தன்னின தணியல்-கவிதை-இரா.மதிபாலா

தன்னின தணியல்

சட்டென
மின்னல் நொடியில்
அவனளை இழுத்து
இருண்மையில் ஆழ்த்தி புணருது
உள்ளொளிந்த
மாயக் குறியொன்று
இன்னொரு உருவெடுத்து
வெறி வேகமாய்.

கனவில் கதறல்
நாடகத்தில் செவிக்கு செவிடு வேசம்.

எதிர்த்து,பின்
லயித்து பால் மாற
குறி மலர
இன்னொரு
முகமும் உடலும்
அவனுள்.

ஒசையின்றி
அழுகை வீழும்
மன மணற்துகளிடையே…
பூத்தூறல் போல..

உணர் இருண்மையில்…
அவனும் அவளும்
ஒர் பாலில் நஞ்சென.

00000000000000

இரவுணவு

நீ அறியா கணத்தில்
என்னில் மேய்ந்த
உன்
ஒற்றைப் பார்வையை குறியாக்கி மனஇடுக்கில்
ஔித்து வைத்திருக்கிறேன்.

இரவும் நடுங்கும்
பெண்மை அலரும் குளிரிலிருந்து
பிழைக்க “அதை”
கதகதப்புக்கு
பொருத்திக் கொள்வேன்.

முப்பதை தாண்டியவளுக்கு
எப்போதும் வரலாம்
பின்னிரவு பசி.

தீனியாய் பயண நெருக்கடியிடையே
உணர்ந்து உள் இறங்கிய
உன்
வியர்வை வாசத்தோடு உருண்டு நீராகி
என் தாகம் தீர்க்க
உன்
பார்வைக்குறி பசியாற்றும்.

அது போதும் எனக்கு
அன்றைய நிசிக்கு.

சாமி பசி

வெளியூரில் பிரபலமான
உள்ளூர் தெய்வம்
உள் புழுக்கம் தாங்கமா
காத்தாடதான் நடக்கலாமுனு
நாலு வீதி சுத்தி வர..

நடுப்பகல் காய்ந்து
பசித்தீயில் கும்பி சீற
ராக்காயி வீட்டுக்கு போய்
அம்மா பசிக்குனுது
படையிலிட குரல் கொடுக்க
பதறி வந்த ராக்காயி
கன்னத்தல போட்டு
கையெடுத்து கும்பிட்டு
இதோ வாரேனு உள்ள போனவ
வரவேயில்ல

பகலும் போச்சு
இரவும் போச்சு
பொம்பள வந்தபாடா காணோம்.

பசி வயித்த கிள்ள
இன்னேரம் இளிச்ச வாய் பக்தன்
எவனாவது ஏதாவது
திங்க படைச்சுருப்பானு
கோயிலுக்கு திரும்பி போச்சாம்.

வெளியூரில் பிரபலமான
உள்ளூர் சாமி.

இரா மதிபாலா.

இரா.மதிபாலா-இந்தியா

(Visited 148 times, 1 visits today)