கயூரி கவிதைகள் -கவிதை-கயூரி-(அறிமுகம்)

கயூரி

கடலறியும் உப்புச் சுவையில்
உயிர்கொள்ளும் ஊற்றுக்கள்
பறவையும் பறத்தலும் இறகுகளும்
நம் இணைவில் மொழி
தொலைக்கும்…..
அடர்வுகளில் தோலுரித்து கடக்கும்
நாக விஷங்கள்
இசைக்குறிப்புகளை தழுவ விட்டு
நகரும்…
என் கனவுகளின் மீது நீ நிஜங்களை
வரைகிறாய்…
ஆட்டிப்படைக்கும் இருளில் நதியாக
ஊடுருவுகிறாய்…
எதற்காக இந்த வீண் பேச்சுக்கள்
மகத்துவமான நம் அதிசயங்கள்
இனி விழி தழும்பும்….

இன்னும் இன்னும் தரப்படாமலே
நெஞ்சடைக்கும் பின் அந்தி
சிறகெழுந்த
நம் முத்தங்களில் மஞ்சள்
ஒளிரும்….

நட்சத்திரங்களை தின்றுவிட்டு
காலையெழுதலில் தான் உனக்கு
எத்தனை அவசரங்கள்…….

000000000000000000000000000

அடிவார மலை இடுக்குகளின்
எலுமிச்சை நிறப் பூக்களில்
எரிந்து கொண்டிருக்கிறது
என் ஆன்மா…

ஆறாப்புண்ணிலிருந்து நிகழ்ந்து
கொண்டிருக்கும் சீழென
பறத்தல் வேகங்கொண்டெழும்
சிறகு விம்பங்கள் பச்சை படர்ந்து

நீலநெடுந் தொலைவுவரை
அறிதலில் பிழைத்தோற்றங்
கொள்கின்றன…

பெருங்கனவு விரிவுகளில் தேங்கும்
சில வலிகளின்
ருசி அதிகரிப்பில்,
பொருளின்மைக் குவியல்களின்
வெறுமையில் திகைத்து
விழுந்து பற்றி
எரிகிறது உதிர ஆழ் நெருப்பு….

சிறகு முளைத்த பிறகும்
இரைக்காக
கூடுகளில் அமர்ந்திருப்பதில்லை
பறவைகள்…

000000000000000000000000000

விழித் தொலைவுகள் தாண்டி
அலைவுற்ற மீன்களின்
ஏக்கம் நிரம்பிய உயிர் வாழ்தல்
பற்றிய மௌனக்
கனதியை மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கிறேன்…

நீலவிழிகள் கனவில் மிதக்க
கார்கால குயிலின் ஆன்மா உருகி
கசியவிடும் வலியைத்தான்
நான் இசையென
ரசிக்கிறேன்….

மழையின் துளிகளையும்
கடல் உவர்ப்புக்களையும்
அந்தியில் கூடடையும் பறவைக்
கனவுகளையும் ரகசியமாய்
வரைந்து முடிக்கிறேன்…

அத்தனை சொற்களும் உறிஞ்சப்பட்டு
காற்று அள்ளிக்கொள்ளும் பஞ்சென
ஊதாகலந்த சிவப்புக் கனவுகள்
கோடாக எனை
நிறைக்கத் துவங்கியிருக்கிறது…..

கயூரி-இலங்கை

கயூரி

000000000000000000000000000

கயூரி பற்றிய சிறுகுறிப்பு :

கயூரியாழ்பாணத்தைச் சேர்ந்த கயூரி கவிதை எழுதுவதிலும், வாசிப்பிலும், இயற்கையை நேசிப்பதிலும் மிகுந்த ஆர்வமுடைய இளங்கவிதாயினிகளில் ஒருவர். தற்பொழுது சிறுவர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக கடமையற்றி வரும் இவரது எழுத்துக்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

நடு குழுமம்

 

(Visited 142 times, 1 visits today)
 

4 thoughts on “கயூரி கவிதைகள் -கவிதை-கயூரி-(அறிமுகம்)”

Comments are closed.