மரகதம்-சிறுகதை-செல்வகுமார் (அறிமுகம்)

செல்வகுமார்“இன்னாப்பா ஜெய், இவ்ளே காலையிலே பஸ் ஸ்டாண்டு பக்கம்… “

தீடிர்னு யாரோ பின்னாடி இருந்து கூப்பிட  திரும்பி பார்க்கிறான் ஜெய்.

நகர பேருந்தின் பொது கழிப்பிடத்தில் டோக்கன் குடுக்கற வேலை செய்கிறான் ஜெய், பாத்ரூம் மெயின் கேட் பூட்டு சாவி தொலைந்து போனதால் அதை உடைக்க ஆள் வரவழைத்திருந்தார் அவனின் முதலாளி.. வேலை செய்யற இடத்தில் ஒண்ணுக்கு, ரெண்டுக்கு, குளிக்க எதுக்கு வந்தாலும், ஜெய்  அவன பத்தியும் யாருக்காக பஸ் ஸ்டாண்டுல காத்திருக்கிறானோ அவங்கள பத்தியும் பேசிடுவான். அப்படி பழக்கமானவரு தான் பூட்டு உடைக்க வந்த தாத்தா…… அவரிடம் ஜெய் பேசிக் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் இருந்த ரீக்சா வண்டிக்காரன் குறுக்கீடுகிறான்.

“ஒரு நாளா… இரண்டு நாளா… மூணு வருசமானு…இழுக்கிறான்…”

“யோவ்…. வாழ மண்டி…..கொஞ்சம் மூடு…உன்கிட்ட கத கேட்டாங்களா….” என்று ஜெய் அவனை திட்டுகிறான்.

வாழை மண்டியில் இருந்து தினமும் வாழை தாறுகளை ரிக்சா வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் கடைகளுக்கு போடுவான்…. மற்ற நேரங்களில் சரக்கு அடித்து விட்டு பஸ் ஸ்டாண்டில் வண்டியிலே படுத்துக் கொள்வான்……யாராவது பேசிக் கொண்டு இருந்தால் இடையில் குறுக்கிட்டு போதையில் உளருவான்….அதிலும் ஜெய் யாரை பார்த்தாலும் அவன் கதையை சொல்லி விடுவதால்,  ஜெய் எதற்கு பஸ் ஸ்டாண்டுல நிற்கிறான் என்பது ரிக்சாகாரனுக்கு தெரிவதால் இடையில் குறுக்கீடுகிறான்.

’ஒண்ணுமில்ல தாத்தா, காலையில ராணி அக்கா இட்லி கடையில தான் டிபன் பண்ணிட்டு வேலைக்கு போவேன்… அக்கா டிபன் ரெடியாவ இன்னும் கொஞ்சம் நேரம் ஆவும்னு சொல்லிச்சு அதான் கொஞ்ச நேரம் இங்க வந்து நிக்கறேன்…’

பூட்டு சரி பண்ணும் போது கிடைத்த அந்த இடைப்பட்ட நேரத்தில் ஜெய்  மரகதத்த பத்தி பேசியது   தாத்தாவிற்கு நினைவிருந்தது.

’ஜெய், உன் மரகத்த்த என் கிட்ட ஒரு முறை காட்டுப்பா… நா பாக்குறேன்.’

”அதெல்லாம் ஒண்ணுமில்ல தாத்தா நீங்க கிளம்புங்க…. ‘

ஜெய் வெட்கத்தோடு சொன்னவுடன் அவர் புரிந்து கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

”ஒரு காதல் புறா இங்க இருக்க…இன்னொரு காதல் புறா பஸ்ல பறந்து வருதா…’ ரீக்சாக்காரன் ஜெய்யை வெறுப்பேற்றுகிறான்.

”யோவ், வாழ மண்டி உனக்கு ஒரே கிண்டலா போச்சு…’உன் ரீக்சாவ ஒரு நாளூ கயலான் கடையில போட்டுறன் பாரு…”

”அப்பிடி பண்ணி தான் பாரு…என் ரீக்சாவுல உன் புறாவ கடத்திறேன் பாத்துக்க…”

இவர்கள் விளையாட்டாக சண்டை போட்டு கொள்வதை பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு இருக்கும் சில பயணிகள் பார்த்து சிரிக்கின்றனர்.

ஜெய், ரிக்சாகாரனிடம் சண்டை போடுவது, பேசுவது எல்லாம் ஒன்பது மணி ஆகும் வரை தான், சரியாக ஒன்பது மணி ஆகிவிட்டால் அவனிடம் யார் பேசினாலும் அவன் காது கேட்காது….அவன் பார்வை எல்லாம் அசுர வேகத்தில் வர போகும் அம்பிகா பஸ் சர்வீஸ் மேல தான் இருக்கும். வேலைக்கு  போக பஸ் ஏறுவதற்கும், பள்ளிக் கூடம் போக பஸ் ஏறுவதற்கும் பல பேர் அந்த பஸ்ஸிற்க்காக காத்திருக்கின்றனர்.

தனியார் பஸ், கவர்மண்ட் பஸ்னு மாறி மாறி வரும் வசதி இருந்தாலும், ஏனோ தனியார் பஸ்சில் ஏற தான் விரும்புவார்கள். மரகதம் சரியாக ஒன்பது மணிக்கு வருவதும் தனியார் பஸ் காரனுக்கு பெரிய பங்கு இருக்கு.

கோழியை அடைத்து எடுத்து வரும் லாரி போல, ஆண், பெண் பாகுபாடுயில்லாமல் அனைவரையும் வந்த வேகத்திலே இறக்கி விட்டு, உடனே வேகம் எடுத்து விடுவான்.

அதில் மரகதம் தினம் வருவதை பார்த்து சலித்துக் கொள்வான். இந்த கூட்டத்தில் மரகதத்தை எத்தனை பேர் இடித்து இருப்பார்கள். அவள் இறங்கி மூச்சு வாங்குவதை விட இவன் அவளுக்காக மூச்சு வாங்கி விடுவான்.

’ஜெய்…டீ குடிக்க காசு குடுப்பா…”

ஜெய்யிடம் ரிக்சாக்காரன் கிண்டலாக பேசினாலும் கடைசியில் டீக்கு காசு கேட்பான் என்பது ஜெய்க்கு நன்றாகவே தெரியும். ரிக்சாக்காரன் கிண்டல் பண்ணும் போது ஜெய்யின் மனதிற்குள் சந்தோச பட்டு கொள்வான். ஜெய் என்று சொல்வதை விட மரகதம் என்று அவனை கூப்பிடும் போது இன்னும் பேரானந்தம் கொள்வான்.  ரிக்சாக்காரன் கேட்ட டீக்கான காசை எடுத்து கொடுத்து விட்டு,

”யோவ்…ராணி அக்காகிட்ட நான் சொன்னனு இரண்டு இட்லி வாங்கிக்க…”

”சரிப்பா (ஜெய்) மரகதம், தேங்சுப்பா…”

ரிக்சாக்காரனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே வேக பந்தையத்தில் முதல்ல வந்தவள் போல் அம்பிகா பஸ் படு வேகத்தில் வந்து நின்றது. பஸ்சுக்காக நின்றிருந்தவர்கள் ஏறுவதற்கும், பஸ்சில் இருந்து இறங்குவதற்கும் சண்டையிட்டு கொண்டு இருந்தனர். அந்த கூட்ட நெரிசலில் மரகதத்தை தேடிக் கொண்டிருந்தான் ஜெய்.

சட்டென்று அவன் சைக்கிள் ஒரமாக மறைந்து நின்றது.அவ்வளவு கூட்ட நெரிசலில் மரகதம் இறங்கி வருவதை பார்க்கும் ஜெய், அவளின் அழகை ஒரமாக நின்று எட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவனை கடந்து போகும் வரை மறைவாகவே நின்று கொண்டான். மரகதம் அவனை கடந்த பின்பு அவள் பின்னாடியே செல்வான். மரகதம் வேலை செய்யும் போட்டோ பாஸ்ட் கடை வரைக்கும் சென்று எதிரில் உள்ள ராணி அக்கா டிபன் கடைக்கு சென்று விடுவான். அங்கிருந்த படியே மரகதத்தை பார்ப்பான்.

இட்லி ஆர்டர் பண்ணி சாப்பிட்டாலும், சிறிது நேரத்தில் பூரி ஆர்டர் செய்வான். மாவு பிசைந்து, தேய்த்து எண்ணெயில் போட்டு எடுத்து தரும் நேரம் வரை, கடையின் முன் கண்ணாடி வழியே மரகதத்தை பார்ப்பான். இடையில் யாராவது அவனுக்கு போட்ட பூரியை  கேட்டு விட்டால் கோபப்பட மாட்டான். இன்னும் கொஞ்சம் நேரம் அங்கே நின்று மரகதத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக நினைத்துக் கொள்வான்.

கடைக்கு வந்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலையை  செய்வதில் அங்கு மிங்கும் அலைந்து கொண்டு இருப்பாள் மரகதம். ஜெய்யின் கண்கள் அவளை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

”ஜெய், பூரி வேணாமா… ? ராணி அக்கா அதட்டலாக கேட்கிறாள்.டெய்லியும் பாக்கறது தானே, புதுசா பாக்றா மாதிரி பாக்ற….”

ராணி அக்காகிண்டல் பண்ணுவதை ஜெய் ரசித்துக் கொண்டான்.

மரகதத்தை பார்க்க  டிபன் கடைக்கு காலையிலே சீக்கிரம் வருவான்  என்பது ராணி அக்காவுக்கும்  தெரியும்.

வெகு நேரமாக கடையின் உள் அறைக்குள் போனவள் திரும்ப வரவேயில்லை, மெதுவாக செல்போனில் மணியை பார்த்தவன் வேகமாக தட்டை வைத்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.

00000000000000000000000

”ராஜா கணக்கா ஊர் சுத்திட்டு தான் வருவீயா…”

அவனுக்காக காத்திருக்கும் ஜெய்,யின் முதலாளி கோபப்படுகிறார். ஜெய்யின் முதலாளி காலை நான்கு மணிக்கே வந்து பாத்ரூம் திறந்து விடுவதால் அவர் வீட்டிற்கு போக ஜெய்,யை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.

”இல்லண்ணா…டிபன் ரெடியாக நேரமாச்சு… ”

பதில் சொல்லிக் கொண்டே  அவன் இடத்தில் அமர்கிறான்.

’எல்லாம் எனக்கு தெரியும், பஸ் ஸ்டாண்ட்டுல என்ன வேலை பாத்துட்டு வரனு… நாத்தம் புடிக்கற இடத்தில காசு பாக்கனும்… மாப்பிள்ளை கணக்கா வந்தா…பொழப்பு நாறிடும் பாத்துக்கோ…உன் கூட வருவானே அவன் வரலீயா…”

”இல்லனா… அவன சாயங்காலாம் தான் பார்ப்பேன்…வேலையில்லாதப்ப தான் என் கூட வருவான்”

”அவன் கிட்ட பஸ் ஸ்டாண்ட் மேட்டர் என்னனு கேட்டு தெரிஞ்சிக்கிறேன்”.  என கோபமாக பேசிவிட்டு  எழுந்து சென்று விடுகிறார்.

அவன் முதலாளி பேசிக் கொண்டு இருக்கும் போதே, ஜெய் அவன் வேலையை  பார்க்க ஆரம்பித்து விட்டான். இப்படி தினம் அவரிடம் பேச்சு வாங்கி பழகியிருந்தான். சிட்டி, கண் பார்வையற்றவன் அவன் ஒரு சர்ச்சில் குழந்தைகளுக்கு பாடல் சொல்லிக் கொடுக்கும் வேலையை பார்க்கிறான். வேலையில்லாத நாளில் ஜெய் கூட வந்து விடுவான். அவனிடம்  ஏதாவது அவனை பற்றி கேட்டு கொண்டே இருப்பார் ஒனர் என்பதை  நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அனாதை ஹாஸ்டலில் இருந்து வெளியே வந்து என்ன பண்றதுனு தெரியாம ஒரு வேலை உணவுக்கு வழி தேடி அலையும் போது அவரிடம் வேலைக்கு வந்தவன். அவனிடம் கோபமும் கொள்வார், அக்கறையாகவும் இருப்பார் ஜெய்யின் ஒனர்.

00000000000000000000000

” ஹலோ… சொல்லு பாட்டி நான் நல்லா இருக்கேன்… சாப்பிட்டேன்…நீ சாப்பிட்டீயா உன் உடம்ப பாத்துக்கோ….

ம்ம்ம்…

”அதுக்கு என்ன இப்ப அவசரம்…”

ம்ம்ம்….

”நீ இன்னும் நூறு வருசம் நல்லா இருப்ப…பொறுமையா பாத்துகலாம் போன வை…”

ம்ம்ம்…

”பாட்டி நா வேலையில இருக்கேன்…அப்புறம் பேசுற போனை வை… ” பாட்டி விடமால் புலம்பிக் கொண்டே பேசியதால் போனை அணைத்து தன் கீழ் பாக்கெட்டில் வைக்கிறான்.

”பாட்டி… இன்னாப்பா சொல்றாங்க ஜெய்…”

பாத்ரூம் போக  வந்த கீரை கடை மாயக்கா சிரித்துக் கொண்டே கேட்கிறாள்.

”அது ஒண்ணும் இல்ல மாயக்கா, யாரோ புரோக்கர வெச்சி எனக்கு ஒரு பொண்ணு பாத்து இருக்குதா …”

”நல்ல விசயம் தானே “

”அட… போக்கா கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்…”

”சரிப்பா…மரகதம்னு யாரோ ஒரு பொண்ண பாக்குறீயே…அத பத்தி சொல்லிடுப்பா…”

”இன்னும் மரகதத்துகிட்டேயே சொல்லல அதுக்குள்ள பாட்டி கிட்டயா…”

”அட என்னப்பா நீயும் அந்த பொண்ணும் ஊர் சுத்திறீங்கனு கேள்விப்பட்டேன்…”

”மாயக்கா, இப்படி தான் சொல்லிட்டு போயிடு…பகல்லயே கனவா வந்து தொலைச்சுடும்…”

பாத்ரூம் போயிட்டு கேவலம் ரெண்டு ரூபா காச குடுக்காம ஏமாத்துறதுக்கு மாயாக்க ஊசுப்பேத்தி பேசுறது புதுசு இல்லனு ஜெய்க்கு தெரியும்.

இப்படி மரகதத்த பத்தி பேசும் போது ஜெய்க்கு நேரம் போவது கூட தெரியாது. ஒவ்வொரு நாளும் இப்படி யாரிடமாவது பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தான்.

00000000000000000000000

சாயந்திரம் வேலை முடிந்தவுடன் நகரின் மையப் பகுதியில் உள்ள பார்க்குக்கு சென்று விடுவான், அங்கு அவனின் நண்பர்களை சந்தித்து பேசுவதை விரும்புவான்….அவர்களிடம் மரகதம் நடந்து போன அழகுலிருந்து, அன்று அவள் போட்டு இருந்த துணி கலர் வரைக்கும் சொல்லி சந்தோசபடுவான். மற்றவர்களை விட சிட்டியிடம் அவன் பேசுவதை தான் அதிகம் விரும்புவான்.

சிட்டி,யும் , ஜெய்,யும் சிறு வயதிலே ஒரே ஹாஸ்டலில் படித்தவர்கள். ஜெய்,யை பற்றி சிட்டிக்கு தெரியாத விசயங்களே இருக்காது. அவன் வந்தவுடன் அவனோடு பேசி விட்டு இருவரும் ஒன்றாகவே கிளம்பி வீட்டுக்கு செல்வது வழக்கம்.

சிட்டியின் அம்மா சர்ச்சில் கூட்டி பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை செய்து கொண்டு இருக்கிறாள், சிட்டி, சர்ச்சில் அவன்  அம்மாவோடு தங்கிக் கொள்வான். ஜெய்யிக்கு யாரும் இல்லை தனியாக ரூம் எடுத்து தங்கி இருக்கிறான். அவன் பாட்டி மட்டுமே அவனுக்கான கடைசி உறவு. சிட்டி எப்பொழுதும் ஜெய்க்கு முன்னதாகவே வந்திருப்பான், இன்று வருவதற்கு நேரம் ஆவதை தெரிந்து கொண்டு அங்கு இருக்கும் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.

”பாஸ்…ஒரு பொண்ண மூணு வருசமாவ காதலிக்கிறங்க…லவ் பண்றத சொல்ல பயப்படுறீங்களா…, இதுவே எங்கள மாதிரி ஆளுங்களா இருந்தா ஒரு நாள் தான் லவ்வ சொல்லி ஒகேவானு பார்ப்போம், இல்லனா அடுத்த வேலைய பாத்துக்குனு போய்கினே இருப்போம்…”

”இல்ல…நண்பா லவ் பண்றனு சொல்ல பயமா இருக்கு. என்ன புடிக்கலனு சொல்லிட்டா…”

”போங்க…பாஸ் இதெல்லாம் உங்களுக்கு செட் ஆகாது…”

ஜெய்,யும், புதிதாக அறிமுகம் ஆன நண்பனும் பேசிக் கொண்டு இருக்கும் போதே சிட்டி தன் கையில் உள்ள கோலின் உதவியோடு ஜெய் குரலை கேட்டுக் கொண்டே அவன் இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறான்.

”ஜெய்…. நா இல்லாம யார் கூட பேசிக்குனு இருக்கற…”

கேட்டுக் கொண்டே அவன் அருகில் அமர்கிறான்.

”புதுசா…ஒரு நண்பர்…”

”ஒ…அவர்கிட்ட உன் தேவதை பத்தி சொல்லிட்டியா…”

புதிய நண்பன் இடையே குறுக்கீட்டு ,

”லவ் விசயத்திற்கு இவர் சரி பட்டு வர மாட்டாரு பாஸ்…”

புதிய நண்பனிடம் ஜெய் என்ன பேசிக் கொண்டிருந்தான் என்பதை சிட்டி,யிடம்  சொல்கிறான்.

சிட்டி, சற்றும் யோசிக்காமல்  ” யார …பாத்தாலும் வாந்தி எடுக்கிறதே உன் வேலயா போச்சு…. ஜெய்…நான் கிளம்புறேன் என்று வந்த வேகத்திலே கிளம்பி விடுகிறான் சிட்டி..”

சிட்டிக்கு யாராவது குறை சொல்லி விட்டால் கோபம் வந்து விடும், அவர்களிடம் சண்டை போடாமால் எழுந்து வரமாட்டான்.புதுசா வந்த நண்பனுக்கு நேரம் நல்லா இருக்குது என்று நினைத்துக் கொண்டே, சிட்டியை சமாதானம் செய்ய  வேகமாக செல்கிறான்.

00000000000000000000000

சிட்டியின் அருகில் சென்று, அவனா வந்து தான் சிட்டி என்னிடம் பேசினான்…

கோபத்தில் வேகமாக நடக்க முய்றசி செய்து கொண்டு இருந்த சிட்டியை  நிறுத்துகிறான்.

”மொத…மரகதம் மேல இருக்கற மயக்கத்துல இருந்து வெளிய வா…அப்ப தான் யார்கிட்டயும் தேவையில்லாம பேச மாட்ட…”

”சாரி … சிட்டி இனிமே அப்படி யார்கிட்டயும் பேசமாட்டேன்…”

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, சமாதானமாகி  மறுபடியும் ஜெய்கிட்ட பேசுகிறான், ஜெய்யிடம் பேச சிட்டிக்கும் வேறு வழியில்லை மரகதத்த பத்திதான் பேச வேண்டும். யாரிடமும் ஜெய் மரகதத்த தவிர வேறு எதுவுமே பேசியதில்லை.

”ஜெய் உன் ஆளு இன்னிக்காவது உன்ன பாத்துச்சா…”என்று கேட்டவுடன்,

ஜெய் இன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தான். மாயக்கா காசு குடுக்காமல் போனதை சொல்லி சிரித்துக் கொண்டனர். ஜெய்,யின் பாட்டி, போனில் பேசியதை சிட்டியிடம்  சொல்கிறான்.

”அப்புறம் என்ன சீக்கிரம் கல்யாண சாப்பாடு போட போறனு சொல்லு…”

”மரகதத்துகிட்ட சீக்கிரம் லவ்வ சொல்லிட்டு, ஒடி போய் கல்யாணம் பண்ண வேண்டியது தான் சிட்டி…அப்புறமா பாட்டிகிட்ட சொல்லி புரிய வைக்க வேண்டியது தான்…”

”ஆமா…இவரு பேசி முடிச்சு கல்யாணம் பண்ணி ஒடப் போறாரு…என் கண்ணு பொறக்கும் போதே பீஸ் போயிடுச்சு…. சாருக்கு, பொறக்கும் போதே ரெண்டு காலும் காலியாகிடுச்சு . இந்த லட்சணத்துல காதல் வேற…” என்று சொல்லிக் கொண்டே ஜெய்,யின் மூணு சக்கர சைக்கிள் வண்டிய  பின்னாடி இருந்து வேகமாக தள்ளுகிறான் சிட்டி., சைக்கிள் பின்னாடி இரண்டு வீலுக்கு நடுவுல இருக்குற கம்பியின் மீது ஏறி நின்று கொள்கிறான் சிட்டி, பள்ளமான பகுதி என்பதால் மூணு சக்கர சைக்கிள் வேகமாக செல்கிறது. சைக்கிளின் மீது சாய்ந்தவாறு தன் கைகளை மேலே உயர்த்தி கத்துகிறான் சிட்டி….

00000000000000000000000

ஜெய் குழந்தையா இருக்கும் போதே கால் ஊனமா இருக்குறத பாத்து அவனின் அப்பா அவனை அனாதை ஆசிரமத்தின் வெளியே போட்டு விட்டு போய் விட்டான். தன் மகளின் குழந்தை  என்பதால் எப்படியோ தேடிக் கண்டு பிடித்து ஆதரவாக ஜெய்,யின் பாட்டி இருப்பதும், ஜெய் பிறந்தவுடனே அவன் அம்மா இறந்து விட்டாள் என்பதும், ஜெய்,யின் அப்பா இன்று வரை அவனை தேடி வரவில்லை என்பதும் சிட்டிக்கு  நன்றாகவே தெரியும்.

” ஜெய்…உனக்கு எப்படினா ஒரு கல்யாணத்த பண்ணிட்டா…உனக்கு ஆதரவா உறவுகள் வந்து விடும் நாம இல்லனாலும் நம்ம பேரன் அனாதையா இருக்க மாட்டானு ஆசை படுது உன் பாட்டி, நீ என்னடானா கெடைக்காத பொண்ணுக்கு ரூட் போடற……எல்லார்கிட்டயும் அதை பத்தியே பேசிக்குனு ஆசைய வளத்துக்குனே போற…”

”மரகதத்த பார்க்கும் போது ஆள பாத்து லவ் பண்ற பொண்ணு மாதிரி தெரியல சிட்டி…ஒரு நாள் என் சைக்கிளை மேட்டுல ஒட்ட முடியாம தவிக்கும் போது மரகதம் பின்னாடி இருந்து தள்ளிக்குனு வந்துச்சு… நம்பள அசிங்கமா பாக்குற பொண்ணா இருந்தா நம்ப பக்குத்துல வந்திருக்குமா…”

”நாய கொஞ்சரா மாதிரி தான் நம்ப மேல அனுதாபம் காட்டுவாங்க சேர்ந்து வாழ மாட்டாங்க. ஜெய்…. பொறக்கும் போதே உங்கப்பனுக்கு உன்ன புடிக்கல…இங்க இருக்கற எல்லாரும் நம்மள வேற்று கிரகவாசிய பார்க்கற மாதிரி தான் பார்க்கிறானுங்க….அப்பிடியில்லனா பிச்சைக்காரன பாக்குற மாதிரி தான் பாக்கிறானுங்க….உன் மரகதம் உன்ன பரிதாபமா தான் பாக்கும்…தேவையில்லாம ஆசைய வளக்காத…”

சிட்டி, எப்பொழுதும் பேசுவது போல் தான் பேசுகிறான் என்றாலும், ஜெய்யின் மனதில் அந்த பேச்சு வெகு நேரம் அமைதியை கொடுத்திருந்தது.

”ஜெய், மரகதம் பஸ்ல தான் வருது அங்க எத்தன பேர் பார்த்து இருப்பாங்க, அவங்க ஊர்ல பசங்களே இல்லையா ? மரகதம் உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியுதா?… அவுனுங்க எல்லாம் ஹீரோ கணக்கா இருப்பானுங்க, உன்ன லவ் பண்ணி மூணு சக்கர சைக்கிள என்ன மாதிரி டெய்லியும் தள்ளிக்குனு உன் பின்னாடியே வருமா?….நெனைப்பு தான் பொழைப்ப கெடுக்கும்….நாம ஆச மட்டும் தான் படணும் அனுபவிக்க முடியாது…. நீயாவது கனவு காண முடியும், எனக்கு எல்லாமே இருட்டு தான்….”

ஜெய் அமைதியாக இருந்தாலும் சிட்டி பேசிக் கொண்டே வருகிறான்.சர்ச் வந்தவுடன் வண்டிய கேட்டின் அருகே சென்று நிறுத்துகிறான்ஜெய்.

ஜெய் நாளைக்கு பார்ப்போம் என்று சொல்லி விட்டு தன் கையில் உள்ள கோலை அங்குமிங்கும் தட்டிக் கொண்டே சிட்டி சர்ச்சுக்குள் செல்கிறான். ஜெய் ஆழ்ந்த சிந்தனையிலே போகிறான். இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்….சிட்டி பேசியது அவனை யோசிக்க வைக்கிறது. நாம கனவுல மட்டும்தான் மரகதத்த நெருங்க முடியுமா?….கடைசி வரைக்கும் நாம எதுக்குமே ஆசை படக்கூடாதா…? நம்ப வாழ்க்க நம்பள மாதிரியே முடங்கி போயிடுமா…? இப்படி பல சிந்தனையிலே உருண்டு புரண்டு படுக்கிறான்.

00000000000000000000000

பஸ்சில் இருந்து இறங்கி வரும் போது கூட நேராக பார்க்க தைரியமில்லாமல் ஒதுங்கி நின்று பார்ப்பவன். நேராக பேசி விட வந்திருக்கிறான். இரவெல்லாம் யோசித்து ஒரு முடிவெடுத்தவனாக  ராணி அக்கா  கடையை தாண்டி ஒரிடத்தில் நிற்கிறான் ஜெய். மரகதம் வருவதை உறுதி செய்து கொள்கிறான். அவர்கள் கடையில் வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு சுத்தம் செய்யும் வரை காத்திருக்கிறான். மரகதம் உள் அறைக்கு சென்றவுடன், வேகமாக அவனின் சைக்கிள் அந்த கடையின் வாசலில் போய் நிற்கிறது. வாட்ச்மேன், ஸ்டியோவின் கண்ணாடி கதவை திறந்து விடுகிறார். முட்டி போட்டு கொண்டே ஜெய் உள்ளே போகிறான். கீழே அமர்ந்திருக்கும் போதே அவன் பின்னாடி, கண்ணாடி கதவு மூடிக் கொள்கிறது. அதுவரை பெரும் இரைச்சலாக இருந்த சாலையின் சத்தம் அமைதியாக மாறுகிறது. ஜெய் பதற்றமாக காணப்பட்டான். ஏசி காத்திலும் அவன் முகம்  வேர்த்து வியர்த்து இருந்தது.

”அண்ணே, உங்களுக்கு என்ன வேணும் ?”

மரகதத்துடன் எப்பொழுதும்  கூடவே வரும் தோழி நம்மை ஏதோ கேட்கிறாள் என்பது  மட்டும் புரிந்து கொள்கிறான். அவன் காதில் எதுவுமே விழவில்லை.

அங்கிருக்கும் டேபிளை தட்டிக் கேட்கிறாள்,

பதற்றத்தில் இருந்தவன்.

சட்டென்று மரகதம்…………. என்று  சொல்லுகிறான்.

அங்கு வேலை செய்யும் பெண்கள் சிரித்துக் கொண்டே அவனை பார்க்கின்றனர். அவள் தோழி,

“ மரகதம் உன்ன தான் பாக்கணுமா கொஞ்சம் வெளிய வா…’என்று கிண்டல் தொனியில் சொன்னவுடன், தோழி சொல்வதை கேட்டு வெளியே வருகிறாள் மரகதம்.

மரகதத்தை பார்த்த ஜெய், தூரமாகவே அவ்வளவு அழகா இருப்பாள், கிட்ட அதுவும் தொட்டு விடும் தூரத்தில் ஏசி அறையில் அவன் கண் முன்னாடி தேவதையை  போல் நின்றிருந்தாள்.

”சொல்லுங்க, உங்களுக்கு என்ன வேணும்…”

அவள் கேட்பது அவன் காதில் நன்றாகவே கேட்டது, திரும்பவும் அவனுக்கு சமமாக முட்டி போட்டு அவன் அருகில் அமர்ந்து கேட்கிறாள்.

(ஏதோ…ஒரு படத்தில் கதாநாயகி இப்படித்தான் ஊனமானவர்களிடம் அன்போடு பேசுகிவாள்…அது அந்த படத்தின் கதாநாயகனுக்கு காதலை உருவாக்கும். ஏனோ, அந்த காட்சி ஜெய்யின் மனதில் அப்பொழுது தீடீர்னு வந்து போனது….)

அவன் மனதில் நீ தான் வேணும்னு சொல்ல நினைத்தாலும் சொல்ல முடியாமால்,அவளை நேராக பார்க்க முடியாதவனாய், பாஸ்போட் சைஸ் போட்டோ எடுக்கனும்… என மெல்லிய குரலில் பேசுகிறான்.

வாங்க… என அவனை அழைத்து செல்கிறாள் மரகதம். சேர் எடுத்து போட்டு அவன் கையை பிடித்து தூக்கி விட்டு அமரச் செய்கிறாள்…. அவனை போட்டோ எடுத்துக் கொள்கிறாள்…போட்டோ எடுத்து விட்டு எத்தனை காப்பி என்பதையும் கேட்டுக் கொள்கிறாள்…அவன் போகும் போது கதவை திறந்து விடுகிறாள். விட்டால் போதும் என்று  அங்கிருந்து வேகமாக கிளம்பி விடுகிறான் ஜெய். அவன் முகம் பிரகாசமாக இருக்கிறது. ராணி அக்கா கூப்பிடுவதையும் காதில் வாங்காமல் செல்கிறான். இரவெல்லாம் யோசித்து மரகதத்திடம் தன் காதலை சொல்ல வந்தவன் அவளை பார்த்த மறுவினாடி எல்லாம் செயல் இழந்து அவளிடம் பேசிய அந்த நிமிடமே போதுமானதாக உணர்கிறான்.அவனாகவே சிரித்துக் கொள்கிறான்.

00000000000000000000000

வேலை முடிந்து மாலை சிட்டியிடம், இன்று நடந்ததை சொல்ல நேராகவே சர்ச்க்கு சென்று விட்டான். சிட்டி பாட்டு சொல்லிக் கொடுத்து முடிக்கும் வரை காத்திருக்கிறான். சிட்டியால் நம்ப முடியவில்லை…. எப்பொழுதும் சிட்டி தான் ஜெய்யை தேடி பார்க்குக்கு போவான்.

” ஜெய்…மழை வரும் போல…புதுசா என்ன தேடி வந்திருக்கிற…”

” ஏன் வர கூடாதா ? சிட்டி”.

”உன் மரகதத்த பத்தி எதனா முக்கியமான மேட்டரா ?”

ஜெய் எதிர் பார்த்தது தான், எப்படியும் சிட்டி கண்டு பிடித்துவிடுவான்னு. காலையில் நடந்த அத்தனையும் ஜெய் சொல்லி முடிக்கிறான்.அதுவரை அமைதியாக கேட்ட சிட்டி,

” சூப்பரு ஜெய்…. லவ்வ சொல்லிட்டு வருவனு பார்த்தா…. சொர்க்கம் மாதிரி இருந்துச்சு…. தேவதை மாதிரி தெரிஞ்சானு கத விடுற….”

எப்போதும் அட்வைஸ் செய்து கொண்டிருக்கும் சிட்டி, இப்பொழுது ஆறுதலாக பேசுவதை சந்தோசமாகவே எடுத்து கொள்கிறான். ஒரு வேளை சிட்டி மரகதத்த பார்க்க முடிஞ்சிருந்தா நம்ப ஆசை படுறுது தப்பில்லைனு நெனைச்சிருப்பான், அவனாகவே நினைத்துக் கொண்டான்.

”இப்பதானே நேர பாக்குறேன் …இன்னும் கொஞ்ச நாள்ல பேசி என் காதல சொல்லிடுவேன் சிட்டி. ”இதுவரை இல்லாத  நம்பிக்கையோடு பேசினான் ஜெய்.

”ஒரு வேளை கடவுள் உங்க அப்பன் பண்ண பாவத்த மன்னிச்சிருந்தா… உனக்கு தான் மரகதம் போ…” சிட்டி அடிக்கடி, நம்ப அப்பனுங்க பண்ண பாவம் தான் கடவுள் நம்பள தண்டிச்சிட்டானு சலித்துக் கொள்வான்.

ஜெய், சிட்டி பேசுவதை ஏற்றுக் கொள்ள மாட்டான் எல்லா அப்பனுங்களும் தப்பானவங்களா இருக்க மாட்டங்கனு நம்புபவன். அப்படி கடவுள்னு ஒருத்தரு இருந்து தண்டனை குடுக்கறதா இருந்தா தப்பு பண்ணவங்களுக்கு தானே குடுக்கனும் என்பதை நினைத்துக் கொண்டான்.

”சிட்டி ஆர்வமாக, நாளைக்கி என்னையும் பஸ் ஸ்டாண்டுக்கு கூப்பிட்டுக்குனு போ… நீ காதல் பண்றத நேரா கேக்குற…’ சிட்டியின் ஆர்வம் ஜெய், யை சந்தோசபட வைக்கிறது.

00000000000000000000000

காலை பஸ் ஸ்டாண்டில் மரகதம் வந்து இறங்கும் இடத்திற்கு பக்கதில் கொஞ்சம் தள்ளி ஜெய்யும், சிட்டியும் நின்றிருக்கின்றனர்.

” ஜெய், மரகதம் வந்தவுடன் எதனா பேச்சு குடு…”

எப்பொழுதும் அமைதியாகவே மரகதத்தை பார்க்கும் ஜெய் , சிட்டி நடந்து கொள்வது ஒரு விதமான பதற்றத்தை உருவாக்கியது.

”என்ன பேசறது சிட்டி…” பரிதாபமாக கேட்டான் ஜெய்.

”நீயெல்லாம் ராமராஜன் ரசிகனு சொல்லிக்காத…”

ஜெய் படிக்கும் போதிருந்தே ராமராஜனுடைய தீவிர ரசிகன். ராமராஜன் மாதிரியே துணி போட்டு கொள்வது ஜெய்,யிக்கு பிடித்தமானது, ராமராஜன் பாட்டு மட்டுமே அவன் செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பான்.

” நேத்து…போட்டோ எடுக்க வந்த இல்லீங்க…காசு குடுக்காம மறந்து வந்துட்டேன்…இந்தாங்கனு காசு குடுக்கற சாக்குல பேசு….

அதுக்கு மரகதம் கடையில வந்து குடுங்கனு சொல்லும், அப்படியே வாய புடுங்கி பேச வேண்டியது தான்…”

”நேத்து போட்டோ எடுக்குறதுக்கு முன்னாடியே நானே என்ன பேசுறதுனு தெரியாம காசு எவ்வளவுனு கேட்டு குடுத்துட்டேன் சிட்டி…”

” ஒ……, எனக்கு தெரியும் நீ ரொம்ப நல்லவனு…சரி போ ஏதாவது பேச முடியுமானு பாரு…” காதலுக்கு ஜடியா குடுக்க ஆர்வமாக இருந்த சிட்டி சற்று சோர்வாகி நின்று கொண்டிருந்தான்.

அதே வேகத்தில்  அம்பிகா பஸ் வந்து நின்றது. மரகதம் வருவதற்கு முன் இருந்த யதார்த்தம் இப்ப அவனிடம் இல்லை என்பதை புரிந்து கொண்ட சிட்டி. மாங்குயிலே…. பூங்குயிலே… சேதி ஒண்ணு கேளு… பாட்டு பாடி அந்த இடத்தை ஜாலியாக்குகிறான். ஆனால் ஜெய் இறுக்கமாகவே இருக்கிறான். மரகதம் பஸ்சை விட்டு இறங்கி நேராக செல்லாமல் ஜெய் இருக்கும் இடம்  நோக்கி வருவதை பார்த்து விட்டு. சிட்டி பாடுறத நிறுத்து மரகதம் நம்ம கிட்ட தான் வருது….

”ஜெய்…நேத்து உன்ன பாத்து மயங்கி உன் கிட்ட காதல் சொல்ல வருதா…”

”சிட்டி அமைதியா இருனு…” சொல்லும் போதே மரகதம் அவன் அருகில் சிரித்துக் கொண்டே வந்து நிற்கிறாள்.

”இந்தாங்க…. நேத்து நீங்க எடுத்த போட்டோ சாயந்திரம் வந்து வாங்குவீங்கனு நெனைச்சேன்…நீங்க வரல….எப்படியும் காலையில இங்க தான் இருப்பீங்கனு எனக்கு தெரியும்…அதனால நானே எடுத்துகுனு வந்துட்டேன்…” மரகதத்தின் தோழியும் அவளோடு நின்றிருந்தாள்.

”வணக்கங்க, என் பேரு சிட்டிங்க…ஜெய்யோட பிரண்டுங்க…”

சம்மதமே இல்லாம சிட்டி பேசியது ஜெய்யிக்கு பதற்றத்தை கொடுத்தாலும் மரகதத்திடம் தன் பேரை மரகதத்திடம் சொல்லி விட்டதை நினைத்து சந்தோசபடுகிறான். மரகதத்திடம் எப்படி பேசுவது என்று முழித்துக் கொண்டிருந்தவனுக்கு மரகதமே பேசியதால்…இனிமே றெக்க கட்டி பறக்கும் ஜெய்யோட சைக்கிளு….சிட்டி ஜெயின் சைக்கிளை வேகமாக தள்ளிச் செல்கிறான். அவளிடம் பேசி தன் காதலை சொல்ல அருகில் உள்ள பூக்கடையில் பூ வாங்குதும் அவள் சென்றவுடன் பக்கத்தில் உள்ள வினாயகர் சிலைக்கு வைத்து விட்டு போவது மட்டுமே வேலையாக இருந்தவனுக்கு கூடிய சீக்கிரம் அவளிடம் பூ கொடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

பஸ் வரும் வரை காத்திருந்தான்….மரகதம் வந்தவுடன் என் பிரண்ட் ஒருத்தருக்கு அவுங்க குடும்ப போட்டோவ ஆல்பமா போடணுமாங்க ஒரு பிரிண்டுக்கு எவ்ளோங்க….எதையாவது பேசி அவளிடம் நெருங்கி விட சிட்டியின் காதல் ஜடியாவ பயன் படுத்தினான். மரகதமும் அவனிடம் பதில் சொல்லி விட்டு செல்கிறாள்.

‘நேத்து பஸ் ஸ்டாண்டு பாத்ரூமுக்கு வந்தீங்களா உங்கள மாதிரியே ஒருத்தர பார்த்தங்க…’

அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே செல்கிறாள், அவள் தோழியும் சிரித்து விடுகிறாள்…

இது சிட்டியின் ஜடியா இல்ல ஜெய்யின் ஜடியா. சிட்டியிடம் தினம் பேசுவதை சொல்லுகிறான் ஜெய்… பாத்ரூம் மேட்டர் சொன்னவுடன் சிட்டிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

”எனக்கு ஒரு ஆசைங்க… என் போட்டோவுல ரெண்டு காலு இருக்கற மாதிரி ஸ்டைலா நிக்றா மாதிரி மாத்தி தருவீங்களா…”

”ஒ…பண்ணலாமே, ஏற்கனவே எங்க கடையில இருக்கற உங்க போட்டோவை வச்சி மாத்தி தரேன்…”

”இப்பவே நீங்க ஸ்டைலா தான் இருக்குறீங்க… ” என்று சிரிக்கிறாள்.

மரகதம் சொல்லிவிட்டு சென்று விடுகிறாள்…ஜெய்யின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது..

இப்போது எல்லாம் சிட்டியிடம் தினம் நடப்பதை சொல்லி சந்தோச பட்டு கொள்கிறான் ஜெய்.  மரகதம் கிடைத்து விடுவாள் என்ற நம்பிக்கையை அதிகமாக்கி கொள்கிறான்.

சிட்டியும், உங்க அப்ப பண்ண பாவத்த கடவுள் மன்னிச்சுடுவாரு…கவலை படதா நம்ம சமூகத்திற்கு உன்னால பொண்ணு கொடுக்க போட்டி போடுவானுங்க.

சிட்டி அவனை கிண்டல் பண்ணாலும் அவனுக்கு ஆறுதலாகவே பேசுகிறான். இப்படி ஒவ்வொரு நாளும் மரகதத்திடம் பேசுவதற்கு தன்னை தயார் படுத்தி கொள்வதிலே நேரத்தை செலவிடுகிறான் ஜெய்.

00000000000000000000000

திடீரென்று ஒரு நாள் ஜெய்யின் பாட்டி போன் செய்து ஒரு முறை அவனை பார்க்க ஆசைப்படுகிறாள். ஞாயிற்று கிழமை மட்டுமே ஜெய் வெளியே செல்ல விரும்புவான், அன்று மரகதம் வேலை செய்யும் போட்டோ ஸ்டியோவும் விடுமுறையாக இருப்பதால், ஞாயிற்றுகிழமை பாட்டியை பார்க்க ஊருக்கு செல்கிறான்.

”ஏம்பா…ஜெய் நா இல்லனா உன்ன யார் பார்த்துப்பாங்க உனக்கு கல்யாணம் பண்ணிட்டா நா சந்தோசமா போயிடுவேன்…”

”பாட்டி நீ நல்லா இருப்ப…உனக்கு ஒன்னும் ஆகாது…எனக்கு பொண்ணு குடுக்க க்வுலயா… நிக்கறாங்க…”

”புரோக்கரு…ஒரு பொண்ணு காட்டரனு சொல்றாருப்பா…. நீ என்னப்பா சொல்ற…”

”ரொம்ப…நாளா உன்ன பாக்காம இருந்தேன். அதனால தான் நீ போன் பண்ணவுடனே நான் உன்ன பாக்க வந்தேன். தேவையில்லாம எதையாவது பண்ணாத…”

பக்கத்து வீட்டில் இருக்கும் கிழவியும் மற்றவர்களும் சேர்ந்து பொண்ணு பாக்க ஜெய்ய சம்மதிக்க வைக்கின்றனர். ஜெய்யும் சம்மதிச்சு அவர்களோடு செல்கிறான். அவன் பாட்டி அவனுக்கு புது சட்டை வாங்கி போட்டுக்க சொல்கிறாள்.

”பாட்டி, நீ போற வேகத்த பாத்தா கல்யாணம் பண்ணி தான் அனுப்புவ போல…”

”பொண்ணு வீட்டுகாரங்க சரினு சொல்லிட்டாங்க…. உனக்கு புடிச்சா எல்லாம் முடிஞ்சா மாதிரி தான்…”

பாட்டியின் வேகம் ஜெய்யிக்கு சிறு கலக்கத்தை உண்டாக்கியது…சிட்டியிடம் சொன்னால் கிண்டல் செய்வான் என்பதால் அவனிடம் பேசாமல் நடப்பதை பார்த்து கொள்வோம் என்று கிளம்பி அவர்களோடு செல்கிறான்.

00000000000000000000000

பெண் வீட்டிற்கு போகும் முன் புரோக்கர் ஜெய்யிடம்,

தம்பி, கல்யாணம் முடிஞ்சு வேலைக்கு டவுனுக்கு போக வேண்டியது இல்ல பொண்ணு வீட்டிலே தங்கி கொள்ளலாம். அவங்களே உன்ன புள்ள மாதிரி வச்சுப்பாங்க சந்தோசம்தானே..

புரோக்கரின் பேச்சு கோபத்தை வர வைத்தாலும்,,,அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக அவர்களோடு போகிறான் ஜெய். பெண் வீட்டில் ஜெய்யை பார்த்து அனைவரும் அன்போடு விசாரிக்கின்றனர். ஒரு முடிவோடுதான் எல்லாரும் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்கிறான். யாரையும் பார்க்கும் மனமில்லாமல் போனை நோண்டி கொண்டு இருக்கிறான்.

”தம்பி, இது தான் பொண்ணு பார்த்துக்கப்பா…”

ஜெய் நேராக பார்க்கிறான்… அந்த பெண் அவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்க்கிறாள். அவள் ஒரு இடத்திலும் நிலையாக நிற்காமல் அசைந்து கொண்டே இருக்கிறாள். அவளை இரண்டு பேர் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். இதை கவனித்த ஜெய் அவன் பார்க்க வந்த பெண் மனம் பாதிக்க பட்டவள் என்பதை  புரிந்து கொள்கிறான்.

”ஏங்க… நானே காலில்லாத முடமா இருக்கிறேன் நான் கட்டிக்கிறவ கொஞ்சமா ஊனமா இருந்தாலும் பரவாயில்லை…இப்படி இருந்தா எப்படிங்க…”ஜெய் அவர்களிடம் கோபித்துக் கொள்கிறான்.

”யோவ்…புரோக்கரு, எல்லாம் சொல்லிதானே கூப்பிட்டுகுனு வர சொன்னேன்…” என்று பெண்ணின் தந்தை கோபப்படுகிறான். இங்க வந்து என் பொண்ண குறை சொல்லி பேசுறாரு.

’எல்லாம் அவங்க பாட்டி கிட்ட சொல்லி தான் கூப்பிட்டுக்குனு வந்தேன்…” என்று புரோக்கர் சத்தம் போடுகிறான். அங்கு இருப்பவர்களும் சத்தம் போடுகின்றனர்.

’என் பேத்திக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாத்துடலாமுனு அவள மாதிரியே ஒரு ஊனமான ஆளா பாக்க சொல்லி இருந்தோம் ஏதோ உன் பேர்ல ஒரு மனை இருக்கு. நடக்க முடியலனாலும் வீட்டோட வெச்சி பாக்கலாம்னு நெனச்சோம், நீ என்னவோ கிறாக்கி பண்ற….”என்று பெண்ணின் பாட்டி சத்தம் போடுகிறாள்…

”அதுக்கு என் பேரன் தான் கெடச்சானா…” ஜெய், யின் பாட்டியும் சத்தம் போடுகிறாள்

”பொண்ணு வீட்டுகாரங்க புள்ள மாதிரி வச்சி உன் பேரன பாத்துப்பாங்கனு புரோக்கர் சொன்னதால் தான் என் பேரன பொண்ணு பாக்க கூப்டுகுனு வந்தேன். ஆனா இப்படி இருக்குமுனு நாங்க நெனைக்கல. நானே பேரனுக்கு ஒரு பாதுகாப்பா இருக்கும் தான் உங்கள நம்பி வந்தோம்.. நீங்க எங்கள நம்பனா எப்டிங்க….” பாட்டி அவரின் மன வேதனையை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறாள்.

பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை இருக்குமுனு தெரியாம போச்சு என்று புலம்பி கொண்டே  பொண்ணு பாக்க கூட வந்தவர்களும் அங்கு இருந்து கிளம்புகின்றனர். பாட்டி புலம்புவதை பார்த்த ஜெய்,

” வுடு பாட்டி நீ எனக்கு நல்லது பண்ண நெனைச்ச மாதிரி அவன் பொண்ணுக்கு நல்லது நடக்குமுனு நெனைச்சு இருப்பான்…அவனாவது அவன் பொண்ண கூடவே வெச்சிருக்கிறான். பொம்பள புள்ளய என்னை மாதிரி அனாதையா தூக்கி போட்டு இருந்தா….சும்மா வுட்டு இருப்பானுங்க , என்னை பாத்துக்கவே யாராவது வருவாங்காளனு எதிர்பார்க்கிறேன், நான் எப்படி அந்த பொண்ண பாத்துக்க முடியும்…”

ஜெய் கொடுக்கும் காசை சேர்த்து வைத்து ஒரு மனை வாங்கி வைத்து இருந்தாள் பாட்டி. அதை காட்டியே பல பேரிடம் பெண் பார்க்க சொல்லி இருக்கிறாள். விதவை, குறைந்த கண் பார்வை, ஒர் அளவுக்கு நடக்க முடிந்தவள் என அவனுக்கு ஒத்தாசையாக இருக்க பல பெண்களைப் பார்த்தவள் அது தோல்வியில் முடியும் போது அவளுக்கு புலம்புவதை தவிர வேற வழி தெரியவில்லை. இதனிடையே பாட்டி உடல் நிலை சரியில்லாமல் போகிறது…

அன்று மாலையே கிளம்ப இருந்த ஜெய், பாட்டியுடன் இரண்டு நாள் தங்கி பாட்டியின் உடம்பு சரியாகும் வரை அங்கேயே இருக்கிறான்.  இரண்டு நாளும் அவன் நினைப்பு முழுவதும் மரகதம் பற்றியே நினைத்து கொண்டு இருக்கிறது, இடையில் சிட்டியிடம் போனில்  பேசினாலும்…அவன் மனம்  மரகதத்தின் மீது அலைபாய்ந்து கொண்டு இருந்தது. பாட்டி தனக்காக கஷ்டபடுவதை புரிந்து கொண்டு அவள் உடம்பு சரியானவுடன் அங்கிருந்து கிளம்பும் போது,

” பாட்டி நீ கவலை படாத மகாராணி மாதிரி ஒரு பொண்ண பாத்து நானே கூப்பிட்டுகுனு வரேன்…”

” எப்படியோ நா சாவதற்குள் உனக்கு ஒரு துணைய என் கண்ணால பாத்தா போதும் சாமீ…. பாத்து போ…”

பாட்டியிடம் இருந்து கிளம்புகிறான்…அவன் நினைப்பு மரகதத்து மேலே  இருந்தது

00000000000000000000000

இதுவரை பஸ் ஸ்டாண்டில் நின்று இருந்த போது இருந்த எதிர் பார்ப்பை விட இன்று ஜெய் நின்று இருந்தது பல மடங்கு அதிகமாக எதிர் பார்த்து காத்திருந்தான். இரண்டு நாள் அவன் வாழ் நாளில் மிக நிண்ட இடைவெளியாக உணர்ந்தான்.  அதே வேகத்தில் அம்பிகா பஸ் வந்து நின்றது. ஆவலோடு மரகதத்தை எதிர் பார்த்து நின்றிருந்தான்….வந்த வேகத்தில் பஸ்சும் கடந்து சென்றது. மரகதம் அந்த பஸ்சில் வரவில்லை.

ஒரு வேளை தவற விட்டு அடுத்த பஸ்சில் வருவாளா என காத்திருந்தான். அடுத்த இரண்டு மூன்று பஸ்சிலும் மரகதம் வரவில்லை. அவள் தோழியாவது வருவாள் என்றால் அவளும் வரவில்லை மிகுந்த சோகத்தில் ஜெய் அங்கிருந்து கிளம்பி மரகதம் வேலை செய்யும் போட்டோ பாஸ்ட் கடைக்கு செல்கிறான். அங்காவது இருப்பாள் என எதிர்பார்த்து போன ஜெய்க்கு  அதிர்ச்சியாகி, அவனால்  அதில் இருந்து மீள முடியவில்லை கடையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அகலா மரணமடைந்த எங்கள் கடையின் ஊழியர் மரகதம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி என்று மரகதத்தின் போட்டோ வைத்து மாலை போட்டு இருந்தது. அருகில் தண்ணீர் எடுக்க போய் இருந்த ராணி அக்கா ஜெய் நின்று இருப்பதை பார்த்து விட்டு ஜெய்யின் அருகில் வேகமாக வந்து,

” ஜெய், இத என்னால நம்ம முடியலப்பா… காலையில கடை போடலாமுனு வந்தேன். ஸ்டுடியோ கடை பையன் போட்டோவை வைத்து மாலை போட்டுகுனு இருந்தான் …எப்டிடா…தம்பினு கேட்ட எங்களுக்கே காலையில ஒனர் போன் பண்ணி சொன்னதுக்கு அப்புறம் தான் தெரியும்னு சொல்லிட்டு போனான்…”

ஜெய் அதை எதையும் காதில் வாங்காமல் நின்றிருந்தான். அவனின் வலியை உணர்ந்த ராணி அக்கா அவனுக்கு குடிக்க தண்ணீர் தருகிறாள். அதையும் வாங்காமல் அமைதியாகவே நின்றிருந்தான் ஜெய். ஸ்டுடியோ வாட்ச்மேன் அந்த வழியாக வருவதை பார்த்த ராணி அக்கா அவரை நிறுத்தி,

”வாட்ச்மேன் அண்ணா… உனக்கு எப்ப தெரியும்…எப்படி செத்தானு உனக்கு தெரியுமா ?”

’காலையில தான் கடை பசங்கா போன் பண்ணாங்கமா. போனா தான் எப்படி செத்துச்சுனு தெரியும்…. நேத்து கூட எனக்கு சாப்பாடு கொடுத்துச்சும்மா…” என்று வருத்தமாக சொல்லிக்கொண்டே ஜெய்யை பார்க்கிறார்.

”ஜெய், வாட்ச்மேன் அண்ண அங்க தான் போறாரு அவரு கூட போப்பா…”என்று ராணி அக்கா வருத்ததோடு ஜெய்யிடம் கூறுகிறாள். ஜெய்யும் எந்த பதிலும் சொல்லாமல் அதிர்ச்சியில் மீளாமல் அவர் பின்னாடியே போகுறான். போகும் வழியில் எப்பொழுதும் மரகதத்திடம் ஆசையா கொடுக்க வாங்கும் பூவை அவளுக்காக வாங்குகிறான். அவன் எதற்கு பூ வாங்குகிறான், வாங்கிய பூவை ஏன் கோவிலில் வைத்து விடுகிறான், இப்பொழுது எதற்கு பூ வாங்குகிறான் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்து இருந்தாள் பூ கடை அக்கா. அந்த பூ கடையில் இருந்து தான் ஸ்டுடியோவிற்கும் பூ வாங்கி செல்வார்கள், மரகதம் தான் காசு கணக்கு பார்த்து கொடுப்பாள்…மாலை, வேலை முடிந்து போகும் போது அவளுக்கு தேவையான பூவையும் அங்கு தான் வாங்குவாள், கடை பையன் காலையிலே கடைக்கு இன்னிக்கி பூ வேணாம் என்று சொல்லும் போதே மரகதம் இறந்து விட்டதை சொல்லி விடுகிறான். ஜெய்யின் முகம் இறுகி இருப்பதை பார்த்து அவனிடம் பூவை கொடுத்து விட்டு…

” எப்படி செத்துச்சோ…. மகாலட்சுமி மாதிரி வாருவாளே…”  என்று நொந்து கொண்டாள். ஜெய்,யிடம் அவன் கேட்டதை விட இரண்டு முழம் பூ அதிகமாகவே கொடுக்கிறாள்.

00000000000000000000000

நகரத்தில் இருந்து ஆறு ஏழு கிலோ மீட்டர் தூரம் வாட்ச்மேன் பின்னாடியே போகிறான் ஜெய். கிராமத்தின் மெயின் ரோட்டில் இருந்து விலகி மரகதம் வீட்டிற்கு போகும் மண்ணும், கல்லும் கலந்த சாலை முழுமையடையாத ரோட்டில் ஜெய் தடுமாறி சைக்கிளை ஒட்டுகிறான். மரகதத்தின்  போட்டோ போட்ட பேனர் அவளின் கிராமத்தின் ஆரம்பத்திலே இருந்தது. அதில் மரகதம் சிரித்த முகத்தோடு இருந்த போட்டோவை பார்த்த ஜெய்க்கு இதுவரை அடக்கி இருந்த கண்ணீர் அவனை அறியாமலே வந்தது. அந்த தெருவின் கடைசியில் மரகதத்தின் வீடு இருந்தது. கடை ஊழியர்கள் அனைவரும் அங்கே நின்று இருந்தனர். வாட்ச்மேனை பார்த்தவுடன் மரகதத்துடன் வரும் அவள் தோழி  அழுகிறாள்….

ஜெய், மரகதம் வைக்க பட்டு இருந்த ஜஸ் பெட்டியின் அருகில் சிறிது நேரம் நின்று மவுனமாக அவளை பார்க்கிறான்,  அவள் முகம் எந்த சலனமும் இல்லாமல் எப்பொழுதும் ஜெய்  பார்க்க துடிக்கும் முகம் போலவே இருந்தது. மரகதத்தின் தோழி ஜெய்யின் அருகில் வந்து அவர் கையில் வைத்து இருந்த பூவை வாங்கி கொண்டு வண்டியை பிடித்து அவர் இறங்கி வர உதவி செய்கிறாள். ஜெய்யும் ஜஸ் பெட்டியின் அருகிலே போய் உட்கார்ந்து விடுகிறான். போட்டோ ஸ்டியோவில் பார்க்கும் போது உண்டான உணர்வு இப்பொழுது அவனுக்கு உருவாகிறது. அவன் காதில் யார் பேசுவதும் கேட்கவில்லை… நிசப்தமான   அமைதியில் மரகதத்தின் முகத்தை பார்க்கிறான்….

” ஜயோ…என் சாமீ…. யார்கிட்டயும் சூதுவாது இல்லாம தானே பழகும் என் பொண்ணு… ” அவளின் அம்மா ஜெய்ய கட்டி பிடித்து கதறி அழுகிறாள். அவளின் கதறல் ஜெய்யை ஒரு நிமிடம் உலுக்கி விடுகிறது. அவன் வாங்கி வந்த பூவை மரகதத்தின் அம்மாவிற்கு அருகில் வைத்து விட்டு அங்கிருந்து விலகி வண்டியில் வந்து அமர்ந்து விடுகிறான்.

ஜெய்யின் எண்ணமெல்லாம் மரகதம் இறக்க என்ன காரணம் என தெரிந்து கொள்ள நினைத்தான்.

அவளின் அப்பா நிலத்திற்க்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு இறந்து விட்டாள் என்பதை மட்டும் தெரிந்து கொண்டான். நேற்று மதியமே இறந்து விட்டாள் காலையில் தான் ஹாஸ்பிட்டலில் இருந்து எடுத்து வந்ததையும்  தெரிந்து கொண்டான். சிறிது நேரத்தில் மரகதத்தின் தோழி ஜெய்யின் அருகில் வந்து நிற்கிறாள் அவளிடம் மரகதம் எப்படி இறந்தாள் என்பதை கேட்கிறான். மரகதத்தின் தோழி, அவனிடம் ஒரு வீடியோவை போட்டு காண்பிக்கிறாள்.

’ ஏய், நீ காலனி பொண்ணு தானே இங்க யார்க்கூட பேசிக்குனு நிக்கற…” என்று மிரட்டலான தொனியில் ஒருவன் சத்தம் போடுகிறான்.  ஊர் தெருவில் இருக்கும் பஸ் நிறுத்துமிடத்தில்  இருந்து தான் மரகதம் தினமும் அவள் இருக்கும் காலனிக்கு போக முடியும். அப்படி தினமும் போகும் போது தன் கூட வேலைக்கு பஸ்சில் போய் விட்டு வருபவர்களிடம் பேசிக் கொண்டே வருவாள்.

”அண்ணே, என் பிரண்டு தானே…” என்று மரகதத்தோடு நின்று இருந்தவன் தடுக்கிறான்.

அண்ண இப்ப மட்டும் இல்லன தெனம் வேலைக்கு போகும் போதும் , திரும்பி வரும் போதும் இவங்க ஜோடியா தான் வருவாங்க..

ஹலோ, மரியாதையா பேசுங்க மரகதம் அவர்களிடம் கோபப்படுகிறாள்.

ஏய், யார பார்த்து ஹலோனு சொல்ற எங்க வீரப்பரம்பரையின் தளபதிடீ…

என்று சொல்லிக் கொண்டே அவள் முடிய பிடித்து இழுக்கிறான ஒருவன்.

அண்ணே நானும் அந்த பொண்ணும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா தானே படிச்சோம்,  நல்ல பொண்ணுனா விட்டுருங்கண்ணா..

டேய் , நீ நம்ப பையன் தானே… காலனி பொண்ணு கிட்ட பேசக் கூடாதுனு உனக்கு தெரியாதா?… அவனை  அடித்து தள்ளிக் கொண்டு போகின்றனர். அதில் மற்றொருவன்  படிச்சி வெளிய வேலைக்கு போய்ட்டா பெரிய இவ்ளா நீ மரகதத்தை அடிக்க பாய்கிறான்…

இப்படி ஊர் பசங்கள ஊசார் பண்ணி சொகுச வாழலாமுனு பிளான் போடுறீங்களா…வேறு ஒருவன் அவளிடம் சத்தம் போடுகிறான்.

டேய் பொறுக்கி மாதிரி பேசினீங்கனா அவ்ள தான் உங்களுக்கு மரியாதைனு ஆவேசமாக கத்துகிறாள் மரகதம்.

அவளை சூழ்ந்து இருந்தவர்களில் ஒருவன் அவள் ஆடையை பிடித்து இழுக்கிறான், வீரப்பரம்பரை தலைவன் அந்த ஊருக்கு புதியதாக ஜாதி சங்க பதவிக்கு வந்திருப்பதால் அவன் ஆட்கள் எல்லோரையும் குடியில் குளிப்பாட்டி இருந்தான். ஒருவன் ஆடையை பிடித்து இழுத்தவுடன் கூட இருந்த மற்ற ஜந்து ஆறு பேரும் அவளின் ஆடையை குறி வைத்து இழுக்க ஆரம்பித்தினர். அதில் அதிர்ச்சி அடைந்த மரகதம் அவர்களிடம் தன் மானத்தை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறாள். அதுவரை அமைதியாக பார்த்த  வீரப்பரம்பரைத் தலைவன்

”டேய், போதும் விடுங்கடா…”

ஏய், ஊர் தெருவ தாண்டி போற வரைக்கும் எங்க பசங்க மேல உன் கண்ணு படக் கூடாது, அடுத்த முறை இப்படி நடந்தா இத்தோடு விடமாட்டானுங்க… உன்ன நாசம் பண்ணீடுவாங்க … திரும்பி பாக்கமா ஒடிப் போ.. என்று அவளை மிரட்டி அனுப்புகிறான். கிழிந்து போன தன் துணிகளால் உடம்பை மறைத்துக் கொண்டு அங்கிருந்து ஒடுகிறாள் மரகதம்.

தம்பிகளா…நம்ப பொண்ணுங்களையும் பையன்களையும் அந்த ஆளுங்க கிட்ட இருந்து பாதுகாக்கனும்…அது தான் நம்ப தலைவரோட கட்டளை, இந்த மாதிரி எந்த மேட்டரா இருந்தாலும் நின்னு யோசிக்காம  செஞ்சுடுங்க …எவன் வந்தாலும் அண்ண பாத்துக்கிறேன் என்பதோடு  முடிகிறது வீடியோ.

ஜெய் வீடியோ பார்க்கும் போதே அங்கிருந்தவர்கள் சிலரும் அவனோடு சேர்ந்து அந்த வீடியோவ பார்க்கின்றனர். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் அமைதியாக பார்த்து கொண்டனர்… ஜெய் கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது. அதோடு விட்டு இருந்தால் கூட பரவாயில்லைனா, அவ வீட்டுக்கு போய் அவங்க அம்மாகிட்ட சொல்லி அழுது இருக்கிறாள் என்று தொடர்ந்தாள் அவள் தோழி.

அவளோட அப்பா வருவதற்குள்…. அவளை அசிங்க படுத்தியதை  அந்த கும்பல்ல இருந்த ஒருத்தன் எடுத்த வீடியோவ  பேஸ்புக்,வாட்ஸ் ஆப் எல்லாத்துலையும் போட்டுட்டான். அந்த வீடியோவ பார்த்து பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் மரகதத்தின் வீட்டு முன்பு கூடி விட்டனர் . ஆனால் யாரும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவங்க அப்பா வந்து சமாதானம் படுத்தியும் அவளுக்கு நடந்த அவமானத்தை அவளால் ஏத்துக்க முடியல. மறு நாள் யார் யாரோ வீடியோவ பாத்துட்டு பேசியிருக்குறாங்க…அவங்க அப்பாவ மிரட்டியிருக்கிறாங்க…. டிவிலயும் அந்த வீடியோவ போட்டு இருக்கிறாங்க. இதெல்லாம் பார்த்து  மனசு உடைஞ்சி பூச்சி மருந்து குடிச்சி இறந்து விட்டாள், அவள் தோழி சொல்லி முடிக்கும் போது ஜெய்யால் கண்ணீரை அடக்க முடியாமல் அழுகிறான். அவள தப்பான பொண்ணா காட்டி அவளை சாகடிச்சுட்டாங்க….

அங்கிருந்த சில பேர், சும்மா உடகூடாது எங்க பொண்ணுக்கு நியாயத்த வாங்கி கொடுக்கனு,ம் கொலைகார பாவிங்க எத்தன நாள் உயிர் வாங்க காத்திருந்தாங்களோ… இவனுங்க பேர் வாங்க எங்க பொண்ணு ஊசுரு தான் கிடைச்சுதா ஆக்ரோசமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அலங்காரம் செய்த உடலை வண்டியில் ஏற்றுகின்றனர்…ஜெய் வாங்கி வந்த பூ மரகதத்தின் தலை முழுவதும் சூடி இருந்தது. வண்டியின் பின்னே சென்ற ஜெய் தெருவின் எல்லையில் நின்று மரகதத்தை கடைசியாக பார்க்கிறான். ஊர் தெருவின் வழியாக தான் சுடுகாட்டிற்கு செல்ல முடியும் என்பதால் சாலையில் பிண வண்டி போகும் போது அதுவரை பூ தூவி, மேளம் அடித்து  அவர்களை பழி வாங்க சபதம் எடுத்து வந்தவர்கள்…பூவை தூவாமல்…எந்தவித சத்தமமும் இல்லாமல் அமைதியாக செல்வதை பார்க்கிறான் ஜெய். எல்லாம் இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல்  மனசு அளவுல  ஊனமா இருப்பது எவ்வளவு வலிய தரும் அவனுக்குள் நினைத்துக் கொண்டான். ஜெய், சிட்டி அவனிடம் பேசும் பல விசயங்களை இப்பொழுது நினைத்து பார்க்கிறான்.

ஊரின் சாலையை கடந்த உடன், மறுபடியும் பூ தூவி, மேளம் அடித்து சென்றனர். ஜெய் அங்கிருந்து செல்லும் போது மண் சாலை துவங்குவதற்கு முன் ஒரமாக இருக்கும் அம்பேத்கர் சிலையை பார்க்கிறான்….அவரை சுற்றி கம்பி வேலி இருப்பதை நீண்ட அமைதியோடு  பார்க்கிறான். கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து செல்கிறான்.மனம் தாங்காமல் சிட்டியிடம் சர்ச்சுக்கு செல்கிறான்…அவனிடம் அழுது புலம்புகிறான்…போனில் மரகதம் இறந்ததை பற்றி சொல்லும்  போதே அவனால் சமாதானம் செய்ய முடியாமல் தவித்தான் சிட்டி. அவனிடம் ஆறுதல் சொல்ல வார்த்தையில்லாமல் அவனை அரவணைத்துக் கொள்கிறான்.

சிட்டி, நாம மட்டும் தான் ஊனமுனு நெனைச்சேன்….நம்பள மாதிரி தான்  மரகதமும்  ஊனம் .எல்லாம் இருந்தும் மனசுல ஊனமா இருந்திருக்கு. நம்ப வலிய வெளிய சொல்லி புரிய வெக்கலாம், ஆனா மரகதத்தின் மன வலிய யாராலும் புரிஞ்சிக்க முடியாது. புரிஞ்சிக்கவும் மாட்டாங்க.

00000000000000000000000

மரகதம் இல்லாத அந்த கடையின் சாலையில் யாரிடமும் பேசாமல் நின்று கொண்டு இருக்கிறான். கண்ணாடி வழியே ஜெய்யை பார்த்த மரகதத்தின் தோழி.அவனிடம்  வருகிறாள்.அவன் கையில் மரகதம் கொடுப்பதற்காக வைத்திருந்த  போட்டவை கொடுக்கிறாள். அதை வாங்கி பார்க்கிறான் ஜெய்.மரகதத்திடம் கால் இருக்கிற மாதிரி டிசைன் பண்ணி ஜெய் கேட்ட போட்டோ. மனம் வெடித்து கதறி அழுகிறான். போட்டோவின் கடைசியில் பார்க்கிறான்.

என்றும் அன்புடன்

மரகதம்

செல்வகுமார்-இந்தியா

செல்வகுமார்

(Visited 380 times, 1 visits today)
 

4 thoughts on “மரகதம்-சிறுகதை-செல்வகுமார் (அறிமுகம்)”

Comments are closed.