பூனைச் சகுனம்-கவிதை-ரோஷான் ஏ.ஜிப்ரி

பூனைச் சகுனம்

ரோஷான் ஏ.ஜிப்ரி

நண்பரை சந்தித்திராமல்
திரும்பி வந்திருக்கலாம்
பிழைத்துப் போயிருக்கும்
ஒரு உயிர்

மழையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்
வெட்டாந்து கிடக்கும் இடத்திலிருக்கும்
நீர் பற்றிய தீராப் பசி
ஆற்றுப்படுத்த முடியாமலுள்ளது
என்றுதான் தொடங்கினார்

வானம்
நட்சத்திரங்களை கூட்டி மடியிலிட்டு தாலாட்டட்டும்
பிள்ளைத்தாச்சியாய்
முகில்கள் மின்னி இடித்து
முக்கிக் கொண்டிருக்கட்டுமென
பீதி கலந்த கலக்கத்துடன்
பேச்சை தொடர்ந்தார்

எனது பசி எனக்கு
உனது பசி உனக்கு
என்றவர்
பூனைக்கும் பசிக்கும் என்பதை சொல்லவே இல்லை.

ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது
நானும் வருகிறேன் என்றபடி
பின் தொடர்ந்தவர்
மனையாளை அழைத்து
முன்னால் போடியம்மா
போகும்போது குறுக்கறுக்கும் பூனையை விரட்டுடி
சனியனால்தான் போனமுறையும் சகுனம் பிழைக்க வைத்ததென கூச்சலிட்டார்

பேரூந்து சிற்றூந்தென நெரிசலான இடத்தில் நிகழ்ந்த
மேல் குறிப்பிட்டுள்ள சம்பவத்தில்
கண்ணெதிரே ஒரு ஜீவன் எதிர்பாராமல்
உயிர் துறக்கவேண்டியாயிற்று
எனது கவலையெல்லாம்
பூனையை பற்றியே…,
பாவம் பூனை
நண்பரின் சகுனம் பூனைக்கு எமனாகி இருந்தது!

ரோஷான் ஏ.ஜிப்ரி- கட்டார்

ரோஷான் ஏ.ஜிப்ரி

 333 total views,  1 views today

(Visited 115 times, 1 visits today)