காரை பெயர்ந்த முகங்கள்-சினிமா தொடர்-பாகம் 02-விஜய ராவணன்

விஜய ராவணன்பசிக்காகத் தின்னும் ருசியற்ற உணவாய் நாட்களை வெறுமையோடு கடந்துகடந்து, வாழ்வின் மீது ஏற்படும் சலிப்பும் வெறுப்பும் விழுங்க முடியாத வெறுப்புருண்டையாய் தொண்டைக்குழியிலேயே தங்கி விடுகிறது. அந்த வெறுப்பின் எதிர்வினையாய் கட்டுப்பாடின்றி வெளிவரும் வார்த்தைகளுக்கும் நடத்தைகளுக்கும் யார் மீதோ ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டி பரிசுத்தமாய் நாம் விடுபட்டுக் கொள்ளவே விழைகிறோம். இங்கு எல்லோருமே ஏதோவொரு விதத்தில் அப்படியான வண்ணமற்ற சமூகத்தின் காரை பெயர்ந்த முகங்கள் தான்.

An Elephant sitting still மற்றும் The wild Pear tree என்ற இரு திரைப்படங்களும் அப்படியான முகங்களின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் நுண்ணுணர்வுகளை, அலையோசையும் அமைதியுமாய் இருவேறு விதத்தில் நுட்பமாக சித்திரப்படுத்துகின்றன.

An Elephant sitting still (Chinese,2018)

“மன்சௌலியில் ஒரு யானை நகராம உட்கார்ந்துட்டே இருக்காம்… கேள்விப்பட்ருக்கியா?”

இப்படித்தான் தொடங்குகிறது “An Elephant sitting still” என்ற உன்னதமான படைப்பு…

எல்லோருக்கும் யானையைப் பிடித்திருக்க வயதைக் கடந்து ஏதோவொரு காரணம் இருக்கத் தான் செய்கின்றது. அப்படிப்பட்ட யானை யார் என்ன செய்தாலும் அசையவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தும், சாப்பிடக் கொடுத்தும், பரிகசித்தும், முள்கரண்டியால் குத்தியும் கூட, முடியா இரவைப் போல் அந்தக் கரிய உருவம் அசையாமல் அமர்ந்தே இருக்கிறது. அத்தனைப் பெரிய உருவத்தில் சின்னதொரு சலனமும் இல்லை. மண்ணுலகின் பேருடல் தன் ஒட்டுமொத்த மிடுக்கையும் வலிமையையும் உதறிவிட்டு தனிமையின் பெருமூச்சோடு மௌனமாய் அமர்ந்திருக்கிறது. என்ன காரணம்? யார் மீது கோபம்? உலகின் மீது வெறுப்பா? வாழ்ந்து சலித்த களைப்பா? இல்லை நம் புரிதலுக்கும் மேலான யோக நிலையா?

யானையின் அமைதிக்கான கேள்விகளோடு படம் தொடங்குகிறது. ஒன்றோடொன்று பின்னப்பட்ட ஒரே நாளுக்குள் நடந்து முடியும் நான்கு கதைகள். நெருங்கிய நண்பனின் மனைவியோடு கள்ளஉறவில் ஈடுபட்டு மாட்டிக்கொள்ளும் உள்ளூர் தாதா யு செங் (Yu Cheng), அந்த தாதாவின் தம்பி என்று தெரிந்தும் தன் வகுப்புத் தோழனுக்காக அவனை எதிர்க்கும் மேல்நிலைப்பள்ளி மாணவன் வெ பு (Wei Bu), பேத்தியின் படிப்பைக் காரணம் காட்டி மகனால் முதியோர் இல்லத்துக்கு தள்ளப்படயிருக்கும் வாங் ஜின் (Wang Jin), கழிப்பறை ஒழுகும் வீட்டில் குடியிருக்கும் தன் நிலையின் மீதும் அதை பொருட்படுத்தாத அம்மாவின் மீதும் வெறுப்பு உமிழும் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹுவாங் லிங் (Huang Ling).

நான்கு கதைகளும் ஆர்ப்பாட்டம் இல்லாத திருப்பங்களோடும், அளவெடுத்துத் தைத்த மௌனத்தோடு கூடிய சிக்கன உரையாடல்களோடும் சாம்பல் மேவிய கருப்பு வெள்ளை பின்புலத்தில், ஒரே புள்ளியை நோக்கி நகர்கின்றன… மன்சௌலியில் அசையாமல் அமர்ந்திருக்கும் யானை!

“நீ எதுக்குத் தான் லாயக்கு. உன்னால எதாவது உபயோகம் இருக்கா…?”, நித்தம் எதிர்க்கொள்ளும் அப்பாவின் வசவுகளோடு, அடுக்குமாடிக் குடியிருப்பின் இருள் சூழ்ந்த படிக்கட்டுகளில் இறங்கி வரும் வெ பு (Wei Bu), சுவற்றில் எச்சிலைத் தடவி அதில் தீக்குச்சி ஒன்றைக் கொளுத்தி மேலே வீசுகிறான். அந்தத் தீச்குச்சியின் சில நிமிட வெளிச்சத்தில் தெரியும் இருண்ட மேற்கூரையில், எரிந்து கருகிய முந்தைய தீக்குச்சிகள் வெளவால் கூட்டத்தைப் போல் காரை பெயர்ந்தக் கூரையில் ஒட்டிக் கிடக்கின்றன.

இது தான் அவர்களின் வாழ்க்கை. அழுதுவடியும் வாழ்க்கையில் சிலாகிக்க என்ன இருக்கிறது? ஆயுதம் துறந்து சிரம் தாழ்ந்து எதிரியிடம் சரணடைந்த போர்வீரனின் மனநிலை. எல்லோரது முகங்களிலும் தனிமை நிழலாடுகிறது. தகுதியற்ற கூட்டத்தால் ஓரங்கட்டப்பட்ட தனிமை அது. தன்னை விரட்டும் பொய்யான சமூகம் மீதும், ஏன் தன் மீதும், தன் இயலாமையின் மீதும் இனம்புரியாத வெறுப்பு. அதை வெளிக்காட்டாத அமைதி, யானையின் சிறு கண்களைப் போல.

அந்த வெறுப்பின் வடுக்கள் தான், தினமும் அவன் மேற்கூரையில் கொளுத்திப் போடும் தீக்குச்சிகள். இங்கு வெளிச்சம் கூட தீக்குச்சியளவு சின்னதுதான். அந்தச் சிறு வெளிச்சமும் நொடிப் பொழுதுகளில் வடிந்து விடுறது.

நகரத்தின் நடுவே இயங்கும் தொழிற்சாலை, அதையொட்டிய பெரிய குப்பைக் கிடங்கு, வெறிபிடித்த நாய், அதன் பொருட்டு சண்டை போடும் மனிதர்கள், மூடப்படவிருக்கும் பள்ளிக்கூடம், வாழ வசதியற்ற நாற்றம் அடிக்கும் அடுக்குமாடி வீடுகள் என மனித எச்சங்கள் எங்கும் சகதிக்கூடாய் மண்டிக் கிடக்கும் சமூகத்தில் யாருக்கு யார் உன்னதமானவர்?

“ஒருவேளை நீ என்னைக் காதலித்திருந்தால் நான் அவளைத் தேடிப் போயிருக்க மாட்டேன். என் நண்பனும் தற்கொலை செய்திருக்க மாட்டான். நீ தான் அவன் சாவுக்குக் காரணம்.” என்று யு செங் (Yu Cheng), தன் குற்றத்தின் பாரத்தை தான் ஒருதலையாய் காதலிக்கும் பெண்ணின்மீது இறக்கிவைக்க நினைப்பது தான் முதுகெலும்பற்ற மனித மனதின் நிதர்சனம். இங்கு யாரும் தான் செய்யும் தவறின் பாவச்சிலுவையைச் சுமக்கத் தயாராயில்லை.

கதாபாத்திரங்களுக்கு வாய்விட்டுப் புலம்பவும் கதறி அழவும் கூக்குரல் இடவும் காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் சப்தம் போட்டுக் கத்துவதாலும் அழுவதாலும் மட்டும் வாழ்க்கையில் பெரிதாய் என்ன மாற்றம் நடந்துவிடப் போகிறது? மூன்று மணிநேரம் ஐம்பது நிமிடங்கள் நீளும் படத்தில் யாரும் தங்களுக்குள் நீண்ட நேரம் பேசிக் கொள்ளவில்லை. வாழ்வை நொந்து கொள்ளவில்லை. முதுமையும் அவமானவும் குற்ற உணர்வும் மரணமும் வெறுமையும் துரத்த, ஓடுகிறார்கள்… ஓடித் தளர்ந்த கால்கள் மன்சௌலியில் யானையை வேடிக்கைப் பார்த்தபடி சிறிது நேரம் இளைப்பாற நினைக்கின்றன. ஒருவேளை அந்த யானையின் அமைதி, அவர்களது ஓட்டத்தைக் கூட நிறுத்திவிடலாம்.

ஆனால் காமிராவின் கண்களில் அந்த யானை கடைசிவரை அகப்படவில்லை. ஒருவேளை அதை காட்சிப்படுத்தியிருந்தாலும், ‘யாருக்கும் எதுக்கும் எந்த எதிர்வினையும் காட்டாத வெறும் யானையாய்’ மட்டும் கடந்து போயிருக்கும். ஆனால் அதன் காரணம் விளங்கா பெருத்த மௌனத்தில் தஞ்சம் கொள்ளத் துடிக்கும் நம் மனது, மன்சௌலியின் அசையாத யானையை இன்னமும் தேடிக் கொண்டிருக்காது…

யானையின் மணியோசை தரும் குதூகலமும் எதிர்ப்பார்ப்பும் திரையில் காட்டப்படாத யானையால் மட்டுமே தரமுடியும். படத்தின் முடிவில் இருண்ட மலைமுகடுகளில் எதிரொலிக்கும் முகம்காட்டா யானையின் பிளிறல் உலகத்து தனிமையின் ஒட்டுமொத்தக் குரலாய்க் ஒலிக்கிறது…

‘ஹு போ’ (Hu Bo)  என்ற இருபத்து ஒன்பது வயது இளைஞனின் முதல் முழுநீளத் திரைப்படம்! இது தான் அவரது கடைசி படமும் கூட!

இந்த படத்தை இயக்கியப் பிற்பாடு தற்கொலை செய்து கொண்டார். உலகம் முழுவதுக்குமானத் தனிமையை தன்னுள் உள்வாங்கிக் கொண்டதாலா?… அல்லது இந்தப் படைப்புக்கு மேல் உலகிற்குக் கொடுக்க தன்னிடம் மேலான வேறொன்றில்லை என்று நினைத்து விட்டாரா?

ஒருவேளை, மன்சௌலியில் உலகை உற்றுப் பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருக்கும் யானையின் உருவில் ‘ஹு போ’ நமக்காக காத்திருக்கலாம்… கலையாத ஆழ்ந்த மௌனத்தில்…

The wild Pear tree (Turkish,2018)

மனம் மௌனமாய்ப் பேசும் ஒரு ஊமை விலங்கு. மாட்டைப் போல் தனிமையில் எதையாவது எப்போதும் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அனுபங்களை… உறவுகளை… பிறந்தஊரை… கனவுகளை….புறச்சூழலை… கிடைத்த ஏதோவொன்றை சவைத்துக்கொண்டிருக்கும். எதுவும் கிடைக்காவிட்டால் தன் தனிமையையே மெல்ல அசைபோடும். தன்னைப் பற்றிய உன்னதமான எண்ணத்தோடு சகமனிதர்களைத் தன் தராசில் இடுக்கி நடுவில் இல்லாத முள்ளை நோக்கும். இருப்புக்கு மீறிய உலகை உள்ளங்கையில் எடைபோட்டுப் பார்க்கும். அந்த அவதானிப்புகளை சொற்களாய் உருமாற்றி ஆழ்மனதில் சேர்த்துவைத்துக் காத்திருக்கும், என்றாவது ஒருநாள்… ஒரு உரையாடலுக்காக…

“The wild Pear tree” நிறைவான உரையாடல்களாலும் அழகிய காட்சிகளாலும் பின்னப்பட்டது. நிறைவு என்பதை அவ்வுரையாடல்கள் தொடும் கரைகளும் அதன் ஆழத்தில் புதைந்திருக்கும் மௌனமும் அதன் புறச்சூழலுமே முடிவு செய்கின்றன.

லேசாய் அசையும் காற்றின் தும்பியைப் பிடித்து மெல்ல உதிரும் மஞ்சள் இலைகளின் நுனியில் துளிரும் பொன்ஒளியின் பின்னணியில், சருகுகள் உதிரும் மரத்தில் சாய்ந்தபடி, தங்கப்புதையலின் அடியில் உறையும் தேளைப் பற்றி ஒரு பெண் பேசும்போதும் அப்பேச்சும் காட்சியும் உன்னதமாகிறது.

இரவின் அமைதியை அலுத்துக்கொண்டு விடியலை எதிர்நோக்கியபடி படுக்கையில் புரள்வதும், மீண்டும் பகல்பொழுதின் ஓட்டத்தில் அயர்ந்து தேய்ந்தப்பின் இரவின் அமைதியை நாடுவதும் நம் அன்றாடம்தான். அப்படியானதொரு இயல்பான எண்ணவோட்டம் தான் Sinan னுக்கும்…

கல்லூரியில் படிக்கும்போது சொந்த ஊரின் நினைவுகளின் உந்துதலில், அழகான கரடுமுரடான தன் கிராமத்து நிலப்பரப்பை ஒரு பேரிக்காய் மரத்தினூடாய் “The wild pear tree” என்ற நாவலாய் எழுதுகிறான்.

ஆனால் ஊருக்கு வந்ததும் இந்தக் கிராமத்தில் பெரிதாய் ஒன்றும் செய்வதற்கில்லை என்று அலுத்துக்கொள்கிறான். குண்டை வீசினாலும் தகும் என்று தோன்றுகிறது. அப்படியான அலுப்பு மேலிடும்போது பிறரைப் பற்றிய முந்தைய உள்மதிப்பீடுகள் முரண்படுகின்றன.

ஆடுகள் மீதும் தோட்டத்துக் காவல்நாய் மீதும் நாட்டம் கொண்ட அப்பா Idris செயல்களும் தாத்தா சொல்லியும் விடாது கிணறு வெட்டும் அவரது முரட்டு நம்பிக்கையும் அபத்தமாய்த் தோன்றுகிறது. கல்லூரி முடித்து வேலை தேடும் இளைஞனின் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இளம் எழுத்தாளன் கோபம் கொள்கிறான். எதுவும் செய்ய விழையாத போதும் தன்னைத் தவிர்த்து மற்றவை எல்லாம் அபத்தமாய்த் தெரிகிறது.

இது ஒரு இளைஞனின் தனிப்பட்ட மனப்போக்கு மட்டுமல்ல நாம் நம்மையறியாமலேயே பிறரைப் பற்றி உருவாக்கும் பிம்பத்தின் பிரதிபலிப்பு. ஒருவருக்கொருவர் ஏதோவொரு புள்ளியில் வேறுபடுவதும் பின் மற்றொரு புள்ளியில் ஒன்றிணைவதுமாகிய தொடர் சங்கிலிப்  பிணைப்பு. கடவுளுக்கும் மனிதனுமாக்குமான இணக்கமும் பிரிவும் கூட இதே புள்ளியில் தான் பிறக்கின்றன. கேள்விகளும் நம்பிக்கையுமாய்…

Idris பற்றிய கதைமாந்தர்களின் வேறுபட்ட அவதானிப்புகளோடும், Idris கதாபாத்திரத்தில் நக்கல் தொனிக்கும் சிரிப்போடு வலம்வரும் Murat Cemcir என்ற நடிகரின் அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்போடும், துருக்கி கிராமத்து அழகியல் நிரம்பி வழியும் காட்சிகளின் பின்புலத்தில் நேர்த்தியான உரையாடல்களோடும் கதை நகர்கிறது.

தங்கள் அன்றாட எண்ணவோட்டங்களை, ஏமாற்றங்களை, சந்தோஷத்தை, முரண்பாடுகளைத் தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்கிறார்கள்… தர்க்கம் செய்கிறார்கள்… அந்த உரையாடல்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தைக் கடந்து அரசியல் மதம் சமுதாயம் இலக்கியம் எனப்பல கிளைகள் விடுகிறது. ஆனால் முற்றுப் பெறுவதில்லை. ஏனெனில் எந்தவொரு உரையாடலும் உண்மையில் முடிவடைவதில்லை. அவை வேறொரு உருவாய் பரிணாமவளர்ச்சி அடைந்து தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன…

தெளிந்த நீரோட்டத்தில் திடீரென்று தோன்றி மறையும் நீர்ச்சுழலைப் போன்று சலனமற்று நகரும் காட்சிகளின் இடையிடையே மாயத்திரைகள் விழுந்து, நாம் உணரும்முன் விலகுகின்றன…

குறிப்பாக, மூங்கில் கூடையில் கண்மூடித் தூங்கும் குழந்தையின் முகத்தில் கூட்டமாய் ஊறும் சிவப்பு எறும்புகளும், சிதைந்த சிலையை ஆற்றில் தள்ளிவிட்டு ட்ராய் குதிரையில் Sinan பதுங்கிக்கொள்ளும் காட்சியும், படத்தின் இறுதியில் வரும் கற்கிணறு காட்சியும் ‘Nuri Bilge Ceylan’ என்ற தேர்ந்த கதைச்சொல்லியின் மந்திர உச்சாடனங்கள்.

“பழக்கப்பட்ட விஷயங்களையும் எல்லாருக்கும் தெரிந்த வரலாற்றுப் பெருமைகளை மட்டுமே திரும்பத்திரும்பச் சொல்வதில் என்ன இருக்கிறது? என்னுடயை நாவல் அப்படிப்பட்டது கிடையாது. அதைப்பற்றி இரண்டு வரிகளில் சுருக்கிச் சொல்வது கடினம்….” தன் நாவலைப்பற்றிச் Sinan யின் குரலில் ஒலித்தது கூட, தன் படைப்பைப்பற்றிய ‘Nuri Bilge Ceylan’ இயக்குனரின் நேரடி வார்த்தைகள்தான் போலும்.

விஜய ராவணன்-இந்தியா

விஜய ராவணன்

0000000000000000000000000000000000000000000000

சினிமா தொடர்பான புகைப்படங்கள் :

விஜய ராவணன் விஜய ராவணன் விஜய ராவணன்

(Visited 192 times, 1 visits today)
 

One thought on “காரை பெயர்ந்த முகங்கள்-சினிமா தொடர்-பாகம் 02-விஜய ராவணன்”

Comments are closed.