சேவல்-சிறுகதை-இஹ்லாஸ் முஹாந்திரம் ( அறிமுகம் )

இஹ்லாஸ் முஹாந்திரம்
ஓவியம் : எஸ்.நளீம்

பெரும் மழையொன்று பெய்து ஓய்ந்திருந்தது. காசிம் சைக்கிளை விட்டு இறங்காமல் முன் சக்கரத்தால் வாசல் படலையை தள்ளிக்கொண்டு நுழைந்து முற்றத்து கொய்யாவில் சைக்கிளை சாத்திவிட்டு, தேங்கி நிற்கும் தண்ணீரில் பட்டுவிடாமல் சாரனை ஒரு கையால் உயர்த்திப்பிடித்தபடி வந்து தென்னையோலைக் கிடுகில் வேயப்பட்ட வீட்டு முன் திண்ணையில் குந்திக்கொண்டார்.

பின்பக்க சேறு தாங்கி இல்லா சக்கர வீசலில் வீசிய சேறு அணில் கோடாய் முதுகில் தீட்டியிருந்தது, மழை விட்டும் காற்று மேனி தொட்டு கூதலை இரட்டிப்பாக்கியது. மேற் சட்டைப் பையில் இரு விரல்களை நுழைத்து கத்தரி போட்டுத் துழாவி ஒரு பீடியை எடுத்து உதடுகளில் சொருகிக்கொண்டு கூரையில் சொருகி வைத்திருந்த தீப்பெட்டியை எட்டி எடுத்து அதன் தலைக்கு தீ வைக்க முயன்றார். மழைக்கு முழுக்க நனைந்திருந்த தீப்பெட்டி ஒவ்வோர் உரசலிலும் ஒவ்வொரு குச்சியாய் பல்லிளித்துக் காவு வாங்கியது. வெறுத்துப்போய் உட்புறம் நோக்கி,

“புள்ளேய்.. நெருப்பு கொஞ்சம் கொண்டா பீடியை பத்தவைக்க”

உள்ளறையில் இருந்து மண்ணெண்ணை விளக்கைத் தூக்கிக்கொண்டு அவரின் தர்ம பத்தினி பிரதிஷ்டப்பட்டார். விளக்கை வாங்கி பீடியை பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்துப் புகையோடு மண்ணெண்ணை வாசத்தையும் நுரையீரலில் ரொப்பிக்கொண்டவர்.
‘ராவைக்கு என்ன சாப்பாடு?’ என மனைவியிடம் கேட்டார்.

‘சஹருக்கு ஆக்கின மீன் கறி சூடாக்கியிரிக்கி, இருக்க சோறு பிள்ளையளுக்கு காணும், நமக்கு ரொட்டி சுட மாப்பெசஞ்சி வெச்சிருக்கன், இப்பானே இஷாக்கு வாங்கு சென்ன, தராவீஹ் முடியட்டும் சுட்டு வைக்கன், எனக்கிம், பெரியவளுக்கும் சஹருக்குத்தான் கறி ஒண்டுமில்ல” என்று மனைவி சொல்லிக்கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து ஓடி வந்த ஆணும் பெண்ணுமாய் இரண்டு வாண்டுகள் உம்மாவின் கால்களை கட்டிக்கொண்டு எட்டிப்பார்த்தன. ஐந்தும் மூன்றுமாய் வயது. குச்சிகளுக்கு கால், கை முளைத்ததாய் உருவும் பிறப்பு முதல் எண்ணை கண்டிராத தலை முடிகள் தம் சுய நிறத்தை இழந்து மஞ்சட் படிந்திருந்தன.

குழந்தைகளைக் கண்டதும் காசிம்,

‘வாப்பாட குட்டிகள் ரெண்டும் ஓடிவாங்க..’

பிள்ளைகள் தயங்கித்தயங்கி வாப்பாவிடம் வந்தன, பீடியை கடைசி இழுப்பொன்று இழுத்து சுண்டி வெளியில் வீசிவிட்டு இரு கைகளாலும் இருவரையும் இழுத்துச் சேர்த்துக்கொண்டார்.

‘எங்க பெரியவள்?’

‘இவ்வளவு நேரமும் நீங்க வருவயள் எண்டு காத்துக்கிருந்திட்டு இப்பான் படுக்காள், நோன்புச் சவுப்பு தானே’
‘ஏன் என்னை காத்துக்கிருந்த?’

‘நல்ல கேள்விதான் கேக்கயள், பெருநாளைக்கு இன்னம் ரெண்டு நாள் எலவ கெடக்கு, இதுகளுக்கு உடுப்பு எடுக்கயில்லய?’

‘ஓ,.. எடுப்பம் எடுப்பம், இப்ப எங்க புள்ள கையில காசி, ரெண்டு கெழமையா கடல் ஒரமெண்டு கடலுக்குப் போகவேணாமெண்டு அரசாங்கம் செல்லுது, அண்டண்டைக்கி மீன் புடிக்க நமக்கெலவ அதிட கஸ்டம் தெரியும், ஒரு நிவரணமும் இல்ல, நோன்பு காலம் கேப்பார் பாப்பாரும் இல்ல, தான் ஒழச்சாத்தான் தனக்கெண்டு சும்மாவா சொன்னாங்க, இண்டைக்கு ஓடைக்கி மீனுக்கு போறன், நாளைக்கு எடுக்கலாம்’
‘மீனுக்கு பொறகு போகலாம், பறக்கத் டெக்ஸ_க்குப் போய் மொதலாளிக்கிட்ட செல்லி உடுப்பெடுங்களன், பெருநாளைக்குப் பொறகு காசி தாறண்டு செல்லிப்பாருங்க, அவர் தருவார்’

‘ஹ்ஹ்ஹ்ம்ம் நாளைக்கு பாப்பம், இண்டைக்கு நல்ல தண்ணி போகுது, ஒரு பாட்டத்திலயே ஏழெட்டு கிலோ படும், இண்டைக்குட்டா மறுகா வேலல்ல’

‘எங்க, தோணாக்கயா?’

‘இல்ல தோணாக்க ஆக்கள் கூட, கல்லாத்து ஓடைய கவுண்டி போட்டு வெட்டி கடல்ல உட்டிருக்கு, நல்ல தண்ணி, அங்க போனா நாலஞ்சி பாட்டோட ஊட்ட வந்திரலாம், இப்ப போகத்தான்’ என்றவர் பிள்ளைகளை விட்டெழுந்து திண்ணை மூலையில் சுருட்டி வைத்திருந்த கை வீச்சு வலையை எடுத்தார்.

‘அப்ப இண்டைக்கு சஹருக்கு எங்களுக்கு சாப்பாடு?’

‘கோழிகள் ஒண்டும் முட்டயுடல்லய?’

‘நாலு முட்ட உட்டிருக்கி, வெள்ளகோழி குறுக்கு போல அது உடல்ல’

‘இண்டைக்கி முட்டையோட சமாளிங்க, நாளைக்கு வேறென்னவும் பாப்பம், கோழி எல்லாம் கூட்டுக்க அடச்சாச்சா?’

‘எல்லாக்கோழியும் அடச்சாச்சி, சாவல் மட்டும் கெணத்தடி மாவில ஏறிக்கி எறங்குதில்ல, பேஞ்ச மழக்கிம் நலஞ்சி குந்திக்கிரிக்கி, ஒருக்கா புடிச்சி பாருங்க’

மனைவி சொன்னதும் வலையை மடித்து தோளில் போட்டுக்கொண்டு கிணற்றடிக்கு வந்தார் காசிம்.
‘புள்ள சாவுறா.. அந்த வெளக்கக் கொண்டா இருட்டுக்க ஒரு மண்ணும் வெளங்குதில்ல’
அவர் மனைவி ஒரு கையால் விளக்கைப் பிடித்துக்கொண்டு அது அணைந்துவிடாமல் மற்றக் கையினால் காற்றுக்கு அணை கட்டியவாறு விளக்கைத் தூக்கிக் கொண்டு வந்தாள். காற்று முன்னைக்கும் சற்று வேகம் எடுத்திருந்தது. விளக்குத்திரியில் தீபம் தாண்டவ நடனமாடிக்கொண்டிருந்தது.

விளக்கின் குருட்டு வெளிச்சத்தில் கிணற்றடி சிறு மாமரக் கிளையொன்றில் தொத்தியிருந்த சேவலைப்பார்த்தார் காசிம். முன்பு பெய்திருந்த மழைக் கூதலுக்கோ இல்லை இப்போது வீசும் காற்றுக்குத் தாக்குப்பிடிக்கவோ என்னவோ சேவல் கால்களால் கிளையொன்றினை இறுக்கப்பிடித்து சௌகரியமாய்க் குந்திக்கொண்டிருந்தது. சாதா சேவல்களைவிட ஒரு பங்கு பெருத்த பெரும் சேவல்.
காசிம் சேவலைக் கீழே இறக்க,
‘பா, பா,. ச்சூய், ஹ_ய்,.’ எனக்கத்தியும் எட்டிய கிளையொன்றினை ஆட்டியும் பார்த்தார், இலைகளில் தங்கியிருந்த மழை நீர் ‘சொட சொட’வெனக் கொட்டியதே தவிர சேவல் அசைவதாய் இல்லை.
‘படிச்ச வித்த பதினெட்டும் பண்ணிப்பார்த்திட்டன் அது கேக்குதில்ல, ராவக்கி மழைக்க கெடக்கட்டும், எனக்கி நேரம் போகுது’ என்றார் சலித்திக்கொண்டே.

மனைவி சாபிறாவின் கண்களில் ஒரு பச்சாதாபம் தெரிந்தது. மற்றக் கோழிகளைவிட சேவலின் மேல் பாசம் ஒரு படி அதிகம் அவளுக்கு, அது குஞ்சாக இருக்கும்போது இறக்காமத்தில் இருந்து கொண்டு வந்து கொடுத்ததோடு காசிமுக்கு அதன் மேலான கடமை தீர்ந்திருந்தது. அதனை போற்றி வளர்த்ததெல்லாம் சாபிறாதான். இன்று ஒரு காளையின் மூர்க்கத்தோடும் காவல் நாயின் வீரத்தோடும் வளர்ந்து நிற்கிறது, வீதியில் போவோர் வருவோரை இறக்கை இரண்டையும் நிலத்தில் உராய்ந்து கொண்டு கழுத்தை உயர்த்திக்கொண்டு கொத்தத் துரத்தும். அதன் தோற்றமும் பருமனும் பலரையும் பயப்படுத்தி வேகமாய் விலக வைப்பதும் உண்மையே, உணவுக்குப் போட்டியாய் வரும் பூனை, காக்கைகளும் கூட சற்று எட்ட நின்றே அணுகும் அத்தனைக்கு ஜாம்பவான் அச்சேவல். பொதுவாய்ச் சொன்னால் அந்த வீட்டின் ராஜா அது. அதனாலேதான் ராஜாவை அரண்மணை விட்டு வனவாசம் அனுப்பும் தாயாய் சாபிறாவிற்று கழிவிரக்கமாய் இருந்தது. என்ன செய்ய அது வீடேறுவதாய் இல்லையே. எனவே தற்காலிகமாய் அதை விட்டு கணவனிடம் திரும்பினாள் சாபிறா.

‘இஞ்சைய்ங்க.. இப்ப நீங்க போனா வர விடிய சாமம் ஆகும், மூணு வாளி தண்ணியள்ளி பெரிய பானைல ஊத்தி விறாந்தைக்க வெச்சிட்டு போங்க, ராவல ஆத்திர அவசரத்துக்கு இருட்டுக்க வெளியெறங்கேலா, சகருக்க மொகங்கழுகி ஒழுச்செய்ய பெரியவளும் தண்ணி கேப்பாள்’
‘ஹா, நான் தண்ணியள்ளி நெறச்சிட்டு வாரன், நீ ஒரு ரொட்டிய கல்லில போட்டு வை. கொஞ்சமா திண்டுட்டு போனா நல்லம்.’ எனச்சொல்லிவிட்டு தோளில் கிடந்த வலையையெடுத்து கிணத்துக் கட்டில் வைத்துவிட்டு, துலா வாளியை கிணற்றுக்குள் இறக்கினார்.

வீட்டு விறாந்தையில் பெரிய பானையை வைத்து அதில் நீர் நிரப்பி, தன் கை, கால்களையும் அலம்பிக்கொண்டு வலையை எடுத்து சைக்கிளின் பின் ‘கேரியரில்’ வைத்துவிட்டு அவர் திண்ணைக்கு வரும்போதைக்கும் சுடச்சுட தேங்காய் ரொட்டியும், சூடாக்கிய மீன் கறியும் தயாராய் இருந்தன. வழமையாய் ஏதோ பேருக்கு கொறிப்பவர் இன்று மீன் கறிப்பாத்திரத்தை வழித்துத் துடைத்துச் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்து பெரும் ஏப்பமொன்றையும் விட்டபடி..

‘சாவுறா.. ஒரு அம்போருவா காசி கொண்டா, போற வழில பீடியும் நெருப்பெட்டியும் வாங்கோணும்’
மனைவி கொண்டு வந்த காசை வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சைக்கிளை எடுக்க வரும்போது காற்றின் வேகம் இன்னும் கொஞ்சம் கூடியிருப்பதைக் கவனித்தார், இயல்பாய் பார்வை கிணற்றடி மாவிற்குப் போய்த் திரும்பியது. அக்பர் பள்ளியில் இஷாவுடைய தொழுகைக்கான இகாமத் ஒலிபெருக்கியில் கேட்டது.
சைக்கிளை படலை வரை தண்ணி வந்து சைக்கிளில் ஏறி அக்பர் பள்ளி வீதியால் நாவலடிச் சந்திவரை சைக்கிளை மிதித்தார். நாவலடிச் சந்தி சில்லறைக் கடையில் பீடியும் தீப்பெட்டியும் வாங்கி அவை நனையாமல் ஒரு பொலித்தீன் கவரில் இட்டு சட்டைப்பையில் போட்டுக்கொண்டு கடற்கரை வீதியில் திரும்பி தோணா வரை சைக்கிளை மிதித்தார். வேகப்பட்டிருந்த காற்றை எதிர்த்து சைக்கிள் மிதித்தல் பெரும் பிரயத்தனமாய் இருந்தது. காற்றின் வேகத்திற்கு மரங்களெல்லாம் பேயாட்டம் ஆடத் துவங்கியிருந்தன.
தோணா ஓடை கடலில் கடக்கும் இடத்தில் மீன் பிடிக்க சிலரும் வேடிக்கை பார்க்க பலரும் என ஜனத்திரள் நிறைந்திருந்தது. அவர்களோடு கலக்காமல் சவச்சாலை வீதியால் திரும்பி கல்லாறு ஓடை கடலடையும் கழிமுகம் நோக்கி பயணப்பட்டார். காற்றும் ஒரு ‘மினி’ச் சூறாவளியின் வேகத்தோடு வீசிக்கொண்டிருந்தது. காற்றின் வேகத்தில் மழை கலைந்திருந்தது.

கல்லாற்று ஓடையை நெருங்கும் போதே ‘சல சல’வென நீரோடும் சத்தம் முதலில் வரவேற்றது. குளிர் காற்று முகத்தில் அறைந்தது. ஒரு கண்டல் மரத்தடியில் சைக்கிளை சாத்திவிட்டு, செருப்புக்களையும் கழற்றி சைக்கிள் ‘பெடலில்’ கொழுவிட்டு வலையை தோளில் போட்டுக்கொண்டு கழிமுகத்திற்கு நடக்கலானார். நேரம் பத்தரையையும் தாண்டியிருக்கும் போல், கன்னங்கரேல் என்ற இருள் பிராந்தியத்தையே மூடியிருந்தது. கால்கள் பழக்கமான பாதையில் அதன் பாட்டில் நடந்தன.

கல்லாறு; மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியிற் பயணிக்கும் போது நீங்கள் காணும் அடுத்தடுத்து வரும் இரண்டு பாலங்களில் ஒன்று கல்லாற்றுப் பாலம். பாலத்தில் இருந்து கிழக்கே முன்னூறு மீட்டர்கள் தொலைவில் கடலோடு ஆறு சங்கமமாகும் இடத்தையே பேச்சு வழக்கில் ‘கல்லாத்தோடை’ என்பர். மழை காலங்களில் மாத்திரமே ஓடை கடலில் கலக்கும், மற்ற நாட்களில் வெறுமனே காய்ந்து கிடக்கும். பெரு மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு கிராமத்தினுள் புகுந்துவிடாமல் இயந்திரங்களின் உதவியால் கடற்கரையில் ஒரு கால்வாய் வெட்டி கடலோடு சேர்த்துவிடுவர். பின் வெள்ள நீர் தன் வழியை தான் பார்த்துக்கொள்ளும்.
காசிம் ஓடைக் கரைக்கு வரும்போது ஓடை நூறு மீட்டர் அகலத்தில் பேராறு போல் ஓடிக் கடலடைந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு கரைகளையும் தின்று தன்னை பெருப்பித்துக்கொள்வதில் கண்ணாய் இருந்தது. நீரோட்டம் மிக வேகமாக இருந்தது. மேல் நீரோட்டத்தை விட பல மடங்கு வேகமாய் இருக்கும் அடியொழுக்கு, மீன்களை மாத்திரமல்ல சில நேரங்களில் பெரும் முதலைகளைக்கூட அடித்துவந்து கடலில் சேர்த்த சம்பவங்களும் உண்டு. ஆற்று நீரின் வேகத்தில் அடித்து வரப்படும் மீன்கள் கடலில் கலக்கும் போது நன்னீரில் இருந்து உவர் நீருக்குள் கலக்க முடியாமலும் பெரும் நீரோட்டத்தை எதிர்த்து நீந்தி ஆறு சேர முடியாமலும் கழிமுகத்திலே திக்கித் திணறிக்கொண்டிருக்கும், அவற்றை பத்திரமாய்க் கரை சேர்ப்பதே வலைஞர்கள் பணி. பலர் தொழிலாகவும் சிலர் பொழுது போக்காயும் வலைவீசுவர்.
காசிம் கரைக்கு வந்ததும் சுற்றும் நோட்டம் விட்டார். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சிலர் ஏலவே வலை வீசிக்கொண்டிருந்தனர். சிலரின் வெள்ளைச் சட்டைகளும், பலரின் பீடி நெருப்பு வெளிச்சங்களும் அவர்களை அடையாளம் காட்டின.

தானும் வலையைக் கீழே வைத்துவிட்டு பொலித்தீன் பைக்குள் இருந்து ஒரு பீடியையும் தீப்பெட்டியையும் வெளியில் எடுத்து பீடியை வாயில் வைத்து பற்களாற் கடித்துப் பிடித்துக்கொண்டு ஒரே தீக்குச்சியில் ஒரே உரசலில் பீடியைப் பற்றவைத்துக்கொண்டார். எவ்வளவு பெருங்காற்றிலும் தீக்குச்சி அணையாமல் பற்ற வைப்பது கடல்சார் மீனவர்களுக்கு கைவந்த கலை.
சாரனை நன்று உயர்த்தி இடுப்பில் இறுக்கமாய் வரிந்து கட்டிக்கொண்டு, வலையோடு கொண்டு வந்திருந்த துண்டொன்றைத் தலைப்பாகை போல் தலையில் கட்டிக்கொண்டு பீடிப் பொட்டலத்தை அதில் சொருகிக்கொண்டார்.

வலையைத் தூக்கி ஒரு கையால் வலைக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மற்றக் கை மணிக்கட்டில் வலையின் இடைப் பகுதியை போட்டுக்கொண்டு மெதுவாக நீரில் இறங்கினார். நீரோட்டத்தின் வேகத்தில் நீரில் இறங்கி நிற்பது கயிற்றில் நடப்பதை விடக் கடின வித்தையாய் இருந்தது. சில்லென்ற குளிர் கால்களால் ஏறி முழு உடம்பையும் வியாபித்தது. காற்றும் தன் பங்குக்கு எங்கிருந்தோ மழையை இழுத்து வந்து இங்கே கொட்டத்துவங்கியது. சுவர்க் கோழியின் ரீங்காரம் போல ஓடையின் சத்தம் மாத்திரமே பிராந்தியம் முழுக்க வியாபித்திருந்தது.

நீரினுள் தன் நிலையை உறுதிப்படுத்திக்கொண்ட காசிம் தலைக்கு மேலால் ஒரு சுத்து சுத்தி வலையை நீரின் மையத்தை நோக்கி வீசினார், வலை வட்ட வடிவாய் ஒரு அழகிய கோலம்போல் நீரில் விழுந்தது. ஒரு கை வலைக்கயிற்றை உறுதியாய்ப் பற்றியிருக்க ஒரு காலைத்தூக்கி கரைமணலில் பதித்து இருத்திக்கொண்டு மெல்ல வலையை இழுக்கலானார். வலையின் அற்றம் நெருங்க நெருங்க காசிமும் மெதுவாய் நீரோட்டத்திற்கு ஏற்றாற்போல் கால்களைத் தூக்கி கரைக்கு மேல் ஏறிக்கொண்டார். நீரோட்டத்தின் வேகத்தில் இழுபட்டுப்போகும் வலையினை இழுத்துக்கரைசேர்க்க பத்தாள் பலம் வேண்டும் போல் இருந்தது, மெதுவாய் வலையும் முழுதாய்க் கரை சேர்ந்தது.

‘ச்சேய்.. ஆத்துவாழக் கும்பம்’ என தனகுத்தானே சலித்துக்கொண்டார்.

வலையை தூக்கி நிலைக்குத்தாய் ஒரு கையிற் பிடித்துக்கொண்டு மறு கையால் ஒரு அற்றத்தில் இருந்து மறு அற்றம் வரை பிரித்து அதில் சிக்கியிருந்த பலவற்றையும் எடுத்து வெளியில் போட்டார்.
சிறிதும் பெரிதுமாய்ப் பல மீன்களும், நிறைய ஆற்றுவாழைகளும், காய்ந்த ஒரு தேங்காயுமாக பல கந்தல்களும் நிறையவே வலையில் சிக்கிக்கொண்டிருந்தன. வீச்சு வலையில் இது எப்போதும் சாதாரணம். கொஞ்சம் கொஞ்சமாய் அவற்றைச் சுத்தம் செய்வது பெரும் சவாலான ஒன்றாகும், அதற்குப் பெரும் பொறுமை தேவை.

காசிமும் பொறுமையாய் வலையைச் சுத்தம் செய்து மீன்களையும் குப்பை கூழங்களையும் வேறாகப் பிரித்து காலால் மணலில் ஒரு குழிதோண்டி மீன்களை அதில் போட்டுக்கொண்டார். இப்போது மழையும் காற்றும் நன்கு வலுத்திருந்தன.

‘அடுத்த பாட்டுக்கு கொஞ்சம் எறங்கிப் போடோணும்’ என்று நினைத்துக்கொண்டே முகத்தில் வடியும் மழை நீரைப் புறங்கையால் துடைத்துக்கொண்டு வலையைத் தூக்கிக் கொண்டு இறங்க ஆரம்பித்தார். இடைக்கிடை இடிச் சத்தங்கங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்னல் வெளிச்சங்கள் பளீரிட்டு மறைந்தன.

நீரில் இறங்கும் போது கவனித்தார் முன்னையைவிட நீர் மட்டம் கூடியும், வேகமாகவும் இருந்தது, முன்பு இருந்த கரையையும் தாண்டி சில அடிகள் நீர் கரைக்குள் உள்வாங்கியிருந்தது.
‘இன்னும் ரெண்டு, மூணு பாட்டம் போட்டா போதும்’ என நினைத்துக்கொண்டார். மழையின் வேகம் வீட்டுக் கூரையின் ஓட்டைகளையும் நினைவு படுத்தியது, ‘அடுத்த மழைக்கு முதல் புதுக்கிடுகு வேயவேணும்’ என்ற எண்ணமும் வந்தது.

இப்படிப் பலதையும் நினைத்துக் கொண்டு நீரில் இறங்கினார். முன்னதையும் விட இரண்டு மூன்றடி முன்னேறி நின்றார். கால்களுக்குக் கீழே மணல் நீரோடு கரைந்தோடுவது கால்களுக்கு நன்கு புலப்பட்டது.
வலையைச் சுற்றி ஒரு வீசு வீசினார். வலை நீரோட்டம் கூடிய மையத்தை நோக்கி விரிந்து விழுந்தது. வலைக்குள் எக்கச்சக்கமாய் எதுவோ மாட்டிக்கொண்டது. அது காசிமின் முழுப் பலத்தினை விட அதிக பாரமான பொருளாய் இருக்க வேண்டும். மாட்டிக்கொண்ட பொருளையும் வலையையும் சேர்த்து நீரோட்டம் இழுத்த இழுப்பும், கால்களுக்கு கீழான மணல் அரிப்பும் ஒரு வினாடியில் காசிமை நிலை தடுமாறச் செய்துவிட கை அவசரமாய் ஓர் பிடிமானம் தேடியது, ஆனால் கரைத் திட்டுக்கூட கைக்கெட்டும் தூரத்தில் இல்லை, கையில் பிடித்திருந்த வலைக்கயிறு கையில் மாட்டிக்கொண்டு இழுத்த இழுப்பில் தலைகுப்பற நீரில் விழுந்தார் காசிம். எல்லாம் ஓரிரு நொடிகளில் சம்பவித்துவிட்டன. அதே கணம் பிரகாசமாய் பெரும் மின்னலொன்று பிராந்தியத்தையே ஒரு நொடி பகலாக்கியது. அந்த வெளிச்சத்தில் அவர் தோண்டிய குழியில் போட்டிருந்த மீன்கள் துடித்தடங்குவது காசிமிற்கு மங்கலாய்த்தெரிந்தது.

0000000000000000000000000

அந்த மின்னலைத் தொடர்ந்த இடிச்சத்தம் வீட்டுக்கூரையில் விழுந்தது போல் மிகப்பக்கத்தில் பெரும் சத்தமாய்க் கேட்க திடுக்கிட்டு விழித்தாள் சாபிறா. வெளியே பெருங்காற்றோடு சோவென்ற மழையாக இருந்தது. வீட்டுக்கூரையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை வீட்டினுள்ளும் எட்டிப்பார்த்தது. சாபிறாவின் தூக்கம் மொத்தமாய்க் கலைந்துபோனது. மின்னல் வெளிச்சமும், இடிச்சத்தமுமாய் பின்னிரவு நீண்ட நேரம் கழிந்து மௌ;ள அமைதி தலைதூக்கியது. சஹர் நேரம் நெருங்க பெரிய மகளையும் எழுப்பி பானையில் நிறைத்து வைத்திருந்த நீரில் கை, கால், முகம் கழுவி ஆக்கி வைத்திருந்த முட்டைக்கறியுடன் சஹர் உணவை, குப்பி விளக்கு வெளிச்சத்தில் உண்டு முடித்து, சுபஹையும் தொழுதுவிட்டு மீண்டும் சாய்ந்து உறங்கினர்.
காலை கிழக்கு வெளுத்து பட்சிகள் பாடத்தொடங்கிய போது எழுந்த சாபிறா கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு, பாயை சுருட்டி மூலையில் போட்டுவிட்டு, அடுப்புச் சாம்பலில் கொஞ்சம் அள்ளி இடக்கையில் போட்டுக்கொண்டு கிணற்றடி வாசலைத்திறந்தாள்.

அங்கு அவள் கண்ட காட்சி அவளை அப்படியே கல்லாய்ச்சமைத்தது, இரவின் மழைக்கும் காற்றுக்கும் தாக்குப்பிடிக்கவொண்ணா மாமரம் தலைகுப்புற கவிழ்ந்திருந்தது. பெரும் கிளையொன்றுக்கும் கிணற்றுச்சுவருக்கும் இடையில் எக்குத்தப்பாய் மாட்டிக்கொண்ட அவர்கள் வீட்டு ராஜ சேவல் சத்தியமாய்ச் செத்திருந்தது.

இஹ்லாஸ் முஹாந்திரம்-இலங்கை

 

(Visited 29 times, 1 visits today)