“ஒரு சிறு புள்ளின் இறகு-நூல் விமர்சனம்-சிறீ சிறீஸ்கந்தராசா

சிறீ சிறீஸ்கந்தராசாஎத்தனையோ கவிஞர்களின் கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன்.மணற்காடரின் கவிதைகள் மட்டுமே என்னை வாசித்திருக்கின்றன! எந்த இலக்கணத்துக்குள்ளும் அடங்காத இவரது கவிதைக்குள் நான் அடங்கிவிட்டேன்!! கவிதைகளைத்தேடி இவர் அலையவில்லை…இவரைத்தேடி கவிதைகள் அலைந்திருக்கின்றன!!
குதிரைக்கு ஏன் கொம்பு படைக்கவில்லை என்று இறைவன் கூடக் கவலைப்பட்டிருப்பான். இவர் ஏன் இலக்கணம் கற்கவில்லை என்று இதுவரை நான் கவலைப்பட்டதே இல்லை! தலைமாட்டில் திருக்குறள் வைத்திருப்பவர்களே கேளுங்கள். இனிமேல் அதனை எடுத்துவிட்டு இந்த மணற்காடரின் கவிதைத் தொகுப்பை வைத்துகொள்ளுங்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டிய வகைகளை இவர் வகுத்துக்காட்டுகின்றார்.

000000000000000000000000

இந்தக் “கவிதை”என்ற சொல்லுக்கும் எனக்கும் அடிக்கடி தகராறுகள் வரும். இறுதியில் நான் தோற்றுப்போவேன். ஏனென்றால் இந்தச் சொல்லைப்பற்றி சரியான விளக்கமோ தெளிவோ இன்னும் என்னிடம் இல்லை.நாம் கற்றறிந்த நூல்களைக்கொண்டும். பெற்றுக்கொண்ட அனுபவங்களைக்கொண்டும் இதுதான் கவிதையென, அதாவது யானை பார்த்த குருடர்களைப் போலவே இன்னும் எழுதி வருகின்றோம்.
தொல்காப்பியமும் காரிகையும் கவிதை அல்லது செய்யுள் இப்படி இப்படி எழுதலாம் என்று ஒரு வரவினைமட்டும்தான் தந்திருக்கின்றன.தவிர இதுதான் கவிதையென்று அவை சுட்டிக் காட்டவில்லை. ஏனெனில் அது அவர்களால்தானும் முடியாத தொன்றாகும்!! என்னைப் பொறுத்தவரையில் இங்கே இரண்டு விடயங்கள். ஒன்று கவிதை, மற்றது கவித்துவம்!

கவிதை என்பது அழகியல் சார்ந்தது. இலக்கிய இன்பம் தருவது. கவித்துவம் என்பது இலக்கணம் சார்ந்ததாகும். கவித்துவம் இல்லாமல் ஒரு கவிதை இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பில் கவிதை இல்லாமல் கவித்துவம் நிறைந்திருந்தும் அது கவிதையாகாது!! இத்தகைய ஒரு எளிய அளவுகோலை வைத்துகொண்டு மணற்காடரின் இந்தத் தொகுப்பினை எடைபோட்டுப் பார்ப்போம்.

மட்டம் தட்டுவதோ அல்லது முகத்துதி பாடுவதோ எமது நோக்கமல்ல! இந்தத் தொகுப்பிலுள்ள சின்னச்சின்ன வசனங்களுக்குள்ளே பெரிய பெரிய கவிதைகள் சிம்மாசனம்போட்டு உட்கார்ந்திருக்கின்றன. சமூகத்தின் புரையோடிப்போன மூடநம்பிக்கைகளையும், சம்பிரதாயங்களையும், பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் தமேக்கே உரித்தான கிண்டலும் கேலியுமான ஒருவித நடையில் இவர் பதிவு செய்திருக்கின்றார். அற்புதம்!!
இவர் கவிதைகள் என்று பதிவு செய்திருக்கும் ஒவ்வொரு படைப்புக்களையும் எடுத்து விரித்தால் அங்கே ஒரு காவியத்துக்குரிய பாடுபொருளைக் காணமுடிகிறது. இன்னும் எனக்கு ஆச்சரியம். இந்தச் சின்னச்சின்ன வசனங்களுக்குள்ளும் எப்படி இத்தகைய பெரிய சாதனைகளைச் சாதித்திருக்கின்றார் என்பது எனக்கு இன்னும் ஆச்சரியம்!! இவரும் ஒரு சித்தர்தான். இல்லையேல் எப்படி இந்தச் சொற்கூட்டங்களுக்குச் சிறகுகள் முளைக்க வைத்திருப்பார்? தினமும் நாம் பார்த்து பழகிய நிகழ்வுகளும் மனிதர்களும்தான் இவரது பாடுபொருள்களாக அமைகின்றன.

ஆனால் இவரின் கைபட்டதும் இந்த நிகழ்வுகளும், மனிதர்களும் எம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறன. இதுவே ஒரு கவிஞனுக்கோ அல்லது ஒரு கலைஞனுக்கோ இருக்கவேண்டிய தலையாய பண்பாகும். ஒரு வாசகனுக்கு வாழைப்பழத்தை உரித்துக் கொடுக்கக் கூடாது.மாறாகச் சிந்திக்கத் தூண்டவேண்டும்.
என்னைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஒரு சிறு பதிவினைப் பாருங்கள்.

”பொன்னார் மேனியனே என்று
பூட்டிய அறைக்குள் பாடிக்கொண்டு
பணம் எண்ணுவார் எங்கள் தாத்தா
அன்னே உன்னையல்லால்
இனி யாரை நினைக்கேனே” என்று அவர்
பாடி முடிக்கும்போது
பாட்டி சிரித்துக்கொண்டே சொல்லுவாள்
பாவம் சிவபெருமான்.
”பாவம் சிவபெருமான்”

என்ற சொற்களுக்குள் எமது சின்னத்தனங்களை எவ்வளவு சிறப்பாகப் படம் பிடிக்கின்றார். இது அந்த தாத்தாவுக்கு மட்டுமல்ல… எமக்கும்தான்!! இப்படி எத்தனை போலி வேடதாரிகளுக்கு மத்தியில் நாம் வாழ்கின்றோம். எப்போதும் நாம் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதனை இவர் சொல்லாமல் சொல்லுகிறார். அடுத்து இன்னொரு பதிவில் இந்த மண்ணின் விடுதலை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் பதிவுசெய்ய விரும்பியவர் தனக்கே உரித்தான பாணியில்,

”விடிந்துவிட்டது என்றார்கள்
சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று
பிழையாக விளங்கிக்கொண்டேன்”

உண்மையில் நாம் சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில்தான் வாழுகின்றோம் என்று இன்றுவரை தவறாகத்தான் விளங்கிக்கொண்டுள்ளோம். அதாவது நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதனை ஆணித்தரமாகப் பதிவுசெய்து போகின்றார். ஒவ்வொரு ஈழத்தமிழனதும் உள்ளூர விருப்பமும் நினைப்பும் தனிநாடுதான் என்பதனை இவர் இப்படி உறுதி செய்கின்றார். இங்கே கவித்துவம் ஏதுமில்லை. வெறும் வசனங்கள்தான் இருந்தும் ஒருவித கவிதை நயம் இருக்கின்றது என்பதனை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம்!

”என்ன வேண்டுமெனக் கேட்டார் கடவுள்
முதலொரு வீடு தாரும் என்றேன்
தருகிறேன் என்று கூறித் தலை மறைந்தார்
நான் தமிழன் எனத் தெரிந்ததால்
அடுத்து ஒரு நாடு கேட்பேனெனப் பயந்திருப்பார்”

கவிதைக்கிருக்கவேண்டிய பண்புகளில் ஒன்றாகிய சொற்செறிவை இங்கே காணமுடிகிறது
இந்த விசுவாமித்திரரின் கள்ளத் தவத்தைக் கலைப்பதற்கு எங்கேயொரு மேனகைகளையும் காணவில்லையே என்று யோசித்தேன்.

”தெருவோரத்து வேலியில்
ரோஜா பறித்துக்கொண்டிருந்தவளிடம்
கோவிலுக்குப் போகும் வழி கேட்டேன்
கையை நீட்டிக் காட்டினாள் வழியை
நீட்டிய கையில் நிறைந்திருந்தன ரோஜாக்கள்.”

சரி, வழியைப் பார்த்துப் போகவேண்டியதுதானே. இவர் ஏன் அவளின் கைகளைப் பார்க்கவேண்டும்? அப்போ ஏதோவொரு கள்ளத்தனம் இருக்கிறதுதானே?அவளைப் பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்பதற்காகத்தானே அவளிடம் பேச்சுக்கொடுக்கின்றார். இப்படிக்கள்ளத்தனமுடைய பலரை நாமும் நடைமுறையில் காணுகின்றோம். கவிஞர்கள். எழுத்தாளர்கள். இலக்கியவாதிகள் மட்டுமல்ல ஒவ்வொரு வாசகனும் இந்தப் பதிவின் மகிமையை அறிந்திருக்கவேண்டும்.

”நான் தெருவுக்கு வந்த போது
ஒருவரும் என்னைப் பார்க்கவில்லை
சிகரெட் பற்ற வைத்தபோது
எவருமே ஒன்றும் சொல்லவில்லை
கைத்தடியை உயர்த்தியபோது
அப்போதும் எவரும் வாய் திறக்கவில்லை
விடுவிடு என்று நடந்தபோது
ஏனோ தம்பாட்டில் போனார்கள்
காறித் துப்பியபோது
கவனிக்காத மாதிரிக் கழன்றார்கள்
தபால் பெட்டியைத் திறந்த போது
திரும்பியும் பார்க்கவில்லை
கத்தியை எடுத்தபோது
ம்ஹூம் ஒருவருக்கும் ஆட்சேபனை இல்லை
கடைக்குப் போன போது
காணாத மாதிரிப் போனார்கள்
இவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது
புத்தகம் வாங்கியபோது மட்டும்
புதினமாகப் பார்க்கிறார்கள்”

இதிலிருந்து நாம் பெறப்படுவது யாதெனில், நீ நல்லவனோ, கெட்டவனோ, கருப்பனோ சிவப்பனோ, உன்னை யாரும் பார்க்கமாட்டார்கள் ,கவனிக்கமாட்டார்கள்! ஆனால் நீ ஒரு படிப்பாளி என்றால் மட்டுமே உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கும் என்பதாம். இப்படியாக இந்தத் தொகுப்பிலுள்ள படைப்புகள் ஒவ்வொன்றுக்கும் நான் விளக்கம் சொல்லிகொண்டே போகலாம். நீங்களுக் கேட்டுகொண்டே இருப்பீர்கள். ஆனால் அது இலக்கிய தர்மம் அன்று! இது ஒரு தரமான தொகுப்பு என்று நான் சொல்லலாம். நீங்களும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இது ஒரு சிறந்த படைப்புத்தான் என்பதனைக் காலம்தான் சொல்லவேண்டும்! மீண்டும் சொல்லுகிறேன் ஒரு படைப்பில் கவித்துவம் இல்லாதிருக்கலாம். ஆனால், கவிதை இருக்கவேண்டும்! கிண்டலும், கேலியும், நளினமும் மட்டும் ஒரு தொகுப்பை உயர்த்திக்காட்டமாட்டாது. ஒருசில கவிதைப் பண்புகளும் இருக்கவேண்டும் என்பதும் தவிர்க்க முடியாததாகும். இனிவரும் இவரின் படைப்புகள் மேலும் சிறப்பாக அமையுமென எதிர்பார்க்கிறேன்.

சமூகத்தை நோக்கும் கூரியபார்வையும், குவிந்து கிடக்கும் சொல்வளமும் எதிர்காலத்தில் இவரையும் ஒரு கவிஞன் என்ற நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. இந்தத் தொகுப்பில் ஒரு முத்திரைக் கவிதை ஒன்றை அடையாளம் காட்டுகிறேன்:

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”

வள்ளுவர் எழுதிய குறளுக்கு இதுவரை யாரும் “எடுத்துக்காட்டு”
என்று எதையும் எழுதிவைக்கவில்லை.

டீச்சரும் கெழவனும்
கடைக்குப் போனது
அப்பம் வாங்க
பிடகு
கெழவன் செத்துப் போச்சுது
பிடகு
கெழவனும் சிங்கமும்
கடைக்குப் போனது
இட்டலி வாங்க
பிடகு
சிங்கம் செத்துப்போச்சுது
பிடகு
டீச்சரும் கொரங்கும்
கடைக்குப் போனது
சுவிங்கம் வாங்க
பிடகு
கொரங்கு செத்துப்போச்சுது
பிடகு
கொரங்கும் சிங்கமும்…
என் மகள் சொன்ன கதைகளில்
எல்லாருமே சாகாவரம் பெற்றவர்கள்

மழலை மொழியில் வரும் வழுக்களை இலக்கணம் அனுமதிக்கின்றது. அப்படி வழுக்கள் இருப்பதனால்தான் மழலை இனிக்கிறது என்பதனை வள்ளுவரும் ஒப்புக்கொள்ளுகிறார். நன்றியுடன் எனது “முத்திரைக் கவிதைகள்“ என்ற தொகுப்பில் இதனைப் பதிவு செய்கிறேன்.இவர் ஒருமுறை சொன்னார் நான் ஒரு கவிதைத் தொகுப்பு ஒன்று எழுதி வெளியிடப் போகிறேன் என்று. சரி… எழுதுங்கள் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு நானும் மறந்துவிட்டேன். இதுவரை இவர் சித்தசுவாதீனமாகத்தானே இருந்தார் இன்று ஏன் இப்படிக் குழம்பிப் போயிருக்கிறார். மீண்டும் பேசும்போது ஒரு நல்ல மனோத்தத்துவ நிபுணரைப் பாருங்கள் என்று சொல்லவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் இன்று இப்படி ஒரு தொகுப்பைத் தந்துவிட்டு மதிப்பீடு செய்யுங்கள் என்று அன்புக்கட்டளையிடுகின்றார். இப்போது நான்தான் மிகவும் குழப்பத்திலிருக்கின்றேன். இவரின் இந்தத் தொகுப்பிற்கு பூக்கள் தூவுவதில் என்தமிழ் பெருமைகொள்கிறது! சமூகத்தை நோக்கும் கூரியபார்வையும், குவிந்து கிடக்கும் சொல்வளமும் எதிர்காலத்தில் இவரையும் ஒரு கவிஞன் என்ற நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை.

சிறீ சிறீஸ்கந்தராசா-இலங்கை

சிறீ சிறீஸ்கந்தராசா

 

(Visited 65 times, 1 visits today)