வித்தியாசமான விளம்பரம்-சிறுகதை-ராணி சீதரன்

( ஓவியம்: டிஷாந்தினி நடராசா )

ஐயோ! ஐயோ!! என்ற அவலக் குரல் இரவு நேரத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டதோடு  எனது தூக்கததிலும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. மார்கழி மாதப் பனிக்குளிரில் விறைத்துப் போன உடல் போர்வைக்குள் முடங்கிக் கொள் என்று சிணுங்கியது. யாராவது கத்தட்டும் என மறுபக்கம் திரும்பிப் படுக்கிறேன். அடிதடியோடு கலந்த அழுகைக் குரல்கள் காதில் ஒலித்து பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்த, என்ன நடந்திருக்கும் என்ற மனதின் விசாரணையோடு படுக்கையை விட்டு எழுந்தேன். வீட்டில் யாருமே இல்லை என்பதைக் குடிகொண்டிருந்த நிசப்தம் கட்டியம் கூறியது. சத்தம் கேட்டு எல்லோரும் படை திரண்டு பாய்ந்திருப்பார்கள். நான் நித்திரை என்பதால் எனது தூக்கத்தைக் கெடுக்கக்கூடாது என நல்லெண்ணத்தோடு என்னை  விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் என்ற நேர் சிந்தனையோடு மனதைச்; சமாதானப்படுத்தினேன். மீண்டும் மனக்குரங்கு சத்தம் வந்த திசை நோக்கித் தாவுகிறது.

அந்தச் சிறிய ஊரின் ஐந்தாவது ஒழுங்கையில் இருக்கும் நாற்சந்திப் பக்கமாகத் தான் சத்தம் வருகிறது. நாற்சந்தியில் நாலு நாளைக்கு முதல் செத்த வீடு நடந்தது. ஆச்சிப்பிள்ளை ரீச்சரின் மரணத்திற்காக நாலு கண்டங்களில் இருந்து பிள்ளைகள் வந்து இருக்கிறார்கள். செத்த வீட்டில் ஊராக்கள் ஒருமாதம் வரும் வரையும் கூடியிருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்றால் தூரத்து உறவையும் கிட்டவாக்கிக் கொண்டு விசாரிப்பு, விடுப்பு, எதிர்பார்ப்பு இவற்றுக்குள் அடங்கிய அடங்காத வகைகளுக்குள் பலர் பிரசன்னமாயிருப்பார்கள். அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை வந்திருக்குமோ? இல்லாவிட்டால் ஊர்ப்பொடியளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்குமோ? அல்லது கள்ளர் யாரும் மாட்டுப் பட்டிருப்பினமோ? இவற்றில் எது காரணமாக இருக்கும்; என்று தீர்மானிக்க முடியாத தடுமாற்றத்தோடு பனிக்குளிருக்குப் போர்வையாக இரண்டு கைகளையும் குறுக்காகப் போட்டுத் தோளைப் பிடித்தபடி நடக்கிறேன்,

ஊருக்குப் பெருமை தருபவற்றில் மெய்கண்டான் பாடசாலையும் உள்ளடங்கும். ஒரு காலத்தில் ஊரில் உள்ளவர்கள் தான்; அங்கே செங்கோலோச்சினார்கள். அதிபரான பெரியவாத்தியார் தொடக்கம் பாட ஆசிரியர்கள் அனைவரும் ஊரைச் சேர்ந்தவர்கள். தையல், நெசவு, பன்னவேலை, சங்கீதம் போன்ற பாடங்களைப் பெண் ஆசிரியர்கள் படிப்பித்தார்கள். தையலம்மா, தையலக்கா என்று   அவர்களை அழைப்பது வழக்கம்; காலப்போக்கில் தையலக்கா, அக்காவாக மாறியது. தையல் படிப்பித்த பாக்கியம் அக்கா நெசவு படிப்பித்த பொன்னம்மாக்கா, சுகாதாரம் படிப்பித்தவர்கள் கனகம்மாக்கா, நேசம்மாக்கா, சமயம் படிப்பித்த  ஆச்சிப்பிள்ளையக்கா இவர்கள் தான் ஊரின் கல்வியையும் ஒழுக்கத்தையும் கட்டிக் காத்த பெண் பிரமாக்கள். சிலவேளைகளில் ரீச்சர்மார் வீட்டிலே மறந்து போய் விட்டுவி;ட்டு வந்த பொருள்களை எடுத்து வருவதற்கோ, அடுப்பில் இருக்கும் கறியை இறக்கி வைப்பதற்கோ என்னைப்போன்ற பலர் ஆபத்பாந்தவர்களாக ஆவலோடு காத்திருந்த காலங்கள் மறக்கமுடியாதவை.

ஆச்சிப்பிள்ளை ரீச்சர் நல்ல மாநிறம், சிரித்த முகம், சமயமும் பண்பாடும் கலந்த கலவையாகக் காட்சி தருவார். எடுத்ததெற்கெல்லாம்,

“அப்பா முருகா விசவத்தனையானே ; வேலவா” என்ற மந்திரத்தை உச்சரிப்பார். அன்பு, அறம், கலை, பண்பாடு அனைத்தும் அவருக்கு அத்துபடி மாணவர்களுக்கு அருகில் வரும்போது இவற்றை அள்ளித் தெளிப்பார். தனது வாழ்க்கைத் துணைவராக நடராசா வாத்தியாரைத் திருமணம் செய்ததன் பயனாக ஆசைக்கு மூன்றும் ஆஸ்திக்கு மூன்றுமாக ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். குடும்பத்தையும் தொழிலையும் இரு கண்களாக மதித்த பொறுப்புள்ள பெண் என்று அவரைச் சொல்வதும் பொருந்தும். இளம் வயதிலேயே விதவைக் கோலம் அவரை விரும்பிவந்து ஒட்டிக் கொண்டாலும், அந்த வெறுமையை விரட்டுவதற்குப் புன்னகையைத் தனவசமாக்கிக் கொண்டு பாரதியின் புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர்.

ரீச்சரைப் பற்றிய எண்ண அலைகள் எனக்குள்ளே திரைப்படமாக ஓடியது. கட்டுப்பாடு நிறைந்த சமூகத்திலே கணவனை இழந்த பெண், குழந்தைகளை வளர்த்துத் தொழிலையும் பார்ப்பது சிரமமான காரியம் என்பது எனக்குத் தெரியும். படிப்பிக்கும் வேலை தான் பெண்களுக்கு நல்லதென்று ஆசைப்பட்டு நானும் ஒரு ரீச்சரைக் கல்யாணம் செய்து படும்பாடு போதும். எங்களிடம் இருக்கும் குருபக்தி இப்போது பிள்ளைகளிடம் இல்லை. தொழில் விசுவாசம் ஆசிரியர்களிடமும் இல்லை. நாளுக்கொரு முறைப்பாட்டுடன்தான் அவள் வீட்டுக்கு வருவாள். “பேசாமல் வேலையை விட்டுவிட்டு இரு” என்று கோபத்தில் நான் சொல்ல அவளும் இதே சாட்டாக வேலையை விட்டு நிற்க ஆயத்தமானாள். உண்மையாகவே அவள் வேலையை விட்டு விட்டால் நான் மட்டும் உழைத்துக் குடும்பச் செலவைச் சமாளிக்க முடியாது. ‘மனைவி வேலைக்குப் போகாவிட்டால் நீ என்ன செய்வாய்;?’ இனந்தெரியாத குரல்; எனக்குள் இன்னமும் ஒலித்துப் பயம்காட்டு;கிறது.

ஆச்சிப்பிள்ளை ரீச்சரின் கெட்டித்தனத்தை வியக்காமல் இருக்க முடியாது. சத்தியவான் சாவித்திரி நாடகம் பழக்கிய போது,

“தீபன் ! நீதான் சத்தியவானுக்குப் பொருத்தம்.”

ரீச்சர் என்னைத் தெரிவு செய்தது சந்தோசமாகத் தான் இருந்தது. ஆனால் மாணவர் மன்றத்தில் நாடகம் நடிக்க மேடையில் ஏறிய போது குலப்பன் காய்ச்சல் வந்தவன் போல உதறல் எடுத்து நடுங்கியதை சத்தியமாய்  மறககமுடியாது. ரீச்சர் நடிப்பு நுட்பங்களைச் சொல்லித் தந்து நாடகம் பழக்கியபோது. மேடைக்கூச்சம் போவதற்குப் பைத்தியம் மாதிரிக் கதைக்கச் சொன்னார். நானும்; கண்ணாடி முன்னாலும், தனிமையிலும், மரந்தடிகளோடும் பேசிப் பேசி நடிப்புக்காகச் செய்த பிரயத்தனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

ரீச்சர் தனது பிள்ளைகளை, வளர்த்து நல்ல நிலைக்கு வரவைத்து அவர்கள் வெளிநாடுகளுக்கு வாழ்க்கையைத் தேடிச் செல்வதற்குப் பக்கத்துணையாக இருந்தவர். பிள்ளைப் பாசத்தையும் பிறந்த மண்ணையும் இருகண்ணாகப் போற்றியதால்; தனது இறுதிக்காலத்தை ஊரோடு இணைத்துக் கொள்ள எண்ணியிருக்க வேண்டும்.

“ஆச்சிப்பிள்ளை ரீச்சர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறா” என்ற செய்தி அறிந்து ரீச்சரைப் பார்க்கப் போனேன்.

சாய்வு நாற்காலியில் படுத்தப்படி உறக்கத்திலிருந்தார். நெஞ்சிலே புத்தகமும் மூக்குக்கண்ணாடியும் கிடந்தது. கட்டிலிலே தலையணைக்குப் பக்கத்தில் அவரோடு கூடப் பயணிக்கும் சோனாப்பையுடன் சில சமயப் புத்தகங்களும் தினசரிப் பத்திரிகைளும் இருந்தன. கட்டிலுக்குக் கீழே தண்ணீர் போத்தல் கிடந்தது. தேவையான பொருட்களைத் தனக்கு வசதியாக வைத்துக் கொண்டு தனிமையை விரட்டுவதற்கு முற்படுகிறார் என்பது தெரிந்தது. ரீச்சரின் தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதால் சற்றுநேரம் மௌனம் காத்தேன். பூச்செடிகளுக்குத் தண்ணீர் விட்டு வளவைச் சுத்தப்படுத்தும் பெண் வந்து,

“அம்மாவைக் கூப்பிடுங்கோ எழும்புவா.” என்றாள்.

“ரீச்சர்.”

மெதுவாகக் குரல் கொடுத்தேன். எழும்புவதாகத் தெரியவில்லை. மீண்டும்,

“ரீச்சர் நான் தீபன் வந்திருக்கிறன்.”

“ஓம், ஆரது ?”

கண்களைத் திறக்காமலே கேள்வி மட்டும் வந்தது.  “நான் தீபன்.” கண்களைத் திறந்து, நித்திரைத் திகைப்பு நீங்காமல் பார்த்தார்.

“உந்தக் கதிரையில் இரன். ஏன் நிக்கிறாய்?”

“ஓம் நான் இருக்கிறன் ரீச்சர்.”

கதிரை ஒன்றை இழுத்து அவருக்கு முன்னால் போட்டுக்  கொண்டு இருந்தேன். தொழில், குடும்பம், பிள்ளைகள் பற்றி ஆரோக்கியமான உரையாடல் இடம்பெற்றது. ரீச்சருடன் கதைக்கும் போது பள்ளிக்காலத்தின் பசுமையான நினைவுகள் மனதில் படர்ந்தன.

“வாறகிழமை முருகனுக்குக் கொடியேற்றம்.”

ரீச்சர் சொல்லவும் கோயில் மணி அடித்தது. முருகன் தன்னுடன்தான் இருக்கிறார் என்பது போன்ற மகிழ்ச்சி பொங்க,

“அப்பா முருகா நீ தான் துணை.” கோயில் இருக்கும் திசையை நோக்கிக் கும்பிட்டார்.

“சரி ரீச்சர் எல்லாம் நல்லாய் நடக்கும், நான் வரப்போறன்.”

நான்  விடைபெறப் போவதை விளங்கிக் கொண்ட ரீச்சர்,

“இஞ்ச வா………. கொஞ்சிவிடு.” இரண்டு கைகளையும் என்னை நோக்கி நீட்டியதும் நான் குனிந்து அவவின் முத்த மழையில் நனைந்தேன்.

ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை நிர்ணயிப்பதில் மரணமும் முக்கியமானது என்பார்கள். ரீச்சர் குறையொன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் அனுபவித்துச், சொந்த மண்ணில் வந்து மரணித்தது அவவின் நிறைவான வாழ்க்கையின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.

நினைவுகளோடு சம்பவ இடத்தை நெருங்கினேன். கோபம் தீருமட்டும் யாரையோ அடிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு முன்னால் வந்த சைக்கிளை மறித்து,

“தம்பியவை என்ன நடந்தது ?”

“இடம் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டு வாங்கிக் கட்டுகினம் போய்ப்பாருங்கோ.” பதில் சொல்லியவாறு போனவர்களை எனக்;கு யாரென்று விளங்கவில்லை.

அந்த இடத்தை நான்; நெருங்கிய போது ஒரு பெரும் யுத்தம் நடப்பது போல அமர்க்களமாயிருந்தது. வாகனம் ஒன்று எறிகணையில் சிக்கிச் சிதறி உருக்குலைந்த உடலைப் போல பரிதாபமாகக் கிடந்தது. அதில் வந்த இருவர் தப்பியோடி விட மற்றைய இருவர் அபிஷேகம் ஆராதனையோடு நல்ல சாத்துப்படியில் பொலிவுற்று இருந்ததைப் பார்க்கச் சகிக்கவில்லை. ‘பொலிஸ்’ வாகனம் வந்து அடித்தவர்களையும், அடிபட்டவர்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது.

“இனி உயிருள்ள வரையும் ஏமாத்துப்பண்ணிக் கொண்டு இந்த ஊர்ப்பக்கம் ஒருவரும் தலை வைத்துப் படுக்கமாட்டினம்.” அங்கு நின்ற பெரியவர் ஊர் ஒற்றுமையைப் பற்றி மார்தட்டிக் கொண்டார்.

“வெளிநாட்டுக்காரர் வந்தால் ஏமாற்றிப் பறிக்கலாம் என்ற நினைப்பு இனி யாருக்கும் வராது” என்றவரை இடைமறித்து,

“வெளிநாட்டுக்காரரும் அறிவு கெட்டதனமாய், மரணஅறிவித்தலுக்குச் சுயவிபரக்கோவை நிரப்பினது மாதிரி எல்லாத் தகவல்களையும் கொடுத்தால் அவங்களுக்கும் வாசிதானே. பிள்ளையளின் பெயர்கள், வாழும் நாடு, தொலைபேசி இலக்கம் எல்லாம் பாத்து விட்டு வருவங்கள் தானே…? இனிமேல் வெளிநாட்டுக்காரரும் இப்படியெல்லாம் போடப் பயப்பிடுவினம் நல்ல பாடம்.” என்றார் இன்னொருவர்.

வாகனத்தில் வந்த நால்வர் தாங்கள் நடத்தும் ஊடகத்தில் ரீச்சரின் மரண அறிவித்தல் போட்டதாகவும் அதற்கான பணம் பதினையாயிரம் ரூபாவைத் தரும்படியும் கேட்டு வந்திருக்கிறார்கள்.

“உங்கள் ஊடகத்திற்கு நாங்கள் அறிவித்தல் தரவில்லை தகவல் தந்தவர் யார் ? குமார் தான் தகவல் கொடுத்தவர். இதோ நிற்கிறார் நீங்கள் இவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா?”

என்ற கேட்டபோது, குமார் இவர்களோடு நான் தொடர்பு கொள்ளவில்லையென ஒரேயடியாக மறுத்துவிட்டான். வந்தவர்கள் மரண அறிவித்தலை ‘மெபை’லில் பதிவுசெய்த ஒலிப்பதிவினை ஒலிக்கவைத்து,

“இதைக் கேளுங்கள். இது யாருடையது? எப்படி எங்களிடம் வந்தது?” என்று கேள்விகளை அடுக்கினார்கள்.

“மரியாதையாகப் போய்விடுங்கள். எப்படி வந்தது என்பதைக் காட்டுவம். தாங்கமாட்டியள் …”

வாக்குவாதம் நீடித்தது. வந்தவர்கள் மதுபோதையில் வந்திருந்ததினால் சொல்லிலும், செயலிலும் நிதானமற்றிருந்தார்கள். கெட்ட வார்த்தைப் பிரயோகங்களுடன். அங்கிருந்த பெண்களுக்குத் தமது கெட்டித்தனத்தைக் காட்டப்    போயிருக்கிறார்கள். இதனால், ஊரார் கூடித் தங்களின் கைவரிசையை இவர்களுக்குக் காட்டியிருக்கிறார்கள்.

“வழக்குப்போட்டால் நட்டஈடு இலட்சக் கணக்கில் வரும். இதைவிட அவர்கள் கேட்ட பதினையாயிரம் காசைக் கொடுத்திருக்கலாம்.” கருத்துப்பரிமாறல்;கள் பலவாறாக எழுந்தன.

“எங்கட காலத்திலை இழவு சொல்லித் தானே செத்த வீடு செய்தனாங்கள். இப்பதான் கண்டறியாத அறிவித்தல்கள் வந்து மனுச வாழ்க்கையைத்; தலைகீழாக்கிப் போட்டுது. கையொழுங்கைகள் ஒண்டும் தவறவிடாமல் விடியப்புறத்தில இளவட்டங்கள் ‘காலஞ்சென்றுவிட்டார்’ என்ற இழவு சொல்லும் சத்தங்கேட்டு செத்தது யாரென்று அறிவதற்குத் தூக்கக் கலக்கத்திலும் காதுகொடுத்துக் கேட்டு விட்டுத் துடிச்சுப் பதைச்சுச் செத்தவீட்டுக்குப் போன காலங்கள் பழங்கதையாய்ப் போச்சுது.” கந்தசாமியிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.

“மாமா இப்பவும் ஊர்ப் பொடியள் இழவு சொல்லுறவங்கள் தானே. உங்கட காலத்தில கலியாணம் கச்சேரி எல்லாம் ஊரோட மட்டும் இருந்தது. இப்ப  ஊர்விட்டு ஊர் போய் கலியாணம செய்யினம். நேற்றுப் பிறந்ததுகளும் வெளிநாட்டு மோகத்தில விழுந்தடிச்சு ஓடுதுகள். அறிவித்தல் இல்லாமல் சாத்தியப்படுமே?”

“கண்டறியாத வெளிநாட்டுப் பயணத்தாலை எல்லாம் பாழாய்ப் போச்சுது அதை விடு.” கந்தசாமி மாமா அடிமடியைத் தடவி புகையிலைச் சுருட்டை எடுத்துக்கொண்டு,

“பிள்ளை நெருப்பெட்டியைத் தா. சுருட்டுப் பத்தப் போறன்.”முன்னால் நின்ற ரீச்சரின் கடைசி மகளிடம் கேட்டார். “இந்தாங்கோ மாமா.” தீப்பெட்டியைக் கொடுத்த தங்கம் குட்டிப் பிரசங்கம் செய்யத்; தொடங்கினாள்,

“பதினையாயிரம் ரூபா கொடுத்திருக்கலாம் தான். அது பெரிய காசில்லை. நாடு நல்லாய்க் கெட்டுப்போச்சு. களவு, பொய், அநியாயம் எல்லாம்; தலைவிரிச்சாடுது. நாமும் பயந்து பயந்து கள்ளனையும் ஏமாத்துக்காரனையும் உருவாக்கத் துணை போகக்கூடாது. ஏமாத்திறவனுக்கு பதினையாயிரம் கொடுத்து ஏமாறுவதை விட ஏமாற்றினால் கிடைக்கும் தண்டனை இது  என ஒரு பாடம் படிப்பித்திருக்கிறம். அதற்காக நட்டஈடு கொடுப்பது தப்பில்லை.”

“பிள்ளை ! வாகனத்தை நொருக்கியாச்சு. அடிதடிகாயங்கள் வேறு, வந்தவர்கள் செல்வாக்கானவங்கள போலத் தெரியுது. வழக்கு விசாரணையெனத் தொடங்கினால் எப்படியும் மூன்று இலட்சத்தைத் தாண்டும்.”

“அதுக்கென்ன செய்யிறது மாமா ?  இழந்துதான் சிலதைச் சாதிக்க முடியும். தங்கத்தின் குரலில்  இழப்பை ஏற்பதற்கான அழுத்தம் தொனித்தது. அதனை உணர்ந்துகொண்டதற்கு அடையாளமாக அவளைப் பார்த்துத்; தலையசைத்துவிட்டு வீடு நோக்கி நடக்கிறேன்.

ராணி சீதரன்-இலங்கை

ராணி சீதரன்

(Visited 369 times, 1 visits today)