நாகரிக அடுக்குகள்-சினிமா தொடர்-பாகம் 03-விஜய ராவணன்

கட்டாந்தரையை செம்மைப்படுத்தி ஆழமாய் அஸ்திவாரம் போட்டு அறிவியலில் அதிநவீன வளர்ச்சி பெற்ற நாகரிக மனிதன் நிறுத்தாமல் கட்டிக் கொண்டேயிருக்கும் சமுதாய அடுக்குகளின் கட்டுமானப்பணி நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வர்ணங்கள் வெளுத்துப்போய் கூரை பெயர்ந்து சுவற்றில் வெடிப்புவிட்ட அந்த பழமைவாய்ந்த கட்டிடம் எந்நேரமும் அவன் மேலேயே விழுந்துவிடலாம். ஆனால் அவன் அதைப்பெரிதாய் பொருட்படுத்தவுமில்லை. அதைவிட்டு வெளியேற போவதுமில்லை…. மாறாக இடிந்து விழாமலிருக்க மேலும் புதுப்பித்துக் கொண்டே போகிறான்….

000000000000000000000000000000000000

Sir-Hindi (2018)

சமுதாயத்தின் இருவேறு துருவங்களில் வாழும் உயிர்களுக்கிடையே சந்தர்ப்பசூழல் நெய்யும் மெல்லிய உறவுப் பாலம்… ஒருவரது அகவேதனைக்கு இன்னொருவர் பூசும் மருந்து… தடம்புரளும் மற்றவரது கனவை மீண்டும் இரும்புப் பாதையில் ஏற்றிவிடும் ஆறுதல்…. பிறரது அகத்தைப் புரிந்துகொண்ட மௌனம். அதன் வழியே உண்டாகும் மெல்லிய ஈர்ப்பு… தொடர்ச்சியாய் துளிர்விடும் மெல்லிய காதல்… Rohena Gera என்ற பெண் இயக்குனரின் முதல் படம்தான் ‘Sir’.

தருணங்கள் தன்னுள் ஆச்சரியங்களை உள்ளடக்கியவை. சாப்பிட்டுமுடித்த பொட்டலத்தின் சுருக்கங்களில் எதிர்பாராமல் வாசிக்கக் கிடைக்கும் ஒரு நல்லபடைப்பை போலத்தான், அயர்ச்சியான ஒரு பயணத்தின்போது எதேச்சையாக இப்படம் பார்க்க நேர்ந்தது.

விஜய ராவணன்மும்பை நகரின் பின்னனியில் நேரெதிர் பொருளாதார அடுக்குகளின் இடையில் மலரும் எண்ணற்ற காதல் திரைப்படங்கள் வந்துள்ளன. பெரும்பாலும் பிரபல நட்சத்திரக் காதல் கதைகளாகவே இருக்கும் அவை, வரையறுக்கப்பட்ட சட்டகத்துக்குள் செயற்கை கொண்டாட்டத்துடனோ இல்லை வலுக்கட்டாயமான அழுகையுடனோ ஒரு பொய்யான சித்திரத்தையே திரும்பதிரும்ப காட்சிப்படுத்த முயலும். நிராகரிப்புகளுக்கும் கைகூடல்களுக்கும் இடையேயான தூரத்தை உண்மையான காரணிகளைக் கொண்டு அவை அளந்து காட்டுவதில்லை. வளரும் நவீன இந்தியாவின் சுவடு பதியாத கிராமத்தின் பின்னணியிலிருந்து வரும் ‘ரத்னா’ (Tillotama Shome), அல்லும்பகலும் பரபரப்புகள் மினுங்கும் மும்பை நகரில், கட்டிட காண்ட்ராக்ட் தொழில் செய்யும் பணக்கார மேல்தட்டு இளைஞனின் வீட்டு வேலைக்காக வருகிறாள்.

அவளுக்கு இந்தியாவின் கனவுநகரின் மீது இயல்பாகத் தோன்றும் மையல் ஏதுமில்லை. மிடுக்கான அதன் ஆடம்பரத்தைப் பார்த்து கண்கள் சொருகி கிறங்கியிருக்கவில்லை. பவுடர் போட்ட அதன் போலிமுகத்தை அறிந்தவள் போலும். தனக்கான வட்டத்துக்குள் மட்டுமே தன்னை குறுக்கிக் கொள்கிறாள். ஒட்டுமொத்த பாம்பே நகரிலும் சரி, வீட்டுவேலைக்காகத் தங்கியிருக்கும் வசதியான அப்பார்ட்மெண்ட்டிலும் சரி, தனக்காக அவள் வகுத்துக்கொள்ளும் வட்டம் மிகச் சிறியது. திருமணமான சொற்ப நாட்களில் கணவனை இழந்து குடும்பச் சுமையோடு மாநகரில் வேலைக்கு தனியாக வந்திருக்கும் கிராமத்து இளம்விதவையின் வட்டம் வேறு எப்படி இருக்க முடியும்?

ஆனால், அவள் ‘Sir’ என்று அழைக்கும் வீட்டு முதலாளி  அஷ்வின் (Vivek Gomber)‘’ புழங்கும் பளபளப்பான வாழ்க்கைத்தளம் விஸ்தாரமானது. வரவுகள் பற்றிய சிந்தனைகளற்றது. பணக்கார குடும்பப் பின்னணிக் கொண்டது… கொண்டாட்டங்கள் நிறைந்தது. இருவேறு வாழ்வுநிலை ஒரே வீட்டில்! நிசப்தமாய் ஒன்றன் முதுகின் பின்னால் இன்னொன்று. பரந்த இந்தியாவில் பொதுவாக காணப்படும் வேறுபட்ட சமுதாய நிலையின் ஒரு மினியேச்சர் வடிவம். ஆனால் ஆச்சரியமே இங்கு ஒருவர் இன்னொருவரை அண்ணாந்து பார்த்து பொறமையோ ஏக்கமோ கொள்ளவில்லை…. அதேபோல் வேலையாள் என்றபோர்வையில் அடிமையாய் நடத்தப்படும் அவமானங்களும் இல்லை.

வெகுசமீபத்தில் நின்றுபோன தன் திருமணத்தால் உள்ளே உறுத்தும் மனப்புண்ணுக்கு, வேலைக்காரியைத் திட்டித்தீர்த்து அஷ்வின் மருந்துதேடிக்  கொள்ளவில்லை. சகமனுஷியாக பாவிக்கிறான். சிறுசிறு உதவிகளுக்கும் நன்றி சொல்கிறான். ஒருவேளை நியூயார்க் நகரிலிருந்து திரும்பியவன் என்றபடியால் இங்கு இயல்பாய் நிலவும் எஜமானிய போக்கும் மேல்தட்டு போதையும் அவனை இன்னும் தொற்றிக் கொள்ளவில்லை போல.

நம் நெடுநாள் தேடல்களை தன் முஷ்டிக்குள் இறுக மறைத்துவைக்கும் காலம் திடீரென்று மனமிளகி எதிர்பாரா தருணத்தில் கண் முன்னே கைகளை விரித்து நீட்டும்… அந்த அற்புதமான நொடியே கனவுகளின் திறவுகோல். நான்கு சுவற்றைத் தாண்டி வேலைக்காரப் பெண்ணின் கண்களில் மிளிரும் கனவை அஷ்வினும் உணர்கிறான். அதை மெய்ப்பிக்க அவள் எதிர்பாரா உதவிகளைச் செய்கிறான்… ஆம், சமுதாயமும் பொருளாதாரமும் வகுத்த எல்லைக்குள் தன்னை ஒடுக்கியிருக்கும் ரத்னாவுக்கும் கனவொன்று இருக்கிறது! நகரவாழ்வில் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான். முறையாக டெய்லரிங் கற்க வேண்டும். நகரத்து நவீன ஆடைகள் தைத்து பழக வேண்டும்.

இன்னும் பழஞ்சிந்தனையின் கோணிப்பைக்குள் தன்னைப் புகுத்தி வாழும் சமுதாயக் கட்டமைப்பைப் பற்றி வெளிப்படையாய் இப்படம் சாடவில்லை. ஆனால் அதற்கு தேவையுமில்லை என்பதைப்போல் ரத்னாவின் சித்திரமே சாட்சியாக நிற்கிறது. அதிலும் குறிப்பாக தங்கையின் திருமணத்திற்காக ரத்னா தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பும்போது, பஸ் ஏறியதும் தன் வளையல்களை கழற்றிப் பைக்குள் மறைத்து வைக்கும் காட்சி தான், இன்றும் நம் கண்களுக்குப் புலப்படாத கிராமங்களின் இளம் விதவைகளின் வாழ்வியல் நிலை. என்னதான் வெளியூரில் தைரியாமாக தங்கி சுயமாக சம்பாதித்தாலும், தன் ஊர் எல்லைக்குள் நுழைந்ததுமே வேறொருவளாய் மாறும் விந்தை! இந்தத் தோலுரிப்பு அவளே அறியா வண்ணம் அனிச்சையாய் நிகழ்கிறது.

பொருளாதார வகுப்பு வேறுபாடின்றி இருவருக்குள்ளும் அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளாத ஆழத்தில் ஒருமையின் வேதனையே நிழலாடுகிறது. அதற்குமுன் பணமும் வெறும் உப்பற்ற பண்டம்தான். தனிமையில் உழலும் உயிருக்கு இன்னொரு தனிமையின் இருப்பே மனஆறுதல். சூன்யத்திலிருந்து விடுபட்டு கனவை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்க அதுவே உந்துதல். ரத்னாவின் இருப்பு அஷ்வினுக்கு மறந்துபோன தன் கனவை அடையாளம் காட்டுகிறது! வெவ்வேறு படிக்கட்டுகளில் நிற்கும் கால்கள் அதன்போக்கில் ஏறவும் இறங்கவும் துடிக்கின்றன. ஒன்றாய் நடைபோட விழைகின்றன. அதேநேரம் பாதங்களை புண்ணாக்கக் கூடிய கூரிய நிதர்சனத்திற்கு அஞ்சுகின்றன.

பிரபல முகங்களும் பெரிய பட்ஜெட் படங்களும் இடத்தை அடைத்துக்கொண்டு கைவீசி நடக்கும் நெரிசல்மிக்க பாலிவூட் வீதிகளில் ‘sir’ போன்ற யதார்த்தமான எளிய படைப்புகளுக்கு உரிய இடம் கிடைப்பதில்லைதான். ஒருவரின் கனவுக்கு இன்னொருவர் வண்ணம் பூசும் புள்ளியில் உண்டாகும் மனநெருக்கத்தின் இடையே உருகாத பனிப்பாறையாய் நிமிர்ந்து நிற்கிறது “Sir” என்ற ஒற்றை வார்த்தை! விளிம்பு மட்டுமே தெரியும் அதன் ஆழம் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

The Platform (El Hoyo, Spanish 2019)

எத்தனை ஓட்டம்… எவ்வளவு சுமைகள்… எத்தனை போட்டிகள்… தேவைகள்….பொறுப்புகள்… கனவுகள்… கொடுமைகள்…வேதனைகள்…. வெறுப்புகள்… எத்தனை எத்தனை கட்டமைப்புகள்… அதன்மேல் எவ்வளவு அடுக்குகள்.. அதில் நாம் எத்தனையாவது அடுக்கில் இருக்கிறோம் என்பதுதான் நம் வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஆனால் நமக்கான அடுக்கை நாம் தீர்மானிப்பதில்லை… நம் தளத்திற்கான சாவி நம் கையில் கொடுக்கப்படுவதில்லை.

நமக்கான தளம் எது?? பிறந்ததும் கண்திறந்து பார்க்கிறோம்… நமக்கான தளத்தை யாரோ ஒருவன் முன்னரே முடிவு செய்து வைத்திருக்கிறான். அந்தத் தளத்தில் தான் தவழ்கிறோம்… அழுகிறோம்… சிரிக்கிறோம்… நடை பழகுகிறோம்… விழுகிறோம்… ஆனால் எழுவதற்கான சாத்தியக்கூறுகள் நம் கையில் இல்லை. அதை நாம் தள்ளப்பட்டிருக்கும் தளமே நிர்ணயம் செய்கிறது. தலை உயர்த்திப் பார்க்கிறோம். மேல் தளத்தில் இருப்பவன் நம் இயலாமையைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனிடம் மன்றாடுகிறோம். இறைஞ்சுகிறோம். ஆனால் நம் வேண்டுதல்கள் அவன் செவியை எட்டுவதில்லை. காரணம் அவர்கள் நமக்கு மேலே இருக்கிறார்கள். மேலே இருப்பவன் யார்? கடவுளா? சாத்தானா? வேறொருவனின் விளையாட்டு பொம்மையா?? இல்லை அவனும் நம்மைப் போன்ற இன்னொரு அடிமையா?? ஆனால் கசப்பான உண்மையே, எட்டாத உயரத்திடம் தலை உயர்த்தி நாம் கெஞ்சுவதைப் போல நமக்கும் கீழே தவிக்கும் வாடிய முகங்களை நாம் என்றுமே தலைகுனிந்து பார்த்ததில்லை. அவர்களின் கூக்குரலுக்கு செவிசாய்ப்பதில்லை… காரணம் அவர்கள் நமக்குக் கீழே இருப்பவர்கள்… அவர்களால் அப்படிக் காத்திருக்கவும் கெஞ்சவும் மட்டுமே முடியும்.

இப்படியே ஒருவர் கீழ் ஒருவராய் மேலே இருப்பவன் சவைத்துப்போடும் வாழ்வின் மிச்சத்திற்காக கீழே இருப்பவன் அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிறான். இந்த அடுக்குகளுக்குத் தான் எத்தனை எத்தனை பெயர்கள்!!

இந்தக் கசப்பான உண்மையை நமக்கு வேறொரு கோணத்தில் படம் பிடித்து காட்டுகிறது ‘The plaform’  என்ற ஸ்பானிய திரைப்படம். இப்படத்தின் கட்டமைப்பும் கருவும் நம் சமூதாயத்தின் உருவகமே.  அடுக்குகளாய் பிரிக்கப்பட்டிருக்கும் மக்கள்… மொத்தம் எத்தனை அடுக்குகள்?? அதிலிருந்து எங்ஙனம் மீள்வது?

இயற்கை எல்லோருக்கும் சமமாகத் தான் அள்ளித் தருகிறது. ஆனால் சுயநலக் கறை படிந்த நம் கரங்கள் தான் மற்றவனிடமிருந்து பிடுங்கிக் கொள்கின்றன. அப்படி சுயநலமாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே உன்னதமான வாழ்வுக்கான விடியல் சாத்தியப்படும் என்ற பொய்கூற்று இங்கு மீண்டும் மீண்டும் போதிக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் இந்த சமுதாய அடுக்குகளில் இருந்து நம்மை யாரும் உய்விக்கப் போவதில்லை. அதில் கட்டுண்ட நாம் என்றுமே விடுதலை அடையப் போவதில்லை.

விஜய ராவணன்கையில் புத்தகத்துடன் இந்த கட்டமைப்புக்குள் தானாகவே நுழையும் Goreng தான், மீட்சியை நோக்கி மனிதகுலத்தை வழிநடத்த எத்தனிக்கும் இறைதூதன். ஆனால் ‘பசி’ என்ற ஒற்றை வார்த்தை முன் உலகின் எல்லா தூய்மையும் மெய்மையும் தோற்றுவிடும்! மீட்க வந்த Goreng யின் கைகளும் கறைபடுகின்றன. பசியின் கொடூரம் அவனைத் தான் கொண்டுவந்த (புனித) நூலையே கிழித்துண்ண வைக்கிறது!! ‘தக்கனப் பிழைத்தல்’ கோட்பாட்டில் சுழலும் இப்புவியில் புனித நூல்களுக்கும் அவை போதிக்கும் அறத்திற்கும் இடமேது??

“இறை தூதனானவன் தன் ரொட்டிகளை அள்ளித் தர வேண்டும். அடுத்தவன் வாயிலிருந்து பிடுங்கித் தரக் கூடாது…”  என்ற கூக்குரலே எஞ்சுகின்றன எல்லா அடுக்குகளையும் அதன் இன்னல்களையும் கடந்து எங்கோ ஓர் மூலையில் நமக்கான சிறு ஒளி இருக்கிறது இல்லை இருப்பதாய் நம்புகிறோம்… அந்தத் தருணத்திற்காகவே காத்திருக்கிறோம். தனக்கு எட்டாதவொன்றை இல்லாதவொன்றை வாழ்வின் எல்லைவரை தேடி அலையும் நம்முடைய பிம்பம் தான் Miharu கதாபாத்திரமும்.

நம் வாழ்க்கை அனுபவங்கள் இந்த சமூதாயத்தைப் பற்றிய புரிதலையும் மேலான அறிவையும் நமக்குத் தந்துவிட்டதாய் நம்பும் நாம் அடிப்படையில் ஒன்றுமே அறியாதவர்கள்.  ஒரேமாதிரி ப்ரோகிராம் செய்யப்பட்ட இயந்திரத்தனமான வாழ்வின் அனுபவங்கள் நமக்கு அப்படியென்ன கற்றுக் கொடுத்துவிடும்? Imoguiri போல நாமும் அனுபவமிக்கத் தற்குறிகளே… நம் நன்மைக்காகத் தான்…. என்று இங்கு சொல்லப்படும் அனைத்துமே மாபெரும் பொய்களே. நம்மை இயக்குபவன் யாரும் நம் நன்மையைப் பற்றி சிந்திப்பதில்லை. இதிலிருந்து விடுபட நம் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்யவேண்டும். ஆனால் அக்குரலுக்கு முகத்தின் அடையாளமேதும் தேவையில்லை என்று நம்புகிறார் இயக்குனர்  Galder Gaztelu-Urrutia யாரோ ஒருவன் வேடிக்கையாய்க் கட்டிய சமுதாயக் கட்டமைப்பின் அடுக்குமாடிக் கட்டிடத்தில் நாம் எல்லோருமே ஏதோவொரு தளத்தில் உழன்று கொண்டிருக்கிறோம், சகமனிதனை  வெறுத்தபடி… வஞ்சித்தபடி…

ஏனென்றால் இவ்வுலகில் மொத்தமே மூன்று விதமான மனிதன் தான், மேலே இருப்பவன்… கீழே இருப்பவன்… விழுபவன்…

விஜய ராவணன்-இந்தியா

விஜய ராவணன்

(Visited 80 times, 1 visits today)