இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன-கவிதை-றஹீமா பைஸல் ( அறிமுகம் )

இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன

றஹீமா பைஸல்

என் மரணம்
என் மனம் விரும்புவதைப் போலிருக்க ஆசைப்பட்டேன் ……!
தேதி குறித்த நாளொன்றில்…
இலையுதிர்கால இலைகளைப் போல
இந்த உசிர் பிரிய……..

இலந்தை இலைக்குளியல்
வெள்ளைக் கபன் உடை
மெல்லிய அத்தர் வாசனை
நிஜத்தில் அழும் மனிதர்கள் சூழ

சந்தக்கில் வைத்து உடலைத் தூக்க
நான்கு  தகபீர்களோடு தொழுது முடிக்க
கபுருக்குழிக்குக்குள் இறக்கி
பிடி மண்ணிட்டுக்கலைய….!!!!

என் ஆசையில் வந்து யார் யாரோ தீ வைக்க…..!

இதயங்கள் நொறுங்கிக் கிடக்கின்றன ….
வீம்பு பிடித்தலையும் மனிதர்கள்
என் தேசத்தின் தலைவிதி..
வெறுப்பின் எதிரொலி

என் உணர்வின் மீது யார் யாரோ தீ வைக்க…..!

இந்தப் பெருந்தொற்று நோய்க்காலத்தில்
மரணத்தின் மீதிருக்கும்
எல்லாக் கனவுகளுக்கும் வாய்ப்பில்லை என்கிறபோது
இந்த உடலையாவது புதை….!!!!

இந்தத் தொற்றுநோய்க்காலத்தில்…..
நம் மனம் விரும்புவதைப் போல வாழ இயலாத போது
நம் மனம் விரும்புவதைப் போல
மரணம் என்பதும் சாத்தியமில்லை……
நான் உடன்படுகிறேன்….

நான் மனிதன்
மகிழ்ச்சி ,அழுகை ,வெறுப்பு,விருப்பு,பொறுமை -என
எல்லாவகை உணர்ச்சிகளாலுமான…
உங்களைப் போன்றதொரு சராசரி மனிதன்…..!

பெருந்தொற்றுக்காலத்தில்
முகக்கவசம் அணிகிறேன்
இடைவெளி பேணுகிறேன்
எல்லாச் சட்டங்களையும்
எல்லா மனிதர்களைப் போலவே பின்தொடர்கிறேன்

“லொக்டவுன் “காலத்தில் தொழில் இழந்து
உடைந்து கிடக்கிறேன்….!

உதவி கிடைக்குமிடங்களைத் தேடிச்சென்றடைந்து
வெறுங்கையோடு வீடு திரும்புகிறேன்……

பசித்த வயிறோடு உறங்கச் செல்லும்
என் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம்
உள்ளுக்குள்
ரகசியமாய் வெடித்து அழுகிறேன்…
ஆத்திரத்தில் வைரஸைத் திட்டுகிறேன்…

நான்
என் உரிமையை வேண்டி நிற்கும்போதெல்லாம்…
எனது நாட்டின் சட்டம்
வௌவாலைப் போலாகிவிடுகிறது…!
விஞ்ஞானம் விதிகள் பிழைத்து நிற்கிறது….!!!!

197 நாடுகளில் இல்லாத நிலத்தின் மீது நின்று
புதுமையான விதிகளை வரைகிறது…..!!!!
புனைகதைகளைச் சொல்லி நம்பவைக்கிறது….

வெறுப்பின் எச்சிலை
என் இறந்த உடலின் மீது துப்புவதற்கு முன்….
ஒரு நொடியேனும்
நீங்கள் ஏன் அதைச்சுவைத்துப் பார்க்கக்கூடாது????

என்னை எதிர்த்துநின்று…
பிடிவாதமாய் எரிப்பதில் செலவிடும் நேரத்தில்…
என்னோடு கைகோர்த்து
நீங்கள் ஏன்
இந்த வைரஸை எதிர்த்துப் போராடக்கூடாது…?

000000000000000000000000000000

முகக்கவசத்துக்குள் உறங்கும் ஒரு வருசம்

இந்த ஆண்டு முழுவதையும்
முகக்கவசத்துக்குள்
வாழ்ந்து முடிக்கவேண்டியிருக்கும் என
நாம்
கனவிலும் நினைத்துப்பார்த்திருக்கவில்லை…

வெள்ளையும் இள நீல நிறம்சார்ந்த முகக்கவசங்கள்…
பின்நாட்களில்
பல வர்ண வசீகரிப்போடு
மனதைக் கொள்ளையடித்தது….

மக்கள் வைரசுடன் வாழத்துவங்கினார்கள்…
ஆனால் வைரஸ்
முன்னரை விடவும் வீரியம் கொண்டு
நம்மைத் தாக்கவருகிறது……….

மனிதர்களை வாசிக்கமுடியவில்லை…
வழமையைப்போல மூச்சு விட முடியவில்லை
கோபத்திலிந்து புன்னகைக்குத் திரும்புவதை
திரை தடுக்கிறது
புதுவகையான நாகரீகத்தைக் கற்றுத்தருகிறது..

முகக்கவசம் அணியாதபோது
கடைகளுக்குள் உள் நுழையாதபடி
நம்மைத்திருப்பி அனுப்புகிறார்கள்.
உணவகங்கள் அனுமதி மறுக்கின்றன……!!!!
நாம்
அவ்வளவு சலித்துப் போயிருக்கிறோம்…..!!!!

இந்த ஆண்டு “லிப்ஸ்ரிக்”கடைகளுக்கு
பெரிய அளவில் வருமானம் இல்லை….

சிலர் எமது இயல்புவாழ்க்கையைக் காணவில்லை என்கிறார்கள்…
சிலர் எமது
விடுமுறை நாட்களைக் காணவில்லை என்கிறார்கள்..
எமது
ஆயுளின் ஒரு வருடத்தையே காணவில்லை என
நிறையப் பேர்
நிராசையுற்றிருக்கிறார்கள்

முகக்கவசத்தாலும் கிருமிகளாலும்
நிரம்பி வழிகிறது
இந்தப் புத்தாண்டு…!

சென்ற ஆண்டின்
மொத்தத் துயரத்தையும் மறைத்துவைக்க…..
இன்றைய நாளில் ஒரு முகக்கவசம்
நம் எல்லோருக்கும் தேவையாயிருக்கிறது….!!!!

றஹீமா பைஸல்-ஐக்கிய இராச்சியம்

றஹீமா பைஸல்

(Visited 403 times, 1 visits today)
 
றஹீமா பைஸல்

வாடகை வீடு -இலக்கம் பதினெட்டு-றஹீமா பைஸல்

இந்த வீட்டைப் பிரிந்து போவதென்பது, உன்னை இழந்த கடுங்குளிர் வெள்ளிக்கிழமை இரவின் பாதித் துயரத்தாலானது! இம்மாதம் பதினாராம் திகதியோடு இந்தப் பதினெட்டாம் இலக்க வீட்டில் எனக்குக் கடைசிநாள்! சமையலறையின் பெரிய […]