அர்த்தத்தை தேடி-சிறுகதை-வடகோவை வரதராஜன்

ராஜனது வாழ்க்கையில் மறக்க முடியாத இடங்களில் இந்த பள்ளக்கடையும் ஒன்று. அவனை அறியாமல் ஆகர்சிக்கும் சக்தி ஒன்று இந்த கடையில் இருப்பதாக அவன் நம்பினான். அது ஜில்லென்று சீதளக் காற்று வீசும் அழகிய பசிய வயல்களின் நடுவே இந்தக் கடை இருப்பதனால் ஏற்பட்ட மனோகரமான உணர்வுகளாய் இருக்கலாம்.

ராஜனை பொறுத்தவரை இந்தக் கடைக்கு வருவது கூட ஓர் இனிய அனுபவம்தான்! மேட்டுப் பாதையில் இருந்து இறங்கி காடாய்ப் பூத்துக் கிடக்கும் காட்டுச் சூரியகாந்திச் செடிகளைக் கொண்ட ஒற்றையடி பாதையூடாக நடந்து, சேப்பம் புதர்கள் மண்டிய அந்த நீரோடையைக் குறுக்காக கடந்து, இந்த கடையினுள் நுழையும்போதே அழகிய கவிதை ஒன்றைப் படிப்பதை போன்ற மனோரம்யமான உணர்வு அவனுள் முகிழ்க்கும்.

வடகோவை-வரதராஜன்
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

இந்தக் கடையினுள் வந்து ஆவிபறக்கும் தேநீர்க் கோப்பையுடன் அந்த ஒற்றைப் பலகணிக்கூடாக பசிய வயல்களைப் பார்த்தவாறே சூரியனைத் தேநீருக்கு அழைத்த மயா கோவ்ஸ்கியையும், சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாத கலட்டித் தரையில் பாறை பிளந்து பயிர் விளைவித்த மஹாகவியையும் அசைபோடுவதில் அவன் என்றுமே சலிப்படைந்ததில்லை!

இன்றும் இந்தப்பொன்மாலை பொழுதில் அவனும் விஜயனும் பள்ளக்கடையினுள் இருந்தார்கள்! விஜயன் சிகரற்றை ஆழஉறிஞ்சி தனக்கே உரிய பாணியில் அழகாக ஊதினான்.

‘ஒரு பெண்ணின் முத்தத்தைவிட ஒரு சிகரற்றின் கடைசி ‘முத்தம்’ இனிமையானது! நேர்மையானதும்கூட’ விஜயனின் கவிதை வாக்கியம் ஒன்றை முணுமுணுத்தான் ராஜன். தனக்கே உரிய பாணியில் வாயை கோணிச் சிரித்தான் விஜயன். அழகிய சிரிப்பு!

“இப்படி ஒருத்தர் மூஞ்சைய ஒருத்தர் பாத்துக் கொண்டிருக்கிறதெண்டால் இஞ்சை வந்திருக்க தேவையில்லை!” தேநீரின் ஒரு மிடரைச் சுவைத்தபடி எரிச்சலுடன் கூறினான் விஜயன்.

“வந்த நேரம்தொட்டு நானுந்தான் பார்க்கிறன், நீ தான் அத்து வானவெளியிலை ஏதோ தேடிக்கொண்டிருக்கிறாய். உன்ர தேடலைக் குழப்பக்கூடாது என்டுதான் பேசாமல் இருக்கிறன்!” புதராய் மண்டிய தாடியை புறங்கையால் தேய்த்தபடி ராஜன் கூறினான்.

விஜயன் சிகரற்றை ஆழஇழுத்து சிவந்து கனிந்த நெருப்புத் துண்டத்தைப் பார்த்தபடி “வழமையான சிந்தனைதான்” என்றான்.

“என்ன வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுகிறாயா? எத்தினை பொழுதுகள் – எத்தினை பகலிரவுகள் தேடிக் களைத்த விடயமிது?” அலுத்துக்கொண்டான் ராஜன்.

“எத்தினை பொழுதுகள் பேசியென்ன? வாழ்வின் அர்த்தம் இன்னும் புரியேல்லையே?”

“ஆருக்குத்தான் புரிஞ்சுது? அர்த்தம் தெரியாமலே பலர் வாழ்ந்து செத்துப்போச்சினம். இருக்கிறவைக்கு சிந்திக்க நேரமில்லை, அல்லது சிந்திக்கிற பக்குவமில்லை. நாங்கள் கொஞ்சம் கூடுதலா யோசிக்கிறம் போலைகிடக்கு.”

நெருப்புக்குச்சியொன்றை கிழித்து சிகரறெற்றைப் பற்றவைத்தான் ராஜன். சுவாலையின் செவ்வொளி அவனின் கரிய முகத்தில் சிறிது செவ்வொளி பூசியது.

“ஆனால் இப்பிடி சிந்திக்கிறதுதான் மிகுந்த வேதனையாய் இருக்குது. சிந்திக்கிற ஆற்றல் இல்லாத ஒரு மிருகமாய் பிறந்திருந்தால் எவ்வளவு சந்தோசமாய் இருக்கும், ராஜன்.

நாம் என்னத்திற்காக இந்த உலகத்திலை படைக்கப்பட்டிருக்கிறம்?

நாளைக்கு என்ன செய்யப்போறம்?

நாம் பிறந்த இலட்சியம் என்ன?

உண்பதும் உறங்குவதும்தானா வாழ்க்கை? இவைதான் வாழ்க்கையெண்டா நாளைய பொழுதை எதிர்பார்ப்பதில் என்ன சுவை இருக்கிறது….?

விஜயனின் கதைகளால் எரிச்சலுற்ற ராஜன் “நிப்பாட்டு! நிப்பாட்டு!” என்று மேசையில் அடித்தான். பின் சிகரற்றை ஆழஉறிஞ்சி அத்துவான வெளியை வெறித்தான்!

மக்கள் இவ்வளவு காலமும் பிறந்து மடிந்தார்களே இவர்கள் வாழ்க்கைக்கு என்ன அர்த்தத்தைக் கண்டார்கள்? வாழ்க்கையில் திருப்தியுடன் வாழ்ந்து செத்தார்களா? இல்லை தீராத ஏக்கத்துடன் செத்து எரியும்போதும் இதயம் வேகாமல் இருந்தார்களா? விலங்குகளும்தான் உண்ணுகின்றன, உறங்குகின்றன, இனம் பெருகுகின்றன. மனித வாழ்க்கையும் இத்தகையதோர் சக்கரம்தானா? உண்பதிலும் உறங்குவதிலும் உடுப்பதிலும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இன்றையப் போல் உண்டு, இன்றையப்போல் உறங்குவதற்கு ஒரு நாளை தேவைதானா? இன்று பொழுது போகவில்லை என்று கஷ்டப்பட்டு பொழுதைப் போக்காட்டுகிறோமே நாளை எதைச் சாதிப்பதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பொழுதைப் போக்காட்டி உயிர் வாழ்கிறோம்?

எமது பெற்றோர் இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தத்தை கண்டார்கள்? என்ன சுகத்தைக் கண்டார்கள்? எல்லோரையும்போல் கலியாணம் செய்து, எல்லோரையும்போல் பிள்ளைபெற்று , எல்லோரையும்போல் தோல்சுருங்கி நாளை சாகப்போகிறார்கள்! இப்போது இருக்கும் இடத்தில் நின்று இவர்கள் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் இவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் புலப்படுமா?

கடையில் தகரக்கூரையில் ஏதோ நீர்ப்பறவை உட்கார்ந்ததால் சிந்தனை கலைந்த ராஜன், “நான் இப்ப காணுகிற பெரிய மனுசரை எல்லாம் நீங்கள் வாழ்க்கைக்கு என்ன அர்த்தத்தை கண்டியள் என்று கேட்சிறன். ”

“நானும் அப்பிடித்தான் மச்சான், ஆனா ஆருட்டை இருந்தும் சரியான மறுமொழி வருகுதில்லை. அது மட்டுமில்லை என்னை ஒருமாதிரியாயும் பாக்கினம். எதற்காகப் பிறந்தோம் என்று தெரியாத வாழ்க்கையில் எப்படிச் சந்தோசமான முகத்தோடை இருக்கலாம் ராஜன்?”

எமக்கு மட்டுமில்லை சுயமாய்ச் சிந்திக்கிற எந்த ஒரு மனிசனுக்கும் இந்த சந்தேகம் வாழ்க்கையின்ரை ஏதாவது ஒரு கட்டத்திலை எண்டாலும் வருமெண்டுதான் நான் நினைக்கிறன். நீ ஜானகிராமன்ரை ‘அக்பா சாஸ்திரி’ வாசிச்சனியா? அதிலை அர்த்தம் என்டொரு கதை வருகிறது. அதுவும் இப்பிடி எங்களைப் போல அர்த்தத்தைத் தேடுகிற கதைதான்.

ஜானகிராமன் எவ்வளவு பெரிய ஜீனியஸ்! வயதிலையும் அறிவிலையும்  அனுபவத்திலையும் முதிர்ச்சியுற்ற ஜானகிராமனுக்கே வாழ்க்கையின் அர்த்தம் புலப்படாதபோது, கேவலம் நேற்றைய துமிக்கு முளைத்த காளான்களான நாங்கள் எம்மாத்திம்?

இருந்தாற்போல் பெண்கள் கூட்டம் ஒன்று கிளுகிளுத்தபடி கடையினுள் நுழைந்தது.

“ஹலோ ராஜன்! ஆர் யூ ஹியர்?”

“ஹாய் சோமா ஹவ் ஆர் யூ ? ”

பைன்! வை ஆர் யூ வெயிற்றிங் ஹியர்?”

“பார் மை லவ்வர்”

லவ்வர்!? மே ஐ நோ ஹூ ஈஸ் தட் அண்லக்கி கேர்ள்?” சிரிப்பு கொப்பளிக்க கேட்டாள் சோமா.

தலையை உயர்த்தி புகைவளையம் ஒன்றை விட்டபடி, “மிஸ் சோமாவதி சிறிவர்த்தன” எனச் சிரித்தான் ராஜன்.

வாயை கோணி அவனுக்கு ‘வெவ்வே’ காண்பித்துவிட்டு பூவாய் விரித்த ஓர் சிரிப்பையும் உதிர்த்துவிட்டுச் சென்றாள் சோமா.

சோமாவால் எப்படி இவ்வாறு சிரிக்க முடிகிறது?

பூப்பூவாக விரிகிற சிரிப்பு! கன்னத்தில் குழிவிழ சிரிக்கிற சிரிப்பு! அசிங்கமான பெரிய தொனி எழுப்பாமல் ஒரு சிறிய வெள்ளிமணி குலுங்குவது போன்ற கிணுகிணு சிரிப்பு! ஒரு ரோஜா மொக்கவிழ்வது போன்ற சிரிப்பு!

சோமாவால் மட்டும்தான் இப்படி சிரிக்க முடியும்!

“நீ இப்ப நல்லாய் ‘சள்ளழ’க்கப் பளகீட்டாய்” என்றான் விஜயன்.

“பின்னை இதுகளோடை என்னத்தைக் கதைக்கிறது? சோமாவையோ, நந்தினியையோ போய் வாழ்க்கைக்கு அர்த்தம் என்ணென்டு கேக்க முடியுமா?”

“எப்பிடி மச்சான் இந்தக் கண்டிப் பெட்டையள் இப்பிடித் தக்காளிப் பழம் மாதிரி தளதள என்று குளிர்மையாய் இருக்கிறாளவை? உண்மையிலே ஆச்சரியம்தான் விஜயன்.

“இந்த மண்வாசனை, இந்த சூழல் இதுகள் எண்டுதான் நினைக்கிறன். இந்தக் குளிர்மை அவையளின்ரை உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் ஊடுருவி நிக்குது. என்ன வெள்ளையாய் சிரிக்கிறார்கள் பார்!

எந்தவொரு சில்மிஷமும் இல்லாத மனநிலையில்தான் இப்பிடியொரு வெள்ளைச் சிரிப்பு பூக்கும். இப்பிடிச் சிரிக்கிற ஒரு முகத்திலை காலமை முளிச்சால் அண்டைய பொழுதே எவ்வளவு சந்தோசமாய் கழியும்!

எவ்வளவு புரிந்துணர்வோடை எவ்வளவு இயல்பாய் பழகுகிறார்கள் பார். ஆனா எங்கடை யாழ்ப்பாணத்துச் சனங்கள்…! அந்த வறண்ட பாளம் வெடிக்கிற… ஆளையே கருக்கிற காஞ்ச புளுதியாலை வாழ்ந்து காஞ்சு போன மனங்கள் புளுதிபடிஞ்ச பாதங்கள்!

பொறாமை, எரிச்சல், குரோதம் எண்டு அவிஞ்சு போன மனங்கள்!

எங்கடை பெட்டையளிலை கனபேர் முகத்தைக் கவனிக்கிறதே ஒழிய காலைக் கவனிக்கிறதேல்லை. சைக்…. புளுதியும் ஒழுங்காக வெட்டப்படாத நகங்களும், பொருத்தமில்லாத ஊத்தைச் செருப்புகளும்…

“தான் ஒரு பெண்ணின்ரை முகத்தைப் பாத்திட்டு அடுத்ததாய் பாக்கிறது அவளின்ரை கால் பாதங்களைத்தான்”

விஜயன் குனிந்து ராஜனின் கால்களைப் பார்த்து கேலியாய் சிரித்தான்.

“சிங்கன் நீ இஞ்சையே இருக்கிறாய்! நினைச்சன்! நீ இஞ்சைதான் இருப்பாய் எண்டு. வந்து வாச்சியள் வைரவருக்கு நாய் வாச்சமாதிரி ஒருதருக்கொருதர்! இன்டைக்கு பு.ர். (கேர்ள்ஸ் ஹொஸ்ரல்)க்கு போறதெண்டெல்லே புரோகிறாம். பேந்து இஞ்சை வந்திருக்கிறாய்” – கதிரை ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அட்டகாசமாய் அமர்ந்தான் திருமாறன்!

“ரீ குடியன்” ராஜன்.

“இப்பான் கொஸ்ரலிலை குடிச்சிட்டு வாறன். நீ எழும்பன் போவம். விஜியும் வாவன்”

“விஜயன் சிகரற் ஒன்றை எடுத்து திருமாறன் முன் நீட்டினான்.”

“வேண்டாம் மச்சான்”

“ஏன் விட்டிட்டியே?”

“இல்லை! ஜி எச்சிற்கு போறன். பேந்து மணக்கும்! ராஜன் வாவன்ராப்பா”

“வெரி சொறி மச்சான். நான் எங்கடை மகசீன் விசயமாய் விஜியோடை கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு. கோவிச்சுக்கொள்ளாமல் நீ போட்டுவா.”

“ம்… ம்… வலுதிறமான சேர்ட் எல்லாம் போட்டு சாதுவா பெபியும் மணக்குது போலை கிடக்கு. அ… ஆ… நடக்கட்டும்.” விஜயன் கேலி செய்து சிரித்தான்.

“சனியன்! சனியன்! சகோதரங்ளோடை பிறக்காத சனியன். சிரித்தபடி விஜயனைத் திட்டிக் கொண்டு வெளியேறினான் திருமாறன்.

“வாழ்க சகோதரத்துவம்”-மாறன் போன பின் சற்று உரக்கவே சொன்னான் ராஜன்.

ஏன் எனக் கண்களால் கேள்வி எழுப்பி வியந்தான் விஜயன்.

அண்டைக்கு நீ என்னோடை றோயல் விங்கிலை வந்து தங்கி நிக்கேக்கை இவங்கள் கதைச்சதெல்லாம் கேட்டனிதானே! அவளின்ரை சைஸ் என்ன இவளின்ரை துடை மச்சம் எண்டெல்லாம் பச்சை பச்சையாய் கதைச்சுப் போட்டு இவங்களை எப்படி சகோதரி எண்டு வாய் கூசாமல் சொல்லேலுது!

சொந்தச் சகோதரி எண்டால் இப்படி பச்சை பச்சையாய்க் கதைப்பாங்களே!-உணர்ச்சி வசப்பட்டு சிகரற்றின் பில்ற்ரரை நசுக்கி அணைத்தான் ராஜன்.

“ஏன் நீ இப்பிடிக் கதைக்கிறேல்லையே?”

“ஏன் இல்லை! இதுக்கு மேலையும் கதைப்பேன்! ஆனா கதைச்சுப் போட்டு சகோதரி எண்டு பம்மாத்துப் பண்ண மாட்டன். என்னைப் பொறுத்தளவிலை என்ரை டீ எச் பெட்டையளிலை அனேகம்பேர் என்ரை பிறெண்ஸ்! ஒன்லி பிறெண்ஸ். நண்பன் ஒருத்தனைப் பற்றி எப்பிடிக்கதைக்கிறமோ, அப்பிடி நண்பி ஒருத்தியைப் பற்றிக் கதைக்கிறது தப்பில்லை! ஆனா ஒருத்தியை சகோதரி எண்டு அழைச்சுக் கொண்டு அவளைப் பற்றி பச்சை பச்சையாய்க் கதைக்கிறது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் பச்சை ஆபாசம்!

பார்க்கிற பெண்களையெல்லாம் தாயாகவும், சகோதரியாகவும் பார்க்கிற காந்தி மனோபாவம் எனக்கு இன்னும் வரேல்லை! அப்படி பக்குவப்படாத நான் சகோதரி எண்டு பம்மாத்துப் பண்ணுறது என்ரை மனச்சாட்சிக்கு செய்யிற மிகப் பெரிய துரோகம்” – ராஜனுக்கு மூச்செறிந்தது.

மாறனின் சகோதரத்துவம், பெட்டையளுக்கு ஒழிந்து சிகரற் பற்றும் போக்கு எல்லாம் அவனுக்கு எரிச்சலையே தோற்றுவித்தன. அது மட்டுமல்ல, விரிவுரை மண்டபத்தில் பெண்களுக்கு முன்னால் தன்னை ஒரு ஹீரோ ஆகக் காட்டுவதற்காக மற்றவர்களை மட்டம்தட்டி அவர்களுக்கு ஒரு ஜோக்கர் இமேஜ் கொடுக்க முயல்கிற நாணயக்கார, பெண்களுடன் கதைப்பவர்களையும் அவர்கட்கு உதவி செய்பவர்களையும் கொச்சைப்படுத்தும் ஆராவமுதன், ஒரு இன்டலெக்சுவல் இமேஜ் எடுக்க விரும்பி அசட்டு பிசட் என்று கதைத்து முகம் குப்புற விழுந்தெழும்புகிற எழில்வேந்தன், மணவீட்டில் மணவாளனாயும் மரணவீட்டில் பிணமாயும் எங்கும் எதிலும் தானே முன்னுக்கு நிற்க வேண்டும் என விரும்புகிற அன்பழகன், தமிழ் என்ற சொல்லை உச்சரித்தாலே சந்தேகப் பார்வை பார்க்கிற ஜயலத் பெரேரா, மற்றவர்களை நாக்கு வழித்துக்கொண்டு தன்னை யாரேனும் நக்கலாய்ச் சொல்லிவட்டால் நரசிம்ம அவதாரம் எடுக்கிற நெடுஞ்செழியன், சில விடயங்களை அங்கேயும் இங்கேயும் கொண்டோடித் திரிந்து எரிசரம் இடுவதில் இன்பம் காண்கின்ற றிசால்டீன், மற்றவர்களுக்கு வருகிற நல்ல பெயர் எல்லாம் தனக்கு வருகிற கெட்ட பெயராகவும், தனக்கு வருகிற கெட்ட பெயரெல்லாம் மற்றவர்கட்கு கிடைக்கிற நல்ல பெயராகவும் மறுகித்திரிகிற பரிபூரணன், இவர்களை என்ன நினைத்து வெப்பிராயப்பட்டான். பின் அவர்களின் அறியாமைக்காக இரங்கினான்.

வெளியே மாலை மயங்கி வந்தது. தாராக்குளத்து வளைவில் பசேல் எனப் புதர்கொண்ட மூங்கில் பற்றைகட்கூடாக செக்கச்சிவந்த சூரியன் எரிந்து இறங்கினான். மாலைக் காற்றில் மூங்கில் இலைகள் துடித்துச் சிலிர்த்தன. வீசிய மெல்லிய காற்று குளத்தங்கரையில் மரம் முழுவதுமாக செக்கச்சிவந்து பூத்திருந்த என்புருக்கி மரத்தின் பூக்களை மெதுவாக உதிர்த்து குளத்து நீர்ப் பரப்பில் தாலாட்டியது. கூட்டத்தைப் பிரிந்த நீர்க்காகமொன்று சோகமாகக் கத்தியவாறு பறந்தது.

“என்ன கடுமையாய் யோசிக்கிறாய்? உணர்ச்சி வசப்பட்டிட்டாய்போல கிடக்கு” ராஜனை இவ்வுலகிற்கு இழுத்தான் விஜயன்.

“இல்லை மச்சான், ஒருத்தன்ரை பலத்தோடை பலயீனத்தையும் சேர்த்து என்னாலை ஏற்றுக்கொள்ளேலும். பலத்தைப்போலை பலயீனமும் ஒருத்தன்ரை ஒரு அம்சம் எண்டது நல்லாய்ப் புரியுது! அதனாலை ஒருத்தன்ரை பலயீனமான அம்சங்களுக்காக எந்த ஒருத்தனையும் நான் வெறுக்கிறேல்லை. எவ்வளவோ பெருந்தன்மையோடைதான் இவங்களோடை நான் பழகிறதாய் நினைக்கிறன்! அப்பிடி கௌரவமாய் நடத்தியும், பழகியும் சிலபேர் என்ரை தலைமேலை மிளகாய் அரைச்சால் எனக்குவாற கோபத்தை அடக்கேலாமல் வெறி பிறக்குது. அந்த வெறியாலை கிட்டடியிலை ஆருக்கும் அடிச்சுப்போடுவேன் போலை கிடக்கு” மிகவும் மனம் வருந்திச் சொன்னான் ராஜன்.

“நீ அப்பிடி அடிச்சா சந்தோசப்படுவன்”

“என்ன?” அதிர்ந்தான் ராஜன்.

“உண்மையாத்தான் சொல்லுறன். ஆரேனுக்கும் அடிச்சுத்தான் நீ சமநிலைக்கு வரவேணும். நாங்கள் உணர்ச்சி பூர்வமாய் வாழ்ந்திட்டால் ‘ரென்சன்’ இல்லை. அறிவு பூர்வமாய் எதையும் கீறிக்கிழிச்சுப் பார்க்கிறபடியால்தான் இப்படி வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன எண்ட சந்தேகம் வருகுது. உணர்ச்சி வழியிலை நிண்டு கோபம் வாறநேரம் வாய்கிழியப் பேசியோ, மூக்குடைய அடிபட்டோ கிளர்கின்ற உணர்ச்சிகளை வடிஞ்சோட விட்டிடவேணும். ஆனா நாங்கள் வடிகால்லை வடிஞ்சோட வேண்டியதை கௌரவம் எண்டும், மரியாதைக் குறைவெண்டும் தேக்கிவைக்கிறம். அந்தத் தேக்கம் எப்பவாவது கரையை உடைச்சுப் பயங்கரமாய் பாயும். அப்ப நீ கொலைகூடச் செய்வாய். சில இடங்களில் அறிவுபூர்வமாய் வாழுறதைவிட உணர்ச்சி பூர்வமாய் வாறதுதான் நல்ல…” இடையில் கதையைச் சடக்கென நிறுத்தி அவசரம் அவசரமாய் ராஜனைச் சுரண்டி கடையின் வாசலைக் காட்டினான். இருவரும் கையால் கனிந்து கொண்டிருந்த சிகரற்றுக்களை சடக்கெனப் பொத்திக்கொண்டனர். இதற்கிடையில் அந்த விரிவுரையாளர் திரும்பி நடந்தார்.

மாலைவேளைகளில் இயற்கை அழகினை இரசிக்க உலாப்போகின்ற அவர் அந்த அழகிய சூழ்நிலையில் தேநீர் அருந்த வந்திருக்கலாம். இங்கே அவர்கள் இருப்பதைப் பார்த்து அவர்களைத் தொந்தரவு செய்து, தானும் தொந்தரவிற்குள்ளாகாமல் திரும்பிச் சென்ற அவரின் பெருந்தன்மை அவர்களை வியக்கவைத்தது.

ஏ.ஐ. சென்ரர் பொலிகாளை ஒன்று சங்கு ஊதுவதைப் போன்று எக்காளமிட்டது. அதைத் தொடர்ந்து 5 மணியாகிவிட்டதை அறிவிக்கும் ஜாம் பக்ரறியில் இருந்தும், பினாகா பிஸ்கற் கொம்பனியில் இருந்தும் திரள் திரளாக பெண்கள் கூட்டம் ஊர்வலம் வந்தது.

அந்தப் பெண்களை இருவரும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். சிரிப்பும் உல்லாசமும் கொப்பளிக்க ஒரு சிட்டுக்குருவிக் கூட்டம்போல, ஒரு வண்ணத்துப் பூச்சிக்கூட்டம்போல வழியெங்கும் தெபீடியா ரோசா ஊதாப் பூச்சொரிந்திருக்கும் அந்த அழகிய தெருவின்மீது என்ன குதூகலத்துடன் செல்கிறார்கள் அவர்கள்!

இவர்கள் எப்பொழுதாவது வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்திருப்பார்களா?

“விஜி! உன்னைக் கேக்க வேணும் எண்டு கனகாலம் நினைச்சிருந்தன், இப்பான் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நீ காதலிச்சவன் எண்ட முறையிலை கேக்கிறன் நீ உன்ரை காதலியோடை இருக்கேக்கை வேறு பெண்களைப் பார்த்து சலனப்பட்டிருக்கிறியா?”

“சிக்கலான கேள்வியெல்லாம் கேட்கிறாய்” என்று சிறிது நாணிச் சிரித்தான் விஜயன்.

உண்மையாய்த்தான் கேட்கிறன், காதலிக்கிற கலியாணம் கட்டின ஆம்பிளையள் எல்லோருக்கும் இப்படியொரு சலனம் இருக்குமா இல்லையா எண்டு விஞ்ஞான முறைப்படி கணக்கெடுக்க வேணும் எண்ட ஆவல் நெடுநாளாயே என்னட்டை இருக்கு.

கேலியாகச் சிரித்த விஜயன் “ஆராய வெளிக்கிட்டால் உனக்குத் தோல்விதான் கிடைக்கும். மனம் திறந்து உன்னட்டைச் சொல்லுறன், நான் சலனப்பட்டிருக்கிறன். அது தவிர்க்க முடியாத ஆண்களுக்கே உரிய சலனம். ஆனா அறிவுபூர்வமாய் சிந்திச்சு அதைக் கட்டுப்படுத்திப்போடுவன். ஏன் நீ சலனப்படமாட்டியா?”

“அதைப்பற்றி இப்ப என்னாலை சொல்லேலாது. ஒருத்தியைக் காதலிச்ச பிறகு அல்லது கலியாணம் செய்தபிறகுதான் அதின்ரை உண்மை பொய் தெரியும். ஆனா கம்பீரமான ஓர் ஆளைப் பார்த்து ‘வட் எ ஹான்சம் போய்’ என்று வியக்கிற மாதிரி, கல்யாணத்தின் பின்னும் அழகிய பெண்ணொருத்தியைக் கண்டால் ‘ச்சாய் எவ்வளவு வடிவு’ என்று வியப்பதில் அல்லது சொல்வதில் தவறொண்டும் இல்லை எண்டுதான் எனக்குப் படுகுது”

“நீ ரொம்ப ‘ஐடியலிஸ்ராய்’ இருக்கிறாய். ஆனா உலகம் உனக்கு நேர் எதிர்த்திசையில் சுழலுது. நீ காண்டேகர் படிச்சிருக்கிறியா? காண்டேகர் ஒரு இடத்திலை சொல்லுறார், “தன் கணவனைத் தவிர வேறோர் அன்நிய ஆளைப் பார்த்து சலனப்படாத பெண்ணையோ, தன் மனைவியைத் தவிர வேறோர் பெண்ணைப் பார்த்து சலனப்படாத ஆணையோ பார்ப்பது அரிதென்று.”

“காண்டேகர் ஓர் எழுத்தாளர்! மனோவக்கிரங்களையும் பாலியல் முரண்பாடுகளையும் கதைகளாக்கும் எழுத்தாளர். அவரின் கூற்று ஊகத்தில் எழுந்த ஒரு எடுகோளாய் இருக்குமே ஒழிய விதியாய் இராது. ஆனா நான் இதைப் பற்றி விஞ்ஞானபூர்வமான ஓர் கணிப்பெடுக்கப் போறன்.”

தேநீர்க் கோப்பையின் அடிப்பாகத்தை மேசையில் உருட்டியபடி கூறினான் ராஜன். கேலியாய்ச் சிரித்தான் விஜயன்.

“ஆர் உனக்கு உண்மையைச் சொல்லப் போகினம்? உன்னிடம் கதைத்தால்கூட தமது கற்பின் 10வீதம்  குறைந்துபோகும் என்று பெண்கள் முந்தானையை இழுத்து மூடுவார்கள். இவர்களிடமா போய் சலனப்படுவீர்களா எனக் கேட்கப்போகிறாய்! சுத்த மடத்தனம்”

உண்மையில் இந்தப் பம்மாத்து பண்ணுற பெண்கள் மீது எரிச்சலுற்றான் விஜயன். இங்கே இவ்வளவு பிறீயாவும் கலகலப்பாயும் பழகிவிட்டு இவர்கள் அன்புச் சகோதரன் விஜயன் என்றோ அல்லது இப்படிக்கு அன்புச் சகோதரி மேரி என்றோ கடிதம் எழுதும்போது இவனுக்கு அது ரொம்ப கொச்சையாய் இருக்கும்! அதென்ன அன்புச் சகோதரன்?

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓர் நட்பு நிலவக் கூடாதா? இப்படி அன்புச் சகோதரன் போடாவிட்டால் ஆண்கள் தம்பால் ஆகர்சிக்கப்பட்டுவிடுவார்கள் என இந்தப் பெண்கள் அஞ்சுகிறார்களா? இல்லைத் தாமே சிலசமயம் ஆண்கள்பால் ஈர்க்கப்பட்டு விடுவோம் என்று முன்னேற்பாடாக இந்த சகோதரத்துவத் தளைகளைப் பூட்டிக் கொள்கிறார்களா?

தூரத்தில் இலங்கக்கோன் விடுதியில் மின் விளக்குகள் தெரிந்தன. வைற்ஹவுஸ் முன்னால் உள்ள நீர்வாகை மரத்தில் மின்மினிப் பூச்சிகள் ஒளிக்கோலம் போட்டன.

“ஆணுக்கும் பெண்ணுக்கும் நிலவுகிற நட்பு பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?” ராஜன்

“இங்கே எங்கே நட்பு நிலவப்போகிறது. ஓர் ஆணும் பெண்ணும் பழகினால் அது காதலாய் இருக்கும் அல்லது சகோதரத்துவம் என்று பம்மாத்துப் பண்ணிக் கொள்கிற ஏதோவொன்றாய் இருக்கும்.” மங்கல் ஒளியில் கண்கள் பளபளக்கக் கூறினான் விஜயன்.

“ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பை சரியாகப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எமது சமூகம் இன்னும் முன்னேறேல்லை.”

“சமூகமென்ன பழகிற பெண்களில் பாதிப்பேர் தப்பிதமாகவே புரிந்துகொள்வார்கள். நட்பு ரீதியில் நாம் கதைக்கிற கதைகள் ஒவ்வொன்றையும் சினேகபூர்வமாய் நாம் அவர்கட்குச் செய்கின்ற உதவியொவ்வொன்றையும், நாம் அவர்கள் பால் பிரேமை கொண்டு செய்கிற செய்கைகளாகவே எடுத்துக்கொள்வார்கள். காதலனைப் போய் பிறெண்ட் என்பவர்கள் அல்லவா இவர்கள்! காதலனை போய்  பிறெண்ட் என்றால் போய் பிறெண்டை எப்படி அழைப்பார்களோ?”

“ஏன் சகோதரன் என்பார்கள்!”

இருவரும் உரக்கச் சிரித்து ‘வாழ்க சகோதரத்துவம்’ என்றார்கள்.

இவர்கள் சிரிப்பால் சலனமுற்ற பள்ளக்கடை முதலாளியும் இவர்களைப் பார்த்துச் சிரித்தார்.

“முதலாளி இன்னும் ரெண்டு சிகரெற் தாங்கோ”

“மிச்சம் சிகரெற் குடிக்குது” முதலாளியின் கொச்சைத் தமிழ் கேட்க இனிமையாய் இருக்கும்.”

“ராஜன் உனக்கொரு தேடல் இல்லையா? உனக்கு மனைவியாய் வரவேண்டிய பெண் இப்படித்தான் இருக்க வேணும் எண்டு சில எதிர்பார்ப்புகள் இல்லையா?”

“ஏன் இல்லை? இப்பகூடத் தேடிக்கொண்டுதான் இருக்கிறன். எனது சிந்தனைகளைப் புரிந்துகொள்ளக்கூடியவளாய், கலையார்வம் உடையவளாய் ஆன ஒரு பெண்ணிற்கான தேடல் என்னிடம் இருக்கிறது. ஒரு மனைவி எண்ட பதத்தைவிட நானும் நீயும் இப்ப பரிநிர்வாணமாய் கதைக்கிறமே அப்படி மனம் விட்டுக் கதைக்கக்கூடிய நண்பி என்ற பதத்தைத்தான் அவளிடம் எதிர்பார்க்கிறன். ஆனால் இந்த தேடலின் ஆர்வம் இப்ப ரொம்ப அருகி வருகுது.

வாழ்க்கையின் நிலையாமை நமக்கப்பாற்பட்ட விதியில் விழுந்துவிட்ட நம்பிக்கை. இவையளாலை இந்தத் தேடல் இப்ப குறைஞ்சுகொண்டு வருகுது. ஏதோ வாறவளோடை சமரசம் செய்துகொண்டு போகவேண்டியதுதான் எண்ட எண்ணம்தான் இப்ப வலுக்குது.”

“ஒருவேளை இன்னும் சில வருடங்களின் பின், ஏதாவது ரயில் நிலையத்திலோ இல்லை பஸ்ராண்டிலோ இடுப்பில் ஓர் குழந்தையுடன் கறுப்பாய், குண்டாய் விகாரமான பற்களுடன் உள்ள ஒருத்தியைக் காட்டி ‘இவள்தான் என் மனைவி’ என்று எனக்கு நீ அறிமுகப் படுத்தினாலும் அறிமுகப்படுத்தலாம்.” என்றான் விஜயன்.

“அந்த என் மனைவி என் அழகுணர்வுகளை எல்லாம் அடித்து நொருக்கி என் தன்முனைப்புகளை எல்லாம் விழுங்கிச் சாப்பிட்டு – கனகாலத்திற்குப் பிறகு சந்திக்கிற உன்னோடை கரைபுரள்கிற சந்தோசத்திலை கைகளை இறுகப் பற்றியவாறு கதைச்சுக் கொண்டிருக்கேக்கை ‘இஞ்சாருங்கா, இஞ்சை வந்து இந்தப் பிள்ளையைப் பிடியுங்கோ, போறவாற இடமெல்லாம் என்ன கண்டறியாத கதை’ என்று உன்காதுபடவே என்னைப் பேசி, உன்னையும் என்னையும் அவமானப்படுத்தலாம்.”

மீண்டும் இருவரும் உரக்கச் சிரித்து பள்ளக்கடை முதலாளியை மீண்டுமொருமுறை சிரிக்க வைத்தார்கள். நம்பிக்கையற்ற எமதுகையில் இல்லாத நாளையப்பொழுதில் இவை சாத்தியமாதலும் கூடும்.

வெளியே இருள் கவிந்து வந்தது. கோப்பித் தோட்டத்திற்கூடாக இளம் பொன்னிறத்தில் நிலவு புறப்பட்டது. அந்தப் பூரணசந்திரனை ஒரு சிறு மேகக் காற்று மறைத்திருந்த விதம்கூட ஓர் அழகிய கவிதைபோல இருந்தது. மெல்லிய தோகையாக பனி கவிந்து வந்தது. கோப்பி மரமெல்லாம் ‘கொல்’ எனப் பூத்திருந்தது. தூரத்தில் கரந்தகொல்ல பஸ் இரைந்து சென்றது. பாம் வோச்சர் தண்டவாளத்தில் 7முறை அடிக்கும் சத்தம் கேட்டது.

“மைகோட் 7மணியாய்ப் போச்சு. 4மணி தொடக்கம் இஞ்சை இருந்திட்டம் எழும்பு! எழும்பு! சாப்பாட்டுக்கு நேரமாய்ப் போச்சு”

“பண்டையா என்ன கறி போட்டிருக்கிறாரோ தெரியாது”

“என்ன வழக்கம்போல முத்தல் பீன்சும் பூசணிக்காயும்தான் வேறை என்ன இருக்கும்? அவர்கள் இருவரும் அந்த இடத்தைவிட்டுப் பிரிய மனமின்றி எழுந்தார்கள்!

பள்ளக்கடை முதலாளிக்கு ‘போமஸ்துதி’ சொன்னார்கள்.

“நீ இண்டைக்கு என்னோடை அபயவர்த்தனாவில் தங்கிப் போவன் விஜி”- உண்மையான ஆதங்கத்துடன் கேட்டான் ராஜன்.

“ஏன் தனியப் போகப் பயமாய் இருக்கே?”

“பயமெண்டில்லை கொஸ்ரலிலை நான் அன்நியத் தன்மையை உணர்கிறன்”

“பண்பாடற்ற மனிதர்கள் எல்லா இடத்திலும் எல்லாத் தரத்திலும் இருக்கிறார்கள்”

இருவரும் கடைக்கு வெளியே வந்தார்கள். பாலாகப் பொழிகின்ற நிலவின் அமுததாரையிலும் பனித்திரையிலும் நனைந்து திளைத்தார்கள்.

“நிலவு குளிர்ச்சியாக இல்லை ….” – முணுமுணுத்தான் விஜயன்.

“சைக்…. சும்மாயிரு. எவ்வளவு சந்தோசமாய் இருக்கு இப்படி நிலவிலை நடந்துபோக”

தெபீபியா ரோசாவும், என்புருக்கியும், வாகையும், ஊதாவாயும், சிவப்பாயும், பொன்நிறமாயும் வழியெல்லாம் பூச்சொரிந்திருக்கும் அந்த அழகிய தெருவில் அவர்கள் மகிழ்ச்சியுடன் நடந்தார்கள்.

“ஏரிக்கரைப் பூங்காற்றே…” தன்னையறியாமல் உற்சாகம் கொண்டு ராஜன் பாடத் தொடங்கினான்.

ராஜனின் திடீர் சந்தோசத்தால் திகைப்படைந்த விஜயன்,

“வாழ்க்கைக்கு என்ன அர்த்தத்தைக் கண்டு இப்படித் திடீர் சந்தோசம் கொண்டு கானமழை பொழிகிறாய்?” என நாடக பாணியில் கேட்டான்.

“நீண்ட வாழ்க்கைக்கு அர்த்தமிருக்கோ என்னவோ தெரியாது. ஆனால் இந்த நிமிடத்துளிகட்கு அர்த்தமிருக்கு மச்சான். நாங்கள் போடுகிற முகமூடிகளை எல்லாம் கழட்டி வைச்சுட்டு, வளைஞ்சு கொடுக்காத எங்கடை தன்முனைப்புகளை எல்லாம் எடுத்து வைச்சிட்டு இப்படி மனம்விட்டு பரிநிர்வாணமாய் கதைக்கிற கணங்கள், இப்படி சந்தோசமாய் நிலவிலை நடக்கிற கணங்கள்- இந்தக் கணப்பொழுதுகளுக்கு அர்த்தம் இருக்கு மச்சான். இந்தக் கணப்பொழுதுகள்தான் வாழ்க்கையையே அர்த்தமாக்குது மச்சான் -ராஜன் மகிழ்ச்சி கொப்பளிக்கச் சொன்னான்.

“சாலையோரம் சோலையொன்று பாடும்…” விஜயன் பாடத்தொடங்கினான். அவர்கள் பாட்டும் சிரிப்புமாக விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.

 

திசை 1989

வடகோவை வரதராஜன்-இலங்கை

வடகோவை வரதராஜன்

 

தட்டச்சில் உதவி : தேசிகன் ராஜகோபாலன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

(Visited 157 times, 1 visits today)