முன்னிரவில் பின்நிலவு (பின்னிரவில் முன்நிலவு)-சிறுகதை- வடகோவை வரதராஜன்

வடகோவை வரதராஜன்-மழை சோனாவாரியாகப் பெய்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு எப்படியோ தெரியாது என்னால் மணிக்கணக்காக இந்த மழையை ரசிக்க முடியும்.

காற்றின் திசைக்கேற்ப ஒரு கணம் செங்குத்தாகவும் மறுகணம், இந்தப்பக்கம் நிலத்தில் 60° கோணம் அமைத்து மறுகணம் அந்தப் பக்கம் 60° கோணம் அமைத்து என்ன ஜோராய் பெய்கிறது இந்த மழை.

வறண்ட பூமி நீரை உறிஞ்சி புளகாங்கிதம் அடைந்து பூரிக்கிறது. மண்ணில் மேல் உள்ள நீரில் மழைத்துளிகள் விழுந்து பூக்குமிழிகளான கொப்பளங்களை உண்டாக்கி, அவை சிறிது தூரம் அசைந்து சென்று ‘கொபுக்’ வெடிக்க, வானத்தில் ஆயிரம் ஆயிரம் யானைகள் சேர்ந்தாப்போல் கருமேகங்கள் கூடிட அந்த யானைகளின் தும்பிக்கைகள் போன்று சில பகுதிகள் கீழிறங்கி என்ன ஜோராய் பெய்கிறது இந்த மழை.
குளிருக்கு இமாக இருகைகளையும் நெஞ்சில் குறுக்காப் போட்டு தோளைப் பற்றிப் பிடித்து உட்கார்ந்து எவ்வளவு நேரமானாலும் இந்த மழையை அலுப்புச் சலிப்பிலாமல் பார்த்து என்னால் ரசிக்க முடியும்.

மழை சற்று வெளித்தது. ஆனாலும் மழை தந்த அந்த இதமான குளிர் இன்னமும் கிளுகிளுத்துக்கொண்டிருந்தது. ‘இந்தக் குளிருக்கு ஒரு சிகரற் பத்தினால் என்ன இதமாக இருக்கும்” நினைவைச் செயலாக்க சையிக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

ஒழுங்கையில் வெள்ளம் வாரடித்துப் பாய்ந்தது. அந்தப் பாயும் வெள்ளத்தினூடு நீரைக் கிழித்தபடி சைக்கிளில் செல்வதும் ஓர் அலாதியான அனுபவம்தான்.

தூரத்தில் இங்கு தொலைவில் இருந்து பார்க்கும்போதே மடத்தில் சிலர் இருப்பது தெரிந்தது. மடத்தைத் தாண்டித்தான் கடைக்குப் போகவேண்டும். மடம் அண்மித்ததும் சைக்கிளை சிறிது ‘சிலோ’ பண்ணினேன்.
அட நம்ம கூட்டம்தான். சிதம்பரி, தருமன், கிட்ணன், சின்னையத்தாத்தோ ஆகியோர் அங்கிருந்தனர்.
எனக்கு மகிழ்ச்சி பீறிட்டது. இந்த குளிருக்குச் சின்னையத் தாத்தோவிடம் கதைத்துக் கொண்டிருப்பதென்றால் கணப்படுப்பருகே இருப்பது போன்ற இன்பம்.

‘நீலமணி’, ‘பாசத்தின் விலை’ ஆகிய எனது கதைகளைப் படித்த வாசகர்களுக்கு; இந்த மடத்தையும் சின்னையாத்தாத்தோவையும் நன்கு நினைவிருக்குமென்று நம்புகிறேன்.
ஒரு பசுவின் பரிதாபத்திற்குரிய ‘நீலமணி’ என்ற எனது சிறுகதையைப் படித்தபின், பலர் தாம் சின்னையாத்தாத்தாவை சந்திக்க விரும்புவதாக எனக்கு எழுதினார்கள்.
நான் சொல்லும் கதைகளை எல்லாம் நான் பத்திரிகைகளில் எழுதுவதை இட்டு, சின்னையத் தாத்தாவிற்று வலு சந்தோஷம்.

“வா வா உன்னைத்தான் உன்னைத்தான் நைச்சுக் கொண்டிருந்தன் எங்கை இஞ்சாலிப்பக்கம்; கனநாளாய்க் காணேல்லை ” என்று சின்னையாத் தாத்தா வரவேற்றார்.

“அண்டைக்கு நான் சொன்ன கதையை நீ பப்பரில் எழுதினாயாம்; பேரப் பொடியன் வாசிச்சுக் காட்டினான். நல்லாத்தான் எழுதிருக்கிறாய். ஆனா அதென்ன கதையில் எனக்கு ‘டோப்பு’ எண்டு எழுதி இருக்கிறாய். அதுதான் எனக்கு விளங்கேல்லை. டோப்பெண்டா அதென்ன எனக்கு ஒண்டுமாய் விளங்குதில்லை ” என்றார். சிதம்பரி கண்ணைச் சிமிட்டிச் சிரித்தான். தருமன் முகத்தை அப்புறமாகத் திருப்பி, சிரிப்பை அடக்க முயன்றான்.

‘டோப்பு’ எண்டால் வலு சந்தோசத்திலை இருக்கிறார் எண்டு அர்த்தம் தாத்தா” என்று கதை அளந்தேன்.
தாத்தா புரிந்தவர் போலவும் புரியாதவர் போலவும் தலையை ஆட்டினார்.

மடத்தை இடித்துக்கொண்டு வளர்ந்திருந்த ஆலமர இலைகள் குளிர்காற்றில் சிலிர்ப்படைந்து சிலிர்நீரைச் சிந்தின. மழையில் நனைந்த காக்கை ஒன்று ஆலமரத்தில் அமர்ந்து சிறகுகளை உதறி நீரைச் சிலிர்த்துவிட்டு ஆறுதலாக இறகு கோத ஆரம்பித்தது.

இந்த மடமும்; இந்த லமரமும் எத்தனை தலைமுறைகளைக் கண்டிருக்கும். எத்தனை கதை கேட்டிருக்கும் என நான் வியந்து கொண்டேன்.

மடத்தை ஒட்டி வளைந்து போகும் கல்லொழுங்கையில் இருந்து செல்லன்; தலையில் தார் கடகத்தோடு வந்தான்.

“செல்லா, உதென்னடா கொண்டு போறாய் ?” தாத்தா.

“மரவள்ளிக் கிழங்கையா ”

“செல்வன் கடகத்தை சுமைதாங்கியில் இறக்கிவைத்தான். தாத்தா கிழங்களுக்கு மேல் இருந்த மரவள்ளி இலைகளை விலத்தி கிழங்குகளைப் பிரட்டிப் பிரட்டிப் பார்த்தார்.

“நல்ல உருப்பம் பெருப்பமாய்த்தான் விளைஞ்சிருக்கு றாத்தல் என்னவிலை? ” தாத்தா.

“என்னட்டை எங்கை ஐயா தராசு இருக்கு இந்தாங்கோ, இவ்வளவும் ரெண்டு ரூபாய். ” செல்லன் மூன்று பெரிய கிழங்குகளை எடுத்து வைத்தான்.

“எட எட நான் வேண்டேல்லையடா சும்மா கேட்டனான் ” தாத்தா அவசரத்துடன் குறுக்கிட்டார்.
இதற்கிடையில் சிதம்பரியில் மூளையில் ஓர் மின்வெட்டு யோசனை பளீரிட்டிருக்க வேண்டும். அவனுக்கு இப்படித்தான் இருந்திருந்திட்டு அபார யோசனைகள் வரும். ஆனால் ஆள்தான் கொஞ்சம் அலட்டல்.

“செல்வன், இந்தா ரெண்டு ரூவாய்க்கு கிழங்கு தா. வேரில்லாத நல்ல கிழங்காய் எடு” சிதம்பரி
கடகத்திலிருந்து பூனைக்குட்டி போன்று நன்கு உருண்டு திரண்ட மூன்று கிழங்குகளை எடுத்தான். தாத்தா வியப்போடு சிதம்பரியைப் பார்த்தார். பார்வை ஏன் என்றது.

“சுடப்போறம், இதிலையே சுட்டுத் திண்டால் மழைக்குளிருக்கு சோக்காய் இருக்கும். ”

எங்கள் எல்லோர்க்கும் மகிழ்ச்சி குமிழியிட்டது. சிதம்பரி அலட்டலாய் இருந்தாலும் ‘பலே’ ஆசாமிதான்.
தருமன் மடத்தின் பின்னால் போய், ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து குவியலாய் கிடக்கும் காவோலைகளைக் கிளறி குவியலின் நடுப்பகுதியில் மழைபடாதிருந்த இரு காவோலைகளை எடுத்து வந்தான். கிட்டினன் காவோலைகளைப் பிய்த்து அடுக்கினான். சிதம்பரி அதன் மேல் கிழங்குகளை அடுக்கினான். தாத்தா வளக்கமாய் தான் தீப்பெட்டியை வைக்கும் பொந்திலிருந்து தீப்பெட்டியை எடுத்து வந்தார். ஆனால், மழை வாடைபட்டு தீப்பெட்டி நமுத்துப்போய் இருந்தது. நான் சைக்கிளை எடுத்துப் போய் அருகில் இருந்த கடையில் தீப்பெட்டி வாங்கி வந்தேன்.

எரியும் நெருப்பில் கிழங்கு வேகத் தொடங்கியது. சிதம்பரி பதமாய் பிரட்டிப் பிரட்டி விட்டான். கிழங்கு வேகும் மணமே மூக்கைத் துளைத்தது. கொழுந்து விட்டு எரியும் அக்கினியின் செந்நாக்குகள் எல்லோர் முகத்திலும் சிறிது செம்மை பூசியது. ஈற்றில் எவ்வித சேதாரமுமின்றி கிழங்கு நல்ல பதத்துக்கு வெந்திருந்தது. வெந்த கிழங்கைப் பிரித்த போது மாப்பொருள் மணிகள் கண்ணாடிப் பொடிகள் போன்று மினுமினுத்தன. கிழங்கைப் பிட்டு வாயில் போட்டதுமே வெண்ணையாய் கரைந்தது.

“சோக்கான கிழங்கு, கிராய் கிழங்கெண்டா உப்புடித்தான் , நல்ல மாப்பிடிப்பான கிளங்கு” தாத்தா கிழங்கை பிட்டு வாயில் போட்டபடி கூறினார்.

“உங்களுக்கு என்னண்டு தாத்தா கிராய்க் கிழங்கெண்டு தெரியும்” தருமன்.

தாத்தா ஓர் சிரிப்புச் சிரித்தார். கேலி தெறித்து விழுந்தது.

“நீங்கள் எல்லாம் காச்சட்டை போட்ட உத்தியோக காரர். மண்ணைப் பற்றி உங்களுக்கென்ன தெரியும்? கிழங்கின்ரை நிறத்திலை தெரியேல்லையே இது கிராய்க் கிழங்கெண்டு? கிராய்க் கிழங்கெண்டா, அந்த மண்ணின்ரை நிறத்திலை கிழங்கும் கறுப்பாய் இருக்கும். செம்பாட்டு கிழங்கெண்டால் சிவப்பாய் இருக்கும். ”
அந்தக் காலத்திலை எல்லாம் கிழங்குதானேடாப்பா எங்கடை சாப்பாடு. கிழங்குக் கறியை சட்டி நிறையக் காச்சிவைச்சிட்டு, அதுக்குள்ளை ஒரு கை புட்டைப்போட்டு குளைச்சுத் தின்ன வேணும்… ச்சாய் என்ன உருசி” தாத்தா சப்புக் கொட்டினார்.

சில நேரம் மூன்டு நேரமும் கிழங்குதான் சாப்பாடு. காலமை அவிச்ச கிழங்கு, மத்தியானம் கிழங்கு போட்ட ஒடியற்கூழ், பேந்து இரவிலை மரவள்ளிமா ரொட்டி அந்தச் சாப்பாடுகளின்ரை உரிசையையும் பெலத்தையும் சொல்லி உங்களுக் விளங்காது. இப்ப எல்லோ பாணும் இடியப்பமும். அப்ப ஆற்ரை வீட்டிலை இடியாப்பம்? மரவள்ளியும், குரக்கனும்தான் எல்லாற்றை சாப்பாடும்…ச்சாய் அந்தக் காலத்துச் சாப்பாடுகள் என்ன சாப்பாடுகள்…இப்ப பாணையும் பட்டரையும் திண்டுபோட்டு நாப்பது வயது முடிய முன்னம் சுடலைக்குப் போறாங்கள். ”

உண்மைதான் இந்த எழுபத்தைந்து வயதிலும் தாத்தா என்ன கம்பீரமாய் கருங்காலிக்கட்டை மாதிரி பற்கள் பளபள என்று ஒளிவீச என்ன மாதிரி இருக்கிறார். அன்றைய குறக்கனும் சாமயும் இறுங்கும் மரவள்ளியும் இப்போதும் தாத்தாவின் இரத்தத்தில் ஓடுகின்றன போலும்.

“டேய் சிதம்பரம் அந்தக் காலத்திலை ஆருக்கடா உத்தியோகம்? தன்ரை தன்ரை காணியப் பாத்தாலே அவனவன்ரை குடும்பத்துக்குப் போதும். வரியத்திலை றுமாதத்துக்கு தோட்டத்திலை வேலை செய்வம், ஆறுமாதத்திற்கு பொதுத்தொண்டு.

அந்தக் காலத்துல உத்தியோகம் எதுவுமில்லாமல் நாங்கள் கட்டி முடிச்ச கோயில்களைப் பராமரிக்கிறதுக்கே உங்களிட்ட வசதி இல்லை. கனக்க வேண்டாம், கோயில் சுவருக்கு வெள்ளை அடிச்சு எத்தினை வரியமாச்சு, ஏன் கோப்பாயிலை அடிப்பிடி ஒரு மனிசரில்லையே? ஒருத்தரிட்டையம் கையிலை காசில்லை. ஒருதரும் அக்கறையில்லை. கண்டறியாத உத்தியோக காரர், பேப்பரிலை எல்லாம் எழுதிற நீ சொல்லு, ‘அப்பத்தையான் காலம் போல இல்லை இப்பத்தையான் காலம், இப்ப சந்தரமண்டலத்துக் காப்போவம்’ எண்டு அடிக்கடி சொல்லுற நீ சொல்லு, சந்திர மண்டலத்துக்குப் போற நீங்கள்… அந்தக் காலத்தில நாங்கள் வெட்டின ஒரு தாமரைக் குளத்தைப்போலை ஒரு குளம் நீங்கள் ஏன் வெட் டேலை? அந்தக் காலத்திலை நாங்கள் கட்டின கோயிலைப் போலை உங்களாலை ஏன் ஒரு கோயில் கட்டேலாமல் கிடக்கு? கனக்க ஏன் அந்தக் காலத்திலை நாங்கள் கட்டின வாசிகசாலையிலை இப்ப நீங்கள் ஒழுங்கா ஒரு பேப்பர் போடேலாமல் இருக்கிறியள், சந்திர மண்டலம் போயினமாம் சந்திர மண்டலம். ”

சாறலாக பெய்த மழை இப்போது பலத்தது. தாத்தாவைப் போல வானம் குமுறிக் கொட்டியது. எங்கோ ஓர் மரம் ‘சடசட’ எனச் சரிந்த ஒலி. அந்த ஒலியால் கவரப்பட்ட குயில் ஒன்றின் அவலக் கூக்குரல்.

மரம் விழுந்த சத்தத்தைச் செவிமடுத்த தாத்தா, “நொச்சியடி மூட்டில் நிண்ட அந்த சாதாபிடிச்ச தென்னை விழுந்திட்டு போலைகிடக்கு என்றார்.” பின்பு பழைய இடத்தில் இருந்து ஆரம்பித்தார்.

“உந்த தாமரைக் குளத்தைப் பாருங்கோ, கட்டெல்லாம் ஆமணைக்கும் காரையும் வளந்து காடுபத்திப் போச்சு. எங்கடை காலத்திலை குளக்கட்டில் ஒரு புல்லைக் காணேலுமே! குளம் என்ரையோ உன்ரையோ எண்டு நாங்கள் சண்டை பிடிக்கேல்லை. ஆரண்டா என்ன, வரியத்திலை ஒருக்கா குளக்கட்டை செதுக்கி துப்பரவாக்குவம்.

இப்பத்தைய கோப்பாய் பெடியளுக்கு தாமரைக் குளம் எங்கை இருக்கண்டே தெரியாது. படிப்பு கண்டறியா படிப்பு படிச்சும் உத்தியோகம் இல்லை எண்டா பேந்தேன் படிப்பு. டேய் சிதம்பரம், வசதிக்குத் தக்கப்படிதான்டா மனிசன் வாள வேணும். வசதியளைப் பெருக்கிக்கொண்டு, வருமானம் பத்தேல்லை, பத்தேல்லை எண்டா, உதென்ன கதையெண்டு எனக்கு விளங்கேல்லை. வருமானம் வரவர அதுக்கு மேலாலை வசதியளைத் தேடிக்கொண்டு வருமானம் பத்தாது எண்டு குளறினால் என்ன செய்றது. அந்தக் காலத்திலை, ஒரு நாலு முளந்துண்டோடையும் ஒரு சால்வையோடையும்தான் நாங்கள் சீவிச்சனாங்கள். எட்டுப் பிள்ளையைப் பெத்தனான். அவையளை வளத்து ஆளாக்கினன். பானும் பிறிச்சும் பட்டரும் இல்லாமல் நாங்கள் செத்துப் போகேல்லை, மரவள்ளிக்கிளங்கோடையும் குரக்கனோடையும் அந்த ஓலை வீட்டிலை சீவிச்சனாங்கள்தானே. நீங்கள் பான், பிறிச்சு, மோட்டார், பைப்பு எண்டு வசதியளைப் பெருக்கிக் கொண்டு போறியள். ஆனா உந்த வசதியள் ஒண்டும் இல்லாமல் நாங்கள் சீவிக்கேக்கை இருந்த சந்தோஷம் இப்ப உங்களிட்டை இல்லை. எல்லாற்றை முகத்திலையும் ஏதாவது ஒரு ஏக்கம். என்னைப் பார் இந்த எழுவத்தைஞ்சு வயதிலையும் என்ன மாதிரி இருக்கிறன்? ஏன் இப்படி இருக்கிறன்? கிடைக்கிறதை வச்சுக்கொண்டு நல்லாய் இருக்கிறன். ”

கடந்தகால நினைவில் மனம் லயித்து, இக்கால நிகழ்வுகளைக் கண்ட மனம் கொதிப்பில் சின்னையாத் தாத்தா பேசிக்கொண்டே போறார்.

அவரின் வாயில் இருந்து சிதறிவிழும் தத்துவங்கள் என்னைத் திகைக்க வைத்தன. 75வயது சென்ற இந்தப் பட்டிக்காட்டுக் கிழவர் படிப்பு வாசனையே அறியாத இந்தப் படுகிழவர் (வயதால் மட்டும் கிழவர்) வாழ்வின் உண்மை நிகழ்வுகளை எவ்வளவு தூரம் துல்லியமாக பிட்டு வைத்துவிட்டார். வருமானத்துக்கு மேலாலை வசதிகளைப் பெருக்கிக்கொண்டு போனால் வருமானம் எப்படிப் போதும் எவ்வளவு பெரிய உண்மையை வெகு சாதாரணமாகச் சொல்லியிருக்கிறார் இந்தக் கிழவர். இவர்கள் எல்லாம் தத்துவத்தை முறையாகப் படித்திருந்தால் ஜே.கிருஸ்ணமூர்த்தியும் ராதாகிருஸ்ணனும் தத்துவ விஞ்ஞானி சில்லோவும் இவருக்கு முன் எம்மாத்திரம்! நான் பிரமித்து நிற்கிறேன்.

தாத்தா கிழங்கில் ஒரு துண்டைப் பிட்டு வாயில் போட்டுக்கொண்டு தம்மை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

“இந்த சுட்ட கிழங்கைக் கண்டதும் பழைய கதையொன்டு ஞாபகம் வருகுது” தாத்தா கிழங்கை உமிழ்ந்தபடி கூறினார்.

கதை என்றதும் நான் உசாரானேன், புலன்களைத் தீட்டிக் கொண்டேன்.

தாத்தா மடியை அவிட்டு புகையிலையை எடுத்து நெட்டிக் கிளித்து சுருட்டத் தொடங்கினார். சுருட்டை வாயில் வைத்து நெருப்புக் குச்சிய உரசி சுருட்டு முனையில் பிடித்தவாறே ‘பக்கு பக்கு’ என்று பொச்சடித்து சுருட்டைப் பற்றிக்கொண்டார்.

தாத்தா சுருட்டை, இந்தக் கடவாய்க்கும் அந்தக் கடவாய்க்கும் மாறிமாறிக் கடித்தபடி புகையின்பத்தில் இருக்கிறார் என்றால் அவர் கடந்த காலத்தை இரைமீட்கிறார் என்று அர்த்தம்.
தாத்தா திடீர் என விழிப்புற்றவராக,

“உவன் கொக்கு வைத்தி இருக்கிறான் எல்லே அவன்ரை தேப்பன் வினாசிஸ்ரீவிறிசி வினாசி எண்டு சொல்லுறது. உலகத்திலை தன்னாலை ஏலாதது ஒண்டுமில்லை எண்டு விறிசாய் கதைப்பன் அதாலை விறிசி வினாசி எண்டு சொல்றது. விறிசி வினாசியின்ரை தேப்பன் கொக்கு வைத்தியின்ரை பேரன் அந்தாளுக்கு என்னம் பொருபேர், நெஞ்சுக்கை நிக்குது வருகுதில்லை, கந்தையா…கந்தையா …கொக்குவில் கந்தையா எண்டு சொல்லுறது. கொக்குவில் கந்தையா ஒரு ஆயிரம் கண்டிலை மரவள்ளி நட்டிருந்தவர். பனையோலை எல்லாம் தாட்டதாலை மண் நல்ல சொகுசு கண்டியோ, மரவள்ளி நல்லா வேர் ஓடி திரணை திரணையாய் கிழங்குகள் விளுந்திருந்தது.

கிழங்கின் பெருப்பத்தாலை மேல்மண் பாளம் பாளமாய் வெடிச்சிருந்திச்சு தெண்டால் கிளங்கின்றை பெருப்பத்தைப் பாரன்.

அப்ப வினசி நல்ல இளந்தாரி, நான், வினாசி, சின்னப்பு, சரவணை, இராமு எல்லாம் ஒத்த வயதுக்காரர்.
கந்தையற்றை தோட்டத்திலை கிளங்கு களவு போகத் தொடங்கீட்டுது. அப்ப கள்ளர் எண்டா களவெடுக்க எண்டு எடுக்கிறேல்லை. விடலைப் பொடியள் சேர்ந்து இரவிலை சும்மா வம்புக்கு ஆற்றேன் தோட்டத்துள்ளை பூந்து கிழங்கைப் புடுங்கி அங்கையே சுட்டுத் திண்டு போட்டுப்போடுவங்கள்.

கந்தையற்றை கிழங்குகள் நல்ல உருப்பம் பெருப்பம் கண்டியோ. அத்தோடை கிராய்க் கிளங்குகள். பொடியள் ருசி கண்டிட்டாங்கள். ஒவ்வொரு நாளும் அங்கை போய்ப் புடுங்கி இருக்கிறாங்கள். கந்தையர் தோட்டத்துக்கு காவல் போட யோசிச்சார். இரவிலை வினாசியைப் போய் தோட்டத்தில படுக்கச் சொல்லிக் கேட்டார். வினாசியும் பார் இண்டைக்கு கள்ளரைக் கட்டிக் கொண்டாறன் எண்டு பெரிய விறிசாய் கதைச்சுது.
ராச்சாப்பாட்டையும் முடிச்சுக் கொண்டு அரிக்கன் விளக்கையும் எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குப் போனான். மாட்டுக்குடிலுக்குள்ளை சாக்கொண்டை விரிச்சுக்கொண்டு, ஒரு சாக்கை மடிச்சு தலைக்கு வைச்சுக்கொண்டு வினாசி படுத்திட்டான்.

பெடிப்புள்ளையள் வளக்கம் போலை கிளங்கு புடுங்க வந்திருக்கினம். மாட்டுக் குடிலுக்கை விளக்கெரியுறதைக் கண்டிட்டு மெதுவாய் கிட்டப்போய் பாத்திருக்கினம். வினாசி குறட்டை விட்டுக் கொண்டு நல்ல நித்திரை. பொடியளுக்கும் ஆளிலை விசயமில்லை விறிசுதான் எண்டு தெரியும் போலை.
ஒருத்தன் காவலுக்கு நிக்க, மற்றவங்கள் போய் கிழங்கைப் புடுங்கி இருக்கிறாங்கள். எடுத்துக்கொண்டு போக ஏதனம் ஒண்டுமில்லை. காவலுக்கு நிண்டவன் மெதுவாய்போய் வினாசி தலைக்குப் போட்டுப்படுத்திருந்த சாக்கை மெல்ல எடுத்திருக்கிறான். வினாசி பயத்திலை பேசாக்கிடந்திட்டானோ இல்லை உண்மையிலை நித்திரையோ தெரியாது. பொடியள் கிழங்கைச் சாக்கிலை கட்டிக்கொண்டு வெளியாலை போனதுதான் தாமதம் ‘ஐயோ, கள்ளன் கள்ளன்’ எண்டு கத்தி இருக்கிறான்.
கள்ளர் சும்மா இருப்பாங்களே வறுகித் தள்ளீட்டாங்கள். எப்படிக் காவலுக்குப் போனவர் காவல் செய்த கெட்டித்தனத்தை ”

தாத்தா நிற்ப்பாட்டினார். வெளியே குமுறிப் பெய்த மழை ஓய்ந்திருந்தது. கரும்பூதமாய் இருள் விரைந்து கவிந்தது.

“பேந்து கள்ளரைப் பிடிக்கேல்லையே ” கிட்ணன் கேட்டான்.

“கள்ளரோ? ஆர்கள்ளர், நாங்கள்தான் நான்தான் வினாசி படுத்திருந்த சாக்கை உருவின்னான், இந்தக் கதையை நாங்கள் பெடியளிட்டை எல்லாம் சொல்லிச் சிரிசிரி எண்டு சிரிச்சு, அதுக்குப் பிறகுதான் வினாசிக்கு விறிசி வினாசி எண்டு பட்டப்பேர் வந்தது. ”

தாத்தா துவாயை எடுத்துக்கொண்டு எழுந்தார்.

“ம்…மழை விட்டுட்டுது. விளக்கு வைக்கிற நேரமாச்சு. எழும்புங்கோ…மழையிருட்டு. அத்தோடை முன்னிருட்டுக் காலம். பாத்துக் கொண்டிருக்க ‘சடெக்கென’ இருண்டு போம். இருளுக்கு முன்னம் வீட்டை போட வேணும்”

ஒவ்வொருவர் ஒவ்வொருவராகக் கலைந்தோம். தாத்தா சொன்ன கதை நெஞ்சில் படமாக விழுந்திருந்தது. கதை கொஞ்சம் சின்னன்தான். கொஞ்கம் தட்டி நிமிர்த்தி எழுதிப் போடலாம். அதைக் கதையாக்கும் அவசரத்தில் சைக்கிளை ஊன்றி மிதித்தேன்.

31.10.1981

வடகோவை வரதராஜன்-இலங்கை 

 

வடகோவை வரதராஜன்
ஓவியம்: பிருந்தாஜினி பிரபாகரன்
(Visited 84 times, 1 visits today)
 

2 thoughts on “முன்னிரவில் பின்நிலவு (பின்னிரவில் முன்நிலவு)-சிறுகதை- வடகோவை வரதராஜன்”

Comments are closed.