்தில் பளார் என்று ஒரு அரை விட்டான். அரை விழுந்ததும் மகேஸ்வரிக்கு லேசாக மயக்கம் வருவது போல் இருந்தது. மயங்கிவிட்டால் இவர்கள் நினைத்ததை முடித்துவிடுவார்கள் எனத் தோன்றவே தலையை குலுக்கித் தெளிய வைத்துக்கொண்டாள் இருந்தாலும், வலி மண்டையைப் பிளந்தது.

பின்னால் ஏதோ ஒரு அசைவு தெரிவது போல் இருக்க மகேஸ்வரி உட்பட அனைவருமே திரும்பிப்பார்த்தனர். தனா லேசாகப் புரள்வது தெரிந்தது. தனாவைப் பார்த்ததும், மகேஸ்வரியை அடித்தவன் முகத்தில் மேலும் கோவம் ஏறியது. சட்டென நின்றுகொண்டிருந்தவர்களிடம்,

“டேய் அவனப்புடிங்கடா” என்றான்.

இப்போது அவன் சொன்னதை மறுப்பேதும் சொல்லாமல் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் தனாவின் கைகளை இறுக்க பிடித்தனர். அவன் மகேஸ்வரியைப் பார்த்தவாறு,

“இவ கண்ணு முன்னாடியே அவன்ந்த அறுத்துப்போட்டாத்தான் இவ அடங்குவா என்று வெறியேறியவன் போல் கத்திவிட்டு வேகமாக ஓடிச்சென்று தன் இருசக்கர வாகனத்தில் மறைத்துவைத்திருந்த அரை அடி நீளமுள்ள கத்தியை எடுத்துக்கொண்டு வேகமாக தனாவின் அருகே வந்து பெல்டை அவிழ்த்து, பேண்டையும் ஜிப்பையும் அவிழ்த்து தனாவின் உள்ளாடையினுள் கையை நுழைத்தவன் அதே வேகத்தில் வெளியே எடுத்தான். அவன் கண்கள் இப்போது மிரட்சியிலிருந்தது. இவன் செய்கைகளைப் பார்த்தவர்கள் பயந்துபோய் தங்கள் பிடிகளைத் தளர்த்தியிருந்தனர். கையை வெளியே எடுத்தவன் அதிர்ச்சியாக ஈனஸ்வரத்தில் பேசினான்.

“மச்சான்… இதுவும் பொண்ணுடா………”

இதைக் கேட்ட மற்றவர்கள் அதிர்ச்சியடைய, அனைவரும் தனாவை நெருங்கி அவள் முகத்தைப் பார்க்க முயன்றனர். இருட்டில் சரியாகத் தெரியவில்லை. இதற்குள் தனாவிற்கு மயக்கம் தெளிந்து சூழ்நிலை விளங்கியிருந்தது. அவர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கத்தி வைத்திருந்தவன் மணிக்கட்டில் தனா தன் காலால் எட்டி உதைத்தாள். கத்தி இருக்க பிடிக்கப்படாமல் இருந்ததால் கை நழுவி கீழே விழுந்தது. சட்டென எழுந்து கத்தியைக் கைப்பற்றி அவர்கள் சுதாரிப்பதற்குள் தன் கையைப் பிடித்துக்கொண்டிருந்த இருவரின் முகத்தில் சரமாரியாக கிழித்தாள். மகேஸ்வரியைப் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் தனாவின் அருகே வர முயல தன் அருகே நின்றுகொண்டிருந்த தன் ஆடைக்குள் கையை நுழைத்தவனின் தொடையில் கத்தியைப் பலங்கொண்டு இறக்கினாள். அவன் அலறல் மற்றவர்களை பயங்கொள்ளச் செய்தது. பின்னால் இருந்த இருவரும் ரோட்டை நோக்கி ஓடினர். முகத்தில் கிழிப்பட்ட இருவரையும் தேடினாள், காணவில்லை என தெரிந்ததும் மெல்ல எழுந்து தன் ஆடைகளைச் சரி செய்துகொண்டாள்.

தொடையில் குத்து வாங்கியவன் இன்னும் மெல்ல அழுதுகொண்டிருந்தான். மகேஸ்வரி அவள் அருகே வந்து “தனா… வா போயிடலாம்” என்றாள். தனா ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு கத்தியை இருக்கப் பிடித்துக்கொண்டு அவன் அருகே சென்று அவன் கட்டியிருந்த வேட்டியை உருவி எறிந்துவிட்டு, அவன் உள்ளாடையையும் கத்தியால் கிழித்து எறிந்துவிட்டு அவன் இரண்டு கால்களையும் விரித்து அவன் உறுப்பையும், விதைகளையும் இறுக்கிப் பிடித்தாள். அவன் நடக்கப்போவதை ஊகித்து தன்னால் முடிந்த அளவுக்கு கத்தத் துவங்கினான். கத்தியை அடியில் வைத்து அறுக்கப் போனவள் சற்று நிறுத்திவிட்டு அவனிடம்,

“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சாடா?” என்றாள்.

அவன் அழுதவாறு இல்லை எனத் தலையசைக்க, அவன் விதைகளை விட்டுவிட்டு அவன் உறுப்பை மட்டும் பிடித்து அதன் மேலிருந்து கீழ் நோக்கி அழுத்திக் கத்தியால் ஒரு கோடுப் போட்டாள். கத்தி பயணித்த பாதையில் இப்போது ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது. மகேஸ்வரி அனைத்தையும் மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு தனாவைத் தடுக்கும் தைரியமில்லாமல் இருந்தது. மீண்டும் அதே இடத்தில் அதைவிட அழுத்தமாக இன்னொரு கோட்டைப் போட்டுவிட்டு அவனிடம்,

“உனக்கு கல்யாணமாகி ஃபர்ஸ்ட் நைட்ல பொண்டாட்டி இந்த காயம் எப்படி வந்துச்சினு கேப்பா, நீ ஆம்பளயா இருந்த உண்மைய சொல்லுடா, இந்த வீரத் தழும்பு எப்பிடி வந்துச்சினு” என்று சொல்லிவிட்டு கத்தியிலிருந்த ரத்தத்தை அவன் சட்டையிலேயேத் துடைத்துக்கொண்டு அதை தன் பையில் மறைத்துக்கொண்டு இருவரும் வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

அரிசங்கர் – இந்தியா

அரிசங்கர்

 518 total views,  1 views today

(Visited 130 times, 1 visits today)