அரேபிய இலக்கியத்தில் கேலிச்சித்திரக்கதைகளின் வகிப்பாக்கம்- கட்டுரை மொழிபெயர்ப்பு -தேசிகன் ராஜகோபாலன்

தேசிகன் ராஜகோபாலன்இதுவரை காலமும் நாம் ஆங்கிலத்தில் மட்டுமோ அல்லது அதன் சிறந்த மொழிபெயர்ப்பிலோ கண்டு ரசித்த கேலிச்சித்திரக் கலையினை அரேபிய மொழியில் படைப்பதற்கான அரேபியர்களின் முயற்சிகள் எப்பொழுதும் புத்துணர்ச்சி அளிப்பவையாக உள்ளன. இந்தக் கலையில் அவ்வப்போது அரேபிய படைப்புக்களை தயாரிப்பதற்கான சீரிய முயற்சிகள் இடம்பெறுவதையும் நாம் கண்டிருக்கிறோம். இருப்பினும் இந்த பிராந்தியத்தில் அசாத்திய சக்திகளையுடைய அரேபிய அல்லது பண்டைக்கால எகிப்திய கதாநாயகரை மையப்படுத்தியே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை நையாண்டி கேலிச்சித்திரக் கதையாகவும் அரிதாக இத்தகைய இரண்டு சாத்தியக்கூறுகளுக்கும் அப்பால் சில ஆக்கங்களை நீங்கள் பெற்றிருக்கக்கூடும். அத்தகைய அரேபிய வரலாற்றிலிருந்து காவிய நாயகனைக்கொண்டு வெளிவந்துள்ள அரிய கேலிச்சித்திர கதைப்புத்தகத்தைக் காணக்கிடைத்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கதையின் நாயகன் அன்தாராஹ் இபின் ஷடாட் என்னும் பெயருடைய போர்க்களக் கவிஞராவார்.

இந்த கதை ஷார்ஜாவில் உள்ள கலிமட் குழுமத்தின் உபநிறுவனமான ‘காமிக்ஸ்’ என்னும் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆங்கிலத்திலிருந்து அரேபிய மொழிக்கு ஏராளமான கேலிச்சித்திரகதைப் புத்தகங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் எனக்கும் ஏராளமான புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்கான அரிய வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. இருப்பினும், அந்நிறுவனத்தின் பணிகள் வெறுமனே மொழிபெயர்ப்புடன் மட்டுப்படுத்தப்படவில்லை. ‘ஆந்தாராஹ்’ கதையின் ஆசிரியர் மொய்மென் ஹெல்மி ஆவார். இவர் ஒரு எழுத்தாளர் என்பதுடன் பதிப்பாசிரியரும்கூட. மேலும் மங்கா வகையைச் சேர்ந்த கேலிச்சித்திர கதைப்பிரியரும்கூட. இவர் குழந்தைகளுக்கான புத்தகங்கள், இளைஞர்-வயதுவந்தோருக்கான புத்தகங்கள் பலவற்றை பதிப்பித்துள்ளதுடன் இதுவே அவரது முதலாவது கேலிச்சித்திர கதைப்புத்தகமாகும். (அவர் தற்பொழுது தனது புதினத்தைப் பதிப்பிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.) அந்தாராஹ்வின் ஓவியத்தைப் பொறுத்தவரையில் அதன் முழுமையான புகழும் பெருமையும் அஷ்ரப் கௌரியையே சாரும். இவர் ஒரு இந்திய ஓவியக் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமாவார். ஐக்கிய அமெரிக்காவின் ஹ_ஸ்டன் பல்கலைக்கழத்தில் பட்டம்பெற்ற இவர், தற்பொழுது துபாயில் வசித்து வருகிறார். அவர் பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்த போதிலும்,  அவர் ஐக்கிய அரபு ராஜ்யத்தில் தயாரித்த ஊபுஐ என்னும் கேலிச்சித்திரத் திரைப்படத்தின் மூலமாகவே முதன் முதலாக பேசப்பட்டார். இவரது ஆக்கம் பல்வேறு பிரபல்யமான டார்க் ஹார்ஸ், ஐடிடபிள்யு போன்ற பிரதான பதிப்பகங்களில் வெளிவந்துள்ளன.

கருப்பின அடிமையான சுபைடாஹ் என்னும் தாய்க்கும் அரேபிய பழங்குடியினத்தைச் சேர்ந்த ஷதாத் ஐபின் குராட் அல்ஸ்ரீஅபிசி என்னும் தந்தைக்கும் பிறந்த குழந்தையான அந்தாராஹ்வின் கதாபாத்திரத்தைப் பின்பற்றி கதை பின்னப்பட்டுள்ளது. தனது தந்தையின் பூர்வீகத்தை அங்கீகரிப்பதற்காகவும் தனது பழங்குடியின் தோற்றமானது புனிதமானது என்பதை நிரூபிப்பதற்காகவும் மேலும் அன்பிற்குரிய அப்லபின்ட் மாலிக் ஐபின் குராட் என்னும் தனது முறைப்பெண்ணைக் கரம்பற்றுவதற்குமான பயணமாகும். இந்தப் பயணத்தின் வழிநெடுகிலும் ஆபத்துக்கள், ஆச்சரியங்கள் மற்றும் சாகசங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

‘அந்தாராஹ்’ கதையை பாரிட் ஷாவ்குய்யின் நடிப்பில் வெளியான திரைப்படம் உள்ளிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் நாம் பார்த்திருந்த போதிலும் கேலிச்சித்திரக் கதைக்கான கருவாக இந்தக் கதையைத் தெரிவு செய்திருப்பதை நான் விரும்பினேன். (உயர்நிலைப் பள்ளியில் நாம் முதன் முதலாகச் சேர்ந்தபொழுதிலிருந்து நாம் அலி அஹமட் பக்திர் கதையின் கற்பனை வளத்தை நாம் படித்து இரசித்திருக்கிறோம்.) இருப்பினும், இந்த கேலிச்சித்திர கதைப்புத்தகம் இதுவரை காலமும் அந்தத் திரைப்படத்தைக் கண்டிராத அல்லது அந்தாராஹ் இபின் ஷாதாத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை அறிந்திராத, புதிய தலைமுறையுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் இந்தப் படைப்பானது எமக்கு ஓவியத்தினூடாக சமகால வாசகர்களின் மனநிலையுடன் நெருங்கி வரலாற்றை படைத்துள்ளது என்று என்னால் பெருமையுடன் பறைசாற்ற முடியும். இந்த கேலிச்சித்திர கதை எமது வரலாற்றிலிருந்து அந்தாராஹ் இபின் ஷடாட் போன்ற குறிப்பிடத்தக்க பிரபல்யங்களை அரேபியர் அல்லாத வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வாய்ப்பையும் வழங்குகிறது.; வெளிநாட்டு வாசகர்களுக்கு அவர்களால் ஏதுமறியாமலேயே தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்படும் அரேபிய வரலாற்றிலிருந்து அதன் முக்கிய அம்சங்களையும் குணவியல்புகளையும் அறிமுகப்படுத்துவதற்கு இந்த கேலிச்சித்திரக் கதை ஆங்கிலத்திலும் ஏனைய உலகமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்தப் படைப்பானது உலகெங்கிலும் உள்ள வாசகர்களை எந்த அளவிற்கு சென்றடைய முடியுமோ அந்த அளவிற்குச் சென்றடைவதற்கு வழிஏற்படுத்தப்படவேண்டும்.

ஆசிரியரும் ஓவியரும் கூட்டணி அமைத்து அந்தாராஹ் கதாபாத்திரத்தை எந்த அளவிற்குச் சிறப்பாகக் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக வழங்கியுள்ளனர். உரையாடல்கள் எளிமையாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளன. ஆசிரியர் தனது வார்த்தைகளை திறம்படத் தெரிவு செய்து கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களைக் கட்டியெழுப்பியுள்ளார். நானும்கூட கதை நிகழ்வுகளுக்காக அந்தாராஹ் இபின் ஷடாட்டின் கவிதைகளைத் தெரிவுசெய்தமை என்னையும் வெகுவாகக் கவர்ந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை வரிகளும் அதில் இடம் பெற்றிருந்தன. ஓவியங்கள் மிகவும் அழகாகவும் நிபுணத்துவத்துவத்துடனும் வரையப்பட்டிருந்தன. வெளிநாடுகளில் உள்ள பிரதான பதிப்பகங்களால் வெளியிடப்படும் கேலிச்சித்திரக் கதைகளில் காணப்படும் ஓவியங்களுக்கு எந்தவிதத்திலும் குறையாமல் அந்த ஓவியங்கள் அமைந்திருந்தன. இந்தப் படைப்பில் கதாபாத்திரங்களின் குறிப்பாக அந்தாராஹ் மற்றும் அப்லா என்னும் இரண்டு பிராதான பாத்திரங்களின் ஆழத்தை நான் மிகவும் ரசித்தேன்.

இந்தக் கதையில் அப்லா கதாபாத்திரம் இதுவரை நான் பார்த்த அல்லது படித்த படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல. சில காட்சிகள், குறிப்பாக சண்டைக்காட்சித் தொடர்கள், முழுமையான ஆழத்தை வெளிப்படுத்தியிருந்ததுடன் ஓவியரின் கைவண்ணத்தையும் அதிசிறந்த முழுமையான அறிவையும் பறைசாற்றியது. என்னைப் பெரிதும் கவர்ந்த சண்டைக்காட்சிகளின் தொடர்களில்  எனக்கு மிகவும் பிடித்த கவிதை வரிகளும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரின் இரத்த நாளங்களையும் முறுக்கேறச் செய்கிறார்கள்.

அந்தாராஹ்வின் கடந்தகால நினைவுகளை மீட்டுவதற்கு – அவரது குழந்தைப் பருவ நினைவுகள் – அவற்றை ஏனைய காட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஓவியர் கறுப்பு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தியதை நான் வெகுவாக இரசித்தேன். அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு முத்தாய்ப்பு. மேலும் குழந்தைப் பருவத்தில் அந்தாராஹ் பட்ட துயரங்களையும் ஒரு அடிமை தன் பழங்குடி இனத்திலிருந்து அதியுயர் பதவியில் இருக்கும் ஒருவர் தனது மகனே என்பதை அறிந்து புலகாங்கிதம் அடைவதையும் அழுத்திச் சொல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட யுக்தி.

அரேபிய வரலாற்று நாயகன் ஒருவரை கேலிச்சித்திர கதையின் ஊடாக படைத்திருக்கும் காமிக்ஸ் நிறுவனத்தின் இந்த சிறு பரிசோதனை, போற்றத்தக்க ஒரு பரிசோதனையாகும். மேலும், ஏனைய அரேபிய வரலாற்று நாயகர்களையும் முன்னிலைப்படுத்தி இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன். மொழிபெயர்ப்பினூடாக சமகால வாசகர்களிடமும் சர்வதேச ரசிகர்களிடமும் எம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். சுருங்கக்கூறின், அந்த நிறுவனம் உண்மையில் அதனைச் செய்யும் என்று நான் நம்புகிறேன். நான் ஏற்கனவே அவர்களின் அடுத்த படைப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.  

Also read: Ahmed Al Mahdi On Writing Young-adult Literature in Egypt

Buy: On Jamalon

Originally published in Arabic on the Egyptian website https://comicsgate.net.

Ahmed Salah Al-Mahdi — author of the popular books Malaaz and Reem — is an Egyptian SF and fantasy novelist. You can find more about his works on GoodReads.

Emad El-Din Aysha is an academic researcher, freelance journalist and translator and also an active member of the Egyptian Society for Science Fiction.

தேசிகன் ராஜகோபாலன்

Translated by Emad El-Din Aysha

தமிழில்: தேசிகன் ராஜகோபால்-இலங்கை

(Visited 29 times, 1 visits today)