செஞ்சிறை-சிறுகதை-அரிசங்கர்

அரிசங்கர்புருஷோத்தமன் வழக்கம் போல தன் இருசக்கர வாகனத்தில் அந்தத் தெருவில் திரும்பினார். மிதமான வேகத்திலேயே சென்றார். 11 மணி ஆகியதால் கடைகள் பாதிக்கு மேல் அடைக்கப்பட்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கடைகள் திறந்திருந்தன. இன்னும் இரண்டு தெருவை தாண்டிவிட்டால் புருஷோத்தமன் வீட்டை அடைந்துவிடுவார். ஆனால் அவருக்காக அவர் இப்போது திரும்பிய அதே தெருவில் எட்டு பேர் கொண்ட ஒரு குழு தனித்தனியாகப் பிரிந்து காத்திருந்தனர். அவர்களுக்கு அவரை அடையாளம் கண்டுபிடிப்பதில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. புருஷோத்தமன் எப்பவும் வெள்ளை சட்டையும், கருப்பு பேண்ட்டும், கையில் தங்க வண்ண கடிகாரமும், இரண்டு கைகளில் மோதிரமும், கழுத்தில் பட்டையாகச் சங்கிலியும், சட்டைப் பையில் தன் கட்சித் தலைவரின் புகைப்படமும் தெரியத் தான் எப்போதும் வலம் வருவார். அதனால் அவர் தெருமுனையில் திரும்பியதுமே சரியாக அடையாளம் காணப்பட்டார். தெருவின் நடுவே இரண்டு பக்கமும் பிரியும் குறுக்குச் சந்து அருகே அவர் வந்ததும், குப்பைத் தொட்டிக்குப் பின்னால் மறைந்திருந்த ஒருவன் வேகமாக அவர் வண்டிக்குக் குறுக்கே வந்தான். வேகமாக பிரேக்கை அழுத்திய அவர் நிலைதடுமாறி பின் சுதாரித்து அவனைத் திட்ட கையை நீட்டிய நொடி நாலாபுறத்திலிருந்தும் அவர்கள் தலையில் தலைக்கவசத்துடன் ஓடிவருவதைக் கண்டார், என்ன நடக்கப் போகின்றது என்பதை அவர் மூளைக்கு உறைக்கும் முன்னே கத்திகள் அவர் உடலை வெட்டியும், குத்தியும், தான் படைப்பின் நியாயத்தை நிரூபித்தன. வண்டியிலிருந்து சரியத்துவங்கியவரை கும்பலில் ஒருவன் தன் வைத்திருந்த கனமான ஒரு கத்தியால் அவர் தலையில் ஓங்கிப்போட்டான், சரிந்த அவர் மண்ணைத் தொடும்போது அவர் உடலில் உயிர் இல்லை. இவை அனைத்தும் சில நொடிகளிலேயே நடந்தது. வந்தவர்கள் எப்படித் தப்பித்தார்கள் என்று கூட அங்கிருந்தவர்களால் சரியாகச் சொல்ல முடியவில்லை. புருஷோத்தமனின் இரத்தம் தெருவை நனைக்கத் துவங்கியது.

பாரதி தன் பிள்ளைபேறின் நெருக்கத்தில் இருந்தாள். காலையில் கட்சி வேலையாக வெளியே சென்ற கணவன் இன்றும் வீடு திரும்பவில்லை. மீண்டும் ஒரு முறை கடிகாரத்தை பார்த்துக் கொண்டாள். மணி பதினொன்றைக் கடந்து விட்டிருந்தது. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் விளக்கை அணைத்துவிட்டனர். போனவர் எப்போது வருவார் எனத் தெரியவில்லை. அவர் எப்போதும் இப்படித்தான் சில நேரம் விடிந்ததும் தான் வருவார். பாரதியும் துவக்கத்தில் கட்சியில் இருந்தவள் அவளுக்கு இதெல்லாம் புரியும். அவ்வப்போது அவர் வீட்டில் கட்சியின் சிறு கூட்டங்களும், சித்தாந்த வகுப்புகளும் நடக்கும். அதையெல்லாம் அவள் விருப்பத்துடன் பங்கேற்பாள். கட்சியின் மற்ற உறுப்பினர்கள் அவளைச் சரிக்குச் சமமாக நடத்துவது அவளுக்குப் பெருமையாக இருக்கும்.

தன் கணவனை எதிர்பார்த்து, தூக்கமும் வராததால் வீட்டின் சுவர் அடுக்கில் இருந்த தன் கணவனின் புத்தகங்களில் ஒன்றை உருவி எடுத்தாள். அவள் கைகளில் லெனின் இருந்தார். அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து படிக்கத் துவங்கினாள். சில நொடிகளிலேயே அவள் வயிற்றில் குழந்தையின் அசைவுகள் தெரிய அவள் அதை ரசித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டின் கதவை வேகமாகத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தது போலிஸ். வந்தவர்கள் பத்துக்கும் மேல் இருந்தார்கள். அவர்களில் பாதிக்கும் மேல் உயர் அதிகாரிகள். நேராக பாரதி அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தவர்கள் அவள் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தனர், அவர்களில் ஒரு பெண் போலிஸ் கூட இல்லை. உயர் அதிகாரிகள் பாரதியை சூழ்ந்து கொள்ள, அடுத்த நிலை அதிகாரிகள் வீட்டைச் சோதனை போட, கீழ்நிலை அதிகாரிகள் அக்கம்பக்கத்தினரை விரட்டினர். பாரதி அதிர்ச்சியை கட்டுப்படுத்த முயன்றாள். அவள் அழுது கெஞ்ச வேண்டும் என அவர்கள் கண்கள் எதிர்பார்த்தது. அது நடக்காததால் அவர்களில் ஒருவர்,

“உன்ன விசாரிக்கணும் கிளம்பு” என்றார்.

பாரதி எதோ சொல்ல முயல,

“வாய மூடிகிட்டு கம்முன்னு வரணும்” என ஆள்காட்டி விரலை காட்டி எச்சரித்துவிட்டு அவள் கையை பிடித்து இழுத்துச் சென்று வண்டியில் ஏற்றினார். அருகில் இருந்த வாசல்களும், ஜன்னல்களும் இதையே பார்த்துக் கொண்டிருந்தன. கடைசியாக வெளியே வந்த போலீஸ்காரர் வீட்டைப் பூட்டி சீல் வைத்தார். போலிஸ் வண்டி வேகமாகச் சென்றதும், அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்து,

“நான் அப்பவே சொன்ன வீட்ட காலி பண்ணச் சொல்லி, நாளைக்கு நான் எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு வெளிய போவன்” என்று புலம்ப துவங்கியது.

போலிஸ் உயர் அதிகாரிகள் இரண்டு பேரும், பாரதியைக் கைது செய்த அதிகாரியும் தனி அறையில் அமர்ந்திருந்தனர். நான்கு நாட்களாகச் சரியாக துங்காத எரிச்சலில் இருந்தார் அந்த அதிகாரி

“இப்ப என்ன பண்ண போறீங்க” என்றார் மூத்த அதிகாரி

“சார், அவர்களை விசாரிக்கணும், புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரையும் அரஸ்ட் பண்ணிட்டோம். தனித் தனியே இருக்காங்க” என்றார்.

“ஆனா எனக்கு வந்த தகவல்படி இது உட்கட்சி பூசல்ல நடந்த கொலை. நாளைக்கு ஏதானா பிரச்சனை ஆகப்போது. அவங்க ரெண்டு பேரும் _ கட்சிகாரங்க வேற. போராட்டம் அது இதுன்னு விடிஞ்சதும் கிளம்பிடுவாங்க ” என்றார் மற்றொரு அதிகாரி.

“சார், செத்தது ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் தம்பி. அவங்க இத யூஸ் பண்ணிக்க பாக்கறாங்க, இத வேறமாதிரி டீல் பண்ணச் சொல்லி பிரஷர் அதிகமா இருக்கு” என்றார் கைது செய்தவர்.

“சரி என்ன மோட்டிவ் சொல்லபோறீங்க” என்றார் மூத்த அதிகாரி.

“சார், ஒன்பது மாசத்துக்கு முன்னாடி புருஷோத்தமன் பேக்ட்ரில வேலை பார்த்த நாலு பேர் விபத்துல இறந்துட்டாங்க, அதுக்கு அவர் சரியான நிவாரணம் தரல. அத எதிர்த்து கைது செய்யப்பட்ட நபர் தீவரமா போராடியிருக்காங்க. ஆனா புருஷோத்தமன் பிடிக்குடுக்கல, அதுக்காக பண்ணிட்டாங்கன்னு… ” சொல்லுக் கொண்டிருந்தவரை பாதியில் நிறுத்திய மூத்த அதிகாரி,

“சரி வருமா” என்றார்.

“இதுக்கு முன்னாடி இப்படிப் பண்ண ஹிஸ்ட்ரி இருக்கு சார்” என்றார்.

“சரி பார்த்து பண்ணுங்க. சாட்சிகள கரெக்டா ரெடி பண்ணுங்க. நீங்க கிளம்புங்க” என்றார். காவல்துறையின் உயர்மட்ட கூட்டம் அத்தோடு முடிந்து. அவர் வெளியே வரும்போது விடியத் துவங்கியிருந்தது.

பாரதி தன் கணவனைப் பார்க்க வேண்டும் என்று திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள், அவர்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் அவள் பதில் இதுவாகவே இருந்தது. அப்போதும் அங்கே ஒரு பெண் காவலர் கூட இல்லை. அங்கிருந்த கீழ் நிலை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைக் காண்பிக்க அவளைக் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டிருந்தனர். அதில் ஒருவர் துணை ஆய்வாளர் “நிறைய ஆம்பளைங்க கும்பலா வீட்டுக்கு வருவாங்களாம், உடனே உள்ள போய் கதவ சாத்திப்பியாம், என்ன குரூப் செக்ஸா” என்று கேட்டுவிட்டு சத்தமாகச் சிரித்தார்.

மற்றொரு அதிகாரி “ஆமா, துப்பாக்கி, வெடிகுண்டுலாம் எங்க பதுக்கி வெச்சிருக்க” என்றார்.

அவர்கள் பார்த்த திரைப்படத்தில் வந்த வசனங்களை எல்லாம் அவர்கள் உடல் மொழியில் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தனர். அனைத்துக் கேள்விக்கும் பாரதியின் ஒரே பதில் “என் புருஷன பாக்கணும்” என்பது தான்.

பாரதியைக் கைது செய்த அதிகாரி மதியத்திற்குப் பிறகு வந்தார்.

பாரதி தரையில் அமர்ந்திருந்தாள், உயர் அதிகாரி வந்ததும் மற்ற காவலர்கள் விரைப்புக்கு வந்தார்கள். அதில் ஒருவர் பாரதியை பார்த்து,

“ஏய்…ஐயா வந்திருக்காருல்ல ஏழுந்திருக்க மாட்ட..”என்றார்.

அதற்கு அவர் “பரவால்ல புள்ளதாச்சிய கஷ்டபடுத்தாதீங்க” என்றார். பிறகுச் சற்று யோசித்துவிட்டு “சாப்பிட ஏதனா தந்தீங்களா” என்றார்.

“இல்ல சார்” என்றதும்,

“ஏய் .. புள்ளதாச்சி பொம்பளயா… போய் எதனா வாங்கிட்டு வாங்க” என்றார்.

மற்ற காவலர்கள் வெளியேற, அவர் மட்டும் அங்கு இருந்தார். அவருக்கு மட்டும் ஒரு நாற்காலி போடப்பட்டது. அவர் பாரதியை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். பாரதியும் அவரையே இமைக்காமல் பார்த்தாள். அதில் துளியும் பயம் என்பதேயில்லை. அவர் நினைத்தார் “இவள் கெஞ்சவே மாட்டாளா…என் காலை பிடித்து அழுது உயிர்ப் பிச்சை கேட்கவே மாட்டளா.. அப்படிக் கேட்கும் வரை இவள விடக்கூடாது என்று மனதிற்குள் முடிவெடுத்தார். சிறிது அமைதிற்கு பிறகு அவர் பாரதியிடம்,

”எப்ப டெலிவரி டைம் தந்திருக்காங்கமா” என்று மிக மிக மென்மையாகக் கேட்டார்.

பாரதி “அடுத்த வாரம்” என்றாள்.

“உன் புள்ள நல்லபடியா ஹாஸ்பிட்டல்ல பொறக்கறதும், இல்ல இங்கயே ஜெயில்ல பொறக்கறதும் உன் கையில தான் இருக்கு. ஒழுங்கா கேட்கறத சொல்லிட்டா, போயிட்டே இருக்கலாம், இல்ல புள்ளையும் கிடைக்காது, புருஷனும் கிடைக்க மாட்டான் புரியுதா ” என்றார் முற்றிலும் வேறு ஒரு குரலில்.

பாரதி அமைதியாக இருந்தாள். அவர் அவள் முகத்தையே பார்த்தார். அவர் எதிர்பார்ப்பது அதில் இல்லை. அவர் தொடர்ந்தார்,

“உன்ன ஏன் அரஸ்ட் பண்ணோம்னு இப்போ தெரிஞ்சியிருக்கும். சொல்லு. அந்த கேங்குல இருந்தவங்க பேர்லாம் சொல்லு” என்றார்.

அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவள் பதில் சொல்லவில்லை. மாலை முடிந்து இரவு தூங்கும் நேரத்தில் இரண்டு பெண் காவலர்கள் வந்தனர். அவர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு புறப்பட்டனர். மதியம் அவர் கொடுக்க சொன்ன சாப்பாடு இரவே தரப்பட்டது.

பாரதிக்கு அந்த உணவு தேவைப்பட்டது. அவள் குழந்தைக்கு அது தேவைப்பட்டது. அவள் அதை எடுத்துச் சாப்பிட்டாள். அவளுக்குக் கணவனின் நினைவாகவே இருந்தது. கண்டிப்பாக அவரை அடித்து சித்ரவதை செய்திருப்பார்கள் என்று அவளுக்குத் தெரியும். தான் மட்டும் கர்ப்பிணியாக இல்லை என்றால் தனக்கும் அதுதான் நடந்திருக்கும் என்றும் தெரியும். இவர்கள் தங்களை விடப்போவதில்லை என்று உணர்ந்தாள். அவர்களை எதிர்க்கும் துணிச்சல் தன்னிடம் இருக்கிறது என்று நம்பினாள். அவள் இவ்வாறு யோசித்து எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

அடுத்த இரண்டு நாட்கள் கடுமையான விசாரணை நடந்தது. எந்த முன்னேற்றமுமில்லை. வெளியே போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. இனிமேல் முடியாது என்று பாரதியும் அவள் கணவனையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பதினைந்து நாள் காவலில் சிறைக்குச் சென்றனர். நீதிமன்றத்தில் அவர்கள் சில நிமிடங்கள் மட்டுமே சந்தித்துக் கொண்டனர் பேச முடியவில்லை. காவலர்கள் அதில் மிகவும் அக்கறை காட்டினர். பாரதி பெண் சிறைச்சாலைக்கும், அவள் கணவன் ஆண் சிறைச்சாலைக்கும் அனுப்பப்பட்டனர்.

சிறைக்கு அனுப்பட்ட இரவே பாரதிக்கு வலிவருவது போல் இருந்தது. அவள் தனி இருட்டறையிலே அடைக்கப்பட்டிருந்தாள். தரை மிகவும் சில்லென இருந்தது. குளிரும் கடுமையாக இருந்தது, வலி பொறுக்க முடியாமல் அவள் கத்த, சத்தம் கேட்டு சிறை அதிகாரிகள் ஓடிவந்தனர். பிறகு சிறை மருத்துவர் வந்தார். அவர் அவளை தீவிரமாக சோதித்துவிட்டு ”எப்ப வேணா டெலிவரி ஆகலாம், ஹாஸ்பிட்டலுக்கு போயிடலாம் ரிஸ்க் வேண்டாம்” என்றார்.

சிறை அதிகாரி யோசனையில் இருந்தார். அவர் தன் உயர் அதிகாரியிடம் பேசி உத்தரவுகள் வாங்க நள்ளிரவைக் கடந்து விட்டது. அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கிட்டதட்ட விடிந்தேவிட்டது. அவளுக்குப் பொறுக்க முடியாத வலி. அருகில் இருந்த மற்ற பெண்களிடம் சில செவிலியர்கள் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.

“படுக்கும் போது சுகமா இருத்துள்ள, இப்ப வலிக்கும்தான். சும்மா கத்தாத…” என்று ஒரு செவிலியர் தன் அருகில் இருந்த பெண்ணிடம் கூறிவிட்டுச் சென்றார்.

அதன் பிறகு பாரதி வலியைப் பொறுத்து கொண்டு அமைதியாகவே இருந்தாள். கண்களின் இருபுறம் கண்ணீர் வந்தவாறே இருந்தது. மற்றப் படுக்கையில் இருந்த பெண்கள் பிரசவம் முடிந்து சென்றனர். பாரதிதான் அங்கு இறுதியாக இருந்தாள். பின் மதியத்திற்கு பிறகு பாரதிக்கு பனிக்குடம் உடைந்தது. அவள் வலியால் துடித்ததால் அருகே இருந்த செவிலியர்,

“ம்மா. நல்லா முக்குமா” என்றார் பெண் மருத்துவர் ஒருவர் அருகில் இருந்தார், சிறுவயது பெண் அவளும் பாரதியை நன்றாக முக்கும்படி சொன்னாள்.

“இங்கபாரு…… நீ முக்காம இருந்தீனா குழந்த உள்ளயே தண்ணிய குடிச்சிட்டு செத்துரும். நல்லா முக்கு.” என்றார் செவிலி.

”அப்படித்தான்… இதோ வந்திடுச்சி. நல்லா முக்கு” என்றார். மருத்துவரும் தன் பங்குக்கு உதவ பாரதி இருந்த கொஞ்ச சக்தியையும் முழுக்கத் திரட்டி முக்கினாள். குழந்தை வெளியே வரச் சிரமப்பட, அந்தப் பெண் மருத்துவர் கட்டிலில் ஏறி பாரதிக்கு இருபக்கமும் காலைப்போட்டு வயிற்றை கீழ் நோக்கித் தள்ளினார். குழந்தை மெல்ல வெளியே வந்தது. சரியாக மாலை நான்கு மணிக்குக் குழந்தை பிறந்தது.

பாரதியுடன் உறவினர்கள் யாருமில்லாததால் ஒரு செவிலியர் பாவம் பார்த்து அவளுக்கு ஒரு காபி வாங்கிக் கொடுத்தாள். சரியாக ஏழு மணிக்கு பாரதி மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டாள். அவள் செல்லும் போது சிறையில் இரவு உணவு முடிந்துவிட்டதால் அவளுக்கு எதுவும் தரப்படவில்லை. அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது. அரை மயக்கத்தில் இருந்தாள். குழந்தை பிறந்ததும் அவளுக்குக் கொஞ்சம் பால் வந்தது. பிறகு அதுவும் வரவில்லை.

அவள் அதே இருட்டறையில் அடைக்கப்பட்டாள். குழந்தை திடீரென விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்தது. பாரதி திடுக்கிட்டு எழுந்தாள். தரை மிகவும் சில்லென இருந்தது. அவள் குழந்தையை தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள்.

குழந்தை தொடர்ந்து அழுதவாறே இருந்தது. பசிக்கு அழுகிறது என்று நினைத்தாள். கதவு அருகே வந்து கத்தினாள். சத்தம் வரவேயில்லை. அவளே மிகவும் பலவீனமாக இருந்தாள். இரண்டு முறை கத்தி அழைத்ததும் பெண் வார்டன் வந்து என்னவென்றாள். அவள் பால் தரும்படி கேட்க “எதுவானாலும் காலையில்தான்” என்று சொல்லிவிட்டு சென்றாள்.

பாரதிக்கு இப்போது அழுகையாய் வந்தது. கைது செய்தபோது இல்லாத பயம் அல்லது ஒழித்து வைத்திருந்த பயம் அனைத்தும் குதிரை பாய்ச்சிலாக ஓடி வந்தது. அவள் குழந்தையை அணைத்தவாறு சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். தன் ஆடைகளைத் தளர்த்தி தன் முலையைக் குழந்தையின் வாயில் திணித்தாள். அதில் சுத்தமாகப் பாலே வரவில்லை. முலையில் இருந்து வாயை எடுத்துக் குழந்தை அழ ஆரம்பித்தது. மீண்டும் முலையை எடுத்து குழந்தை வாயில் வைத்து இருக்க அணைத்துக் கொண்டாள். குழந்தை சற்று அமைதியானது. இரவு போகப் போகக் குளிர் அதிகமானது. குழந்தையை அப்படியே அணைத்தவாறே சுவரில் சாய்த்துக் கொண்டாள். அவள் மெல்ல நினைவிழந்தாள்.

மீண்டும் நினைவு திரும்பியபோது விடியத் துவங்கியிருந்தது. பாரதி எழுந்து சாரியாக அமர்ந்து கொண்டு குழந்தையைத் தூக்க முயன்றாள். குழந்தையின் உடல் சில்லென இருந்தது. அதன் வாய் பாரதியின் முலையைக் கௌவியவாறே இருந்தது, அவளுக்குப் பயம் பரவத்துவங்கப் பதட்டமாக குழந்தையின் தலையை இழுத்தாள். அதன் வாய் மிகவும் கஷ்டப்பட்டு அவள் முலையை விடுவித்தது. அவள் குழந்தையின் நெஞ்சில் கை வைத்து உலுக்கினாள். அதனிடம் எந்த சலனமுமில்லை. பாரதி கதறி அழத் துவங்கினாள்.

அரிசங்கர்-இந்தியா

அரிசங்கர்

(Visited 91 times, 1 visits today)