கருப்பு கருணா கனவுப்பட்டறையின் ‘மனசு’ குறும்பட விமர்சனம் – சூரியகுமாரி ஸ்ரீதரன் (பஞ்சநாதன்)

குறும்படத்தின் பெயர் : மனசு
இயக்கம்: மு.ராஜ்கமல்
தயாரிப்பு: கருப்பு கருணா கனவுப்பட்டறை
மூலக்கதை : இசுரு சாமர சோமவீரவின் Mrs Perera
நடிப்பு: வெண்மணி, கருப்பு அன்பரசன்
ஒளிப்பதிவு: கவியரசன் தேசிங்
ஒலிப்பதிவு: P 7 ஊடகம்
உதவி இயக்குனர்: சி.வெ.இளநந்தன், சி.வெ.பாரதி மித்திரன்
வரைகலை: சுபாஷ் ஆதி
படத்தொகுப்பு: பிரபாகரன் காசிராஜன்
இணைய சுட்டி : https://www.youtube.com/watch?v=rfr3ZgI8ths

கருப்பு கருணா கனவுப்பட்டறையின் மூல கர்த்தாவான மறைந்த தோழர் கருப்பு கருணாவின் ஞாபகார்த்தமாக ‘கருப்பு கருணா கனவுப்பட்டறை’ ஸ்தாபிக்கப்பட்டு அதன் முதல் தயாரிப்பாக வெளிவருவது இந்த “மனசு” குறும்படம். ‘ஏழுமலை ஜாமா’ என்கின்ற சிறந்ததொரு குறும்படத்தைத்தந்த தோழர் கருப்பு கருணா காடழிப்பு, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் முன்னின்று உழைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர போராளி. இடதுசாரி அரசியல் பார்வை கொண்ட இவர், கடந்த 2020 மார்கழியில் மறைந்து போனது துரதிஷ்டவசமானது. இவர் ‘போடம்பின் கப்பலும் போக்கிரி திருடனும் என்ற உலக சினிமாக்களின் கதை’ என்கின்ற நூலினையும் எழுதியமை குறிப்பிடத்தக்கது. மறைந்த தோழர் கருப்பு கருணாவுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

“மனசு”குறும்படத்தில், காட்சிப்படுத்தல், ஒலி ஒளி என தொழில் நுட்பத்துறையில் கருப்பு கருணா கனவுப்பட்டறை குழுமத்தினர் வெற்றி ஈட்டி உள்ளமையை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். மிகத்தரமான ஒளிப்படம் என்று கூறுமளவுக்கு ஒவ்வொரு காட்சியும் துல்லியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகாலை யன்னலூடு வரும் ஒளிக்கசிவும், மது அருந்தும் இரவுக்காட்சியும், கிளி குருவிகளை, முக்கியமாக நாய் என்பனவற்றுடன் இயற்கை குரலோசைகளும், காலை-இரவு என்பனவற்றை ஓசைகளாலும் இசையாலும் வேறுபிரித்துக்காட்டியமையும் குறும்படத்திற்கான Theme music-ம் விதந்து பாராட்டத்தக்கன. தரமான ஒளிப்படங்கள் என மணிரத்தினத்துடன் ‘சந்தோஷ் சிவன்’ தந்த திரைப்படங்களையும் ‘பாலு மகேந்திரா’வின் படங்களையும் பார்த்துப் பரவசப்பட்டுப் பழக்கப்பட்டுப் போன எம்முன் புதிய தலை முறை ஒன்று புதிய எழுச்சியுடன் மாற்றுக்கருத்துக்களுடன், தொழில்நுட்பரீதியாகவும் உயர்ந்து நிற்கிறார்கள். கருப்பு கருணா கனவுப்பட்டறை குழுமத்தினர்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

சூரியகுமாரி ஸ்ரீதரன்இசுரு சாமர சோமவீர எனும் சிங்கள மொழி எழுத்தாளரின் ‘Mrs Perera’ என்கின்ற சிறுகதையே “மனசு” குறும்படத்தின் கதைக்கரு. இவ் எழுத்தாளர் இலங்கையில் வளர்ந்து வரும் இளம் படைப்பாளி. இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று கவிதைத்தொகுப்புகளும் புத்தகஉருவில் வெளியாகியுள்ளன. இவருடைய பத்துச் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு Mrs Perera என்ற பெயரில் அண்மையில் ஆதிரை பதிப்பகத்தின் ஊடாக வெளியாகியுள்ளது. சிங்கள மொழி மூல சிறுகதை ஒன்று கருப்பு கருணா கனவுப்பட்டறையின் தயாரிப்பாக வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நுண்மையான கருவைக் கொண்ட ‘Mrs Perera’ பல்வேறுபட்ட மாற்று கருத்துக்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. பெண்ணிய நோக்குநிலையினூடேயும் பண்பாட்டு ரீதியாகவும்கூட இக்கலைப்படைப்பு சில கேள்விகளை முனைவைத்துள்ளதுடன், “கலை கலைக்காக, கலை வாழ்க்கைக்காக போன்ற நுண்மையான கருத்தாடல்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இத்தகையதொரு அதிர்வலை மேற்கிளம்பியமையையே நாம் இந்த ஆக்கத்தின் வெற்றியாகவும் கொள்ள முடியும்.

‘மனசு’ குறும்படம் பலராலும் விதந்து பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளை, பதினாறு நிமிட இந்த குறும்படத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்தபின்னர் மனதில் எதோ ஒரு சங்கடமும் நெருடலுமாக இருந்தது. எனக்குத் தான் ஏதும் விடுபட்டுவிட்டதோ என்று நினைத்து இரண்டாவது முறையும் திரும்பவும் ஆரம்பத்திலிருந்து பார்த்தேன். மூலக் கதையை ஒரு தரம் பார்க்க வேண்டும் என்று மனம் அவாவியது. இசுரு சாமர சோமவீர எழுதிய Mrs Perera வின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘ரிஷான் ஷெரிப்’ இனால் எழுதப்பட்டது வாசிக்கக் கிடைத்தது; (நன்றி அகழ்). சிறுகதை ஒன்றினைக் குறும்படமாக்குகையில் ஏற்படும் சிரமம் இதனூடே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘மனசு’ குறும்படம் ஒரு பெண்ணின் உளவியலைச் சொல்லும் கதையாக விரிந்து செல்கிறது. ஒரே வீட்டில் இருந்தும் அந்நியப்பட்டுப்போன கணவனுடன் வாழ்தல் பற்றிக் கூறுகிறது. விருப்பமில்லாது ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்வில் அவளது மனஅவசங்கள் மௌன மொழியினூடாக நகர்த்தப்படுகிறது. கணவனின் இறப்பு என்கின்ற விடயம் கூட அந்தப்பெண்ணில் எந்தவித சலனத்தையும் நிகழ்த்தவில்லை. மாறாக அவள் ஆறுதலடைகிறாள், அவளுக்கு அழுகை வரவில்லை.

இத்தகைய அகவுணர்வு சார்ந்த வெளிப்பாட்டினை பின் நவீனத்துவ மொழியாகவும் Black Comedy என்கின்ற துன்பியல் உணர்வினை வெளிப்படுத்தும் ஒரு வெளிப்பாட்டு முறைமையாகவும் நாம் பார்க்கலாம். கற்பனை நிகழ்வுகளை யதார்த்தத் தொனியில் சித்திரிக்க முயல்கின்ற ‘Magical Realism’ என்கின்ற மாயயதார்த்தவியலினூடாகவும் இந்த பெண்ணினுடைய நுண்ணிதான உணர்வினைப் புரிந்து கொள்ளலாம் . வெளியில் சொல்ல முடியாத அகஉணர்வுப் போராட்டங்களை வெளிப்படுத்தும் சாதனமாக இலக்கியலாளர்கள் இத்தகைய இலக்கிய கோட்பாடுகளினூடாக காலங்காலமாக வெளிப்படுத்தி வருவதனை இத்தகைய கலைப் படைப்புகளினூடேயும் நாம் கண்டு கொள்ளலாம் .

சூரியகுமாரி ஸ்ரீதரன்கணவன் இறந்து விட்டார் என்று உணரும் அந்தக்கணம் “இதென்ன நான் சிரிக்கிறேனே … சோகமாகத் தானே இருக்க வேண்டும் ….அழுகையே வரமாட்டேங்குது…அவர்கள் முன்னால் சிரித்து விட்டால் …. முகத்தை அழுவது போல் வைத்திருக்க வேணும்….எப்படி அழுவது…..கண்ணீர் கூட வரமாட்டேங்குது…. இது சரிப்பட்டு வராது …. எல்லோரும் அழும்போது அழுது கொள்ளலாம் …..” இவ்வாறாக அந்தப்பெண்ணின் உணர்வு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப்பெண் ஒளித்து வைத்த பழைய கடிதம் ஒன்றினை வெளியே எடுத்துப் பார்த்தபடி, தனது பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்கிறாள். முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் அழுதேன்…இவனுக்காகத்தான் அழுதேன்…..இப்போ உயிரோடு இருப்பானோ தெரியாது என மனமுருகுகிறார்.

கணவன் இறந்துவிட்டான் என்றதும் அவளுக்கு ‘சிரிப்பு’ வருகிறது. இந்த சிரிப்பு வலிந்து புகுத்தப்பட்ட சிரிப்பா அல்லது இயல்பான உண்மையான சிரிப்பா என்பது குறித்து ஆராய்வது மனோவியலின்பாற்பட்டது. எனினும் காவியங்களிலிருந்து நவீன இலக்கியங்கள் வரை பெண்களின் ‘சிரிப்பு’ மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மகாபாரதத்தில் பாண்டவரின் பளிங்கு மாளிகைக்குச் சென்ற துரியோதனன் பளிங்கு நிலம் என்று அறியாது தண்ணீர் நிற்கிறது என நினைத்து வேஷ்ட்டியை மடித்துக்கட்டி நடக்க முற்படுகையில் மாடத்திலிருந்து இதனைக் கவனித்த திரௌபதி ‘களுக்’ என்று சிரித்தாளாம். இதனைக்கண்டு பொங்கிய துரியோதனனின் சினம் மரணிக்கும்வரை அவனை விட்டு அகலவில்லை என்பார்கள். சிரிப்பு என்பது உலகையே புரட்டிப்போட வல்ல ஆயுதம் என்பதனைக் காப்பியம் சொல்கிறது. இசுரு எதனை நினைத்து அந்த சிரிப்பைத் தனது சிறு கதைக்குள் சேர்த்திருப்பாரோ தெரியவில்லை. ஆனால், ‘மனசு’ குறும்படத்தில் இந்த சிரிப்பு பலவிதமான சர்ச்சைகளுக்கும் ஆளாகிவிட்டது என்பதனை நாம் ஏற்றேயாக வேண்டும். குறிப்பாகப் பெண்களை வீட்டுக்குள் அடிமைவிலங்குகளாகப் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆணினதும் மனதைச் சுட்டெரிக்கும் ‘சிரிப்பு’ எனவும் நாம் இதனைக் கொள்ளலாம்.

இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணமான கணவன் சாதாரண இயல்புள்ள ஒருவராகவே குறும்படம் முழுவதும் காட்சிப்படுத்தப்படுகிறார். இந்த இடத்தில் கருப்பு அன்பரசனின் இயல்பான நடிப்பைக் கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும். ஒவ்வொருநாளும் வேலைக்கு போய் வருவதும் அந்தி நேரம் களைத்து தளர்ந்து வீடு வந்து சேருவதும் தன் பாட்டுக்குக் குடித்து விட்டு நித்திரைக்குச் செல்வதும் இயல்பான சராசரி ஆண் ஒருவரின் நடத்தையாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடைசியாக, அவரது ஆணாதிக்க குரல் ஓங்கி ஒலிக்கிறது இவ்வாறாக, “என்ன ஆறிட்டிருக்கு ….வேறு ஒரு Tea கொண்டுவா …. நீயும் உன் Tea யும் ….. ” என அந்தப் பெண்ணை வெறுப்பேற்றுகிறார். பொதுவாக ஆண்கள் தம்மீது பிழையை வைத்துக்கொண்டு அடுத்தவர்கள் மீது பழியைப் போடும் செயல்தான் இந்தத் தேநீர் விடயமும். தானே நேரம் தாழ்த்தி எழுந்து விட்டு ‘தேநீர் ஆறிவிட்டது’ என்கிறார். அத்தோடு நிற்கவில்லை, ‘நீயும் உன் tea யும்’ என்கிறார். இந்த வார்த்தைகள் தான் ஒவ்வொரு பெண்ணினதும் முகத்தில் ஓங்கி அறைகிறது. இவ்வாறாகத் தான் இவர்களுடைய வாழ்க்கை ஓட்டமும் இருந்திருக்கின்றது என்பதனை நாம் அனுமானிக்கக்கூடியதாக இருக்கிறது.

எல்லாவற்றையுமே எதிர்மறையாக எடுக்கும் ஆணுடன் வாழ்வது சிரமம் தான். இத்தகைய காரணங்களுக்காகக் கணவன் இறந்து போகும் ஒரு சந்தர்ப்பத்துக்காக அந்தப் பெண் ஏங்கியிருப்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? அல்லது இதனை நியாயப்படுத்த இன்னும் வலுவுள்ள காரணங்கள் எமக்குத் தேவைப்படுகிறதா? வலுவுள்ள ஒரு காரணம் கிடைத்தால் மட்டும் முப்பது வருடங்களாக வாழ்ந்த ஒரு இணையின் இறப்பு கொண்டாட்டத்துக்குரியதாகி விடுமா? போன்ற கேள்விகள் எம்முன் எழாமலில்லை. ரிஷான் ஷெரீப் இன் மொழிபெயர்ப்புக்கதையில் கணவனுக்கு ‘ஸ்டெல்லா’ என்கின்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக Mrs Perera நினைப்பதாகவும் அதன் காரணமாக ஸ்டெ ல்லாவுக்கு எதிராக சூனியம் செய்ய அளுத்கம எனும் ஊர் வரைக்கும் Mrs Perera சென்றதாக வரிகள் வருகின்றன. இது ஒரு முற்போக்கான கலைப்படைப்ப்பாகத் தகவமைப்பதற்கு உவப்பில்லாததின் காரணமாக ‘மனசு’ குறும்படத்தில் இடம்பெறவில்லை என்று கருத்தமுடிகிறது. ஆணினுடைய பாத்திரம் சராசரி ஆணாகக் காட்சிப்படுத்தப்பட்டமையானது. பெண்ணை அதீத நடிப்புக்குரியவராகப் பார்வையாளருக்குத் தென்பட வாய்ப்பளித்துவிட்டது.

சூரியகுமாரி ஸ்ரீதரன்எனது பார்வையில் ‘மனசு’ குறும்படத்தின் பெண் பாத்திரம் குறித்த மனவுணர்வைப் பகிர வேண்டியதொரு கடப்பாடு எனக்கு உண்டு என்று நம்புகிறேன். எதிர்பார்த்திருந்த அந்த நாளைக் கொண்டாட முனையும் மனைவியாக, அழுகை வரவில்லையே என்று அதை நடித்துக்காட்டும் விதம் இயல்பான ஒன்றாக எனக்குத் தெரியவில்லை. அந்த உணர்வை சகித்து அதனுடன் ஓட்டவும் முடியவில்லை. கணவனின் இழப்பைக் கொண்டாடும் அளவுக்கு எமது பெண்ணியச்சிந்தனை வறுமைப்பட்டுப்போய் விட்டதா என்ன? ஒரு கலைப்படைப்பு என்பது ஒட்டுமொத்த மனிதத்துவத்துக்குமான கலைப்படைப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஆண் பெண் உறவுச்சிக்கல்கள் காலம் காலமாகப் பேசப்படும் அதேவேளை, பாலுறவு குறித்து வெளிப்படையாக பேச அச்சப்படுகின்ற ஒரு சூழலிலேயே நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம். இத்தகையதொரு பின்புலத்திலேயே ‘மனசு’ என்கின்ற குறும்படம் ஒரு கலைப்படைப்பாக எவ்வாறு எம்முன் நிலைநிறுத்தப்படுகிறது என்பது குறித்து நாம் பேசியாக வேண்டும்.

ரிஷான் ஷெரிப் தமிழில் மொழிபெயர்த்த இசுரு சாமர சோமவீர-வின் Mrs Perera என்கின்ற சிறுகதையினைப் படித்தபோது , ஒரு சில சம்பவக் கோர்வைகள் தென்பட்டன. அதாவது வேலைக்குச் செல்லாது வீடே கதி என்றிருக்கும் பெண்ணாக, சமைத்து கணவனுக்கு சாப்பாடு கொடுத்து, வீடு கூட்டி, கிளி, மீன், நாயைப் பராமரித்து மரங்களுக்கு தண்ணீர் விட்டு, வெளிநாட்டில் இருக்கும் மகனுடன் அன்றாட தொடர்பிலிருப்பதாகவும், உடுப்பும் செருப்பும் கூட கணவனின் தேர்வு என்ற ஆதங்கத்துடன் வாழும் பெண்ணாகவும் குறிப்பிடப்படுகின்ற இப்பெண் மேலும், இவ்வாறாகவு ம், நினைப்பதாக ரிஷான் ஷெரிப் தமிழ்மொழி பெயர்ப்பில் கூறுகிறார், “இப்போது முன்பு போல இல்லை என்றாலும் கட்டிலில் வைத்து நெருங்கி வா, அந்தப்பக்கமாகத் திரும்பு, இப்படிக்குனி, காலை விலக்கு போன்ற கட்டளைகள் பிறப்பிக்கப்படும் போது அவற்றையும் செய்கிறார்” என்று வருகிறது. இந்த இடம் அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லாத பாலுறவினை ஆசிரியர் மேம்போக்காகச் சொல்லிச் செல்வதாகக் கொள்ளலாம். ஆனாலும் குறும்படத்தில், இத்தகைய சம்பவங்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு முறையும் கட்டில் காட்சியில் ஒரு சாதாரண கணவனும் மனைவியும் நித்திரையிலிருந்து விழித்தெழும் காட்சிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நித்திரையால் எழும்பியதும் அந்த பெண்ணுக்குக் கால்வலி முதுகுவலி மிக இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டமையானது பெண்ணின் விருப்பமின்மையைப் பூடகமாகக் காட்ட முற்பட்டார்களா அல்லது அவர் வயோதிபத்தை நோக்கி நகருவதாகக் காட்சிப்படுத்தப்பட்டதா என்பதனை பார்வையாளர்தான் கூற வேண்டும்.

இசுரு சாமர சோமவீர சிங்கள இலக்கியத்தில் காத்திரமான படைப்பாளி என்பதனை Mrs Perera என்கின்ற தலைப்பிலே அவரது பத்து சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டமையானது அவரின் முக்கியத்துவத்தினைப் பறைசாற்றி நிற்கிறது. இருந்தபோதும் ‘பெண்மொழி, பெண்ணிலைநோக்கு’ எனப் பெண்களின் உணர்வுச்சிக்கல்கள் பெண்களாலேயே நுண்மையாக வெளிப்படுத்தப்பட முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இத்தகைய சிந்தனை முறைமையினூடேயே ‘மனசு’ சிறுகதையில் வரும் அந்த பெண்ணினுடைய ‘சிரிப்பு அல்லது மகிழ்வினை’ பார்க்க முயல்கிறேன். ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை செய்து அல்லது உருவகம் செய்து எழுதும்போது இத்தகைய சிக்கல்கள் எழுவது இயல்பே. ஒரு பெண் இதனை எழுதி இருந்தால், சிரிப்பை விடுத்து, எனக்கு அழுகை வரவில்லை, அவனுடன் வாழ்ந்த வாழ்வு என்னை இரும்பாக்கி விட்டது என்று கடந்து போயிருப்பாள். கடைசிக்கட்ட காட்சியில் கூட “தேநீர் ஆறிவிட்டது வேறு தேநீர் கொண்டுவா நீயும் உன்னுடைய தேநீரும்” என்று மமதையுடன் ஆண் கூறும் இடத்தில் அதுவே பெண் எழுத்தாக இருந்திருந்தால், அதற்கான எதிர் குரல் ஒன்று கண்டிப்பாக ஓங்கி ஒலித்திருக்கும். இவ்வாறு எதிர்க்குரல் கொடுக்காது பதுமையாக இருந்து விட்டுப் பின்நாளில் கணவனின் இறப்பினைக் கொண்டாடுவதனை ஜீரணிக்க முடியவில்லை. தனது உணர்வுகளை அந்தக் கணத்திலேயே வெளிப்படுத்திப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான் சரியான தீர்வாக இருக்கும். இது ஒரு ஆணினால் எழுதப்பட்ட கதையாகவும் மொழி – பண்பாட்டு ரீதியாக வேறுபட்டிருப்பதும் இத்தகைய கருத்து நிலை மாறுபாட்டுக்கு முக்கிய காரணம் என்று நினைக்கவேண்டி உள்ளது.

கருத்து மாறுபாடுள்ள கணவன்பால் , தனது சுய உணர்வினை முழுவதுமாக வெளிப்படுத்தித் தனக்கான உரிமையினை ஒரு பெண் அடைதல் என்பது தான் இன்றைய பெண்கள் முன் வைக்கப்படும் கருதுகோள். அது முடியவில்லை எனில் அல்லது கணவனுடன் இனியும் ஒருமித்து வாழ முடியாது எனும் நிலை வருமாயின் விவாகரத்து ஒன்றே இறுதித் தீர்வாகி பெண்களை சிக்கல்களிலிருந்து மீள வழிவகுக்கும். இதன்மூலம் யாரும் யாரையும் புண்படுத்துகின்ற தேவையிருக்காது. (‘விவாகரத்து’ – இது ஒரு சாதாரண பரிந்துரை மட்டுமே. சகிக்க முடியாத உடல் உள ரீதியான துன்புறுத்தல்களை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்குள்ளாகும் வேளையிலேயே விவாகரத்து பெண்ணுக்கு அபயமளிக்கும் சாதனமாகிறது). மனதுக்குள் நினைந்து மறுகி கணவனின் இறப்பைக் கொண்டாட விழையும் மனப்பாங்கு வாழ்க்கைக்கு உகந்ததாகத் தெரியவில்லை. இது ஒரு பண்பாட்டு மீறல் (Uncultured thought). எம் காலத்துப் பெண்கள் போரிட்டு வாழ்ந்து உயர்ச்சி பெற வேண்டியவர்கள். சக மனிதரை (ஆணோ பெண்ணோ) மதித்து வாழ் முனையும் பண்பாட்டினை ஊக்குவிக்கும் கடப்பாடு நமக்கு உண்டு.

ஒரு சிறுகதையை 16.45 நிமிடங்களுக்குள் அடக்குவதன் சிரமம் புரியப்படவேண்டிய ஒன்றே. அதேவேளை கணவனை இன்னும் மூர்க்கத்தனமானவனாகக் காட்சிப்படுத்தி இருந்தால் அந்தப் பெண்ணின் மகிழ்வை ஜீரணித்திருக்கலாமோ என்னவோ…. ‘விவாகரத்து’ என்கின்ற எளிய பாதுகாப்பு முறை கைவசம் இருக்கையில் இந்தப் பெண் இவ்வளவு மன அவசங்களுக்கும் நெருக்குதலுக்கும் ஆளாயிருக்க வேண்டிய தேவை இல்லை என்றும் ஒருபக்கம் நினைக்கத்தோன்றுகிறது. இருப்பினும் இதனை ஒரு கலைபடைப்பாக நாம் நோக்குவோமாயின், ஒரு கலைப்படைப்புக்கு யார்யாரெல்லாம் அதன் பார்வையாளர்கள் என்கின்ற கேள்வி எம்முன் எழுகிறது. ‘படித்த அறிவுஜீவிகள்’, ‘சராசரி உறவுச்சிக்கலுக்குள் உழன்று தவிக்கும் Adults என்கின்ற வயது வந்த ஆண்கள், பெண்கள்’,’வளரிளம்பருவத்தினர் ‘உடன் ‘சிறுவர், குழந்தைகளும்’ அடங்குவர்.இவர்கள் “மனசு” போன்ற கலைப்படைப்புகளைத் தத்தமது திறனுக்கேற்ற வகையில் செரித்துக்கொள்வார்கள். ஆயினும் ஆண்-பெண் உறவு குறித்து அறியாத புரியாத வயதினரும் பார்வையாளர்களாக இருக்கும் பட்சத்தில், உறவுச்சிக்கல்கள் குறித்த படைப்பாக்கங்கள் உளவியல் ரீதியாக அணுகப்பட்டு அதன்பின்னரே அது வெளிவர வேண்டிய தேவை உண்டென்பதையும் நாம் இங்கு மனம் கொள்ளல் அவசியம் என்று படுகிறது. கறுப்பு வெள்ளை என்கின்ற புரிதலை விடுத்து சாம்பல் நிறத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தகைய கலைப்படைப்புகள் வயதுவந்தோரினால் மட்டுமே ஜீரணித்துக்கொள்ள முடியும் என்பதனையும் இவ்விடத்தில் கூறியாக வேண்டும்.

ஆங்கில திரைப்படங்களுடன் பரிச்சயமுள்ள 16 வயது நிரம்பிய எனது மகனிடம் இந்தக் குறும்படம் குறித்து அபிப்பிராயம் கேட்ட போது. ” Good story with Black Comedy, I like the story ” என்றான. வேலைத்தளத்தில் என்னுடன் வேலை செய்யும் சகாவான கேரள இளைஞரிடம் ‘மனசு’ குறித்து கேட்டபோது ஒரே வார்த்தையில், “Good concept’ என்று கூறினான். எனது நண்பரும் சினிமா விமர்சகருமான கேதாரநாதனிடம் இது பற்றிக் கேட்டபோது, தான் அண்மையில் பார்த்த குறும்படங்களில் இது மிகவும் தரமானது என்றும், வெண்மணியின் நடிப்பு அற்புதமாக இருந்தது என்றும் கூறினார். மேலும் அவர் தேர்ந்த இசையும் சிறந்த நடிப்புடனான காட்சிப்படுத்தலும் இருக்கும் ஒரு குறும்படத்திற்கு ‘வார்த்தைகள் அவசியமற்றவை’ என்றார். இவை எல்லாமே ‘மனசு’ குறும்படத்தைக் குறித்த ‘காய்தல் உவத்தல் அற்ற’ விமர்சனங்கள். இவை தான் இக்கலைப் படைப்பின் வெற்றி என நாம் கருத முடியும்.

பிற்குறிப்பு:

இந்த கட்டுரையை எழுதி முடித்தபின்னர் ஜி டி கேதாரநாதனுடன் சிறிது நேரம் உரையாடியபோது எனது கருத்தையும் கூறினேன்.
“நீங்கள் உங்கள் கருத்தைத் திணிக்க முயல்கிறீர்கள் சூரியா” என்றார்.”அந்த பெண் Character-ஐ சுயமாக விட்டு விடுங்கள். அது அவளது அனுபவத்துக்குள்ளால் வந்த சிரிப்பு. அவளைப் பொறுத்தவரையில் அந்த கணவன் என்றோ இறந்து விட்டான். குறும்படத்தில் காட்டப்பட்டது just அவனது Physical Death. இனியாவது அவளை சிரிக்க விடுங்கள்” என்றார். இந்த statement என்னை ஒருகணம் ஆட்டம் காண வைத்தது.
இந்த பரந்த உலகில் வெவ்வேறுபட்ட சிந்தனை முறைமைகளுடனும் கருத்தாக்கங்களுடனும் கலையை, இரசிக்க முயல்கிறோம், வாழ்க்கைப் பாடமாகவும் கற்க முயல்கிறோம். இந்த நுண்மையான உணர்வினைப் புரியவைத்த கேதாரநாதனுக்கு நன்றிகள் )

சூரியகுமாரி ஸ்ரீதரன் (பஞ்சநாதன்) – ஐக்கிய அரபு இராச்சியம்

00000000000000000000000000000000

சூரியகுமாரி ஸ்ரீதரன் (பஞ்சநாதன்) பற்றிய சிறுகுறிப்பு :

சூரியகுமாரி ஸ்ரீதரன்தாயகத்தில் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட சூரியகுமாரி ஸ்ரீதரன் (பஞ்சநாதன்) தற்பொழுது தொழில் நிமித்தமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசித்து வருகின்றார். யாழ் பலகலைக்கழகத்தில் கலை மாணிப் பட்டப்படிப்பை முடித்த இவர் தமிழ்மொழியில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர். அத்துடன் பேராசிரியர் சிவத்தம்பி மற்றும் சித்திரலேகா மௌனகுரு ஆகியோரின் மாணவிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலக்கியம், பெண்ணியம், விமர்சனத்துறையில் ஈடுபாடு கொண்ட சூரியகுமாரியினது கனவானது, வறுமையற்ற பால்சமத்துவ சமுதாயத்தை நோக்கியதாக இருப்பது கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

நடு குழுமம்

 

(Visited 206 times, 1 visits today)
 

4 thoughts on “கருப்பு கருணா கனவுப்பட்டறையின் ‘மனசு’ குறும்பட விமர்சனம் – சூரியகுமாரி ஸ்ரீதரன் (பஞ்சநாதன்)”

Comments are closed.