‘நினைக்க வைக்கும் மரணங்கள்’-பத்மா சோமகாந்தன் நினைவுக்குறிப்புகள்- ராணி சீதரன்

ராணி  சீதரன்பிறப்பு  இருந்தால்,  இறப்பு  இருக்கும்  என்பது  மாற்றமுடியாத  விதி.  ஆனாலும,;   சில  மரணங்கள்  மனதில் நின்று  நிலைத்து,  இறப்பின்  துயரத்தையும்  நிரப்ப  முடியாத  இடைவெளியின்  கனதியையும்  சுமக்க வைப்பதாக  அமைந்து  விடுகின்றன.  நிமிர்ந்த  நன்னடை,  நேர்கொண்ட  பார்வை,  நிலத்தில்  யார்க்கும் அஞ்சாத  நெறிகளும்,  திமிர்ந்த  ஞான  செருக்கும்…  கொண்டு  திகழ்ந்தவர்  அமரர்  பத்மா  சோமகாந்தன்.

இவர்  03.05.1934  ஆம்  ஆண்டு  பஞ்ச  நதீஸ்வரக்  குருக்கள்  தம்பதிகளுக்கு  நான்காவது  பெண் பிள்ளையாகப்  பிறந்தார்.  இன்றைய  காலம்  போல்  அன்றைய  காலம்  பெண்களுக்குச்  சகல சுதந்திரத்தையும்  கொடுக்கவில்லை.  பெண்  என்பவள்  இப்படித்தான்  இருக்க  வேண்டும்  என்று  அளவு கோல்களைக்  கொண்டு  அவள்  அசைவுகளை  அளந்து  எடுத்து  விமர்சிக்கக்  காத்திருந்த சமூகத்தினையும்,  கட்டுப்பாடும்  ஆசாரமும்  மிகுந்த  பிராமணக்குடும்பத்தின்  வாழ்வியல்  முறைகளையும் மீறிக்கொண்டு  வெளியேறுவதற்கான  துணிச்சல்  அவரோடு  கூடப்  பிறந்தது  என்று  தான்  கூறவேண்டும். பிராமண  குலத்தில்  பிறந்த  பெண்பிள்ளையை  அடுத்த  வீட்டு  வாசலுக்குப்  போகாமல்  கவனமாக வளர்த்த  அந்தக்  காலத்தில்  மேடையேறிப்  பேசுவதற்கு  வீட்டில்  அனுமதி  கொடுத்திருக்க  மாட்டார்கள். குடும்பத்தில்  மூத்தவராக  இருந்த  அண்ணா  அவருக்குக்  கட்டுப்பாடுகள்  போட்டார்.  அதையும்  மீறி வெளியிலே  செல்வதற்கும்,  கூட்டங்களில்  பேசுவதற்கும்  பெண்  சகோதரிகள்  ஆதரவு  கொடுத்தார்கள். அவரது  திறமையைத்  தட்டிக்  கொடுத்தார்கள்.  அதனால்,  பத்மா  அம்மா  கல்வியில்  முன்னேறினார். தான்  சின்ன  வயதில்  சுட்டித்தனமாக  இருந்ததாகவும், கல்வி  கற்கும்  போது  பல  போட்டிகளில் பங்குபற்றிப்  பரிசுகள்  பெற்றதாகவும்  கூறியுள்ளார்.

தனது  கல்வியை  முடித்த  பின்  ஆசிரியர்  சேவையில்  இணைந்து  ஆசிரியர்  கலாசாலைக்குச்  சென்று பயிற்சி  பெற்ற  ஆசிரியராகவும்,  பின்னர்  அதிபராகவும்  பணியினைத்  தொடர்ந்தார்.  பெண்கள் அனுபவிக்கும்  துன்பங்களையும்,  கொடுமைகளையும்  கண்டு  மனம்  நொந்தார். அவர்களின்  விடிவுக்காக ஆக்கபூர்வமான  பல  செயற்பாடுகளை  முன்னெடுத்தார்.  அரசியலில்,  ஆக்க  இலக்கியத்தில்,  சமூக சேவைகளில்  பெண்கள்  முன்னுக்கு  வரவேண்டும்  என்பதை  வலியுறுத்தும்  முகமாக கலந்துரையாடல்கள்,  ஒன்று  கூடல்கள்,  ஆய்வரங்குகள்  என்பவற்றை  ஒழுங்குபடுத்திப்  பெண்களுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்தினார். தான்  ஓர் ஆளுமை  மிக்க  பெண்ணாகத்  திகழ்ந்ததன்மூலம்   சாதித்துக்  காட்டி,  மற்றவரையும்  அவ்வாறு  செயற்படுவதற்கு  முன்மாதிரியாக  விளங்கியவர்,  2020  ஆம்

ஆண்டு  மகளிர்  தினத்திற்கு  வெளிவந்த  அவர்  எழுதிய  கட்டுரையின்  முடிவுரையாக  “எதற்கும்  நாம் சோர்ந்து  சலித்து  விடாமல்  உற்சாகமாக  ஆண்-பெண்  சமத்துவமான  பயணத்திற்குச் சமதர்மப்பூங்காவை  உருவாக்க  உழைக்க  வேண்டும்”  என  எழுதியிருந்தமை  இங்கு  குறிப்பிடத்தக்கது. இதனை  மகளிருக்கு  அவர்  விட்டுச்சென்ற  கோரிக்கையாகக்  கொண்டு  ஒவ்வொரு  பெண்ணும் செயற்படுவது  தான்  அவருக்குச்செலுத்தும்  அஞ்சலியும்,  நன்றியறிதலுமாகும்.

பத்மா  அம்மாவிடம்  நல்ல  தலைமைத்துவத்திற்கு  உரிய  எல்லாப்  பண்புகளும்  அமைந்திருந்தன. 10 வருடங்களுக்கு  முன்  ஒரு  சனிக்கிழமை  எனது  வீட்டுத்  தொலைபேசி  ஒலித்தது. ரிசீவரை கையில் எடுத்தேன்.  மறுபுறத்தில்  அம்மாவின்  குரல்  கேட்டது.  “நாளை  ஞாயிற்றுக்கிழமை.  ஏதாவது  வேலை இருக்கிறதா?”  என்றார்.  இல்லை  என்றேன் “சிங்கள  தமிழ்  எழுத்தாளர்” ஒன்றுகூடல்  சரஸ்வதி மண்டபத்தில்  நாளைக்கு  நடக்க  இருக்கிறது  என  இப்பொழுது  தான்  எனக்குச்  சொன்னார்கள்.  நேற்று வந்தவர்கள்  எல்லாம்  எழுத்தாளர்களாகி  விட்டார்கள்.  தமிழ்  எழுத்தாளர்கள்  பற்றி  இவர்களுக்கு  என்ன தெரியும்?  நாளைக்கு  நான்  கேட்கத்தான்  இருக்கிறேன்.  கோபத்தில்  அவரது  வார்த்தைகள்  சூடாக வெளிவந்தன.  நாங்கள்  போகாவிட்டால்  உள்ள  இடமும்  இல்லாமல்  போய்விடும்.  கட்டாயம்  வாரும். உமது  பெயரையும்  கொடுத்திருக்கிறேன்  என்றார்.  மறுநாள்  அவருடன்  நானும்  சேர்ந்து  போனேன்.

இரண்டு  மூத்த  சிங்கள  எழுத்தாளர்கள்  முன்னாலே  வந்தார்கள்.  நட்புறவோடு  அவர்களுடன் சிங்களத்திலும்,  ஆங்கிலத்திலும்  உரையாடிய  அம்மா  தனது  மனக்குறையையும்  அவர்களிடம் வெளிப்படுத்தினார்.  அவர்கள்  முன்னால்  நின்றவரைக்  காட்டி  இவர்தான்  எங்களுக்குத்  தகவல்கள் தந்து  நிகழ்வு  ஒழுங்குபடுத்த  உதவியவர்  என்றபோது  அவர்  பக்கம்  அம்மாவின்  கோபம்  திரும்பியது.

இரண்டு புத்தகம்  எழுதியவர்கள் எல்லாம்  எழுத்தாளர்  பட்டியலில்  வந்திருக்கிறார்கள்,  தமிழில்  மூத்த எழுத்தாளர்கள்  பலரின்  பெயர்களைக்  காணவில்லை.  தமிழ்  எழுத்தாளர்களை  உமக்குத்  தெரியாதா? தெரியாவிட்டால்,  தெரிந்தவர்களிடம்  கேட்டுப்  பெயர்களைக்கொடுத்து  இருக்கலாம்  தானே  எனத்  தனது எதிர்ப்பினை  வெளிப்படுத்தினர்.

அவர் ஏசும்வரையும்,  குறிப்பிட்ட  நபர்  மறுபேச்சின்றி  மௌனம்  காத்தார்.  அவசரமாக  பெயர்  தரும்படி கேட்டார்கள்  அதனால்  கொடுத்திருந்தேன்  என  மிகவும்  பணிவாக  அவர்  சொன்ன  போது  உங்களின் அவசரத்திற்கு  உண்மையான  எழுத்தாளர்  தலைமறைவாகி  உங்களுக்குத்  தெரிந்தவர்கள்  தான் நினைவில்  வருவார்களோ?  இனிமேல்  இப்படி  நடந்தால்  நாங்கள்  ஒருவருமே  வரமாட்டோம்.  நீங்களே நடத்துங்கள்  என்று  காரசாரமாகச்  சொன்னதும்,  தவறு  செய்தவர்  அம்மாவை  விட்டுப்  பிரியாத சின்னப்பிள்ளை  போல  அவர்  அருகிலேயே  நின்று  கொண்டதைக்  கவனித்தேன்.  அந்த  ஒன்றுகூடலில் பல  தீர்மானங்கள்  எடுக்கப்பட்டன.  மிகவும்  சந்தோசமாக  விடைபெற்றோம்.  அதன்  பின்னர்  என்ன நடந்தது  என்பது  பற்றி  அம்மாவிடம்  நான்  கேட்டு  அறியவில்லை.  அவரும்  விலகியிருக்கலாம். ஏனெனில்  அதுதான்  நான்  கலந்துகொண்ட  இறுதி  நிகழ்வாக  இருந்தது. இங்கே  கவனிக்கவேண்டிய  விடயம்  அம்மாவின்  நேர்மை,  தவறைத்  தட்டிக்  கேட்கும்  துணிச்சல்,

இவைமட்டுமன்றி  மன்னிப்பதும்,  மறந்து  விடுவதும்  அவருக்கே  உரிய  தனியான  ஆற்றலாக அமைந்திருந்தன.  ஏனெனில்,  நிகழ்ச்சி  முடிந்து  விடைபெற்று  வீடு  திரும்பும்  போது  யாரையெல்லாம் பேசினாரோ  அவர்களோடு  பகிடி  சொல்லி  சிரித்துக்  கதைத்துக்  கொண்டு  வருவதைப்  பார்த்து  நான் வியந்து  கொண்டேன். புதுமைப்பிரியையாக  அம்மா  தனது  இலக்கியப்  பயணத்தைத்  தொடர்வதற்கு உறுதுணையாக  வாய்த்தவர்  அவரது  கணவன்  அமரர்  சோமகாந்தன்  அவர்கள்  என்றே  கூறவேண்டும். இருவரும்  இலக்கியத்துக்கு  மட்டுமல்ல,  சமூகத்திலும்  பல  அறிவுஜீவிகளை உருவாக்கியிருக்கின்றார்கள்.  நேரம்  கிடைக்கும்போதெல்லாம்  அம்மாவுடன்  நிறைய  விடயங்களைக் கலந்துரையாடுவேன்.

ஊருக்குப்  போனால்,  பெண்கள்  சும்மா  இருப்பார்களா?  புருசன்  இல்லாமல்  பொட்டு  வைத்திருக்கிறாள் பாருங்கோ  என  என்னை  வினோதமாகப்  பார்ப்பார்கள். ஆனால், கேட்கப்  பயந்து  என்னிடம் கேட்க மாட்டார்கள். “நான்  இல்லாவிட்டாலும், நீர் பொட்டுப் போட  வேண்டும்“ என்று அவர்  எனக்குச் சொன்னார். பொட்டுப்  போடுவதன்  காரணம்  தெரியாதவர்களின்  மூடக்கொள்கைகள்  பற்றியோ,மற்றவர்கள் சொல்வதைப்  பற்றியோ  எனக்கு  அக்கறை இல்லை என்பார்.  என்றும்  அழகு  குறையாத தோற்றத்தோடும்  இளமையோடும் அவரைக் காணும்போது  மகிழ்ச்சியாக  இருக்கும்.

நோய்  வந்தால்,  மனிதனைப்  பலவீனமடையச்  செய்து  விடும்.  இறுதிக்  காலங்களில்,  தனக்கு  வந்த நோயைக்  கூட  ஒரு  பொருட்டாக  அவர்  நினைக்கவில்லை.  கடந்த  வருடம்  தமிழ்ச்சங்கத்தில்  நடந்த அறிமுக  விழா  ஒன்றிற்கு  அம்மா  நூல்  அறிமுகம்  செய்வதற்கு  அழைக்கப்பட்டிருந்தார்.  எனக்குப் பக்கத்தில்  இருந்தவர்  சோர்வாகக்காணப்பட்டார். இன்று  எனக்கு  முடியாமல்  இருக்கிறது.  மேடையில் ஏறி  நின்று  என்ன  பேசப்  போகிறேன்  எனத்  தெரியவில்லை  என்று  சலிப்புடன்  சொன்னார்.  நீங்கள்

இப்படிச்  சோர்ந்து  போகலாமா?  மேடையில்  ஏறியதும்  பேச்சு  அருவி  போலக்  கொட்டப்  போகிறது. கைதட்டல்களோடு  தான்  இறங்கி  வருவீர்கள்  என்றேன்.  கையை  இறுக்கிப்  பிடித்து  நீர்  சொன்ன  பிறகு தைரியம்  வந்த  மாதிரி  இருக்கிறது  என  எழும்பிக்  கம்பீரத்தோடு  நடந்து  சென்றார்.  அழகாகப்   பேசினார்.  பேச்சைக்  கேட்டவர்கள்  பாராட்டினார்கள்.  “எனக்கே  ஆச்சரியமாக  இருந்தது.  நானா பேசினேன்?”  எனச்  சிறுபிள்ளை  போல  மகிழ்ச்சி  பொங்கக்  கூறினார்.  அது  அவருக்குரிய பெருந்தன்மையாகும்.

சாதிக்கப்  பிறந்தவர்களுக்கு  வயது,  முதுமை,  தனிமை,  நோய்  எதுவுமே  ஒரு  பொருட்டல்ல.  அம்மா மரணிக்கும்  போதும்  வாசித்த  புத்தகம்  கையில்  இருந்திருக்கிறது.  பத்மா  சோமகாந்தன் தடைக்கற்களை  எல்லாம்  படிக்கற்களாக்கி  வாழ்ந்து  காட்டினார்.  அமரரின்  வழியில்  பெண்கள் பயணிக்க  வேண்டும்  என்பதையே  அவரின்  வாழ்க்கை  நமக்குப்  போதிக்கின்றது.

ராணி  சீதரன்-இலங்கை

ராணி சீதரன்

(Visited 58 times, 1 visits today)