மொழிபெயர்ப்பு நேர்காணல்- ரஷா ஒம்றான்-மிஸ்பாஹுல்-ஹக்

“குருதி மட்டுமே இப்போது சிரியாவின் ஒரே நினைவு, இப்போது எல்லோரும் அதன் அழகை அழிக்கச் சதி செய்கிறார்கள்”

ரஷா ஒம்றான்

கல்வியறிவு மற்றும் கலாச்சார நுணுக்கங்களிற்குப் பெயர்பெற்ற மலாஜா கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற ரீதியில் உங்களுடைய குடும்பம் மற்றும் வளர்ந்த காலம் பற்றியும் சொல்ல முடியுமா ?

என் கிராமம் சிறியது மற்றும் அழகானது. 1940 களில் இருந்து பல கலாச்சார நிகழ்வுகளிற்கு நன்கு அறியப்பட்ட இடமாக அமைந்திருந்தது. சுற்றியுள்ள கிராமங்கள் பழமைவாதக் கோட்பாடுகள் மற்றும் சமூக அதிகாரத்திற்கு உட்பட்டவை.

எங்கள் சிறிய சனத்தொகையில் (மக்கள்தொகையில்) மலாஜா மக்கள் அறிவு, கலாச்சாரம் மற்றும் அரசியல் என்பவற்றில் அதிகம் ஆர்வம் காட்டினார்கள். திரையரங்கங்கள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் 1950 இல் சிரிய ஆளுநர்களால் திரையரங்கம் நிறுவப்பட்டது. அதன் வழியாக கலைஞர்களின் நடிப்பு, இயக்கம் மற்றும் பிற கலைகளை முன்னேற்ற முடிந்தது. அப்போது மலாஜாவில் சில இளைஞர்கள் Oud மற்றும் சில இசைக்கருவிகள் இசைக்கத் தெரியாமல் இருந்தனர். பல இளைஞர்கள் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றனர். PhDகள் பலர் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கிறார்கள்.

என் தந்தையும் தாயும் இந்தக் கிராமத்தில் இருந்து பிறந்து  வந்தவர்கள். என் தந்தை அரபு இலக்கியங்களுடாக சிரியாவில் நன்கு அறியப்பட்ட கவிஞராக இருந்தார்.  1996 இல் அவர் இறந்தார். அவர் பல கலாச்சார பருவகாலப் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். என் தாய் ஒரு கலாச்சார ஆர்வலர் அல்ல, எனினும் அவர் ஒரு சிறந்த வாசகர் மற்றும் இனிமையான குரல் கொண்டவர். என் தந்தையால் எழுதப்பட்டு அவருடைய நண்பர்களால் இசை வடிவமைக்கப்பட்ட பல பாடல்களை எனது தாயார் அவருடைய குரலில் பதிவு செய்துள்ளார். எனக்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ளனர். என் சகோதரர் Wa’d Omran இப்போது சிரியாவில் வசித்து வருகின்றார். அவர் பொறியியல் துறையில் PhD படிப்பை நிறைவு செய்து விட்டு தற்போது டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

என்னுடைய சகோதரி Hala Omran 2006 புரட்சிக்கு முன்பே பிரான்சிற்குச் சென்றார். அவர் ஒரு பிரபல நடிகை. அவர் அரபிய மற்றும் பிரென்சு மொழிப் படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது ஒரு பிரென்சுக் குடியுரிமை பெற்றவர்.

நீங்கள் முதன்முதலில் கவிதை துறைக்குள்  எப்படி வந்தீர்கள் என்பது நினைவில் இருக்கிறதா ?

கவிதைகளை தவிர்த்து என் ஆரம்பகால வாழ்வின் விவரங்களை ஞாபகப்படுத்த முடியாது. கவிஞர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெறும் தளமாக எங்களுடைய வீடு அமைந்திருந்தது. குறிப்பாக எனக்கு நான்கு வயதிருக்கும் போது 1968 இல் டமாஸ்கஸ் இற்கு குடிபெயர்ந்த பின்னர். எனது தந்தை கற்பித்தலில் இருந்து பத்திரிகைக்கு தனது தொழிலை மாற்றிக் கொண்டதன் பின்னர் நாங்கள் அங்கு இடம்பெயர்ந்தோம். அப்போது சிரியாவின் தலைநகராகிய டமாஸ்கஸில் மாத்திரமே பத்திரிகை அலுவலகம் அமைந்திருந்தது. எங்கள் வீட்டின் எல்லாப் புறங்களிலும் கவிதைப் புத்தகங்கள் சிதறிக் கிடக்கும். ஒவ்வொரு  வார இறுதியில் Soirees வாசிக்கும் கவிஞர்களின் குரல்கள் எனக்கு நினைவிருக்கிறது. எங்களது வீடு எனக்கு ஒரு சாதாரணமான வீடு போலல்லாது ஒரு நூலகம் போலவே அமைந்திருந்தது. நான் உண்மையில் ஒரு புத்தகப் புளு. என் கைகளில் விழும் எதனையும் வாசிப்பேன். அது என்னுடைய வயதிற்கு தகுந்ததாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட. யாரும் என்னுடைய வயதிற்கு எது சரியென்று சொல்ல முற்பட்டதும் இல்லை. எனது வீடு புத்திஜீவிகளிற்கும் பிற கலைஞர்களிற்கும் கலாச்சார ஒன்றுகூடல் இடம்பெறும் இடமாக இருந்தது. தூங்க விரும்பியவர்களுக்கான படுக்கையறை வசதிகளும், உணவு தயாரிக்க விரும்பியவர்களிற்கான சமையலறை வசதிகளும் கூட இருந்தன.

என் வாழ்நாளில் ஏக்கம் நிறைந்த நாட்களும் இருந்தன. எங்களது வாழ்கை முறை ஒரு குறிப்பிட்ட உறுதியற்ற தன்மையை கொண்டிருந்தது. குடும்பத்தில் அடிக்கடி நோய்வாய்ப்படுவதனால் அடிக்கரி நகரத்திற்கு இடம்பெயர வேண்டிய தேவை இருந்தது. அது கலாச்சார விழிப்புணர்விற்கான வளர்ச்சியாகவும், அபிவிருத்தியாகவும் அமைந்தது.

உங்கள் குடும்பம் அரசியலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனரா ? அரசியல் கலாச்சார போராட்டங்களின்  காரணமாக நீங்கள் ஆபத்துக்களை எதிர்கொண்டீர்களா ?

எனது தந்தை அவரது இளமையில் ஒரு அரசியல் ஆர்வலராய் இருந்தார். பின்னர் அவரது அரசியல் கருத்துக்கள் காரணமாக சிறையிலடைக்கப்பட்டார்.  Hafez-Al-Assad இன் ஆட்சிக்கு முன் எனது தந்தை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். மார்ச்- 8-1963 இல் Ba’ath கட்சி சிரியாவில் அதிகாரத்தை எடுத்த போது எழுத்தின் மீதும் பத்திரிக்கையின் மீதுமாக தனது முயற்சிகளை ஈடுபடுத்துவதென கட்சியைக் கைவிட்டார். பல அரபு நாடுகள் இஸ்ரேலுடனான தோல்வியின் பின்னர் பல கல்வியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்களை இயக்க ரீதியான அரசியல் தாண்டி தேடிக்கொண்டிருந்தனர். புத்த்துருவாக்கம் மற்றும் கலாச்சார ரீதியான வேலைகள் அவர்களுக்கான தீர்வுகளில் ஒன்றாக இருந்தது.

சிரியாவில் மிகவும் அரிதான எதிர்புக் குழுக்களே இருந்தன. என் தந்தை அவர்களுடன் சேர்ந்து இருக்கவில்லை. சிரியாவில் Assad சர்வாதிகாரத்தை மேற்கொண்ட Hafez-Al-Assad புத்திஜீவிகளை எவ்வாறு திருப்தி செய்வது என்பதை நன்கு அறிந்திருந்தார். அவர்களின் கருத்துக்களுக்காக அவர்களை சிறையிடவில்லை. அந்த நேரத்தில் கைது செய்யப்பவர்கள்,  முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் பிற சோசலிச அல்லது இடதுசாரிக் கட்சிகள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை எதிர்த்தனர்.

சிலர் நாடுகடத்தப்பட்டனர், மற்றவர்கள் (குறிப்பாக இஸ்லாமியவாதிகள்) சிரியாவில் சுமார் பதினைந்து ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டனர் (சிறையில் கொல்லப்பட்டனர்). அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொள்ளாத புத்திஜீவிகள் Hafez-Al-Assad இனால் சிறையில் அடைக்கப்படவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மையாகும். எவ்வாறாயினும் மக்கள் அப்பால் செல்ல முடியாத வரம்புகளை நிறுவினர். அறிவாற்றல் உள்ளவர்களின் குரல்களை எப்படித் (தடை செய்து) வைத்திருப்பது என்பதை நன்கு அரிந்திருந்தார். அவர் ஒரு சர்வாதிகாரியாக இருந்தார். அவரது வாரிசான Bashar-al-Assad சர்வாதிகாரி என்கின்ற பெயருக்கும் பொருத்தமற்றவர்.

எனது கருத்தில் Bashar-Al-Assad ஒரு Gangster போன்றவர். அவனது தந்தை போல சிரிய சமுதாயத்தின் சிக்கலான தன்மை பற்றிப் புரிந்துகொள்ளவில்லை. மாபியா போன்ற சக்திகளின் கட்டமைப்பை தன்னைச் சூழ அமைத்துக் கொண்டார். இதன் ஊழல் சிரியாவில் பயங்கரமான அளவில் பரவியது.

எனது கருத்து.  ஆபத்துக்கள் இருந்த போதும் புரட்சி தனது ஆட்சியை எதிர்த்து நின்றது.

நீங்கள் பல்கலைக்கழகத்தில் எது பற்றிக் காற்றீர்கள் ? கவிதையும், அரசியலும் எதிர்ப்பின் வடிவமாக இணைந்திருப்பதை முதன்முறையாக எப்போது உணர்ந்தீர்கள் ?

ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தையே படித்தேன். அங்கு ஒரு இளைஞனைக் காதலித்து பட்டப்படிப்பு நிறைவடைய முன்னமே திருமணம் செய்து கொண்டோம். எனது 25 ஆவது வயதிற்கு முன்னதாகவே ஒரு மகளைப் பெற்றேன். பின்னர் நாங்கள் விவாகரத்துச் செய்து கொண்டோம்.

நீண்டகாலமாக பல்கலைக்கழகத்தை நான் புறக்கணித்தேன். 1990 இல் மீண்டும் ப‌திவு செ‌ய்து அறபு இலக்கியத்தை படித்தேன். எமது பிரதேசத்தின் கல்வி மட்டுமல்ல  கலாச்சாரம், சிந்தனை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடைய எல்லாமே அரசியலுடன் நெருக்கமாக  இணைக்கப்பட்டுள்ளது.

புயலடிக்கும் அரசியல் நிகழ்வுகளின் நிழலில் வாழும்  பகுதியிலேயே நான் பிறந்தேன். எமது பிராந்தியத்தின் இதயமாக விளங்கும் பிரதேசத்தில் இஸ்ரேலின் இருப்பு, இராணுவ அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கான இராணுவ ஆட்சிக்கான காரணங்களாக சொல்லப்பட்டது. இது புரட்சி என்று போலியாக சொல்லப்பட்டது.   இப்பிரதேசத்தில் இஸ்ரேல் மற்றும் சியோனிசத்தை (Zionism) எதிர்ப்பதற்கான போலிக்காரணங்களுடன் இந்த ஆட்சிகள் சுய அடையாளம் கொண்ட தே‌சிய வாத ஆட்சிகளில் இருந்து ஊழல் நிறைந்த சர்வாதிகார ஆட்சியாக மாற்றப்பட்டு விட்டதாக நான் கருதுகிறேன்.

அரபு நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்குட்படுத்திக் கொண்டிருந்த பொது அவர்கள் தங்களது சொந்த மக்களில் ஒரு சாராரை அடிமை படுத்தினர் இன்னும் ஒரு சாராரை அழித்தனர். இரகசிய மறறும் திறந்த சமாதான உடன்படிக்கைகள் இரண்டு இருந்தன.

என் வாழ்நாள் முழுதும். சிரிய ஜனாதிபதியின் கீழான சிரியாவின் அரசியல் வேலை தடை செய்யப்பட்டது. Assad (senior) ஓர் சர்வதிகார ஆட்சியை நிறுவினார், அரசியல் கட்சிகளையும், சிவில்  சமுதாயத்தையும் தடை செய்தார். அவருடைய மகனான Assad (junior ) மரபுரிமையாக அந்தக் கட்டமைப்பையே தொடர்ச்சியாக நிலைக்கச் செய்தார்.

அரசியல் செயற்பாட்டிற்கான தண்டனையாக நாடுகடத்த்துதல் அல்லது நீண்டகால தடுப்புக் காவலில் வைத்தல் என்பனவாக இருந்ததது.

நம் வாழ்வில் உள்ள அனைத்தும் அரசியல் தொடர்புடையது. சிரியாவில் நடப்பாட்சியை பிரச்சாரம் செய்யாத   எந்தப் பேச்சும் ஆட்சிக்கு எதிரானதாக கருதப்பட்டது. சில பேச்சுக்கள் தடுக்கப்பட்டிருந்தன. மத மற்றும் அரசியல் எழுத்தாளர்களின் அறிக்கைகள் மீதான  தணிக்கை பரவலாக  நடைமுறையில் உள்ளது.

அங்கீகரிக்கபாடாத தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள்  எதுவுமே வெளியிடப்படாது. எழுத்தாளர்களும் விசாரணை செய்யப்படலாம். என்பதனால் இது அச்சம் மிகுந்த சூழ்நிலையை உருவாக்கியது. தணிக்கையான அறிக்கைகளில் ஆட்சேபனைகளை எழுப்பாமல் எழுதும் பொருட்டு எழுத்தாளர்கள் தங்கள் கருத்துக்களை உருமறைக்க வேண்டும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்

தடை செய்யப்பட்ட  மூன்று கோட்பாடுகளாக  மதம் அரசியல் மற்றும் (பால் வேறுபாடு ) பாலியல் ஆகியவை நடைமுறையில் உள்ளன.

2015 இல் நீங்கள் எழுதியது,

“வரலாற்றில் வேறு எந்தவெரு புரட்சியும் இத்தகைய கொடூரமான குற்றங்களை எதிர்கொண்ட போதிலும் நீண்ட காலத்திற்கு மிக அழகாக சரியாக நிர்வகிக்கப்பட்டிருக்கவில்லை” நீங்கள் மேலும் கூறியது “குருதி மட்டுமே இப்போது சிரியாவின் ஒரே நினைவு, இப்போது எல்லோரும் அழகை அழிக்கச் சதி செய்கிறார்கள்.

 “புரட்சியின் அழகு ” என்பதன் ஊடாக நீங்கள் எதனை சொல்ல  விரும்புகிறீர்கள்? மக்கள் எதனை உணர்கிறார்கள்? அதனை அவர்கள் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள்?

2011 ம் ஆண்டின் தொடக்கத்திலோ, 2010 இன் அரபிய வசந்த காலத்தில் சிரியாவில் மற்றம் வரும் என்று யாரும் நினைக்கவில்லை. இந்த பிராந்தியத்தில் சிரியா பற்றிய வேறுபட்ட கருதுகோள்கள் இருந்தன.   ஒருபுறம் சில அர‌புலக நாடுகள் சிரியா ஒரு நிலையான அறிவுசார்ந்து  வளரும் நாடு என்று கருதியது.

மறுபுறம் சட்டத்திற்கு முன் பயந்தவர்களாகவும், சுதந்திரமாகப் பேச முடியாதவர்களாக மெளனமாகவும் இருந்தனர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கேனும் மக்கள் சுதந்திரம் கொண்டவர்களாக பார்க்கப்படவில்லை.

என்ன நடந்ததென்று ஆச்சர்யமாக இருந்தது. தொடர்ந்து ஆறுமாதங்களுக்கு சிரிய இளைஞர்கள் நடுத் தெருக்களில் மேடையமைத்து பாடல் மற்றும் நடனம் என்று அமைதியான முறையிலான ஆர்ப்பாட்டங்களிற்குள் நுழைந்தனர். ஒரு முஸ்லிம் நாட்டின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பு குரல்களை பாடல்களாக மாற்றி அதற்கு பல தாளங்கள் கொடுத்து அதற்கு ஏற்றார்போல் நடனம் ஆடுவதை பார்த்திருக்கிறீர்களா?

ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்று மக்கள் கோசங்களை எழுப்பினர். சட்டத்தின் அதிகாரத்திற்குக் கீழ் ஒரு பன்முக ஜனநாயக அரசை அவர்கள் கோரினார்கள். அதுவே அவர்களின் புரட்சிகரப் பாடல்களின் மொழியாக இருந்தது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது போலீஸ் நேரடியாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது. ஆர்ப்பாட்டங்களின் போது இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் தப்பினர். ஏனையவர்கள் கொல்லப்பட்டனர். அத்தோடு அவர்களது இறுதிச் சடங்குகளின் போது இன்னும் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களோடு புதிய ஆர்ப்பாட்டங்களாக மாறியது. இந்த ஆர்ப்பாட்டங்கள் சிரியாவில் முன்னொருபோதும் இல்லாத சமூக ஒற்றுமையை உருவாக்கியது. புரட்சியில் பங்கேற்றவர்கள் திடீரென ஒருவிதமான பிணைப்பை உணர்ந்தனர். அவர்கள் ஒருவருக்காக ஒருவர் புரட்சியில் இணைந்ததாக உணர்ந்தனர். சிரியாவின் மண்ணில் இப்போது அவர்களது இரத்தம் கலந்திருப்பதாக உணர்ந்தனர். அவர்கள் வாழ்ந்த சிரியா அவர்களுடையதாக இருக்காது என்பதை உனர்ந்தனர். அவர்கள் கனவு கண்டிருந்த ஒரு சிரிய நாட்டைத் தேடினார்கள். அதில் ஒருவருக்கொருவர் சொந்தமானவர்களாக இருந்தார்கள். இப்போது அந்த அழகு அழிக்கப்பட்டது. அது கடலில் மூழ்கி, சிறைச்சாலைகளில் மறைத்துப் புதைக்கப்பட்டு துகள்களாக மாற்றப்பட்டுள்ளது.

நீங்கள் அரசியல் ரீதியான செயலூக்கம் மிக்கவராகவும் ஆட்சி மற்றும் யுத்தம் தொடர்பான விமர்சகராகவும் இருக்கிறீர்கள்.  பெரும்பாலானவர்கள் கொலை செய்யப்பட்டும், சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டும் இன்னும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். உதாரணமாக கவிஞர் Ibrahim Qashoush கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும் எழுத்தாளர் Dia’a Al-Abdullah மற்றும் Tal-Al-Mallouhi சிறையில் அடைக்கப்பட்டனர். Khaled Kalifa உடல்ரீதியாக தாக்கப்பட்டார். ஆட்சிக்கு எதிரான பேரணியில் கலந்துகொண்ட போது உங்கள் சொந்த மகள் சிறையிலடைக்கப்பட்டார். எழுதுதல் இத்தனை ஆபத்தாக இருக்கிறது என்பதை புலம்பெயர்ந்தவர் என்ற ரீதியில் உங்களது சொந்த அனுபவத்தினூட கருத்து சொல்ல முடியுமா ?

ஆமாம், 2011 இன் இறுதியில் நான் சிரியாவில் இருந்து வெளியேற தள்ளப்பட்டேன். அரசினை இயக்கும் பாதுகாப்புப் படையினரால் நாட்டை விட்டு வெளியேறும்படி அதிகாரபூர்வமாக கேட்கப்பட்டேன். முதலில் அதனை மறுத்துவிட்டேன். அடிக்கடி அவரகளால் வெளியேறுமாறு பணிக்கப்பட்டும் வெளியேறுவது தொடர்பிலான எண்ணங்களை நிராகரித்தேன். பின்னர் என் மீதும் என் மகள் மீதும் அச்சுறுத்தல் மூண்டது. அதிகாரிகள் என்னைக் கைது செய்ய விரும்பவில்லை. அவர்கள் நான் வெளியேறிச் செல்வதையே விரும்பினார்கள்.

புரட்சியை ஆதரிப்பதற்காக எழுத்தாளர்களைக் கைது செய்வது அரசின் மீதான ஒரு கெட்ட பெயரினை  உருவாக்கும். ஏனெனில் பயங்கரவாதிகளை மட்டுமே கைது செய்வதாக அறிவித்திருந்தனர். நான் தொடர்ந்து சிரியாவிலே இருப்பதாகவும் எனது மகளை வெளியேறுமாறும் கேட்டேன். ஆனால் எனது மகள் அதனை நிராகரித்துவிட்டார். இருப்பதென்றால் இருவரும் ஒன்றாக இங்கேயே இருப்போம் இல்லை என்றால் இருவரும் ஒன்றாக வெளியேறுவோம் என்று அவள் வலியுறுத்தினாள். எனவே நாங்கள் இருவரும் சிரியாவை விட்டு வெளியேறினோம். அன்று அது சரியான தீர்மானமா ? என் பயம் நியாயமானதா ? என்றால் எனக்குத் தெரியாது. ஆனால் அப்போது நான் அங்கேயே இருந்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்பட்டோ அல்லது மெளனமாக்கப்பட்டோ இருப்பேன்.

யுத்தத்தின் காரணமான் கட்டாய இடம்பெயர்வு மனவேதனை தரக் கூடிய ஒன்று. அந்தவகையில் இன்றைய காலங்களில் நாம் பார்க்கக்கூடிய குடிப்பெயர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை கூற முடியுமா ?

பெரும்பாலான மக்களின் பயணம் மற்றும் குடியேற்றம் தொடர்பான கனவுகள் தற்போது பழைய கனவுகளாக இருக்கின்றன. பலருக்கு அவர்களின் பாதுகாப்பான, நிலையான சூழலுடனான் வாழ்வின் காரணமாக இடம்பெயர்வு மற்றும் பயணம் என்பதன் மீதான தேவை எழவில்லை. இதுவரை அறிந்திராத உலகங்களையும் வெவ்வேறு கலாச்சாரங்களையும் கண்டறியும் ஆவலிலேயே பயணங்கள் உருவாகின்றன. இந்த ஆவலிலேயே பூமியில் பல இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ்வின் மீதான சலிப்பு மற்றும் வாழ்வின் முறையில் எளிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த உந்துதலாக சிலநேரங்களில் பயணங்கள் மற்றும் குடிபெயர்வு அமைகின்றது. இந் நிலமையில் புதிய இடங்களில் தரித்தல் சுவாரஸ்யமாகவும், இளைப்பாறுகையாகவும் அமைகிறது.

எனினும் சிரியர்கள், ஈரானியர்கள், பலஸ்தீனியர்களாகிய எங்களது இடம்பெயர்வு முற்றிலும் மாறுபட்டது. எங்களுடைய இடம்பெயர்வானது பயம் நிறைந்ததாகவும், மரணம், பசி என்பதுடன் கூடியதுமான புலம்பெயர்வாக அமையும். எங்களுக்குப் புலம்பெயர்வானது உயிர் வாழ்வதற்கான தப்பிப் பிழைத்தலாகவும், எங்களது குடும்பம் மற்றும் பிள்ளை பாதுகாப்பதற்கானதாகவும், இழந்த எங்களது பாதுகாப்பைத் தேடும் பொருட்டாகவும் இடம்பெற்றது. அது எதிர்காலத்திற்கானதென அர்த்தப்படும்.

இவ்வகையான குடியமர்வுகள் தன்னார்வமுள்ள குடியமர்வுகளிலும் பார்க்க மாறுபட்ட வழிமுறைகளில் கையாளப்படும். அவை எச்சரிக்கைகளுடன் கூடியதாக அமைகின்றன. குடிபெயர்பவர்கள் அந்த நாடுகளில் தங்குவதற்கு தேவையான தகைமைகளை நிறுவ வேண்டிய தேவை இருக்கிறது. நான் நினைக்கிறேன். ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் குடி பெயர்ந்த சிரியன்கள் அங்கே நல்ல பிரஜைகளாக வாழ்கின்றனர். ஆனாலும்  எப்போதும் அவர்களது கனவு சிரியா.

போருக்கு முன்னரும், வெளியேற்றத்தின் பின்னரும் ஒரே வகையான விடயங்கள் பற்றியா நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் ?

ஒருபோதும் இல்லை , தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணின் தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வு பற்றியும் நான் எழுதிய முதல் முறை இது. நான் மரணம் பற்றி எழுதியிருக்கிறேன். ஆனாலும் அது ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தில் இருந்தது. இப்போது அவ்வாறு இல்லை, என் கண்களுக்கு முன்பாக இளைஞர்கள் கொல்லப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனது ஆடைகளில் அவர்களது இரத்தம் படிந்திருக்கிறது. அவர்களது இரத்தத்தின் வாசனை இன்னும் எனது  நினைவில் உள்ளது. தொலைக்காட்சியின் ஊடாக என்னுடைய நாட்டு மக்கள் இழப்பதை பார்க்க கூடியதாக இருந்தது. மரணம் மறைக்கப்படக் கூடிய ஒன்றல்ல. அது உண்மை.

மேலும், என் வாழ்க்கையில் முதன் முறையாக நான் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடந்த ஏழு வருடங்களாக தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். முழுவதும் தனிமை. இதற்கு முன் நான் தனிமையில் இருந்ததில்லை. என்னை சூழ எனது குடும்பம் இருக்கும் அல்லது எனது மகள் இருப்பாள். அல்லது  என்னைச் சூழ எனது நண்பர்கள் இருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளில் நான் முற்றிலும் தனிமையில் இருக்கிறேன். தனியாக வாழும் ஒருவரின் உருவாகும் பல்வேறு அச்சங்களும்,  சிறிய கவலையும் கூட எவ்வளவு பெரிதாக அதிகரிக்கிறது, உணர்வு ரீதியாக எவ்வளவு தாக்கங்களை உண்டுபண்ணுகிறது என்பதை  முதன்முறையாக நான் உணர்ந்து கொண்டேன். நான் உளவியல் ரீதியாகவும் தனிமையில் இருக்கிறேன். ஒரு பெண் அவளது ஐம்பதுகளின் ஆரம்பத்தில் உளவியல் ரீதியாக தனிமையினை உணர்வது மிகவும் ஆபத்தானது. அது அவளது ஹோர்மோன் மாற்றங்கள் இடம்பெறும் காலமாகும். அவளது மனநிலையை அது முற்றிலும் மாற்றிவிடும். இந்நிலமை பற்றி எழுத இது எனக்கு ஒரு உண்மையான வாய்ப்பாக்க இருந்தது.

அதைத்தவிர அடுத்தடுத்த காதல் தோல்விகள், அதிகரிக்கும் நான் நேசித்தவற்றின்  அதீத இழப்புக்களின் உணர்வுகள் கவிதை எழுதுவதற்கு இதைவிடவும் தூண்டுகோலாக அமையும் பொருள் எது இருக்க முடியும்.

உங்களுடைய அழகிய கவிதை தொகுப்பான “முன் வீட்டில் வசித்து வந்த பெண் ” தனிமையில் வெளிநாட்டின் தொடர் மாடி வீடொன்றில்ப் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்மணி அவளின் முன்னிலையில் பெண் ஒருத்தி இருப்பதாக உணர்கிறாள் எனும் கதைப் பின்னணியாகக் கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்தவர் பற்றிய கவிதை இது எனப் பார்க்கிறீர்களா ?

அது புலம்பெயர்ந்தவர்களின் கவிதைக்குள் வகைப்படுத்தப்படுமா  என எனக்கு தெரியாது. நான் எனது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தேன். அதிகாரிகள் சிரியாவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். எனினும் தற்போது நான் வசிக்கும் நாடு மற்றும் அதன் மொழி எனக்கு ஒன்றும் புதிதாய் இல்லை. மனிதர்களின் பொது மனநிலையும் கூட புதிய ஒன்றாய் தோன்றவில்லை. புலம்பெயர்தல் தொடர்பான எண்ணம் ஒதுக்கி வைக்கப்படுதல் (அந்நியப்படுத்தல்) என்பதுடன் சேர்ந்ததாக தோற்றம் பெறுவதாக உணர்கிறேன். நான் ஒரு அன்னியர் என்று நான் நினைக்கவில்லை. எனினும் இந்த வயதில் என் நாட்டில் இருந்திருந்தால் என் தனிமை பற்றி எழுது இருப்பேனா ? நிச்சயமாய் இல்லை. இல்லை என்றே நினைக்கிறேன்.

எனவே இத்தொகுப்பு புலம்பெயர்ந்த *அகதிகளிற்கான கவிதைகளில் சேர்க்கப்படலாம்.

உங்களுடைய கருப்பொருட்களான தனிமை மற்றும் விரோதம் ஆகியவை உலகளாவியதாக இருக்கலாம். அவற்றை உங்களின் தனிப்பட்ட அனுபவங்களினூடாகவா முன்வைத்தீர்கள் ?

நிச்சயமாக அது உரிய கருப்பொருள் தான். பொதுவாக நவீனகால மனிதன் தனிமை நிறைந்த மனிதனாகவே இருக்கிறான். நவீன தகவல் தொடர்புப் புரட்சி நமது தனிமையை இன்னும் அதிகப்படுத்தி இருக்கின்றது. நீண்ட நேரங்களை கணினி மற்றும் மொபைல் திரைகளின் முன்னால் செலவிடுகிறோம், அறிந்திராத மனிதர்களுடன் பேசுகிறோம். இதனைச் செய்யும்போது எதார்த்தத்தில் நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் படிப்படியாக தொடர்பில் இருப்பதை இழக்கிறோம். இதைவிட அதிக தனிமை மற்றும் அந்நியம் இருக்க முடியுமா ? மேலும் உண்மையான உலகின் நிலை மிகவும் வேதனை மிக்கதாக மாறிவிட்டது. தற்போது வெறுப்பு, போர்கள், இழப்பு மற்றும் மற்றவர்கள் மீது அதிகாரத்தையும் அடக்குமுறைகளைகளையும் சுமத்துதல் என்பனவே ஆதிக்கம் செலுத்துகின்றன.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எனும் போலிக் காரணங்களுக்காக பயங்கரவாதிகளை உருவாக்கும் மற்றும் போர்களை உருவாக்கும், ஆயுதங்களை கையாளும் மாபியாக்களாலேயே இந்த உலகம் இப்போது ஆளப்படுகிறது.

இந்த உலகில் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த உலகத்திற்கு இணையாக இன்னொரு உலகம் வேண்டும்.

இந்தப் பைத்தியக்காரத்தனங்களை புறம்தள்ளும் பொருட்டு இதற்கு மெய் நிகரான, கற்பனையான முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகம் வேண்டும். வாழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரமிக்க இந்த உலக வாழ்வை மறக்கவேண்டும். குறைந்தது சில மணி நேரங்களேனும்.  அதற்கான வழியினை கவிதைகள் தாழ்திறக்கின்றன.

உங்கள் எழுத்துக்களை பொதிந்துள்ள கற்பனைகள் மிகவும் அழகானவை. அரபு இலக்கிய பாரம்பரியம் பற்றி அறிந்திராத மேற்கத்தைய வாசிப்பாளருக்கு நீங்கள் உங்களது *செல்வாக்கினை அறிமுகப்படுத்த முடியுமா ?

நிச்சயமாக என்னுடைய கற்பனை என்னுடைய அரபிய மற்றும் சர்வதேச இலக்கிய வாசிப்புகள் ஊடாகவே தோன்றுகிறது. ஒரு கவிஞராக நான் உலகின் அனைத்து கலாச்சாரங்களையும் சார்ந்திருக்கிறேன். நிச்சயமாக அரபு இலக்கிய மரபு முதன்மையானது. காரணம் நான் அரபு மொழியிலேயே எழுதுகிறேன்.

நாட்டுப்புறக் கதைகள், ஹீரோக்கள், இளவரசிகள், மந்திரவாதிகள் பற்றிய புராணங்களை நான் கேள்விப்பட்ட மொழி அது. அரேபிய தீபகற்பம் மற்றும் அந்தலூசியாவின் பழைய கதைகளை நான் நினைவில் வைத்திருக்கும் மொழியும் அது தான். அரேபிய மதத் தணிக்கைகளால் தவிர்க்கப்பட முன்னர் உண்மையான (அசல்) “அரேபிய இரவுகள்” கதைகளை படித்த மொழியும் அதுவே.

Kelila Was Dimnal (பஞ்சதந்திரத்தின் அரேபியப் பதிப்பு) Taghribet Bani Hilal இன் பழைய அரபுக் காவியமான மர்மப் புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள், இலியட் மற்றும் ஒடிசி போன்றவற்றை நான் வாசித்த மொழியும் அது தான்.

நீண்ட காலங்களுக்கு முன்பு குழந்தையாக இருந்தபோது வாசித்தேன். நான் வளர்ந்த போது என் வாசிப்பு வேறுபட்டது அவைகள் சிக்கலான மற்றும் பல் வேறுபட்டவைகளைச் சார்ந்திருந்தது. இத்தகைய வாசிப்புகளே என் கற்பனைகளுக்கு வடிவம் கொடுக்கின்றன.

மேலதிகமாக, என் வாழ்வின் தனிப்பட்ட அனுபவங்களும், என் முயற்சிகளின் மீதான தாக்கங்களுமே என் கவிதைகளின் தாக்கம் செலுத்துகின்றன.

0000000000000000000000000000

ரஷா ஒம்றான் பற்றிய அறிமுகக்குறிப்பு :

மிஸ்பாஹுல்-ஹக்ரஷா ஒம்றான் சிரியாவில் டார்டஸ் (Tartous)  நகரத்தின் மலாஜா எனும் கிராமத்தில் 1964 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் வளர்ந்த காலப்பகுதியில் குறைந்தளவான ஏறக்குறைய 800 குடும்பங்களுடனேயே அப்பகுதி காணப்பட்டது. மலாஜா பிரதேசம்  அலவி பிரிவினருக்கான பிரதேசமாக இருந்தது. அது காலாச்சார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் செழுமையான இயங்க்குதளுடன் இருந்ததுடன்  அங்கிருந்தவர்கள் மிகவும் படித்த சமூகமாகவும், பலர்  தொழில் வல்லுனர்களாகவும், எழுத்தாளர்களாகவும், இசைக்கலைஞர்களாகவும், ஓவியர்களாகவும் காணப்பட்டனர். மலாஜா கிராமம் சிரிய அரசின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு “Oppositional Alawi village” என அரசியல் ரீதியாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.

அக்காலத்தின் ஒம்றானின் இன் தந்தை முஹம்மத் ஒம்றான்  சமூகத்தில் நன்கு அறியப்பட்ட கவிஞராகவும், சமூக ஆர்வலராகவும், பத்திரிகையாளராகவும் இருந்தார். ரஷா ஒம்றான் வளர்ந்த காலப்பகுதியில் அவர்களது வீடு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான கலாச்சார ஒன்றுகூடலுக்கான இடமாக இருந்துவந்தது.

டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து தனது அரபு இலக்கியம் சார்ந்த பட்டப்படிப்பை மேற்கொண்டார். பட்டப்படிப்பை நிறைவு செய்தபின் அல்-சிந்தியான் எனும் கலாச்சார விழாவின் இயக்குனராக பதினான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இவ்விழாவானது மலாஜாவில் கவிதைகள் மற்றும் கலைகளுக்கான விழாவாக நடைபெற்றது. காட்சிக்கலைகள், சிற்பம், (புகைப்படக்கலை) புகைப்படம் எடுத்தல், குழந்தைகள் நடனம் மற்றும் எழுதுதல் ஆகியவற்றிற்கான பயிற்சிப் பட்டறைகளை இந்த விழா உள்ளடக்கியிருந்தது.

ரஷா ஒம்றான் அராபிய மொழியில் 6 கவிதை தொகுப்புக்களை  வெளியிட்டுள்ளார். 1988 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதிகளிற்கிடையில் 35 சமகால சிரியன் கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து அறிமுகம் செய்தார். இவரது நூல்கள் ஸ்வீடிஷ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டுப் புரட்சியின் தொடக்கத்தில் இருந்து ஆஸாதின் ஆட்சியை பொதுவெளியில் எதிர்த்தார். சிரியாவை விட்டு வெளியேறி எகிப்தில் தஹ்ரீர் சதுக்க ஆர்ப்பாட்டங்களில் ஒரு பகுதியாக அரப்லீகின்  சார்பில் சிரியப் பெண்களுடன் கலந்து கொண்டார். அவர் ஒரு மகளின் தாய். அவரது மகள் சிரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி தற்போது பாரிஸில் வசித்து வருகிறார்.  அவர் தனது தாய்க்காக “சிரியாவின் விழ்ச்சியில் சர்வதேசத்தின் மௌனம்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

இந்த உரையாடல் அப்துல் ரஹீம் யூசுபினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

கிம் எச்சலின்(Kim Echlin)

0000000000000000000000000000

மிஸ்பாஹுல்-ஹக்Kim Echlin ஒரு கனடிய நாவலாசிரியர், பத்திரிகையாளர், ஆசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். அவரது சமீபத்திய மொழிபெயர்ப்பாக Inanna உள்ளது. (பண்டைய சுமேரியிலிருந்த புனித பாடல்கள் மற்றும் தொன்மங்களில் தொகுப்பு அது).

*அவரது நாவலானது மறைந்துபோன 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது சமீபத்திய புனைவு வாழ்வில் காணக்கூடியதாக உள்ளது.

மிஸ்பாஹுல்-ஹக்- சவுதிஅரேபியா 

மிஸ்பாஹுல்-ஹக்

(Visited 104 times, 1 visits today)