ஃபஷ்றி கவிதைகள்-ஃபஷ்றி

ஃபஷ்றி
ஓவியம் : எஸ்.நளீம்

ரவைக் கவ்விக் கொண்டு வந்த பூனை
என்னைக் கண்டு பதுங்குகிறது.
“ச்சு” என்று விரட்டினேன்.
இரவு நழுவி விழ
ஓடி மறைந்தது பூனை.
தூக்கி எடுத்து
தூசு தட்டினேன்.
பளிச் சென்று
பல்லிலிளித்தன
நட்சத்திரங்கள்.
நதியின் மடியில்
நிம்மதியாக
தூங்கிக் கொண்டிருந்தது
நிலவு.

(2)
சாலைபோல்
நீண்ட நெடிய
இரவுகள்
என்னுடன்
தனித்துக்
கிடக்கின்றன.
நட்சத்திரங்களின் இசை
ரசக் கிண்ணங்களில்
நிரம்பி வழிந்து
போதையேற்றிக் கொண்டிருக்கிறது.
கனவுக்குள் மீள்வதற்கான
பாலங்களைக்
கடக்க முயல்கிறேன்.
சிலவேளை
வான்கோவின் தூரிகை
தேவைப்படலாம்.

(3)
வானிலிருந்து
பூமியைப் புணர வந்த
நீர்க் கோடுகள்
திருப்பியனுப்பப்பட்டன.

(4)
சாலை நடுவில்
அமைதியாய்
அமர்ந்திருக்கும்
பழுத்த இலையின் மீது
சடுதியாய்
சைக்கில் சக்கரங்களால்
மிதிக்கப் பார்த்தேன்.
உடனே விலக்கிக் கொண்டேன்.
துளிர் விடுகையிலும்
அதற்குப் பின்னான
வாழ்தலிலும்
கிளை பிரிகையிலும்
எத்தனை
வலிகளைத் தாங்கியிருக்கும்.
காற்றின் நீவலில்
நிம்மதியாய்த் தூங்கட்டும்
வலி மறந்து.

(5)
மெதுவாய்
அசைந்தசைந்து
மேலெழுந்து
மீளக் கிளையில்
ஒட்டிக் கொண்டது
இலை.

(6)
ஒரே ஒரு
ஒற்றை எறும்பு
மெதுவாக
மிக மெதுவாக
நகர்ந்து செல்கிறது
பெரும் சுமையுடன்.

(7)
பாதி சுவரோடு ஒட்டியும்
பாதி ஒட்டாமலும்
தொங்கிக் கொண்டிருக்கும்
சிலந்தி வலை
காற்று
தொட்டதும்
அசைகிறது
விட்டதும்
நிற்கிறது
இப்படியாக
தொடர்கிறது.

ஃபஷ்றி-இலங்கை

ஃபஷ்றி

(Visited 122 times, 1 visits today)