யாதுமற்றவர்கள்-சிறுகதை-பிரவின் குமார் ( அறிமுகம்)

பிரவின் குமார்என்னால் கண்களை லேசாக திறந்து பார்க்க முடிகிறது. ஆனால் சுற்றி இருப்பவர்கள் யார்… யார்… என்பதைத் தான் சரியாக ஊர்ஜிதப்படுத்தமுடியவில்லை.சுற்றி இருப்பவர்களின் குரலை நீருக்கடியில் கேட்பது போல் செவிகள் இரண்டும் அடைத்துக்கொண்டே போகிறது. பின்னந்தலையில் வெட்டுபட்ட இடத்திலிருந்து கசியும் ரத்தத்தை நிறுத்த பஞ்சைக்கொண்டு அழுத்தியபடி இருந்தாள் அந்தச் செவிலி. அவ்வறை முழுக்க என் குருதியின் வாசம் வீசிக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். நரம்புகளின் வழியே ட்ரிப்ஸ் ஏத்தியும், நாசியின் வழியே ஆக்சிஜனைக் கொண்டும் என் உயிரை என்னிடம் திருப்பித் தர மருத்துவர்கள் போராடுகிறார்கள். ஆனால் இருண்மைக்குள் முழுவதுமாக நான் நுழைந்துக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள்.

என் மேல் விழுந்த கத்தி பாப்பாவின் மேல் விழுந்திருக்குமோ…! எப்படி…? எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை. “பற நாயே” என்று கத்திக்கொண்டு வன்மத்தோடு என்னை தாக்கினார்கள் அடுத்தடுத்த விநாடிகளில் அருவாளால் என் உடல் துண்டாடப்பட்டது. சாலையில் நடந்துகொண்டிருந்தவர்களுக்கும், வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களுக்கும் காட்சி பொருளாக ரத்த வெள்ளத்தில் சாலையிலேயே வீழ்ந்துகிடந்தேன். அலறியடித்துக்கொண்டு ஓடும் சத்தமும், பாப்பாவின் அழுகை ஓலங்கள் மட்டுமே அப்போது நினைவில் இருந்தது. என் இறப்பை நேரில் பார்த்தவர்கள் கொலைவெறிக்கு ஓர் உருவம் இருப்பதை இன்று அறிந்திருப்பார்கள். எந்தவித தடங்களுமின்று அவர்கள் நினைத்து வந்த காரியம் அவ்வளவு சுலபத்தில் நடந்தேறியது. என் உயிரின் கடைசி மூச்சு நிறைவு பெருவதற்கான நேரத்தை தொடங்கிவிட்டுச் சென்றார்கள். சுற்றி ஓராயிரம் மனிதர்களுக்கு மத்தியில் புழங்கிக்கொண்டிருந்தாலும் உயிரை தக்க வைத்துக்கொள்வதென்பதே இங்கு போராட்டம் தான்.

சமீபத்தில் தான் எங்களின் திருமணம் முடிந்தது. எந்தவித ஆர்ப்பாட்டமும், கொண்டாட்டமும் இல்லாமல், எளிமையாக எங்கள் காதலுக்குத் துணை நின்ற நண்பர்களின் வாழ்த்துக்களோடு மட்டும் எங்களின் திருமணம் நடந்தது. உறவினர்கள் என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் அவளுக்கு ஆதரவாக நிற்கவில்லை. அவளுக்கு நான் தான் உலகமாகிப்போனேன். அவ்வுலகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பல ஆசைகளோடும்… லட்சியங்களோடும்… என்னுடனான இல்லற வாழ்வை தொடங்க என் கரம் பிடித்தாள். அவள் நேசித்த உலகம் இப்போது அவள் உறவினர்களாலே சூன்யமாக்கப்பட்டது. பாப்பா…! என் மனைவி அகல்யாவை நான் அப்படித் தான் அழைப்பேன்… நிஜத்திலும் அவள் என் பாப்பா தான். நம்பிக்கையும்… மனதைரியமும் கொண்டவர்களுக்கு இவ்வுலகத்தில் இணைந்து வாழ இடம் இல்லை என்பது இச்சமூகத்தால் எழுத்தப்பட்ட விதி போலும். அருவாளால் பதம் பார்த்த என் உடலின் பாகங்கலிருந்து குருதிக்குப் பதில் கண்ணீர் தான் அதிகம் கசிந்துகொண்டிருந்தது. மரணிக்கும் இத்தருணத்தில் உயிரின் வலியை விட பிரிவின் வலியை தான் அதிகம் நான் உணர்கிறேன். இத்தனை நாள் வாழ்ந்த நாட்கள், வாழ நினைத்த அந்த நாட்கள் எல்லாமே மரணத்தின் வாசல் முன் முற்று பெறுவதை மனம் ஏற்க மறுக்கிறது.என் பிறந்தநாளுக்கு புதுத் துணிமணிகள் வாங்குவதற்காக பாப்பா என்னை வெளியே அழைத்து வந்தாள். பிறந்தநாளை சந்திப்பதற்கு முன் மரணத்தை சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. ஒரு வேலை இன்று நாங்கள் வெளி வராமல் இருந்திருந்தால் நான் வாழும் காலம் நீடித்திருக்கலாம்… ஆனாலும் என் மரணம் ஜாதியின் கோர பற்களுக்கென்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக மரணம் என் உடலோடு பிணைத்துக்கொண்டு தழுவதை உணர்கிறேன். மெல்ல கண்கள் சொருகி இருண்ட பாதாளத்திற்குள் நுழைந்தேன்… விடைபெறுகிறேன் பாப்பா… இனி உன் கணவன் திவாகர் நினைவுகளின் வாசமாக மட்டும் உன்னை சூழ்ந்துகொண்டிருப்பான்.

நான் என் உடலில் இருந்து வெளியேறிய அக்கணமே மருத்துவர்களும் என் உயிரை மீட்டெடுக்கும் முயற்சியைக் கைவிட்டார்கள். நான் என் உடல் அருகில் நின்றிருப்பதை அவர்கள் பார்க்கவும் இல்லை உணரவும் இல்லை. ஒவ்வொருத்தராக அவ்வறையை விட்டு வெளியேறினார்கள். நான் மட்டும் அங்கேயே நின்றிருந்தேன். இன்னமும் எனது கண்கள் பாப்பாவின் முகத்தைத் தேடி திறந்தபடியே தான் இருந்தன.

வெட்டுபட்ட என் கழுத்து பகுதியையும், கைகளையும் வெள்ளை பஞ்சை கொண்டு சுற்றி இருந்தார்கள். ரத்தம் ஊரிப்போனதில் அது சிவப்பு நிறத்தினாலான துணியை போல் காட்சியளித்தது. வெளியே ஏதோ சலசலக்கும் குரல்… சட்டென்று அவ்வறையின் கதவை திறந்துகொண்டு மருத்துவர்களும், போலிஸ்காரர்களும் உள்நுழைந்தார்கள். என் உடலின் அருகேயே நான் நின்றிருப்பதை அவர்கள் பார்க்கவில்லை… இல்லை அவர்களின் கண்களுக்கு நான் தெரியவில்லை. கொஞ்ச நேரத்திற்கு என் உடலையே பார்த்துக்கொண்டிருந்த அந்த போலீஸ்காரர் சட்டென்று அந்த பெண் மருத்துவர் பக்கம் திரும்பினார்.

“அந்த பொண்ணு சேப் தானே”

“ம். ஷி ஆல்ரைட் நவ்… அவளுக்கு தலைல அடி பட்டிருக்கு பர்ஸ்ட் ஏய்ட் கொடுத்து இருக்கோம்”

அருகில் நின்றிருந்த இன்னொரு போலீஸ்காரர் அவரிடம் கேட்டார்

“சார் பையன் இறந்து போன விஷயத்த பிரஸ்க்கு இன்பார்ம் பண்ணிடலாமா… ?”

“ம். விஷயம் ஸ்பிரெட் ஆய்டுச்சி… இதுக்கு மேல ஒன்னும் இல்ல… இன்பார்ம் பண்ணிடுங்க”

குழுவாக அந்த அறையை விட்டு அவர்கள் நகர தொடங்கினார்கள்.

“ஸ்பாட்டுக்கு போய்ட்டு விட்னஸ், எவிடென்ஸ் கலட் பண்ணுங்க. அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் வீடு எங்க இருக்கு…? அக்யூஸ்ட் அப்ஸ்காண்ட்டிங் ஆகுறதுக்குள்ள புடிக்கணும்”

அந்த மூத்த போலிஸ்காரர் ஏதேதோ கேள்விகளைக் கேட்டுக்கொண்டும், உத்திரவிட்டுக்கொண்டும் வேகமாக நடந்துச் சென்றார். பாப்பாவிற்கும் ஏதோ அடி பட்டிருக்க வேண்டும் நிச்சயம் தன் உயிரை பிடித்துக்கொண்டு என் உயிருக்காகத் தான் வேண்டிக்கொண்டு இருப்பாள். சுதந்திரமாக திரிந்துகொண்டு அதே சமயம் எவரது கண்ணிலும் சிக்காமல் பாப்பா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை தேடிக்கொண்டு சென்றேன்.

போலிஸ்காரர்கள் மட்டும் ஓர் அறைக்கு முன் குழுமி இருந்தார்கள். “திவாகரு…..” என்று கத்திக்கொண்டு எதிர் நோக்கி ஓடி வரும் ஒரு குரல். அது எனக்கான குரல் மட்டுமல்ல ஒடுக்கப்பட்டவர்களாய் தன் உடமைகளை இழந்து தவிக்கும் ஓர் சமூகத்திற்கான ஒட்டு மொத்த குரலும் தான். என் அம்மா கதறிக்கொண்டு மருத்துவமனைக்குள் ஓடி வந்தாள். அவள் பின்னே என் தம்பியும் என் தகப்பனும். யார் கண்களுக்கும் புலப்படாத காற்றின் பிம்பமாய் அவர்கள் எதிரில் நின்றிருந்தேன். நிர்பந்திக்கப்பட்டவர்களாக நான் இறந்துபோன விஷயத்தை போலிஸ்காரர்கள் என் குடும்பத்தினரிடம் வருத்தம் கலந்த தொனியில் சொன்னார்கள்.. ரத்தத்தையும், கதறலையும் பார்க்காத மருத்துவமனைகள் இவ்வுலகில் ஏது உண்டு. அந்தச் செய்தி அவர்களுக்குள்ளும் ஓர் மரணத்தைத் தருவித்திருக்கும் “எங்கள விட்டு போய்ட்டியேடா திவாகரு…” என்று தீயினில் சருகும் வனத்தைப் போல் அடித்தொண்டையிலிருந்து என் அம்மா கதறினாள்… நானும் கதறினேன்… “நான் உன் அருகில் தான் இருக்கிறேன் அம்மா” என்று கதறிக்கொண்டே இருந்தேன். என் குரல் அம்மாவிற்கு கேட்கவில்லை… அங்கு சுற்றியிருந்தவர்கள் ஒருவருக்கும் என் குரல் கேட்கவில்லை. யாரும் கேட்கத் தயாராக இல்லாத, கண்டுணர முடியாத குரலற்றவனின் குரலாக என் குரல் அந்த மருத்துவமனையில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அப்பா சுவரோடு சாய்ந்துகொண்டு அழுதார், தம்பி அம்மாவின் தோள்களைப் பிடித்தபடி அழுதான். நான் அவர்கள் மூவரின் அழுகையை பார்த்தபடி அழுதுக்கொண்டிருந்தேன். இயலாமை… அது என் வாழ்வில் பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. தண்ணீரை கொண்டு சிலை வடிவமைப்பதென்பது பேதலித்தலின் வெளிபாடு அதுபோன்ற சூழலுக்குத் தான் நான் தள்ளப்பட்டேன். அம்மாவை அரவணைக்க முயற்சி செய்தேன், தம்பியின் கண்ணீரை துடைக்க முயற்சி செய்தேன், அப்பாவின் எதிரில் அமர்ந்து சமாதானம் சொன்னேன். வழியின்று தவிக்கும் எறும்பை போல் மூவரையுமே சுற்றி சுற்றி வந்தேன். என் இருப்பை, என் கதறலை எதையுமே அவர்களுக்கு உணர்த்த இயலாமல் போனது. அவர்கள் என் பிரிவை நினைத்து அழுதார்கள் நான் அவர்களின் வலியை நினைத்து அழுதேன்…

மெல்லியதாய் ஒரு குரல் அறையினுள் இருந்து வந்தது… அது பாப்பாவின் குரல் தான். பாப்பா தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள். இயல்பிலிருந்து அவளின் குரல் வேறொரு சாயலை பெற்றிருந்தது. நான் அறையினுள் நுழைந்தேன். இரண்டு போலீஸ்காரர்கள் பாப்பாவிடம் நடந்ததை விசாரித்துக்கொண்டிருந்தார்கள். நான் இன்னும் நெருங்கிச் சென்றேன். முக்காடு அணிவித்தது போல் அவள் தலையைச் சுற்றி கட்டு போட்டிருந்தார்கள். தலையில் மட்டும் ஏதோ பலத்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். கழுத்து, மார்ப்பு, கரங்கள் என்று கரை படிந்த ரத்தத் தீற்றுகள் அங்கங்கே காட்சியளித்தது. பாப்பா படுக்கையில் அமர்ந்த நிலையிலேயே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கண்ணீர் மட்டும் இடைவிடாது வழிந்துகொண்டே அவளது கண்கள் சோபை இழந்து நிலைகொள்ளாமல் தவித்தது. பாவிகள்…! அவளுக்கு எப்படி எல்லாம் வலித்திருக்குமோ…! யார் இவர்கள்..? எங்கிருந்து வந்தார்கள்..? இவர்களுக்கு என்ன தான் வேண்டும்…? ஆதிக்க மனப்பான்மை எப்படி எல்லாம் இவர்களை வெறிகொள்ள வைக்கிறது. நிம்மதியான எங்களின் இல்லற வாழ்க்கை அவர்களைசரியாக தூங்கவிட்டிருக்காது… ஓநாய்களின் பசி எப்போது அடங்கியிருக்கிறது…? ஓநாய்களின் நீண்ட நாள் திட்டம் இன்று நிறைவேறிவிட்டது. கோவம்… அழுகை… இயலாமை… ஒருசேர என்னை வதைத்துக்கொண்டிருந்தது. கலையிழந்து சோர்ந்து போய் இருக்கும் பாப்பாவின் முகத்தை பார்க்க இனியும் நான் விரும்பவில்லை… என் குடும்பத்தின் கதறலை இனிமேலும் என்னால் கேட்க முடியாது. நான் அந்த அறையை விட்டு, அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தேன். கையில் மைக்கை பிடித்துக்கொண்டு பத்திரிக்கையாளர்கள் ஒரு சிலர் அந்த மருத்துவமனையை முகாமிட்டிருந்தார்கள்.

என் மரணம் தீயாய் பரவி ஊடகங்களை எட்டி இருக்க வேண்டும். ஊடக அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டும், கையில் மைக்கை பிடித்துக்கொண்டும் காமிராவை பார்த்து பேசியபடி என் மரணச் செய்தியை பத்திரிக்கையாளர்கள் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். இடை விடாது அவர்கள் மக்களுக்கு கடத்தும் செய்தியில் திரும்பத் திரும்பத் ஒரு வார்த்தை மட்டும் என் மரணத்தின் வடிவத்தை பறைசாற்றிக்கொண்டிருந்தது. அது “ஆணவக்கொலை”. நான் அப்படி தான் கொலை செய்யப்பட்டிருக்கிறேன் என்றார்கள். நான் ஆணவக்கொலை செய்யப்பட்டதை இதற்குப் பிறகும் இச்சமூகம் ஆவணப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது….? அதன் வரிசையில் எத்தனையோ மரணங்கள் நின்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஆவணப்படுத்துவதற்கே தவிர அதிலிருந்து விடுபட்டு தனித்து வாழ்வதற்கான தடத்தை யாரும் எப்போதும் உருவாக்கப்பபோவதில்லை.

நான் மருத்துவமனையைவிட்டு முழுவதுமாக வெளியே வந்தேன்… எங்கு செல்வது…? எந்த ஒரு முடிவிற்கும் வர முடியவில்லை. மரணித்த பிறகும்  உடலற்று அலைந்துகொண்டிருப்பதற்காகவே இன்னொரு பிறவி எடுக்க வேண்டியுள்ளது. காற்றோடு கலக்கப்பட்ட நிழலைப் போல் ஆனேன். உடலை இழந்த ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் தூபமாகவே அலைந்துகொண்டிருக்கும். நாதியற்று அப்படி அலைந்துகொண்டிருப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. வானமே பாதை என்றான பிறகு நிலத்தின் பாதையை நினைத்து ஏன் குழம்ப வேண்டும். நடந்துகொண்டே இருந்தேன். வழிகளில் சிலர் என் மரணத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்… “ஜாதி வெறி பிடிச்ச நாய்ங்க கொஞ்சநாச்சு இறக்கம் இருக்கா இவன்களுக்கு… வாழ வேண்டிய புள்ள” சிலர் என் மீதான அனுதாபத்தை வெளிபடுத்தினார்கள். “இவன எல்லாம் இப்படி தான் வெட்டனும்… என்ன தைரியம் இருந்தா பெரிய இடத்து பொண்ணு மேல ஆசப் படுவான். சரியா தான் செஞ்சு இருக்கானுங்க” இப்படியும் சிலர் என்னை கொன்றவர்களை பாரட்டினார்கள். என் மரணம் என்னை பின்தொடர்கிறதா இல்லை, என் மரணத்தை நான் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறேனா என்பது தெரியவில்லை. செல்லும் இடங்களிலெல்லாம் என் மரணம் குறித்த செய்தியையே பகிர்ந்துகொண்டிருந்தார்கள். வீதியில் உள்ள கடைகளில் நான் மரணித்த சம்பவத்தை டி.வி சேனல்கள் மறு ஒலிபரப்பு செய்துகொண்டிருந்தன. கண்காணிப்பு கேமிராவின் பார்வை ஒருவேலை என் மீது பதியாமல் இருந்திருந்தால் ஆணவக்கொலை என்பது மறைந்து வெறும் கொலை என்று கூட பல இடங்களில் சித்தரிதிருக்கக் கூடும்.

ஆட்கள் எவரும் புழங்காத ஓர் இடத்தில் நடக்க வேண்டும் போல் தோன்றியது. அருகில் தென்பட்ட தண்டவாளத்தை நோக்கி நடந்தேன். மனிதர்களின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக என்னைவிட்டு விலகிக்கொண்டிருந்தது. தண்டவாளத்தை வந்தடைந்ததும் அதில் நடந்துகொண்டே இருந்தேன். சோர்வு, வலி, தாகம், பசி எதையும் நான் உணரவில்லை. நீண்ட நேரமாக நடந்துகொண்டே இருந்தேன். உடலோடு சேர்த்து உணர்வையும் இழந்திருக்கிறேன் என்பதை அப்போது தான் அறிந்துகொள்ள முடிந்தது.“திவாகர்…” என்று உறக்க யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது. தண்டவாளத்தின் வலது பக்கம் அமைந்துள்ள ஒரு அரச மரத்தின் மீது சாய்ந்த நிலையில் ஏதோ ஒரு உருவம் கை அசைத்து என்னை கூப்பிடுவதைப் பார்த்தேன்.

நான் மற்றவரின் கண்களுக்குப் புலப்படுகிறேன் என்பதையே என்னால் நம்பமுடியவில்லை. தொலைவில் இருக்கும் அந்த உருவத்தை உற்று கவனித்துக்கொண்டே அந்த மரத்தை நோக்கி நடந்தேன். என்னை அழைத்தவர் ஓர் இளைஞனாக இருந்தார். என்னை விட மூன்று நான்கு வயது அதிகம் இருக்கும் என்றே தோன்றியது.. நல்ல உயரத்தோடு, கண்களில் ஏக்கப் பார்வையோடு என்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

“உன் விஷயம் எல்லாம் தெரியும் திவாகர்… நானும் உன்ன மாதிரி தான்”

அதற்கு மேல் பேச நா எழாமல் பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். உடலை இழந்து திரிந்துகொண்டிருக்கும் இன்னொரு உயிர் என்பதை வார்த்தைகளை கொண்டு தான் அறிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை.

“என் பேரு மதன் உன்னோட மரணம் மாதிரி தான் என்னோட மரணமும்… பெரிய வித்யாசம் ஒன்னும் இல்ல… நீ ரோட்ல விழுந்துகிடந்த நான் தண்டவாளத்துல விழுந்து கிடந்தேன் அவ்ளோதான்”

“உங்களையும் ஆணவக்கொலை செஞ்சாங்களா ?”

“என்னோட மரணம் ஆணவக்கொலை செய்யப்பட்ட தற்கொலைனு சொல்லலாம் இல்ல தற்கொலை செய்யப்பட்ட ஆணவக்கொலைனும் சொல்லலாம்… எது எப்படி இருந்தாலும் நான் கொலை செய்யப்பட்டேங்குறது தான் உண்ம… என்னோட மரணம் இந்த உலகத்துக்கே ஒரு புதிர் தான்”

தொலைவில் இருந்து வந்துகொண்டிருந்த இரயிலின் சத்தம் எங்களை திசை திருப்பியது. ஆள் அரவமற்ற அந்த தரிசு நிலத்திற்கு இடையில் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்லும் அந்த இரயிலையே இருவரும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம். கொஞ்ச நேரத்திற்கு பிறகு மீண்டும் மதன் தன் பேச்சை தொடர்ந்தார்.

“இன்னும் எத்தன வருஷத்துக்கு இது தொடர்ந்துகிட்டு இருக்கும்னே தெரியல திவாகர். இங்க சாதி தான் எல்லாமே… சாதிய காப்பாத்தனும் வளக்கனும்…பெத்தெடுத்த அம்மாவா இருந்தாலும் சரி பாசம் காட்டி வளத்த பொண்ணா இருந்தாலும் சரி ஜாதிக்கு எதிரா யாரு எது செஞ்சாலும் அவங்கள கொல்லனும்… அது தான் முக்கியம். இது எல்லாம் பிறப்புலேயே ஊறி போன விஷயம் யாரும் மாற மாட்டாங்க”

அனிச்சையாக பாப்பாவின் நினைவுகளால் மீண்டும் சூழப்பட்டேன்.பாப்பா இப்போது எப்படி இருக்கிறாளோ… என் மரணத்தை நினைத்து வாழும் ஒவ்வொரு வினாடியும் அவள் செத்துக்கொண்டு தான் இருப்பாள். நான் பாப்பாவை விட்டு வந்திருக்கவே கூடாது, எதன் வகையிலாவது என் இருப்பை அவளுக்கு உணர்த்திக்கொண்டு அவள் அருகிலேயே இருந்திருக்க வேண்டும். கடைசிவரை உடன் இருப்பேன் என்று நம்பிக்கை வார்த்தை கொடுத்துத்தானே அவளை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன்… கடைசிவரை அவளுக்கு கொடுத்த நம்பிக்கையை காப்பாற்ற முடியாமலே போய்விட்டது. இனி வரும் ஆபத்துகளிலிருந்தும் கூட அவளை எப்படி காப்பாற்றுவேன் என்று தெரியவில்லை. இந்த மனித பிறவியையே முழுவதுமாக நான் வெறுத்தேன்.

“என்ன மன்னிச்சுடு பாப்பா… மன்னிச்சுடு பாப்பா…” என்று தேம்பி தேம்பி அழ மட்டுமே என்னால் முடிந்தது. மதன் என்னை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.

“அழாத திவாகர் இப்போ எந்த ஆறுதல் வார்த்த சொன்னாலும் உனக்கான வாழ்க்கைய யாராலையும் திருப்பி தரமுடியாது. ஆனா அழுவுரதுனால இப்போ எதுவும் மாறப் போறது இல்லையே… பெத்தவங்கள இழந்து, காதலிச்ச பொண்ண இழந்து இதே தண்டவாளத்துல உட்கார்த்து எத்தன நாள் நான் கதறி கதறி அழுதுருக்கேன்னு தெரியுமா? நம்மளோட குரல் யாருக்கும் கேட்காது திவாகர்… கேட்டாலும் கண்டுக்காம தான் இருப்பாங்க. இறப்புக்கு அப்புறம் இது மாதிரி ஒரு வாழ்க்கைய வாழ்ந்தாகனும்னு நமக்கு மட்டும் விதிச்சிருக்கு போல… எழுந்துரு போலாம்”

மதனும் கண் கலங்கி தான் இருந்தார். நான் அவருடன் பயணப்பட்டேன்… அதே தண்டவாளத்தில் எதிர் புறம் பார்த்து நடக்கத்  தொடங்கினோம். வாழ்வில் எந்த தடங்களும் இல்லாத, எவரின் குறுக்கீடும் இல்லாத முதல் தடவையாக ஓர் நடைப்பயணம் அமைந்திருப்பதாக அப்போது தோன்றியது.இருவரின் வாழ்வில் சந்தித்து வந்த ஏக்க துக்கங்களையே பகிர்ந்துகொண்டு சென்றோம். என் வாழ்வில் சந்தித்த துயரங்களை விட மதன் தன் வாழ்வில் சந்தித்த துயரங்கள் தான் எண்ணற்றவையாக இருந்தன. சமூகத்தோடு இணைத்திருந்தாலும் சரி, விலகி இருந்தாலும் சரி எந்த ஒரு காதலர்களும் தான் விரும்பிய வாழ்க்கையை கட்டமைத்துகொள்ளக்  கூடாது. சாதிக் காவலர்கள் அதை அனுமதிக்கவும் மாட்டார்கள்.  வீட்டை விட்டு வெளியேறி வந்த மதனும் அவரது காதலியும் பாதுகாப்பின்றி பல மாதங்களாக எங்கெங்கேயோ மறைந்தும், பயந்தும் வாழ்ந்திருக்கிறார்கள்.தன் சாதி சாதியின் கௌரவம் சீர்குலைந்ததாக நினைத்து பெண்ணின் அப்பாவும் தற்கொலை செய்திருக்கிறார். இருவரின் காதல் விவகாரத்தில் இரண்டு கிராமங்கள் கொளுத்தப்பட்டிருக்கிறது. தன் காதலியுடன் சேர்ந்து வாழ மதன் காவல் நிலையத்திற்கும், நீதி மன்றத்திற்கும் அலைந்திருக்கிறார். பெண் வீட்டாரின் செல்வாக்கு, அரசியல் கட்சிகளின் தலையீடு என்று தீர்வின்றிப் பல மாதங்களாக அலைக்கழித்து வந்த இவர்களின் காதல் விவகாரம் ஊரையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. காதலியை கரம் பிடிப்பதே இங்கு போராட்டமாக இருக்கும் போது காதலியுடன் சேர்ந்து வாழ்வதற்கு எத்தனை வித துன்பங்களை மதன் எதிர்கொண்டிருந்திருக்கக் கூடும்.இறுதில் மதனின் காதலி மனவுளைச்சலுக்கு ஆளாகி தன் பெற்றோருடனே இருந்துவிடுவதாக நீதமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இத்தனை நாள் சந்தித்துவந்த போராட்டங்களுக்கு விளைவாக அடுத்த நாள் மதனின் உடல் தண்டவாளத்தில் உயிரற்றுக் கிடந்திருக்கிறது. என் இறப்பின் செய்தியை அறிந்து என் அம்மா எப்படி பதறி அடித்துக்கொண்டு அழுதாளோ அதே போல் மதனின் அப்பாவும் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதிருக்கிறார். தனது ஆற்றாமையால் அவதிக்குள்ளானதை நினைத்து தினம் தினம் வெதும்பிக்கொண்டிருக்கிறார் மதன்.

மதன் தான் கடந்து வந்த துயரங்களை ரணங்களின் வலியோடு சொல்லி முடித்தார். என் துயரங்களை மறந்து அவரது துயரங்களுக்காக வருந்தினேன்.பசி, தூக்கம் என்று ஏதுமற்ற இவ்வாழ்வில் எதிரில் நடந்துகொண்டிருக்கும் அநீதிகளுக்குகாக வருந்துவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. பேசிக்கொண்டே நடந்து வந்ததில் ஓர் இரயில் நிலையத்தை வந்தடைந்தோம். வெறிச்சோடி கிடந்த அந்த இரயில் நிலையத்தில் ஓர் உருவம் மட்டும் தனியாக அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவரும் ஓர் இளைஞன் என்பதை அருகே நெருங்குகையில் தெரிந்துகொண்டேன்.நாங்கள் இருவரும் அவர் எதிரே போய் நின்றதும்.

“எங்க போயிட்டு இருக்கீங்க திவாகர்… மதன்…”

எங்கள் இருவரையும் அவர் அடையாளம் கண்டு வைத்திருந்தார்.

“நீங்க பாபுராஜ் தானே”

“ம்… என்னோட நிலைம யாருக்கும் வரக்கூடாதுனு நினைச்சேன்… ஆனா இந்த சாதி இன்னும் நிறைய பேர என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தும் போல இருக்கு”

எதிரில் அமர்ந்திருப்பவரின் மரணத்திலும் ஓர் ஆணவக்கொலை நிகழ்ந்திருப்பதை அறிந்துகொண்டேன்.

“இந்த உலகத்துல மனித இனமே அழிஞ்சாலும் கூட சாதி அழியாது… ஏதோ ஒரு உருவத்துல சாதி அதோட வேலைய செஞ்சுட்டு தான் இருக்கும்”

சொல்லி முடித்ததும் மதன் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.நான் எதுவும் பேசாமல் எதிரில் அமர்ந்திருப்பவரையேவெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நான் யாருனு யோசிக்கிறியா திவாகர்… கொஞ்ச வருஷக்கு முன்னாடி தான் என் தலைய வெட்டி இந்த தண்டவாளத்துல போட்டானுங்க. சாதி கட்சி நடத்துறவங்களுக்கு கொலை செய்யுறது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்லையே… ஒரு கொலைல சாதி கட்டிசியோட தலையீடு இருந்தா என்னவெல்லாம் நடக்கும்குறதுக்கு என் மரணம் தான் ஓர் உதாரணம். எதையோ சாதிச்ச மிதப்புல சிரிச்ச முகத்தோடு கோர்ட்டுக்கும், ஜெயிலுக்கும் போய்ட்டு வராங்க, அத்தனை பேருக்கு முன்னாடி பெருமையா பேட்டியும் கொடுக்குறாங்க… இந்த தைரியம் எல்லாம் எங்க இருந்து வருது எல்லாமே சாதி கொடுக்குற ஆணவம் தான்”

பொறுமை இழந்து என் குரல் இம்முறை கோவமாக மேலோங்கியது.

“அதுக்குன்னு எத்தன நாளைக்குனே மத்தவன் காலடியில நம்ம உயிர கொடுத்துட்டு நிக்குறது… எது நியாயம் அநியாயம்னு கூடவா இந்த உலகத்துக்கு தெரியாது”

பாபுராஜ் எழுந்து என் அருகில் வந்தார்.

“சாதி தான் எல்லாமேனுநினைக்குறஎவனுமே நியாயம் அநியாயம் எல்லாம் பாத்துட்டு இருக்க மாட்டானுங்க திவாகர். நான் யார காதலிச்சேன், அந்த பொண்ணுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இது எதுவுமே நான் இறந்ததுக்கு அப்புறம் கூட வெளி வராம பாத்துகிட்டாங்க. என் கேசு விசாரிச்ச இன்ஸ்பெக்டரே மர்மமான முறைல தற்கொல பண்ணிக்குறாங்கனா சாதியோட ஆதிக்கம் எந்த அளவுக்கு மேலோங்கி இருக்குதுன்னு யோசி… மனுஷ இனமே அழிஞ்சாலும் சாதி அழியாது”

கொஞ்சம் நேரத்திற்கு மூவரும் அமைதியாகவே நின்றிருந்தோம். எங்களுக்கும் முன்போ அல்லது எங்களுக்கு பின்போ ஆவணக்கொலைகளால் உடலை இழந்த உயிர்கள் பல இன்னும் இவ்வுலகில் அனாதரவாய் திரிந்துகொண்டிருக்கக் கூடும். ஆனால் இதற்குப்பின் யாரையும் சந்திக்கக்கூடாது என்று மட்டும் நினைத்துக்கொண்டோம். மீண்டும் நாங்கள் எதிர் நோக்கி அதே தண்டவாளத்தில் நடக்கத் தொடங்கினோம்.

பிரவின் குமார்-இந்தியா

பிரவின் குமார்

 

 

 

 

(Visited 201 times, 1 visits today)
 

4 thoughts on “யாதுமற்றவர்கள்-சிறுகதை-பிரவின் குமார் ( அறிமுகம்)”

Comments are closed.