பத்தாம் நம்பர் டவுன் பஸ்-சிறுகதை-நவநீதன் சுந்தர்ராஜன்

“இன்னைக்கு எப்படியாவது சொல்லிடனும்…தயவு செஞ்சு அந்த தைரியத்த மட்டும் கொடு… இல்ல இதயம் பட முரளின்னு எனக்கு கம்பனில பேரே வச்சிருவாங்க…என்னோட இதயம் இப்ப வேகமாத் துடிக்குது…எவ்வளவு வேகம்னு நீ நக்கலா மனசுக்குள்ள  கேட்கறது, என் காதுல நல்லாவே விழுகுது…அது காதலிச்சு, அதை அந்தப் பொண்ணுகிட்ட பயந்து பயந்து சொன்ன அனுபவம் உள்ளவங்க எல்லாத்துக்கும்  தெரியும்…நான் சொன்னது மொதக் காதலுக்கு மட்டுந்தான்…நீ ஒரு ப்ளேபாய் ன்னு எனக்கு நல்லாத் தெரியும்…தமிழ்நாட்டப் பொறுத்த வரைக்கும் நீ ஒரு பிரம்மச்சாரி…ஆனா வட இந்தியாவில நீ ரெண்டு பொண்டாட்டிக்காரன்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்…

உங்க அப்பா, தம்பி கூடப் பரவாயில்ல…ரெண்டு பொண்டாட்டி கட்டுன உண்மைய ஒத்துகிட்டு, தமிழ்நாட்டில நல்லபடியா தான் பொழப்பு நடத்திக்கிட்டு இருக்காங்க…

அப்படிப்பட்ட நேர்மையான அவங்களுக்கு கூட எல்லா ஊர்லயும் கோயில் இல்ல…ஆனா நீ…சந்து பொந்தெல்லாம சம்மணம் போட்டு உக்கார்ந்திருக்கிற…ஏன்…நீ அவ்வளவு ஒழுக்கமானவன்னு எல்லாரும் நம்புறாங்க…பரவாயில்ல…அனுபவிச்சிட்டுப் போ…

இந்த உண்மைய நான் வெளில சொல்லனும்னு இது வரைக்கும் நெனச்சிதில்ல…ஆனா இந்த முறையும் நான் சொதப்பிட்டா…எனக்கு வேற வழியில்ல…கண்டிப்பா உங்க குடும்பத்து இலட்சணத்த ஊரு பூரா சொல்லி, உன் பேரக் கெடுக்காம விடமாட்டேன்…அது மட்டுமில்ல…எவனையும் நான் வாழ்நாள் முழுவதும் உன்னையோ,உன் குடும்பத்து ஆளுகளையோ கும்பிடக் கூடாதுன்னு சொல்லி ஊர் ஊராப் போயிப் பிரச்சாராம் பண்ணுவேன்…

நீங்க இல்லன்னா இங்க வேற சாமிகளே இல்லையா…

இந்தா…இங்க பொள்ளாச்சிக்கு பக்கத்தில கூட ஆஞ்சநேயர்னு ஒரு பார்ட்டி இருக்குதாம்…அது உங்கள மாதிரி பெரிய குடும்பத்த சேர்ந்த ஆளு இல்லன்னாலும்… இடைப்பட்ட ஒரு மீடியமான வேலைக்கார சாமின்னு கேள்விப் பட்டேன்…என்ன சொல்லிக் கும்பிட்டாலும் சரி… உடனே நடக்குதாம்…என்ன ஒரே ஒரு குறை… பார்ட்டிக்கு சம்சார யோகம் இல்லாமப் போச்சு…அதுக்கும் உங்கள மாதிரி யாரோ ஒரு பெரிய குடும்பத்த சேர்ந்த ஆளு தான் காரணமாம்…அவரு பேரு கூட என்னமோ சொன்னாங்க…ம்….

ஆ….இராமர்….

அவருதான் சும்மா இருந்த ஆஞ்சநேயர, அதையும் இதையும் சொல்லி மனசக் கெடுத்து கட்டிடமோ, பாலமோ கட்டறதுக்கு சிலோனுக்கு மேஸ்திரியாக் கூட்டிட்டுப் போயி வேலைய வாங்கிட்டு நட்டாத்துல கழட்டி விட்டுட்டு போயிட்டாராம்…பாவம்…இப்ப பொண்டாட்டி புள்ள இல்லாம என்ன மாதிரியே அவரும் வெறும் பயலா நிக்கிறாராம்…

அங்க போறதா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணிக்க…”

என்று விநாயகரிடம் வேண்டுதலில் இருக்கும் போதே, அவன் செல்ல வேண்டிய வெள்ளையும் சிவப்புமான மேனி கொண்ட பத்தாம் நம்பர் டவுன் பஸ் புறப்பட ஆயித்தம் ஆகி விட்டது.

இவனைக் கடந்து ஓடிய பள்ளி சிறார்களின் பைக்கட்டுகளில் வைத்திருந்த ஜியாமெட்ரிக்கல் பாக்சும்,டிபன் பாக்சும் ஒன்றுடன் ஒன்று மோதி எழுப்பிய ஓசையில், வேண்டுதல் கலைந்து, அரைகுறையாகப் பிள்ளையாரிடம் பெற்ற அருளுடன் ஓட ஆரம்பித்தான்.

சிறார்கள் அனைவரையும் வென்று முதல் ஆளாக  பஸ்ஸின் பின் படிக்கட்டில் ஏறி, காலியாக இருக்கும் எந்த இருக்கைகளையும் கண்டு கொள்ளாமல், முன் படிக்கட்டினை ஒட்டி இரண்டாவதாக உள்ள இருக்கையை, கண்களில் ஆராய்ந்தபடி நின்றான் கோபால்சாமி.அதில் இரு இளம் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

தலைமுடியைக் கைகளிலே வருடி சரி செய்து கொண்டான், நன்றாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் அணிந்திருந்த கருப்பு நிறப் பேண்ட்டின் பின் பாக்கெட்டில் இருந்து சின்ன சீப் ஒன்றை எடுத்து தலைமுடியை சீவிக் கொண்டான்,சீவாமலே இருந்திருக்கலாம்.சீப்பை மீண்டும் பின் பாக்கெட்டில் வைத்து விட்டு அப்படியே வலது புறமுள்ள பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான், அதிர்ச்சியடைந்து இடது பாக்கெட்டில் தேடினான், அதிலும் இல்லாது, பூப் போட்ட மேல் சட்டைப் பாக்கெட்டில் தேடினான்,கடுப்பாகி தலையில் அடித்துக் கொண்டு,

“இனி மேல் உங்க குடும்பத்த சேர்ந்த ஆளுக கோவிலுக்கு எவன்  வர்றான்னு பார்த்தர்றேன்,”

என்று பஸ்ஸின் சன்னல் வழியே பேருந்து நிறுத்தத்தில் கிழக்குப் பார்த்து அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலின் படிகளை எட்டிப் பார்த்தான், அவன் ஆசையுடன் இரண்டாவது இருக்கையின் சன்னலோரத்தில் அமர்ந்திருக்கும் சாந்திக்கு, முந்தைய நாள் இரவு முழுவதும் உறங்காமல் எழுதிய காதல் கடிதம் மடிந்த நிலையில், காற்றில் ஆடாமல், பிள்ளையார் சிலை போலவே படிகளில் வீற்றிருந்தது.

“போலாம் ரைட்..”,என்று கத்தி நடத்துனர் விசிலை ஊத, பெருமூச்சு விட்டு,இயல்பு நிலைக்குத் திரும்பி, “அப்பா…ஆஞ்சநேயா”, என வேண்டிக் கொண்டான் கோபால்.

சாந்தியின் அருகில் அமர்ந்திருக்கும், சிறிய சிவப்புக் கலர் கயிறு கழுத்தில் அணிந்த அவளது தங்கை, சாந்தியை விட அழகு, சாந்தியும் அழகுதான். இருவரும் கோபால் வேலை பார்க்கும் அதே துணிக் கம்பனிக்குத்தான் வேலைக்குச் செல்கிறார்கள்.

பத்தாம் நம்பர் டவுன் பஸ் புறப்படும் முதல் ஊரைச் சார்ந்தவள் சாந்தி, கோபால் ஏறுவதுக்கு இடையில் பஸ் தோராயமாக, ஒரு பத்து நிறுத்தங்களைக் கடந்து இருக்கலாம்,அதற்குள் ஆயிரம் கோபால்களைச் சந்தித்த சலிப்பு, சாந்தியின் முகத்தில் எண்ணெய் வடிவில் ஒழுகுவதை எப்பொழுதும் கோபால் ஒரு பெரிய விடயமாக எடுத்துக் கொண்டதில்லை.

அவனோ ஒரு கைக்குட்டை முழுவதும் கோகுல் சாண்டல் பவுடரால் நிரப்பி, பாக்கெட்டில் வைத்துக்கொண்டு,அடிக்கடி முகத்தில் பூசிக் கொள்வான்.ஒரு நாளைக்கு மூன்று முறை கம்பெனி கழிவறைக்குள் சென்று கை அக்குலிளிலும் அப்பிக் கொள்வான்.  சாந்தியைப் பின் தொடர ஆரம்பித்தது முதல் இதுவரை ஒரு மூட்டை கோகுல் சாண்டல் பவுடரைக் காலி செய்திருப்பான் என்று ஒரு முறை அவனது அம்மா மளிகைக் கடைக்காரரிடம் கூறியதாகத் தகவல்.

நடத்துனர் டிக்கெட் கொடுக்க, பெற்றுக் கொண்டு சாந்தியையே பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறான், பஸ் இரண்டு மூன்று நிறுத்தங்களைத் தாண்டியிருக்கும், இன்னும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. ஏனென்று தெரியவில்லை, எப்பொழுதுமே ஏறியவுடன் கோபாலைக் கண்டு புன்னகைப்பாள்,அன்று ஏனோ கண்டு கொள்ளவில்லை.

மனம் குழம்பிப் போயி சற்று முன்பு நகர்ந்து அவளது பார்வையில் படும்படி நின்றான்.பார்க்கவில்லை,வெளியில் சன்னலில் கைகளை வைத்து எதையோ சோகமாக பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

“என்னவா இருக்கும்…நேத்து நாம வேலைக்கு வராததனால் கோபமா இருக்குமோ… இருக்காது,அந்த சூப்பர்வைசர் எதாவது செஞ்சிருப்பான்,அவனுக்கும் சாந்தி மேல ஒரு இது… இதுன்னா…சீ… நம்மள மாதிரி புனிதமான காதல் எல்லாம் ஒன்னும் கிடையாது,அவன் கம்பனி முதலாளியோட சொந்தக்காரன், ச்…அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது…முதலாளியோட சாதிக்காரன், அவ்வளவு தான்…அது போதுமே…

காசில்லாம கஷ்டப் படுற வீட்டுப் பொண்ணுக.. இந்த மாதிரி காசு உள்ளவனங்க கிட்ட படற பாட்டே எவனுமே கண்டுக்க மாட்டிங்கரானுகளே…”, என்று வெம்பி கோபால், சமூக கோபத்தை கைகளில் வைத்திருந்த டிக்கட்டை கடினமாக உருட்டி வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

சாந்தி சிறிதாக முகத்தைத் திருப்பி, திரும்பி கோபாலைப் பார்த்தாள்.

அவ்வளவுதான், ஒற்றைப் பார்வையில் ஒழிந்தது முதலாளித்துவம், வெடித்தது புரட்சி, மகிழ்ச்சியின் உச்சத்தில் கோபால்.

“காப்பத்தணும்…காப்பாத்தியே ஆகணும்…எப்படி…அது தெரியலையே…என்ன பண்ண…மொதல்ல…இப்போதைக்கு சாந்திய வெச்சிக் காப்பாத்தலாம்…ஊர்ப்பிரச்சினை எல்லாம் நமக்கு எதுக்கு?”,

என்று எண்ணி அவன் முகத்தில் காட்டிய பாவனையை எவரும் கண்டு எழுத்தில் வடித்து விடக் கூடாது என்று நினைத்தோ தெரியவில்லை,கைக் குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்து, அதிலுள்ள கோகுல் சாண்டல் பவுடரால், வெளி வரும் அந்த பாவனையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து, சரி படுத்திக் கொண்டான்.

தனது இந்த வெட்கம் மிகுதியான முக பாவனையை, வெட்கம் என்று சொல்லக்கூடாது, சரியாகச் சொன்னால், தனது இந்த வெட்கங் கெட்ட முக பாவனையை, யாராவது பார்த்து விட்டார்களா என்று முன்னும் பின்னும் பார்த்தான், நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.

அப்பொழுது ஒரு வெள்ளை சட்டை நீல பேன்ட் அணிந்திருக்கும் பதின் வயது மாணவன், தனியாக இருக்கையில் அமர்ந்து, சாந்தியின் இருக்கையையே பார்த்துக் கொண்டிருக்கிறான்,அதனைக் கண்ட கோபாலுக்கு உண்மையில் அவனது முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்றே தோன்றியது, அவனைப் பார்த்து பின் திரும்பி சாந்தியின் இருக்கையைப் பார்க்க, அவள் சன்னலின் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால், அந்த எண்ணத்தைக் கை விட்டு அமைதி அடைந்தான்.

சென்று அவனருகே அமர்வதா? வேண்டாமா?… அங்கு அமர்ந்தால் சாந்தியைப் பார்க்கத் தோதுவாக இருக்குமா?…குறுக்கில் தடைகள் இது வரை இல்லை…நன்றாகவே தெரிகிறாள்…ஒரு வேளை கூட்டம் அதிகமாகி, யாராவது இடையில் மறித்து நின்றால்?, நின்றால் என்ன…நூற்று இருபது கோடியை எட்டிய நம் திருநாட்டில் நூற்று இருபது கோடியே ஒன்றாவது குழந்தையுடன் யாராவது ஏற மாட்டார்களா…எழுந்து இடம் கொடுப்போம்…அவளது பார்வை படும் இடம் சென்று நிற்போம்…

அருகில் சென்று அமர்ந்தான்,மாணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான், இடமும் வலமும் தொண்ணூறு டிகிரி கோண அளவு, தலையாட்டி பொம்மை போல சாய்ந்து சாய்ந்து சாந்தியைப் பார்த்தான், ஒவ்வொரு டிகிரி கோண அளவிலும் அவள் தெரிந்தாள், குறிப்பாக அழகாகத் தெரிந்தாள்.

சாந்தி மீண்டும் ஒரு முறை திரும்பி அவன் நின்று கொண்டிருந்த இடத்தைப் பார்த்தாள், அங்கு அவனில்லாதது கண்டு, பேருந்து முழுதும் கண்களை அலைய விட்டுத் தேடினாள்,

இறுதியில் மாணவனின் அருகில் அவன்  அமர்திருந்ததைக் கண்டு நாணித் தலை குனிய, கோபால் மனதுக்குள் சிரித்துக் கொண்டே திரும்பி மாணவனைப் பார்த்தான்,அவன் கண்டு கொள்ளாதது போல சன்னலில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

“பிள்ளையார் ஒன்னும் அவ்வளவு மோசமான ஆளெல்லாம் இல்ல …பாவம்… அவருக்குதான் எல்லா ஊர்லயும் பிராஞ்ச் இருக்குதில்ல…சாந்திக்காக எத்தன பேரு அவருகிட்ட அப்ளிகேஷன் போட்டு வேண்டிக்கிட்டாங்களோ…எல்லாத்தையும் பார்த்துதானே செலக்ட் பண்ணனும்…ஒரு வேளை ஆஞ்சநேயர் கூட நம்மள பிள்ளையார்கிட்ட ரெகமன்ட் பண்ணிருக்கலாம்…எப்படியோ கல்யாணம் முடிஞ்சு ஆஞ்சநேயரையும் சாந்தியோடப் போயி கும்பிட்டுட்டு வரணும்”,

“ச்சே…இன்னக்கே லெட்டெரக் குடுத்திருக்கலாம்…இது வரைக்கும் இப்படி அவ நம்மளத் தேடியெல்லாம் பார்த்தது இல்ல…அநியாமா லெட்டெர மறந்துட்டனே…

நேர்லயே சொல்லிட்டா…ம்…க்கும்…அதுக்கு வக்கு இருந்திருந்தாதான்,ஒரு வருசத்துக்கு முன்னாடியே சொல்லிருக்கலாமே…”.

கைகளிலுள்ள டிக்கெட்டை சுருட்டியவாறே மாணவனைப் பார்த்தான்,அவன் இன்னும் சன்னலில் ஆழமாகத் தன்னைப் புதைத்துக்கொண்டு இருந்தான்.அவனது சட்டைப் பையில் ஒரு பால் பாயிண்ட் பேனா குத்தியிருந்ததைக் கண்டவுடன், கணப் பொழுதில் அவனைக் கேட்காமலே கோபால் அதனைத் தூக்கினான், மாணவன் கோபத்தை வெளிப் படுத்த,ஒரு நிமிடம் என்பது போல வலது கை விரல்களைக் குவித்துக் கெஞ்சினான்,அவன் எதுவும் கூறவில்லை.

சுருட்டிக் கையில் வைத்திருந்த டிக்கட்டை விரித்து,பேனாவின் மூடியை வாயில் கடித்துத் திறக்க முற்பட,மாணவன் அருகில் அதனையே உற்றுப் பார்ப்பதை உணர்ந்து,அவனிடமே பேனாவை நீட்ட, அவன் மூடியை உருகி தனது கைகளில் வைத்துக் கொண்டான்.

ஐ லவ் யூ என்று ஆங்கிலத்தில் டிக்கெட்டுக்குள் எழுதினான், மூன்று எழுத்துகள் கொண்ட ஆங்கில சொல் யூ வில் வரும் கடைசி எழுத்தான யூ வை, நீள வாக்கில் எழுத டிக்கெட்டில் இடம் போதவில்லை, மாணவனைப் பார்த்தான்,அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டான். கவலைப் படாது ஆங்கில எழுத்து ஓ வின் மீதே யூ வையும் ஒருவாறு திணித்தான், ஐ லவ் யூ தயாராகி விட்டது, கொடுப்பது மட்டும் தான் மீதம். பேனாவைத் தனது பாக்கெட்டில் சொருக முயல,மாணவன் கையை நீட்டினான்,

“மன்னித்து விடு…தெரியாமப் பண்ணிட்டேன்” என்பது போல முகத்தால் மன்னிப்புக்  கோரி, பேனாவை அவனிடம் கொடுத்து விட்டு எழுந்து நின்றான்.

நிற்கிறான்…சாந்திக்கு மூன்று அடி தூரத்தில் தான் நிற்கிறான்… இதயம் இப்போது மீண்டும் வேகமாகத் துடிக்கிறது…உட்கார்ந்திருந்த போது இருந்த தைரியம், இப்பொழுது நிற்கும்போது குறைந்திருப்பது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை,பிள்ளையாரோட வேலையாகக் கூட இருக்கலாம்.

“பஸ் ஏன் இவ்வளவு வேகமாகப் போயிட்டிருக்கு, இப்ப இந்த பஸ்ஸில போற எல்லாரும் என்ன சாகவா கெடக்குறானுக…ஆம்புலன்ஸ் மாதிரி ஓட்றான்…

அப்படியே கொஞ்சம் பேரு செத்தா தான் என்ன…அதான் நானும் சாந்தியும் இருக்கோமில்ல…அவங்க வாழ்க்கைய எல்லாம் சேர்த்து வாழ்றதுக்கு…”.

கால்கள் நகர மறுத்து நடுங்குவது போலத் தெரிகிறது, மெல்ல, மெல்ல நகர்த்துகிறான், ஒரு அடி சாந்தியின் இருக்கை நோக்கி நகர மூன்று நிறுத்தங்களை இதுவரை விழுங்கி முடித்திருக்கிறான், இதே நிலை தொடர்ந்தால் கணக்கின்படி, கோபால் இன்னும் ஒரு அடி நகர்வதுக்குள், இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விடும்,சுபம் போட்டு விட்டு இறங்க வேண்டியது தான், மீண்டும் நாளை வரை காத்திருக்க வேண்டும், அப்படியெல்லாம் விட்டு விட முடியாது, இன்று ஏனோ அவ்வளவாக பஸ்ஸில் கூட்டம் இல்லை, நாளை இது போல அமையுமா, தெரியாது…

என்ன செய்ய… ?

என்ன செய்ய… ?

“ம்..ஹும்…இந்த வாய்ப்பப் பயன் படுத்தல நீ எப்பவுமே ஊருக்குள்ளே வெறும்    பையன் தான்…

என்று அவனது அம்மா அவனிடம் கூறுவது போல இருந்தது.

“நீ எதுக்கு வேலைக்குப் போறே…. ?”

ஆமாம் நான் எதுக்கு வேலைக்குப் போறேன் ?

விவசாயம் செய்யறதுக்குப் போதுமான அளவு நிலமும்,தண்ணீரும் இருந்தும் கூட, பக்கத்தில் டவுனில் எதோ ஒரு துணிக் கம்பனிக்கு ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் கூலிக்கு, வேலைக்கு நான் எதுக்குப் போகணும்”,

ஏன் போகணும் …சொல்லும்மா நான் ஏன் போகணும்…. ?

ஏன்னா… ?

”விவசாயம் பார்த்தாப் பொண்ணு தரமட்டேங்கறாங்க,”

அப்போ இந்த துணி மடிக்கிற வேலைக்கு, முன்னூறு ரூவா கூலிக்குப் போனாத் தருவாங்களா… ?

அப்பவும் தர மாட்டானுக…படிப்பு இல்லைன்னு சொல்லுவானுக…

படிச்சிருந்தா தருவானுகளா… ?

அப்பவும் தர மாட்டானுக…மாப்ள லட்சக் கணக்குல சம்பாதிக்கிறாரா…அமெரிக்கால இருக்காரான்னு கேட்பானுக…

சரி …லட்சக் கணக்குல சம்பாதிச்சு…அமெரிக்கால இருந்தா… ?

அப்பவும் தர மாட்டானுக… மறுபடியும்… இங்க காடு தோட்டம் நிலம் இருக்குதான்னு ஆரம்பிப்பானுக…

அப்போ இதெல்லாம் இருந்தா தருவாங்களா… ?

அப்பவும் தரமாட்டணுக…ஜாதகம் செட் ஆகலைன்னு சொல்லுவானுக…யோனிப் பொருத்தம் இல்லைன்னு சொல்லுவானுக, மாப்பிள்ளைக்கு வயசாயிரிச்சுனு சொல்லுவானுக…உயரம் பத்தலைன்னு சொல்லுவானுக,அழகா இல்லைன்னு சொல்லுவானுக… சாதி… குலம்… கோத்திரம்… இன்னும்… இன்னும்… ஓராயிரம் விஷயம் வெச்சிருக்கானுக…முட்டாப் பசங்க…

எது கெடச்சாலும் போதாது…அதுக்கு மேல எதாவது இருக்கா…அதுக்கு மேல…

பெஸ்ட்…பெஸ்ட்…பெஸ்ட்…

போங்கடா…நீங்களும் உங்க கல்யாணமும்,ஈர வெங்காயமும்….

நான் எவளையாவது இழுத்துட்டு ஓடப் போறேன்….காதல் பண்ணப் போறேன்.. இந்த வயசுக்கு மேல காலேஜ் எல்லாம் போயிப் பொண்ணுகள லவ் பண்ண முடியாது… அதனால பொம்பளப்புள்ளைங்க அதிகம் வேலை பார்க்கிற கம்பனில நானும் எதாவது வேலைல சேரப் போறேன்…

எனக்குன்னு ஒன்னு மாட்டாமலாப் போகப் போகுது…

அதனால தான் நான் தினமும் பிள்ளையாரை வேண்டிக்கிறேன்…

ச்சே…எம்புள்ள எவ்வளவு வலிய நெஞ்சில தாங்கிட்டு…உன்ன ஒரு வருசம் வேண்டியிருக்கான்…அவ்வளவு கல் நெஞ்சுக்காரனா நீ…போ பிள்ளையாரப்பா…பத்தோட ஒன்னு பதினொன்ன்னுனு முன்னாடியே நீ என் பையனுக்கு ஒரு வழியக் காட்டியிருக்கலாம்..

காட்டியிருக்கலாம் தான்…

ஒரு வேளை தனது குடும்பத்தினரை மானம் கெடப் பேசுவதும்,கடவுள் என்று பாராமல் தன்னைக் கண்டபடி திட்டுவதும், ப்ளாக்மயில் செய்வதும் கூட, இவனை இந்த ஒரு ஆண்டாக அவர் சுற்றலில் விடக் காரணமாக இருக்குமோ…

தெரியவில்லையே….

அத விடுங்கய்யா….ஐயோ இப்போ நான் இத சாந்திகிட்ட கொடுத்து ஆகணுமே…

காதல்…காதல்…என்ன பண்ண…

நாளைக்குக் கொடுத்திருவமா….இல்ல…இன்னைக்கே கொடுத்திருவோம்…

இப்பொழுது இன்னும் இரண்டு நிறுத்தங்கள் மீதமுள்ள நிலையிலேயே, வேகமாக மீதமிருந்த அந்த ஒரு அடியை வைத்து, சாந்தியின் இருக்கையை ஒட்டி வந்து விட்டான், சாந்தியும் அவனது இருப்பை அறிந்து கொண்டாள்,

அவன் இருக்கையில் இருந்து எழுந்தது முதல் இதனை அவள் எதிர்பார்த்தே அமந்திருக்கிறாள். கைகளில் டிக்கெட்டுடன் சேர்ந்து அவனது கைகளும் நடுங்கிக்கொண்டு இருக்கின்றன, தொண்டையை உறுமி எச்சிலை விழுங்குகிறான், உறுமல் சத்தம் கேட்டு சாந்தி கண்களை மூடிக் கொண்டாள்,

“சா…சா…”,என்று மெல்ல வாயெடுத்து, டிக்கெட்டை நீட்டுகிறான்,

சாந்தி திரும்பவில்லை,இன்னும் கண்களை மூடியே அமர்ந்திருக்கிறாள்.

ஆனால் கோபாலின் கைகளில் டிக்கெட் இல்லை…

டிக்கெட்டை வாங்கிய சாந்தியின் தங்கை, சாந்தியிடம் தருவாள் என்று தான் கோபால் எதிர்பார்த்திருந்தான்…

விரித்துப் படித்த அவள் அதை தனது கைப் பையைத் திறந்து,உள்ளே வைத்துவிட்டு, பரவசமாக,வெட்கமாக,மகிழ்ச்சியாக…இன்னும் ஏதேதோ கலந்து, ஒரு வித  கலப்படமாக அவள் வெளிப்படுத்திய பாவனையில், கோபால் திகைப்படைந்து, சாந்தியின் தங்கையைப் பார்க்கிறான்… பின் சுதாகரித்து சாந்தியைப் பார்க்கிறான்… சாந்தியைப் பார்க்கிறான்….சாந்தியின் தங்கையைப் பார்க்கிறான்… சாந்தியைப் பார்க்கிறான்…தங்கையைப் பார்க்கிறான்…தங்கையைப் பார்க்கிறான்….சாந்தியைப் பார்க்கிறான்…

பார்க்கிறான்….

ஐயோ…ஆஞ்சநேயா…எது பெஸ்ட்…. ?பிள்ளையாரப்பா…ஒரு வருஷம் எல்லாம் போதாது… இவனெல்லாம் கடைசி வரைக்கும் வெறும்பயலாவே தான் இருக்கணும்…..

நவநீதன் சுந்தர்ராஜன்-இந்தியா

(Visited 237 times, 1 visits today)