மழை-கவிதை-கயல்

 

கயல்

கயல்
ஓவியம் : எஸ்.நளீம்

தான் ஓய்கிற துல்லியத்தில்
உச்சமெய்தும் பெண்ணுடல் நடிப்பை
நம்புவதாய்ச்
சுழிக்கும் ஆணின் உதடுகளென
மழை பாவனை காட்டுகிறது வானம்.

குறும் பச்சைப் பூ உதிர
ஒளிச் சுடர் பதைத்துத் தேடி
பிரதிபலிக்க வெயிலற்று
உடல் சிணுங்கும் கண்ணாடியிலை
மரக் கிளைகள்.

நெடுந்தொலைவு வலசை போய்ச்
சோம்பலுடன் இறகுலர்த்தும்
சாம்பல் தலை ஆட்காட்டிக்கு
வெகுபக்கத்தில் வந்தமரும்
பூனைப் பருந்தாக
சடுதியில் திசை மாறுகிறது காற்று.

குருக்கத்திப் பூ இதழ்களாய்
மெல்ல நகரும் மேகங்களை
அண்ணாந்து பார்த்து
குட்டி மயிலொன்று செய்கிறது
குழந்தை விரல்கள்.

பால் வீதி மறைத்த
அணிகலப் பெட்டியுடைந்து
மரகதச் சில்லுகள்
தரை மோதித் தெறிப்பதாய்
பூமிக் கிளையெங்கும்
கிளைத்தன மின்னல் பூக்கள்.

பறிக்காது உதிர்ந்த அதிரல் கொடிசூழ்
உழத்திக் குரம்பைக்குள்ளிருந்து
அழுகுரல் கேட்டதும்
உடன் தோன்றியது மழைவில்.

தாகித்திருந்த
இலைக் கரங்கள் வாய் குவிக்க
கிளைகளில் படர்ந்து
மலையுச்சிகளில் வழிந்து
வாழைகள் அணைத்து
அல்லிக் குளங்கள் நிறைத்து
வேர்களில் புரண்டு
அதிகாலை திரும்பியது
மழை.

கயல்-இந்தியா

கயல்

(Visited 208 times, 1 visits today)
 
கயல்

வாசனை-சிறுகதை-கயல்

நிலத்தை விற்கவேண்டும் என்று மனோகரன் வந்து நின்றதுமே நெஞ்சுக்குள் ஆலமரத்து விழுதுகள் விர்விர்ரென்று சுழன்று அடிப்பது போலிருந்தது. இடிந்து போய்விட்டார் முருகேசன். “பிசினஸ் நஷ்டமாயிருச்சு. வாங்கின கடனையும் திரும்பத் தர […]

 

6 thoughts on “மழை-கவிதை-கயல்”

Comments are closed.