மலாயா பழங்குடியினர் ஒரு நோக்கு-கட்டுரை-யோகி சந்துரு

யோகி சந்துருகோலாலம்பூரிலிருந்து நெடுங்சாலை வழியாகப் பயணித்தால் சரியாக ஒரு மணி நேரத்தில் சென்றடைகிறது கேரி தீவு. நம்மவர்கள் பெரிதும் கவனிக்காத இடங்களில் கேரி தீவும் ஒன்று. கேரி தீவில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். செயற்கைக்கு இருக்கும் வெகுமதி, இயற்கைக்கு இருப்பதில்லை என்பதற்குக் கேரி தீவு நல்ல உதாரணம். மிக அருகிலேயே இருந்தும், நான்கூடக் கடந்த மாதம் வரையில் அந்தத் தீவுக்குப் போனதில்லை.

பூர்வக்குடிகளின் கிராமங்கள் அங்கிருக்கிறது என்ற தகவல் தெரிந்திருந்தும்கூட அங்குச் செல்வதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்படவுமில்லை; வாய்ப்பை நான் ஏற்படுதிக்கொள்ளவுமில்லை. ஏதோ ஓர் ஆர்வம் உந்தித்தள்ள திடீரெனக் கேரி தீவுக்குக் கிளம்பிச் சென்றேன்.

நாடே நோன்பு நோற்றிருந்த அந்த நேரத்தில், சாலை நெரிசல் எதுவுமில்லாத காலை வேளையில் தலைநகரிலிருந்து சரியாக ஒரு மணி நேரத்தில் கேரி தீவை சென்றடைந்தது எங்களின் வாகனம். பேர்ட் கிள்ளான் சாலை மற்றும் பந்திங் போவதற்கு முன்பாகவே இருக்கிறது அழகிய கேரி தீவு. 32 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பளவு கொண்டது இந்தத் தீவாகும். சிங்கப்பூரின் மொத்த பரப்பளவில் ஐந்தின் ஒரு பகுதி இது எனக் கணிக்கப்படுகிறது. 1990-களில் குட்டி குட்டி கிராமங்களும் பட்டணங்களும் எப்படி இருந்தது என நினைவு படுத்திக்கொள்ள விரும்பினால், கேரி தீவுக்குப் போய்வரலாம்.

காட்டில் தன் சொந்த வரையரையில் வசிக்க வேண்டிய பூர்வகுடி மக்கள் தற்போது சராசரி மலேசிய மனிதர்கள் வாழ்ந்து முடித்த 90-கள் வாழ்கையைக் காட்டிலிருந்து வெளிவந்து வாழ தொடங்கியிருக்கிறார்களோ என்ற எண்ணம் பார்ப்பவர்களுக்கு எழாமல் இருக்காது.

மிகப் பெரிய அளவில் செம்பனை உற்பதி செய்யப்படும் இடங்களில் அந்தத் தீவும் ஒன்று என்பதை நாம் பயணத்தின் போதே அனுமானிக்க முடியும். அழிக்கப்பட்ட கன்னிக்காடுகள் ‘சைம் டர்பி’ நிருவனத்தின் செம்பனை தோட்டங்களாக உருமாறி, நீர் நிலைகளுக்குப் பஞ்சமில்லாத அங்குச் செழித்து வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கூடவே லஙாட் ஆறும், கேரி தீவின் கடற்கரையும் இந்தச் செம்பனை தோட்டங்களுக்கு வழு சேர்த்துக்கொண்டிருக்கின்றன.

நான் அங்குச் சென்றதற்கான முதன்மை காரணமே அங்கிருக்கும் பூர்வக்குடிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்குதான். தற்போது ‘சைம் டர்பி’ நிறுவனதின் செம்பனை தோட்டங்களுக்குப் பெயர்போன இடமாக இந்தக் கேரி தீவு மாறியிருந்தாலும், அங்கு வசிக்கும் ‘மா மேரி’ இனத்தைச் சேர்ந்த பூர்வகுடிகளைத் தவிர்த்துவிட்டு கேரி தீவின் வரலாற்றை எழுதவே முடியாது.

மலேசியாவில் மூன்று பிரிவுகளில் வசிக்கும் 18 இன பூர்வக்குடிகளில் செனோய் பிரிவைச் சேர்ந்த இந்த இனத்தவர்கள் கடற்சார்ந்த வாழ்க்கை வாழும் பூர்வகுடிகளாவர். முதலாம் உலகப்போரின் தொடக்கத்திலிருந்து இவர்கள் கடல் மற்றும் கடற்சார்ந்த நிலத்திலிருந்து (காட்டிலிருந்து) வெளிவர நேர்ந்தது என்று தெரிவித்தார் நான்அங்கு சந்தித்த பூர்வக்குடிகளில் ஒருவரும், முகமூடிகள் செய்யும் கலைஞர்களில் ஒருவரான ஏலியாஸ் என்பவர்.

காலணிய அதிகாரியான Edward Valentine John Carey நினைவாக அவரின் பெயரையே இந்தத் தீவுக்குச் சூட்டப்பட்டுள்ளது. ரப்பர் மற்றும் காப்பி உற்பத்தியை அங்கு வேலாண்மை செய்து, அதை 100 ஆண்டு வெற்றிக்கு வழிவகுத்த அவரின் பெயரை அந்தத் தீவுக்கு வைத்ததில் ஆச்சரியமில்லைதான். ஒரு காலத்தில் ரப்பர் உற்பத்திக்காக நிறைய இந்தியர்கள் அங்குக் கூலி தொழிலாளியாக இருந்துள்ளனர். கேரி தீவு தற்போது ‘சைம் டர்பி தீவு’ எனப் புதிய பெயருக்கு மெல்ல மெல்ல மாறி வருவது வெளி உலகிற்கு இன்னும் தெரியவில்லை.

‘மா மெரி’

பூர்வக்குடிகளின் மொழியில் Mah என்றால் மக்கள், Meri என்றால் வனம் என்று பொருளாகிறது. மலேசியாவில் மூன்று பிரிவுகளில் இருக்கும் 18 இன பூர்வக்குடிகளில் இவர்களுக்குத் தனிச் சிறப்புகள் உண்டு.

கடல் சார்ந்த வாழ்க்கையைக் கொண்டிருந்த இந்தப் பூர்வக்குடிகளுக்கு ஒரு சமயத்தில் கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதல்களால் பிரச்சனை எழுந்தது. பாதுகாப்பை நாடிய அவர்கள், தீவின் உள்பகுதியில் குடியேறினார்கள். அவர்கள் தடம்பெயர்ந்த சுவடுகளைப் பிறர் அறியாவண்ணம் சிலந்தி வலைக்களங்களை அமைத்ததுடன், இவர்களின் தொல் உறைவிடம் என அடையாளம் காண்பிப்பதற்குச் சில அடையாளைங்களை வைத்து, பாதுகாத்தனர் அம்மக்களின் மூதாதைகள்.

அதே முன்னோர்கள் ஆரம்பத்தில் தாயகம் திரும்புபவர்க்கான வாழிடம் எனவும் பின்னர் அதற்கு அருகாமையில் வசிப்பதற்குரிய வீடுகளாகவும் கட்டமைத்தனர். பூர்வக்குடிகள் புனித மலையான Sok Gre மலையிலிருந்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் சடங்கு நிகழ்வுகளுக்கான கச்சாப் பொருட்கள், வைத்திய சிகிச்சை மற்றும் உணவுக்கான மூலிகைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றனர். இம்மலையானது அத்தீவின் அட்சய பாத்திரமாகவே இருக்கிறது.

மூதாதையர்களை வழிபடும் இவர்கள் அவர்களின் உத்தரவின்றி எதையும் செய்வதில்லை. ஆவிகள் வழிபாடு என்பது உலகப் பூர்வக்குடிகளில் முதன்மையானது என்றாலும் அது இனத்திற்கு இனம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது என்பதை ஆராய்ந்தால் நம்மால் கண்டு கொள்ள முடியும். அந்த வகையில் மா மெரி இனத்தில் முன்னோர்கள் வழிபாட்டுத் தளத்திற்குத் தனியிடம் உண்டு.

மூதாதையர்களை வழிபடும் இடத்தில் ஓலையினால் வேய்த இரண்டு தொட்டிகளைத் தொங்க விட்டிருக்கின்றனர். வழிபாட்டுக்குப் பிறகு வைக்கப்படும் கோரிக்கை அல்லது அவர்கள் தேவை எதுவாக இருந்தாலும் வேண்டிக்கொண்டு பின் அது நிறைவேறிய பின், மூதாதையர் கேட்பது எதுவாக இருந்தாலும் அந்தத் தொட்டிலில் காணிகையாக வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் மிகுந்த பயபக்தியுடன் இருக்கிறார்கள். இந்த வழிபாட்டின் போது மூதாதையர்களின் ஆவி, யார் மீதாவது இறங்கி பேசுகிறது. எதுவாக இருந்தாலும் அவர்கள் முன்னோர்களின் உத்தரவை பெற்ற பின்பே எதையும் செய்யத் துணிகிறார்கள். தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்தது ஒப்புக்கொண்டது உட்பட அந்த உத்தரவின் பேரில்தான்.

அங்கு வரும் விருந்தினர்களை வரவேற்க அவர்கள் கொட்டாங்கட்சியினால் ஆன கரண்டியால் , மண் தொட்டியில் மந்திரித்து வைத்திருக்கும் புனித தண்ணீரை அள்ளி நமது காலில் ஊற்றி, சுத்த படுத்துகிறார்கள். (தூய்மையாக்கிக்கொள்வது நமது அகத்தையா புறத்தையா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ) பின், ஓலையில் செய்த தலை கவசத்தை மரியாதை நிமித்தமாக வருகையாளர்களுக்குச் சூட்டி கௌரவப்படுத்துகிறார்கள்.

அவர்களுடைய திருமணச் சடங்குகள் குறித்துப் பேசும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவர்களின் பாரம்பரிய உடை, நகை ஆபரணங்கள் அனைத்துமே பெருவாரியாகப் பனை ஓலையில் செய்யப்பட்டதாக இருக்கிறது. ஆனால், அவை மிகுந்த வேலைப்பாடுகளுடன் மிக நேர்த்தியான முறையில் அழகாகச் செய்யப்பட்டுள்ளன. அதற்கான பயிற்சிகளை அவர்கள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொண்டே இருப்பதுடன் அடுத்தத் தலைமுறையினர் இந்தக் கலாச்சாரத்திலிருந்து விடுபடாமல் இருக்கக் குழந்தைப் பிராயம் முதலே ஆண்-பெண் பேதமில்லாமல் கற்பிக்கப்படுகிறது.

திருமண நாளில், திருமணம் நடைபெற்று முடியும் வரை மணப்பெண்ணும் மாப்பிளையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாது. திருமணச் சடங்குகளில் தனக்காக நிச்சயித்திருக்கும் ஜோடியை, மணமகன் சரியாக அடையாளம் கண்டு பிடித்துச் சொல்லுதல் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. உதாரணமாக மணப்பெண்ணானவள் தனது தோழிகளுடன் குடிசையில் இருக்க அவர்கள் ஒரே நேரத்தில் கைகளை மட்டும் வெளியில் நீட்டுவார்கள். மண மகன் அந்தச் சிறிய குடிசையை நான்காவது சுற்று முடிவதற்குள், மணமகளைச் சரியாக அடையாளம் கண்டு சொல்லிவிட வேண்டும். இல்லையேல் இதே சடங்கு சற்று கடினமாக்கப்பட்டும் திரும்பவும் நடத்தப்படும். இது சடங்கு என்றாலும் விளையாட்டாகவும் கிண்டலும் கேலியுடனும் நடத்துகிறார்கள்.

கடல் பூஜை :

மா மெரி இனத்தவர்களின் பெரிய திருவிழாவானது பிப்ரவரி மாதத்தில் வருகிறது. கடல் மாதாவிற்கு அவர்கள் விழா எடுத்து பூஜை செய்கிறார்கள். மூதாதையர்கள் ஆத்மாக்கள் அவர்கள் வசிக்கும் கிராமத்தின் காப்பாளராக விளங்குவதால், ‘மூதாதையர்கள்’ விழாவை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுப்பதுடன் அதற்கான விழாவை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சூரிய உதயத்தில் சிறு குழுவினராகப் படகில் சென்று ஆற்றில் அரிசியைத் தூவி நெய்வேத்தியம் சமர்பிக்கின்றனர். பின் சில சடங்கு சம்பிரதாயங்களுக்குப் பிறகு, அவர்களின் பாரம்பரிய முகமூடி நடனம் ஆடப்படும். முகத்தில், மர முகமூடிகள் அணிந்து பனை ஓலை உடையணிந்து, அவர்கள் கலாச்சார நடனமானது காண்பவரை வியப்பிலாற்றக்கூடியதாக இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த மாபெரும் விழாவைக்காண்பதற்கு வெளியிலிருந்து வரும் பூர்வக்குடி அல்லாதவர்களும் சுற்றுப்பயணிகளும் முன்பதிவு செய்து கட்டணமும் செலுத்த வேண்டும்.

மா மெரியின் முகமூடிகள் :

சுமார் 700 வடிவ முகமூடிகளை இந்தப் பூர்வக்குடிகள் ஒரு காலத்தில் செய்துக்கொண்டிருந்தனர். கிட்டதட்ட 100 கலைஞர்கள் இந்த முகமூடிகளைச் செய்வதில் வல்லுனர்களாக இருந்திருக்கின்றனர். ஒவ்வொரு முகமூடியும் ஒரு முன்னோரை குறிப்பதாக அவர்களின் நம்பிக்கை இருந்தது. தற்போது 100 வடிவங்களில் முகமூடிகள் செய்யப்படுவதாகவும் அதைச் செய்ய முப்பதுக்கும் குறைவான தேர்ச்சி பெற்றவர்களே இருக்கிறார்கள் என்றும் இப்பழங்குடி இனத்தின் நடன கலைஞரும் முகமூடி செய்யும் கலைஞர்களில் ஒருவரான ஆலியாஸ் மற்றும் ஷாருல் தெரிவித்தனர். இந்த முகமூடிகளைச் செய்வதற்குச் சிவப்பு மண் கொண்ட சதுப்பு நிலக்காட்டில், mahogany மர இனத்தைச் சேர்ந்த Nyireh Batu மற்றும் Nyireh Bunga மரங்களை வெட்டி எடுத்துவந்து, அதில் முகமூடிகளைச் செய்கிறார்கள்.

நம்மவர்கள் பெருமை பேசும் கற்சிற்பங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை இவர்களின் மரச்சிற்பங்கள் என்பதை நாம் பார்க்கும்போதே தெரிந்துக்கொள்ள முடியும். ஒரே மரத்தில் செய்து முடிக்ககூடியதாக இருக்கிறது இவர்களின் மரச்சிற்பங்களும் முகமூடிகளும். சில சிற்பங்கள் வேலைப்பாடுகளுடன் செய்துமுடிக்க 20 நாட்கள்கூட ஆகுமாம். விருப்பத்திற்கு உட்பட்ட மிருகங்கள் அல்லது பிராணிகளின் உருவங்களையும் சிற்பத்தோடு சேர்த்தே செதுக்குகிறார்கள். இந்தச் சிற்பங்களும் முகமூடிகளும் நல்ல கனமாகவே இருக்கிறன.

நடனத்திற்காகச் செய்யபட்டும் முகமூடிகளை சில சமயம் தேவைக்கருதி கனம் குறைந்த வேறு சில மரங்களைத் தேர்ந்தெடுத்து செய்கின்றனர். அதை அணிந்து ஓலையினால் பின்னப்பட்ட உடை மற்றும் ஆபரணங்களை அணிந்து பிரமாண்ட நடனத்தை அரங்கேற்றுகின்றனர்.

குறைந்த நேரத்தில் நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவர்கள் எனக்குச் சிரித்த முகம் மாறாமல் பதில் கொடுத்துக்கொண்டே இருந்தனர். இறுதியாக அவர்களிடம் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.

எங்களின் உரையாடல் இப்படி அமைந்தது…

யோகி: தற்போது மலேசிய பூர்வக்குடிகளுக்கு நிறையப் பிரச்சனைகள் வருவதைக் காண முடிகிறது. கிளாந்தான், பஹாங், பேராக் மாநிலங்களில் வசிக்கும் பூர்வக்குடிகளின் வனங்கள் அதன் எல்லைகள் கடந்து போராட்டம் நடத்தும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கிறது. இதை அப் பிரிவு பழங்குடி இனத்தைச் சேராத பூர்வக்குடிகளான நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

அவர்: “நீ இதைக் கேட்பாய் என நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இந்த விஷயங்களை அறிந்துக்கொள்ளும்போது சங்கடமாகவே உணர்கிறோம். எங்கள் வனங்கள், எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதும் பறிக்கப்படுவதும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. எங்களால் பெரிய போராட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை என்பது நிதர்சன உண்மைதான். ஆனால், நாங்கள் ஆதிமனிதர்கள். ஆதிமனிதர்களுக்கு இருக்கும் சக்தியை குறித்து யாரும் அறிவதில்லை. அதை நாங்கள் விளம்பரப்படுத்தவோ வியாபாரமாக்குவதோ இல்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதால் நாங்கள் சக்தியற்றவர்கள் என்ற பொருளும் இல்லை. எங்களில் நன்றாகப் படித்த சமூகமும் இப்போது வந்துவிட்டது. நாங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அந்தப் பார்வைக்கான அர்த்ததை நாங்கள் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

நான் அவர்களிடம் நன்றியுடன் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும்போது “இந்தப் பறவைக்கு எங்களின் ‘மா மெரி’ இனத்தின் ஓர் அன்பளிப்பு” எனக் கையில் ஏதோ கொடுத்தனர். பனை ஓலையிலான ஒரு பட்சி அது. நான் அவர்களைக் கேள்வியுடன் பார்த்தேன், “எங்கள் மோயாங் சொன்னார்கள் நீ பறவையாய் திரிந்தவளாம்…”

யோகி சந்துரு-மலேசியா

யோகி சந்துரு

00000000000000000000000000

கட்டுரை தொடர்பான புகைப்படங்கள் :

யோகி சந்துரு யோகி சந்துரு யோகி சந்துரு யோகி சந்துரு யோகி சந்துரு யோகி சந்துரு

 249 total views,  1 views today

(Visited 83 times, 1 visits today)