சொர்க்கம்-கவிதை-வேலணையூர் ரஜிந்தன்

சொர்க்கம்

வேலணையூர் ரஜிந்தன்
ஓவியம்: டிஷாந்தினி நடராசா

நாலைந்து தென்னை மரம்
நடுவே சிறு மண்குடிசை
பனை மட்டை வரிச்சுக்களோ
சாளரமாய் வீட்டைச்சுற்றி

அதிகபட்சம் உக்கியிருக்கும்
ஓலைக்கூரை நீக்கல் வழி
கதிரவனும் கார் முகிலும்
அம்புலியும் எட்டிப்பார்க்கும்

முன் மதிய விழுதுகளாய்
ஊடுருவும் கதிரொளிகள்
சாணமிட்ட திண்ணையதில்
நட்சத்திரங்களைத் தருவிக்கும்

கார்காலம் ஓயும் வரை
ஒழுகும் நீரை ஏந்திக்கொள்ள
சட்டி பானை சிரட்டை பேணி
அத்தனையும் படையெடுக்கும்

மாரிகாலத் தவளைப் பாடல்
சில்வண்டு மீட்கும் இசை
தாழ்வாரம் வடிக்கும் மழை
இராக்கால இராஜகீதம்

பன்னாடை ஊமல் கொண்டு
அடுப்பெரிக்க எழும் புகையோ
வானம் வரை நீண்டு சென்று
முகிலுக்கே சவால் விடுக்கும்

மண்தரையில் ஓலைப்பாயை
விரிச்சுப்படுக்க வருமுறக்கம்
குடிசைக்குள் சொர்க்கத்தையே
கூட்டிவந்து குடியமர்த்தும்!

வேலணையூர் ரஜிந்தன்-இலங்கை

வேலணையூர் ரஜிந்தன்

(Visited 73 times, 1 visits today)