தாகம் தீர்க்கும் தில்லையின் கவிதைகள்-நூல் விமர்சனம்-சூரியகுமாரி ஸ்ரீதரன்

தில்லைஎல்லை கடந்து மனிதம் பேசும் பெண்ணிய கவிதைகளாக நாம் தில்லையின் கவிதைகளை நோக்க முடியும். வயது, இடம், பொருள், ஏவல் அனைத்தையும் தாண்டி இதனை ஒரு பிரதியாக பார்ப்போமாயின் அது சர்வதேசத்திற்கும் பொதுமையான உணர்வுகளை பிரதிபலிப்பதனை அவதானிக்கலாம்.வக்கற்ற ஒரு சமூகத்தில் பிடுங்கி எறியப்பட்ட ஒரு ஆன்மாவாக கவிதை சொல்லி எம்முடன் உறவாடுகிறார்.

//நான், என் சிறுவயதிலிருந்தே
என் ஒவ்வொரு பருவமும்
என்னில் முளைத்து
பூத்துக்குலுங்கும் கணங்களில்
பறித்தெறியப்பட்டே வருகிறேன் //

என்று ஆரம்பிக்கு தில்லையின் விடாய் தொகுப்பின் முதல் கவிதை.எமதுசமூகத்தின் கையாலாகாத்தனம் மீது ஓங்கி அறைகிறது. பெண்மையின் வலியினை ஆண்களின் குரூர மாமிச வேட்கையினை இதனைவிட துல்லியமாக யாராலும் பேசி இருக்க முடியுமோ தெரியவில்லை ,

// துண்டுக்கச்சைக்குள் மறைந்திருந்த
ஆட்க்கொல்லியை
பலமற்ற என் கரங்கள்
துடி துடித்தெழ …..

ஆண்குறிகள் திமிறி
என் பூப்படையா மேனியை
பதம்பார்த்திருக்க….

என் பூப்படையாத மேனியல்லவா
புண்ணாய் நோகுது…
ஒற்றை உயிரை நீ
பறித்தெடுக்கலாம்
என்னை குலைநடுங்க வைத்து
கிழடு, வாலிபன்,என் சமவயதானவன்
என அடைக்கலம் கொடுத்து
புகும் இடமெல்லாம் நாசமறுத்தவனுகள் //

என ஆண்களின் பாலியல் வக்கிரங்களை ஒரு சிறுபெண் எதிர் கொண்ட துயரினை பேசுகிறது இக்கவிதைகள். பெண்களுடைய உடல், உள, உணர்வுகளின் மீது அயோக்கியத்தனம் புரியும் ஆண்கள் குறித்து “பெண் மொழி”யில் பேசும் தில்லை.துயரினை மட்டுமே பேசிக்கொண்டிராது அடுத்த தளத்திற்கு விரையவும் செய்கிறார் இவ்வாறாக,

//நான் தோற்று போன
பெண்ணலையல்ல
நீ வீரம் என நினைத்ததை
நான் எப்போதுமே
காறி உமிழ்ந்திருக்கிறேன்

சிறுபட்டிகளின் நீச்சலுக்கு
எப்போதுமே திறக்காத
சுனை என்பதை
களவாணிகள் அறிந்தும்
முட்டுவேன் கொல்
தாக்குவேன் கொல்
ஆ ….ஊ…. என
அலறுவேன்
என நினைத்தீர்களா ???

நீங்கள் சொல்லுங்கள்
நான் ஒற்றை முலை திருகி
பூ , பிஞ்சு, காய், கனி பற்றி
திசைகளில் கூய்போடும்
வக்கற்றவளல்ல

நான் கலங்காத
தாய்மண்ணின்
சுட்டு விரலிலிருந்து
மீதெழுந்திருக்கும்
ஒற்றை சன்னம்

என பெண் சமுதாயத்தின் “ஒற்றை பிரதிநிதி”யாக எழுந்து நிற்கிறார் தில்லை.
சிவரமணி ஒரு கவிதையில் மறுக்கப்பட முடியாத கேள்வியாய் நான் உங்கள் முன் பிரசன்னமாகிறேன் எனக் கூறும் அதே துணிச்சலினை தில்லையிலும் கண்டுகொள்ள முடிகிறது. சிவரமணியினது மேலும் ஒரு கவிதையில் யுத்தம் சிறுவரை எல்லாம் பெரியவராக்கிற்று என்று கூறியது போல தில்லையின் கவிதைகளிலும் சிறுபெண்கள் ஆண்களின் கயமைமிக்க அத்துமீறல்களினால் ஒருவித முதிர்ச்சியினை எய்துகிறார்கள்.

ஒரு துயரத்தின் இன்னுமொரு கோட்டில் என்ற கவிதையில் :

எனது உடல் தழுவி
ஒத்திகை பார்த்தவர்கள் ,
தசைகளை தின்று
ஒருவர் பின் ஒருவராய்
உணர்வுகளை மட்டும்
துப்பி சென்றனர்

ஆயினும் நான்
அடியெடுத்தே
நடக்கிறேன்.

இனிய சகோதரியே
என்னை மன்னியுங்கள்
நீங்கள் விரும்பாத
மொழியை
நான் பேசுவதற்காக

ஒழுக்கத்தை பெண்களின்
பெயரால் வரையும்
கலாசாரத்தை
ஏறி மிதிக்க சொல்லிற்று
(தழுவி அடங்குதல்) எனவும்

தகப்பன்
கணவன்
மகன்கள் என
தலைமுறைகளின்
ஆதிக்கம்
இறுகியும் இறுக்கியும்
பொட்டை முடிச்சாய்
(பொட்டை முடிச்சு) எனவும்

எனக்கு முன்னே
என்னுடைய அம்மா
அவளின் அம்மா
எல்லாம் தோற்றுப்போன தீயிலிருந்து
நான் எழுந்திருக்கின்றேன்

நான் ஒரு போராளி
கட்டுப்பெட்டி வாழ்வின்
கொடுங்கோலிலிருந்து
நான் விடுதலை பெறுவேன்

(தப்பிலிக்கவிதை ) என்றும் வெட்ட வெட்ட தழைக்கும் மரம்போல தில்லையின் நம்பிக்கை இழக்காத வார்த்தைகள் ஏனைய பெண்களுக்கு வழிகாட்டியாகிறது. இது தான் ஒரு ஆக்கத்தின் வெற்றியும் கூட பெண்கள் தமது உணர்வுகளை கலாசாரம் என்ற பெயரில் அடக்கிமௌனிக்க செய்தகாலம் மலையேறி விட்டதனை ‘விடாய்’ நமக்கு பறை சாற்றுகிறது. கவிஞரோடு ஒவ்வொருபெண் வாசகியும் இணைந்து கொள்ளும் அற்புதமான தருணங்கள் அவை. பேசக்கூடாத கருப்பொருட்களாக கட்டிக்காக்கப்பட்டவை நீர்குமிழியாக உடைந்து போகிறது.

சமகால யுத்த நிகழ்வுகளை புதிய படிமங்களை உபயோகிப்பதன் மூலம் இன்னொரு தளத்திற்கு இட்டு செல்கிறார். கவிதையின் உருவம், உள்ளடக்கம் அனைத்தையும் மீறி, தான் சொல்ல வேண்டும் என நினைக்கும் அத்தனை கருப்பொருட்களையும் ஆங்காங்கே விசிறிச்செல்கிறார் கவிஞர் கட்டுகளை உடைத்து பிரவகிக்கும் ஆறு போல ஆண் பெண் உறுப்புக்கள் இவரது கவிதைகளில் ஊசியாகக் குத்தும் படிமங்களாக எடுத்தாளப்பட்டிருக்கிறது.

ஈழத்து இலக்கியப்பரப்பில் குறுந்தேசிய – பிரதேச வாதங்கள் குறித்த சிந்தனை விரவல்கள் எள்ளளவும் இல்லாத உள்ளடக்கத்தினை தில்லையின் கவிதைகள் பேசுவதால் அடுத்த தலைமுறைக்கான ஒரு ஒளிக்கீற்றாக நாம் அவரது கவிதைகளை கொள்ளலாம்.

ஒரு கணித வரைபடத்தில் கீழிருந்து மேல்நோக்கி பயணித்து அதன் எல்லையை கடத்தல் போல வளரிளம் பருவத்து முடிச்சுகலிலிருந்தும், உறவுச் சிக்கல்களிலிருந்தும் விடுபட்டு ஆண்டாளின் முடிவிலி நிலையினை அடைய எத்தனிக்கிறது கவிதைகள்.
பாலுணர்வு என்பது ஆண் பெண் இருவருக்கும் பொத்தாம் பொதுவானது என்பதினை எவ்வித தயக்கமும் இன்றி நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறார்.

சு.வில்வரத்தினத்தின் காற்று வழி கிராமம் யுத்தத்துயரினை வெளிப்படுத்த பயன்பட்டது போல தில்லைக்கு, புனிதர்களை துவம்சம் செய்து திமிர் கீற்றை ஒளியேற்றி செல்ல புதியதொரு படிமமாக பயன்படுகிறது காற்று , இவ்வாறாக…

// மலை காற்றின் காலை முறித்து
ஜன்னலை சாத்துகிறேன் –
என்னை மீறி எழுகின்ற காற்று
எனக்கு வேண்டாம்

00000000000000000000

என் கால் மிதிகையில்
நசுங்குண்ட காற்று
வார்வக்கட்டின் அடியில் பயந்தொழிந்து
நேற்றும் புலம்பி
என்னிடம் மண்டியிட்டது.
இன்றும்
அதிகாலையின் இருள் மயக்கத்தில்
சோம்பல் முறித்து எழுந்தது காற்று

என் கனவுகளில்
தோற்று போன புனிதர்களை
துவம்சம் செய்து
என் இதயத்தில் கசிந்து கிடக்கும்
திமிர் கீற்றை
ஒளியேற்றி போயிற்று //

என்கிறார்.
ஆழியாளின் உரத்து பேச, கலாவின் கோணேஸ்வரிகள் என்பவற்றி ன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் தில்லையின் கவிதையினை பார்க்கலாம். குட்டி ரேவதி , வ. ஐ ச ஜெயபாலன் குறிப்பிட்டது போல கவிதையின் அமைப்பு இன்னும் ஒருமுறை மெருகூட் டப்பட்டிருக்கலாமோ என்று தோன்றினாலும் கவிதை வாசிப்பில் அதன் உள்ளடக்கத்தில் அது எந்த வித தடங்கலினையோ சலனத்தினையோ ஏற்படுத்த முயலவில்லை.

“தலை கீழாய் தொங்கும் முலைகள் “, “சிட்டு குருவி” “இடைவெளி”, “ஆச்சரியங்களுக்காக காத்திருத்தல்” போன்றவற்றில் நவீனத்துவ கவிதையின் அரூப மொழியினை எடுத்தாள்கிறார் கவிஞர். நவீன கவிதை ஒன்றினை நக்கி குடிக்கிறது நாக்கு என்றும், காற்றை உள்ளங்கையில் நக்கி கடலை குடித்தேன் என்றும் புதிய படிமங்கள் எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.

தாயதி வெளியீடாக ஜீவமணியின் நூல் வடிவமைப்பும், ரஷ்மியின் அட்டைப்பட நிறச்சேர்க்கையும் கவிதை தொகுப்புக்கு மேன்மேலும் அழகையும் செழுமையையும் சேர்க்கிறது. ஈழத்து பெண்ணிய கவிதை பரப்பில் தில்லையின் கவிதைகள் ஒரு மைல் கல்லாக நின்று ஒளிவீசும் .

சூரியகுமாரி ஸ்ரீதரன்- சார்ஜா

தில்லை

(Visited 453 times, 1 visits today)