கொலை வெறி !கொலை வெறி !டீ ! -சிறப்பு எழுத்துகள்-பாக்கியம் ராமசாமி

 

பாக்கியம் ராமசாமி“வேண்டாம் ப்ளீஸ் சொன்னா கேளுங்க ……… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கிளம்பிறீங்க?”

“ஏன் கடைத்தெருன்னா மானம் போயிடுமாக்கும்?நீ எப்படி வேண்டுமானால் நடந்துக்கலாம்,பேசலாமாக்கும்?”

“நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்….. “

“வேண்டாம். நான் ராத்திரியே தீர்மானிச்சுட்டேன்.உன் கையால ஒரு டம்ளர் தண்ணிகூட வாங்கிச் சாப்பிட மாட்டேன்.”

“சாப்பிடாட்டா பராவாயில்லே. நீங்க என்னோட பேசாட்டாலும் பராவாயில்லே.ஆனா இந்தக் காரியத்தை மட்டும் செய்திடாதீங்க.கதவை நான் தாழ்ப்பாள் போட்டிடப் போறேன்.”

 “எனக்குத் திறந்துண்டு போகத் தெரியாதாக்கும்.”

“ஊர் என்னைக் காறித் துப்பும்…..”

“துப்பட்டும்.எனெக்கென்னாச்சு.நான் எடுத்த முடிவு எடுத்ததுதான்.”

“என் தாலி மேலே ஆணையாச் சொல்லுறேன்.நீங்க அந்தக் காரியம் செய்யக் கூடாது.”

“உனக்கு நான் கட்டுப்பட்டு இருக்கணும்னு அவசியமே இல்லை.என்னை அந்தக் குருவாயூரப்பனுக்குக் கொடுத்துட்டேன்.அவன் விட்ட வழி!உன் அடங்காப்பிடாரித்தனத்துக்கு இன்னியோட முடிவு கட்டியாச்சு.”

“ஐயோ!வாசல்படி இறக்கிறேளே ………”

“அசிங்கமாகக் கையை புடிச்சு இழுக்காதே.வாசல்லே யாராவது பாத்து சிரிப்பாங்க.”

“சிரிச்சாலும் பரவாயில்லை.சொன்னாக் கேளுங்க.இனிமேல் நீங்க கிழிச்ச கோட்டை நான் தாண்டினால் என்னைச் செருப்பைக் கழற்றிண்டு அடிங்க.”

“இங்கை பாரு! மணி இப்போ விடியற் காலை ஐஞ்சு மணி.உன்னோடு பேசிக் கொண்டிருக்க நான் தயாராயில்லை.நான் சொன்னால் சொன்னதுதான்.சும்மா ஜப்புர் காட்ட இப்படியெல்லாம் நான் சொல்லுறேன்னு நினைச்சுக்காதே.நான் போய் அஞ்சு  நிமிஷம் கழிச்சு நீ அங்கே மார்க்கெட்டுக்கு வந்து பாரு!உன் கண்ணாலே பாரு! பத்திக்க பத்திக்க. கொதிக்கக் கொதிக்க……”

“ஐயோ!அந்த வார்த்தையை சொல்லாதீங்க.ப்ளீஸ்! ப்ளீஸ்!உங்க காலிலே  விழுறேன்.என்னைக் கொன்னுட்டு அப்புறம் நீங்க போய் என்ன வேணும்னாலும் செய்துக்குங்க.”

“என்னாச்சுடி உனக்கு?ஏன் இப்படி சண்டித்தனம் பண்ணுறே?எதிர் வீட்டு மாமா என்னவோ ஏதோன்னு ஓடி வார்றார் பார்.”

“ஆமாம் என்னவோ ஏதோதானே இது! அவர் சொல்லட்டும் நியாயம்! மாமா! மாமா! நீங்கள் தான் இவரை தடுத்து நிறுத்திப் புத்தி சொல்லணும்.”

“இருங்கோ மாமா! ஏன் இப்பிடி தலை தலையாய் அடிச்சுண்டு அழுறேள்.என்ன நடந்தது?”

முதல்லே அவர் கையை இறுக்கிப் பிடிச்சுக்குங்க.இல்லாட்டி ஓடிடுவார்!”

“என்னய்யா சாம்பசிவம்?ஏன் இவ்வளவு கோபம் உமக்கு?”

“கோபப்படாம என்ன பண்றது?புருஷன்னா இவளுக்கு கிள்ளுக்கீரை.ராத்திரி எட்டு மணிக்கு ஒரு ரவா உப்புமா கிண்டடி. பச்சை பட்டாணிகூட வாங்கிண்டு வந்திருக்கேன்.சூடாச்சாப்பிடணும் போலிருக்குன்னு சொன்னால், அதென்ன உங்களுக்கு இப்பிடி ஒரு நாக்குன்னு பண்ணவேயில்லை சார்.சரி, தலையை வலிக்கிறது புதுசா டிக்காஷன் போட்டுக்  காப்பி ஒரு டம்ளர் போட்டு குடுடின்னா………..அதெல்லாம் என்னால முடியாதுங்கிறா.அவள் இப்படி நடந்துட்டா….நான் பின்னே வேற என்னதான் பண்றது?”

“மாமா!மாமா!நான் மறந்துட்டது தப்புதான்.பஞ்சபட்ச பராமானத்தோடு சமைக்கிறேன்.அதுக்காக எனக்கு அவர்  இவ்வளவு பெரிய தண்டனை குடுத்திடவேணாம்.”

“என்ன தண்டனை?”

“தீக்குளிக்க போறேன்னு கிளம்பீட்டார்.மார்கெட்டுக்குப் போய் ஊரெல்லாம் அறிய தீ குளிக்கப்  போறாராம்.”

“அடடே!சாம்பசிவம்!என்னய்யா நீர்!பெண்சாதி ஒரு உப்புமா கிளறித்  தரலை என்கிறதுக்காக தீ குளிக்கிறதா?ரெம்ப ரெம்பத் தப்பு!”

“அடக் கடவுளே!எப்ப நான் தீ குளிக்கிறதாய் சொன்னேன்!டீ குடிக்கப் போறேன்னு சொன்னேன்.அவள் காதுலே அது தீ குளிக்கப்  போறேன்னு விழுந்திருக்கு!”

“அட ராமா!நீங்க டீ குடிக்க போறேன்னுதான் சொன்னீங்களா!அதைக் கொஞ்சம் தெளிவா சொல்லித் தொலைக்கக் கூடாதா?டீயோ காப்பியோ விஷமோ எதையோ குடிச்சு தொலையுங்க.நான் அனாவசியத்துக்குப்  பயந்து போய் உங்க காலில விழுந்து கெஞ்சி தொலைக்கிறாப்பலே ஆயிட்டுது.”

“வாயிலே பாக்கை மென்னுண்டு பேசினீங்களானால் யாருக்குப் புரியிறது.டீயோ காப்பியோ குடிச்சுட்டு வந்து தொலையுங்கோ.பிளாஸ்க்கை எடுத்துண்டு எனக்கும் ஒரு காப்பி வாங்கிண்டு வாங்க. ஒரே டென்ஷன் பண்ணித் தொலைச்சீட்டிங்களே…….”

ஜனவரி 2012     

பாக்கியம் ராமசாமி- இந்தியா

பாக்கியம் ராமசாமி

(Visited 73 times, 1 visits today)