பதின்பருவத்தினரின் தந்தை-கவிதை-இல.பிரகாசம்

பதின்பருவத்தினரின் தந்தை

அப்பா என்று
உங்கள் குழந்தை
உங்களை அழைத்த போது
நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள்.

எனது ஆண்மைக்கு சான்றாக ஒருகுழந்தை என்று
நிச்சயம் தோன்றியிருக்கும்.

நீங்கள் ஒரு பதின்பருவக் குழந்தைக்கு
தந்தையாக உணர்வுகளில் தத்தளித்திருப்பீர்கள்.
வேண்டும்- வேண்டாம்
சரி – தவறு என்ற சொல்லிலிருந்து
பதின்பருவக் குரல்கள் அழுந்திய பொழுது
நரம்புகளில் ஏற்பட்ட நடுக்கம் ஊர்ந்து
நாசிப் பள்ளத்தில் நின்றிருக்கும்.

மகன் (அ) மகள் தன்முனைப்பில் வெற்றி பெற்றதை
நீங்கள் ரசித்திருப்பீர்கள் அல்லது
அவர்களை அடக்கு முறைக்கு ஆளாக்கியிருப்பீர்கள்.
சற்றே விரிந்த நடுங்கிய கண்களில்
நரம்புகள் சினத்தில் அப்போது வீக்கம் கொள்ள
சில துளிகள் தேங்கி வீழத் துடித்திருக்கலாம்

மகன் (அ) மகளின் பதின்பருவத்தின் மத்தியில் நீங்கள்
ஒரு முறையாவது கதவு தாழிட்ட போது
புரியாத தெளிவில்லாத ஒரு காரணத்திற்கு
என்ன நடக்கும் என கற்பனையான அச்சம் கொண்டிருக்கலாம்.

நரம்புகள் ஓய்வு எடுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறதா?
அதுஇ பதின் பருவம் பெற்றோரை காரணமின்றி
அச்சம் கொள்ளச் செய்யும்.

00000000000000000000

காளமேகம்

திருமலைராயன் பட்டினம்
கடல் அலைகளினின்று வீசிய சாரல் காற்றால் வரவேற்றது.
கடற்புறத்தில் மஞ்சமுகப் பெண்னொருத்தி நடந்து சென்றுகொண்டிருந்தாள்.
பட்டினத்து முத்து வேண்டுமெனக்
கவிக் காளமேகத்திடம் கேட்ட
மோகனாங்கியின் காதல் கண்கொண்ட பார்வை அவளிடம்.
திரைச் சீலையில் ஒளிப்படம் வீழ்வது போல்
என் கண்ணில் காட்சிகள் விரிந்தன.

விரிந்த திரைச் சீலையின் ஓரங்களில்
எதிரெதிர்த் திசையினின்று கவிபாடியபடி
வந்து சேர்ந்தார்கள்
அதிமதுரமும் அறுபத்து மூன்று தண்டிகைப் புலவர்களும் சூழ
அவர்களை எதிர்கொண்டபடியிருந்தான் காளமேகம்.

மூச்சுவிடும் முன்னே முந்நூறும் நானூறும்
பாடுவீரா| யென்றவுடன்
இம்மென்றால் எழுநூறும் எண்ணூறும்
அம்மென்றால் ஆயிரமும் பாடவல்லோம|;
என்று
அதிமதுரமும் காளமேகமும்
தத்தம் திறத்தைப் பகிர்ந்த காட்சியும்,
கண்ணை இமைக்கவொட்டாமல் நிலை நிறுத்திற்று

அரிகண்டம் பாடுவீரா யென்றதும்
கை கொட்டிச் சிரித்த காளமேகமும்
எமகண்டம் பாடுவோ மென்றதுவும்
தண்டிகைப் புலவர்களும் அதிமதுரமும்
நீவிர் அதைச் செய்யு மென்றதுவும்
காட்சியில் பரபரப்புக் கிளம்பிற்று.
குறிப்பொன்றை கொடுத்தான் அதிமதுரம்
எல்லோரும் யமகண்ட நிலையை அடைந்தவாறு
உற்று நோக்கியிருந்தனர் காளமேகத்தை.
பரன்மேல் உறியில் நின்றபடி
கழுத்திலும் இடையிலும், கட்டிய கத்தியும்
கீழ் வாய்விரித்து காத்திருக்கும் தழல்..
பாட்டின் பொருள் தவறும் பட்சத்தில்
உடல்வேறு கழுத்துவேறாக பல துண்டங்களாகும்.

அதிமதுரம் பாட்டிற்கான குறிப்பை கணப்பொழுதில்
அம்பைப் போல் தொடுத்தான்.
பொழிந்தான் குறிப்புக்கேற்ற கவியை
தயங்காது அரைநொடிப் பொழுதில்
பொழியத் தொடங்கினான் கார்மேகம் போல.
வென்றான் செருக்கேறிய அரசவைப் புலவர்களை.
அதிமதுரத்தின் வெற்றுக் கர்வத்தை அழித்தொழித்தான்.

அதிமதுரத்தின் புகழ்போதையில் மூழ்கிய
திருமலைராயன் செய்த ஈனச் செயல்தான் என்னோ?

போட்டியில் வென்றதன் பின்
நேர்ந்ததோர் அவமானம்.
கொண்ட காட்சி அவலச் சுவையாய்.
மண்மாரி யாலழிய வாட்டு| என்று
திருமலைராயனை யமக வசைபாடி வீழ்த்தினான்.

விடுபட்ட காட்சிகள்
மனத்தே ஓடத் தொடங்கிற்று தானாய்.
அக்காட்சியில்,
பின்னும் ஓர்நாள் புலவன் ஒருவனுடன் போட்டிக்கு
வெண்பாவுக்கு ஐந்து டு வைத்துப் பாடென்றதும்
ஓகாமா வீதோ| வுக்கு ஐந்து டுடுடுடுடு வையும்
பின் சேர்த்து,
வாகாய் எடுக்கும் ஓடும்
காட்டிடை நடமிடுவாரையும்
எருதுடன் பொருதுவாரையும்
வீடு பேறு தேடுவாரைவும்
காதுக்குத் தோடணிவாரையும்
பாட்டில் குறிப்பாய் பொதிந்து கூறினான் அப்புலவன்.

மோகனாங்கியின் முத்துக் காதலன்
மண்தின்ற பாணமாய் செத்துப் போனபின்னும்
போட்டியொன்றில் அவனுடன் தோற்ற அதிமதுரமும்
மண்தின்ற பாணமென்றே புலம்பி
அரற்றியதென்னோ? நட்பேயன்றோ?

திருமலைராயன் பட்டினம் எங்கும்
காவிரி நீர்ச் சுழியையும்
ஆடுபரி நெற்றிச் சுழியையும்
இரட்டுற மொழியில் பாடியபடி
காளமேகம் திரிவதாய் தோன்றியதெனக்கு அப்பொழுது.

(அரிகண்டம் – கழுத்திலே கத்தியை; கட்டிக் கொண்டு தருகின்ற
குறிப்புக்கு பிழையின்றி பாடுதல்.
எம கண்டம் – 16 அடி நீளம், அகலம், ஆழம் முறையே வெட்டப்பட்டு
அதில் அமைக்கட்பட்டுள்ள உரியில்( தூக்கு மேடை போன்ற அமைப்பு)
கழுத்தை மாட்டிக் கொண்டு குறிப்புக்கு ஏற்ப பிழையின்றி பாடுதல்.
பிழைபட பாடியவரின் உடலானது மூன்று நான்கு துண்டங்களாக
அவற்றால் வெட்டப்படும்.)

இல.பிரகாசம்-இந்தியா

 

(Visited 128 times, 1 visits today)