வாசனை-சிறுகதை-கயல்

நிலத்தை விற்கவேண்டும் என்று மனோகரன் வந்து நின்றதுமே நெஞ்சுக்குள் ஆலமரத்து விழுதுகள் விர்விர்ரென்று சுழன்று அடிப்பது போலிருந்தது. இடிந்து போய்விட்டார் முருகேசன்.

கயல்“பிசினஸ் நஷ்டமாயிருச்சு. வாங்கின கடனையும் திரும்பத் தர முடியல. அவசரமா பணம் புரட்ட வேண்டியிருந்தது. வீட்டுப் பத்திரத்தை வைக்குறதா இல்ல நிலப் பத்திரத்தை வெக்குறதான்னு ஒரு நெலம வந்துருச்சு. அதான அவசரமா எடுத்துப் போய் வெச்சேன். பிரச்சினை தீர்ந்ததும் மூட்டிக்கிடலாம்னு இருந்தேன். உங்கள்ட்ட மறைக்கணும்கற எண்ணமெல்லாம் இல்லப்பா” என்ற மகனை நிமிர்ந்து பார்க்கத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தார் முருகேசன்.
“சரி. எப்ப மீட்க முடியும்?”

“அது… வந்து அப்பா!” தயங்கித் தயங்கி பேசினான் மனோகரன். “வட்டி எக்கச்சக்கமாகிருச்சு. இனி நிலத்த மீட்கறது போல பிசினஸ்ல வருமானம் இல்ல. அதனால்…”

“அதனால…”

“என் கூட்டாளி பிரபுவே நெலத்த வாங்கிக்குறேன்றான். யாருகிட்ட நல்ல விலைக்கு விக்கறதுனு நாமளும் அலையத் தேவையில்ல. நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாம சுளுவா முடிஞ்சிரும்பா. நான் அந்த பிசினஸை விட்டு ஒழிச்சுர்றேன்”

“நீ யோசிச்சு தான் பேசறீயா? அந்த நெலம்,. அது,நம்ம,”

“ப்பா. கடனக் கட்ட முடியாத நான் ஜெயிலுக்குப் போனா பரவாயில்லையா?”

முருகேசன் எதுவும் பதில் சொல்லவில்லை. என்ன இருக்கிறது சொல்ல. எல்லா நியாயங்களும் அவரவருக்கான கல்லறை.

மனைவி இறந்தபோது இனி தங்காது இந்த உயிர் என்று நினைத்தார். ஆசுவாசம் ஏற்பட பல மாதங்கள் ஆயிற்று. முறுக்கிப் பிழிந்த மனதின் துயரம் கண்களில் வழிந்து திசையறியாது தள்ளாடும் போதெல்லாம் கனிவைக் கொட்டிய தன் மகனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்தச் சூறைக் காற்று. பொக்கிசமா பாதுகாத்து வெச்ச வெதைக் கோட்டையை உடைத்துத் தூளாக்கும் பேய்ச் சூறை. யோசித்து யோசித்துத் தலைவலியும் வேதனையும் மண்டியது.

மதியம் நிலத்திற்குப் போனவர் பம்புசெட் ரூமருகே படுத்துக் கொண்டார். தூரத்தில் உச்சிப் பனையில் ஒரு தேனடை தெரிகிறது. பளபளவென்று மஞ்ச நிறத்துல மினுங்கும் மூன்று பாம்புகள் அதிலிருந்து எட்டி எட்டிப் பார்க்கின்றன. அவை முருகேசனைத் தான் எதிர்பாத்துக் காத்திருப்பது போலத் தலையைத் தலையை ஆட்டுகின்றன. உற்றுப் பார்க்கையில் ஒரு பெரிய நாகம் புஸ் என்று சீறுவது வெகு பக்கத்தில் தெரிகிறது. பனை மரம் தொலைவில்தானே இருக்கிறது. இந்த நாகம் எப்படி இவ்வளவு பக்கத்தில் வந்தது? குழம்பினார். தெப்பலாக நனைந்துவிட்டிருந்தார். அதே நேரம் விழிப்பு வந்துவிட்டது. ‘இது என்னானு தெரியலையே’ என்று மனசு திடுக்கிட்டது. மனைவி நுரை தள்ளிப் படுத்திருந்த காட்சி கண் முன்னே வந்து போனது. ஒரு துயரத்தின் வலு மனுசன் சாகும்வரை சத்தமின்றிக் கூடவே வருவதில் தானிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்.

2

மனோகரனுக்கு வாசனைப் பொருட்கள் மீது அலாதியான ஒரு பித்து. மல்லிகைப் பூவின் மணமோ, தலைக்குக் குளித்தபின் கவிதாவிடமிருந்து வரும் சீயக்காய் கலந்த ஒரு வாசமோ, ஊதுபத்தி வாசனையோ அவனுடைய அணைப்பின் இறுக்கத்தை அதிகமாக்கிவிடும். அவர்களுக்குத் திருமணமான இந்த இரண்டு வருடங்களில் அவள் இதைக் கவனித்திருக்கிறாள்.

ஆனால் அவளுடைய மாமனார் முருகேசனுக்கு வாசனைப் பொருட்களெல்லாம் தூரத்துச் சொந்தம். வியாபார விசயமாக அலைபேசியில் பேசியபடியே கைலியைக் குவியலாகத் தரையில் போட்டுவிட்டு அவசரமாக வேட்டி கட்டிக் கொண்டு ஓடுவார். கவிதா அதை எடுத்து ச் சோப்புப் போட்டு ஊறவைத்துவிட்டால் வந்து பார்த்து “ஏன் கவிதாம்மா! அதத் தோச்சு ரெண்டு நாள் தாம்மா ஆச்சு. அதுக்குள்ளனயா மறுக்கா தோய்க்கப் போடறது? ” என்பார். சதா வியர்வை வாசத்தோடும் நெலத்து புழுதியோடும் புழங்கினால் தான் மனுசன் சந்தோசமா இருப்பாரு போல என்று கவிதா நினைத்துக் கொள்வாள். “சரிங்க மாமா. இனி அஞ்சு நாளாவாம அதத் தொடமாட்டனுங்க்” என்றபோது அவள் சொல்வது புரியாமல், “அதான் சரி” என்பதாகத் தலையாட்டுவார்.
வழக்கம் போல ஒரு நாள் மாலை மாமியாரின் படத்துக்கு கவிதா விளக்கேற்றும் போது அதன் அருகே அவர் அமைதியாக நிற்பதைப் பார்த்தாள். “என்ன மாமா?” என்று கேட்டதற்கு நீர் தளும்பும் கண்களுடன் தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

“தாயி! நீதாம்மா வீட்ட பொறுப்பா பாத்துக்கணும். என்ன தான் எம்.எஸ் சி படிச்சி ஆபீசுல பெரிய உத்தியோகம் பாத்தாலும் வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற எம் புள்ளயக் காபந்து பண்ணனும்” என்பார்.

அடிக்கடி அவர் அவளிடம் சொல்வது “வேல வேலனு இருக்காதாம்மா. நேரத்துக்கு நல்லா சாப்புடு” என்பது தான்.

எல்லாவற்றுக்கும் கவிதா, “சரிங்க மாமா” என்பாள் ஒரு முறுவலுடன்.

அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த மனோகரனின் கழுத்தைக் கட்டிக் கொண்ட கவிதா “உங்களோட இந்த பிறந்தநாளுக்கு மாமா, நான், நீங்க எல்லாரும் எங்காவது ஒரு மலைப் பிரதேசத்துக்குப் போகலாமா?” என்றாள். மனோகரன் பதில் சொல்லுமுன் அலைபேசி ஒலித்தது. அவசர அவசரமாக அதை எடுத்த மனோகரன் முகத்தில் ஒரு பதற்றத் துளிர் தெரிந்தது. “சொல்லு பிரபு, ஓ..! நிச்சயமாக. நீ அங்க வந்துடு. பேசிக்கலாம்” என்றான். அவளைப் பார்த்து “முக்கியமான ஒரு வேலை. பிரபு தெரியும்ல, என் காலேஜ் ஃப்ரண்ட். கல்யாணத்தில கூட ரொம்ப அமர்க்களம் பண்ணிட்டிருந்தானே. ஒரு பிசினஸ் விஷயமா அவனைப் பாக்கப் போறேன். வந்ததும் எங்க போறதுனு முடிவு செய்யலாம்” என்று கிளம்பினான்.

பிரபு ஒரு ராஜா வீட்டுக் கன்றுக் குட்டி, தலைமுறை தலைமுறையாகப் பணம் புழங்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதையெல்லாம் அவர்கள் ஒன்றாகப் படித்த போது மாணவர்களுக்குக் கணக்கு வழக்கில்லாமல் அவன் செலவு செய்வதை வைத்து மனோகரன் தெரிந்து கொண்டான். அதே போல நண்பர்களுக்கு அவசரத்திற்குக் கைமாத்து தருவது, எங்காவது வெளியே போக வேண்டுமெனில் தன் காரைத் தருவது என பிரபுவின் குணங்கள் மனோகருக்குப் பிடித்திருந்தன. ஒரு முறை பிரபு மனோகரனின் வீட்டுக்கு வந்திருந்தபோது முருகேசன் அவனிடம், “தம்பி நீங்க எந்த ஊரு? அப்பா என்ன செய்றாங்க? ” என்றபோது அவன் பதில் சொல்லத் தயங்கவும் மனோகரன் குறுக்கிட்டு ” அப்பா எதார்த்தமா கேக்குறாரு. நீ காபி சாப்பிடு” என்று பேச்சை மாற்றினான். அவன் போனதும் “என்னப்பா நீங்க? வீட்டுக்கு வந்தவனை இப்படியெல்லாம் கேட்டுகிட்டு. நீங்க என்னா அவனுக்குப் பொண்ணு தரப் போறீங்களா, இல்ல அவனக் கட்டிக்கிடப் போறீங்களா? ” என்று சிரித்தான். முருகேகனும் சிரித்துவிட்டார்.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு திடீரென ஒரு நாள் பிரபுவுடன் சேர்ந்து லாரி பிசினஸ் செய்யப் போவதாக மனோகரன் சொன்னதைக் கேட்டதுமே முருகேசன் “ஏம்பா! அதெல்லாம் நமக்கு சரி வருமா? முன் அனுபவம் வேணாமா?” என்றார்.

சுருசுருவென்று கோபம் வந்துவிட்டது மனோகரனுக்கு. “பா நான் என்ன இன்னும் சின்னக் கொழந்தையா? அத்தோடு பிரபுவுக்கு இதிலெல்லாம் நல்ல அனுபவம் இருக்கு” என்றான்.
வேண்டாம் என்று அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், மனோகரன் பிடிவாதமாக இருந்தான். வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டார். மனோகரன் லாரி வாங்கக் கிளம்பிய அன்று “நல்லா வரணும்” என்று சந்தோசமாக அனுப்பிவைத்தார். மனோகரனுக்கும் அதைக் கேட்டு மனசு நிறைந்தது.

லாரி வாங்கிய நாளிலிருந்து பிரபு சொன்னது போல வியாபாரம் நல்லபடியாகவே போய்க் கொண்டிருந்தது. எல்லாக் கணக்குகளுக்குமா மனிதனுக்கு எளிதாக விடை தெரிந்துவிடுகின்றன? வாங்கிய இரண்டு லாரிகளும் ஒன்று மாற்றி ஒன்று விபத்துக்குள்ளாகி ஒரு மாதமாக ஷெட்டில் நின்றுவிட்டன. அவற்றுக்கு ஆன செலவு, அதிலிருந்து வரக் கூடிய வருமானத்தை வைத்துக் கட்ட நினைத்து லாரியின் மீது வாங்கிய கடன், அதற்கான வட்டி எனச் சட்டென எல்லாமே ஸ்தம்பித்து விட்டன. அப்பாவிடம் வீராப்பாகப் பேசியிருந்தாலும் வியாபாரம் செய்வது மனோகரனுக்குப் புதிய அனுபவம் என்பதால் தடுமாறிப் போனான்.

சில நாட்களாகவே அவன் தீவிரமான யோசனையில் இருப்பதைக் கவனித்த கவிதா அவனாகச் சொல்வான் என்று பார்த்தாள். அது நடக்காதபோது பொறுக்க முடியாமல் “என்னங்க? எதாவது பிரச்சனையா?” என்ற கேள்விக்கு “ஒண்ணுமில்லயே” என்ற பதிலே கிடைத்தது. இரண்டு மூன்று நாட்கள் காத்திருந்து பொறுமையிழந்துபோய் “சொல்லவில்லை என்றால் என்ன இப்ப?” என்று மறந்து போனாள்.

3

நிலவற்று வெறிச்சோடிக் கிடந்த வானத்தை ஜன்னல் வழியே பார்த்தபடி தூங்காமல் விழித்திருந்தார் முருகேசன்.

புகைப்படத்தின் முன்னே கலங்கி நின்றவரைப் பார்த்து தன் மருமகள் பதறிய குரலில் “என்ன மாமா?” என்று கேட்டது அவர் கண் முன் மினுங்கியது. முருகேசன் வீட்டுக்கு ஒரே பிள்ளை. வயக்காட்டில் நெல்லறுக்க பசுமாட்டுக்குத் தீவனம் வைக்க என்று பொட்டுக் கவுண்டரு வீட்டில் முருகேசனோட அப்பாரு வேல பார்த்தார். தன்னை மாதிரியே தன் மகனும் சகதியில பொரளக் கூடாதுன்னு பத்து மைல் தள்ளியிருக்கிற கவுர்மெண்ட் ஸ்கூலில் அவனைப் படிக்க வைத்தார். சத்துணவு எலவச நோட்டு புஸ்தகம் னு எப்படியோ பள்ளிக் கூடப் படிப்ப முடித்து அதுக்குப் பொறவு காலேஜு படிக்கணும்னப்ப பொட்டுக் கவுண்டரு கிட்ட போய்ப் பணத்துக்கு நின்னுருக்காரு அப்பாரு. “தெக்கால இருக்குற நெலத்தப் பாத்துகிட்டிருந்த அந்தப் பய வெங்கடேசன் போனதில இருந்து ஆளு கெடக்கல சரியா. உன் புள்ளைய பாத்துக்கச் சொல்லு. இம்மாந்தொலவு வரக் கூட வாணாம். வெங்கடேசன் போட்டிருந்த கொட்டாய்லயே தங்கிக்கிடட்டும்” என்றார். நாம பேசறது பொட்டு கவுண்டருக்குச் சரியா புரியலனு நினைத்து மறுபடி ‘பணம் வேணும்’ னு கேட்டார். “எலே முனுசாமி! நெலத்தப் பயிர் பண்ண வழியில்லாம எங்கிட்ட அடமானம் வச்சிருக்கயேனு வேல போட்டுக் குடுத்தா உம் புள்ளைய காலேஜி படிக்க வப்பியோ. என்னா எகத்தாளம்! ” னு சொன்னப்ப தான் அப்பாருக்கு நெலம புரிஞ்சது.
“என்னா யோசன? என் மவன் சுந்தரம் நாளைக்கி அவன் கூட்டாளிகளோடு ஊருக்கு வரான். இவன் அவங்களுக்கு உதவியா கூடமாட இருக்கட்டும்” என்றவர் முருகேசனைப் பார்த்து, “காலீல வெள்ளனவே வந்திரு. என்னடா!” என்றார்.

பொட்டுக் கவுண்டர் மகன் சுந்தரம் பட்டணத்துக்குப் படிக்கப் போனதும் ஊரெல்லாம் மைக் செட் வைக்காத குறையாக அவர் பேசிக் கொண்டிருந்த காட்சிகளும் முனுசாமிக்கு நினைவில் வந்திருக்கும் போல. மகனைப் பார்த்து “கிளம்பலாம்” என்றபடி தலையசைத்து அங்கிருந்து வெளியேறினார்.
குடிசைக்குத் திரும்ப வந்தபோது கந்தையன் அவருக்காகக் காத்திருந்தார். ஒன்னுமண்ணாப் பழகியிருந்தாலும் படிச்சு ஹெட்மாஸ்டரானவர் என்பதால் அவர் மேல ரொம்ப பாசமும் மரியாதயும் முனுசாமிக்கு. அவரைப் பாத்து மரியாதையாக “வணக்கம்” என்றதும் கந்தையன் “அட போதும்டா. உன் வணக்கம். உம் மவன் எங்க? சும்மா ஒரு எட்டு உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றார். “எனக்கென்ன நல்லாருக்கேன்” என்ற அருள் இல்லாத அந்த முகத்தைப் பாத்ததுமே எதோ சிக்கல் என்று கந்தையனுக்குப் புரிந்துவிட்டது. எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்டே வந்தவர் பொட்டுக் கவுண்டர் முருகேசனை எடுபிடி வேலைக்குக் கூப்பிட்டதைக் காதில் கேட்டதும் வெகுண்டு போய்விட்டார்.
“படிக்கற புள்ள, அவனைப் போயா? சரி. நெலத்த எவ்வளவுக்கு அடமானம் வெச்சிருக்க? நாங் குடுக்குறேன். மொதல்ல நெலத்த மீட்டு வா” என்றதும் அப்பாருக்குக் கண்ணு கலங்கிவிட்டது. “ரெம்ப உணர்ச்சிவசப்பட்டுடாத. நான் திருப்பிக் கேக்குறப்ப தந்துடணும்” என்று சிரித்தார் ஹெட்மாஸ்டர். பணத்துடன் வந்த முனுசாமியைப் பார்த்து அதிர்ந்த பொட்டுக் கவுண்டர் பத்திரத்தை வீசியெறிய, அதைக் குனிந்து எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். அதற்குப் பிறகு பலகாலம் டிரங்குப் பெட்டியிலிருந்து எடுத்தெடுத்து அதை முகர்ந்து பார்த்தபடி இருந்தார் முனுசாமி.

விடிந்துவிட்டது. “முருகேசா காலேஜிக்கு நேரமாவுலயா? இப்ப கௌம்புனா தான் நேரத்துக்குப் போவ. பயிரு வெக்கறது எனக்கென்ன புதுசா? நீ போ ராசா” என்று தினம் அவனைக் கிளப்பிவிட்டுத் தான் அடுத்த வேல பாப்பாரு முனுசாமி. ரெண்டு பேரும் பாடுபட்டதில் வெள்ளாம அமோகமா வந்தது. முருகேசன் ஒரு டிகிரியை முடித்தான். ஹெட்மாஸ்டர் தனக்குத் தெரிந்த ஓர் இடத்தில் கணக்கெழுதும் வேலைக்குச் சொல்லிவிட்டபோது தான் முதல் முறையாக அவருடைய வீட்டுக்கு முருகேசன் போனது.

வெய்யிலில் வியர்வையில் குளித்துப்போய் “சார் சார்” என்று வாசலில் நின்றவனை, “திண்ணையில் உட்காருங்க. அப்பா இதோ வந்துடுவாரு” என்ற குரல் வரவேற்றது. இரண்டு நிமிடத்தில் மோர்ச் சொம்புடன் அவனை நோக்கி நீண்ட மருதாணி பூசிய கைகள் அத்தனை அழகாயிருந்தது. “குடிங்க. அம்மா கொல்லில இருக்கு. அப்பா இதோ கொஞ்ச நேரத்தில் வந்துடுவாரு” என்றபடி உள்ளே போய்விட்டாள். சிறிது நேரத்தில் வந்த ஹெட்மாஸ்டரிடம் நிலத்தை மீட்பதற்காக முன்பு அவர் தந்த பணத்தைத் தந்தபோது “அடடா! நான் ஒரு பேச்சுக்காண்டி அன்னிக்கு அவனிடம் கடன்னு சொன்னேன். இருக்கட்டும் போ. கூட்டாளிக்கு வொதவாத பணம் என்னாத்துக்கு?” என்றார். பத்து ரூபாய் கடனாகத் தர ஆயிரம் முறை யோசிக்கும் ஆட்களையே பாத்திருந்த முருகேசன் நாற்காலியில் பணத்தை வைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்து வணங்கினான். “சே சே. எந்திரி எந்திரி. என்னா இது” என்று அவனைக் கட்டிக் கொண்டார் கந்தையன். “நான் படிக்கணும்னு அப்பாரு நெனச்சாரே தவிர, சோறு போடற நெலத்த தரிசா விட்ரணும்னா தாங்க மாட்டாரு. ஆயிரம் பேரு கணக்கெழுதக் கெடைப்பான். எல்லாராலயும் வெவசாயம் பாக்க முடியாது. அத்தோட நீங்க நெலத்த மீட்டதுக்கும் அர்த்தமே இல்லாம போயிடும். எனக்கு அந்த வேல வேணாம்ங்க. மன்னிச்சிருங்க” என்று திடமாகச் சொல்லிவிட்டான். கந்தையன் எவ்வளவு மறுத்தும் பணத்தை அங்கேயே விட்டுவிட்டுப் போனான். அப்பாரிடம் எல்லாத்தையும் சொன்னபோது அவருக்குப் பிள்ளையையும் கூட்டாளியையும் நினைத்துப் பெருமையாக இருந்தது.

நாலு நாட்கள் கழித்து ஹெட்மாஸ்டரும் அவருடைய மனைவியும் முனுசாமியின் குடிசைக்கு அவரைத் தேடிவந்து, முருகேசனைத் தன் மருமகனாக்கக் கேட்டார்கள். முனுசாமிக்கு ஆச்சரியத்தில் உதடுகள் துடித்தன. “உம் பொண்ண ஒரு வார்த்த கேட்டியா? நாள பின்ன சகதியில வேல செய்றவன்னு ஒரு வார்த்த வந்திரக் கூடாது பாரு” என்றார். ரெண்டு பேரும் புன்னகைத்துக் கொண்டார்கள். “அவளைக் கேட்காமயா!. உனக்கும் முருகேசனுக்கும் சரினா, இந்த மாசம் கண்ணாலத்தை முடிச்சிரலாம்” என்றார்.
டவுனில் படித்து வளர்ந்த பெண்ணாச்சே என்று பட்டுச் சட்டையும் மணக்க மணக்க அத்தரும் பூசிக் கொண்டும் மொத ராத்திரி அறையில் உட்கார்ந்திருந்தான் முருகேசன். பட்டுப் புடவையில் பந்து சாதி மல்லிச் சரமும்,லஷ்மி டாலர் வெச்ச நீளமான சங்கிலியுமாக உள்ளே நுழைந்தவள் முகத்தைச் சுளித்து மூக்கைச் சுருக்கினாள். புரியாது முழித்தான் முருகேசன். வற்புறுத்திக் கேட்ட பிறகு அவள், “நீங்க மொதமொதல்ல எங்க வீட்டுக்கு வந்தப்போ வெல்லப் பாகு எடுத்துக்கிட்டு இருந்தீங்க போல. வேர்வையும் காச்சின வெல்லப் பாகு வாசனையுமா வந்து வாசல்ல நின்னப்ப அங்க நிக்கறது காலேஜில் படிச்சு டிகிரி வாங்குன ஒரு ஆளா நான் கற்பனை பண்ணவேல்ல. அதுக்கப்புறம் நீங்க அப்பாகிட்ட பேசனது, நெலத்த விட வொசத்தி எதுவுமே இல்லனு கணக்கு வேலய வாணாம்னது, பணத்த அடமா தந்துட்டுப் போனது இதெல்லாம் எனக்கு ரொம்பப் புடிச்சது” என்றாள். “சரி. அதுக்கு என்ன ? ” என்றபோது எழுந்து தாய் வீட்டில் தந்துவிட்டிருந்த சிறிய இரும்பு பீரோவைத் திறந்து அதிலிருந்து எதையோ வெளியே எடுத்தாள். அவன் ஹெட்மாஸ்டரிடம் தந்த ரப்பர் பேண்ட் சுற்றிக் கட்டியிருந்த பணம் வைத்த பேப்பர் பொட்டலம். முகர்ந்து பார்த்து அவனிடம் நீட்டினாள். “இந்த வெல்லப் பாகு, உழைப்போட வியர்வை வாசம் தான் புடிக்குது. அத்தர் புடிக்கல” என்றாள். அதை வாங்கி முகர்ந்து பார்த்தவன் அவளை அள்ளிக் கட்டிக் கொண்டான். அடுத்த வருடத்தில் மனோகரன் பிறந்தான். அவளுடைய அன்பில் திளைத்துக் கிடந்த அந்த வாழ்க்கை ஒரு மழை இரவில் அவளைப் பாம்பு கொத்தியதில் பறிபோனது.
தூரத்தில் தெரிகிற பனைகளைப் பார்த்தபடி இருந்தார். ரப்பர் பேண்ட் சுற்றிய பேப்பர் பொட்டலம் ஈரத்தில் நசநசக்கிற ஒலி. அத்தரும் வெல்லப் பாகும் கலந்து ஒருவிதமான வாசனை. சரசரவென இருட்டில் எதுவோ நகர்ந்ததில் சருகுகள் பணிந்து வழிவிட்டன. பனைமரக் கருக்குகள் குத்திய தழும்பின் மீது புங்கை மர இலைகள் விழுகின்றன. பச்சைப் பசேலென இருக்கிற தன் அப்பாருவின் நிலத்தை ஒரு மஞ்சள் பைக்குள் வேகவேகமாகத் திணிக்கிறார் முனுசாமி. பிதுங்குகிற பையை முருகேசனிடம் தருகிறார். இருவரும் அழுத்தி அழுத்தித் திணிக்கின்றனர். முருகேசனுக்கு மூச்சு வாங்குகிறது. திரும்பிப் பார்க்கிறார். முனுசாமி கையை விரித்தபடி வரப்பில் நடந்து போவது தெரிகிறது. முருகேசனுக்கு நெஞ்சில் விட்டு விட்டு ஒரு வலி. ஒரு ஆக்காட்டி சத்தமிடுவது பக்கத்தில் கேட்கிறது. அப்படியே அது ஒன்று இரண்டு எனப் பெருகி கூச்சலாகிறது. கண் திறந்து பார்க்கிறார். ஆக்காட்டி பறந்துபோகிறது. அடுத்த நாள் நிலத்தைப் பத்திரப் பதிவு செய்யவேண்டியது அவருக்கு நினைவு வருகிறது.

4

கவிதா எவ்வளவு கேட்டும் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் பத்திரப் பதிவு ஆபீசுக்குப் போனார். அதே நேரத்தில் பிரபுவும் தன்னுடன் சிலரைக் கூட்டிக்கொண்டு தடபுடலாக உள்ளே நுழைந்தான். மனோகரன் அவரிடம், “அன்னிக்கு நீங்க பிரபு கிட்ட கேட்டீங்களே. யாரு உன் அப்பா என்ன பண்றாருனு. இப்ப நேராகவே வந்திருக்காரு பாருங்க” என்றான்.

முருகேசன் நிமிர்ந்து பார்த்தார். “இந்த முகத்தை எங்கேயோ பாத்திருக்கமே..!” என்று நெற்றி சுருக்கினார். அவருடைய நினைவாற்றல் முன் போல இல்லை. ஆனாலும் இந்த முகம் தொந்திரவு செய்தது. உதடு கோணும் இந்தச் சிரிப்பு, இது யாருடையது, யோசிக்க யோசிக்க மனதின் அடியாழத்தில் இருந்து எழுந்து வந்தத அந்த முகம் சுந்தரத்தினுடையது. அதனுடன் கூடவே வந்த இன்னொரு முகம் பொட்டுக் கவுண்டருடையது. அவமானத்தில் வெளிறிப் போன முருகேசன் கண்களை இடுக்கிப் பார்த்தபோது இன்னும் அதே கோணல் சிரிப்புடன் அவரெதிரே நின்றிருந்தான் சுந்தரம்.

தள்ளாடி மேஜையை இறுகப் பிடித்தார் முருகேசன். “என்னா முருகேசா! கைநாட்டா கையெழுத்தா? ஓ! உங்கப்பாரு வம்படியா உன்னிய பெரிய படிப்பெல்லாம் படிக்க வச்சாரில்ல. மறந்தே போயிட்டேன். கட்டக் கடசீல அந்த நெலத்த எங்களுக்கே விக்குற போல” என்றபடி வெற்றிலைக் கறையோடிருந்த பற்களைக் காட்டி இளித்தான் சுந்தரம்.

பொடேலென ஓர் அறை விழுந்தது போலிருந்தது முருகேசனுக்கு. அப்பாருடைய தோள் மேல் உட்கார்ந்து பார்த்த அய்யனார் நினைவுக்கு வந்தார். நாக்கைக் கடித்துக் கொண்டு துள்ளும் சாமியாடியைப் போல ஆங்காரத்துடன் புத்தி சுழன்றது. தன்னைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தார். அழுக்கான வேட்டியணிந்த அவர் வயதொத்த பலர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் மனோகரன் வயதுடைய மகனோ மகளோ நிற்பதைப் பார்த்தார். கைகளில் இறுக்கிப் பிடித்திருந்த பல மஞ்சள் பைகளும் அவர் கண்களுக்குத் தெரிந்தன. நிமிர்ந்து மனோகரனைப் பார்த்தார். தவறு செய்து விட்ட கவலையிலும் அப்பாவுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்திலும் பிரபுவின் அப்பாவுக்குத் தன் அப்பாவை முன்பே தெரியுமா என்கிற குழப்பத்திலும் அவன் இருந்தான். கம்பீரமாகத் தலை நிமிர்ந்து சுந்தரத்தைப் பார்த்து, “நல்லாருக்கியா சுந்தரம்? பொட்டுக் கவுண்டரு ஊரையெல்லாம் ஏய்ச்சி கஷ்டப்பட்டுச் சேத்த சொத்த பிசினஸ் அது இது னு நீயும் உன் புள்ளையும் ரொம்ப சுலபமா அழிக்கிறிங்க போல. ஆனா, உம் மக்கமாருக்கும் சேர்த்து நீங்க இப்படி தல தலமுறையா சம்பாதிச்சு வெக்கற உம்ம பாவக் கணக்குஅம்புட்டு சுலபமா அழிஞ்சுடுமா என்ன? ” என்றார். அகங்காரமான சிரிப்பு மறைந்து சுந்தரத்தின் முகம் சட்டென இருளடைந்தது.

என்ன ஏது எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மனோகரனிடம், “உனக்கென்ன அந்தக் கடனக் கட்டணும் அவ்வளவு தானே. நெலத்த விக்க வாணாம். அதுவும் இவங்களுக்கு சத்தியமா கையெழுத்துப் போட்டுத் தர மாட்டேன். அரியரியா உங்கம்மா சீதனமா கொண்டு வந்த நகை இருக்கு. .மிச்சம் மீதிக்கு ,..எதுனாலும் பாத்துக்கலாம் வா ” என்றபடி சுந்தரத்தின் கையிலிருந்த நிலத்துப் பத்திரத்தை எட்டிப் பிடிங்கிக்கொண்டார்.
“ஏந் தம்பி பிரபு. அதென்னா பிசினசு?, கணக்கு வழக்கு, மொத்தம் எடுத்துகினு நாளை காலைல வீட்டுக்கு வா. நீ எவ்வளவு பணம் போட்ட? எப்படி நஷ்டமாச்சு? பூரா பாத்துடுவோம். என் கூட்டாளி ஒருத்தன் ஆடிட்டரா இருக்கான். அவன் கொஞ்சம் ஒத்தாச பண்ணுவான். வரேன் சுந்தரம்” என்றார்.
கவிதாவின் முகம் வெளிச்சமானது .” மாமா, வேணுமின்னா என் நகையக் கூட வித்துரலாம். இவரு அவசரம் அவசரம்னு சிடுசிடுத்ததுல மூளையே வேல செய்யல ” என்றாள்.

பரோல் கிடைத்ததும் சிறைக் குற்றவாளிக்குத் தோன்றும் நிம்மதி இப்போது மனோகரனின் கண்களில் தெரிந்தது. வெளியே வந்ததும் “மன்னிச்சுடுங்கப்பா” என்று அவருடைய கைகளைப் பிடித்துக் கொண்டான்.
“தப்பு உன் பேர்ல மட்டுமில்ல . புழுதி வேர்வை வாசம் எல்லாம் என்னோட போகட்டும்னு உன்ன மண்ணுக்குக் காட்டாம வளர்த்ததுல எந் தப்பும்தான் இருக்கு” என்றவர் தன் கையிலிருந்த நிலப் பத்திரத்தை அவனிடமே தந்தார். வாங்கியவன் அந்தக் காகிதம் கனப்பதை முதல்தடவையாக உணர்ந்தான்.

கயல்-இந்தியா

கயல்

 

(Visited 128 times, 1 visits today)
 
கயல்

மழை-கவிதை-கயல்

  தான் ஓய்கிற துல்லியத்தில் உச்சமெய்தும் பெண்ணுடல் நடிப்பை நம்புவதாய்ச் சுழிக்கும் ஆணின் உதடுகளென மழை பாவனை காட்டுகிறது வானம். குறும் பச்சைப் பூ உதிர ஒளிச் சுடர் பதைத்துத் […]