கடவுளின் குறி -கவிதை-தில்லை

கடவுளின் குறி

தில்லை

காலம்
வெண் முத்துப்பனியால்
சில்லெனக் குத்தி
ஏமம் சாமங்களில்
என்னைத் துயில் எழுப்புகிறது.

சகதியில் திணறும்
மீனைப் போல
என்னைத் தள்ளிய தனிமை
ஊழியின் காலத்தை
நினைவூட்டுகிறது.

ஆவென்று கிடக்கும்
நட்சத்திர தெரு
வெண்பனி போர்வைக்குள்
என்னை வீழ்த்த
கங்கணம் கட்டுகிறது.

உறையாய் மடியும்
பனி நதிப் படிகளில்
என் சின்னச்சிறு பாதங்கள் விறைத்து
புதையுண்டது போலவே
உன் மாயத்தினுள் நான்.

சேத்து நிலத்தில்
நிற்காத என் தேகம்
கொடு முடியை வெறுத்து
துயரத்தின் வாயிலில்
துளிர்க்கின்றது வாழ்வு.

உப்பின் அணைப்பில்
உறைபனி இறங்கும்
பனி அடர் தெருவில்
கடவுளின் குறி தேடி
தாகமாயிருக்கிறேன்.

 

000000000000000000000000000000

காஞ்சோண்டி

தில்லை
ஓவியம் : தங்கேஸ் விக்கி

எல்லா மாயங்களும்
அந்தரித்த கணத்திலிருந்து
துரத்தும் உன் தாழை மர நினைவுகள்
ஆணலையின் எழுகையிலிருந்து
எனக்குள் அவிழ்கிறது.

கடற்கரை குருத்து மணலில்
மல்லாந்து நீ
இரு தொடையும் விலத்த
வாசனையை அள்ளி வீசிய காற்று
உன் அம்மணத்தையும் அளைந்தது.

குருத்துமணல் உட்குழி தாழ
நீள் குறியில் நாக்கு நீண்டு
ஆதித்துவாரத்தின் ககனவெளியில்
தேன்சொட்டி உடல் முழுதும் நனைத்தது.

வெளீர் நீலநிற வானத்தில்
அமிர்தம் வாங்கிய ஆதித் துரவு
அதரத்தின் மென் ரோமங்களினால்
என் அம்மணத்தையும் கவ்விக்கொண்டது.

நாட்கள் கடந்த தாகத்தை தீர்த்த போது
உச்ச விடாயின் குருதி வெளிப்பட்டு
வெட்கத்தால் அவனைப்போல்
என் முகமும் மாறிப்போனது.

நிறம்மாறும் ஓணான் போல்
பொழுதுக்கு பொழுது மாறும்
ஆதியின் வாசலில் உயிர்க்கிறது
இன்றும் என் சுவாதினமற்ற மனது.

ஒரே நாக்கால் பல மொழி பேசும்
என் உட்கிடங்கிலிருந்து
நான் அவாக்கொண்ட நாழிகையில்
மனம் மீண்டும் உருக்கொண்டது.
சுழிக்காற்றுக்குள் அள்ளுண்டு
சின்னஞ்சிறு வயது முதலே
சிறிதும் பெரிதுமாக
ஏமாற்றப்பட்டவள் நான்.

இப்போ நீ
உன் மடிந்த ரோமங்கள் நிறைந்த மார்பில்
என்னை அணைத்திருக்கின்றாய்
என் முகம் மாறாதவரை.

தில்லை-சுவிஸ்

(Visited 229 times, 1 visits today)