ஒரு புதினத்தின் அறுவடை ‘அங்கதம்’ மட்டுந்தானா?-கந்தசாமியும் கலக்சியும்-நூல் விமர்சனம்-பொ.கருணாகரமூர்த்தி

பொ கருணாகரமூர்த்திஅறிவியற்கதைகளோ, புதினமோ எம்மொழியிற்றான் எழுதப்பட்டாலும் அவை வாசகர்களை அடைவதில் ஏனைய படைப்புகளைவிடவும் சில தடைகளை  எம்பித்  தாண்டவேண்டியிருக்கும்.

வாசகன்   விஞ்ஞான விஷயங்களையறிய விரும்புபவனாக இருக்கவேண்டும்.

அவன் கதை படரும் துறையில் குறைந்தபட்ச அறிவுடையவனாக ஆர்வமுடையவனாக இருக்கவேண்டும்.

ஆசிரியனுக்கு  அடுத்த கதாநிகழ்வை வாசகனின் சுவாரசியத்தைத் தணியவிடாது நகர்த்தத் தெரிந்திருக்க வேண்டும்.

அறிவியலோ கற்பனையோ எதுவாக இருந்தாலும்  கதாநிகழ்வுகளில் வாசகனின்   நம்பகத்தன்மை அறுபடாதிருக்கவேண்டும்.

தமிழ்மொழியில் சுஜாதாவைவிட்டால் அறிவியற்கதைகளுக்குப் பெரிய முன்மாதிரிகள் இல்லை. சுஜாதாவின் எழுத்துப்பரப்பிலும் அறிவியற் கதைகளுக்கான பரப்புக்  குறைவே.

விமலநாதன் (கனடா) வில் அறிவியல் நாவலான ‘விந்தைமிகு விண்வெளி விபத்து’ எழுதியிருக்கின்றார். அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘எதிர்காலச்சித்தன் பாடல்’ கவிதையே அறிவியல் சிறுகதைதான். அதை அடியொற்றி பதிவுகள் ஆசிரியர் ந.கிரிதரன் அவர்கள்  ‘எதிர்காலச்சித்தன்’ என்றொரு கதையை எழுதியிருக்கிறார்.

இவ்வளவு இடர்கழியையும் தெரிந்துகொண்டு ஒரு அறிவியற்புதினமாகிய ’கந்தசாமியும் கலக்சியும்’  எழுதத்துணிந்த  ஜே,கே ஐப்பாராட்டலாம். அவர்  ஆங்கில எழுத்தாளர் டக்ளஸ் அடம்ஸ் தான் தனது அறிவியற்கதைகளுக்கான ஆதர்ஸம் என்றும் அவருக்கே இந்நூலையும் சமர்ப்பித்துமிருக்கிறார்.

கந்தசாமியிலிருந்து புதினத்தில் வரும் ஏனைய பாத்திரங்களுக்கும் சமகாலத்தில் வாழும் பலரின் பெயர்களைத் தேர்வுசெய்திருக்கிறார் ஆசிரியர்.

கந்தசாமிக்கு இணையாக புதினத்தில் முதன்மையானவர் சுமந்திரன். அவரின் நடத்தைகள் பலவும் விநோதமாகவிருக்கும்.

கந்தசாமி காணிகள்பதிவு அலுவலகத்தில் இலிகிதராகப்பணியாற்றி ஓய்வுநிலை அடைந்தவர். இச் சுவாரசியமான பாத்திரத்தின் சிறிய குடும்பம் ஆண்டுக்கு ஒவ்வொருத்தராக மொத்தக் குடும்பம்பமும் கனடாவுக்குக் குடிபெயர்ந்து   விடுகிறது.  கனடாவிலிருக்கும் கந்தசாமியின் மகனுக்கு குழந்தை பிறந்தபோது பிரசவம் பார்க்கப்போன திருமதி.கந்தசாமியாகிய செல்வராணி அங்கேயே பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டுவிட அவரது குடும்பத்தினர் அனுப்பும் டொலர்களில் யாழ்ப்பாணத்தில் ஏகாந்தியாக வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்  திரு.கந்தசாமி.

முன்நிகழ்வாக விரியும் அப்பிராணி கந்தசாமியின் முதலிரவுக்காட்சியொன்று வாய்விட்டுச்சிரிக்கவைக்கிறது. செல்வராணி கந்தசாமியின் தூரத்து உறவுக்காரப்பெண், அவரது பெற்றோர் பார்த்துப் பேசிமுடித்துவைத்த கல்யாணம். திருமண இரவன்று விருந்தினர்கள் அனைவரும் வீடேகியபின்னால் கோடை இரவின்  ‘நச’ ‘நச’ப்புத்தாங்காமல் கூறைச்சேலையை அவிழ்த்துவைத்துவிட்டுச் சோட்டியைச் சுற்றிக்கொண்டு கிணற்றடிக்குக் குளிக்கப்போகும் செல்வராணியைப் பின் தொடரும் கந்தசாமியை   அவள்  விரட்டிவிடுகிறாள்.  நொந்து திரும்பும் கந்தசாமியை பந்தலுக்குள் ‘தண்ணி’ சகிதம் காட்ஸ் விளையாடும் பயலுகள் அழைக்கவும் போய் ஒரு கைபோடுகிறார். வாழ்க்கையின் முதற்றடவையாக அன்றுதான்  ‘கம்மாஸ்’ அடிக்கிறார். ஆட்டத்தில் உற்சாகம் அதிகமாக  ‘நம்ம மனுஷிதானே எங்கே போய்விடப்போகிறாளென்று’ அடுத்த ஆட்டத்திலும் இறங்கும் கந்தசாமியை  மாமன்வந்து   ‘அடே போய் செல்வராணியுடன் அடிடா கம்மாஸ்’ என்று விரட்டிவிட, அரைமனதுடன் மஞ்சத்துக்குச் சென்றவருக்கு பந்தலுக்குத் திரும்பிப்போய்  ‘காட்ஸ்’ விளையாட்டில் இன்னொரு கம்மாஸ் போடவே அவர் மனம் துடிக்கிறது. அவரை ஒரு வழிக்குக்கொண்டுவரும் செல்வராணி கடைசியாக ஆறரைமணிக்குப் பொழுது புலர்கையில் ஒருவாறு ’கம்மாஸ்’ இறக்க வைத்துவிடுகிறார்.

கந்தசாமியின் வீட்டை அரசு உத்தரவின் பேரில் இடிக்கப்போகிறோமென்று யாழ்ப்பாணம் ஆர்மிக்கொமாண்டர் சோமரத்தின புல்டோசருடன் வந்து நிற்கிறான். அது கந்தசாமியின் மனைவி செல்வராணி சீதனமாகக்கொண்டுவந்த காணியாகையால் அதன்மீது கனடியப்பிரஜையாகிவிட்ட அவருக்கு எதுவித பாத்தியதையும் கிடையாதாம், அது   இலங்கை அரசுக்கே உரிமையானது என்று சொல்லும் சோமரத்தினவுடன் விவாதத்தில் இறங்குகிறார் கந்தசாமி.

ஒருவேளை மாமன்காரக்கள்ளன் நமசிவாயம் சீதனக்காணியை எழுதாமல் சுற்றிவிட்டானோவென்ற   சந்தேகம் ஒரு நிமிஷம் கந்தசாமிக்கு வந்துபோனாலும் அதைவெளியே காட்டிக்கொள்ளாமல் “கட்டாயம் இந்த அநீதிக்குப்  பதிலாக தமிழர் தேசியக்கூட்டமைப்பைக்கூட்டி ஆர்ப்பாட்டம் செய்யாமல்விடமாட்டேன்” என்றுஞ் சூளுரைக்கிறார்.

சோமரத்தினவின் தலைமையில்வந்த இராணுவத்தினரோ இவரின் சண்டப்பிரசண்டங்களுக்கும் வெருட்டல்களுக்கும் கிறுங்குவதாயில்லை. வீட்டை இடிக்கத்தயாராகிறார்கள். புல்டோசருக்குக் குறுக்காக விழுந்து படுத்து அவங்களுடன் அல்லாடிக்கொண்டிருக்கும் கந்தசாமியின் வீட்டுக்கு நேரங்காலந்தெரியாமல் அவரது நண்பர் சுமந்திரன் கோட்சூட் அணிந்து மிதியுந்தில் வந்திறங்குகிறார்.  சுமந்திரன் வந்துதொலைத்தாலும் பரவாயில்லை, கந்தசாமியின் கொடுக்கிற்பிடித்துக்கொண்டு “ஆமிக்காரன் சும்மா வெருட்டுறான் ஆனால் வீட்டை இடிக்கமாட்டான்……. வா நாங்கள்  கள்ளுக்குடிக்கபோவம்” என்று அவரை  இழுத்தபடி நிற்கிறார்.

சுமந்திரனின் இந்த  லூஸுத்தனமான நடத்தைக்குக் காரணம் பெம்மானுக்கு நாட்டுநிலவரங்கள் புரியாது, அதோடு அவர் ஒரு வேற்றுலோகத்துப்பிறவி என்றுஞ்சொல்லப்படுகிறது. எடுப்பு சுவாரசியமாக இருக்கிறது. கந்தசாமியும் நாமும் நினைப்பதைப்போல சுமந்திரன் ஒன்றும் லூஸு கிடையாது, அவர் காரியப்பித்தன். நெபுலா கலெக்சியில் 27 அறிவுடைய மனிதர்கள் வாழ்ந்த சபரி எனும் குக்கிரகத்தைச் சேர்ந்த சுமந்திரனுக்கு மட்டும் இன்னும் சில விநாடிகளில் இந்த பூமிமுழுவதும் அழிந்து பஸ்பமாகப்போகும் ரகசியம் தெரிந்திருக்கிறது. ராஜதந்திரியான சுமந்திரன் கடைசியாக தர்க்கத்துக்கு முரணான ஒப்பந்தம் ஒன்றைத் சோமரத்தினாவுடன் செய்துகொண்டு அவனையே புல்டோசருக்கு முன்னால் படுக்கச்செய்துவிட்டு கந்தசாமியைக்    கள்ளுக்கொட்டிலுக்குத்   தள்ளிச்செல்கிறார்.

சபரிக்கிரகவாசியான சுமந்திரன் சபரிக்கிரகம் அழியமுதலே விண்வெளிக்கலமொன்றில் தொற்றி ஏறிக்கொண்டு பல கிரகங்களுக்கும் சென்று அகதிநிலைத்தஞ்சம்கேட்டு விண்ணப்பித்து அவை எல்லாம் நிராகரிக்கப்பட யாருக்கும் தெரியாமல் பூமிக்கு வந்து ஒளிந்திருக்கும் ஒரு பிரஜையாவாரெனவும், பிறிதோரிடத்தில் தற்சமயம் அவரது 84வது பிறப்பாக கொழும்பில் யோகராஜா – பூமகள் தம்பதியினருக்கு   இரண்டாவது மகனாக அவதரித்திருக்கிறார் என்றுஞ்சொல்லப்படுகிறது.

தாடியும் குங்குமப்பொட்டுமாக ஒரு பாத்திரம்வரும்,  அவரும் நாம் நினைக்கும் அவரல்லவாம்,  சுமந்திரனும் சுமந்திரனல்லவாம். ஆசிரியர் இதில்வரும் பாத்திரங்கள் ஏதும் சட்டரீதியான அலுப்புகளைத் தந்துவிடுவார்களோவெனும் எச்சரிக்கையுணர்வாற்போலும் புதினத்தில் வரும் ஊர்களோ பெயர்களோ சம்பவங்களோ உங்களுக்கு வேறுசம்பவங்களை ஞாபகப்படுத்தினால் கதிர்காமக்கந்தன் அறிய அதற்குநான் பொறுப்பல்ல என்று ஆணையுமிட்டுவிடுகிறார்.

தென்னந்தும்பில் திரிக்கப்பட்ட கயிறுகளை நுணுகி நோக்கினால்   அதில்   சில தும்புகள் நெடிய திரிகளினோட்டத்துடன் இழையாமல் அங்கங்கே வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். அதேபோல் இப்புதினத்தின் ஓட்டத்துடன் இணையாது சில சில்லறைச்சம்பவங்கள் குறுக்கேகுறுக்கே அங்கங்கே நீட்டிக்கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக  சாந்தரூபன் என்பவன் ஜெசிந்தா எனும்  ‘பெண் விவகார’த்தில் கடுஞ்சினங்கொண்டு, தர்மேந்திரா எனும் பொலீஸ்காரனைப் போட்டுத்தள்ளிவிட்டு மன்னாருக்குத் தப்பியோடுகிறான். அங்கே அவன்  வெள்ளைவான் ஒன்றினால் கடத்தப்படுகின்றான். அவன் கடத்தி வைக்கப்பட்ட இடத்தில் அவனை அல்போன்ஸ் என்பவன் இவனைப் பார்த்து “  உன் பெயரென்ன ” எனக்கேட்கவும் “ என்னடா சாந்தா என்னை மறந்திட்டியா……….நான்தான் தர்மேந்திரா” என்று சொல்வதாய் வருகிறது. அதாவது யார் யாராகவேண்டுமானாலும் மாறலாம் என்பதன் குறியீடாக இருக்கலாம் அது. மறுதலையாக தர்மேந்திரா கொல்லப்படவில்லையெனில் சாந்தரூபன் கொலையாளியல்லவெனவும் நிறுவப்படலாம்.  நாவலின் ஓட்டத்தில் இந்நிகழ்வுகளுக்குப் பங்கிருப்பதாகத் தெரியவில்லை.

அனைத்துப் பாத்திரங்களுக்கிடையேயான உரையாடல்கள் அங்கதச்சுவையுடனும்   புதிருடனும்   நகர்கின்றன. புதினத்தின் ஆரம்பப்பகுதி எம் சமூகத்தின் சமகாலத்தைய எண்ணிறந்த பிரச்சனைகளில் அரசு தனியார் காணிகளைச் சுவீகாரம் செய்வதை மட்டும்  பேசுகிறது,  ஓரிடத்தில் மட்டும் வெள்ளைவான் கடத்தல் பற்றியும் வருகிறது.

00000000000000000000

புதினத்தின் முன்பாதியில் எம் சமூகத்தின் நிலமை எள்ளலுடன் விபரிக்கப்படுகிறது.  பின்பாதி அறிவியலுடனும் அதன் சாத்திய அசாத்தியங்களுடனும் நகர்ந்து  அது பிரபஞ்சம், பிளாக் மாட்டர்/கரும்பொருள் , பிரபஞ்சம் கடந்து பயணஞ்செய்யவல்ல விண்ணூர்திகளுடனும் விரிவுகொள்கிறது.  பிரபஞ்ச அறிவியலை  வாசகனுக்கு அப்பப்போ விரித்துரைக்க பிரகராதி எனும் தகவல்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படும் (update)   அரும்பொருட்களஞ்சியமும்   சமாந்தரமாகக் கூட வருகிறது.

அப்பிரகராதி ஒரு இடத்தில்  ‘தண்ணி’ (மது) என்றால் என்னவென்பதற்குப் பின்வரும் விளக்கத்தைக்கொடுக்கிறது:  ‘தண்ணி பெரும்பாலும் உலோகங்களால் செய்யப்படும்.’    வேதியியல் அறிவின்படி ‘தண்ணி’ தயாரிக்கப்படும் படிமுறையில் உலோகம் ஒரு ஊக்கியாக நொதித்தலில் செயற்படலாமேயன்றி அசேதனப்பொருளான (உலோக) தனிமங்களால்  ‘தண்ணி’ உருவாக்கப்படமுடியாது. X என்பவர் Y ஆகவும், பின்னர் அதே Y யானவர் Z ஆகவும் மாற்றப்படக்கூடிய கற்பனாவுலகில் இதையும் சாத்தியமெனக்கொள்ள வேண்டியதுதான்.

அறிவியல் உலகில் தர்க்கரீதியாகச் சாத்தியமாகக்கூடிய பல சாங்கியங்கள் நடைமுறையில் சாத்தியமாகா. எடுத்துக்காட்டாக கொங்கோட் விமானங்கள், மிக்- 1. மிக் -2 மூலம் ஒலியின் வேகத்திலும் அதன் இரட்டிப்பு வேகத்திலும் பறந்தோம். தர்க்கரீதியில் அவ்வாறே  ஒலியின் 10 மடங்கு வேகத்தில் பறக்கமுடியும், ஆனால் 10 மடங்கு ஒலியின் வேகத்தில் பறப்பதற்கான ஜெட்டை வடிவமைக்க புவியில் இப்போது கிடைக்கும் எந்த உலோகமும்  ‘தளிசை’யைப்போல் பிரிந்து உதிர்ந்து பின்பொடியாகிவிடுமாம், ஸ்திரமாக இருக்காதாம். ஒலியின் வேகத்தின் சில மடங்கு வேகத்தில் பறப்பதற்கான  ஒரு விமானத்தை வடிவமைப்பதே அசாத்தியமாகவுள்ளது. இன்னும் தீர்வுகாணப்படாத ஒரு சிக்கல் அது. குறோமியம், டைட்டேனியம் போன்ற வைரமான உலோகங்களே உதிர்ந்துபோகுமெனில் அத்தகைய வேகத்தை எட்டுகையில் ஏற்படவல்ல பரிவதிர்வுகளில் மானிடனின் மூளை முதலில் திரவமாகிவிடுமென்றால் இன்னும் அவன் உள்ளக உறுப்புகள் என்னவாகுமோ? இன்னும் ஒலியின் வேகத்துக்கே இப்படி என்றால்……. ஒளியின் வேகத்தில் பயணிப்பதற்கு மானிடன் தாண்டவேண்டிய  தடைகளையும்  நாம் கற்பனைபண்ணலாம்.

இப்புதினத்தின் பிற்பகுதியில்  காலத்தோடு முன்னும் பின்னுமான பயணங்கள் போன்ற பல சாங்கியங்கள் சாத்தியமாகின்றன. கணினிகள் ஒன்றையொன்று செம்மைப்படுத்துவது, கோள்களை உண்டுபண்ணுவதுமாக வேடிக்கையானதும் தர்க்கத்தைமீறிய விஷயங்கள் நிறைய இடம்பெறுகின்றன.

புவி அழிந்து பஸ்பமானபின் எப்படியோ மிகிந்தர்களின் விண்கப்பலுக்குள் சுமிந்திரனும் கந்தசாமியும் ஏறிக்கொண்டுவிடுகிறார்கள் அல்லது மாட்டிக்கொண்டு விடுகிறார்கள். இவ்வாறு மாட்டிக்கொண்டபின்னாலும் அவர்கள் மிஹிந்தர்களின் கப்பலுக்குள் உயிர்தரிக்கமுடிகிறதெனில் அங்கே பூவுலோகவாசிகளுக்கான அகச்சூழல் (உயிர் வாழ ஒட்சிசன் இட்லி தோசையையும்) அதற்குள் இருந்தால்தான் சாத்தியம்.  இதே மானிட சௌகரியங்கள் காலக்கப்பலுக்குள்ளும் தேவை என்பது மனக்கொள வேண்டியது.

இந்த மிகிந்தர்கள் யார், அவர்களின் மிகின்காற்றில் (மிகிந்தர்களின் விண்கலத்தின் பெயர்) உயிர்வாழும் அவர்களின் சமையற்காரர்களான குக்குகள் மிகிந்தர்களுக்குத் தெரியாமல் கந்தசாமியையும் சுமந்திரனையும் (அவர்களை எரிச்சலூட்டுவதற்காகவாம்) அங்கே ஒளித்துவைத்திருக்கிறார்கள். அவர்களும் புவியுலகத்திலிருந்து பிறகோளுக்கு குடியேறியவர்களா அல்லது நிரந்தரமான பிறகோள்வாசிகளா அல்லது ஹைபிறிட் கார்களைப்போல இருசூழலிலும் சக்திபெற்று வாழக்கூடிய பிரகிருதிகளா, என்பதை விரித்துரைக்க ஆசிரியன் வினைக்கெடவில்லை. எங்கள் கற்பனைக்கெட்டியவாறு ஒரு பதிலைக்கற்பிதம் செய்து வைத்துக்கொண்டு  மேலே போகவேண்டியதுதான்.

எப்படியோ (பக் 79) பூமி அகதிகள் இருவர் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மிகின் காற்றுக்குள் நுழைந்துவிட்டதை மோப்பம் பிடித்துக்கொண்ட மிகின்காற்று, அவர்களுக்கு உயிர்வாழ அனுமதியில்லை எனவும், உடனே அவர்கள் சரணடைந்துவிடவேண்டுமென மிகிந்தர்களின் வானொலியோ / மிகின் காற்றின் தொலைபாடல்கருவி விரட்டுகிறது.

சுமந்திரனும் கந்தசாமியும் எப்படி மிகிந்தவின் கப்பலுக்குள்/மிகின்காற்றுக்குள் எப்படிச் சேதாரங்களின்றி மாறினார்கள்? அந்தப்பொறிமுறைதான் என்னவென்றும்  விபரிக்கப்படவில்லை.

சுமந்திரனும் கந்தசாமியும் தப்பி ஒளிந்துகொண்டிருக்கும் மிகிந்தர்களின் கப்பல், நேரத்துக்கு முன்னே செல்லும் காலக்கப்பல் இங்கெல்லாம் புவிமாந்தர்கள் வாழவேண்டிய சூழல் இருந்திருக்கவேண்டும். காலத்துக்குப் பின் நோக்கிப்பயணித்தால் ஒக்ஸிஜன் இருக்காது. புவியில்கூட பச்சைமரங்கள் வந்தபின்தான் உயிர்வளியான ஒக்ஸிஜன் வந்ததென்பது அறிவியல். தர்க்கரீதியாக இதற்கான விளக்கங்கள் புதினத்தில்    இல்லை ,   இருண்மைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்படவிருக்கும் பிரபஞ்சநெடுஞ்சாலைத்திட்டத்துக்கு பூமிப்பந்து இடையூறாக இருப்பதால் அதை அழித்தொழிக்கும்பணி மிகிந்தர்களிடம் விடப்பட்டுள்ளதாம். அப்படி அவர்களை ஏவிய சக்திகள் எதுவென்பதும் மர்மம். அவர்களுக்கிடப்பட்ட ஆணையின்படி இன்னொரு கிரகத்தில் வாழும் மிகிந்தர்கள் எனும் ஹிங்கிரர்கள் தமது சுற்றுக்கு இடைஞ்சலாக இருக்கும் புவிக்கோளத்தை உடைக்கிறார்கள் என்பது காரண-காரிய அறிவை விஞ்சிய ஆசிரியரின் கற்பனையே ஆயினும் அறிவியல்கோட்பாடுகளின்படியும் தர்க்கத்தை மீறியும் ஜீரணிக்கமுடியாதபடியும்  பெரும்  இடைஞ்சல்  செய்கிறது.

பின்நவீனத்துள் படைப்பாளி ஆத்திகமோ நாத்திகமோ  எந்தவொரு நம்பிக்கையையும் தன் படைப்புக்களுள் வைக்கப்படாதென்று சொல்லப்படுகின்றது. ஜே.கேயோ 84வது பிறப்பு பற்றிப்பேசுகிறார், கதிர்காமக்கந்தன்மேல் ஆணையிடுகின்றார். புத்தனும், யேசுவும், சிவனும் கடவுள்களாக வந்துபோகிறார்கள், எப்படியோ அல்லா, மாயன், கிரேக்க, எகிப்திய, யூத  இன்னுமுள கடவுளர்கள்   ஜே.கேயிடமிருந்து    தப்பிவிடுகிறார்கள்.

புத்தனும், யேசுவும், சிவனும் கடவுள்கள் என்று சொல்லப்படுகையில் வாசகன் நெளியாமலிருக்கமுடியாது. யேசு கர்த்தரின் குமாரன் அல்லது தூதன் என்று கூறப்பட்டவர். புத்தன் கடவுளை மறுத்தலித்தவர்,  தன்னைக்கடவுள் என்றும் கூறிக்கொண்டவருமல்லர். இன்னும் பிரபஞ்சமும் அதன்கண்ணுள்ள பருப்பொருள்களும் அநாதியானவை  எவராலும் படைக்கப்பட்டவையல்ல என்பது  பௌத்தம். அங்கதச்சுவைக்காகவேயெனினும்  பிரபஞ்சத்தில் பௌதீக பருப்பொருளினாலான கோள்கள் நீங்கலாக மற்றனைத்துமே கரும்பொருளால் ஆனவை என்கிறது நவீன அறிவியல். சுமந்திரனும் கரும்பொருளாலானவர், பூமியும் ஒருகணினிதான், இங்குள்ள கரும்பொருளாலான எலிகளெல்லாம் ஒருவகைக்கணினிகளே, அவை எம்மைப்புலனாய்வு செய்துகொண்டிருக்கின்றன போன்ற கற்பனைகளை ஆசிரியர் வைக்கும்போது விக்கிரமாதித்தனின் சித்துவிளையாட்டுக்கள், ஹரிபொட்டரின் சாகசங்களெல்லாம் நினைவுக்கு  வருகின்றன. அத்தியாயத்துக்கு அத்தியாயம் ஜே.கே சிரிப்பதற்கு விஷயங்களை அடுக்கிவைத்துள்ளார். கற்பனைகளைக் கட்டற்று விதைக்க ஆசிரியனுக்கு உரிமையுண்டேயெனினும் எமக்குள் முகைக்கும் அங்கதத்தைத்தான் வகைபிரிக்கமுடியாமலுள்ளது.

ஒரு பழைய ஜோக்.  ஒருவர் சொல்வார்: ”எமது ஊரில் ஒரு அற்புதமான கணினி இருக்கு, அரிசி, மீன், காய்கறி வெஞ்சனங்களை அதனுள்ளே செலுத்திவிட்டால் போதும் 10 நிமிஷத்தில் சமைத்துவிட்டுத் தானாகவே பிளேட்டுகளில் போட்டுத் தந்துவிடும்.”

மற்றவர் சொல்வார்: ”இதென்ன விந்தை. எங்களூரில் ஒரு கணினி இருக்கு. நீங்கள் சமைத்த பன்றிக்கறியையோ, ஆட்டுக்கறியையோ உள்ளே செலுத்திவிட்டால் சரி,  அடுத்தவிநாடி அந்த விலங்கு மீண்டும்  அதற்குள்ளிருந்து வெளியே   குதித்துவிடும்.”

’உயிர்’ என்றொரு விஷயம் அறிவியலின் தேடல்களுக்குள் இன்னும் என்னவென்று பிடிபடாமலே உள்ளது.  உயிர்போய்விட்டதென்று சொல்லப்படும் ஒரு உடலிக்குள் மீண்டும் உயிரைப்புகுத்தி அதை முன்னர்போல் இயங்கவைத்தல் அசாத்தியம்.

ஒரு கணினியிலுள்ள கோப்புக்கள், பதிவுகள் அழிந்தோ சிதைந்தோபோனால் Ghost போன்ற மென்பொருள்கள்மூலம்  அவற்றை முந்திய ஒரு திகதியில் இருந்ததைப்போல் மாற்றியமைப்பதன் மூலம் (backups) மீட்டெடுப்போமல்லவா, அதைப்போலும் கரும்பொருளின் கணினிகள் செயலிகள் அழிக்கப்படும்  எம் பூமியையும் அதன் சகல உயிர்வாழ்வனவற்றையும், பழைய அதன் இயற்கையையும், சூழலையும் மீட்கின்றன’ எனும்  உச்சஅங்கதத்தோடு புதினம் நிறைவுக்கு வருகிறது.

ஒரு புதினத்தின் அறுவடை   ‘அங்கதம்’ மட்டுந்தானா?  இது ஒரு நாவலாகையால் அதற்குரிய வெளியையும் சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொண்டு சமகாலப்பிரச்சனைகளை  இன்னும் ஆழமாக அலசிச்சென்றிருக்கலாம்.

இவ்வுலகமும் மனிதர்கள் ஜீவராசிகள் எல்லாமுமே கணினிகள் என்று விபரிக்கப்படும்போது மனுஷயபுத்திரனின் ஒரு கவிதை ஞாபகத்துக்கு வந்தது. ‘நெடுங்காலமாகத் தலையை அழுத்திக்கொண்டிருந்த  பாரமொன்று திடீரென இறங்கிவிடும்போது ’அடுத்து என்ன செய்வது’ என்று தெரியாமலிருக்கிறது’ என்பார் அதில். புதினம் முன்நிறுத்தும் சிக்கல்கள் மர்மங்கள் விடுபடுகையில் நாமும் அப்படியொரு உணர்வுக்காட்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

பொ.கருணாகரமூர்த்தி-ஜெர்மனி   

பொ கருணாகரமூர்த்தி

 

(Visited 91 times, 1 visits today)