கால அவதி-சிறுகதை-உஷாதீபன்

உஷாதீபன்“அப்போ நீங்க செய்தது தப்பு இல்லேன்னு சொல்றீங்க, அப்படித்தானே?”
பதஞ்சலீஸ்வரன் இப்படிக் கேட்பார் என்று தியாகராஜன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. டிராஃபிக்கைப் பார்த்துக் கவனமாய் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். இப்போது பதில் சொல்வது கவனத்தைக் குலைத்து விடும். பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவர் மனது சொல்லியது.

இன்னும் அஞ்சு கி.மீ. போயாக வேண்டும். அதுவரை அவருக்குத்தான் கவனம் தேவை. பின்னால் உட்கார்ந்திருப்பவருக்கு அந்தக் கவலையில்லை. இவர் மீது நம்பிக்கை இருந்தால் போதும். இருக்கக்கண்டுதானே உட்கார்ந்திருக்கிறார்.
பதஞ்சலி கூட்டத்திற்கு வருவார் என்று தியாகராஜன் எதிர்பார்க்கவில்லை. அங்கு போய் உட்கார்ந்த பின்னால்தான் தெரிகிறது.மெல்ல வந்து முதுகைத் தொடுகிறார். ஒரு வேளை தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்றே வந்திருப்பாரோ? அப்படியொன்றும் இலக்கிய ஆர்வம் உள்ள ஆள் கிடையாது. எந்தக் கூட்டம் என்றாலும் அலர்ஜிதான் அவருக்கு. ஒரே வரியில் சொல்லி விடுவார். நா வர்ல,

என்ன பெரிய கூட்டம் சார், பத்துப் பேர் வருவாங்க, சொன்ன நேரத்துக்குக் கூட்டம் ஆரம்பிக்காது. சட்டுப் புட்டுன்னு கூட்டத்தை முடிக்கவும் மாட்டாங்க.. பெரிஸ்ஸா விஷயமும் இருக்காது. வீடு போய்ச் சேர பத்துக்கு மேலே ஆயிடும். பிறகு சாப்டுட்டுப் படுக்கிறதுக்கு ஒரு மணி நேரம்என்ன அப்படி அவசியம்? நம்மளையும் கஷ்டப்படுத்திட்டு, வீட்லயுஞ் சிரமம், எதுக்கு?
இப்படிச் சொல்லக் கூடியவர் அதிசயமாய் வந்திருக்கிறார். முதலிலேயே சொல்லி விட்டார். போகைல நா உங்க வண்டிலயே வந்திடுறேன்.

மாட்டேன் என்று எப்படிச் சொல்வது? ஆனால் ஒரு சங்கடம், இரண்டு பக்கமும் கால் போட்டு உட்காருங்கள் என்றால் கேட்க மாட்டார். ஒரு பக்கமாவே உட்கார்றேன்,என்பார். வண்டி ஒளட்டுங்க,அதனாலதான்,என்றால் உங்க ஒய்ஃப்பை மட்டும் வச்சிட்டுப் போறீங்க,அவங்க சைடுலதான உட்கார்றாங்க,அப்புறமென்ன?
மனுஷனுக்கு அசாத்தியமான ஜாக்கிரதையுணர்வு. ஏதேனும் விபத்து, மோதல் என்று நெருங்கினால் படக்கென்று குதித்து விடலாமே,! முன் ஜாக்கிரதை முத்தண்ணா,!
“கேட்டதுக்கு பதிலே சொல்லலியே? “என்றார் பதஞ்சலி.

“ட்ராஃபிக்ல பேச விரும்பல,அமைதியா வாங்க,. “பேச வேண்டாம்,நா சொல்றத மட்டும் கேட்டுட்டே வாங்க,.போதும்,.
அது கவனத்தைக் குலைக்காதா? இந்த மனுஷனுக்கு எவன் சொல்வது? விதியே என்று ஓட்டிக் கொண்டிருந்தேன். பொதுவாக யாரையும் டபிள்ஸ் உட்கார்த்துவதில்லை. மனதுக்குள் ஒரு பயம் வந்து விட்டது. ஓய்வு பெற்ற பிறகு தொட்டதுக்கெல்லாம் ஒரு நடுக்கம். சாமான்கள் வாங்கப் போகும்போது மட்டும் ருக்மணியை உட்கார்த்திச் செல்வது. வேறு வழியில்லை. மற்றப்படி எவரையும் ஏற்றுவதில்லை. இருக்கும் டிராஃபிக்கில் கீழே விழுந்தாலும் நம்மோடு போகும்,.என்கிற எண்ணம்தான். பதஞ்சலீஸ்வரன் இவருக்கு ரெண்டு ஆண்டுகள் முன்பே ஓய்வு பெற்று விட்டார். ஆனால் அவரது இருப்பே தனி. நடைமுறையும் வேறானது. அவர் ஜோதியில் கலந்தவர்.

லட்சியவாதம் கொண்ட எழுத்துக்கெல்லாம் இப்போ மதிப்பில்லை. அது காலாவதியாகிவிட்ட விஷயம்னு துவக்கத்துல பேசினவரோட கருத்தை நீங்க மறுத்துப் பேசினீங்க, அதுதான் என்னை இன்னைவரைக்கும் நேர்மையானவனாவும் ஒழுக்கமானவனாவும் வச்சிருக்குன்னீங்க. ஒரு சத்தியமூர்த்தியும் ஒரு அரவிந்தனும்தான் என் வாழ்க்கைக்கே ஆதர்சமா அமைஞ்சாங்க. அந்த எழுத்துதான் என்னோட முப்பத்தஞ்சு வருஷ கவர்ன்மென்ட் சர்வீசை ஒழுங்கா, நேர்மையா வச்சிருந்ததுன்னு சொன்னீங்க, கேட்கவே ரொம்ப திருப்தியா இருந்திச்சு, சந்தோஷமாவும் இருந்தது.

ரொம்ப நன்றி. இளம் வயசுல மனசுல பதிஞ்ச விஷயம் சார் அது, நம்ம தாய் தந்தையரோட வாழ்க்கை முறையும் நம்மை வழி நடத்தினதுன்னு சொல்லணும் இத இதைப் படின்னு தேர்வு செய்து நமக்குச் சரியானதை வழிகாட்டியிருக்காங்களே! அந்தக் காலத்துலயே வெறும் பொழுது போக்கு எழுத்துகளும் இருக்கத்தானே செய்தது, இதுதான் சிறந்ததுன்னு தேர்வு செய்றதும் சொல்றதும் வழி காட்டுறதும் பெரிசில்லையா? நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட லட்சியவாதம்ங்கிறது வாழ்க்கைக்கே அடிப்படையாச்சே அது எப்படி இன்னைக்குக் காலாவதியான, மதிப்பிலாத ஒண்ணா ஆகும் காலத்துக்கும் எல்லாரும் பின்பற்ற வேண்டியதில்லையா? அதுதானே பேஸ்மென்ட், அது நம் எண்ணங்களோடயும் நடத்தையோடும் பதிஞ்சாத்தானே தீயதை இனம் காண முடியும். நல்லது கெட்டது பிரிக்க முடியும். அது எப்படி மதிப்பில்லாமப் போகும் அதனாலதான் மறுத்துப் பேசினேன்.
ஓர் ஒரமாய் வண்டியை நிறுத்தி இறங்கி நின்று இதைச் சொன்னார் தியாகராஜன். அப்படி நிதானமாய் பேச ஆரம்பித்ததில் பதஞ்சலீஸ்வரனுக்கு சற்று சந்தோஷமே! அவரும் ஆர்வமாய்த் தொடர்ந்தார்.

“நானும் என் எழுத்தும்னு பேச வந்த நீங்க சப்ஜெக்ட விட்டிட்டு, ஏதோ பட்டிமன்றத்துல எதிர்வாதம் பண்றாப்ல பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு இல்லையா கொஞ்சம் சண்டை மாதிரி ஆயிடுச்சு கூட்டம் அப்படித்தானே”
நிச்சயமா கோபத்துலதான் சார் உண்மை வரும், அப்பத்தான் அழுத்தமான கருத்துகள் வந்து விழும். நானும் பார்த்திட்டேன். எங்கெல்லாம் கூட்டம்னு நடக்குதோ அங்கெல்லாம் லட்சியவாதம் காலாவதியாயிடுச்சுங்கிற கருத்தை யாராவது ஒருத்தர் சொல்லிட்டேயிருக்காங்க. அப்படிச் சொல்ற சிலரோட எழுத்தைப் படிச்சீங்கன்னா உங்களுக்குத் தெரியும் எவ்வளவு ஆபாசம் விளையாடுதுன்னு. தோணினபடி எழுதி மனசை சாக்கடையாக்குறாங்க. இதெல்லாம்தான் ஆழமான சிந்தனைன்னு பண்ணிக்கிட்டிருக்காங்க அதனாலதான் கூட்டங்களையே தவிர்த்திடுறது. ஒவ்வாமையா இருக்கு. அங்க பேசப்படுறதச் சகிச்சிக்கிட்டு உட்கார்ந்து கேட்டுட்டு வர்றோம்னா, அந்தக் கருத்துக்கள்ல நமக்கும் ஒப்புதல்னுதானே அர்த்தம். இதுக்காகத் தான் நான் எங்கயும் போறதில்ல. இன்னைக்கு என்னவோ ரொம்ப வற்புறுத்திக் கூப்பிட்டாங்களேன்னு வந்தேன். கொடுத்த தலைப்பைப் பத்தி ஏதோ நாலு வார்த்தை பேசுவோம்னு போய் நின்னா, அது எப்டியோ திசை திரும்பி, எங்கெங்கயோ கொண்டு விட்டிடுச்சு.

ஒவ்வொருத்தர் கருத்தும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்தானே, உங்க கருத்து இது. உங்களுக்கு வேண்டாம்னா வேண்டாம் அவ்வளவுதானே! ஒவ்வொரு கால கட்டத்துக்கும் ஒவ்வொண்ணு உடன்பாடா இருக்கு. பிடிச்சவங்க படிக்க வேண்டிதான். பிடிக்காதவங்க விட்ர வேண்டிதான். யாருக்கு என்ன நஷ்டம். எழுபது ஆரம்பம் வரைக்கும் வந்த திரைப்படங்களோட தன்மையே வேறே, இன்னைக்கு அப்டியா இருக்கு! அடிதடி, வெட்டு, குத்துன்னு படம் பூராவும் ரத்தக் களறியாக் காண்பிச்சு கடைசில ஒரு நியாயத்தச் சொல்றாங்க. ஜனங்க விரும்பிப் பார்க்கிறாங்களே, பொழுது போக்குங்கிற பேர்ல எவ்வளவு வன்முறை, அதுதானே டிரென்டா இருக்கு இன்னிக்கு, எல்லாம் வியாபாரமாயிடுச்சு, பணம் பண்றது ஒண்ணுதான் குறி. சமுதாயத்துக்கு முழுக்க நல்லதையே சொல்றதெல்லாம் அந்தக் காலம் அது முடிஞ்சி போச்சு.
அதுபோலதான் இந்த லட்சியவாதமுங்கிறீங்க. அதானே, காலாவதியான ஒண்ணை ஏன் இன்னும் கட்டி அழுதிட்டிருக்கீங்கன்னு சொல்ல வர்றீங்க, அப்படித்தானே என்னால அதை ஒத்துக்கவே முடியாது. ஏன்னா அது ஒழுக்கத்துக்கு அடிப்படை. ஒவ்வொரு தனி மனிதனோட சீரான வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயமா அதை நான் பார்க்கிறேன்” சொல்லிவிட்டு தியாகராஜன் நிறுத்தினார். பதஞ்சலீஸ்வரன் வாயைத் திறக்கவில்லை. அமைதியாய் நின்றிருந்தார். என்ன நினைக்கிறார் என்று தோன்றவில்லை தியாகராஜனுக்கு. தான் சொல்வதில் ஒப்புதல் உண்டா இல்லையா என்ன! “சொல்லுங்கஒண்ணும் பதிலைக் காணோமே எதுவானாலும் தைரியமாச் சொல்லுங்க, நாமளா பேசிக்கிறதுதானே”
“ஒண்ணு கேட்கலாமா? கோவிச்சுக்கக் கூடாது” மெதுவாக ஆரம்பித்தார் பதஞ்சலி.
“என்ன” என்று அவரையே கூர்ந்து நோக்கினார் தியாகராஜன்.
“உங்க சர்வீஸ்ல லஞ்சம் தலை விரிச்சு ஆடினதைப் பத்தி அடிக்கடி சொல்லுவீங்க இல்லியா”
“ஆமா அதுக்கென்ன ” அவர் கண்களையே கவனித்தார்.
“முப்பத்தஞ்சு வருஷ சர்வீஸ்ல ஒத்தப் பைசாக் கூட லஞ்சம் வாங்காம, ஸ்ட்ரெய்ட் ஃபார்வேடா இருந்து நேர்மையா சர்வீஸ் போட்டவன்
நான்னு சொல்வீங்களே அதுல ஒரு கேள்வி தொக்கி நிற்கிறதை நீங்க என்னைக்காவது உணர்ந்திருக்கீங்களா? நினைச்சிப் பார்த்திருக்கீங்களா? ”
“எது எதைச் சொல்றீங்க நீங்க ” சற்றே பதற்றமடைந்தவராய்க் கேட்கலானார் தியாகராஜன். தன்னையறியாமல் குரலில் கோபம் புகுந்து கொண்டிருப்பதை உணர்ந்தார்.
“உங்க ஆபீஸ்ல, திட்டப் பணிகளை செயல்படுத்தும்போது, பர்சன்டேஜ் போட்டு ஆபீஸ் ஸ்டாஃபுக்கு அப்பப்போ பங்கு கொடுத்திடுவாங்கன்னு சொல்லியிருக்கீங்கதானே ”
“ஆமா,.அது இன்னைக்கும் நடந்திட்டுதான் இருக்கு அதைப் போக்கவே முடியாது அது இல்லன்னா எவனும் வேலை செய்ய மாட்டான், அதுதான் யதார்த்தம். ”
“நீங்களே மானேஜரா இருந்தும் ஆபீஸ் அளவில கூட உங்களால அந்த லஞ்சத்தை ஒழிக்க முடியலை யாரும் எதுவும் வாங்கக் கூடாதுன்னு தடுத்து நிறுத்தமுடியலை நீங்க வேணா வாங்காம நேர்மையா இருக்கலாமேயொழிய, மற்றவங்களை உங்களால தடுக்க முடியாது அதானே உண்மை அந்த ஸ்டாஃபை வச்சித்தான் நீங்க எல்லா வேலைகளையும் செய்தாகணும் வேறே வழியில்லே ஆனா”
“ஆனா,என்ன ஆனா”
“உங்களுக்கு வந்து சேர வேண்டிய பர்சன்டேஜ் பங்கை எனக்கு வேணாம்னு நீங்க சொல்லியிருக்கீங்க அது உங்க நேர்மையின் அடையாளம். ஆனா அதை ஆபீஸ் ஸ்டாஃபுக்குப் பிரிச்சுக் கொடுத்திருங்கன்னு சொன்னீங்களே அது ஏன் தப்புதானே”
தியாகராஜன் சற்றுத் தடுமாறினார் உள்ளே சுர்ரென்றது.
“இதிலென்ன தப்பு இருக்கு, நா வாங்கலியே மறுத்திட்டேனே”
“அப்போ உங்க பங்கான லஞ்சத் தொகை ஆபீஸ் ஸ்டாஃபுக்குப் போயிடுதுல்ல அதுக்கு என்ன அர்த்தம்? ஏதோவொரு வகைல நேர்மை அங்கே தவறுதுன்னுதானே அர்த்தம் அந்த நடைமுறைக்கு துணை போயிருக்கீங்களே அதுவும் தப்புதானே ”
“அதெப்படி நான்தான் வாங்கலியே என் பங்குக் காசை, எனக்குப் பதிலா ஆபீஸ் ஸ்டாஃப் வாங்கிக்கிறாங்க அதுக்கும் எனக்கும் என்ன
சம்பந்தம்? நான் அதுல தலையிடுறதில்லையே, கொடுக்காட்டாக் கூட நான் அதுபற்றிக் கேட்கப் போறதில்லையே, எல்லாருக்கும் வந்து சேர்ந்துதான்னா விசாரிக்கப் போறேன் ”
“பார்த்தீங்களா நீங்களே சொல்லிட்டீங்க,எனக்குப் பதிலான்னு,! அந்தக் காசு எனக்கு வேண்டாம்ங்கிறதோட நீங்க நிறுத்தியிருக்கணும்? ஏன் பதிலா அதைத் திருப்பி விடுறீங்க, அதென்ன தாராளம், அப்பத்தான் அவுங்க இன்னும் உற்சாகமா வேலை செய்வாங்கன்னுதானே, சார் ரொம்ப நல்லவருன்னு உங்களை எல்லாரும் புகழ்ந்து சொல்லணும்ங்கிற ஆசைதானே, உங்களோட நேர்மையை ஏதோவொரு வகைல வெளிப்படுத்திக்கணும்ங்கிற எண்ணம்தானே ”
“இதென்னய்யா வம்பா இருக்கு? வாங்கினாலும் குத்தம், வாங்காட்டாலும் குத்தம்னா நான் வாங்காதது, எக்கேடு கெட்டா எனக்கென்ன”
“அப்ப,எனக்கு வேண்டாம்ங்கிறதோட நீங்க நிறுத்தியிருக்கணும்,அதுக்கு ஒரு படி மேலே போனது தப்பில்லையா? நேர்மைங்கிறது இப்படியான எந்தவொரு சிக்கலுக்கும் ஆட்படாத நிலையைச் சார்ந்துதானே நிற்கணும்”
“ஒருத்தன் தன்னளவுலதான்யா நேர்மையானவனா இருக்க முடியும்,.இதைத் தொட்டு அது, அதைத் தொட்டு இதுன்னெல்லாம் சிந்திச்சிட்டிருக்க முடியுமா, எல்லாருக்கும் என் பங்கு வந்திடுச்சில்ல,.ன்னு நானென்ன தம்பட்டமா போட்டேன், நல்லாயிருக்குய்யா உங்க நியாயம்” கோபத்தில் குரல் அதிர்ந்தது அவருக்கு.

சாலையில் செல்வோர் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றார்கள்.
“அப்படீன்னா நீங்க வாங்காததோட நின்னிருக்க வேண்டிதானே சார், ஆபீசுக்குப் பிரிச்சுக் கொடுத்திடுங்கன்னு ஏன் சொன்னீங்க? அந்தக் காசு எப்படிப் போனா என்ன, எங்க போனா என்ன? கேள்வி சரிதானா, உங்களைப் பின் பாயின்ட் பண்ணனும்னு இதை நான் கேட்கலை,யாருமே ப்யூரா இருக்க முடியாதுங்கிறதுக்கு சொல்ல வந்தேன்,அவ்வளவுதான், ஒரு பேச்சுக்காகச் சொன்னேன் ” உதட்டோரப் புன்னகையோடு நோக்கினார் பதஞ்சலீஸ்வரன். பின்பும் தொடர்ந்தார்.
“லஞ்சம்ங்கிற நடைமுறையை எந்தக் காலத்திலும் யாராலயும் ஒழிக்கவே முடியாதுங்கிற உண்மையை நீங்க ஏதோவொரு வகைல ஒப்புத்துக்கிறதாத்தானே அர்த்தம், அது புரையோடிப் போன விஷயம், உங்களோட லட்சியவாதம் இங்கே அடி பட்டுப் போகுதுங்கிறேன் நான். காலாவதியாயிடுச்சு,. நல்லா யோசிங்க,.யாருமே நூறு சதவிகிதம் நேர்மையாளனா இன்றைய உலகத்துல இருக்கவே முடியாதுங்கிறதுதான் யதார்த்தம்.” சொல்லிவிட்டு நிறுத்தினார் பதஞ்சலீஸ்வரன்.
இந்த மனுஷன் என் சார்பா ஏன் இவ்வளவு தீவிரமா சிந்திக்கிறார் அப்படியென்ன இவருக்கு என் மேலே பொறாமை,கோபம் சற்றுக் கடுப்போடுதான் யோசித்தார் தியாகராஜன். இதுக்காகவே இன்னைக்குக் கூட்டத்துக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்திருப்பாரோ? வைத்த கண் வாங்காமல் பார்த்தார். பதஞ்சலீஸ்வரனுக்கு என்னவோ மனதில் தோன்றியிருக்குமோ!
அவரை அப்படியே அங்கேயே நடு ரோட்டில் அம்போ என்று விட்டு விட்டுப் போய்விடலாமா என்ற யோசனைக்கு வந்தார் தியாகராஜன்.

உஷாதீபன்-இந்தியா

உஷாதீபன்

 

(Visited 37 times, 1 visits today)