கேலியாகிப்போன நேர்காணல்கள்-ஆசிரியர் குறிப்பு

வணக்கம் வாசகர்களே ,

மீண்டும் ஒரு சங்கதியுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி. அண்மையில் எனது பார்வையில் பட்ட நேர்காணல்கள் தொடர்பாக சில கருத்துக்களை இந்த ஆசிரியர் குறிப்பின் மூலம் பதிவு செய்ய விழைகின்றேன்.

என்றுமே நேர்காணல்கள் என்பவை ஒரு காலகட்டத்தையும் அதில் நடைபெற்ற மானிட வாழ்வியலையும் தர்க்க ரீதியாக விவாதித்து கலந்துரையாடலுக்கான வெளியை அதிகரித்து வந்திருக்கின்றன. அதில் வாசகனின் நுகர்ச்சி என்பது, கனதியான விடையங்களை உள்வாங்கியும் அவனது மனதை விசாலிக்கவும் செய்தது. இதற்கு உதாரணமாக சுபமங்களாவில் வெளியாகியிருந்த நேர்காணல்களை சொல்லமுடியும். எதிர் எதிர் தளங்களை சேர்ந்த இலக்கிய ஆளுமைகளை தமது நேர்காணல்மூலம் ஒரேசேர அமரவைத்து இலக்கியம், சமூகம், அரசியல் என்ற கனதியான விடயங்களை பேசவைத்தது சுபமங்களா. அந்த நேர்காணல்களில் தனிநபர் துதிபாடல்களோ இல்லை தனிநபர் தாக்குதல்களையோ அவதானிக்க முடியவில்லை.  அத்துடன் நேர்காணல்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன என்பதும் அவற்றின் தொழில்பாடுகளில் ஒன்று. அவற்றில் தவறான சங்கதிகள் ஆவணப்படுதலை நேர்மையான வாசகர் என்றுமே சகியார். இதுவரையில் நேர்காணலின் பாரம்பரியங்கள் இவ்வாறே இருந்து வந்துள்ளன. அவ்வாறான நேர்காணல்கள் இந்த நடுவிலேயே கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையான நேர்காணல்களே பரந்துபட்ட வாசகப்பரப்பை சென்றடைந்துள்ளன.

ஈழத்திலே பல இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்கள் வெளியாகியிருக்கின்றன. அவை தொகுப்புகாளாகவும் வெளியாகியிருக்கின்றன. அவை பல கனதியான செய்திகளையே வாசகனுக்கு சொல்லி சென்று இருக்கின்றன. ஆனால் இப்பொழுது வருகின்ற நேர்காணல்களை நோக்குமிடத்து வெறும் அயற்சியே மிஞ்சுகின்றது.  இந்த வகையான நேர்காணல்களில் அதற்குரிய இலக்கணமும் இல்லை, இலக்கியமும் இல்லை.

எங்கே ‘நேர்காணல் இலக்கியம்’ என்கின்ற பகுப்பு கேலிக்கு உட்படுத்தப்படுகின்றதோ என்கின்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது. இதற்கு அண்மையில் ஈழத்துப் படைப்பாளிகளால் கொடுக்கப்பட்டிருந்த நேர்காணல்களை சொல்ல முடியும். அவற்றில் தனிமனித வழிபாடும், தனிமனித தாக்குதல்களும், தன்முனைப்புகளுமே மிகுந்து இருப்பதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் நேர்காணலை கொடுப்பவரது இலக்கியம்/ எழுத்து சார்ந்த வறுமையையும் அவதானிக்க முடிகின்றது. அல்லாவிடில் ஈழத்து விமர்சனத்துறையையும் அதன் முன்னோடிகளான பேராசிரியர் சிவத்தம்பி ,கைலாசபதி போன்றவர்களுடன் எழுத்துறையிலேயே இன்னும் சரியாகவே நடக்க முயலாத இரு இளம் தலைமுறையினருடன் ஒப்பீடு செய்து இவ்வளவு தூரத்துக்கு தாயகத்தின் விமர்சனத்துறையைக் கேலிக்குட்படுத்த முடியுமா என்ன? அத்துடன் இன்னுமொருவரோ ஒருபடி மேலே சென்று தான் ஒருவன் தான் ஈழத்து இலக்கியத்துறையை தாங்கிப்பிடிப்பவன் என்று மார்தட்டுகின்றார். இவர்களுக்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறு வழியொன்றும் தெரியவில்லை. அத்துடன் இவ்வாறான நேர்காணல்கள் வெறும் முதுகு சொறிதலுக்கு உதவுமேயொழிய கனதியான விடயங்களை வாசகர்களுக்கு சொல்லி நிற்காது. இந்தவகையான கேலிக்குரிய நேர்காணல்களுக்கு நடு தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கின்றது. நன்றி

கோமகன்

பிரதம ஆசிரியர்

நடு குழுமம்

(Visited 176 times, 1 visits today)