ரொய்லெட்-சிறுகதை-ப.கனகேஸ்வரன்(கே ஜி)

அது ஒரு சாயம் வெளுத்த பழைய பிளாஸ்டிக் நாற்காலி.  ஒத்த கால் ஒடஞ்சி அதுக்கு பின்னால ஒரு சவுக்கு கட்டை வச்சி நைலோன் கயிற்றால இறுகக் கட்டி இருந்த அந்த நாற்காலியில் அழுக்கு செருப்பு, கோப்பிக்  கலர் சாரத்தில் வெள்ளை கோடு ஒழுங்காக இறுக்கி கட்டாத அந்த சாறம். ஒரு கையால் பீடியையும் மறுகையால் கக்கூசுக்கு வருபவனினிடம் அறவிடும் பணத்தோடும் அப்பப்போ சாறத்தை அவிழ்த்து கட்டும் அவனது அவசரத்தில் ஒரு கெத்து இருக்கும். அவன் இரண்டே பொத்தான்கள் மட்டுமே போட்டிருப்பான். நெஞ்சு முடி தெரிய உள்ளே அழுக்கு பனியன். அழுக்கு பனியனுக்குள்ளே ஏற்கனவே வசூலித்த பணம் வைத்திருப்பான். அதனுள் ஒரு செல்போனும் கூடவே இருக்கும்.

எல்லாமே காசாகி போன நகரத்தில அந்தப் பிளாஸ்டிக் நாற்காலிகாரன் கக்கூசுக்குள்ள நுளைஞ்சாலே இருபது ரூவா அறவிடுறான். ஒண்டுக்கு போனாலும், ரெண்டுக்கு போனாலும், கைகால், முகம் கழுவ எல்லாத்துக்கும் பாரபட்சமில்லாத கட்டணம் தான். இருபது ரூபாய் கட்டணம் வசூலிப்பவனைக்  கடந்து நேரே உள்ளே நடந்து இடது பக்கம் திரும்பினால் ஆண்களுக்கான பகுதி. வலது பக்கம் பெண்களுக்கானது. முகப்பு வாசலிலேயே சுண்ணாம்பினால் மூக்கு, கண் ,வாய் மட்டுமே வரையப்பட்ட ஒரு முகம். அதுதான் ஆண்களுக்கான அடையாளமாம். கூடவே ஆண்கள் என்றும் தலைமுடியுடன் கண் மூக்கு வாயோடு கழுத்துக்கு மேல் வரையப்பட்ட முகம். கூடவே பெண்கள் என எழுதப்பட்ட முகப்பு. அதனைக்  கடந்து உள்ளே சென்றால் அந்த வாடை அதிகரிக்கும். தானாகவே வாய் எச்சிலை காறி உமிழும்.

மாட்டின் சாணத்தை அள்ளி வீடு முழுக்க மொழுகினால் ஒருவித மங்களகரமாய் இருக்கும். அவ்வளவு ஏன் மாட்டு பட்டிக்குள் நுளைந்தால் சாணி வாசனை. அதனைப் பழகினவர்களுக்கு லயிக்கச் செய்யும். ஆனால் இந்த மனித கழிவுகள் தான் எத்தனை நாராசமான நாற்றம்? தானாகவே எச்சிலைக்  காறி உமிழும் . நம் வாய்க்கு சக்தி இருந்தால் அந்த மூக்கை அறுத்துக் கொள்ளும். அந்தளவுக்கு நாற்றத்தின் கொடூரம்.

ஆண்கள் பகுதியில் உள் நுளைந்ததுமே இடது பக்கம் நெடுகலும் சிறிய “பக்”கட்டி இருக்கும். அது ஆண்களுக்கான சிறு நீர் கழிக்க வசதியாக இருக்கும். அதற்கு மேலே ஒரு எஸ்லோன் குழாயில் இருந்து சொட்டு சொட்டாக  வடியும் நீர்  இந்த பக்-இல் வலிந்து சிறு நீரோடு ஓடும். அப்படியே வலது பக்கம் திரும்பினால் வரிசையாக மலசலகூடங்கள். 1-10 என வரிசையான அவற்றின் கதவுகளில் இலக்கம் இடப்பட்டிருக்கும். முன்னரெல்லாம் அது பழைய இத்துபோன பலகையாக உடைந்து கிடக்கும். இப்போது பரவாயில்லை. எல்லாமே புது கதவுகள்.

கதவை திறந்து எட்டிப் பார்த்தால் முதன்முதலாக அங்கு போகிறவனுக்கு நாற்றம் வயிற்றை பிடுங்கி எடுக்கும். குடலை பிரட்டிக் கொண்டு வாந்தியே வரும் அளவுக்கு அதுவொரு  நரகம். சிலவேளை ரெண்டுக்கு போய் தண்ணீர் ஊற்றாமல் அப்படியே இருக்கும். சிலவற்றில் தண்ணீர் எடுக்கும் “பிளாஸ்டிக் கேன்” கூட இருக்காது. உட்கார்ந்து இருக்க உள்ளே கதவுக்கு தாழ்ப்பாள் இருக்காது. ஒற்றைக் கையால் முட்டுக் கொடுத்துக் கொண்டுதான் உட்கார்ந்து இருக்கணும். சில மலசலகூடத்தின் கதவுகள்  நம் முட்டிக்கால் அளவுக்கு மேல் தான் இருக்கும். உட்கார்ந்தால் எல்லாம் வெளியே தெரியும்.  இதனையும் சகித்துக் கொண்டு குந்தி எழுந்திரிக்க முதல் நாலைந்து பேர் கதவை கதவை திறந்து எட்டிப் பார்ப்பான். நகரத்தில் ஆள் இருக்கிறதோ இல்லையோ இந்தமாதிரியான இருளான பக்கங்களில் வாழும் உயிர்கள் பல இதுவே உலகம் என வாழ்ந்து மடிந்துவிடுகின்றன.

0000000000000000

ஒருகையில் பிளாஸ்டிக் வாளியும் மறுகையில் விளக்குமாறுமாக ஆண்கள் மலசலகூட பகுதிக்குள் நுளையும் அந்த கால்களில், ஒரு கருப்பு வளையம், தேய்ந்து போன ஒரு பாட்டா செருப்பு, கெண்டைக்  காலுக்கு மேல் பார்த்தால் அது ஒரு பெண்ணுடைய கால். ஆம்……… கெண்டைகால் வரை தெரியும் தூக்கிச்  செருகிய சேலையுடன் பருத்த கருத்த மார்பகத்துடன் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு. காதில் பெரிய தோடு. வாயில் அதக்கிய வெற்றிலை பாக்கு. நெற்றியில் ஒரு பெரிய குங்குமப்  பொட்டு. கொண்டை போட்ட கூந்தல் என்று பல அலங்காரங்களுடன் அந்த மலசலகூடத்தை சுத்தம் செய்கிற பெண். அவள் ஆண்கள் குறைவான நேரம் பாத்துத்தான் உள்ளே நுளைவாள்.

அவள் ஆண்கள் சிறு நீர் கழிக்கும் பக்கி முதல் தண்ணீர் தொட்டி தரை என்ன எல்லாம் கழுவிவிட்டுத்தான் மலசலகூடத்துக்குள் நுளைவாள். பொதுவாகவே  இறந்தவர் உடலை பகுப்பாய்வு செய்யும் ‘கொரனல்’ அந்த வேலையை தொடங்கும் முதல் குறைந்தபட்சம் ஒரு போத்தல் சாரயமவது குடித்திருப்பான். கூடவே ஒரு போத்தலும் கொண்டு வந்திருப்பான். ஏனென்றால் அந்த போதை இல்லாவிட்டால் எப்பேர்பட்டவனாலும் அந்த வேலையை செய்ய இயலாது. மனிதனாகப் பிறந்தவன் உயிரோடு இருக்கும் வரைக்கும் ஒவ்வொரு நாளும் குளித்து சுத்தமாக இருக்கிறான். ஆனால் இறந்த பின்னர் அவன் உடல் எத்தனை நாற்றம் அடிக்கும்? இந்த உடற்பகுப்பாய்வு செய்யும் ‘கொரனலாவது’ பரவாயில்லை. இந்தப்  பொது மலசலகூடம் கழுவும் அவர்களின் நிலைதான் பரிதாபம். இந்த மலசலகூடங்களை சுத்தம் செய்ய உள்ளே நுளையும் அந்த பெண்கூடவே இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அவள் ஏன் குடிக்கிறாள் என்று.

மலடலகூடங்களை சுத்தம் செய்வது கூட அவளுக்கு ஒருவித ஆத்ம திருப்தி கிடைக்கிறது. ஆனால் ஆண்கள் மலசலகூட சுவர்களை சுத்தம் செய்வது தான் அவ்வளவு கடினமாக இருக்கிறது. அந்த மலசலகூடங்களை சுத்தம் செய்யும் அவளுக்கு ஆண்கள் மலசலகூட சுவர்களில் ‘தொடர்புகொள்ளவும்’ என எழுதி இருக்கும் தொலைபேசி இலக்கங்கள் முழுவதும் யாரோ முகம் தெரியாத பெண்களுடையது என்பது தெரிந்த விடயம் தான். இதனைப்  பல பெண்கள் திட்டமிட்டே வாடிக்கையாளர்கள் ஊடாக புதிய வாடிக்கையாளர்களை அடைய எழுதி வைக்கிற நிலையும் உண்டு. சில தொலைபேசி எண்கள் பல குடும்ப பெண்களினதுவாகவும் இருக்கும். ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு பெண்ணை பழிவாங்க துடிக்கும் சில ஆண்கள் அந்த பெண்களின் தொலைபேசி இலக்கத்தை எழுதி வைத்து விடுகின்றனர்.

பெண்களின் பெயர்கள் மாத்திரம் எழுதி இருக்கும் சுவர்களில் பெண்களின் பெயரை வைத்தே சுய இன்பம் அடைந்து விட்டிருக்கிறார்கள். அங்கே பெண்களின் முகத்தை வரைந்த சுவர்கள் ஏராளம். விரைத்த ஆண்குறிகள் வரையப்பட்ட சுவர்கள் தாராளம். பெண்களின் பிறப்புறுப்பு, பெண்களின் உள்ளாடைகள், பெண்களின் மார்புகள், இப்படியாக பெண்களின் உடலை பற்றிய ஆண்களின் ஆராய்ச்சிகளையும் ஆண்களின் கலைத்திறனையும் இங்கே தான் பார்க்கலாம். இவை எல்லாம் அவளுக்கு மிகவும் பரிச்சையமானவையே. ஆனாலும் அந்த சுவரில் ஒரு உடல் பருத்த பெண்ணின் நிர்வாண உடலை வரைந்து, அதிலே அவளது மார்பகங்களில் ஒன்றை அளவில் பெரிதாகவும் இன்னொன்றை அளவில் கொஞ்சம் சிறிதாகவும் வரைந்து கையில் வாளியுடன் இருந்த அந்த உருவத்தின் மார்பு காம்புகளையும் பெண்உறுப்பையும் சிகரட்டினால் சுட்டும் அட்டூழியம் செய்து சுவரில் ஒழுகி இருந்த ஆணின் விந்து ஈரம் சொன்னது அந்த ஆணின் கொடூரத்தை. ஏதோ ஒருவகையில் அந்த ரொய்லெட் அவளது கற்பை காப்பாற்றித்தான் இருந்திருக்கின்றது.

 ப.கனகேஸ்வரன் (கேஜி)-இலங்கை

(Visited 143 times, 1 visits today)
 
ப.கனகேஸ்வரன்

ஆயிரம் ரூபாய் சம்பளமும் அய்யாயிரம் ரூபாய் கிடாயும்-கவிதை-ப.கனகேஸ்வரன்

ஆயிரம் ரூபாய் சம்பளமும் அய்யாயிரம் ரூபாய் கிடாயும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கிடச்சதுன்னா ரோதமுனிக்கு வெட்டி பூச வைக்கிறதா ஊர் மக்கா ஒன்னு கூடி நேர்ந்துகிட்ட முதல் வருஷம் […]