பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப்பூச்சிகள்- நூல்விமர்சனம்- எஸ்.றமீஸ்பர்ஸான்

“இருப்பதற்காக வருகிறோம்
இல்லாமல் போகிறோம்”

நகுலன்

00000000000000000000000

“நிறம் என்பது கண்ணின் தொடுகை. செவிடனுக்கு இசை, இருட்டிலிருந்து வெளிப்படும் ஒரு வார்த்தை. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு பொருளிலும் ஆன்மாக்கள் – காற்றின் முணுமுணுப்பைப் போல – கிசுகிசுப்பதை நான் கேட்டிருப்பதால் என் தொடுகை தேவதைகளின் தீண்டலை ஒத்திருக்கிறது எனச் சொல்வேன். என்னில் ஒரு பகுதி, தீவிரப் பகுதி உங்கள் பார்வையைச் சுண்டி இழுக்கிறது. என் அடுத்த உற்சாகப் பகுதி உங்கள் கணநேரப் பார்வைகளோடு காற்றின் ஊடாக மேலெழும்பிப் பாய்கிறது”

ஓரான் பாமுக்

00000000000000000000000

“வார்த்தைகளால் நான்
நிலவைக் கட்டித்தழுவும்
அந்த மல்லாந்த வெளியில்
யாருமற்ற மௌனம்”

நளீம்

00000000000000000000000

எஸ்.றமீஸ்பர்ஸான்போருக்குப் பிந்திய வாழ்வில் ஒரு குறுகலான தொய்ந்த மனநிலை எல்லாருக்கும் வாய்த்திருக்கிறது. பாதைகள் நீண்ட தொலைவுகளுக்கெல்லாம் செல்லும் சுதந்திரம் கிடைத்திருப்பதாயினும் உள்ளங்களுக்கிடையிலான நெருக்கம், கருணை, அன்பு அருகியிருக்கின்றன. நுகர்வெழுச்சி வாழ்வை இருண்மைகொண்ட சிக்கல் மிக்கதாக மாற்றியுள்ளது. எளிமையற்ற அல்லது சமநிலையற்ற இயற்கையோடு இயைந்து போகாத செயற்கைத்தனம் அடர்த்தி மிக்க இருளாகக் கவிந்துள்ளது. எதையும் நிதானித்து நின்று உற்றறியும் ஆவல் மருவி அவசரம் பரிணமித்துள்ளது. முன்பு நாம் கண்டது போல உலகம் இல்லை. சூழல் மாறியிருக்கிறது. மழை பொழிகிறது, பனி விழுகிறது, அகோரமாய் வெயிலும் வதைக்கிறது. மாற்றம் என்பது மனிதர்களில் மட்டுமன்றி இயற்கையிலும் நிகழ்ந்திருக்கிறது. அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் அல்லாடும் மனம் வெறுமை கொள்கிறது. அதன் ஆழத்தில் ஒரு சலனம் இடைவிடாத அலைச்சலை உண்டாக்குகிறது. தனிமை, யாவற்றையும் விட்டுவிலகிச் செல்லும் துறவுநிலை அதன் நிழல் போலத் தொடர்கிறது . மனிதர்கள் மீதான கோபத்தையும் வெறுப்பையும் அள்ளி மடியில் கட்டிக்கொள்கிறது. இந்த மனநிலை ஓட்டம்தான் நளீமுடைய ஓவியங்களுக்கு நிகழ்ந்திருப்பது போல அவரது கவிதகளுக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஆயினும் அவரது மனம் ஒரு வண்ணத்துப் பூச்சி போல எல்லா அழகியலோடும் ஒற்றையாய் அலைகிறது. உண்மையில் மேலே ஓரான் பாமுக் சொல்வது போல அமைந்துள்ளது.

எஸ். நளீம் 90-களில் கவிதைகள் எழுதத்தொடங்கியவர். ஓவியம், கவிதை, சிறுகதை, இதழியல் முதலான துறைகளில் செயற்படும் அவர் ஒரு அரசியற் செயற்பாட்டாளருமாவார். இதுவரை இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட அவர் மூன்றாவது தொகுதியாக ‘பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்’ எனும் தொகுதியை நமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். நூற் தலைப்பு குறியீட்டுத்மையுடையதாக உள்ளது. போருக்குப் பிந்திய வாழ்வின் அகநிலையில் உள்ள மகிழ்ச்சியற்ற இறுக்கத்தை அல்லது வெறுமையை அது குறிக்கிறது. தலைப்பின் வசீகரம் பிரதிக்குள் விழித்திருக்கும் கவிதைகளை மேயும் ஆவலைத் தூண்டுகிறது.

மகாகவி முதற் தொடங்கி சேரன் வரை ஈழத்துக் கவிதை மரபு தனக்கான பொது இயல்புகள் பலவற்றைக் உள்ளடக்கிக் கொண்டு வளர்ந்து வந்துள்ளது. யாப்பிலக்கண விதிகளிலிருந்து விடுபட்டு சந்தம் விரவியனவாக அவை அமைந்தாலும் அம்மரபு அருகி வரும் ஒன்றே. செறிந்த உளளழுத்தம் கொண்ட துண்டுபட்ட உரைநடைத் தன்மை கொண்ட நவீன மரபும் அதில்; கலந்துள்ளது. வார்த்தைகளை செறிவாக்கி அவற்றை சிறுசிறு உரைநடைத் துண்டுகளாக சிதறவைத்து அதில் வாசக இடைவெளியை உணர்ச்சி பாவங்களை கிளர்த்திவிடும் பண்பை நாம் சில ஈழத்துக்க கவிஞர்களின் கவிதைகளில் காணலாம். சேரனின் ‘உதய சூரியன்’ இதற்குப் பொருத்தமான சான்றாகக்காட்டுவதற்கு ஏற்றது. போர்க்கால அவலத்தை அக்கவிதை சித்திரித்தாலும் அதன் சொல்முறை அது ஏற்படுத்தும் உணர்ச்சிப்பெருக்கு அதன் அழியாத இருப்பை நிலைபேறடையச் செய்துவிடுகிறது. ஓசையை தக்கவைத்துக்கொண்டு உணர்ச்சிவேகத்துக்கு முதன்மையளிக்கும் பொதுவியல்பு ஈழத்துக்கவிதைகளுக்குரியது. வாசகரை முன்னிறுத்தி உரையாடல், நேரடியாக காட்சிகளை சித்திரித்துக்காட்டுதல், நாடகப் பாங்கு எனபனவும் அதன் பண்புகளாகக் கொள்ளப்படும். பொதுமக்கள்மயப்படுவதற்குரிய வெளிப்பாட்டு முறையைக்கொண்டது. போர்க்காலத்திலும் போருக்குப் பிந்திய காலத்திலும் ஈழத்தில் எழுதப்பட்ட கவிதைகளெல்லாம் பன்மைப்படுத்தும் நோக்கிலமைந்தவையாகும்.

இவ்வில்புகளோடு இயைந்த போக்கு நளீமுடைய கவிதைகளிலும் உள்ளன. தீவிர உணர்ச்சிவேகம், சந்தம், வாசகரை முன்னிறுத்தி உரையாடல், துண்டுபட்ட உரைநடைத்தன்மை முதலியன அவரது எல்லா கவிதைகளிலும் பொதுவாகக் காணப்படுகின்றன. நவீன கவிதைக்குரிய பண்புகளாக இவற்றைக்கொள்ளாது ஈழத்துக் கவிதைகளுக்குரிய இயல்புகளாகக்கொள்வது பொருத்தமுடையது. தனிமனிதனை முன்னிறுத்தி அதனூடாக காலத்தையும் உலகத்தையும் பார்க்கும் நோக்குடையது நவீன கவிதை. சொற்களை செறிவுபடுத்தி எளிமையை தக்கவைப்பது. உண்மையான அனுபவத்தை வெளிப்படுத்தி உணர்ச்சி பேதங்களை வாசகர் மனத்தில் கிளரச்செய்வது. சொற்களை படிமங்களாக்குவது. சொல்முறையால் வாசகரை ஈர்ப்பது. சொற்களின் இடைவெளியில் ஒரு மௌனத்தை விட்டுச்செல்வது. கொள்கைகள,; நம்பிக்கைகள், மரபுகள், சிந்தனைகள் என்று எல்லாவற்றையும் ஐயப்படவைப்பது. கற்பனாவாத அழகியலற்றது. இப்பண்புகள் நளீமுடைய கவிதைகளிலில் இல்லை என்ற போதும் அவை சில அதிர்வுகளை நம் மீது செறித்துவிட்டு கடந்துசெல்கின்றன.

போருக்குப் பிந்திய வாழ்வின் நெருக்கடி, அதிகார எழுச்சி, இனமுரண்பாடு, அரசியற் சீரின்மை என்பவற்றுக்குள் மகிழ்ச்சியற்று அலையும் நளீமுடைய மனம் ‘போரோய்ந்தும் குயில்கள் வந்து கூவில்லை ஊரில’; என்று பதைக்கிறது. அரசியலை மக்கள் நலனோம்பும் பணியாக மேற்கொள்ளாத அரசியல்வாதிகளைச் சினக்கிறது. எதிர்ப்பபையும் கோபத்தையும் ஆற்றாமையையும் அம்மனம் சொற்களின் வழியே வழிந்தோடச்செய்கிறது. எதிலும் பிடிப்பற்ற அது எல்லாவற்றையும் விட்டுவிலகிச் செல்லத் துடிக்கிறது. ‘மிகப்பெரிய கோடை வரட்சியை மூட்டுகிறது நமக்குள் இந்நாட்கள்’ என வெறுப்படையும் அம்மனம் ‘ஒரு தாய் போல உச்சி முகரும் வார்த்தைகளால் எம்மை மீளவும் உயிர்ப்பிக்காதா’ என்று கருணைக்காக ஏங்குகிறது. இவ்வாறு விரியும் மனவெழுச்சிகளின் கண்ணீர் பிசுபிசுப்புத்தான் நளீமுடைய கவிதைகளின் ஈரம்.

நளீமுடைய இயல்பான ஓவிய மனம் காட்சியை சொற்களில் வரையும் அழகியலைக்கொண்டுள்ளது. “கசிந்துருகும் நிலவின் ஒளி இலைகளைப் பிடுங்கி ஒரு ஆடைநெய்து முடித்தான்”. “உப்புடன் நன்னீர் கைகுலுக்கும் கரை. கரையில் வயிறூன்றி வரிசையாயப் படுக்கும் படகுகள”; ‘அறைக்கு வந்த வண்ணாத்தி’ என்ற கவிதை படிம உத்தியுடையது. இக்கற்பனாவாத படிம ஆக்கங்கள் சில போது ந. பிச்சமூர்த்pயின் கவிதைகளை ஞாபகமூட்டிச் செல்கின்றன. நளீமுடைய ‘வியாபாரி’ பிச்சமூர்தியின் பூக்காரி கவிதையின் படிமச் செறிவுள்ள உரையாடற் பண்பைப் பெற்றுள்ளது. ‘பார்த்தாயா குறுக்குக் கோழிக்கு கூந்தல் கட்டி ஓட்டுகிறது காலம்;;’ என்றதொடரில் நாட்டு வழக்கு மொழிக்கு ஒரு காட்சி வழங்கப்பட்டு காலநகர்வில் வாழ்வில் எதிர்கொள்ளும் அலங்கோல எதிர் மனநிலைகள் கிண்டல் செய்ப்படுகின்றன. நவீன கவிதைக்குரிய இயல்புகள் இரண்டு. ஒன்று பேச்சு மொழியிலிருந்து கவிதையின் மொழியைக் கண்டடைதல் மற்றது பேச்சு மொழியை செறிவுபடுத்தி அதைப்பிறிதொரு கட்டடத்துக்கு நகர்த்துதல் அல்லது மொழியின் புதிய சாத்தியப்பாடுகளை கண்டடைதல். இப்பண்புகளின் அடர்த்தி மிக்க ஒரு ஊற்று நளீமுடைய கவிதைகளில் ஆங்காங்கு ஈரலிக்கிறது.

மகாகவி, நீலாவணன், வில்வரத்தினம் ஆகியோரின் கவிதைகளில் இயல்பாகவே உணர்ச்சி வேகத்துக்கேற்ப சந்தம் மிக மென்மையாகத் தொடங்கி உச்சமாகி பின்பு தணியும் அழகியலைக் கொண்ருப்பதை காணமுடியும். ‘வில்வரத்தினத்தின் மெய்த்தலம்’ இம்மரபுக்கான உச்சமான எடுத்துக்காட்டாக அமைகிறது. இம்மரபின் நிழலாக ஒரு பரீச்சார்த்த முயற்சியாக நளீமும் எழுதமுயன்றிருக்கிறார். ‘சொர்க்கத்து கனி நிலம்’ என்ற கவிதை நளீமுடைய சந்தம் கலந்த கவிதைக்கான எடுத்தக்காட்டாக அமைகிறது. தந்தை மகன் பாசத்தை வெளிப்படுத்தும் அக்கவிதையை வாசிக்குக்கும் போது மகாகவியின் பாடலொன்றில் விரவும் சந்தம் நளீமுடைய கவிதையிலும் மிக மெலிதாக கலந்து விரவுகிறது.

“சிறுநண்டு மணல்மீது படமொன்று கீறும்
சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும்
கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட பயமொன்று காணும்”

இச்சந்த அழகு நளீமுடைய கவிதையில் இவ்வாறு ஒலிக்கும்.

“மயிலிறகு வருடுகிற இதம் தூவும்
மகிழ்வொழுகும் மல்லிகையின்
மனங்கமழும் அருட் கரங்கள்
தடவுகின்ற உன் அணைப்புக்கீடில்லை”

ஒரு அனுபவத்துக்கு நேர் முரணனான மற்றொரு அனுபவம் கவிதையின் எதிர்பாரத திருப்பமாக அல்லது முடிவாக அமையும் சொல்முறை வாசகனை ஒருகணம் மௌனிக்கவைத்து மறுகணம் அவனுக்குள் அழுகையை அல்லது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வெவ்வேறான உணர்ச்சி பேதங்களுக்குள் தள்ளிவிடும். இது நவீன கவிதைக்குரிய உத்தமமான பண்பு. நா.முத்துக்குமார் எழுதிய ‘தூர்’ கவிதை இதுபோன்ற அமைப்புடைய இருவேறு அனுபவங்களின் சேர்க்கையாக அமைந்த மிக எளிமைப்பட்ட சொற்களாலான ஒரு கவிதை. இக்கவிதைக்குப் பின்புதான் நா. முத்துக்குமார் தன் கவிதைகள் மீதான கவனக் குவிப்புக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சொல் முறை உத்திதான் ஒரு சிறந்த கவிதையை கண்டடைந்த வாசிப்பின்பத்தை நமக்களிக்க முடியும். இவ்வாறான எதிரெதிரான இருவேறு அனுபங்களை ஒரு சரட்டில் இணைத்துத்ச் சொல்லும் சொல்முறை நளீமுடைய கவிதைகளில் இல்லாத போதும் அனுபவங்களை ஒரு கோர்வையாக முன்னிறுத்திவிட்டு தன் உணர்ச்சிகளை அவ்விடமே தோய விட்டுச்செல்கிறார் அதாவது தன்னைச் சுற்றி நிகழும் அனுபவங்களிலிருந்து எழும் உணர்வுகளை கவிதைகளாக்கியிருக்கிறார். வண்ணாத்தி தன் காட்டையும் மலர்ச்செடிகளையும் இழந்து ஒற்றையாய் அலைவதைக் கண்டு இரங்கும் அவரால் அரசியற் சுரண்டலைக் கண்டு கோபப்படமுடிகிறது. மழை பெய்து ஓய்ந்த இரவுக்குப் பின்னர் உதயமாகும் காலைப்பொழுதை ரசிக்கும் அவரால் கோடையின் வெம்மையில் வியர்க்க முடிகிறது. பிரதேசவாதத்தையும் இனமுரண்பாட்டையும் கண்டு அவரால் கோபப்படமுடியாமல் இருக்கமுடியவில்லை. அழுகை, வெறுப்பு, கோபம், ஆற்றாமை, கருணை போன்ற எல்லாவகை உணர்வுகளும் அவரது கவிதைகளில் பல்லிகள் இல்லா சுவரில் மேயும் வண்ணத்திப்பூச்சிகளின் பாடல்களாக ஒலிக்கின்றன.

தனது மண்ணையும் மக்களையும் அவர்களது துயர்களையும் பாடும்  நளீமுடைய முந்திய இரு தொகுதிகளிலும் இல்லாத மிக எளிமைப்பட்ட இருணமையும் அரூபமுமற்ற மொழிப் பயன்பாட்டுக்கு இப்பிரதி வழியாக அவர் வந்திருப்பது தனக்கான சுய சொல்முறையை கண்டடையும் எத்தனத்தை உணர்த்துகிறது. ஆயினும் வாழ்வின் பன்முகப்பட்ட வளைந்த கோடுகளில் உள்ள வண்ணக் கலவையிலிருந்து அவர் புதிய கோடுகளையும் வரைய வேண்டும்.

எஸ்.றமீஸ்பர்ஸான்-இலங்கை

எஸ்.றமீஸ்பர்ஸான்

(Visited 66 times, 1 visits today)