“கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது.’’- நேர்காணல்-ப சிங்காரம்- ந.முருகேசபாண்டியன்

ப சிங்காரம் பற்றிய சிறு குறிப்பு :

ப சிங்காரம்‘புயலிலே ஒரு தோணி,’ ‘கடலுக்கு அப்பால்’ ஆகிய இரு நாவல்கள் மூலம் தமிழ் நாவல் வரலாற்றில் முக்கியமான இடம் பெற்றுள்ள ப.சிங்காரம் அவர்களின் வாழ்க்கை பற்றிய பதிவுகள், அவரது படைப்புகளினூட பயணம் செய்ய உதவுமென்ற அடிப்படையில் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிங்கம்புணரி கிராமத்தில் நாடார் பேட்டையிலுள்ள 4 – 2 / 102 என்று இலக்கமுள்ள வீட்டில் வாழ்ந்துவந்த மூக்க நாடார் என்ற கு.பழநிவேல் நாடார் – உண்ணாமலை அம்மாள் ஆகியோரின் மூன்றாவது மகனாக ப.சிங்காரம் 12 – 08 – 1920 அன்று பிறந்தார். அவரது அண்ணன்கள் ப.சுப்பிரமணியம், ப.பாஸ்கரன். அவரது தாத்தா ப.குமாரசாமி நாடார் அவர்களுடன் சேர்ந்து தந்தையார் சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்துவந்தார்.

சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியிலும் மதுரை செயிண்ட்மேரிஸ் பள்ளியிலும் பயின்றார். பின்னர் 1938 ஆம் ஆண்டு சிங்கம்புணரியைச் சார்ந்த செ.கா.சின்னமுத்துப்பிள்ளை இந்தோனேஷியாவில் மைடான் என்ற இடத்தில் வைத்திருந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காக கப்பலேறினார். 1940 இல் இந்தியா வந்து மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கு மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியாற்றினார். வாலிப வயதில் ப.சிங்காரம் வெளிநாட்டுத் துணியிலான ஆடைகள் அணிந்து நறுமணம் கமழ மிடுக்குடன் காட்சியளிப்பாராம். இந்தோனேஷியாவில் வசிக்கும்போது திருமணம் செய்து கொண்டார். அங்கு தலைப்பிரசவத்தில் அவரது மனைவியும் பிறந்த ஆண்குழந்தையும் இறந்துவிட்டனர். அவரது மனைவியின் பெயர், ஊர் போன்ற தகவல்களை அறிய இயலவில்லை.

1946 இல் இந்தியாவிற்குத் திரும்பியவர் மதுரையிலே தங்கிவிட்டார். 1947 இல் ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்திப் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார். சொந்த ஊரான சிங்கம்புணரிக்கு மிக அபூர்வமாகவே சென்று வருவார். நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதையும் விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் கடைசிவரை தவிர்த்து வந்துள்ளார். மதுரை Y.M.C.A தங்குமில்லத்தில் ஐம்பது ஆண்டுகளாகத் தங்கியிருந்தார். உறவினர்களைவிட்டு அவர் ஒதுங்கி வாழந்தமைக்குத் தனிப்பட்ட காரணமோ முரண்பாடோ எதுவுமில்லை; அவராக ஒதுங்கி வாழ்ந்தார் என உறவினர்கள் கருதுகின்றனர். அவரது 25 வது வயதில் இளம் மனைவியும் குழந்தையும் இறந்து. வாழக்கைபற்றிய அவநம்பிக்கையையும் இறுக்கத்தையும் தோற்றுவித்திருக்க வாய்ப்புண்டு.

1950 இல் ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினார். ‘கலைமகள்’ நாவல் போட்டியில் முதல் பரிசு அந்நாவலுக்குக் கிடைத்தது. 1959 இல் கடலுக்கு அப்பால் நாவல் வெளியானது. ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் 1962 இல் எழுதினார். அது 1972 இல் கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அவரது நூல்களை வெளியிடுவதில் பெற்ற கசப்பான அனுபவங்கள் காரணமாகத் தொடர்ந்து எழுதவில்லை என் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு தினத்தந்தி பணியிலிருந்து தானாக விரும்பி ஓய்வு பெற்றார். 1997 ஆம் ஆண்டு Y.M.C.A நிர்வாகம் அவரை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியது. மதுரை, விளக்குத் தூண் அருகிலுள்ள நாடார் மேன்சன் தங்குமில்லத்தில் அறை எண் 12 இல் குடியேறினார்.

அவர் தனது வாழ்நாளில் ஈட்டிய சேமிப்பான் ரூபாய் ஏழு லட்சத்தைச் சமுதாயத்திற்குப் பயன்படும்வகையில் செலவழிக்கத் திட்டமிட்டு இராமகிருஷ்ணா அமைப்பு நடத்தும் சேவை மையங்கள், அனாதை இல்லங்கள் பற்றி விசாரித்தார். அவற்றுக்கு உதவுவது பற்றி யோசிக்கும் வேளையில் நண்பர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் மதுரை நாடார் மகாஜன சங்கம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் ‘உதவித்தொகை’ பற்றிக் கேள்விப்பட்டு, அது குறித்து அவரே நேரில் சென்று விசாரித்துத் தனது சேமிப்புத் தொகையை அந்நிறுவனத்திற்கு வழங்கினார். அவரது பெயரில் அறக்கட்டளை, அவரது புகைப்படம் திறப்பு போன்றன கூடாது என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

நாடார் மேன்சனில் வாழந்த மூன்று மாதங்களில் எல்லோருடனும் சுமூகமாகப் பழகியதுடன் யாருக்கும் தொல்லை தரக்கூடாது என வாழ்ந்தார் என மேன்சன் பணியாளர்கள் தெரிவித்தனர். அவரது சொந்த வாழ்க்கை பற்றியோ அந்தரங்க விஷயங்களையோ யாரிடமும் கூறவில்லை. அவர் ஏற்கனவே இதயம் தொடர்பான நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டிசம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட விடாத வயிற்றுப் போக்கு உடல்நிலையைப் பாதித்தது. கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்சில் இறந்தார். இறந்த நாள் 30 – 12 1997. அவரது சடலம் தத்தநேரி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் தனது இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று கூறியிருந்தாராம்.

ந.முருகேசபாண்டியன்

00000000000000000000000000

பெரிய கட்டடத்தின் மாடிப் படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத் துளைத்தது. பெரிய அறையினுள் நுழைந்தேன். தூய வெள்ளாடை உடுத்திய கருத்து வாட்டசாட்டமான பெரியவர் எழுதிக் கொண்டிருந்தார். வழுக்கைத் தலை பளபளத்தது. சுவரையொட்டியிருந்த டெலிபிரிண்டர்கள் கடகடத்தன. அடுத்திருந்த பெரிய ஹாலில் ராட்சத அச்சு இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தன. கரடுமுரடான ஓசை. எங்கும் மிஷின் எண்ணெய் நெடியும் புழுக்க நாற்றமும் கசகசப்பான மனநிலை. ‘திரும்பிப் போயிடலாம். அவரை இன்னொருக்க பார்க்கலாம்.’ மனதின் ஊசலாட்டத்தையும் மீறி வெள்ளாடைப் பெரியவரிடம் கேட்டேன்.

‘‘ஐயா… வணக்கம்… இங்க ப. சிங்காரங்கறது யாருங்க?’’

‘‘நான்தான்’ உட்காருங்க’’ மூக்கைத் தடவிக்கொண்டார். இறுக்கமான முகம். ஆழமான இடுங்கிய கண்கள். என்ன விஷயம் என்பது போல முகத்தை முன்னுக்குத் தள்ளி என்னை உற்றுப் பார்த்தார்.

‘‘நான்… உங்களோட புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்… ரெண்டு நாவல்களையும் படிச்சிருக்கேன்.’’

‘‘அப்படியா ?’’ வறட்சியுடன் மெல்லச் சிரித்தார். இப்ப அதுக்கென்ன? அது ஏதோ சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற முகபாவனை. அவரது நாவல்களைப் பற்றிய எனது அபிப்ராயங்களைக் கூறினேன். தமிழில் மிகவும் முக்கியமான நாவல், முதல் புலம்பெயர்ந்த நாவல்… இப்படிப் பாராட்டினேன்.

‘‘நீங்க இப்படிச் சொல்றீங்க. அஞ்சாறு மாசத்துக்கு முந்தி கோணங்கின்னு ஒருத்தர் வந்து நாவலைப் பற்றிப் பேசிட்டுப் போனார். பத்து வருஷங்களுக்கு முந்தி பிரகாஷ்ங்றவர் திடீர்னு வந்து ரொம்பவும் பாராட்டிச் சொன்னார். இன்னும் சில பேர் தேடிவந்து பாராட்டியிருக்காங்க. சுமார் ஐந்து வருஷங்களுக்கு முந்தி கி. ராஜநாராயணன்னு ஒருத்தர் புயலிலே ஒரு தோணி நாவலைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்… இவங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? எதுவும் பெரிசா எழுதியிருக்காங்களா?’’

‘‘நீங்க சொன்னவங்க எல்லாரும் எனக்கு நண்பர்கள். தமிழ் இலக்கிய, சிறுபத்திரிகைச் சூழலில் முக்கியமானவங்க’’ என்றேன்.

கொஞ்ச நேரம் விசித்திரமாக எனது முகத்தைப் பார்த்தார்…,

‘‘அப்படிங்களா… கி. ராஜநாராயணன் மூலம் எனது நாவலைப் பற்றிக் கேள்விப்பட்ட சிட்டி, சிவாபாதசுந்தரம்னு ரெண்டுபேர் வந்து நாவலைப் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசினார்கள். சென்னையில கொண்டு போய் மூலப்பிரதிக்கு நல்ல பதிப்பு கொண்டு வாரோம்னு என்னிடமிருந்த ஒரே பிரதியையும் வாங்கிட்டுப் போனாங்க. பல வருஷமாச்சு. இன்னும் ஒரு பதிலயும் காணாம்’’ எவ்விதமான ஈடுபாடும் இல்லாமல் தகவல்களைச் சொன்னார்.

‘‘புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க… இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விஷயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க… அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னிக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்… பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம்வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனேஷியாவிலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். புயலடிச்சதால சரக்குகளைக் கடலில் வீசினோம். நாவல் எழுதறப்ப தோணும்னா சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்டே கேட்டேன். ஆமா போனோம் வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுங்கிறதெல்லாம் ஞாபகமில்லேனுட்டாங்க.

அது எதுக்கு… வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப்பிடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணுசீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக… நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பலசரக்குக் கடைகள்… அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா? உண்மையைச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விஷயமிருக்கு தெரியுமா? ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது.’’

‘‘நீங்க எப்ப மலேசியா போனீங்க ?’’

‘‘எனக்கு இன்னிக்கி அறுபத்து நாலு வயசாகுது. பதினெட்டு வயசுல கப்பலேறினேன். வட்டிக் கடையில வேலை பார்த்தேன். அப்ப ரெண்டாம் உலக யுத்தம் தொடங்கினதால இந்தியாவுக்குக் கப்பல் போக்குவரத்து இல்ல. இந்தியாவிலிருந்து எந்த தமிழ்ப் பத்திரிகையும் அங்க வராது. வேற வழியில்லாம பினாங்கு லைப்ரேரியில ஹெமிங்வே, தல்ஸ்தோய், பாக்னர், செகாவ், தாஸ்தாயேவ்ஸ்கி… இப்படிப் பலரையும் படிக்க ஆரம்பிச்சேன். ஹெமிங்வேயோட ‘ஏஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்’ நாவல்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல். அது அமெரிக்க இலக்கியத்ல திருப்புமுனைன்னு நினைக்கிறேன். தல்ஸ்தோயோட அன்னா கரேனினா நம்பர் ஒன். ஆனால் மேல்நாட்டு க்ரிட்டிக்ஸ் ‘வார் அண்ட் பீஸ்’ தான் சிறந்ததுன்னு சொல்றாங்க.’’

‘‘தமிழ்ல யாரெல்லாம் படிச்சிருக்கீங்க ?’’

‘‘என்னோட பதினெட்டு வயசுக்கு முந்தி இந்தியாவுல இருக்கிறப்ப ‘மணிக்கொடி’ பத்திரிகை வாசிச்சிருக்கேன். புதுமைப்பித்தன், மௌனி கதைகள் படிச்சிருக்கேன். அப்புறம்தான் அங்கே போயிட்டேனே! இன்னிக்கி வரைக்கும் தமிழ்ல நாவல்கள் வாசித்தது இல்லை. பூரா ஆங்கிலம்தான். இப்பத்தான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கம்கூட வாசிக்க முடியல.’’

தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். ‘‘அவங்க எழுதியதை படிக்கவில்லை’’ என்றார்.

‘‘யுத்த காலத்தை மையமாக வச்சுத் தமிழில் விரிவாக நாவல் எழுதுனது நீங்கள்தான். நீங்க ஐ.என்.ஏ.யில் இருந்தீங்களா?’’

‘‘இல்லை. என்னோட நண்பர்கள் பலர் ஐ.என்.ஏவுல இருந்தாங்க. ஆர்மியில பெரிய பதவியில இருந்தாங்க. அங்க பினாங்கில காபி, டீ கடைகள் ஐரோப்பிய மாதிரியில இருக்கும். அதை கிளப்ன்னு சொல்வாங்க. சாயங்கால நேரம் ஒரு கோப்பை காபியைக் குடிச்சிட்டு ஐந்தாறு மணிநேரம் பேசிக்கிட்டிருப்போம். அப்பத்தான் யுத்தம் பத்தின பல சமாசாரங்களைக் கேள்விப்பட்டேன். அப்புறம் நண்பர்களுடன் சேர்ந்து நானே பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாகப் போயிருக்கேன். நாவல்னா என்னா? கற்பனையில எழுதுறதுதானே! அப்படியேவா எழுதணும்? நாம கேள்விப்பட்ட விஷயங்கள், அனுபவங்களைத் தொகுத்துக் கற்பனையோடு எழுதலாம். ஒரு கதாபாத்திரம்னா அவன் ரெண்டு மூணு பேரோட சேர்க்கையா இருக்கலாம். நாவல்ல வர்ற சின்னமங்கலம் கிராமம்கூட ரெண்டு கிராமங்களை ஒன்றாக்கியதுதான்.’’

‘‘நீங்க படிச்சது முழுக்க ஆங்கிலத்துல… தமிழ்ல எழுதணும்னு உங்களுக்கெப்படி தோணுச்சு ?’’

‘‘தமிழ்ல தாய்மொழியில எழுதினாத்தான் உணர்ச்சிபூர்வமா நாம நினைக்கிறத சொல்ல முடியும்னு எழுதினேன்.’’

‘‘திரும்ப இந்தியாவுக்கு எப்ப வந்தீங்க ?’’

‘‘சுதந்திரங்கிடைச்ச பின்னாடி வந்தேன். உடனே ‘தினத்தந்தியி’ல வேலைக்குச் சேர்ந்தேன். அப்பயிருந்து மதுரையிலதான் இருக்கேன்.’’

‘‘முதல் நாவலை எப்ப எழுதினீங்க ?’’

‘‘1950-இல் ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினேன். அதைப் பிரசுரம் செய்ய பல பிரசுரகர்த்தர்களைக் கேட்டேன். அதுக்காகவே மதுரைக்கும் சென்னைக்கும் பல தடவைகள் அலைஞ்சேன். யாரும் வெளியிட முன்வரலை. ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினேன். திரும்பி வந்தது. ஆனால் தேர்வுக் குழுவில இருந்த ஒருத்தர் தனிப்பட எனக்குத் கடிதமெழுதி நாவலைப் பாராட்டியிருந்தார். அவர் அந்த நாவலை என்னிடமிருந்து வாங்கி ரெண்டு மூணு வருஷமாப் பிரசுரிக்க முயன்று தோற்றுப் போனார். கடைசீல ‘கலைமகள்’ பரிசுப் போட்டிக்கு அவரே அனுப்பினார். அதுக்கு முதல் பரிசு கிடைச்சுது. நாவலும் 1959-ல் பிரசுரமாச்சு.’’

‘‘புயலிலே ஒரு தோணி ?’’

‘‘அது மட்டுமென்ன ? அது பிரசுரம் ஆனதும் பெரிய கதை. அதை 1962-வாக்கில எழுதினேன். பல பிரசுரகர்த்தர்களிடம் கிடந்தது. ஒண்ணும் ஆகலை. கடைசீல சென்னை நண்பர் ஒருத்தரின் விடாத முயற்சியினால் கலைஞன் பதிப்பகம் 1972-இல் வெளியிட்டது. அதுவும் வெட்டிச் சுருக்கி வெளியாச்சு.’’

‘‘நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததுங்களா ?’’

‘‘ம்… ஒரு பாத்திரம் தன் மனதுக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றைக் குறிக்குள் போடலைங்கிறதுக்காக ‘கண்ணதாசன்’ பத்திரிகையில ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க என்பதுகூடப் புரியலை… குழப்பமாயிருக்குன்னு எழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு எல்லாத்தியும் வெளிப்படையாப் பெருவெட்டாகச் சொல்லணும்.’’

காபியை ரெண்டு கிளாஸ்ல ஊத்துங்க என்று அலுவலக உதவியாளரிடம் சொல்லிவிட்டு சற்று நேரம் கண்ணைமூடி யோசித்தவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.

‘‘அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும், எழுத்தாளன் சொல்லக்கூடிய உலகம் ரொம்பப் புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம் வாசிக்கிற யாருக்கும் தெளிவாப் புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர், வெளிநாட்டுச் சூழல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தமிழ் ஆளுகளுக்குப் புதுசு என்றாலும்  நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படலை.’’ அவரது குரலில் நம்பிக்கை தொனித்தாலும் முடிவில் வருத்தம் வெளிப்பட்டது.

‘‘குடிங்க’’ காபி கிளாஸை என்னை நோக்கி நகர்த்தினார். பணியாளிடமிருந்து சிகரெட்டை வாங்கி மேசை டிராயருக்குள் வைத்தார்.

கிளாஸை எடுத்து ஒரு மடக்குக் குடித்தேன். அவர் ஒரே மூச்சில் கிளாஸைக் காலி செய்தார்.

‘‘நீங்க தொடர்ந்து எழுதலியே…’’

‘‘அதெல்லாம் ஒரு காலத்து ஆர்வம். அப்ப உற்சாகப்படுத்தி முடுக்கிவிட ஆளுக யாருமில்லை. இப்ப அந்த மனநிலை இல்ல.. எழுதவும் முடியாது.’’

‘‘புயலிலே ஒரு தோணி நாவலில் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் வருதே… உங்களுக்கு அதிலே ரொம்ப ஈடுபாடா ?’’

‘‘அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லே. 1947-லிருந்து மதுரை சீ.வி.சி.கி. யில தங்கியிருக்கேன். முந்தி பக்கத்து அறையில தியாகராசர் கல்லூரி தமிழ் லெக்சரர் இருந்தார். அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி அகராதியை வைச்சு நானே படிச்சேன். அவ்வளவுதான். ஈடுபாட்டோட படிச்சா எதையும் படிச்சிடலாம். இங்கிலீஷ்ல பார்த்தீங்களா? எதைப் பத்தியெல்லாம் புத்தகம் வருது தெரியுமா? அதையும் வாங்கிப் படிக்க ஆளுக இருக்குது. இங்க அதுமாதிரியில்ல. அதனால பப்ளிஷர்ஸ் நல்ல புத்தகம் போடறதில்ல. என்னோட முதல் நாவல் கடலுக்கு அப்பால்… ரொம்ப சொல்ல முடியாது. ஆனால் புயலிலே ஒரு தோணி நல்ல நாவல். ஆனால் என்ன ஆச்சு?’’ மூக்கைத் தடவிக்கொண்டு சிரித்தார். ‘‘அந்த நாவலில் செட்டிமார்பற்றி வருது. பல பப்ளிஷர்ஸ் செட்டிமார். அதனால அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. ஏதாவது மாட்டு வாகடம், கந்தர் அலங்காரம்… இப்படி போட்டுக் காசு பண்ணுவாங்க.’’

‘‘உங்க குடும்பம்…’’

‘‘நான் ஒரு widower.’’

சற்று நேரம் என்ன பேசுவது எனத் தோன்றவில்லை. சூழல் இறுகியது. அவரே தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார்.

‘‘மலேயாவில் மனைவியோட முதல் பிரசவத்தில மனைவியும் ஆண்குழந்தையும் இறந்துட்டாங்க. பிறகு இந்தியாவுக்கு வந்தேன். அப்புறம் மறுபடி கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணவேயில்லை. திரும்ப மலேயாவுக்குப் போயிடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன்… ஆனால் போகலை.’’

‘‘அப்ப 37 வருஷமா தனிமையிலேவா இருக்கீங்க ?’’

‘‘என்ன தனிமை !’’ கண்களை மூடி வறட்சியாகச் சிரித்தார். ‘‘உண்மையாப் பார்த்தால் எல்லாரும் தனிமையிலதான் இருக்கோம்.’’

‘‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா ?’’

‘‘அதெல்லாமில்ல. கோயிலுக்குப் போவதுமில்லை சாமி கும்பிடுறதும் இல்லை.’’

இடையில் பத்திரிகைக்குச் செய்தி கொடுக்க வந்தவரிடம் பத்திரிகை தொடர்பாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘‘உங்க சொந்த ஊரு ?’’

‘‘எங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டி கிராமம். எங்க அப்பா காலத்திலேயே சிங்கம்புணரிக்குப் போயிட்டோம்.’’

‘‘உங்க சொந்தக்காரங்க…’’

‘‘சிங்கம்புணரியில இருக்காங்க… ரொம்ப போறதும் வர்றதும் கிடையாது…’’

அவரது கலை, இலக்கியம் பற்றிய புரிதல்கள், வாழ்க்கையனுபவம் பற்றிய விரிவான நேர்காணலுக்கு அனுமதி கேட்டேன். ‘‘அதெல்லாம் எதுக்கு…? வேணாம்’’ கைகளை ஆட்டி உறுதியான குரலில் மறுத்தார். நான் இலக்கிய உலகில் அவரது இடம் மிகவும் முக்கியமானது… எனவே நேர்காணல் முக்கியமான பதிவாகும் என்று வலியுறுத்தினேன். ‘‘தயவுசெய்து வேண்டாம்’’ என்று அழுத்தமாக மறுத்துவிட்டார். சற்றுநேரம் இருவருக்குமிடையில் கனமான மௌனம். அடுத்து என்ன பேசுவது? திணறல். அவரது முகம் இறுகியது. சகிக்க முடியாத அமைதி சுவரானது.

‘‘சரி அப்ப வர்ரேன்’’

எழுந்து நின்று கைகூப்பினேன். அவரும் எழுந்து நின்று கைகூப்பி ‘‘வாங்க’’ என்றார் தளர்ச்சியான குரலில்.

மாடிப்படிகளில் இறங்கினேன். அப்பொழுதுதான் ராட்சத இயந்திரங்களின் பலமான ஓசை உறைத்தது. வெயில் கண்களைச் கூசச் செய்தது.

குழு அல்லது அமைப்புடன் எவ்விதமான தொடர்புமற்றுத் தனித்து ஒதுங்கி நிற்பதால் ப. சிங்காரம் தமிழ்ச் சூழலில் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றும் உலகின் சிறந்த நாவல்களுடன் ஒப்பிடும் வகையில் அவரது நாவல் உள்ளது என்றும் நான் கூறியபோது, ஒருவிதமான கூச்சத்துடன் ‘‘அதெல்லாம் இல்லீங்க. நான் என்னமோ எழுதினேன்’’ என்று சாதாரணமாகக் கூறினார். சாதனையாளரான ப. சிங்காரத்தினுடைய இலக்கியத்தின் மீதான புறக்கணிப்பு, தமிழ்ச் சூழலின் மோசமான வெளிப்பாடாகும். ஏக்கமும் கசப்பும் கலந்த மனநிலையுடன் கட்டட வளாகத்தைவிட்டு வெளியே வந்தேன். வெளியே வெப்பக் காற்று புழுதியுடன் வலுவாக வீசிக் கொண்டிருந்தது.

ந முருகேசபாண்டியன்- இந்தியா 1984 

00000000000000000000000000

பிற்குறிப்பு :

தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ ராமசாமியின் ஊடாக இந்த நேர்காணலைச்  செய்திருந்த முனைவர் ந முருகேசபாண்டியன் அவர்களின் முன் அனுமதியுடன் இந்த நேர்காண மீள் கவனக்குவிப்பு செய்யப்படுகின்றது .

நடு குழுமம் 

00000000000000000000000000

நேர்காணல் செய்தவர் பற்றிய சிறு குறிப்பு :

ந முருகேசபாண்டியன்தமிழகத்தின் தென் புலமான மதுரை மாவட்டத்தின் சமயநல்லூரில் 1957-களில் பிறந்த ந முருகேசபாண்டியன்,  எழுபதுகளின் இறுதியில் வெளியான தேடல் இதழில் கவிஞராகச் சிறுபத்திரிகை உலகிற்கு அறிமுகமாகின்றார். இலக்கிய விமர்சனத் தளத்தில் தன்னை இனங்காட்டி இயங்கிவரும் இவர், உயிர்மை இதழில் எழுதிய என் இலக்கிய நண்பர்கள் பரவலாகக் கவனம் பெற்றது. இவர் மூலம்

01 பிரதிகளின் ஊடே பயணம்
02 தமிழ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியம்
03 சொற்கள் ஒளிரும் உலகம் (விமர்சனக் கட்டுரைகள்).
04 திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள்
05 இலக்கிய ஆளுமைகளின் படைப்புத்திறன்
06 என் பார்வையில் படைப்பிலக்கியம்
07 புத்தகங்களின் உலகில்
08 மறுவாசிப்பில் மரபிலக்கியம் : சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன் வரை
09.நவீனப் புனைகதைப் போக்குகள்.
10.எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை ?
11கிராமத்து தெருக்களின் வழியே : தமிழ்ப் பண்பாட்டு மரபினைப் பதிவு செய்யும் ஆவணம்
12 ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் : தமிழ்ப் பண்பாட்டு மரபினைப் பதிவு செய்யும் கட்டுரைகள்.
13 குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல் : இனவரைவியல் ஆய்வு.
14 இருவேறு உலகம் : நனவுலகவாசியின் நினைவுக்குறிப்புகள்.
15.என் இலக்கிய நண்பர்கள் (15 இலக்கியவாதிகள் பற்றிய மனப்பதிவுகள்)
16 தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (கட்டுரைகளின் தொகுப்பு)
சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள்.
17 அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் : சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை.
18 பிரபஞ்சன் கட்டுரைகள்.
19 நாஞ்சில்நாடன் சிறுகதைகள்.

போன்ற நூல்கள் தமிழ் எழுத்துப்பரப்பிற்கு கிடைத்துள்ளன.

புத்தக வாசிப்பின் வழியாகத் தன்னிருப்பை அடையாளம் காண்கிற இவர் மூன்று தலைமுறை எழுத்தாளர்களூடன் நெருக்கமாகப் பழகி வருகிறார். ந முருகேசபாண்டியன் பதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் உள்ள கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் நூலகராகவும் நூலகவியல் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். நூலகம் தகவல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய நெறியாள்கையின் கீழ் 20 ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தற்சமயம் மதுரையில் வசித்துவரும் இவர் சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் என்ற காலாண்டிதழின் முதன்மை ஆசிரியராக உள்ளார். தமிழ்த் திறனாய்வை நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகுகின்ற முறைமையே இவரை இலக்கிய பெருவெளியில் வித்தியாசமாக முன்நிறுத்துகின்றது என்று சொல்லலாம்

 

(Visited 217 times, 1 visits today)
 
ந.முருகேசபாண்டியன்

கி.ராஜநாராயணன் புனைகதைகளை முன்வைத்து-கட்டுரை-ந.முருகேசபாண்டியன்

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோல் மிஞ்சாது என்ற சொலவடை எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்றாலும், நிலத்தில் உழுகிறவரைத் தொழுதுண்டு வாழ்கிற சூழலைக் கொண்டாட்டமாகக் குறிப்பிடுகிற திருக்குறளையும் கவனத்தில்கொள்ள வேண்டும். […]

 

2 thoughts on ““கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது.’’- நேர்காணல்-ப சிங்காரம்- ந.முருகேசபாண்டியன்”

Comments are closed.