காடேறிப்போனவள்-கவிதை-தில்லை

காடேறிப்போனவள்

தில்லை
சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

என் சின்னவயதிலிருந்து
காடேறியாய்ப்போனவளைத்
தேடி அலைகின்றேன்.
என் அப்பாவின் கோவிலில்
குடியிருந்தவள்
எப்படிமாயமானாள்?
பூசாரி செநாதனின் பூரிப்பில்
பூ மலர்ந்தவள்
எப்படிக் காடேறியானாள்?
என் அப்பாவின் உடுக்கு
ஒலியில் உரு ஏறிய அவள்,
உச்சிக்கலசத்தில் நர்த்தித்து
மேகத்தின் தூணில்
தலைவிரியாய்.. தொங்கிக்கொண்டு
நிலவின் ஒளியை மறைத்துக்கொண்டு
இருட்டில்…இருட்டாய்…
காடேறியாய் மறைந்தாளாம்…….
தீப்பிழம்புகள் முளைத்து
தீயாய் எரிந்துபோக…
அப்பாவின் கோவிலில்
பூசையுமில்லை புனர்க்காரமுமில்லை.

00000000000000000000000000000000

அப்பாவின் கதை தட்டி
மந்திரவித்தாண்மை மறுத்து
இரவுபகல் அற்றுப்போக
வீட்டின் முற்றத்திலிருந்த பாணிச்சேவல்
தலைசுற்றி கிறுகி மாய.. அம்மாவின் சேதி
ஊரைக்கூட்டியது.
பற்றில்லா தேசாந்திரிக்கு
குடும்பம் எதற்கு?
அந்தப் பெரும்பிண்டத்தின்
ஒரு துகளைக்கூட நான்கண்டதில்லை.
பின்,ஊரின் புழுகில்
நான் அப்பாவைக்கண்டேன்.
அங்க கண்டேன் இங்க கண்டேன்
என் கால்கள் நிலம் ஊன்றாது
வானில் பறந்தேன்.
அறுந்து விழுந்த கிளையின் அரும்பாய்
கருகிக் கிடந்த நான்
என் அம்மாவையும்….. காணேன்.
மந்திரப்பித்துப்பிடித்த..
என் அப்பாவையும் காணேன்
வெடித்துக்கிளம்பும்
என் மனம்…
காடேறியாய்போனவளைத் தேடுமா?
கிணற்றிலே விழுந்து
சலசமாதியான என் அம்மாவைத் தேடுமா?
இல்ல காணாமல் போன என்
அப்பாவைத் தேடுமா?
உடுக்கோசையும் மந்திர ஓங்காரமும்
கண்டகோடாரியும் இரத்தமும்
சுவையுமாய்
களித்திருந்த காளி
பூசாரியைகாத்தாளா?
அவன் பொண்டாட்டியைக்காத்தாளா?
இல்ல பெத்த புள்ளையைக் காத்தாளா
காலங்கள் கடந்தும்
நான் வைக்கும் கல்லையில்
கதவுசாத்தி காத்திருந்தும்
பல்லி அடிக்கல்ல………..
என் அம்மாவைப்போல்
என் அப்பாவைப்போல்
மயான வெளியில் காடேறி
பேயாய் மாற்றுரு கொண்டாளோ
ஊரை விட்டு ஓடிப்போன
காடேறியை
திரும்பி வரச்சொல்லி
உடுக்கெடுத்தடிக்கிறேன் ஓலமிட்டோடுறாள்….
கொளுத்திய தீக்குழியில்
குடமுடைந்து தொடையால் உதிரம் கொட்ட ஒன்றன்
பின் ஒன்றாக காலற்றுப்போனாள்.

00000000000000000000000000000000

சாத்தப்பட்ட கதவுகள்

கதவுகள் சாத்தப்பட்டபோது
என் கால்கள் முறுக்கேறின
மயிர்கள் நெட்டென குத்தி
என்னையறியாமலே
மனம் கிலேசம்கொண்டது.

இத்தனை வருட
நன்றிகெட்ட முகங்கள்
கறுப்பு வெள்ளைகளாயின.
நான் செங்காலனை நோக்கி
நடக்கின்றேன்.

பூட்டப்பட்ட கதவுகளினூடாக
என் பாசங்கள்
மறைந்து மறைந்து போயின…
எத்தனை வருட உறவு
விலைகளைப் பேசுகின்ற
கரங்களுக்குள் சிக்கித்தவிக்கும்
அதிகாரத்தின் கூர்வாளிலிருந்து
நான் மீண்டது
ஒப்பாரிப்பாடல்களா?

தாமரைக்குளம் எனக்குள் ஊறியது
தாழிடப்பட்ட கதவுகள் பாசிபடர
பதினைந்துவருடங்கள் கழிந்த
ஊழியத்தின் வேட்டு
கானகத்தின் பாடல்களாக
என்னை ஆட்டம்காட்டும்.

கச்சான் காற்றாக
மீண்டும் மீண்டும் நான்
என்னை அசைக்க
திடிரென எங்கிருந்தோ
முளைத்தெழுந்த தாங்குவேர்
என்னைப் பற்றியபோது
நான் முன்னங்கால்களை ஊன்றினேன்.

இரவுகள் நித்திரையை மறுத்தது
பழையகாலத்துப் பறவைகள்
வானத்துக்குள் இறகை மறைத்துக் கொண்டு
என் உள்ளங்கையைப் பார்த்தன
நான் அட்சயபாத்திரத்துடன் நிற்கிறேன்.

மணிமேகலை
என்னிடம் இரந்து நிற்கிறாள்
அவள் மறைந்துபோன
இரவுகளை நினைக்கிறேன்
என் கஜனாவுக்குள்
தப்பியோடிய ஓட்டராணி
இன்று என் உயிரை வாங்க
பாத்திரங்களை அழித்துவிடுகிறேன்.

இரைகின்ற மழை என்னுள்
விடாயாகப் பொழிய
என் கரங்கள் என்னை
அடைகாக்கத்தொடங்குகின்றன.

தில்லை-சுவிஸ்

தில்லை

(Visited 91 times, 1 visits today)