நிலக்கரி மிட்டாய் -கவிதை-இரா.கவியரசு

நிலக்கரி மிட்டாய்

வாயில் வைத்ததும் பிரகாசிக்கிறது
நிலக்கரி மிட்டாய் திண்ணும் சிறார்கள் முகம்
வண்ணக்கொடிகளேந்தி
அவர்கள் ஒடும் வயலில்
வேகமாக நுழையும் குட்ஸ் ரயில்
நீண்ட ஆழத்திற்கு உள்ளிறங்கி
கொள்ளிக்கட்டைகளுடன் வெளியேறுகிறது.

வேர் முளைக்கும் மண்ணின் கால்களை
தேடி அலையும் விதைகளின் வயிற்றில்
சக்கரங்களை ஏற்றும் ரயில்
கால்கள் வயிறுகளை
ஒன்றாக அள்ளிச் செல்கையில்
தடங்களை அழிப்பதற்காக
வந்து நிறைகிறது கடல்.

எங்கும் ஒரே வெளிச்சம்
கண்களைக் கூச வைக்கும் கொள்ளிக்கட்டைகளுக்கு
இந்த முறையும் பஞ்சமில்லை.

இன்னும் எத்தனைக் காலத்துக்குத்தான்
புகையை ஊதுவாயென
வீட்டுக்குள் நுழையும் நிலக்கரி மிட்டாய்கள்
பாத்திரங்களைத் தெறிக்க விட்ட பின்
கூரைகளைப் பறக்க விடுகின்றன
சொட்டு சொட்டாய் கஞ்சி விழும் திசையில்
கையை ஏந்துபவர்கள்
ஓடமுடியாமல் உறைகிறார்கள்.

அறுவடை வயல்களில்
சொக்கப்பனை பார்க்க விரும்பும் ரயில்
தெறித்து விழும் கதிர்களின் ஒளியில்
குளிர்காயும் பெட்டிகளுடன்
கொளுத்து கொளுத்து என்று
வெறிகொண்டு விரைகிறது.

நிலக்கரி மிட்டாய்கள்
பச்சைக் கொடியை
எரித்து அசைக்கின்றன.

000000000000000000

விரும்பி அழியும் எறும்புகள்

வெளிச்சப்புள்ளிகளை பச்சை குத்தியபடி
உறுமியலையும் பயந்த மிருகம்
நள்ளிரவில் வானடையும் போது
வீண்மீன்கள் சுமக்கும் கூடென மிதந்தது

அதிகாலையில் கீழே விழும் எறும்புகள்
முன்னிரவில் எப்போதும்
விண்மீன்களாகவே இருந்திருக்கின்றன

பூட்டிய அறைக்குள் ஒடுங்கும் எறும்பு
சுவரை அரிக்க ஆரம்பிக்கிறது
தோண்டிய மணலுக்குள் புதைவதென
அதன் தலையில் எழுதுகிறவன்
மை தீர்ந்த கடைசி எழுத்தில் மறைகிறான்.

அடங்காத எறும்பு
இதயத்திலிருந்து பிடுங்கும்
துளி உதிரத்தால்
தானே எழதி முடிக்கிறது.

அகழ்வாராய்ச்சி செய்பவர்கள்
மண்டையோடுகளை மட்டுமே
துடைத்து ஊதுகிறார்கள்.
எறும்புகளின் எலும்புகள்
தோண்டும் போதே சிதறுகின்றன.

சர்க்கரைத் துகள்களை
செரித்து வெளியேற்றும் பாக்டீரியாக்கள்
எறும்புகளின் கண்களை
உப்பு உருண்டைகளாக்கி
ஆழத்துக்கு நகர்த்துகின்றன.

கடித்தவுடனே தேய்த்தழிப்பது
அவசரப் பாதங்களுக்கு பிடித்திருக்கிறது.
கறை அகற்றுதலை
நீருக்கு முதலில் சொல்லித் தருகின்றன.

தெரியாத துளி உதிரம்
பரவுகிறது பூமியின் முகத்தில்
நெஞ்சிலடித்துக் கொண்டு
முகர்ந்து செல்லும் எறும்புகளின் கால்கள்
நடுங்கி உடைகின்றன
எலும்புகளின் மூச்சில்.

இரா.கவியரசு- இந்தியா

(Visited 142 times, 1 visits today)