தேவை விமர்சகர்கள்-கட்டுரை-பொ.கருணாகரமூர்த்தி

என்னிடம் இப்போது அதிகமாகக் கேட்கப்படுவது இதுதான். “ ஏன் நீங்கள் இப்போது நூல்விமர்சனங்கள் அதிகமாக எழுதுவதில்லை?”

சிறுபத்திரிகைகளில் விமர்சனம் எழுதுவதற்கும், முகநூலில் விமர்சனம் எழுதுவதற்கும் நிறைய வித்தியாசமுண்டு. சிறு பத்திரிகை வாசகர்கள் சற்றே வாசிப்புத்தாகமுடையவர்கள். ஒரு நூல்மீதான விமர்சனமோ, சினிமாமீதான விமர்சனமோ வைக்கப்பட்டால் கருத்தாக அவற்றை வாசிப்பார்கள்.

முகநூலில் விமர்சனம் எழுதுவதை  Totally Waste & Vain  என்பேன். சிறுபத்திரிகைகளில் எழுதிய விமர்சனங்களுக்கு வேணுமானால் இணைப்பை மட்டும் முகநூலில் தந்துவிடலாம். விரும்பியவர்கள் படிக்கட்டும். இல்லாவிட்டால் அது கடந்துபோய்விடட்டும்.

முன்பெல்லாம் எம்மிடம் ஆனந்தவிகடனில் பாஸ் மார்க்காவது வாங்கிய படத்துக்குத்தான் போவது அல்லது காணொளியிலாவது பார்ப்பது என்கிற வழக்கமிருந்தது. இப்போது நிலைமை தலைகீழாகி வலைவெள்ளத்தில் அடித்துவரும் அனைத்துப்படங்களையும் அவை எந்தக்குப்பையானாலும் பார்த்துவிடுவது என்பதாக அது மாறிவிட்டது.

ரஜனி, விஜயகாந்த், அஜித், விஜய், விக்ரம், தனுஷ். திரிஷா, நயனதாரா, தமன்னா, அமலா போல் படங்கள் வந்தால் முதல் வாரத்திலேயே பார்த்தே விடுவது என்று கச்சையை வரிந்து கட்டிக்கொண்டிருக்கும் பாமர / பித்துநிலை ரசிகனுக்கும் விமர்சனங்களுக்கும் சம்பந்தமில்லை, அவன் எழுதப்படிக்கத் தெரிந்தவனாகவே இருந்தாலும் விமர்சனங்களை அவன் படிக்கப்போவதில்லை. அவனுக்காக எதையும் எழுதவேண்டியதுமில்லை.

நாவல்களைப் பொறுத்தவரைக்கும்  நிலமை வேறுமாதிரி. இன்று முன்னணியிலிருக்கும் ஒரு எழுத்தாளர் சொன்னார்  (அவர் பெயரைத் தவிர்த்துவிடுகிறேன். அதைக்கேட்டாலே பலருக்கும் உச்சத்தில் ஜன்னி வந்துவிடும்) 500 ரூபாவுக்கும் அதிகமான / விலைகூடிய நூல்களை வாங்கும்போது வாசகர்கள் அதன் மீதான விமர்சனங்களைக் கவனித்தோ, அல்லது அதை வாசித்த ஒரு வாசகனின் சிபாரிசை வைத்தோதான் வாங்குகிறார்கள். ஒரு ஹொட்டலில்போய் செலவு செய்வதைப்போல ஒரு நூலை வாங்க அவர்கள் பணத்தைச்செலவு செய்வதில்லை.

ஒரு நூலை விமர்சிப்பதாயின் அதன் அனைத்து வரிகளையும், அவ்வரிகளின் இடையில் சொல்லப்படாத செய்திகளையும் ஒரு விமர்சகன் கருத்தூன்றி வாசிக்க வேண்டும், வாசித்தவற்றைக் குறித்து வைக்கவேண்டும். பின் ஒரு வாரமோ 10 நாட்களோ படைப்பை மனதில் ஊறப்போட்டபின்னால் அப்படைப்புபற்றித் தனக்குத்தோன்றுவதை விருப்பு / வெறுப்பின்றி, உயர்வு நவிற்சியின்றிச் சொல்லவேண்டும்.

ஒரு விமர்சனத்தின் பயன் அது சுவைஞனின் இரசனையை உயர்த்துவதாக இருக்கவேண்டும். எழுதுபவனை உற்சாகமடையச்செய்யவேண்டும். அதுவன்றி வேறெதுக்கு விமர்சனங்கள்? தலைவலி மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க வைக்கவா?

இன்று இளம் படைப்பாளிகளாயிருந்தாலென்ன, அனுபவம் அதிகமுள்ள படைப்பாளிகளாயிருந்தலென்ன  அனைவருமே  தம் படைப்புக்கள் விமர்சனத்தில் புகழப்படுவதையே உள்ளூர விரும்புகின்றனர். நியாயமான தவறுகளைக்கூட ஏற்றுக்கொள்ளமுடியாமல் கோபமடையும் படைப்பாளிகளே இன்று அதிகம்.

வர்த்தகப்பத்திரிகைகளைத்தவிர எந்தப்பத்திரிகையும் எந்த விமர்சகர்களுக்கும் சம்பளங்கள் வழங்குவதில்லை. மறுவார்த்தையில்….. விமர்சனத்தொழிலானது ‘உடம்புளைந்த கழுதை உப்பளம்போன கதைமாதிரித்தான்’. அது ஒரு வேண்டாத வேலை. விமர்சகர்களின் உழைப்பு எந்நாளுமே பெரிதாகக் கண்டுகொள்ளப் படுவதில்லை. சுப்புடு, க.நா,சு, வெங்கட் சாமிநாதன் வாங்காத வசைகளா?

நண்பரொருவரின் 400 பக்க நாவலை வாசித்து 6 பக்க விமர்சனமொன்றை எழுதியிருந்தேன். அதில் அவரது முன்பள்ளிமாணவருக்கான மொழிநடையைக் கொஞ்சம் கிண்டல் செய்திருந்தேனா, அது  அவருக்குப் பிடிக்கவில்லை.  அவர் எனக்கு இரண்டே இரண்டு வார்த்தைகளில்  பதிலளித்திருந்தார்.

‘ஆமாம்…. வேறுபட்ட பார்வைகளும் சில இருக்கத்தான் செய்யும், நன்றி’

இவ்விடர்கள், இடுக்கண்கள் அத்தனையையும் தாண்டி இன்னும் எமக்கு விமர்சகர்கள் தேவைப்படுகிறார்கள்.

பொ.கருணாகரமூர்த்தி-ஜெர்மனி

பொ.கருணாகரமூர்த்தி

(Visited 138 times, 1 visits today)