தனித்த எருமையின் இசைக்குறிப்புகள் அல்லது ஒரு எருமைப்பாடகனின் கதை-சிறுகதை-அரிசங்கர்

( ஓவியம்: டிஷாந்தினி நடராசா )

அசைவற்ற மரங்கள் அவர் உடலில் நீர்த்துளிகளை உற்பத்திச் செய்துக்கொண்டிருந்தது. புழுக்கம் உடலில் மட்டுமில்லை என்பதை முகம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. அவர் தன் வீட்டின் வாசலில் போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை தொங்கவிட்டுக்கொண்டும் தனது வலது தொடையில் கிட்டாரின் அடிப்பாகத்தை அழுத்தியவாறு இடது கையால் கிட்டார் கம்பியின் அழுத்தத்தைச் சரிசெய்துவிட்டு தன் குரலை ஒருமுறை செருமிக்கொண்டு, கண்களை இருக்க மூடிக்கொண்டு கிட்டாரை இசைத்தபடியே “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா… வருவதை எதிர்கொள்ளடா…” என்று பாடிக்கொண்டிருந்த அந்த நிமிடத்தில் அவர் மனதிலிருந்த ஒரே சந்தேகம், தன் மனைவியின் கருவுக்கு காரணம் தன் மூத்த மகனா அல்லது இளைய மகனா என்பது தான்.

அவர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் அவர் கிட்டாரை மட்டுமே பயன்படுத்துவார். அவருக்கு அது மட்டுமே வாசிக்கத்தெரியும். ஆனால் அவர் பாடும் பாடலுக்கும் கிட்டாருக்கும் எதாவது சம்பந்தம் உண்டா, தான் மீட்டும் இசைக்கும் பாடலுக்கும் ஒத்துப் போகிறதா என்ற கவலைகள் அவரிடம் இல்லை. அவர் கிட்டார் இசைப்பார். அப்போது பாடவும் செய்வார். இரண்டும் இணையும் அதே சமயத்தில் அவர் மனதில் ஓடும் எந்த ஒரு விஷயத்தையும் அவர் யாரிடமும் வெளிப்படுத்தமாட்டார். அதே வேளையில் அவர் பாடும் பாடல்களைச் சற்று உற்றுக் கவனித்தால் அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை ஓரளவுக்கு ஊகிக்கலாம்.

பாவாடை என்ற இயற்பெயர் கொண்ட அவர் கச்சேரிகளில் பாட ஆரம்பித்ததும் தன்னுடைய ஆசான்களாக அவர் கருதும் இளையராஜாவின் பெயரையும், ஜேசுதாஸின் பெயரையும் இனைத்து இளையதாஸ் என வைத்துக்கொண்டார். ஆனால் அவர் ஒருபோதும் கச்சேரிகளில் இளையராஜாவின் பாடல்களையோ அல்லது ஜேசுதாஸின் பாடல்களையோ பாடியதே இல்லை. அவருக்கு வழங்கப்படுவதெல்லாம் கச்சேரியின் ஆரம்பத்தில் பாடப்படும் பக்தி பாடல்களும் அதனைத் தொடர்ந்து ஆரம்பத்தில் பாடப்படும் சில பழைய பாடல்களும் தான். அது பெரும்பாலும் எம்.எஸ்.வி.யின் பாடல்களாகவே இருக்கும். கோயில் கச்சேரியில் மட்டுமே அவர் பாடுவார். திருமணக் கச்சேரியில் மேற்சொன்ன இரண்டு பிரிவு பாடல்களும் படப்படுவதேயில்லை.

கச்சேரியில் பாடுவது என்பது நிச்சயம் பலருக்கு முழுநேர வேலையாக இருக்காது. அவர்கள் வயிற்றுப்பாட்டிற்கு வேறு எதாவது செய்துதான் ஆக வேண்டும். விதிவிலக்காக யாராவது இருக்கலாம். இளையதாஸ் (ஏ) பாவாடைக்கு அப்படி ஒரு தொழிலிருந்தது. அவர் தன் வீட்டின் பின்னால் ஒன்பது எருமைகளை வைத்திருந்தார். அவை கறக்கும் பாலை அருகில் இருக்கும் டீகடைகளுக்கு ஊற்றிக்கொண்டிருந்தார். இந்த வேலைகள் போக இரவுகளில் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து பாடுவார். அவரை அருகில் இருக்கும் குடித்தனக்காரர்கள் யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் சில சமயம் வீட்டின் பின்னால் கட்டப்பட்டிருக்கும் எருமைகள் பலத்த ஆட்சேபனை தெரிவிக்கும். அப்போதெல்லாம் எதாவது வீட்டில் லேசாக ஒரு சிரிப்பொலி எழுந்து அடங்கும்.

இளையதாஸின் மூத்த மகன் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது இளைய மகன் பத்தாவது படித்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில் தான் இளையதாஸின் மனைவி மாடியிலிருந்து தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்தால். அக்கம்பக்கத்தில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் இது விபத்துதான் என்று நம்பினார்கள். போலிஸ் வந்து விசாரித்தபோது கூட இளையதாஸ் மிகவும் நல்லவன் என்று மாரியாத்தாவுக்கும் மேரியாத்தாவுக்கும் சூடமும் மெழுகும் கொளுத்தி சத்தியம் செய்தார்கள். ஆனால் அவை இரண்டையும் இளையதாஸ் ஊதி அனைத்துவிட்டு ஆறே மாதத்தில் ஒரு சிறுவயது பெண்ணைக்கொண்டு தன் விட்டில் குத்துவிளக்கை ஏற்ற வைத்தான். இதன் பிறகே தெருவிலிருந்தவர்களுக்கு அது விபத்துதானா என்று சந்தேகம் எழச் செய்தது. ஆனால் அதை வைத்து அவர்கள் பொழுது போக்கினார்களே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

மூன்று ஆண்டுகள் ஓடியது. இளையவன் கல்லூரி சேர்ந்திருந்தான். மூத்தவன் மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். எருமைகள் அனைத்தும் இப்போது மூத்தவன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் இளையதாஸுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தை புது பொண்டாட்டியுடன் கழித்தார். ஆனால் தான் நீண்ட காலத்திற்கு முன்பே குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்துகொண்டதைச் சாமர்த்தியமாக அனைவரிடமும் மறைத்திருந்தார். மனைவி உண்டானதும், இளையதாஸ் அனைத்தையும் கணக்குப் போட்டார். எப்படி கணக்குப் போட்டாலும் அவருக்கு உதைத்தது. ஆப்ரேஷன் சரியாக செய்யப்படவில்லை என்றாலும் கூட கடைசியாக கூடல் நடந்து அவர் கணக்கு படி எண்பத்தி மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இது இரண்டு மாத கர்ப்பம். அவர் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

வெளியே தெரிந்தால் அவமானம். தெருவே சிரிக்கும். அவளிடமும் கேட்க முடியாது. அவள் ஊரையே கூட்டி ஒப்பாரி வைப்பாள். மகன்களிடம் கேட்கலாம் என்றால், திருமணத்திற்குப் பிறகு அவன்கள் இவரிடம் பேசுவதேயில்லை. வேறு யாராவது இருக்குமோ என்று யோசித்தார். நிச்சயம் இருக்காது இவன்களில் யாரோ ஒருவன் தான் என்று தோன்றியது.

இளையமகன் எப்போதும் எதிலும் கொஞ்சம் வேகமானவன் என்றும் மூத்த மகன் கொஞ்சம் மந்தமானவன் என்றும் அவர் நினைத்துக்கொண்டிருந்தார். இன்னொரு முக்கியமான காரணம் இளைய மகனுக்கு ஒரு காதலி இருப்பதும் அவன் யாருக்கும் தெரியாமல் சுய இன்பம் செய்வது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் மூத்த மகன் டீவியில் எதாவது நெருக்கமான காட்சிகள் வந்தால் கூட கண்களை மூடிக்கொண்டிருந்தான். மேலும் தனது தம்பி தன்னைவிட அனைத்திலும் முன்னால் இருப்பதைப்பற்றி அவனுக்கு எந்த விதமான குற்றவுணர்வோ, அவமானமோ இல்லாமல் இருந்தது. இதையெல்லாம் அலசிய இளையதாஸுக்கு தனது இரண்டாவது மகன் மீதே சந்தேகம் அதிகரித்தது.

தினம் இரவு சோகப்பாடல்களாகப் பாடினார். தெருவே விசித்திரமாக இவரைப்பார்த்தது. “பொண்டாட்டி மாசமா இருக்கச் சொல்ல இந்தாளு ஏண்டி இப்படி அழுகாச்சி பாட்டா பாடறான்” என்று எதிர் விட்டு கிழவி இவர் காதுப்படவே கேட்டது. பொருத்து பொருத்து பார்த்த மூத்த மகனும் ஒருநாள் இவரிடம் வந்து பேசினான்.

“இப்ப இன்னாத்துக்கு தெனிக்கும் ஒப்பாரி வெச்சினுகிற… மூடிகினு கம்முன்னு இருந்திருக்கனும்… பண்றதெல்லாம் பண்ணிட்டு… கம்முன்னு போயி படு…” என்று கத்திவிட்டுச் சென்றான்.

இளையதாஸ் யோசித்தார். ‘இவனுக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது… அப்ப இவன் சந்தோஷமா இருக்கான்… இவனுக்குத் தான் புள்ள பொறக்கப் போவுது… இவன் தான்… இவன் தான்…. இவன் தான்…’ என்று தனது மனதிற்குள் ஒரு முடிவுக்கே வந்துவிட்டார். வெருட்டென்று கயிற்றுக்கட்டிலிருந்து எழுந்தார். அப்போது இளையமகன் தன் சைக்கிளில் வந்து இறங்கினான். கையில் ஏதோ கவர் வைத்திருந்தான். அவன் தன் அப்பாவை ஏற்றெடுத்தும் பார்க்கவில்லை. நேராக உள்ளே சென்றான். இளையதாஸின் புது மனைவி தொலைக்காட்சிப் பார்த்துக்கொண்டிருந்தாள். இவன் நேராக அவளிடம் சென்றான். இளையதாஸ் இதை வாசலில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்தார். அவன் தன் கையிலிருந்த கவரை அவளிடம் கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் மாடிக்குச் சென்றான். அவள் அதிலிருந்து ஒரு புளிப்பு மிட்டாயை எடுத்துப் பிரித்து வாயில் போட்டுக்கொண்டாள். இவர் மீண்டும் மெல்லக் கட்டிலில் சரிந்து கிட்டாரை எடுத்து தொண்டையை செருமிக்கொண்டு “உச்சி வகுந்தெடுத்து” என்று மெல்லப் பாடினார். எதிர்வீட்டுக் கிழவிக்கு முழுக்கதையும் புரிந்துவிட்டது.

எல்லோரும் தன்னையே பார்ப்பதுபோல் தோன்றியது இளையதாஸுக்கு. ஏதோ ஒரு ஜன்னலிலிருந்தும், கதவு மறைவிலிருந்தும் தன்னை கண்கானிப்பிதாகவே நம்பினார். தலையை குனிந்தவாறே நடந்தார். யார் கண்களையும் பார்க்க அவருக்குத் தைரியமில்லை. இப்படியே நாட்களைக் கடத்தினார். தன் மனைவியின் தம்பி இரண்டு முறை வந்து போனபோது கூட அவர் அவனிடம் எதுவும் பேசவில்லை. இளையதாஸ் இப்படி இருப்பது அவளுக்கு ஏதோ போல் இருந்தது. ஆனால் அவள் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அவளுக்குத் தேவையானதை இளையதாஸின் மகன்களே செய்துக்கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர் அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருநாள் இந்த உண்மை நிச்சயம் வெளியே வரும் என்று நம்பினார். குழந்தை பிறக்கட்டும் என்று காத்திருக்க துவங்கினார்.

நாட்கள் மெல்ல நகர்ந்தது. இளையதாஸ் இரவுகளில் இப்போது அதிகம் பக்தி பாடல்களைப் பாடத்தொடங்கினார். அவர் சினிமா பாட்டுக்கள் பாடிக்கொண்டிருந்தவரை இல்லாத சலசலப்பு தெருக்காரர்களிடம் இப்போது எழ ஆரம்பித்தது. ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைகொள்ளவில்லை.

ஒரு மழை இரவில் இளையதாஸுக்கு குழந்தை பிறந்திருப்பதாக, அவன் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தபோது தகவல் வந்தது. பாடவேண்டிய மூன்று பக்திப்பாட்டையும் பாடிமுடித்துவிட்டு நேராக மகப்பேறு மருத்துவமனைக்கு வந்தார். பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டதால் வெளியே காத்திருந்தார். இரு மகன்களும் அவர் அருகிலேயே அமர்ந்திருந்தனர். “நீங்க வேணா வீட்டுக்குப் போங்க நான் இங்கேயே இருக்கேன்” என்றான் இளையமகன். “உனக்கு இன்னாட தெரியும். அவரக்கூட்டினு போயிட்டு காலையில வா, நான் இருக்கேன்” என்றான் முத்த மகன். மூவரும் அப்படியே அமர்ந்திருந்தனர். கொசுக்கடி அதிகமானது. பேசாமல் வீட்டிற்கு போய்விட்டு வரலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது இளையதாஸின் மாமியாரும் மச்சானும் வந்தார்கள். மச்சான் இளையதாஸின் கைகளைப் பற்றிக்கொண்டு தழுதழுத்தான். பெண்பிள்ளை என்றதும் இளையதாஸின் மாமியார் ‘ஆத்தா மகமாயி’ என்று கும்பிட்டுக்கொண்டாள். மச்சான் கையில் வைத்திருந்த பையில் கையை நுழைத்து ஒரு பொட்டலத்தை பிரித்து அதிலிருந்த இனிப்பை எடுத்து அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்தான். மூத்த மகன் இரண்டு இனிப்பு எடுத்துக்கொண்டதை இளையதாஸ் கவனிக்கத்தவரவில்லை. பிறகு மாமியாரையும் மச்சானையும் விட்டுவிட்டு மூவரும் வீடுவந்து சேர்ந்தனர்.

வீட்டிற்குள் மயான அமைதி. மூவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இளையதாஸ் கிட்டாரை எடுத்துக்கொண்டு தெருவுக்குப் போனார். ஆனால் தெரு ஜனம் அவரை எதையும் வாசிக்கவிடவில்லை. கேள்விகளால் தொலைதெடுத்தனர். ஆணா, பெண்ணா, ஆப்ரேஷனா, சுகமா, கருப்பா சிகப்பா என்று ஆளுக்கொரு கேள்வி. உண்மையில் இவருக்கு எதற்கும் பதில் தெரியவில்லை. குழந்தை யார் ஜாடை என்று எதிர் வீட்டுக் கிழவி கேட்டதும் ஒரு கணம் ஆடிப்போனார். ஏதேதோ சொல்லி மழுப்பினார். பிறகு ஒவ்வொருவராக வீட்டிற்கு சென்றனர். அன்று அவர் பாடவேயில்லை.

குழந்தை யார் ஜாடையில் இருக்கும் என்றே யோசித்துக்கொண்டிருந்தார். இவன்கள் இருவரும் பார்த்துவிட்டனர். இவன்களிடம் கேட்கலாமா என்று யோசித்தார். பிறகு வேண்டாம் என்று முடிவு செய்தார். ஆனால் அவர் மனம் தவித்தது. அருந்தப் பல்லி வால் போல் துடித்துக்கொண்டிருந்தார். கைகள் நடுங்குவது போல் இருந்தது. முகத்தை கழுவி துண்டால் துடைத்துவிட்டு கண்ணாடியைப் பார்த்தார். வேகமாக வேர்க்கத் தொடங்கியது. இவன்களிடம் கேட்களாம என்று சுவற்றில் ஒரு பந்தை எரிந்தால், கேள் என்று ஒரு பந்தும் வேண்டாம் என்று ஒரு பந்துமாக திரும்பிவந்து.

சரி கேட்போம் என்று முடிவு செய்து மெல்லச் சின்னவன் அருகில் சென்றார். அவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் எதாவது தெரிகிறதா என்று நன்றாக உற்றுப்பார்த்தார். எதுவும் பிடிபடவில்லை.  எழுப்ப மனமின்றி பெரியவனிடம் சென்றார். பெரியவன் படுத்துக்கொண்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். இவர் வருவதைக் கவனித்தவன் எழுந்து உட்கார்ந்தான். அவர் அவன் அருகில் வந்து எங்கோ பார்த்தபடி நின்றிருந்தார். ஏதோ தேடுவது போல் நடித்தார். அவர் நடிப்பது நன்றாக தெரிந்தது. ஏதே கேட்கத்தான் வந்திருக்கிறார் என்று அவனுக்கு புரிந்தது. பிறகு சுற்றிப்பார்த்தார். மேலே ஃபேன்னைப் பார்த்தார். அது மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தது. வேகாமாக சுவிட்ச் போர்ட் அருகில் சென்று ஃபேனை வேகமாக சுற்றவிட்டர். கீழே கிடந்த அவன் துணிகளை எடுத்து கட்டப்பட்டிருந்த கொடியில் போட்டார். அவன் கழட்டிப் போட்ட உள்ளாடையை கூட எடுத்து அழகாக கொடியில் போட்டார். பிறகு திரும்பி பேசலாம் என்று அவன் அருகில் அவந்தார்.

அவர் பேச வாயெடுத்த நொடி இவன் பேசினான்.

“எனக்கு ஒரு ஆயரூவா வேணும்…”

“இன்னாத்துக்கு …” என்றார் கோவமாக.

“பசங்க டிரீட் கேக்கறானுங்க…”

“டிரீட்டா… இன்னாத்துக்கு டிரீட்…”

“கொழுந்த பொறந்ததுக்கு…”

“ஏன்டா… புள்ள பெத்தது நீயா… நானா…” என்றார் ஆத்திரத்துடன்.

அவன் அமைதியாக இருந்தான். பிறகு படுத்துக்கொண்டான். அவனை விட்டு சிறிது நகர்ந்தவர் பின் திரும்பி,

“டேய்…” என்றார்.

அவன் திரும்பிப்பார்க்காமல் “ம்…” என்றார்.

“புள்ளய பாத்தியா…”

“ம்…”

“யாரு ஜாடையில இருந்தது”

“தெரில… அனா உன்ன மாதிரியில்ல…”

அவர் வெருட்டென்று அங்கிருந்து வெளியேறினார்.

இரண்டு நாட்கள் கழித்து தாயும் சேயும் வீட்டுக்கு அழித்துவரப்பட்டனர். மாமியாரும் மச்சானும் இருவரையும் அழைத்துப் போவதாகக் கேட்க இளையதாஸ் அதற்கு மறுத்துவிட்டார். ‘அங்க இன்னா வசதியிருக்கு இங்கயே இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டார். இரவு வரை இருவரும் குழந்தையை கொஞ்சிவிட்டு கடைசி பஸ்க்கே புறப்பட்டனர்.

நாட்கள் சென்றது. இருமகன்களும் குழந்தையிடம் பாசமாக இருந்தனர். வீடு முழுக்க மொம்மைகளால் நிரப்பினர். சில சமயம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடனர். அவர் மெல்ல மெல்ல அந்த அவஸ்தையிலிருந்து விடுபட ஆரம்பித்தார். ஆனது ஆகிவிட்டது, விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் குழந்தையிடம் மட்டும் நெருங்காமலேயிருந்தார்.

ஒருநாள்  இளையதாஸ் கடையில் பால் ஊற்றிவிட்டுப் பேசிக்கொண்டிருந்தார். இளையவன் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தான். அவனை என்ன என்பதுபோல் பார்த்தார். குழந்தைக்குத் தூக்கித் தூக்கிப்போடுவதாக சொன்னான்.

குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். பாதி வழியிலேயே குழந்தை தன் துடிப்பை நிறுத்தியிருந்தது. அதை இளையதாஸ் உணர்ந்திருந்தார். ஆனால் எதையும் சொல்லவில்லை. மருத்துவமனையில் சோதனை செய்துவிட்டு இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். இரு மகன்களும் அதிர்ச்சியடைந்தார்கள். மனைவி மயங்கிவிழுந்தாள். அனைத்தையும் முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். சடங்குகள் அதன் பாட்டுக்கு நடந்தது. பெரிய ஒப்பாரிகள் எதுவுமில்லாமல் இருந்தது. கூட்டமும் அதிகமில்லை. தகவல் சரியாகப் போகவில்லையே என்று நினைத்துக்கொண்டார் இளையதாஸ். இத்தனை நாட்கள் அவர் மனதிற்குள் தூங்கிக்கொண்டிருந்த மிருகம் மீண்டும் எழுந்தது. இரு மகன்களில் யார் உண்மையாக அழுகிறார்கள் என்று நோட்டமிட்டார். இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். இவருக்கு எதுவும் புரியவில்லை. ஒருவேளை இருவரும் பக்குவமடைவில்லையோ அல்லது அதிக பக்குவமடைந்துவிட்டார்களே என்று தோன்றியது. ஏதோ சத்தம் கேட்க திரும்பிப்பார்த்தார். தன் மாமியாரும் மச்சானும் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தார்கள். மாமியார் புடவையின் தலைப்பை வாயில் வைத்து அழுத்திக்கொண்டே வந்தாள். நேராக உள்ளே போயி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். சற்று ஓய்ந்திருந்த மனைவியும் மீண்டும் அழ ஆரம்பித்தாள். மச்சான் நேராக வந்து இவர் கையைப் பிடித்துக்கொண்டு அழுதான். இவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தார். அவன் இவர் கையை விட்டுவிட்டு உள்ளே சென்று என்னென்னவோ சொல்லி அழுதான். அமைதியாக நின்றிருந்தவர் சட்டென ஒருநொடி திடுக்கிட்டு அவனைப்பார்த்தார். அவன் விடாமல் தொடர்ந்து என்னெனவோ சொல்லிக்கொண்டிருந்தான். அவர் அவன் சொன்னதை ஒவ்வொன்றாக நினைவிற்குக் கொண்டுவந்தார்.

“ஏன் தங்கமே… எஞ்சாமியே… நான் பெத்த மகளே…”

அதை யாருமே கவனிக்கவில்லை. அவர் மட்டுமே அவ்வார்த்தையைக் கேட்டிருந்தார். மெல்ல அவன் முகத்தைப் பார்த்தார். அவன் மார்பில் அடித்து அழுதுகொண்டிருந்தான். பிறகு குழந்தைப்பார்த்தார் பின் அதன் முகத்தை உற்றுப்பார்த்தார்.

அரிசங்கர்-இந்தியா

அரிசங்கர்

(Visited 201 times, 1 visits today)