காலனித்துவ மற்றும் பெண்ணியவாதிகளின் பார்வையில் பாலஸ்தீன பெண்களின் போராட்டம்- காடா ஹாஷேம் தல்ஹாமி-தமிழில் தேசிகன் ராஜகோபாலன்

தேசிகன் ராஜகோபாலன்லகமயமாக்கல் யுகத்தில், மேற்கத்தேய சமூக கோட்பாடுகள், குறிப்பாகப் பெண்ணியக் கருத்தை  வெளிப்படுத்துவது உலகை ஆக்கிரமித்திருப்பதாகத் தோன்றுகிறது. இன்று அனைத்து இடங்களிலும் பெண்கள் இயக்கம் கால மற்றும் இட வேறுபாடுகளைக் கடந்து ஆணாதிக்கத்தை குறிவைத்து பாலின மோதலின் அடிப்படையில் கோட்பாட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது. முன்னேற்றமடைந்த தொழில்துறை சமூகங்களில் உள்ள பெண்களும் ஏகாதிபத்தியம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, போர்க்கால நிலைமைகள் மற்றும் அன்னிய கலாசார படையெடுப்புகளுக்கு எதிராகப் போராடும் பகுதிகளில் உள்ள அதே தடைகளை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. பெண்களுக்காக நடத்தப்படும் ஐநா தசாப்த மாநாடுகளில்கூட பெண்களின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் தடுக்கும் சக்திகளின் பொதுத்தன்மையையே முதன்மைப்படுத்தியது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,

சர்வதேச ரீதியில் சமத்துவமின்மை, இராணுவ ஆக்கிரமிப்பு, இனவெறி மற்றும் யுத்தத்தின் பின்விளைவுகள் ஆகியவற்றைப் புறந்தள்ளியதன் காரணமாக ஒட்டுமொத்த விடுதலைக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்த மக்களைத் தலைகீழாக மாற்றிப் பெண்களின் பிரச்சினையைத் தனியாக வேறுபடுத்த வேண்டியிருந்தது. மூன்றாம் உலகப் பெண்களின் போராட்டங்களின் தன்மையை ஆராய்ந்துள்ள சில நிபுணர்கள் அவர்களின் போராட்டங்களுக்கு ‘பெண்ணிய’ முத்திரை குத்தப்படுவதை முழுவதுமாக நிராகரிக்கின்றனர். இந்த முத்திரையானது பெண்கள் தொடர்பான மேற்கத்திய தாரான்மைவாத அணுகுமுறை கொண்ட ஆலிஸ் வாக்கர் போன்ற பல ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர்கள் உள்ளிடடோர் ஒட்டுமொத்த மக்களின் இருப்பிற்காக ஆண்களும் பெண்களும் இணைந்து அர்ப்பணப்புடன் செயற்படுகின்ற ஒரு இயக்கத்திற்கு மாற்று விளக்கமாக ‘பெண்ணியவாதி’ என்ற வார்த்தையை உருவாக்கினர். உண்மையில், குர்ஆன் பெண்களை ‘ஆண்களின் சகோதரிகள்’ என்று குறிப்பிடுகிறது.

செரில் ஜான்சன்-ஒடிமின் பார்வையில், மூன்றாம் உலகப் பெண்கள் இனவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் பாலின பாகுபாடு ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பிருப்பதைக் காண்கின்றனர். எனவே, இந்தப் பெண்கள், மேற்கத்திய பெண்ணியம், பாலின அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான போர் எனப் பெண்களின் போராட்டத்தை மிகக் குறுகியதாக வரையறை செய்வதை, அது அவர்களின் சொந்த தேசிய அனுபவத்தின்மீது கவனம் செலுத்தும்போது வேண்டுமானால் அப்படி இருக்கலாமே தவிர எல்லா சந்தர்ப்பங்களிலும் அப்படியல்ல எனறு கூறி மேற்கத்திய பெண்ணியத்தை நிராகரிக்கிறார்கள், தங்களது சொந்த சமூகங்களுக்குளேயே பெண்களும், ஆண்களும் குழந்தைகளும் இனவெறி ஆட்சியாளர்களாலும் சர்வதேச பொருளாதாரச் சுரண்டலாலும் கட்டுப்பாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜான்சன்-ஒடிம், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கத்திய பெண்கள் நடத்திய போர்களைப் போலல்லாமல், மூன்றாம் உலகப் பெண்கள் அரசியல் போராட்டங்கள்மூலம் தங்கள் சொந்த விடுதலையை அடைகிறார்கள் என்ற முடிவிற்கு வருகிறார்.

பெல் ஹூக்ஸ் (அல்லது குளோரியா ஜீன் வாட்கின்ஸ்) மேற்கத்திய பெண்ணியம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு வெள்ளை, நடுத்தர வர்க்க சித்தாந்தம் ஆகும். இந்தச் சித்தாந்தம் குடும்ப அமைப்பைப் பெண்கள் அடக்குமுறையின் கருவியாகக் கருதுகிறது. ஆனால் மூன்றாம் உலகப் பெண்களுக்கு, குடும்ப அலகு என்பது ஒரு பூர்வீக நிறுவனமாகும், இது ஆண்கள் மற்றும் பெண்களின் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது. இந்த இருவேறுபட்ட கருத்துக்கள் பாலஸ்தீனியர்களுக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையே 1985 ஆம் ஆண்டு பெண்களுக்கான ஐ.நா. நைரோபி மாநாட்டில் வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் ‘இனவெறி அல்லது காலனித்துவ ஆட்சியின்’ கீழ் வாழும் பாலஸ்தீனிய பெண்களின் நிலையைக் கவனிக்க திட்டமிடுபவர்களுக்கு அழைப்பு விடுத்த ஒரு பொதுச் சபையின் பரிந்துரைக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தப் பொருள் இறுதியாகப் பட்டியலிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, நைரோபியில் நடந்த விவாதத்தின் பெரும்பகுதி பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களின் தென்னாப்பிரிக்க கூட்டாளிகளுக்கும் இடையே ஒரு சூடான வாதமாக மாறியது, மறுபுறம் மேற்கத்தியப் பெண்கள், ஒரு பெண்ணிய நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை தனிப்பட்ட விடுதலையில் மையமாகக் கொண்டிருந்தனர்.

தேசிகன் ராஜகோபாலன்
ஒக்டாபர் 12 1938 அன்று கெய்ரோவில் நடைபெற்ற பாலஸ்தீனத்தைக் காப்பதற்கான கிழக்கத்தைய பெண்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காகப் பாலஸ்தீன பெண்கள் பிரதிநிதி குழுவினர் லிட்டா (எல்ஓடி) சந்தியில் நிற்பதைப் படத்தில் காணலாம். நன்றி: மாட்சன் ஃபோட்டோகிராப் கலெக்ஷன் ஃ லைப்ரரி ஓஃப் காங்கிரஸ்

பாலஸ்தீன பெண்களின் அடையாளம் என்பது யுத்தத்தினாலும் புரட்சியினாலும் வார்த்தெடுக்கப்பட்டது என்ற உண்மையைச் சிலர் கேள்விகேட்குட்படுத்தலாம். முதலாம் உலகப்போருக்குப் பின்னர் பாலஸ்தீனத்தில் நிலவிய அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகள் தவிர்க்கமுடியாத வகையில் பெண்களை நாட்டின் அரசியல் போராட்டத்தில் ஈடுபடவைத்தது. அதன் முதலில் அடிக்கடி அதிகளவில் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மேல்தட்டு வர்க்கம் மற்றும் மேட்டுக்குடியைச் சேர்ந்த ஆண்களின் உறவுக்கார பெண்களை அணிதிரட்டுவதாக இருந்தது. ஆனால் நிலைமைகள் மோசமடைந்து, உயிரிழப்பும் நில இழப்பும் அதிகரித்ததால், அரசியல் அணிதிரட்டல் செயற்பாடு விரிவடைந்ததுடன் இறுதியில் விவசாய பெண்களையும் சென்றடைந்தது. 1929 ஆம் ஆண்டின் கண்ணீர் சிந்தும் சுவர் கலவரம் போன்ற ஒவ்வொரு தேசிய நெருக்கடியிலும் பாரியளவிலான பெண்கள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மிகவும் ஆரம்பகாலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய எதிர்ப்புக் குழுவான அரபு நிர்வாகக்குழு (Arab Executive), விரைவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கட்டளைக்கு எதிராகப் போரிடும் அமைப்பாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து விரைவாகவே அரேபிய பெண்களின் நிர்வாகக்குழு தோற்றம்பெற்று, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அவர்கள் ஆண் தலைமையுடன் இணைந்து செயற்பட்டமையை நவீனத்துவ உலகக் கண்ணோட்டத்தின் பிரதிபலிப்பாக நோக்கப்பட்டது. ஆரம்பகால மகளிர் நிர்வாகக்குழு, பாலஸ்தீனிய முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ பெண்களால் கட்டியெழுப்பப்பட்டதில் ஆச்சரியமில்லை. அவர்களின் முக்கிய கடமை பாலஸ்தீனிய தேசியவாதத்தை பெண்கள் தொடர்பாகச் செயற்படும் ஏனைய குழுக்களுக்குத் தெரிவிப்பதாகும். இதில் இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 1936இல் இடம்பெற்ற அரேபியர்களின் எழுச்சி ஆர்ப்பாட்டங்களில் விவசாயப் பெண்களின் தன்னிச்சையான பங்கேற்பு.

1948இல் அரேபிய பாலஸ்தீனத்தை இழந்த நக்பாவுக்குப் பிறகு, பெண்கள் தமது காரணத்தைப் பகிரங்கப்படுத்தவும் மதம் மாறியவர்களை வென்றெடுக்கவும் அண்டைய அரபு நாடுகளில் தங்கள் புதிய வாழ்க்கையை அர்ப்பணித்தனர். சல்வா அபு-கத்ரா, ஜாஃபாவை தளமாகக் கொண்ட தலைவர், டமாஸ்கஸுக்கு தப்பிச் சென்றார், அங்கு அவர் மகளிர் சங்கத்தை நிறுவி, ஃபதேவின் (Fateh) ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரானார். கெய்ரோ மற்றும் பிற அரபு தலைநகரங்களிலும் இதே போன்ற அமைப்புகள் தோன்றின. இந்த அமைப்புகளின் உந்துதல் 1948 இல் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட புதிய பாலஸ்தீன அகதிகளுக்குப் பயனளிக்கும் அறக்கட்டளை பணியில் ஈடுபட வைத்தது.

அஹ்மத் சுகீரி மற்றும் எகிப்திய ஜனாதிபதி நாசரின் அனுசரணையின் கீழ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முதல் கூட்டத்தை 1964 இல் ஜெருசலேமில் நடத்தியபோது, அதற்குச் சமூகமளித்திருந்த ஒட்டுமொத்த ஆண்கள் 422பேருடன் 45 பேர் கொண்ட ஒரு பெண் பிரதிநிதிகளையும் ஈர்த்திருந்தது. ஆனால் 1965இல், பிஎல்ஓவின் மிகவும் பிரபல்யமடைந்த இரண்டாவது தலைவரும் பின்னர் அந்த அமைப்பிற்குத் தலைமைதாங்கியவருமான அரபாததினால்  காசாவில் ஒரு புதிய அறைகூவல் விடுக்கப்ட்டமையானது ஏற்கனவே பிஎல்ஓவின் முன்னணி அமைப்பாகச் செயற்பட்டிருந்த ஒரே அமைப்பான பாலஸ்தீன மாணவர் பொதுமன்றத்தைப் (GUPS), போன்றே ஒரு பழம்பெரும் உறுப்பினரைப் போன்று பாலஸ்தீனிய பெண்கள் பொது மன்றமும் (GUPW) காசாவில் உருவெடுப்பதற்கு வித்திட்டது. பாலஸ்தீன பெண்கள் பொதுமன்றத்தின் முதல் உறுப்பினர்களுள் ஒருவரான இன்டிசார் அல்-வஜீர், அல்லது உம் ஜிஹாத் என்பவர் ஃபதேவின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவர் கலீல் அல்-வஜீரின் மனைவி ஆவார். இப்போது, அறப்பணிக்கு அதிக முக்கியத்துவம் இல்லை, ஏனெனில் பிஎல்ஓவின் இரண்டாவது மாநாட்டில் கட்டமைக்கப்பட்ட பாலஸ்தீன பெண்களமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஊக்குவிக்கப்பட்டதுடன், அவர்களைக் கியூபா, கிழக்கு ஜெர்மனி, சோவியத் யூனியன் மற்றும் ஈராக்கில் உள்ள பெண்கள் குழுக்களுடன் உறவுகளை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பெண்கள் PLO இன் கட்டமைப்புகளுக்கு வெளியே தேசியவாத பாத்திரங்களை வகிக்க முயன்றனர். இந்தக் குழுவில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சமீஹா கலீல், அவருடைய சமூக நல நிறுவனமான இன்ஷாஷ் அல்-உஸ்ரா (குடும்பத்தின் பராமரிப்பு), பாலஸ்தீனிய பெண்களை இஸ்ரேலிய பொருளாதாரத்திற்கு சேவை செய்யும் சமீபத்திய அடித்தட்டு வர்க்கமாக மாறுவதை மாற்ற முயன்றார். அவர் 1966 இல் அரபாத்துக்கு எதிராகப் பாலஸ்தீனிய பிராந்தியத்தின் ஜனாதிபதியாகப் போட்டியிட்டார். இந்த முன்னாள் ஆசிரியர் தனது தனிப்பட்ட வாழ்நாளில் தான் வளர்ந்ததைப் போலவே தனது அமைப்பையும் ஒரு அனாதை இல்லம், ஒரு பேக்கரி, ஒரு முன்பள்ளி, ஒரு நூலகம், ஒரு நாட்டுப்புற அருங்காட்சியகம், மற்றும் ஒரு ஜவுளிக்கடை மற்றும் முந்நூறு பெண் மாணவர்களுக்கான பல்கலைக்கழக உதவித்தொகை திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வளரச் செய்தார்.

இவ்வாறாக, பாலஸ்தீனிய பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் பாலஸ்தீன தேசிய வரலாற்றுப் பாதையிலிருந்;து பிரிக்கமுடியாத வகிபாகத்தைக் கொண்டுள்ளனர்.

 லேக் ஃபாரஸ்ட் கொலேஜ்

நன்றி : https://www.worldliteraturetoday.org/2021/summer/struggle-palestinian-women-colonization-and-feminist-perspectives-ghada-hashem-talhami

தேசிகன் ராஜகோபாலன்
காடா ஹாஷேம் தல்ஹாமி-Ghada Hashem Talhami

தமிழில் தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை
தேசிகன் ராஜகோபாலன்

(Visited 48 times, 1 visits today)