காடாக மாறும் ஊர்-கவிதை-இரா கவியரசு

காடாக மாறும் ஊர்

ஊரிலிருந்து வரும் இறப்பு செய்தி
எனக்கும் ஊருக்குமிடையே
தினமும் ஓடும் ரயிலின் பெட்டியொன்றை
ரகசியமாகக் கழற்றி
கடலுக்குள் வீசுகிறது.

இறந்தவர்
பெட்டிக்குள் இருப்பதால்
எவ்வளவு விரைவாகச் சென்றாலும்
என்னால் பார்க்க முடிவதில்லை.
பெட்டி நிறைய
என்னைப் பற்றி அவர் சொன்னது
ஒலித்துக் கொண்டிருக்கும்
“ஊருக்கு அடிக்கடி வராதவன்
நினைவின் தண்டவாளத்தில்
தினமும் ஊரை ஓட்டுகிறவன் “.

கருப்புப் பெட்டியைத்
தேட முடியாத அளவுக்கு
கொந்தளித்துக் கொண்டிருக்கிறது கடல்.
ஊரின் சாலைகள் மேல்
புதிய சாலைகள் வளர்ந்து விட்டதால்
நாங்களிருவரும் நடந்த பாதை
ஆழத்தில் எங்கோ உறைந்திருக்கிறது.

அவரை எங்கிருந்தாவது
தோண்டியெடுக்க வேண்டுமென
இளைப்பாறிய மரங்களிடம் செல்கிறேன்.
பழைய வீடுகள் இடிக்கப்பட்ட தெருவில்
புதிய மரங்கள்
காட்டை வளர்க்கின்றன.

வாய்க்கால் பாலத்தின் சுவர்களில் எழும்
அரூப சிரிப்பொலிகள்
பின் தொடர்ந்து வந்து
தோள்களைத் தடவுகின்றன
மயானத்திலாவது
அவரைக் கண்டுவிடலாமென்று
வேகமாக ஓடுகிறேன்.

அங்கு இன்று காலையில்
புதிதாக இறந்தவர்
எரிந்து கொண்டிருக்கிறார்.
நான்
இவருக்காக மீண்டும்
ஊருக்குள் செல்லும் போது
ஊர் முழுவதுமே
காடாக மாறிக் கொண்டிருக்கிறது.

தானியங்களின் அமுது
பெருகி வழியும் நிறைநாழி

திருகி எறியும் முலையில்லை
அது
தானியங்களின் அமுது
பெருகி வழியும் நிறைநாழி.
தன் வறண்ட மார்பைத் தடவியவன்
இடப்பக்கம் கண்டு பொங்குகிறான்
ஆனாலும் வளர மறுக்கிறது பூக்காம்பு.

ஆடலில் திமிரும் அலைகடலும்
அசைவற்றப் பெருவெளியும்
மோதிக் கொள்ளும் பெருவெடிப்பில்
திணித்து வரையும் நடுக்கோடு
அழிந்தழிந்து
அலைக்கழிக்கிறது இருவரையும்

எரிமலைப் பரு பறித்து
வயிற்றைத் தடவும் போது
தீப்பிடிக்கிறது கர்ப்பப் பாறை
உள்ளே தூங்கும் குழந்தைகள்
சிணுங்கிய படியே
அவள் வயிற்றில் சுழல ஆரம்பிக்கின்றன

கூடலின் கனலில்
மூளைக்குள்ளிலிருந்து அவிழும்
மறைபொருளை
பிரபஞ்சமாக விசிறி எறிகிறாள்
அவன் பதறி ஆடை உதறுகையில்
மத்தாப்பு கொளுத்துகின்றன விண்மீன்கள்.

எப்போதும்
எனக்கு அடிபணிந்தவள் நீ
காலைக் கண்டு வா
என்று உத்தரவிடுகிறான்
அவன் காலின் நீளம்
இவளும் நீளவே
தோல்விக்கு பயந்து முத்தமிடுகிறான்
சரம் சரமாய் மழை பூக்கத்
தொடங்குகிறது கார்காலம்

ஆலமரத்தடியில்
ஞானிகள் காத்திருக்கிறார்கள்
“போய் வருகிறேன்” என்கிறான்.
குழந்தைகள் விழித்துக் கொண்டு விட்டன
தூளியை ஆட்டுங்கள் என்றதும்
பாடத் தொடங்குகிறான்
” நான் அசைந்தால்
அசையும் அகிலமெல்லாமே ”

0000000000000000000000

ஆயிரங்கால் பூச்சி

நீண்ட மாதங்களுக்குப் பிறகு
வீட்டுக்குத் திரும்பும்
காணாமல் போனவர்
யாரிடமும் பேசுவதில்லை.
அவரது வாயைத் திறந்து பார்க்கும் மகள்
நாக்கின் அடியில் இருக்கும்
பூச்சியைப் பார்த்து நடுங்குகிறாள்.
சொற்களை உமிழ்நீரில் ஊற வைத்து விழுங்கும் பூச்சி
அத்தனைச் சிறியதாக இருந்தாலும்
அடிக்கவே முடியாத உடல் கொண்டிருக்கிறது.
தூக்கத்தில் சிறுநீர் கழித்து
பேண்ட் நாற்றமடிப்பதாக
பக்கத்து வீட்டுக்காரர் திட்டிச் சென்றதும்
அவரைக் குளிப்பாட்டுகிறார்கள்.
அழுக்கு நிறத்தில்
பயன்படுத்தாத ஆணுறை
சட்டைப்பையில் பொங்கி
வெளியேறிய போது
திட்டியபடியே உதைக்கிறான் மகன்.
நாக்கிற்கு அடியில் இருக்கும் பூச்சியை
சொல்லிவிடத் துடிக்கும் மகள்
வேகமாக அறைக்கதவை சாத்தியதும்
சுழலும் மின்விசிறியில்
சிரிக்கிறது பூச்சி.
பூச்சியைப் பார்க்காத மனைவி
அவரை வெளியேத் தள்ளி
கைகள் நசுங்க கேட்டை பூட்டுகிறாள்.
என்ன நடந்தது என்று அடிக்கடி கேட்பவர்களுக்கு
பதில் சொல்ல முடியாமல்
வெறியில் கையைக் கடிக்கிறார்.
சொட்டுகிற குருதியைக்
குடிக்கிறது பூச்சி.
இப்போது
பேச வேண்டும் போல இருக்கிறது
பேசியே ஆக வேண்டும்.
ஆனாலும்
பூச்சி இருக்கிறது.
நாக்கின் அடியில்
கடிக்கும் பூச்சி
எப்போதும் இருக்கிறது.

இரா.கவியரசு-இந்தியா

இரா கவியரசு

(Visited 91 times, 1 visits today)