கூத்தாடிகளின் தெரு! – கவிதை -ரோஷான் ஏ.ஜிப்ரி

கூத்தாடிகளின் தெரு!

ரோஷான் ஏ.ஜிப்ரி

தெருக் கூத்தாடிகளுக்கு
இறந்தகாலமோ
நிகழ்காலமோ இல்லை
இப்போது நல்ல காலம்
நடைமுறைச் சாத்தியங்களை ஒப்பிட்டால் வேறன்றி
இப்படித்தான் விபரிக்க முடியும்.

அமைந்து விடுகிறது சாதக நிலை
அவர்களது கூத்தினூடே
மறைமுக வணிகமும்
நல்லபடியாக நடந்தேறுகிறது
இன்னபிற தேவைகளும்
தேடி வந்தடைந்தும் விடுகின்றன
பணம் கொழிக்கும் சுப வாழ்வு வாய்த்தும் விடுகிறது அவர்களுக்கு
அது அவர்களின்
ராசியின் பலனும் கூட .
என்கிறான்
ஜோதிடத்தை நம்புகிறவன்.

முதிர்ந்த அல்லது
சடைத்த மரங்களை
ஆட்டிப் படைக்கிறது
கொடுங்காற்று
பழுத்த இலைகளை
உதிர்த்து உதிர்த்து
உரமாக்க எத்தனிக்கும்
உலகமகா கடும்போக்கு
வேர்களுக்கும் அவர்களுக்கும் இருக்கலாமென்ற
ஊகங்களும் நிலவாமலில்லை.

உழைத்து ஊத்துபவன்
சாபத்துக்குள்ளாகி
பட்டினி கிடக்க
உண்டு கொழுத்தபடி
வேலியை இறுக்கி வைத்திருக்கிறது ஆதிக்கம்
அணு தொற்றிவிடும் என்ற
தோற்றப் பாட்டுடன்
காவிகளோடு காவியாய் காலமும்.

கூடவே குழலூதிகள்
தெருக்கூத்தாடிகளாய்
எதையும் மயிர்போல் மழித்தபடியிருக்க
மூகம்மூடி கைகொடுக்காமல்
இருக்கும் காலத்தோடு
கலவிகொண்டு வித்திட்டு
என் தாய்நிலமெங்கும்
எல்லைமீறி இன்னும்
துளிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றன போதிமரங்கள்!

ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை

ரோஷான் ஏ.ஜிப்ரி

(Visited 119 times, 1 visits today)