பிக்குணி மணிமேகலை கண்டடைந்த மெய்யறம்-கட்டுரை-ந.கவிதா

ஒரு துளித் தண்ணீரை எக்காலத் திலும் காய்ந்து போய்விடாமல் காப்பது எப்படீ? என்று ஒரு சமயப் புத்தர் சீடர்களை வினவினார். எவர்க்கும் வழி தெரியவில்லை. பெருமானே வழியையும் தெரிவித்தார். அதைக் கடலுள் சேர்ப்பதால் உண்மைதான் மனிதன் தன்னை மானிட சமூகமாகிய கடலுக்குள் சேர்த்துக்கொள்ளா விட்டால் வறண்டுதான் போவான்.

ந.கவிதா மணிமேகலை தன் கருணையால், இவ்வுலக உயிர்களின் மேல் கொண்ட பரிவால் தன்னை மானுட சமூகத்தில் ஒரு துளியாகக் கலந்துவிட்டாள். அவள் கைக்கொண்ட அறம், ஆசைகளை அறுப்பதில் தெளிந்த அறிவை நாடிப் பெற்றதில், இடைவிடாத முயற்சியும் ஊக்கமும் கொண்டு துக்கத்தை மாற்றும் சீலங்களைக் கைக்கொண்டதில் உறுதுணையாய் நின்றது.

புத்தகர், பெண் துறவை சங்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியாகக் கண்டபோது, பெண்கள் முயன்றால் பரிபக்குவ நிலையை அடையலாம் அல்லவா என்று எழுப்பிய ஆனந்தரின் கேள்வி, பெண்ணுக்கான இடத்தை சங்கத்தில் உருவாக்கியது. இருப்பினும் பிக்குணிகளுக்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

1. பிட்சுணி சங்கத்தில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் சிறியவர்களும் பெரியவர்களும் எல்லாப் பிட்சுகளையும் வணங்க வேண்டும்.

  1. பிட்சுகள் இல்லா ஊரில் பிச்சுணிகள் இருக்கக் கூடாது.
  2. 15 நாளைக்கு ஒருமுறை உபோதஸம் என்றைக்கு, தருமோபதேசம் கேட்க எப்போது வருவது என்ற இரண்டு விஷயங்களையும் பிட்சுணி பிட்சு சங்கத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
  3. சாதுர் மாசத்துக்குப் பின்பு பிட்சுணி, பிட்சு சங்கத்தினரிடமும் பிரவாரணை (தன் குற்றத்தைக் கூறும்படி அனைவரை) வேண்டுதல்.
  4. எவளாவது பிட்சுணி சங்காதி சேஷம் முதலிய குற்றங்களைச் செய்திருந்தால், அவள் 15 நாளைக்கு மானத்தம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  5. எந்தக் காரணத்தாலும் பிட்சுணி, பிட்சுவை வைவதோ கடுமொழி கூறுவதோ கூடாது.
  6. பிட்சுணி, பிட்சுவுக்கு உபதேசம் செய்யலாகாது. பிட்சு, பிட்சுணிக்கு உபதேசம் செய்ய வேண்டும்.’

இவ்வாறு பௌத்த சங்கம்  பிக்குணிகளை அடுத்த நிலையிலே வைத்துக் கருதியது. இருப்பினும், வர்க்க, சாதி நிலைகளைக் கடந்த நிலை அங்கு சாத்தியமாகியது. புத்தர் காலத்தில் எழுதப்பட்டு அவர் மறைவுக்குப்பின் தொகுக்கப்பட்ட பிக்குணிகளின் பாடல்கள் துறவை நோக்கிய பெண்களின் மெய்யியல் நாட்டத்தைக் காட்டுபவையாக இருக்கின்றன. மணிமேகலை இவ்வாறு பௌத்த சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாகவோ, அந்த நிபந்தனைகள் பற்றிப் பேசியதாகவோ மணிமேகலையில் குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் மணிமேகலையின் துறவு காப்பியத் தொடக்கத்திலேயே  இடம்பெறுகிறது.

‘தேரிக்களில் நான்கைந்து பேருக்குத் தத்தம் குழந்தைகளின் இழப்பே ஆன்மத் தேடலின் முதல்படியாகிறது. சீககோதமி, படாசாரா, உப்பீரி என்று பலர் இப்படித்தான் தமது தாளாத துயரத்தை எதிர்கொள்வதில் இருந்தே தொடங்குகின்றனர். பெண்களது உணர்வு அனுபவங்கள் காரணமாக அவர்கள் மரணத்தை இத்தகு முறைகளில் எதிர்கொள்கிறார்கள்.’ இடைவிடாத இல்லறக் கடமைகளால் சலித்துப் போன பெண்கள் மட்டுமல்ல, வாழ்வில் பெரும் இழப்புகளால் மனமுடைந்த பெண்களும் இகவாழ்வு தரும் துன்பங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முனைந்ததன் வெளிப்பாடாகவே ‘பெண் துறவு’ எனும் செயல்பாட்டைக் காண முடியும்.

இக்கூற்றை மணிமேகலையும் மாதவியும் துறவேற்ற சூழலோடு நம்மால் பொருத்திப் பார்க்க இயலும். கோவலன், கண்ணகியின் இறப்பு இவ்விருவருக்கும் துறவெனும் நெறியைத் தேர்ந்துகொள்ளச் செய்தது. கணிகை வாழ்வில் கொண்ட சலிப்பும் அதிலிருந்து விடுபட முனையும் தேடலும், பற்றற்ற நெறிகளையும் பிறப்பாலும் குலத்தாலும் வேற்றுமையும் இழிவும் காட்டாத நெறிப்பட்ட சமூகத்தின் ஒரு பகுதியாக அவர்களை அடையாளங்காணச் செய்தது.  பெண் துறவு நிகழ்ந்தபோதும் துறவேற்ற முனைகிற பெண்கள் அறிவுப் பற்றாக்குறை உடையோராகக் கருதப்பட்டதும் வீட்டைக் கடந்த அறிவு அவர்களுக்கு இல்லாதபோது,  அவர்கள் எப்படி துறவேற்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டதுமான சூழல் இருந்தது. இதைத் தன் ‘பகவான் புத்தர்’ நூலில் சுட்டிக்காட்டுகிறார் தர்மானந்த கோஸம்பி.

‘சோமா என்னும் பிட்சுமணி, சிராவஸ்தியின் மருங்கிலிருந்த நந்தவனத்தில் நடுப்பகலில் தியானம் செய்ய உட்கார்ந்தாள். அப்பொழுது மாரன் அவளிடம் வந்து, ரிஷிகளுக்கும் கிடைத்தற்கரிய அந்த இடம் (நிர்வாணம்), (சோற்றைப் பதம் பார்க்கும்) இரண்டு விரல்களிலேயே எல்லா அறிவும் அடங்கிவிட்ட பெண்ணுக்குக்  கிடைப்பது சாத்தியமன்று’ என்றான்.

இதற்கு சோமா பிட்சுமணி விடை பகர்ந்தாள்; மனம் நன்கு திருப்தியுற்று, ஞானம் பெற்று, செம்மையாகத் தருமத்தை அறிந்துள்ளவருக்கு பெண்மை எப்படித் தடையாக முடியும்? ‘நான் பெண், நான் ஆண், நான் ஏதோ ஒன்று’ என்ற அகந்தை கொண்டவரிடம் மாரன் இந்தக் கதைகளைக் கதைப்பானாக! (பிக்குணி ஸம்யுத்தம், ஸீத்தம்2)

இவ்வாறு சோமா என்கிற பிக்குணிக்கும் மாரனுக்கும் நடைபெற்ற உரையாடல் ‘தேரிகாதை’யில் இடம்பெற்றுள்ளது கவிதையாக.

மாரன் :

முற்றுத் துறந்த முனிவரும் அடைய
அரிதான நிலை எட்ட அவாவுகிறாய்
இருவிரல் நுனிகொண்டு
வெந்த சோறு பதம் காணும்
பெண் நீ…
ஹூம்! உனக்கெப்படி அதை
அடைய இயலும் – 60

சோமா :

எமக்கு -வளரும் ஞானநெறியில் மனம் பதித்து
உறுதியாக முற்செல்வோருக்கு
தம்மத்தின் நெறி நுழைபுலம்
உணர்ந்தோருக்கு
பெண் இயல்பு எப்படித் தடையாகும்?

இப்பாடல் பெண்ணின் வெளி சமைத்தல், உணவூட்டல், இன உற்பத்தி, வரும் தலைமுறைப் பேணுதல் எனும் செயல்களோடு சுருங்கிவிடக்கூடியது என்ற கருத்தை முன்வைக்கிற குரலையும் அதற்குப் பதிலளிப்பதாக, ‘தான்’ எனும் அகந்தையை விடுத்து, ஆண்-பெண் எனும் நிலையைக் கடந்து தருமத்தைச் சிந்திக்கும் பெண்ணின் குரல் அவள் வேண்டி நிற்கும் வெளியைச் (ஒகாசா) சுட்டுகின்றது.

தன்னிலை என்பதை பௌத்தம் மாயையாகக் கண்டாலும் மனிதனின் தனிப்பண்பை அது ஒதுக்கிவிடவில்லை. இக்கருத்தையே,

‘தனியான ஓர் அகம் அல்லது ஆன்மா என்பதை மறுத்திருப்பதால் மனிதனின் தனிப் பண்பையும் (ஒப்புக்கொள்ளாமல்) ஒதுக்கிவிட்டதாக ஆகாது. ஆனால், அதனால் தனிமனிதன் தன் அறிவுத் திறனிலும் ஒழுக்க முறையிலும் வளர்ச்சியுறுவதையும் பரிபூரண நிலை அடைவதையும் தடைசெய்யக்கூடிய தவறான ஒன்றிலிருந்து விடுதலை பெற்றதாகவே ஆகும். (பௌத்த) தருமம் வாழ்க்கையிலிருந்து ‘ஆன்மா’ என்ற தற்செருக்காக அகற்றி விடுகின்றது’ என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கு மணிமேகலையின் ஆன்ம வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால், அவள் கணிகையின் மகளாக, ஓர் இளம்பெண்ணாக, காதலியாக, நீதியற்றுக் கொல்லப்பட்ட கோவலனின் மகளாகத் தன் தன்னிலைகளைக் கடந்து, அறத்திற்கான வளாகத் தனது பண்புகளை வளர்த் தெடுத்துக்கொள்வதை மேற்கூறிய கருத்திலிருந்து நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

அழகும் இளமையும் வாய்க்கப்பெற்ற பெண், இளவரசனின் காதலுக்கு உரியவளான பெண், உருப்பசிக்கு நிகரான எழிலும் கலைமேன்மையும் கொண்ட மாதவியின் மகள், இங்கு தன்னை அறச்செல்வியாக வளர்த்தெடுக்க இடமளித்த சாத்தனார் உருவாக்கிய ‘உன்னதத் தன்னிலை’தான் பௌத்த வரலாற்றில் மணிமேகலை பாத்திரத்திற்கு உயரிய இடத்தைப் பெற்றுத் தந்தது.

‘நான் என்று மனிதன் கருதுவது எதை என்று காணுதல் எளிது. உடலும் மனமும் கணந்தோறும் மாறிவரினும் அவற்றில் ஒரு தொடர்பு இருக்கின்றது. முந்தைய நினைவுகள், உணர்ச்சிகள், கருத்துகள், ஆசாபாசங்கள் ஆகியவை ஒரே உடலை அடிப்படையாகக் கொண்டு தேங்கி நிற்பதே ‘தான்’ என்ற அகங்காரத்திற்கு அடிப்படை’.

மணிமேகலை தன் பிறப்பு, முற்பிறப்பு, தனக்கும் தன் தாய்க்கும் நேர்ந்த நிலை, சமூகத்தில் அவளுக்கு இருந்த நெருக்கடி என எல்லாவற்றையும் உணர்ந்திருப்பினும் அவற்றைக் கடந்த நிலையை அடைகிறாள். மைத்ரீ பாவனை, கருணா பாவனை, முதித பாவனை, அசுப பாவனை, உபேட்சா பாவனை எனும் பாவனைகளைத் தன் பண்பாக வளர்த்தெடுக்கிறாள்.

இவ்வாறு அன்பையும் தயையும் ஆனந்தத்தையும் உடலின் அசுத்தத்தையும் சமதிருஷ்டியோடு விருப்பு வெறுப்பற்று இருத்தலை மணிமேகலையின் இயல்பாக இந்தப் பயணம் வளர்த்தெடுக்கிறது.

‘மணிமேகலை தான் அடையும் கருணா, சமதா என்ற நிலைகளைத் தன்னெழுச்சியாக அடையவில்லை. மாறாக பிரக்ஞா என்ற வலி நிறைந்த தேடுதலுக்குப் பின்னே அடைகிறாள். பிரக்ஞா, கருணா, சமதா  என்ற பௌத்த மும்மூலங்களைத் தனது வேட்கை, விழைவு, இச்சை என்ற மூன்று மனக்களங்களினூடாகவும் அவள் அடைகிறாள். அவளுக்கு வீடு, உறவு இல்லை, இனமும் நாடும் இல்லை. அவளுடைய உடல் அவளுக்கு மையம் இல்லை. அவள் மையமற்ற பாய்வாக மாறுகிறாள். மையத்துவங்கள் கடந்த அலைவுறும் தன்னிலை பிறவற்றின் இருப்பில் கணம்தோறும் தோன்றிக் கரையும்தான். இதில் முக்கியமானது பிரக்ஞா என்பதுதான்’. என்ற ப்ரேம் : ரமேஷ் கூற்று, மணிமேகலையின் தானற்ற தன்னிலையைக் காட்டுகிறது.

மணிமேகலை காலத்தைக் கடந்து, பழம்நினைவுகளைக் கடந்து, காதலியாக, மாதவியின் மகளாகத் தன் அடையாளங் களைக் கடந்து மெய்யொளி நோக்கிய பணயத்தைத் தொடர்கிறாள். அவள் தன் தன்னிலையை யாவர்க்கும் இரங்கும் பண்பால், வாடிய உயிர்களுக்கெல்லாம் அமுதூட்டும் தாய்மையினால் நிறைத்துக்கொள்கிறாள். பத்தினி, கணிகை எனும் எதிர்வினில் சிக்கிக்கொள்ளாமல், மெய்யறிவைக் கண்டடடையும் தேடுதலை இலக்காக்குகிறாள்.

25 ஆவணி 2015

ந.கவிதா -இந்தியா

(Visited 28 times, 1 visits today)