கண்ணீர் அஞ்சலி -சிறுகதை-ராணி சீதரன்

ராணி சீதரன்அந்தக் கண்ணீர் அஞ்சலி வினித்தாவின் காலடியில் கசங்கிக் கிடந்தது. நேற்று அவளைப் பார்க்க வந்த பள்ளித் தோழிகள் வீசியதை இப்பொழுது கவனமாக எடுத்துப் பிரித்தாள் மாலதி. எழுத்துகள் தெளிவில்லாமல் கசங்கலில் பதுங்கிக் கொண்டிருந்தன. அது வழமைக்கு மாறாக எழுதப்பட்டது என்பதை அதைப் படிக்கும்போது  புரிந்துவிடும். அதன் உள்ளடக்கத்தின் சாராம்சம் துயரம் கலந்தது. அந்தக் கடுதாசியை எடுத்துப் படித்துத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள அவள் முனைந்தாலும் மனது அதற்கு இடங்கொடுக்க மறுத்தது.

“இதைப் படிச்சுத் தான் என்னத்தைச் செய்ய?”

அலுத்துக் கொண்டவளாய் அதை மீண்டும் கசக்கித் துர எறிந்தாள். வினித்தா புலம்புவது கேட்டது. இரவெல்லாம் நித்திரையில்லாமல் திரிந்தவள் பொழுது விடியும் போதுதான் கண்ணயர்ந்தாள். கோழியுறக்கம் கொண்டு அருண்டு எழும்பியிருக்கிறாள் என்பதை  அவளிடமிருந்து வந்த அனுக்கம் வெளிப்படுத்தியது.

“கடவுளே ஏன் என்னைச் சோதிக்கிறாய் ? நூன் என்ன பாவம் செய்து பிறந்தேனோ?  ஏன் இப்படி நடந்தது?”  அடுத்தடுத்து எழுந்த  வினாக்கள் அவள் மனதை அலைக்கழித்தன. மலர்ந்த பூவைப்போல அந்த வீட்டை மகிழ்ச்சியால் நிரப்பும் வினித்தாவுக்கு ஏதேனும் நடந்தால்;….? இருவரும் சேர்ந்து சாகலாம்; என்பதைத் தவிர வேறு வழியெதுவும் அவளுக்குத் தெரியவில்லை. மரணத்தின் தூதுவனைப் போல காற்றில் அசைந்து முன்னோக்கி வந்த அந்தக் கண்ணீர் அஞ்சலி அவளை மேலும் பயமுறுத்தியது. ஏமாற்றமும் இயாலாமையும் சேர்ந்து அடிவயிற்றில் தீயாய்ப் பற்றித் தகித்தது.

விடைபெற்ற நிம்மதிக்கும், நிரந்தரமாகிவிட்ட சோகத்துக்கும் புதுவிதமான கண்ணீர் அஞ்சலியை அவளின் அந்தராத்மா இசைக்கத் தொடங்கியது. சைக்கிள் சில்லுகளின் நகர்வின் தொடர்ச்சியில் இருக்கும் பின்பற்றலாய் அவளுக்கும் வினித்தாவுக்கும் இடையிலான நெருக்கம் பிணைந்திருந்தது. நேற்றுவரை அந்த நம்பிக்கையின் பிடி தளரவில்லை. இன்று, இந்தக் கணத்தில் அவளின் எதிர்காலம் சூனியமாகிப் போனதை அத்தாட்சிப்படுத்தியபடியே வினித்தாவின் விசும்பல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு விளைவிற்கான காரண காரியங்கள் நியாயமானதாக வரையறுக்கப்பட்டிருக்கலாம். ஒருவர் நீதியென்று வாதிடுவதை மற்றவர் அநீதியாகக் குரலெழுப்பப் பூரண உரிமையிருக்கிறது. இதனைக் கடவுள் செய்த குற்றமாகக் கருதி ஆறுதலடைவது மட்டும் தான் இந்நேரத்திற்குரிய பரிகாரமாக எண்ணி மாலதி தனது மனதைத் தேற்றமுயன்று, தோற்றுப் போனது தான் கண்ட மிச்சமானது.

கண்ணுக்குத் தெரியாத கிருமியால் மனிதன் படும் பாடு சொல்லி மாளாது. நொடிந்து போன இந்தச் சூழலை நினைத்தாவது கடவுள் கொஞ்சம் கண் திறந்திருக்கலாம். மனம் திரும்பத் திரும்ப இழுத்துக் கொண்டு போய் அவளை ஒரு எல்லைப் புள்ளியில் நிறுத்தியது. இதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? விகாரப்பட்ட தோற்றங்கள் கண்முன்னே வரிசை பிசகாது வந்து நின்றன. மாலதி ஆற்றாமையால் சுவாசத்தை இழுத்து நீண்ட பெருமூச்சை விட்டபோது அழுத்திக்கொண்டிருந்த மனப்பாரம் கொஞ்சம் விடைபெற்றது போலிருந்தது.

கிழிந்த ஆடைக்குள்ளிருந்து வெளிப்படும் வெற்றுடம்பைப் போல பூச்சுக் கொட்டுண்ட அந்தச் சுவரில் இடைக்கிடை செங்கல் எட்டிப்பார்த்துச் சிரித்துக் கொண்டது. அதற்குக் கீழே மூலை விளிம்புகள் சிதைந்த  ஓலைப்பாயிலே சுருண்டு கிடந்தாள் மாலதியின் ஏகபுத்திரியான வினித்தா. மாலதியின் சாயம் போன வீட்டுச் சட்டைகள் கண்ணபிரானின் அருளாய் அவளின் கால்களைக்  காவல் செய்தன. நேற்று வரையும் அவளைப் பற்றிக் கட்டி வைத்திருந்த அதி உச்சமான கற்பனைக் கோட்டை இடிந்து விழுந்தது என்பதை ஞாபகப் படுத்துவது போல அடிக்கொரு தடவை வினித்தா புலம்புவதும் வாய் பிதற்றுவதுமாகக் கிடக்கிறாள். முனகல் சத்தம் பாய்ந்து வரும் ஏவுகணையாக அவளின் இதயச் சுவர்களில் மோதிப் பயத்துக்குள்ளாக்குகிறது.

மாலதிக்கு இன்னமும் முப்பத்தைந்து வயது முடியவில்லை. காண்டமும், கைரேகை சாத்திரமும் அவளின் கலியாணத்திற்குப் பிறகு தான் ‘குருச்சந்திர யோகம்’ இருப்பதாக அடித்துச் சொன்னதை நம்பினாள். மனம் நிறைந்த கனவுகளோடு வாழ்க்கையில் புகுந்தவளை வலிந்து வந்து இழுத்து ஒட்டிக் கொண்டது விதவைக் கோலம். வயதும் தனிமையும் பலரை அவள் பக்கம் அனுதாபம் கொள்ளச் செய்தது. வழி தெரியாமல் துயரத்தில் கரைந்தாள். ஊரும் உறவும் உதவவேண்டும் என்ற பயத்தில் ஒதுங்கி நின்று அவளை வேடிக்கை பார்த்தது. முடிவாகத் தற்கொலைக்கு முயன்று அதிலும் தோல்வியடைந்த போதுதான், இறுதிக்கட்ட யுத்தத்தில் செய்த ஒப்பந்தம் போல எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறி அவளுக்குள் முளைகொண்டது.

விளங்காத செய்யுளை விலக்கிவிட்டுப் படிக்கும் மாணவர்களைப் போல வினித்தாவைப் பார்த்ததுமே முகத்தைத் திருப்பிக் கொள்ளும் பள்ளித் தோழிகளிடம், உயிரையும் தருவேன் என்ற பாவனையில் நெருங்கிப் போகும் அவளை அன்போடும் அக்கறையோடும் அரவணைத்துப் பழகுவதற்கு முன்வருவோர் அருந்தலாக இருந்தார்கள.

“வினி ! உன்னுடைய கொப்பியைக் கொஞ்சம் தாவேன். ரீச்சர் ‘நோட்ஸ்’ வேகமாய்ச்  சொல்லுவா. என்னால எழுத முடியேல்ல. நீ நல்ல வடிவாய் எழுதுவாய்”

சாலினி குழையடித்துக் கொண்டு வரும் போது தாராள மனத்தோடு வினித்தா கொடுப்பாள். எதையும் தருவேன் என்னையும் உங்களில் ஓருத்தியாகச் சேருங்கள் என அவளின் மனம் கெஞ்சுவதை அவதானித்தப் பார்ப்பவருக்கு அப்படியே விளங்கிவிடும். சாலினியின் கணநேர முகமலர்ச்சி அந்த நேரத்தில் அவசரமாக அவளிடமிருந்து விடைபெறும். மற்ற நேரங்களில் ஆயிரம் வேலைகளோடு ஓடுகிறேன். மீண்டும் உதவி தேவைப்படும்போது உனது பக்கம் திரும்பிப் பார்ப்பேன் என்பதை நுட்பமாக உணர்த்தி விடுவாள்.

‘நீ ஏழை. அதிகம் ஆசைப்படாதை. ஒதுங்கிக் கொள். தொலைக்காட்சி நாடகத்தையோ முகநூல் பதிவையோ ; விளாசித் தள்ளும்போது. நீ என்ன சொல்லுவாய்?’ பேந்தப் பேந்த’ முழிப்பாய் அதைவிடப் பேசாமல் இருப்பது மேல் அவளின் உள்மனம் குத்திக்காட்டும் போதெல்லாம்,

‘என்னிடம் படிப்பு இருக்குது. நான் சாதிப்பன் பார்.’

மனதோடு சவால் விடுவாள். ஒரே வகுப்பில் படிப்பவர்கள்  ஒதுக்கி வைக்கும் போது அது பசிக் கொடுமையை விட மோசமானதாக இருக்கும். தனிமைப்படுதலும், தாழ்வுச் சிக்கலும் வினித்தாவைப் பலவீனப்படுத்தினாலும், தன்னைத் தானே சமாதானமாக்கி மீண்டெழுவாள். பாசத்தைக் காட்டும் பண்புள்ள உறவாய்  தமிழ் அவளோடு துள்ளி விளையாடித் தோழமை கொண்டது. பேச்சு, கவிதை, விவாதம் எல்லாவற்றிலும் வினித்தா முதலிடத்தைப் பெறுவாள். அவள் பரிசுகளோடு வரும்போது மாலதியின் மனதில் மின்னல் கீற்றின் வெளிச்சம் தோன்றி மறையும்.

சட்டத்தரணிகள் போடும் ‘கோட்’ மீது அவளுக்குத் தனிக்காதல் எப்படி வந்ததோ தெரியாது.

“சட்டத்தரணி வினித்தா ! சொல்லும் போதே நல்லாய்த் தான் இருக்குது. அம்மா சொல்லுங்கோ.”

மாலதியும் கிளிப்பிள்ளையாகி ‘சட்டத்தரணி வினித்தா’, ‘சட்டத்தரணி வினித்தா’ எனச் சொல்லிக் கொண்டிருப்பாள்.

“சரி போதும் போதும்.”

தாயின் வாயிலிருந்து உச்சரிக்கப்படும் அந்த வார்த்தைகளை வலிமை வாய்ந்த மந்திரச் சொற்களாக எண்ணி மகிழ்வாள். எதிர்காலத்தில் தான் ஒரு சட்டத்தரணியாகி வந்து என்ன செய்வேன் என்பதை அவளின் மனம் பட்டியல் போடும். ஏழைகளிடம் அன்பு காட்ட வேண்டும். வறியவரைத் தள்ளி வைக்காது அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். திறமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்…. இந்த எண்ணங்களைப் பதியமிட்டு வளர்ப்பதற்கு அவள் பெற்ற அனுபவப் பாடங்கள் உதவின.

ஏழையின் பக்கத்து நியாயத்தை நிலை நிறுத்திக் குற்றவாளிகள் தண்டனை பெறவும், நிரபராதிகளை விடுதலை செய்யவும் சட்டம் உதவவேண்டும் என்பதைப் பொருளாகக் கொண்ட அவளின் விவாதங்கள் பலத்த கைதட்டல்களைப் பெற்றன.

வினித்தாவிற்கு அம்மா தான் எல்லா உறவுமாக அவதாரமெடுப்பாள். அவளுக்;குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்வாள். சின்னப் பிள்ளைக்குப் பின்னும் முன்னும் திரிந்து உணவு ஊட்டுவது போலப் பொறுமையாக ஊட்டி விட்ட பின் தான் ஓய்வாள். தாயின் பாசம் மற்றவர்களின் அலட்சியத்தைப் போக்கும் மருந்தாகவும் மாறியது. வினித்தா சோர்ந்து போகும் சந்தர்ப்பங்களில் மாலதி வேறொரு பாத்திரத்தில் புகுந்து கொள்வாள்.

“அம்மா ! நேத்துக் கதைச்ச சாலினி கோவமாய்ப் போறாள். முதலாம் பாடம் சந்தேகம் கேட்ட தேனு கடசிப் பாடம் நான் ஏதோ தேவைக்குக் கூப்பிட முகத்தைத் திருப்பிக் கொண்டு போறாள். வகுப்பில என்னோட ஒருத்தரும் கதைக்கிறேல்லை. சிலவேளை பாடக் கொப்பியளைக் கேட்டாலும் தரமாட்டினம்;. எனக்குக் கவலையாக இருக்கும். என்னைத் தொற்று நோயாளி மாதிரித் தள்ளி வைக்கினம். என்னை மட்டும் ஒதுக்கிப் போட்டு எல்லாரும் இருந்து கதைப்பினம். சிரிப்பினம். நான் பக்கத்தில போனால் எழும்பிப் போயிடுவினம். அதால நான் தனிய இருப்பன். எனக்குப் பள்ளிக்குடம் போக விருப்பமில்லை”.

வினித்தா சொல்லி முடிக்கும் வரையும் மாலதி குறுக்கிடாமல் கேட்பாள். வயிற்றிலிருந்து தொண்டை வரை ஏதோ ஓடித்திரிpயும. மெதுவாக அவளின் தலையை வருடுவாள். அறிவுமுத்துக்களால் அபிசேகம் செய்து அபிமானத்துக்குரிய ஆசிரியராகி விடுவாள்.

‘செல்லக்கட்டி’ என்பது அன்புப் பெருக்கில் அவள் சொல்லும் அமுத வார்த்தை.

“பொறாமையிருக்கும் போட்டியிருக்கும். என்ரை செல்லக் கட்டிக்கு இது விளங்காதோ?”

மார்போடு அணைத்து முத்தமிடுவாள்.

“இவற்றையெல்லாம் வென்றால் தான் ‘லோயர்’ வினித்தா கனவு நனவாகும். ”

அம்மா சாதுரியமாக அவளின் இலட்சிய மரத்தின் கீழ் நிறுத்தி விடுவாள். அவளுக்கு மீண்டும் தொடங்கும் மிடுக்கு.

வினித்தா பாடசாலைக்குப் போகும் போது ‘கன்ரீ’னுக்குக் கொடுக்கும் வடைப் பார்சலும் தயாராக இருக்கும். அதைக் கையில் எடுக்கும் போது அவளின் மனது விம்மி அழும். யாரும் கண்டுவிடக்கூடாது என்ற வேண்டுதல், அதை ஒப்படைக்கும் வரை தொடரும். அம்மா அதிகாலையில் எழும்பிச் சுட்டுக் கொடுக்கும் உழைப்பை மதிக்க மனதைப் பக்குவப்படுத்தினாலும் அலட்சியங்கள் அவளைப் பலவீனப்படுத்தும்.

பக்கத்துத் தெருவில் உள்ள கனகம்மா, அழைக்கும் போது அவளின் வீட்டிற்குச் சென்று வளவு கூட்டுவதும், சின்னச் சின்ன உதவிசெய்து வருவதும் மாலதியின் பகுதிநேர வேலையாகியது. இது அவளின் சிக்கனமான வாழ்க்கையின் வரவு செலவுக் கணக்கைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவியது. எந்தக் கஸ்டத்தையும் மகளுக்குத் தெரியப் படுத்தாது தனக்குள் அனைத்தையும் புதைத்துக் கொண்டவள் மகளின் படிப்புக்கு இடையூறு வரக்கூடாது என்பதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினாள்.

கனகம்மாவுக்குப் போன வருசம் பவளவிழா கொண்டாடிய கதையை அவள் பாலகாண்டம் பாடி அரங்கேற்றத் தொடங்கியிருந்தாள். அவளின் வயதோடு ஆகக்குறைந்தது ஐந்து வயதையாவது பொன்னம்பலத்திற்குக் கூட்டிப் பார்த்தால் தான் அவரின் வயது சரியாக இருக்கும். சில வேளைகளில் வயதுக்கும் செயலுக்கும் பொருத்தமில்லாத வாலிபக்கால நினைவுகளை வரவழைத்துக் கொள்ள எத்தனிக்கும் பொன்னம்பலத்தாரை நினைக்கும் போது மாலதிக்குச் சிரிப்பும் வரும். அனுதாபமும் உண்டாகும். அவருக்கு எதிர்மாறான அறுவைக் கத்தி கனகம்மா.

“கேளனடி பிள்ளை, என்ரை எல்லாப் பிள்ளையளும் பவளவிழாவிற்கு வெளிநாட்டிலயிருந்து வந்தவையள்…. “

தொடங்கினாள் என்றால் அந்தக் “கின்னஸ்” சாதனையைச் சொல்லி முடிக்கும் போது மாலதி வேலை முடிந்து வீட்டிற்குப் போக ஆயத்தமாகி விடுவாள். கதை முடிந்தால் தான் அவள் போக அனுமதி கிடைக்கும். இடைக்கிடையே,

“கேக்கிறியோ பிள்ள ?”

அவள் தவறாமல் வைக்கும் தவணைப் பரீட்சைக்கு, அக்கறையாகக் கேட்பவளைப் போலப் பாசாங்கு பண்ணுவாள். பள்ளிக்கூடம் விடுவதற்கு அடித்த மணியைப் போல கதை நிறுத்தப்படும்போது விட்டால் போதும் என்று திரும்பிப் பார்க்காது விடைபெறுவாள். கனகம்மா, சீக்கிரமாகப் பவழவிழாத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைப்பாள் என்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவளுக்குத் தென்படவில்லை.

வினித்தாவின் பெறுபேறு அவளைச் சாதனைப் பெண்ணாக்கியது. பாராட்டு மழையில் நனைந்தாள். சட்டத்தரணிக் கனவு நனவாகப் பலர் ஆசீர்வதித்தார்கள். மாவட்ட நிலையில் முதலிடம் பெற்ற பெருமையோடு உயர்தரக் கலைப் பிரிவில் இணைந்தாள்.

“பிள்ளையள் தமிழ்ப் பாடத்தை படிக்காமல் விடுங்கோ. இலக்கியங்கள், இலக்கணம், வரலாறு இப்படி ஏகப்பட்ட பாடஅலகுகள் இருக்குது. ‘பாஸ்’ பண்ணுறதும் கஸ்டம். அதனால கணனிப் பாடத்தைப் படியுங்கோ. அது உங்களுக்குப் பிரயோசனமாகும். இலகுவாக “ஏ” சித்திபெறலாம்.”

ஆசிரியரின் ஆற்றுப்படுத்தல் வினித்தாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவளின் பேச்சிலும் மூச்சிலும் கலந்த தமிழைப் பிரித்து வைக்கும் கல்வியை வெறுத்தாள். எப்படி அதனைத் தொடர்ந்து படிக்க முடியும் என்ற கவலை தொற்றிக் கொண்டது. அம்மா இதனை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பது தெரியும். ரீச்சர் தமிழ் படிக்க முடியாது என்று சொன்ன கதையைத் தாயிடம் ஒப்புவித்தாள்.

“உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் ? …..”

கம்பரின் அவதாரமாக ரீச்சரிடம் விரைந்தாள் மேகலா.

“ரீச்சர் ! கல்லறைக்குள்ளே இருப்போருக்கும் காதிருக்குது.

‘சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும். என்றன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்’ என்ட பிடிவாதத்தோட படிக்கிற வினித்தாவைப் போல பிள்ளையளின் ஆசையில மண் அள்ளிப் போடாதேயுங்கோ. எல்லாப் பிள்ளையளும் தாய் மொழியைப் படிக்க வேணும். அப்பதான்  இனம், பண்பாடு,அறியலாம். அப்பதான்  கடந்து வந்த பாதையளைப் புரிஞ்சு அதையெல்லாம் கட்டிக் காப்பினம். இல்லாட்டி கண்டதே காட்சி கொண்டதே கோலமாய்ப் போயிடுவினம்.”

மேகலாவின் உணர்ச்சி மிகுந்த பேச்சைக் கேட்டு ஊமையாகிப் போன ரீச்சர் தனது பக்க நியாயத்தை முன்வைத்தாள்.

“அம்மா நாங்கள் தமிழ்ப் பாட ‘ரீச்சர்’ தான். ஆனால் ஏன் படிப்பிக்க விரும்பல்லை என யோசிச்சுப் பாருங்கோ கெட்டிக்காறப் பிள்ளையள் விஞ்ஞானம், கணிதம் படிக்கப் போக, மிஞ்சிய பிள்ளையள் தான் தமிழ் படிக்க வருவினம். இரண்டு வருசங்கள் துரத்தித் துரத்திப் படிக்க வைச்சாலும் நூறு வீதம் ‘பாஸ்’ கிடைக்காது. நாலுபேரில ரண்டு பேர் ‘பெயில்’ பண்ணினால் அதிபர் எங்களுக்கெல்லே மங்களம் பாடுவார். ஏங்கட பாடத்தின் சித்தியின் வீதமும் குறைஞ்சு போகுது. இதால ஆருக்கு லாபம்? சொர்க்கத்துக்குக் கூடப் போய் வரலாம் தமிழில ‘ஏ’ சித்தி எடுப்பது சிம்ம சொப்பனம்தான். சிலவேளை வினித்தாவின் இலக்கை அடைய இது தடையாயும் இருக்கும்.”

குட்டிப் பிரசங்கம் நடத்தி ஓய்ந்த ரீச்சரைப் பார்த்த மேகலா,

“பிள்ளை விரும்புவதைப் படிப்பியுங்கோ. நீங்கள் விரும்பியதைப் பிள்ளை படிக்க முடியாது. வினித்தாவ தமிழில ‘ஏ’ சித்தி எடுக்க வைப்பது என்ரை பொறுப்பு.”

மகளின் திறமையை நம்பி வாக்குறுதியை வீசி விட்டாள். வருங்காலத்தில் தமிழ் படிக்கப் பிள்ளைகளே இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் அவள் முன்னே பேய் போலத் தலை விரித்தாடியது. மாலதிக்குத் தமிழ் படிப்பித்த கோபாலபிள்ளை ரீச்சர் கண்முன்னே தோன்றி மறைந்தார். வகுப்பிற்குள் வந்ததும் வராததுமாய்…..

“என்ன சாப்பிட்டீங்கள் ? ”

கேள்வி முதலில் வரும். விதம் விதமாகக் கதைகள் சொல்லுவார். கதைக்கும் பாடத்துக்கும் தொடர்பு இருக்கும். அபிநயமும் பாடலும் நடிப்பும் கலந்துதான் தமிழ்ப் பாடம் நடக்கும். வகுப்பில் சிரிப்பும் கும்மாளமும் நிறைந்திருக்க நாற்பது நிமிடம் எப்படிப் போனதென்றே தெரியாமல் அடுத்த பாடத்திற்கு மணியடித்து விடும். ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் தமிழால் ஏற்பட்ட பிணைப்புப் பாசமாக மாறியிருந்தது. தோல்விக்குப் பயந்து பின்வாங்கும் போர் வீரனாக மாறிய தமிழ் கற்றலும், கற்பித்தலும் ஓர் அபாய மணியின் அச்சுறுத்தல் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் உணர வேண்டிய தேவையை மாலதி உணர்ந்தாள்.

“வினி ! உன்ரை கெட்டித்தனத்தை நம்பி ரீச்சருக்கு வாக்குக் கொடுத்திட்டன் கவனமாய்ப் படி.”

“அம்மாவின் ஆசை நிச்சயமாய் நிறைவேறப் போகுது பாருங்கோவன் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.”

வினித்தா மாலதியின் சபதத்தை நிறைவேற்றுவேன் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தாள். ஒருகால் உடைந்த மேசையும்  பின்னலறுந்த கதிரையும் அவளின் படிப்புக்குத் துணையிருக்கும் உற்ற உறவுகளாயின. சில வேளைகளில் கெந்தித் தொட்டு விளையாடும் சின்னப்பெண்ணாய் மாறும் மேசையைச் சரிப்படுத்துவதில் தோற்றுப் போய் விடுவாள். பக்கத்து வீட்டுக் காணியில் அத்திவாரக் கட்டுக்காகப் பறித்து விடப்பட்டிருந்த செங்கல்லுகள் ஐந்தாறை ஆபத்துக்குப் பாவமில்லையென்ற சமாதானத்தோடு கொண்டு வந்தாள். கல்லுகள் செய்த தியாகத்தில் மேசை உருப்பெற்றது.

கதிரைக்குள் குந்தியிருந்தால் போதும், வடிதட்டில் ஊற்றிய தேநீரைப் போலத் தங்கு தடையின்றி உடலின் கீழ்ப்பகுதி பின்னலறுந்த கதிரைக்குள் வேகமாக விழுந்துவிடும். எஞ்சிய சக்கையைப் போல இடுப்பின் மேற் பகுதி மரச்சட்டத்தில் மாட்டுப்;பட்டுக் கிடக்கும். பலதடவை ஆழம்பார்த்து மீண்ட வினித்தா பொறுமையிழந்து போனாள். தாயின் பழைய சட்டைகளையும் சேலைகளையும் சேர்த்து ஒரு தலையணையைச் செய்து கதிரை மேல் போட்டபோது, அது வசதியாக இருந்து படிக்க உதவுவதாக அவளோடு ஒப்பந்தம் செய்து கொண்டது.

கனகம்மா கழித்துவிட்ட போத்தல்கள் தகரப்பேணிகள் மேகலா வீட்டில் இடம் பிடித்துக் கொண்டு வண்ண வண்ணமாய்க் காட்சி தரும். மேகலா அவ்வப்போது கிடைக்கும் சில்லறைகளைச் சேர்த்து, கடலை, முறுக்கு, பகோடா, மிக்சர் இவற்றில் கண்ணில் படுவதைக் கிரமப்படி வாங்கி வந்து போத்தல்களை நிரப்புவாள். வினித்தா படித்துச் சோர்ந்து போகும் போதோ, அல்லது பசிக்கும் நேரத்திலோ நொறுக்குத் தீனியாக அவை பயன்படும்.

இயற்கை மனிதனைத் தனிமைப் படுத்தி வைத்துப் பாடம் படிப்பிக்கிறது. படிப்புத் தொல்லையில் இருந்து தப்பிய சந்தோசத்தில் பிள்ளைகளும், வேலையில்லாமல் ஓய்வாக வீட்டில் இருக்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்ட பெரியவர்களும் வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டனர். எல்லாம் என்னால் முடியுமென்ற மனிதன்; இப்போது என்ன செய்யலாம்? என்று தத்தரிகிட தித்தோம் போடுவதைப் பார்த்துக் ‘கொரோனா’க் குஞ்சு கைகொட்டிச் சிரிக்கிறது. பேச்சையும் மூச்சையும் நிறுத்து. அதை உனது கையாலே செய் என்று முகக்கவசத்தை அறிமுகப் படுத்திய ‘கொரோனா’ பற்றிய தத்துவ ஆராய்ச்சிகள் தொடரும் இந்தக் காலத்தில், பிள்ளைகளின் பரீட்சையை நடத்தி முடிப்பதென்று வெளிவந்த செய்தியும் ஆரோக்கியமானதாகத் தெரிந்தது. இதைச் சாட்டாக வைத்துப் பிள்ளைகள் கல்விக்கு முழுக்குப் போட்டுவிடும் ஆபத்தைத் தவிர்க்கலாம் என்பதினால் ஏகமனதாக அதற்கு வரவேற்பும் இருந்தது.

காலச் சூழலைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சியிலும் கையடக்கத் தொலைபேசியிலும் கற்பித்தல் நடைபெறுவது வினித்தாவுக்குத் தெரியும். அவள் அதைப்பற்றி மூச்சு விடாமலிருந்தாள். அவளின் வீட்டில் அந்த இரண்டும் பயன்படுத்த முடியாத பொருள்களின் வரிசையில் அடங்கி விட்டது. இல்லாத பொருள்களுக்கு அம்மா ஏங்கி, அந்த வசதியைச்செய்ய முடியவில்லையே என்ற கவலையில் வருந்துவாள். தாங்க மாட்டாள். இவை எதுவும் எனக்குத் தேவையில்லை என்னால் படிக்க முடியும் என்பதில் அவளின் உறுதி வலுத்தது.

மேசையை மூன்று பாடங்களுக்கு ஏற்றபடி பிரித்தாள். படிக்கும் நேரங்களும் பாடங்களும் அட்டவணையாகச் சுவரில் தொங்கியபடி அவளை உசார் படுத்தும்.

தீமையில் கிடைத்த நன்மையென்று சொல்லும்படி பல்வேறுவிதமான பரீட்சை வழிகாட்டல் வசதிகள் பெருகின. அதைச் சாதகமாக்கிப் பயன்பெறுவதற்கு வினித்தாவால் முடியாவிட்டாலும், கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு சுயகற்றலில் ஈடுபட்டாள். ஒவ்வொரு பாடத்தையும் படித்துக் கேள்விகளும் விடைகளும் எழுதினாள். நல்ல விளக்கமும் தெளிவும் கிடைத்தது. 1000 கேள்விகள் என்ற அவளின் திட்டமிடல் மிகவும் பயனுடையதாக இருந்தது. மூன்று பாடங்களுக்கும் 3000 கேள்விகள் கைவசம் இருந்தன. அவளின் விடாமுயற்சியால் பாடங்கள் பற்றிய விமர்சன நோக்கும் வளர்ந்திருந்தது. பிரத்தியேக வகுப்புகளுக்கு அலைந்தால் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்வதைத் தவிர வேறு பயன் எதுவும் இல்லை. ‘கற்றல் என்பது விளங்கிப் படிப்பது’ என்ற உண்மை அவளுக்குப் புலப்பட்டது.

இந்தமுறை இந்தக் கேள்வி வரும் என்ற தீர்க்க தரிசனத்தில் நம்பிக்கை கொள்ளாமல் என்ன வந்தாலும் எழுதக் கூடிய விளக்கம் உண்டானது. என்றாலும் பழக்க தோசத்தினால் சில பாடப் பகுதிகளில் குரங்குப்புத்தி தாவி;க் குந்திக்கொண்டதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

தமிழ்ப்பாடம் முதலாவது பகுதிக்குரிய பரீட்சை நடந்த போது அதற்கு விடையெழுதி விட்டு வந்த வினித்தா நிலத்தில் கால் இல்லாத பரவசத்தில் மிதந்து வந்து அம்மாவைக் கட்டி அணைத்து முத்த மழையில் குளிப்பாட்டினாள்.

“சரி சரி குதிக்காதே. இரண்டாம் பகுதியையும் இப்பிடிச் செய்யப்பார். போயிருந்து படி.”

மகிழ்ச்சியின் வெளிப்படுத்தலாகத் தாய்க்கு நளினம் காட்டிக் கொண்டு நகர்ந்தாள். அவளுக்குப் பிடிக்காத பகுதியென்றால் இலக்கிய வரலாறு தான். அது ஆழக்கடல் போன்று தொலை துரத்துக்குப் பயணிக்க வைப்பதாக உணர்ந்தாள். சங்ககாலமும் சோழர் காலமும் எதிர்பார்க்கைக்குரிய காலப்பகுதிகள் என்று சபதம் கூறிய ஆசிரியர்களின் வாக்குப் பலிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

அம்மா வீபூதியோடு முன்னால் வர, அவளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு  வினித்தா புறப்பட்டாள்.

இந்தப் பாடம் முடிந்தால்; போதும் எனது பிள்ளை மாவட்ட ரீயாக முதலிடம் பெறுவாள். ‘கம்பஸ்’ போவாள். பல்லைக் கடித்துக் கொண்டிருக்கக் காலம் பறந்து விடும். கறுப்புக் ‘கோட்’டுடன் அவள் அடிக்கடி கண்முன்னே வலம் வருவாள். பட்ட கஸ்டமெல்லாம் ஓடிவிடும். கற்பனை உலகின் சஞ்சாரம் மாலதியை உற்சாகப் படுத்தியது.

எல்லாம் முடங்கிப் போனதால் கைச்செலவுக்கும் அவளிடம் காசு இருக்கவில்லை படிக்கிற பிள்ளைக்கு நல்ல சாப்பாடு செய்து கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு பக்கத்து வேலியில் இருந்த முருங்கைக் கீரையை ஒடித்துக்கொண்டு நின்ற மாலதி,

“அம்மா ! அம்மா!! ”

அழைத்த குரலைக் கேட்டு என்னவோ ஏதோ எனப் பயந்து  ஓடிவந்தாள்.

“ஏன் திரும்பி வந்தாய் ? ”

மாலதிக்குச் சகுனம் பார்க்கும் பழக்கம் கூடிப்பிறந்ததால் எங்கிருந்தோ இனந்தெரியாத பயம் அவளிடம் வந்து அடைக்கலம் புகுந்தது.

“அம்மா முகக்கவசத்தை மறந்து போனன். எடுத்தாங்கோ.”

அவசரப்படுத்திய வினித்தாவிடம் முகக்கவசத்தைக் கொடுத்து விட்டுச் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பவள் போல நெஞ்சைத் தடவிக்கொண்டாள்.

பரீட்சை மண்டபத்தில் இருந்த மாணவர்கள் முகத்தில் தமிழ் ஒளி வீசியது.  முதலாவது வினாத்தாள் இலகுவானதாக இருந்ததைப் போல இதுவும்  இருக்கும் என்ற எடுகோளில் உண்டான நம்பிக்கை எல்லோரிடமும் பிரகாசத்தைப் பொழிந்தது. மாணவர்களின் அனுமதி அட்டைகளில் கையெழுத்து வாங்குபவர்களும், எழுதுவதற்கு விடைத்தாள் கொடுப்பவர்களுமாக மண்டபம் மேற்பார்வையாளரின போக்கு வரத்தினால்; சுறுசுறுப்பாகி இயங்கு நிலையில் இருந்தது. நேரந் தவறாமையோடு வினாத்தாள்கள் கைமாறின.

எதிர்பார்த்தது போல சங்ககாலம் வினாவாக வந்திருந்ததைப் பார்த்ததும், சங்ககாலம் கட்டாயம் வரும் என்று சொன்ன தமிழப் பாட ரீச்சரை நன்றியோடு மனதால் வாழ்த்தினாள். பட்டாம்பூச்சியாய் மனம் சிறகடிக்கத் தொடங்கியது. முதலாவது கேள்விக்கான விடைக் குறிப்புகள இப்பொழுதே எழுதிவிடு என்னை என மனதிற்குள் அணிவகுத்து வந்து துருத்திக் கொண்டு நின்றன.

“கேள்விகளை முதலில் வாசியுங்கள். எடுத்தவுடன் எழுதத் தொடங்காதீர்கள்.”

பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நினைவுக்கு வந்து எச்சரித்தது. அடுத்த கேள்வி யாப்புப் பற்றியது. சிதம்பர சக்கரமாகத் தோன்ற, நம்பிக்கை இழக்காது மற்றக் கேள்வியைப் பார்த்தாள். குறுந்தொகைப் பாடல்கள் ஐந்து பாடப் பகுதியில் இருக்கிறது. ஆனால் கலித்தொகை வந்திருக்கிறது. கண்ணில் பிழையோ என்பதை உறுதிசெய்வதற்குக் கண்களைக் கசக்கிக் கொண்டு; பார்த்தாள். தெளிவாகத் தெரிகிறது. குறுந்தொகையில் விழுந்து நீச்சலடித்த அவளுக்குக் கலித்தொகை பற்றிய கதையை யாரும் சொல்லித் தரவில்லையே. சந்தேகத்தோடு மீண்டும் கேள்வியைக் கண்கள் படமெடுத்துக் காட்டின. கலித்தொகை என்பதை மனம் அடித்துச் சொன்னதும் பார்வை மங்கியது. தலை இறுகியது. கையின் அசைவியக்கம் தடைப்பட்டது. தனக்கு என்னவோ நடந்துவிட்டது என்பதைக் கிரகித்துக் கொண்ட கணத்தில்; வினித்தா மயங்கிவிழுந்தாள். பரீட்சை மண்டபத்தின் அமைதி குலைந்தது.

வினாத்தாள் கொடுத்த அதிர்ச்சியின் விளைவென்பதை அங்கிருந்தவர்கள் புரிநது கொள்ள அதிக நேரம் எடுக்கவில்லை. பரீட்சார்த்திகளின் முகங்கள் பேயைப்பார்த்துப் பயந்த பாவனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.  மரண வீட்டில் ஒலித்த சோக கீதம் போல் பரீட்சை மண்டபத்தில் வினாத்தாளின் கைவரிசை துயரத்தைப் பத்திரப்படுத்தியிருந்தது.

பயத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் வினித்தா பேயறைந்த நிலையில் தவித்தாள் தடுமாறினாள். சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவி என்ற பெருமையோடு வீட்டிறகு அழைத்து வரக்கனவுகண்ட மேகலா, அழுகை பாதி, அரற்றல் மீதியாக ஆசிரியர்களின் கைத்தாங்கலில் கொண்டு வரப்பட்ட வினித்தாவைப் பார்த்தவுடன் இடிந்து போனாள். இதயத்தை யாரோ கசக்குவது போன்ற வலியை அனுபவித்தாள். ‘வாழாப் பிள்ளை தாயோடு’என்பதை ஏற்கும் மனத்திடத்தோடு குழந்தையைத் தாங்கி அணைப்பது போல தன்னோடு அணைத்துக் கொண்டாள். கடவுள் தொடக்கம்,எல்லோருக்கும் செலவில்லாமல் கிடைத்த விளையாட்டுப் பொருட்களாக நாங்கள்  படைக்கப்பட்டிருக்கிறோம்.வாய் புலம்ப, நிண்ட பெருமூச்சொன்று  மேகலாவிடமிருந்து வெளிப்பட்டது.

கண்ணீர் அஞ்சலியின் சாராம்சம் மாலதிக்கு மனப்பாடமாகியிருந்தது,

‘2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்ப்பாடப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் பலர் மண்டபத்தில் மயங்கி விழுந்தார்கள். சிலர் மனநிலை பாதிப்புக்குள்ளாகினார்கள். இந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் இறுதிக்கிரியைகள்  06.11. 2020 இல் அவரவர் வீட்டில் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செய்யுமாறு வேண்டுகின்றோம்.’

துயர் பகிர்வோர் 13ஆம் ஆண்டு கலைப்பிரிவு மாணவர்கள்.

நேற்று இந்தச் செய்தியைப் படித்து முடித்த மாணவர்களின் துயரம் நிறைந்த முகங்கள் மாலதியின் கண்களில் நிழலாடின. ‘கொரோனா’ தந்த இழப்புகளைப் போல பரிட்சையும் பலரின் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறது. மகளைத் திரும்பிப் பார்த்தாள்.

“அம்மா ! அம்மா!! சங்ககாலம் ….”

சொல்லி முடிக்க முதல் பாயிலிருந்து வெருண்டெழும்பிய வினித்தாவைப் பார்க்க மாலதிக்குச் சகிக்க முடியவில்லை. தலைவிரி கோலத்தோடு வீங்கிப்போன முகத்தைக் கையால் மூடிக்கொண்டு விசும்பினாள். அந்த விபத்திலிருந்து அவள் மீளவில்லையென்பதை   அவளின் தோற்றம் உறுதிப்படுத்தியது. மேகலா அவளைத் தன் மார்போடு அணைத்தாள். வினித்தாவின் கண்களிலிருந்து பொல பொலவென வழிந்த கண்ணீர்  மாலதியின் புறங்கையில் விழுந்து கிடந்த அவளின் கண்ணீர்த் துளிகளோடு சேர்ந்து சங்கமமாகியது.

தூரத்தில்  காற்று, கண்ணீர் அஞ்சலியை அங்கும் இங்குமாக அலைக்கழிப்பதை நீண்ட நேரமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. காற்றின் மிதமான வேகத்தில்  நிலையற்று அலைந்த கண்ணீர் அஞ்சலி திடீரென வீசிய பெருத்த காற்றிற்கு ஈடுகொடுக்க முடியாது எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துபோனது.

ராணி சீதரன்-இலங்கை 

ராணி சீதரன்

 

 

(Visited 252 times, 1 visits today)