ஃபஷ்றி கவிதைகள்-கவிதை-ஃபஷ்றி (அறிமுகம்)

ஃபஷ்றி

இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை
என் பிரதிக்குள் எந் நேரமும் எதுவும் நடக்கலாம்
நிராயுதபாணியாக தூங்கிக் கொண்டிருக்கிறேன்
துப்பாக்கிதாரிகள் இருவர்
சரமாரியாகச் சுடுகின்றனர்
தலையணையால் தடுக்கிறேன்
ரவைகள் ஒவ்வொன்றும் பொத்துக் கொண்டு செல்கின்றன
ஒன்றுகூட எனக்குப்படவில்லை
தமிழ்ப்பட ஹீரோக்குப் போன்று
தப்பியோடி பிரதியை விட்டு வெளியேறி
வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறேன்

(2)

வைக்கம் முஹம்மது பஷீரை
ஞாபகித்தவனாய் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடக்கிறேன்
சமையலறை நோக்கி மெல்லப் பதுங்கிய பூனையை விரட்டி விட்டு
முகநூலில் கவிதைப் பிரதி ஒன்றுக்குள் நுழைகிறேன்
நான் விரட்டிய பூனை பிரதிக்குள்
எனக்கு முன்னரே நுழைந்து முறைத்துக் கொண்டு நிற்கிறது
எழுத்துக்களை விலத்திக் கொண்டு துரத்துகிறேன்
பிரதிக்குள்ளிருந்த எலி பூனையைக் கவ்விக்கொண்டு
ஓடி ஒழிகிறது என் வீட்டு முற்றத்து விறகுக் குவியலுக்குள்

(3)

கவிதைப் பிரதியொன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்
உயரப் பறந்த பறவையொன்று
தாழப் பறந்து வந்து ஒற்றைக் கொம்பின்
தலையில் அமர்ந்து மற்ற எழுத்துக்கள்
ஒவ்வொன்றாக கொத்தித் தின்கிறது
உயிர் எழுத்துக்கள் மட்டும் தம் எதிர்ப்பைத் தெரிவித்து உந்தி எழுந்து
உயரப் பறக்கின்றன சுதந்திரப் பறவைகளாய்

(4)

ஓவியமொன்று வரைந்து தருமாறு கேட்டான் என் மாணவன்
வரைந்து கொடுத்தேன்
அதிலுள்ள மிருகம் அடிக்கடி வாலை
முன்னாலுள்ள இரு நிறங்களை நோக்கி சரிப்பதாயும்
மற்றும் சிறுநீர் கழிப்பதாயும்
மேலும்
புத்தகப் பையினுள்ளிருந்து முதுகில் குத்துவதாகவும் முறையிடுகிறான்
ஓவியத்திலிருந்து அதனைக் காட்டுக்கு விரட்ட உதவுமாறும் கோருகிறான்

ஃபஷ்றி-இலங்கை

ஃபஷ்றி

0000000000000000000000000000000

ஃபஷ்றி பற்றிய சிறுகுறிப்பு :

இலங்கையின் சம்மாந்துறை ஊரைச் சேர்ந்த ஃபஷ்றி தற்போது தமிழின் நவீன மற்றும் பின் நவீன இலக்கியங்களின் தீவிர வாசகராக இருக்கின்றார். ஒரு காலத்தில் பெரு வெளி சிற்றிதழில் கவிதை மற்றும் கட்டுரைகள் பங்காளியாகி பெரு வெளி செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயற்பட்டிருக்கின்றார்.

நடு குழுமம்

 

 

(Visited 173 times, 1 visits today)
 

4 thoughts on “ஃபஷ்றி கவிதைகள்-கவிதை-ஃபஷ்றி (அறிமுகம்)”

Comments are closed.