புரிந்தும் புரியாதது-சிறுகதை-உஷா

உஷாகண்ணம்மா…அழகான பெயர்.  துரு துருவென்ற விழிகளும்,  முகத்தில் ததும்பிய குறும்புத்தனமும், எந்தக் கணத்திலும் உடைந்து சிரிக்கத் தயாராய் இருப்பது போன்ற முகபாவங்களுமாய் இந்த வரவேற்பறையின் சுவர் முழுவதையும் அலங்கரித்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா..

எதிர்பாராத வேளைகளில் தெரியாமல் எதையாவது  நான் மிதித்து விடத் திடீரென விநோதமான ஒலிகள் கிளம்பி நிசப்தத்தைக் கெடுத்து விளையாட்டுப் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை நினைவு படுத்தின….. என் கண்ணில் பட்ட பொருட்களைப் பொறுக்கிப் பெட்டியினுள் போட்டேன். மாயமோ, மந்திரமோ ஒரு குழந்தை வீட்டில் இருந்தால் போதும். என்னமோ வீடு முழுவதும் அது மட்டுமே ராஜ்ஜியம் செய்வது போல் மற்ற மனிதர்கள் அங்கு வாழும் தடயமே இல்லாமல் போய் விடுமளவிற்கு அதன் ஆக்கிரமிப்புத் தான் தலை ஓங்கி நிற்கிறது! என் பிள்ளைகள் குழந்தைகளாய் இருந்த அந்த அழகிய காலம் ஒரு கணம் நினைவில் வந்து போக ஒரு கணம் பூவாய்ப் போனது மனது. மறு நிமிடமே குழப்பமாக இருந்தது. இந்தக் குட்டி அழகையும் அள்ளிக் கொண்டு நீ எங்கே சென்றாய் ஆதிரை….?

ஊரில் அவளை ஒரு சிறுமியாகத் தான் அறிந்திருக்கிறேன். ” தாயில்லாப் பிள்ளை…ஆனால் பார் எப்பிடி வீட்டு வேலைகளைச் செய்து,  தகப்பனின்ர உடுப்புகளையும் சேர்த்துத் தானே தோச்சுப் போட்டிட்டு பள்ளிக்கூடத்துக்கும் ஒழுங்காப் போய் கெட்டித் தனமாப் படிச்சுக் கொண்டு இருக்குது எண்டு……”   ஏ. எல் படிக்கும் காலங்களில் காலையில் கொஞ்ச நேரம் அதிகமாகத் தூங்கி விட்டாலோ, பாடசாலைச் சீருடையைத் துவைத்துப் போட மறந்து விட்டாலோ  பக்கத்து வீட்டு ஆதிரையுடன் என்னை ஒப்பிட்டுப் பேசாமல் இருக்க மாட்டாள் அம்மா.

வருடங்கள் பலவாகி ஆதிரையும் திருமணமாகி நோர்வேக்கு வருகிறாள் என்று தொலைபேசி இலக்கத்தை  அனுப்பி வைத்திருந்தாள். உண்மையைச் சொல்லப் போனால்  சேர்ந்தாற் போல ஆதிரையுடன்  நான் ஒரு சில வாக்கியங்கள் பேசியதே அவள் நோர்வேக்கு வந்த பிறகு தான் . பல வருட வயது இடைவெளி காரணமா..  அல்லது சின்ன வயதில் அம்மா என்னை அவளுடன் ஒப்பிட்டுப் பேசியதால் உள்ளேயிருந்த சின்னக் கடுப்புத் தான் காரணமா என்று தெரியவில்லை.

ஆதிரை வந்த பின் அவளின் திருமணத்திற்காக இங்கு ஒரு முறை வந்து போனது மட்டும் தான். அது தவிர  இந்த இடைப்பட்ட  5 வருடகாலத்தில் ஒரு சில தடவைகள்  தொலைபேசியில் உரையாடிக் கொண்டது மட்டும் தான் நம்மிடையேயுள்ள உறவு.  எப்போது பார்த்துக் கொள்ளும் போதும் ஊரையும் என் குடும்பத்தையும் பார்க்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஆதிரையுடன் இன்னும் நெருங்கிப் பழக முடியாமல் போனதற்கு வேறு மாநிலத்தில் நான் வசிப்பதுடன் என் வீட்டுத் தனி மகாபாரதமும் ஒரு காரணம்.

காலை 7 மணிக்குக் குறுஞ்செய்தி ஒன்றை  அனுப்பிவிட்டுப் போயிருந்தான் சிபி. “விஷயத்தைக் கூறியதும் உடனே நீங்கள் இங்கு புறப்பட்டு வந்தது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. இன்று விரைவில் வீட்டிற்கு வந்து விடுவேன். பேசலாம். தயவு செய்து உங்கள் வீடாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்றிருந்தது அது. அதிகாலையில் வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும் முன் நான் தூங்கிக் கொண்டிருந்ததால் அனுப்பியிருக்கிறான். நேற்றிரவு மிகவும் நேரம் கழித்து வந்திருக்க வேண்டும். அப்படியும் தன் வீட்டிற்கு வந்திருக்கும் அன்னிய மனுஷியான என்னைக் கவனிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் போலும். நடந்ததை அறிந்ததும் உதவியாக இருக்குமே என நானாகத் தான் புறப்பட்டு இங்கு வந்தேன். வந்ததிலிருந்து காவல்துறையினர், வேலை, எனப் பாவம் சிபியை வீட்டில் நான் கண்டதே ஒரு சில மணி நேரம் தான். அப்படியே வீட்டில் இருக்கிற நேரங்களிலும் படபடப்பாகவோ கோபமாகவோ அவன் தொலைபேசியில் யாராருடனோ உரையாடிக் கொண்டிருப்பது கேட்கிறது.

வந்து இரண்டு நாளானதால் வீட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்ததில் இருக்கின்ற பொருட்கள் அத்துப்படியாக, சின்னதாக ஒரு சமையலை முடித்து விட்டிருந்தேன். சமையலில் முற்பகல் கழிய, மாலையில் உள்நாடு வெளிநாடு எனக் கணணியில் ஏதேதோ செய்திகளைப் பார்த்தாகி விட்டது. எதைப் படித்தாலும்

7 மாதக்குழந்தையுடன் நடைப்பயிற்சிக்காக வெளியே சென்ற 34 வயதுப் பெண்மணியை 5 நாளாகக் காணவில்லை. கணவன் அதிர்ச்சி. பொலிசார் தீவிரமாகத் தேடி வருவதுடன் நண்பர்கள், அயலார் என்று எல்லோரையும் விசாரித்து வருகிறார்கள்” என்கிற செய்தி மட்டுமே சிந்தனையில் நிலைத்து நின்றது.

பொழுதைக் கரைக்கத் தான் வழி தெரியவில்லை. உள் அறையினுள் புத்தக அலமாரி ஒன்றைப் பார்த்ததாக ஞாபகம். அதிலிருந்து எதையாவது எடுத்துக் கொள்ளலாம்  என்று சென்று பார்த்தேன்.  நோர்வேஜிய அகராதி.. ஒரு சில ஆங்கில நாவல்கள்.. நாளிதழ்கள்… தினக் குறிப்பு… பகவத்கீதை எனக் கடந்து சென்ற என் கவனம் மறுடியும் திரும்பிச் சென்று அந்தத் தினக்குறிப்பில் நிலைத்தது. பார்க்கலாமா..? தவறில்லையா..? 5 நாளாக இந்த மர்மம் தொடர்கிறது.. இந்த சமயத்தில் எதுவுமே தவறில்லை என அறிவு கூற, 2012 என எழுதப்பட்ட  அந்த நாட்குறிப்பினைப் பிரிக்கிறேன். ஆதிரையுடையது தான். கிறுக்கலான எழுத்துக்களில் தெளிவில்லாமல் ஏதேதோ எழுதியிருக்க , பக்கங்களைப் புரட்டிச் செல்கையில் “ஜுன் 5” தெளிவான எழுத்துக்களில் கவனத்தை ஈர்த்தது.

“ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று சிபியுடன் பேசக் கிடைத்தது. எல்லாவற்றையும் கொட்டி விட வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்து ஏமாற்றமாகி விட்டது. என்னவோ மிகவும் எரிந்து கொண்டே பேசினார். விசா வேலைகள் பார்க்க நேரம் இல்லை, வேலைப்பளு இப்போது  அதிகமாக இருக்கிறது.. ஒரு மாதமாவது போகட்டும். உனக்கென்ன.. ஜாலியாக உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துப் பொழுது போக்க கசக்கிறதா என்கிற பாணியில் அவர் பேசியபோது என் பிரச்சனைகளை அவரிடம் என்னால் சொல்ல முடியவில்லை. வேறு யாரிடம் சொல்வேன்… எனக்கென்று ஒருவர் வந்தால் இப்படித் தனிமையில் கேட்பாரின்றி அழுது கொண்டிருக்க வேண்டியதில்லை என்று இது வரை காலமும்  நினைத்துக் கொண்டிருந்தேனே.  திருமணம் நிச்சயமான புதிதில்  இரவு பகலாக தொலைபேசியில் கொஞ்சியவர் 6 மாதங்களாகியும்  இன்னமும் விசாவிற்கு விண்ணப்பிக்கவே இல்லையே. ஏதாவது சீதன விஷயங்களில் அதிருப்தியாக இருக்குமா..? இடைப்பட்ட இந்த 6 மாதங்களில் யாரையாவது சந்தித்து மனது மாறி விட்டிருக்குமா..? திருமணமாக முதல் அவரிடம் ஆறுதலையும் புரிந்துணர்வையும் எதிர்பார்த்தது என் தவறு தான்.. இந்தத் திருமணம் நடக்காமல் போனால் அப்பா செத்தே போவார். வாழ்க்கை முழுவதும் இருக்கிறதே..சேர்ந்து வாழும் போது அன்னியொன்னியம் ஏற்படாமலா போகும்.. ஆனாலும் அந்தச் சிடுசிடுத்த பேச்சு காது வழியே இறங்கி நெஞ்சை அடைக்கிறாற் போலிருக்கிறது. ஏன்.. எதற்கு என்கிற பதட்டத்தில் இரவு முழுவதும்  தூக்கமே வரவில்லை.

அதைப் படித்து முடித்ததும் எனக்கு வியப்பாக இருந்தது. 2012 ஜூன்… ஆதிரை நோர்வேக்கு வரும் போது 2014 அல்லது 15 ஆக இருந்திருக்க வேண்டும்.  பல வருடங்களாக நோர்வேஜிய பிரஜாவுரிமை பெற்று வாழ்ந்த சிபிக்கு மனைவியை இங்கு கூப்பிட இத்தனை தாமதமானதா? தன் மனம் விட்டு எல்லாவற்றையும் நாட்குறிப்பில் எழுதுபவளாக இருப்பதால் கடைசியாக எழுதிய நாட்குறிப்பைத் தேடி எடுத்தால் அவள் எங்கு சென்றாள் என்பதற்கு ஏதாவது தடயம் கிடைக்குமோ… ?

மேல் தட்டு, கீழ்த்தட்டு எனத் தேடிப் பார்த்தேன். நாட்குறிப்புகள் எதுவும் தென்படவில்லை. பழைய பொருட்கள் போட்டிருக்கும் அறையைத் திறந்தேன். நான் எதிர்பார்த்தது போல் தூசு படிந்த புத்தகங்கள் இருந்த சில பெட்டிகள் தெரிந்தன. மேலே உள்ள ஓரிரண்டு புத்தகங்களை விலக்க, பத்திரிகைக் குவியல்களுக்கு அடியில் பளிச்சென்ற 2015 இலக்கம் தெரிந்தது,  இழுத்து வெளியே எடுத்தேன். ஆதிரையின் நாட்குறிப்புத் தான். கவனத்தை ஈர்க்கும்படி எதுவும் தெரியாததால் ஒரிரண்டு தும்மல்களுக்கிடையே  பக்கங்களைப் புரட்டுகிறேன்.

2015 சித்திரை 24

வந்து 7 மாதமாகிறது. தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தால் வெட்டியாக அரட்டை அடித்துப் பொழுது போக்குகிறேன் என்று சிபி சத்தம் போடுவதால் இப்போதெல்லாம் பழைய நண்பர்களுடன் பேசுவதை விட்டு விட்டேன். சிபிக்குப் பிடிக்காது என்றால் நியாயமான காரணம் ஏதாவது இருக்கும். தொலைக்காட்சி பார்த்தால், “பிரயோசனமாக ஒன்றும் செய்ய மாட்டாயா? ” என்று அவர்  சிடுசிடுப்பதால் அதையும் விட்டு விட்டேன்.  எனக்கு நானே பேசிக் கொள்வதுடன் சரி.  மற்றவர்களுடன் பேசியே மாசக் கணக்காகிறது. அவருக்குப் பிடித்தபடி நடக்க வேண்டும் என்று இவ்வளவு தூரம் கவனித்துக் கவனித்துச் செய்தாலும் அந்த முகத்தில் துளி கூடத் திருப்தி இல்லையே……! என்னைப் பிடிக்கவில்லையா என்று கேட்டால் உனக்கென்ன பைத்தியமா என்கிறான். இவனுக்கு பிடித்தது பிடிக்காதது என்ன என்று புரியவில்லை. எதற்கெல்லாம் குறை சொல்வான் என்றும் ஊகிக்க முடியவில்லை. ஆனால் இப்படியே அவன் குறை சொல்லும் போதெல்லாம் ஒவ்வொன்றாய் அதை நிறுத்திக் கொண்டே வந்தால் சில காலத்தில் நான் நானாக இல்லாமல் யாரோவாக ஆகி விடுவேன் போல் இருக்கிறது.

வைகாசி 12

இந்த நாட்டிற்கு வந்து சேருவதற்குள் பாதிக்கிழவியாகி விட்டேன். நண்டும் சிண்டுமாய் 5, 6 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லாம் இப்போது எனக்கு இல்லை.  1 அல்லது 2 போதும். ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கு வயதும் முக்கியம் என்பதை ஆரம்பத்தில் சிபியிடம் எவ்வளவோ பேசியிருந்தும் அந்த நினைவு அவரிடம் இருப்பதாகவே தெரியவில்லை.

இன்றுடன் உன் முகத்திலேயே விழிப்பதில்லை என முடிவெடுத்து ஒருவர் பேசக்கூடிய  கடுமையான வார்த்தைகளை வெகு இயல்பாகப் பேசி விட்டுக் கேட்டால் அது ஏதோ கோபத்தில் பேசினேன் என்று சாதாரணமாகச் சொல்கிறார்.  கோபத்தை வார்த்தைகளில் கொட்டி விட்டு அதை அந்த நேர வெளிப்பாடு என்று சொல்வதெல்லாம் ஆண்களுக்கிருக்கும் சலுகைகளில் ஒன்றா? இதையே நான் செய்ய முடியுமா, என்ன ? நான் வந்த புதிதில் நன்றாகத் தானே இருந்தார்.. இப்போது மாறி விட்டாரா.. ? அல்லது இது தான் உண்மையான சிபியா..?

வேலை வேலை என்று இரவு 1 மணிக்கு மேல் வரத் தொடங்கியிருக்கிறார்.  சனி ஞாயிறென்றால் கணனியை வரவேற்பறையில் வைத்துக் கொண்டு கூசாமல் உட்கார்ந்து ஆபாசத் திரைப்படங்களைப் பார்க்கிறார்.  கேட்டால் “relaxation” ஆம்! புரியவில்லை. இப்போதெல்லாம் தொலைபேசியில் பேசும் போது அறைக்குள் சென்று விடுகிறார். இத்தனைக்கும் மற்றவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வழக்கம் எனக்கு  எந்த விதத்திலும் இருந்ததில்லையே. அவ்வளவு தூரம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரணம் புரியவில்லை. 

நான் அனாவசியமான சுமையாக அவருக்குத் தெரிகிறேனா?”

கைத்தொலைபேசி அழைத்தது. மருமகள்  தான். வழக்கமான விசாரிப்புகள் முடிந்து தன் குரல்வளையை நெரித்துக் கொண்டிருந்த “எப்ப வருவீங்க மாமி?” என்ற தன் கேள்வியை ஒருபடி கேட்டு விட்டாள். என்ன சொல்வேன்.. எப்போது திரும்பலாம் என்று புரியவில்லை. 5 நாளாகத் தேடுகிறார்கள். இன்னும் எத்தனை நாளாகும் என்பதை யாரறிவார்? ஏற்கனவே வீட்டில் சொல்லி வைத்தபடி  2 நாளில்  எப்படியும் வந்து விடுவேன் எனச் சொல்லிவிட்டு வைக்கிறேன். அதற்குள் கிடைப்பாளா இந்தப் பெண்…..?

எதையெதையோ எண்ணி மீண்டும் குழப்பமாக இருந்தது.  குழந்தையுடன் ஊரை விட்டுப் போயிருப்பாளா? எப்படி..?  “உணவு சமைத்து மேசை மேல் வைத்திருக்கிறேன். வெளியே குழந்தையை அழைத்துச் செல்கிறேன். நேரமானால் எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடுங்கள்” என்று மாலை 5 மணிக்குக் கணவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியவள்…. எதையுமே எடுத்துக் கொள்ளாமல், திடீரென்று ஊரை விட்டுப் போவதெப்படி?  5.40 மணிக்குக் குழந்தையை பூங்காவில் விளையாட விட்டு அவள் பார்த்துக் கொண்டிருந்ததை அயல் வீட்டுப் பெண் கண்டதாக வேறு சொல்லியிருக்கிறாள். சிபியுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளால் தற்கொலை ஏதாவது செய்து கொண்டிருப்பாளா? அப்படியானால் குழந்தை எங்கே…? ஒரு சின்ன நகரத்தினுள் எந்தத் தடயமும் இல்லாமல் இருவர் மாயமாய் மறைந்து விட முடியுமா என்ன?

முடிவில்லாத கேள்விகளுடன் கையிலுள்ள தினக்குறிப்பைப் பெட்டியினுள் வைக்கிறேன்.  2018 இன் நாட்குறிப்பைப் புரட்டினால். பல பக்கங்கள் சேர்ந்தாற் போல எதுவும் எழுதப்படாமல் இருந்தது. இடையே சித்திரை 24, 25 ஆம் திகதிகளில் பக்கம் கொள்ளாமல் எழுதித் தள்ளியிருந்தாள்.

 சித்திரை 24

நான் பயந்தது இம்முறையும் நடந்து விட்டது.  இந்த முறையும் என் குட்டி உயிர் எனக்குள் கரைந்து போய் விட்டது.  இது நான்காவது முறை. போன வாரமே என்  சின்னப்பெண்ணின் இதயம் முழுவதுமாய் வளர்ச்சியடைந்திருக்கும் என்று வைத்தியர் சொன்னார். இந்த வாரமானால் ஆண்- பெண் வித்தியாசங்கள் தெரியுமாம். அதற்குள்……. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய்க் கடந்து போன இந்த 60 நாட்களுக்குள் தான் எத்தனை கற்பனைகள்..  குட்டிக்குப் பெயரும் வைத்துத் தினமும் கொஞ்சிப் பேசிப் புது உறவொன்றை வளர்த்துக் கொண்டேனே… கடவுளே.. என் உயிரை எடுத்துக் கொள். என் உடலுக்குள் ஒரு பூவைப் பூக்க வைத்துப்  பிறகு அதையே மயானமாக்குகிறாயே.  என் கருப்பை மட்டும் ஏன் இப்படி சபிக்கப்பட்டதொன்றாகி விட்டது..?!.  பூச்சி புழு, நாய் பூனை என எல்லா உயிர்களுக்கும் இயல்பாக கிடைக்கும் தாய்மை எனக்கு மட்டும் ஏன் இப்படிப் பெற முடியாத பெரிய வரமாகவே இருக்கிறது….?   அத்தனை கேவலமான பிறப்பா எனது? தண்ணீரைத் திறந்து விட்டுக் குளியலறையில் நெடுநேரமாய் நனைந்தபடி கதறி அழுதேன்.  கடவுளே என்னைக் கொண்டு போய் விடு. நானே முழுவதுமாய் உடைந்து போன பின் உடல் வலி கூடப் பெரிதாகத் தெரியவில்லை…… வலியுடன் குளித்து முடித்து மதியம் சாப்பாடும் செய்து முடித்த பிறகு தான் சிபி நித்திரையால் எழும்பினார். முன்னர் சிபியை எழுப்பிச் சொல்லி நன்றாக அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அனுபவங்கள் இருந்ததனால் இந்த முறை அவரை எழுப்பவில்லை. என்னைப் பார்த்தே புரிந்து கொள்வார் என்று நினைத்துப் பின்னர் நானாகச் சொன்ன போது வழக்கம் போல், “அதெல்லாம் சரிவரும்….. இந்த முறை சரிவரவில்லை என்றால் அடுத்த முறை. அவசரப்படாதை .. ” என்று சொல்லிவிட்டுச் சாப்பிட்டார்.  மாலை முழுவதும் “தண்ணி” யும் சிப்ஸுமாக உற்சாகக் குரல்கள் எழுப்பியபடி கிரிக்கெட் மெச் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதும் போல இதை ரசித்துப் பார்க்க இவரால் எப்படி முடிகிறது..? 33 வயதுக்கு மேல் எனக்கு இனிக் குழந்தை பிறக்குமா என்றே புரியாமல் என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்.

ஆழ்ந்த சிவப்பில் அந்த இரண்டு கோடுகளைக் காண்கிற ஒவ்வொரு தடவையும், அந்த நொடியில் தொடங்கி  சில மணி நேரங்களைக் கடப்பதே ஒரு பூவைக் கொண்டு  சுமக்கும்  கற்பனையில் என்றிருக்கும் போது 30, 40 என்று 60 நாள் வரை எத்தனை ஆசைகளைத் தைத்து என் குட்டிக்கு ஒரு சின்னஞ்சிறு கூட்டினைக் கட்டியிருப்பேன்… அது திடீரெனக் கலையும் வலியை யாரிடம் சொன்னாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றால்… சிபியும் கூடவா….!”

படிக்கப் படிக்க மனது கனத்தது. எல்லா ஆண்களாலும் இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாது தான். எத்தனை பயங்கள் மனக்கவலைகள்.. தாய்மைக்காக இவ்வளவு ஏங்கியிருக்கிறாயா ஆதிரை.. ? இப்போது தான் அழகான ஒரு குழந்தை இருக்கிறதே உனக்கு… என்ன கவலை ? ஏன் காணாமல் போனாய்…? காணாமல் போனாயா…? அல்லது காணாமல் ஆக்கப்பட்டாயா…? உன்னோடு நான் பேசியிருக்கலாம்….சிபியின் அக்கறையின்மை தான் உன்னை விரட்டியதா..? உயிரோடு இருக்கிறாயா….இல்லையா…? குழப்பத்துடன் ஓரிரண்டு பக்கங்களைப் புரட்டுகிறேன்.

சித்திரை 29

ஒரு சில நிமிடங்கள் அவகாசம் கிடைத்தாலும் என்னமோ பதட்டமாக இருக்கிறது. இந்த வீடு தான் மயானம் மாதிரி மிரட்டுகிறதா.. அல்லது இயல்பாகவே இங்கு இருக்கிற அமைதி தான் எனக்குப் பயங்கரமாக தெரிகிறதா என்று புரியவில்லை.  இப்போதெல்லாம் தனியே இருக்கும் நேரங்களில் தொலைக்காட்சியையும் இசைத்தட்டில் பாடல்களையும் ஒரே சமயத்தில் ஒலிக்க விட்டு இந்த வீட்டின் வெறுமையைப் போக்க முயற்சிக்கிறேன்.

 சிபி வீட்டுக்கு வந்தாலே திக் திக்கென்று இருக்கிறது. உள்ளே நுழையும் போதே சிடு சிடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு குப்பையை என் முகத்தில் விட்டெறியும் பாவனையுடன் உள்ளே நுழைந்து, தட்டு மேஜை மேல் சத்தமெழுப்ப அதனுடன் சண்டை போடுவது போல் அவன் சாப்பிடும் போது கூட படபடப்பாகவே இருக்கிறது. கொஞ்ச நேரத்தின் பிறகு கணனிக்குள் அவன் தொலைந்து போயிருக்கும் போது போய்,  என்னில் ஏதாவது கோபமா என்று கேட்டால் இல்லை என்கிறான். அப்போதைக்கு ஆறுதலாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் மீண்டும் அதே சந்தேகம் ஏற்படுகிறது. இப்படி இவன் முக மாற்றங்களைப் பார்த்து அதற்கேற்றாற்போல நானும் மாறிக் கொண்டு.. சே! என்ன வாழ்க்கை.. எனக்கென்று தனித்துவம் ஏதும் இல்லாதவளாக எதற்கும் இவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறேனே. ஏன் இப்படி?

சிறு வயதில் அப்பாவுடன் இருந்த காலங்களில்  “கண்ணம்மா, தங்கமே, என் ராசாத்தியம்மா..  ” என்றெல்லாம் அழைக்கின்ற என்  அப்பா எப்போதாவது “ஆதிரை!” என மொட்டையாய்ப் பெயர் சொல்லி அழைத்தாலே அப்பா என்மேல் கோபமாக இருக்கிறார் என்றெண்ணிப் பயத்தில் ஒடுங்கிப் போய் விடுவேன். அதே போல் இப்போது சிபியையும் மதிப்பிடுவது எத்தனை அறிவீனம்!

000000000000000000000000000000000

அன்புக்காக மிகவும் ஏங்கியிருக்கிறாள். மன உளைச்சலில் இருந்திருப்பாள் போலிருக்கிறதே. இது அவளின் கணவன் சிபிக்குத் தெரியுமா? 2019 இற்குரிய நாட்குறிப்பு எதுவும் தென்படவில்லை. அதனால் ஆதாரமாக எடுத்துக் கொள்வதானால் 2018இன் நாட்குறிப்பு ஒன்றே இருக்கிறது.  அதன் கடைசிப் பக்கங்களை மீண்டும் புரட்டிப் பார்க்கிறேன்.

மார்கழி 18

இரவிரவாகத் தூக்கமே இல்லை. எப்போது விடியும் என்று பார்த்திருந்து பரிசோதனை செய்தேன். மீண்டும் என் கருப்பை பூத்திருக்கிறது! சந்தோஷமாக இருந்தாலும் கஷ்டப்பட்டு மனதை அமைதியாக வைத்துக் கொண்டேன். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது,  இந்த முறை நாட்காட்டிப் பக்கமே போவதில்லை, வேலையால் வந்த பின்பு கட்டாயமாகப் புத்தகம் வாசிப்பது, தைப்பது, வீட்டு வேலைகள் என்று ஓடிக்கொண்டே நாட்களை எண்ணாமல் கழிக்கப் போகிறேன்.

என் குட்டி என்னுடன் இருக்கும் போது சிபியின் முக மாற்றங்கள் கூட என்னை எதுவும் செய்வதில்லை.

சிபி கிறிஸ்மஸிற்காக மரம் வாங்கிக் கொண்டு வந்தார். இருவரும் அதை அலங்கரித்த போது அடுத்த கிறிஸ்துமசிற்கு நாம் மூவராக இருப்போமா என்ற ஏக்கம் மனதினுள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

000000000000000000000000000000000

அவளுடைய ஆசை இம்முறை பலித்திருக்கிறது. அந்தக் கரு தங்கித் தான் கண்ணம்மா பிறந்திருக்கிறாள். கடந்த வருடம் முதல் ஆதிரை சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் 2019 இல் நாட்குறிப்பு என்று எதையும் அவள் எழுதி வைக்கவில்லை போலும்.

அன்று மாலை சிபி என்னுடன் மதிய உணவு உண்டு விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். அலுவலகத்தில் தன் வேலைப்பழு பற்றி.. கண்ணம்மாவுக்கு ஒரு பல்  முளைத்திருந்ததை, அவளின் குறும்புத்தனங்களை, ஆதிரை வீட்டினை அழகாகப் பராமரிப்பது பற்றி எனப் பலதையும் பேசினான், கர்ப்பமாக இருக்கும் என் மருமகளைப் பற்றிக் கேட்டு விட்டு, “அவைக்கும் முதல் பிள்ளை எண்டால் தனிய பயமாத் தானே இருக்கும். இங்கை இவையைத் தேடிக் கண்டு பிடிக்கிறாங்களோ இல்லையோ…  நீங்க  ஏற்கனவே book பண்ணினபடி நாளையிண்டைக்கு காலமை வெளிக்கிடுங்கோ அக்கா. நான் சமாளிப்பேன். ” என்றான்.

ஆதிரைக்கும் கண்ணம்மாவுக்கும் எதுவும் ஆகியிருக்காது, விரைவில் கிடைத்து விடுவார்கள் என அவனுக்கு ஆறுதல் கூறினேன்.  மறு நாள் அவன் யாருடனோ தொலைபேசியில் கத்துவது கேட்டது “பைத்தியக்காரத்தனமா யோசிச்சுக் கொண்டு லூசுத்தனமாய் அந்தக் கழுதை எதையாவது செய்து  வைச்சால் நான் தானே மற்றவைக்குப் பதில் சொல்ல வேணும்..?”  என்ற அவனின் வார்த்தைகளைக் கேட்ட போது ஆதிரையின் கவலைகளில் நியாயம் இருப்பதாகவே பட்டது எனக்கு.

அடுத்த ஒரு நாளில் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருந்ததே தவிரப் புதிதாக வேறு எதுவும் நடந்து விடவில்லை. சிபி ஒரு அவசரக்காரனாகவும் பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஒருவனுமாகவே எனக்குத் தெரிந்தான். ஆதிரை குழந்தையுடன் காணாமல் போனதைப் பற்றிய செய்திகள் எங்கு பார்த்தாலும் வெளிவந்து கொண்டிருக்கும் தருணத்திலும் ஓடி ஓடி அவன் தினமும் வேலைக்குச் செல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விஷயம் தெரிந்து கொண்ட எந்த அதிகாரியும்  இந்த நாட்டில்,  “தம்பி… இந்தப் பிரச்சனை முடியும் வரை வீட்டிலேயே இரு..” என்று லீவு கொடுத்து அனுப்பி விடுவார்களே. மனைவி மக்கள் என்ற உறவை விடவும் நிரந்தரமானது தன் தொழில் மற்றும் எதிர்காலம் தான் என்கின்ற சுயநலப் போக்கா இவனுக்கு… என்றெல்லாம் என்னுள்ளே எழுந்த எதிர்மறையான எண்ணங்களை வலுக்கட்டாயமாகக் கட்டித் தூக்கித் தொலைவில் போட்டேன்.

காலையில் புறப்படும் போது சிபி இல்லை. ரயில் நிலையத்தில் சந்திப்பதாகக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். ஒரு ஞாயிற்றுக் கிழமையில் விடிந்தும் விடியாததுமாகவா ஒருவன் வேலைக்குப் புறப்பட்டுப் போவான்…!

ரயில் நிலயத்திற்குச் செல்லும் பேரூந்தைக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து, முன்கூட்டியே பதிவு செய்திருந்த ரயில்பெட்டி, இலக்கம் எல்லாவற்றையும் தேடிப் பிடித்துப் போய் நான் இருக்கையில் உட்காரவும், வியர்த்து விறுவிறுத்துப் போய் சிபி அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. மூச்சிரைக்க, “அக்கா…அவளின்ர body  15 கிலோமீட்டர் தள்ளியுள்ள கடலுக்குள்ள கிடைச்சிட்டுது…. குழந்தையைப் பற்றித் தான் ஒண்டும் தெரியேல்லயாம்…..” என்று சொல்வதற்குள் ரயில் குலுக்கலுடன் அசையத் தொடங்கியது. , “என்ன…என்ன சொல்லிறாய் சிபி..? எனக்கு முன்னேயும் பின்னாலும் உட்கார்ந்திருந்தவர்கள் நம்மை வேடிக்கை பார்ப்பதையும் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட அலறி விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். “காலையில phone பண்ணினவங்கள். நான் போய்த்தான் அடையாளம் காட்டினனான். ஆதிரை தான் அக்கா.. என்ன செய்யிறது… நீங்க யோசிக்க……” அவனின் குரலையும் மீறிய தடித்த ஆண் குரல் நோர்வேஜிய மொழியில்,

“பயணிகளுக்குக் காலை வணக்கம் . இன்றைய வெப்பநிலை 12 பாகைகள். இடியுடன் கூடிய பலத்த மழை அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த 6 மணிநேரப் பயணத்தில் நீங்கள்… ” என்று அறிவிப்பைத்தொடங்க…. என் வயதையும் சுற்றுச் சூழலையும் மறந்தவளாய், ஜன்னலினூடாகப் பாதி உடலை நீட்டி  அவனை இன்னமும் நம்ப முடியாமல் நான் பார்க்க.. ரயில் மெல்ல மெல்ல வேகமெடுக்கிறது. சட்டென ஒரு பொட்டு மழைத்துளி என் நெற்றிப்பொட்டில் விழுந்து வழிய.. சட சடவென மழைத்தூறல் விழ ஆரம்பித்தது. கண்கள் குளமாக.. தலையை உள்ளே இழுத்துக்கொண்ட போது எனக்கு என்னவோ  என் கண்பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்த சிபியின் முகத்தில் இனம்புரியாத ஒரு ஆறுதலைப் பார்த்தது போன்ற பிரமை ஏற்பட்டது.

உனக்கு அன்று நேர்ந்ததற்கு சாட்சியாய் எதுவுமே இல்லாமல் போனதா ஆதிரை…?

உஷா- நோர்வே

உஷா

(Visited 181 times, 1 visits today)
 

2 thoughts on “புரிந்தும் புரியாதது-சிறுகதை-உஷா”

Comments are closed.